Pages

Friday, July 27, 2018

என்றென்றும் சின்னக்குயில் சித்ரா 🎧 55 ❤️❤️❤️

Attachment.png


இன்று பின்னணிப் பாடகி, சின்னக்குயில் சித்ராவின் 55 வது பிறந்த தினம். சித்ராவின் குரல் நம் காலத்துக் காதலியின் ஓசையாய், எண்ணற்ற பாடல்களால் நெருக்கமாய் இருப்பது. அதனால் தானோ என்னமோ சித்ராவின் பாடல்களைப் பட்டியல் போடும் போதுகொட்டிக் கிடக்குது செல்வங்கள் பூமியேஎன்று அவரே பாடும் பாடல் போல மணி மணியாய்ப் பல பாடல்கள் வந்து விழுகின்றன.

இசைஞானி இளையராஜாவின் இசையில் சித்ராவின் தனிப் பாடல் திரட்டை கடந்த பிறந்த தினத்தில் கொடுத்திருந்தேன். இங்கே 

https://www.facebook.com/1393380529/posts/10213868091081782/


 இம்முறை கொடுப்பது சித்ரா ஜோடி கட்டிப் பாடும் காதல் பாடல்கள். ஒரே படத்தில் இரு பாடல்கள் இருக்கும் பட்சத்திலும், அல்லது பட்டியலில் 55 ஐத் தாண்டியவற்றையும் விடுபட முடியாமல் போனஸ் பாடல்களாகக் கொடுக்கிறேன்.


1. கல்யாணத் தேனிலா - மெளனம் சம்மதம்

2. பூஜைக்கேற்ற பூவிது - நீதானா அந்தக் குயில்

3. மலரே பேசு மெளன மொழி - கீதாஞ்சலி

4. வா வா அன்பே அன்பே - அக்னி நட்சத்திரம்

5. ப்ரியா ப்ரியா - இதயத்தைத் திருடாதே

6. மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ - பெரிய வீட்டுப் பண்ணக்காரன்

