இறைவனிடம் வரங்கள் கேட்டேன்
ஸ்வரங்களை அவனே கொடுத்தான்
மனிதரில் இதை யாரும் அறிவாரோ
நான் பாடும் பாடல் எல்லாம்
நான் பட்ட பாடே அன்றோ
பூமியில் இதை யாரும்
உணர்வாரோ……..!
மு.மேத்தாவின் வரிகள் இசை வார்த்த இளையராஜாவுக்கு மட்டுமல்ல, பாடிக் கொடுத்த ஹரிஹரனுக்கும் கூடப் பொருந்திப் போகும். அப்படியானதொரு கடந்து வந்த பாதையில் தான் இன்று
ஒட்டுமொத்த இசை வானில் 45 வருடங்களாகக் கோலோச்சிக் கொண்டிருக்கும் அவரின் பின்னணி தொடங்கியது.
தனது எட்டு வயதில் தந்தையை இழந்து தாயாரின் குடும்பத்தினரின் தலைப் பிள்ளையாகச் சீராட்டப்பட்ட அவரின் இசைப் பயணத்துக்குத் தன் அம்மாவே உறுதுணையாக இருந்ததை நன்றி பெருக அண்மையில் Zee Tamil சரிகமப நிகழ்ச்சியில், அவரின் பக்கத்தில் இருந்தவாறே சொன்னார் ஹரிஹரன்.
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானிடம் விளம்பரப் பாட்டுக்கு வந்த ஹரிஹரனிடம், தன்னுடைய முதல் படத்திலேயே பாட அழைத்தார்.
“தமிழா தமிழா
நாளை நம் நாளே”
பாட்டு வரிகள் கட்டியம் கூறினவோ?
1992 இல் தொடங்கியது, ஆகக் குறைந்தது ஒரு தசாப்தம் தமிழ்த் திரையின் உச்ச நட்சத்திரமாக ஹரிஹரன் கொண்டாடப்பட்டவர் இன்றும் அந்த அலையின் சுழலில் இருக்கிறார்.
தொண்ணூறுகளின் நிறம், அல்லது அடையாளம் என்றால் அங்கே ஹரிஹரன் தான்.
ரோஜா தொடங்கி அந்தத் தொண்ணூறுகளின் குறிப்பிடத்தக்க வெற்றிகளுக்குப் பின்னால் ஹரிஹரனும் இருப்பார்.
“உயிரே....உயிரே...
வந்து என்னோடு கலந்து விடு....”
என்று காதலன் ஏக்கத் தொனியாக மட்டுமன்றி,
“கண்ணைக் கட்டிக் கொள்ளாதே
கண்டதை எல்லாம் நம்பாதே”
என்று புரட்சிக் குரலாக நிறமூட்டினார்.
தன்னை ஒரு பன்முகப் பரிமாணத்தில் காட்டியவர் ஏ.ஆர்.ரஹ்மானே என்று ஹரிஹரன் மனம் விட்டுப் புகழ்ந்திருக்கிறார்.
தமிழுக்கு அந்நியமான பாடகர்கள் முன்பும், பின்பும் வந்திருந்தாலும் எல்லா இசையமைப்பாளர்களாலும் கொண்டாடப்பட்டவர்கள் மிகச் சிலர். அதில் ஹரிஹரனும் முதல்வர்களில் ஒருவர்.
ஒரு பக்கம் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் புத்திசை மேல் காதல் கொண்டு இயங்கிக் கொண்டே, இன்னொரு பக்கம் இசைஞானி இளையராஜா மேல் அளவற்ற பயபக்தியோடு தோள் கொடுத்தார்.
“என்னைத் தாலாட்ட வருவாளோ” இளையராஜா ரசிகர்கள் பால் ஹரிஹரனை இழுத்தாலும், ராஜாவிடம் ஹரிஹரன் பாடிய ஆகச் சிறந்தவை இன்னும் அதிகம் கொண்டாடப்பட்டிருக்க வேண்டும்.
அப்படியொன்று “மீட்டாத ஒரு வீணை”.
“காசி”யில் ஆறும் ஹரிஹரனைச் சேர்ந்ததும், இளையராஜா ஹரிஹரன் மீதான ஆத்ம பந்தத்தின் வெளிப்பாடெனலாம்.