7. ஆத்தாடி ஏதோ ஆசைகள் - அன்புச் சின்னம்

8. காதல் ராகமும் கன்னித்தமிழும் ஒன்று சேர்ந்ததுவோ - இந்திரன் சந்திரன்

9. நீ ஒரு காதல் சங்கீதம் - நாயகன்

10. வா வா வா கண்ணா வா - வேலைக்காரன்

11. இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது - பணக்காரன்

12. மீனம்மா மீனம்மா - ராஜாதி ராஜா

13. அடிச்சேன் காதல் பரிசு - பொன்மனச் செல்வன்

14. நேத்து ஒருத்தரை ஒருத்தரு பார்த்தோம் - புதுப்பாட்டு

15. பாராமல் பார்த்த நெஞ்சம் - பூந்தோட்டக் காவல்காரன்

16. மாலைகள் இடம் மாறுது - டிசெம்பர் பூக்கள்

17. செம்பூவே பூவே - சிறைச்சாலை

18. தேகம் சிறகடிக்கும் ஹோய் - நானே ராஜா நானே மந்திரி

19. இந்த மான் உந்தன் சொந்த மான் - கரகாட்டக்காரன்

20. ஒரு நாள் நினைவிது பல நாள் கனவிது - திருப்புமுனை

21. சித்திரை மாதத்து நிலவு வருது - பாடு நிலாவே

22. சங்கத்தமிழ்க் கவியே - மனதில் உறுதி வேண்டும்

23. அதிசய நடமிடும் அபிநய சரஸ்வதியோ - சிறையில் பூத்த சின்ன மலர் 

24. பொன்னெடுத்து வாறேன் வாறேன் - சாமி போட்ட முடிச்சு

25. கண்மணி கண்மணி - சத்யவான்

26. மலையோரம் மயிலே - ஒருவர் வாழும் ஆலயம்

27. நீ போகும் பாதையில் - கிராமத்து மின்னல்

28. கம்மாக்கரை ஓரம் - ராசாவே உன்ன நம்பி

29. ஓர் பூமாலை - இனிய உறவு பூத்தது

30. திருப்பாதம் பார்த்தேன் - மனித ஜாதி

31. இரு விழியின் வழியே - சிவா

32. சொந்தம் ஒன்றைத் தேடும் அன்னக்கிளி - என்னப் பெத்த ராசா

33. பூவும் தென்றல் காற்றும் - சின்னப்பதாஸ்

34. மாலை நிலவே - பொண்ணுக்கேத்த புருஷன்

35. குருவாயூரப்பா - புதுப் புது அர்த்தங்கள்

35. சொர்க்கத்தின் வாசற்படி - உன்னைச் சொல்லிக் குற்றமில்லை

36. ஊருக்குள்ள உன்னையும் பத்தி - நினைவுச் சின்னம்

37. அழகிய நதியென - பாட்டுக்கொரு தலைவன்

38. வெள்ளிக் கொலுசு மணி - பொங்கி வரும் காவேரி

39. ராஜனோடு ராணி வந்து - சதி லீலாவதி

40. ஹேய் ஒரு பூஞ்சோலை ஆளானதே - வாத்தியார் வீட்டுப் பிள்ளை

41. சோலை இளங்குயிலே - அண்ணனுக்கு ஜே

42. பூங்காற்றே இது போதும் - படிச்ச புள்ள

43. நானென்பது நீயல்லவோ - சூரசம்ஹாரம்

44. வா வா வஞ்சி இளமானே - குரு சிஷ்யன்

45. கரையோரக் காத்து - பகலில் பெளர்ணமி

46. இதழில் கதை எழுதும் - உன்னால் முடியும் தம்பி

47. விழியில் புதுக் கவிதை - தீர்த்தக் கரையினிலே

48. காதலா காதலா - தாய்க்கு ஒரு தாலாட்டு

49. குயிலே குயிலே - ஆண் பாவம்

50. சோலை இளங்குயில் - காவலுக்குக் கெட்டிக்காரன்

51. தென்றல் தான் திங்கள் தான் - கேளடி கண்மணி

52. சிந்துமணி புன்னகையில் - நீ சிரித்தால் தீபாவளி

53. ஆராரோ பாட்டுப் பாட - பொண்டாட்டி தேவை

54. மழை வருது மழை வருது - ராஜா கைய வெச்சா

55. தென்றல் வரும் தெரு - சிறையில் சில ராகங்கள்


போனஸ்

1. ஒரு ஜீவன் அழைத்தது - கீதாஞ்சலி

2. நிக்கட்டுமா போகட்டுமா - பெரிய வீட்டுப் பண்ணக்காரன்

3. நூறு நூறு முத்தம் - இந்திரன் சந்திரன்

4. என்னுயிரே வா - பூந்தோட்டக் காவல்காரன்

5. ஆலோலங்கிளித் தோப்பிலே - சிறைச்சாலை

6. கண்ணா வருவாயா - மனதில் உறுதி வேண்டும்

7. வைகாசி மாசத்துல - நினைவுச் சின்னம்

8. நீலக்குயிலே - சூரசம்ஹாரம்

9. ஜிங்கிடி ஜிங்கிடி - குரு சிஷ்யன்

10. கை பிடித்து கை அணைத்து - சிறையில் சில ராகங்கள்

11. அன்பே நீ என்ன - பாண்டியன்

12. ஊரோரமா ஆத்துப் பக்கம் - இதயக் கோவில்

14. ஓடைக்குயில் ஒரு பாட்டு - தாலாட்டு பாடவா

15. ஒரு ஆலம்பூவு இலந்தம் பூவைப் பார்த்ததுண்டா - புண்ணியவதி

16. நான் ஒன்று கேட்டால் தருவாயா - இளைய ராகம்


இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சின்னக்குயில் சித்ராவுக்கு 


கானா பிரபா

27.07.2018

Wednesday, July 18, 2018

கவிஞர் வாலியின் பாடல்களோடு சிறு பயணம் ⛳️

கவிஞர் வாலியின் பாடல்களோடு சிறு பயணம் ⛳️


“நன்றி சொல்லவே உனக்கு

  என் மன்னவா வார்த்தை இல்லையே

 தெய்வம் என்பதே எனக்கு 

 நீயல்லவா வேறு இல்லையே”


இன்று அதிகாலைப் பனிக்குளிரைக் கிழித்துக் கொண்டு காரில் உட்கார்ந்த போது எழுமாற்றாக வந்து குதித்தது இந்தப் பாட்டு. சிலரை நினைக்கும் போதோ அல்லது அவர்களை நினைப்பூட்டவோ பாடல்களும் தூண்டுகோலாகின்றன. இன்று கவிஞர் வாலியின் பிறந்த நாள் அவர் எழுதிய பாடல் முக விசேடம்.


கவிஞர் வாலியை ஏன் பிடிக்கும் என்று கேட்டால், 

தான் ஒரு படைப்பாளி நான் என்னுடைய நிலையில் இறங்கி வரமாட்டேன் என்று வெறும் வார்த்தை ஜாலங்களை வைத்துக் கொண்டு இலக்கிய கர்த்தாவாக மட்டுமே தன்னை நிலை நிறுத்திக் கொள்ளவே இல்லை. ஒரு படத்தின் காட்சிச் சூழலுக்கான பாடல் எவ்வளவு பாமரத்தனமாக இருக்குமோ அவ்வளவுக்குக் கீழிறங்கி அடித்து ஆடுவார், அதே சமயம் கருத்தாழம் என்றால் கண்ணும் கருத்துமாக வரிகளைப் பூட்டுவார். 


அதனால் தான், சாஸ்திர சம்பிரதாயங்களால் மூடிக் கட்டபட்டவளுக்கு வாழ்வு கொடுக்கும் சூழலில் எழும்

 “நன்றி சொல்லவே உனக்கு 

என் மன்னவா வார்த்தை இல்லையே”

பாடலும் பிடிக்கும், 


அதே சமயம் பிரபல பாட்டுக்காரி ரோட்டோர ரோமியோக்களுடன் பாடும் 


“சின்ன ராசாவே.....

சித்தெறும்பு என்னைக் கடிக்குது” 


பாட்டும் பிடிக்கும் இரண்டுமே வாலி தான் இந்த இரண்டிலுமே மெட்டுக்குக் கட்டினாலும் தாளம் தப்பாத வரிகளைப் பொருத்தமாக இட்டுக் கட்டியிருப்பார்.


“அந்த நாள் ஞாபகம் 

நெஞ்சிலே வந்ததே வந்ததே

நண்பனே.....”


என்று 68 இல் “உயர்ந்த மனிதன்” படத்தில் மெல்லிசை மன்னர்

 எம்.எஸ்.விஸ்வநாதனுக்குக் கொடுத்தவர் தான்,


“நிலவிடம் வாடகை வாங்கி

விழி வீட்டினில் குடி வைக்கலாமா

நாம் வாழும் வீட்டுக்குள்

வேறாரும் வந்தாலே தகுமா.....”


என்று 38 வருடங்கள் கழித்து “சில்லுனு ஒரு காதல்” இற்காக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் கொடுக்க முடிந்தது. மற்றைய இசையமைப்பாளர்களையும் மனுஷர் விட்டு வைத்தாரா என்ன “பதினெட்டு வயசு இளமொட்டு மனசு ஏங்குது பாய் போட”, “எப்படி எப்படி சமைஞ்சது எப்படி” என்று விரகதாபப் பாடல்களையே துள்ளிசையிலும் தன் வரிகளால் இனம் பிரித்தார்.

“டாலாக்கு டோல் டப்பி மா” என்று புதுப் புதுச் சொற்களை ஜில்பான்சி மொழியில் 😀 போடுவது வாலியின் பண்பு.


ஒரு மனிதன் காலா காலாத்துக்கும் தன் மனசை இளமையாக வைத்துக் கொண்டாலே போதும், வாழ்க்கை இனிக்கும். 

எப்படி ஒரு அழுத்தமான சூழலில் ரஜினியின் படமொன்றைத் தேடி எடுத்துப் பார்க்கத் தோன்றுகிறதோ அது போலவே எண்ணற்ற ஜாலியான வாலியின் பாடல்களும். “ஜானகி அம்மா பாடுறதைப் 

பார்” என்று எப்படி அவரை ஒரு முன்னுதாரணமாகச் சித்ராவுக்கு இளையராஜாவால் அடையாளப்படுத்த முடிந்ததோ அது போலவே ஆர்.வி.உதயகுமார் எழுதிய பாடல்களைப் பட்டி டிங்கரிங் செய்ய வாலியே தேவைப்பட்டார்.  இயக்குநர் கதிர் -  இளையராஜா கூட்டணியில் இருந்து இயக்குநர் கதிர் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி வந்த போதும் வாலியே தொடர்ந்தார். அதனால் தான் நமக்கும் 


“யாப்போடு சேராதோ 

பாட்டு தமிழ்ப் பாட்டு

தோப்போடு சேராதோ 

காற்று பனிக்காற்று....”