“இரவா பகலா என்னை ஒன்றும் செய்யாதடி”
யுவனுக்குப் புகழ் வெளிச்சம் கொடுத்த பாடல் என்ற ரீதியில் அங்கேயும் ஹரிஹரன் இருக்கிறார். All the Best என்று அறிமுக யுவனுக்காகப் பாடியவர் தான்,
“சொல்லாதே சொல்லச் சொல்லாதே” என்று அறிமுக இசையமைப்பாளர் பாபியின் பாடலிலும் அவரே இருப்பார்.
"ஓ காதலின் அவஸ்தை
எதிரிக்கும் வேண்டாம்
நரக சுகம் அல்லவா
அமிலம் அருந்திவிட்டேன்
ஓ நெருப்பை விழுங்கிவிட்டேன்
சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்
என் காதல் தேவதையின் கண்கள்”
சுடு கரண்டியில் விழுந்த ஐஸ்கிரீமாய் உருகி வழியும் ஹரிஹரன் குரலைக் கேட்கையில் அஜித் இன் வாயசைப்புத் தான் நினைப்பூட்டும்.
முரட்டுத்தனமான முரணாக ஒரு மெல்லிசைக் காதல் அங்கே விழுகிறது இந்தப் பாட்டு.
“இருதயமே துடிக்கிறதா....
துடிப்பது போல் நடிக்கிறதா...”
எப்படி “விழிகளின் அருகினில் வானம்” வழியாக இவ்விதம் பாடலாசியர் கவிவர்மன் அரிதாகப் பாடல் பண்ணி ஈர்த்தாரோ அது போலவே
நோயாய் நெஞ்சில் நீ நுழைந்தாய்
மருந்தை ஏனடி தர மறந்தாய்
வாலிபத்தின் சோலையிலே
ரகசியமாய் பூப் பறித்தவள்
நீதானே
தட தடக்கும் சந்தத்தின் பின்னிசை இயந்திரப் படிக்கட்டுகளை உருட்டும் பட்டி போல இயங்க, வழுக்கிக் கொண்டே போகும் பாடலாசிரியர் விஜயசாகர் வரிகள்.
அப்போது விழுந்தவர்கள் தான் தீனா படம் வந்து இன்று 23 வருடம் கடந்து விட்டது. இதன் இடையிசையைக் கேட்டாலேயே மகுடி கண்ட பாம்பு போல ஆகி விடுகிறோம்.
“என் காதல் தேவதையின் கண்கள்
கண்ணோரம் மின்னும் அவள் காதல்….”
பாட்டு முடிந்தாலும் வெளிவேற மனமில்லாமல் ஹரிஹரன் போல அனாத்திக் கொண்டிருக்கும் வார்த்தைத் துண்டுகள்.
“வானே வானே” பாடலில் ஸ்ரேயா கோசலுடன் பாடும் இந்த ஹரிஹரனை ஏறக்குறைய மறந்து போன ஒரு யுகத்துக்குப் போய்க் கொண்டிருக்கிறோமோ என்று.
தொண்ணூறுகளில் ஹரிஹரன் ஒரு பக்கம், உன்னி கிருஷ்ணன் ஒரு பக்கம் ஏரியா பிரித்து வகை தொகையில்லாமல் பாடி வந்தார்கள். 90s kids இல் ஒன்றைப் பிடித்து
“டேய் தம்பி உனக்கு எந்தப் பாடகரைப் பிடிக்கும்?”
என்று கேட்டால் ஹரிஹரனுடைய ஏதாவது ஒரு பாடலை சுதி மீட்டுமளவுக்குத் தொண்ணூறுகளில் தொட்டிலில் தொடக்கி வைத்தவர். அது தனியாக, விரிவாகப் பார்க்க வேண்டிய விடயம்.
அன்றைய நட்சத்திர நாயகர்களுக்கு குறிப்பாக இளம் நடிகர்களுக்கு ஹரிஹரன் பாட்டு ஒட்டிக் கொண்டு விடும்.