என்று இதயத்திலும்


“ஆகாரம் இல்லாமல் நான் வாழக் கூடும்

அன்பே உன் பேரைச் சிந்தித்தால் 

தீக்குச்சி இல்லாமல் தீ மூட்டக் கூடும்

கண்ணே நம் கண்கள் சந்தித்தால்

நான் என்று சொன்னாலே நான் அல்ல நீதான்

நீ இன்றி வாழ்ந்தாலே நீர்கூடத் தீ தான்

உன் ஸ்வாசக் காற்றில் வாழ்வேன் நான்..”


என்று காதல் தேசத்திலுமாகக் கிட்டியது.


“அன்னமிடும் கைகளிலே 

ஆடிவரும் பிள்ளை இது

உன்னருகில் நானிருந்தால் 

ஆனந்தத்தின் எல்லையது

காயத்ரி மந்திரத்தை 

உச்சரிககும் பக்தனம்மா

கேட்கும் வரம் கிடைக்கும் வரை 

கண்ணுறக்கம் மறந்ததம்மா” 


தாம்பத்திய பந்தத்தை அழகு மொழியில் வடித்தெடுத்த “கண்ணன் ஒரு கைக்குழந்தை கண்கள் சொல்லும் பூங்கவிதை” ஆக்கித் தொடர்ந்த கவிஞர் வாலி - இசைஞானி இளையராஜா எனும் பந்தம், முரண்பட்ட மனங்களின் மணமேடையை 


“தாமரை மேலே நீர்த்துளி போல்

தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன

நண்பர்கள் போலே வாழ்வதற்கு

மாலையும் மேளமும் தேவையென்ன?” 


என்று மெளன ராகத்தில் கேள்வி எழுப்புகிறது. அதுவே இன்னும் கடந்த நிலையில் 


“நிலவினை நம்பி இரவுகள் இல்லை

விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை

ஒரு வாசல் மூடி மறு வாசல் வைப்பான் இறைவன்…”


எனத் தத்துவ விசாரம் கற்பிக்கிறது.


அபூர்வ சகோதரர்கள், தளபதி, மீரா, கிளிப்பேச்சு கேட்கவா, வருஷம் 16, ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி, மகுடம், அக்னி நட்சத்திரம், மெளன ராகம், தாலாட்டுக் கேட்குதம்மா, ராசா மகன், மாமியார் வீடு என்று இளையராஜா இசையில்

முழுப் பாடல்களையும் ஒரே படத்தில் எழுத வைத்த சிறப்பை வைத்தே தனி ஆவர்த்தனம் வைக்கலாம். 


கவிஞர் வாலியின் வரிகளை நுனிப் புல் மேய்ந்து இலக்கியத் தராதரம் பேசும் அறிஞர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இரண்டு நூற்றாண்டுகளின் திரைத்துறையைப் பங்கு போட்ட வாலியாரின் அர்த்தம் நிறைந்த வரிகளைத் தேடுவதில்லை அல்லது கண்ணதாசன் கணக்கில் போட்டு விடுவார்கள். 

இன்னொரு பரிமாணமும் இருக்கிறது அது எளிமையான சொற்களின் கட்டு. இதைக்கூட விமர்சன நோக்கில் எடுத்து ஆய்வார்கள். ஆனால் ஒரு விஷயத்தை எளிமையாகச் சொல்லும் திறன் கூடப் படைபிலக்கியத்தின் சிறப்பு அல்லது படைப்பவனின் வல்லமை என்றே கொள்ள வேண்டும்.


தாம் படைத்த இலக்கியங்களிலே தம் வாழ்வையும் காட்டியவர்கள் உண்டு. கவிஞர் வாலியின் பாடல்களில் அப்படியே நம்முடைய வாழ்க்கையிலும் பங்கு போட்டு வைத்திருக்கிறது. நம் காலத்து இசையமைப்பாளர்களோடு வாழ்ந்த வரிகள் ஒரு பக்கமிருக்க, கொண்டாடி மகிழத் தான் வாழ்க்கை என்று சொல்லாமல் சொல்லிப் போகின்றன அவை. அப்படியே வாழ்ந்து விட்டும் போனார் நம் கவிஞர் வாலி.