“கொஞ்ச நாள் பொறு தலைவா அந்த வஞ்சிக்கொடி இங்கே வருவா” என்று 1995 இல் ஆசை படத்தில் தான் அஜித்துக்காக முதலில் ஹரிஹரனைப் பாட வைத்துப் புண்ணியம் கட்டிக் கொண்டார் தேனிசைத் தென்றல் தேவா. பின்னர் கல்லூரி வாசல் படத்தில்
“என் மனதைக் கொள்ளை அடித்தவளே” பாடலைக் கூட நடித்த பிரசாந்துக்குக் கொடுத்து விட்டார்.
அன்றைய காலகட்டத்தில் வானொலி நிகழ்ச்சி செய்யும் போது “காஞ்சிப்பட்டுச் சேலை கட்டி” பாடலோடு தான் எங்கட திருக்குமார் அண்ணர் திருக்குமார் நிகழ்ச்சியைத் தொடங்குவார். அவரின் வயசுக்கு அது அவருக்குத் தேசிய கீதம். “ரெட்டஜடை வயசு” படத்தில் வந்தது அந்தப் பாட்டு.
இப்படி ஒன்றொன்றாகக் கொடுத்து வந்த தேவா ஒரேயொரு பாடலை மட்டும் நவீனுக்கும், மனோவுக்கும் கொடுத்து விட்டு மீதி நான்கு பாடல்களையும் ஹரிஹரனுக்குக் கொடுத்த கொடை வள்ளல் ஆனார் “உன்னைத் தேடி” படத்துக்காக.
ஹரிஹரனின் தமிழ்த் திரையிசைப் பயணத்தில் உன்னைத் தேடி பாடல்கள் மிக முக்கியமானவை என்பேன். “நாளை காலை நேரில் வருவாளா” கிட்டத்தட்ட அவள் வருவாளா பாடலின் அலைவரிசை. “மாளவிகா மாளாவிகா” பாட்டு உருக வைக்கும் காதல் பாட்டு என்றால் “நீதானே நீதானே” காதல் துள்ளாட்டம், கூடவே ஹரிஹரனின் தனி ஆவர்த்தனமாய் “போறாளே போறாளே” என்று அட்டகாஷ் இசைத் தொகுப்பு இந்த உன்னைத் தேடி.
பாடலாசிரியர்கள் மூவரில் பழனி பாரதியின் முத்திரையான ஒரே சொல்லின் இரட்டை அடுக்கு வரிகள் அடையாளம் கற்பிக்கும்.
தொடர்ந்து தேவா - ஹரிஹரன் இசைக் கூட்டில் அஜித்குமாருக்குக் கிடைத்ததெல்லாம் அவல். சந்தேகம் இருந்தால் பட்டியலைப் பாருங்கள்,
“ஓ சோனா ஓ சோனா” என்று வாலியிலும் “செம்மீனா விண் மீனா” என்று ஆனந்தப் பூங்காற்றேவிலும் (இதே படத்தில் கார்த்திக்குக்கு “சோலைக்குயில் பாட்டு சொல்லிக் கொடுத்தது யாரு, பாட்டுக்கு பாலைவனம், வைகாசி ஒண்ணாந்தேதி என்று மூன்று பாட்டுகள் ) என்று பயணம் தொடர்ந்தது.
“சின்னச் சின்னக் கிளியே” என்று மீண்டும் பிரசாந்துக்காகக் கொடுத்தது கண்ணெதிரே தோன்றினாள் வெற்றியில் பங்கு போட்டுக் கொண்டது.
“ஏஹேஹே கீச்சுக் கிளியே
என் காதில் தித்தித்தாய்
இசையாலே எனது புதிய நாளை,
நீ இன்று திறந்தாய்”
புத்தாயிரம் ஆண்டின் திறவுகோலாய், அஜித்துக்கு முகவரி கொடுத்த படத்தை மறக்க முடியுமா?
அதே படத்தில் ஸ்வர்ணலதாவோடு கூட்டுச் சேர வைத்து ஹரிஹரனைப் பாட வைத்தார் தேவா “ஓ நெஞ்சே நெஞ்சே” என்று.