கானா பிரபா

18.07.2018

Wednesday, July 11, 2018

மெட்ராஸ் லலிதாங்கி வசந்தகுமாரி M.L.V 90 🏵






“குயிலே உனக்கனந்த
கோடி நமஸ்காரம்
குமரன் வரக் கூவுவாய் நீ
குமரன் வரக் கூவுவாய்”
https://youtu.be/F1yw_3vLUZ4
காற்றலைகளில் இந்தக் குரல் பரவும் போது கந்தவேள் கோட்டத்தில் நிற்குமாற் போலவொரு உணர்வு தெறிக்கும். அதுவும் அந்தப் பாடலை ஆரம்பிக்கும் போது தன்னுடைய சாஸ்திரிய முத்திரையோடே தொடங்குவார் எம்.எல்.வசந்தகுமாரி.
“காற்றினிலே......வரும் கீதம்....” என்று எம்.எஸ்.சுப்புலட்சுமி,
“நித்திரையில் வந்து
நெஞ்சில் இடம் கொண்ட
உத்தமனார் யார் தோழி....”
இது M.C.வசந்தகோகிலம்
இவர்களோடு,
“கொஞ்சும் புறாவே......
நெஞ்சோடு நெஞ்சம்
ஜெகமெங்கிணும் உறவாடிடும்
ஜாலம் இதேதோ....”
என்று M.L.வசந்தகுமாரியையும் சேர்த்தால் தமிழ்த் திரையிசை எவ்வளவு செழுமையோடு இயங்கியது என்பதை உதாரணம் பகிரும்.
திரைப்படங்களுக்கான இசை என்று வரும் போதே நாயகன், நாயகி பாடி நடிக்க வேண்டிய தேவை எழுந்த போது பாட்டுக்காரர்களே அரிதாரம் பூசிக் கொண்டார்கள். பின்னர் பின்னணிக் குரல் என்ற நிலை வந்த போதும் கூட சாஸ்திரிய இசைக்காரர்கள் அன்றும் இன்றும் தம் பங்களிப்பை நல்கி வருகிறார்கள்.
எம்.எஸ்.சுப்புலட்சுமி போன்றே டி.கே.பட்டம்மாள், வசந்தகோகிலம் வரிசையில் எம்.எல்.வசந்தகுமாரியும் கணிசமானதொரு பங்களிப்பை நல்கியிருக்கிறார்.
தன்னுடைய தாய் லலிதாங்கியை முதற் குருவாகக் கொண்டவர் 11 வயதிலிருந்து தாயாரோடு மேடைக் கச்சேரிகளில் பங்கு கொண்டவர் தன் 13 வயதில் முதன்மைப்ப்பாடகியாக அரங்கேறினார். பிரபல பாடகர்
ஜி.என்.பாலசுப்ரமணியனின் வழிகாட்ட அவரின் இசையுலகம் பரந்து விரிந்தது.
இசைத்துறையில் சாதனைச் சரித்திரம் படைத்த வசந்தா என்ற வசந்தகுமாரிக்கு விருதுகளும் அங்கீகாரங்களும் கிட்டின. அதில் மிக முக்கியமாக “சங்கீத கலாநிதி” என்ற உயர் விருதை இளம் வயதில் பெற்ற பெண் பாடகி என்ற கெளவரம் அவரது 49 வது வயதில் வாய்த்தது.
எம்.எல்.வசந்தகுமாரி, விகடம் ஆர்.கிருஷ்ணமூர்த்தியை மணம் செய்து சங்கரராமன் மற்றும் ஶ்ரீவித்யா ஆகியோரைப் பெற்றெடுத்தார். ஶ்ரீவித்யா நடிகையாகவும், பாடகியாகவும் திரைத்துறையில் தன் பங்களிப்பை வழங்கினார். எம்.எல்.வசந்தகுமாரியின் வாரிசுகள் இருவருமே தற்போது உயிருடன் இல்லை.
தினமலர் பத்திரிகையில் கிடைத்த சுவாரஸ்யமான பகிர்வை இங்கே தருகிறேன்.
“மாணவப் பருவத்தினராக எம்.எல்.வசந்தகுமாரி இருந்தபோது மதுரையில் ஒரு சங்கீத விழாவில் ஒரு கச்சேரி மேடையில் அவருடன் ஒரு பெரியவரும் அமர்ந்திருந்தார். அந்நிகழ்ச்சியை மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்த இளைஞருக்கு இவ்வாறு மேடையில் எம்.எல்.வி.யின் அருகில் அமர்ந்திருந்த பெரியவரைக் கண்டதும் கோபம் வந்தது. கச்சேரி மேடையில் பாடகிக்குப் பக்கத்தில் இந்த மனிதருக்கு என்ன வேலை? இவ்வாறு நினைத்தவராக அவரிடம் சென்று உடனே மேடையை விட்டுக் கீழே இறங்கும்படி உத்தரவிட்டார். அப்போது அந்தப் பெரியவர் சொன்னார்; பாடிக் கொண்டு இருப்பது என் பெண்தான். அவரிடம் யாரும் விஷமம் செய்யாமல் இருக்கவே நான் இங்கே இருக்கிறேன்.
இளைஞர் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பும் கேட்டார். பிறகு இந்த இளைஞருக்கும் அவருக்கும் இடையே நல்ல நட்பு மலர்ந்தது. அவர் பெயர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி. இந்த நட்பே பின்னால் அவர் எம்.எல்.வி.யை மணந்துகொள்ளவும் காரணமாயிற்று. நல்ல செல்வந்தராக இருந்த அவர் சினிமாப்படம் எடுக்கும் முயற்சியில் பொருளிழந்து பிறகு விகடக்கலையில் புகழ்பெற்று விகடம் கிருஷ்ணமூர்த்தி என்றழைக்கப்பட்டார். “ என்று தினமலர் செய்தி பகிர்கின்றது.
எம்.எல்.வசந்தகுமாரியின் முக்கியமான இசை வாரிசாக திருமதி சுதா ரகுநாதன் விளங்குகிறார். தன் குருவிடம் இசைக் கல்வியில் தேறி அவருடனேயே ஐந்து ஆண்டுகள் கச்சேரிகளில் பயணப்பட்ட சுதாவுக்குத் திருமண ஏற்பாடுகள் நடப்பதையிட்டுக் கரிசனை கொண்டு தான் மாப்பிள்ளையைப் பார்க்க வேண்டுமென்று கூறி ரகுநாதனைச் சந்தித்து “சுதாவின் இசைப் பயணம் அவரது திருமண வாழ்வால் தடைப்படல் கூடாது” என்று வேண்டினாராம் எம்.எல்.வசந்தகுமாரி.
இதனால் தான் இவர் என் குரு மட்டுமல்ல என் அம்மாவும் கூட என்று நெகிழ்கிறார் சுதா ரகுநாதன்.
திரையிசையில் தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நிறையப் பாடியுள்ளார். அவற்றில் குறிப்பாக
“கோபாலனோடு நான் ஆடுவேனே” (வாழ்க்கை), “ஆகா ஆகா வாழ்விலே” (மந்திரி குமாரி), “கண்ணன் மன நிலையை” (ஏழை படும் பாடு), “அய்யா சாமி ஆவோஜி சாமி” (ஓர் இரவு), “கொஞ்சும் புறாவே” (தாய் உள்ளம்), “குயிலே உனக்கு” (மனிதன்), “கூவாமல் கூவும் கோகிலம்” (வைர மாலை), “ஆடல் காணீரோ” (மதுரை வீரன்) போன்றவை இன்றளவும் உலக வானொலிகளாலும், வானொலி ரசிகர்களாலும் பெரு விருப்போடு மனதில் வைத்திருக்கும் பாடல்கள்.
செவ்வியல் இசையில் எம்.எல்.வசந்தகுமாரி
https://youtu.be/IdHsiwVudlI
திரையிசையில் எம்.எல்.வசந்தகுமாரி
https://www.youtube.com/playlist…
இன்று பிரபல சாஸ்திரிய இசை மற்றும் திரையிசைப் பாடகி எம்.எல்.வசந்த்ந்குமாரியின் 90 வது பிறந்த தினமாகும்.
மேலதிக தகவல் குறிப்புகள் & படங்கள் நன்றி :
திருமதி சுதா ரகுநாதன்
ஹிந்து ஆங்கில நாளேடு
தினமலர்
விக்கிப்பீடியா
கானா பிரபா
03.07.2018