ரோஜா காத்து, நவம்பர் மாதம் என்று “ரெட்” படத்திலும் “ஆஸ்திரேலியா தேசம்” காட்டிய சிட்டிசனிலுமாக தேவா அதிகபட்சம் ஹரிஹரனை அஜித்குமாருக்காகப் பாவித்தார்.
“ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ
ஒன் பேரச் சொல்லும் ரோசாப்பூ”
தொண்ணூறுகளை விட்டுப் பிரியாத மினி பஸ்கள் இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கும் ஹரிஹரனை இவ்விதம்
எஸ்.ஏ.ராஜ்குமாரும் விட்டு வைக்கவில்லை.
“மூக்குத்தி முத்தழகு மூணாம் பிறை பொட்டழகு
பொள்ளாச்சி மண்ணில் வெளஞ்ச நெல்லுமணி பல்லழகு”
என்னவொரு அற்புதமான கிராமியத் தெம்மாங்குக்கு, ஹரிஹரனுக்கு வேட்டி கட்டிப் பாட வைத்திருப்பார்.
ஒரு பக்கம் விஜய்க்கு
“எனக்கொரு சினேகிதி சினேகிதி”
“தொடத் தொட எனவே”
“இருபது கோடி நிலவுகள்
கூடிப் பெண்மை ஆனதோ”
என்று கொடுத்துக் கொண்டே,
“ஓ வந்தது பெண்ணா....
வானவில் தானா”
என்னவொரு அற்புதமான பாடல் “அவள் வருவாளா” படத்தில் அஜித்துக்குக் கொடுத்தார்.
“ஒரு தேவதை வந்து விட்டாள்” பாடல் நீ வருவாய் என படத்தில் பார்த்திபனைச் சேர்ந்தது. அது போலவே ரஹ்மான் இசையில் “கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்” படத்தின் அதே வரிப் பாடல் அப்பாஸுக்குப் போனது.
தோல்விப் படமென்றாலும் இசை வசந்தம் எஸ்.ஏ.ராஜ்குமாரின் “உன்னைக் கொடு என்னைத் தருவேன்” முத்திரை பதித்ததில் “இதயத்தைக் காணவில்லை” என்று அஜித்தாக வந்தார் ஹரிஹரன்.
வைரமுத்து - பரத்வாஜ் - சரண் கூட்டணிக்கு நட்சத்திர அந்தஸ்த்தைக் கொடுத்த அஜித் படங்களில் தலையாயது “காதல் மன்னன்”.
“வானும் மண்ணும் வந்து ஒட்டிக் கொண்டதே”
பாடல் பரத்வாஜ் இன் இசை யாத்திரையில் அற்புதமான இசைக்கம்பளம்.
“கொஞ்சும் மஞ்சள் அழகே உன்னைச் சொல்லும்” கார்த்திக் ராஜாவுக்கு அதிக வெளிச்சத்தைக் கொடுத்த “உல்லாசம்” படத்தில் இந்தப் பாடல் தனித்து நின்று ஜாலம் புரியும். ஹரிஹரன் & ஹரிணி ஜோடி குரல்களில் ஒரு அந்நியோன்யம் என்றால் இசையிலும் புதுமை காட்டியது.
“சிரித்து சிரித்துசிறையிலே,
சிக்கிக் கொள்ள அடம் பிடிக்கும்
ரகசியமாய் ரகசியமாய்
புன்னகைத்தால் பொருளென்னவோ?”
கார்த்திக் ராஜாவை இன்னமும் கொண்டாடிக் கொண்டிருக்கிறோமே அந்தக் கொண்டாட்டத்தின் திறவுகோலாய் இந்தப் பாடல் இருக்கும்.
“அன்பே அன்பே நீ என் பிள்ளை”
பாடலைக் கேட்டாலேயே மடியில் வைத்துத் தாலாட்டுவது போலிருக்கும். “உயிரோடு உயிராக” படத்தில் உருக்கிய வித்யாசாகர்,
“ஒரே மனம் ஒரே குணம் ஒரே இடம் சுகம் சுகம்” என்று வில்லனில் நெகிழ வைத்து விட்டார். ஹரிஹரனுக்கே உரித்தான அந்த நாசிக் குரலைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.
“ஒரு தேதி பார்த்தா
தென்றல் வீசும்
ஒரு கேள்வி கேட்டா
முல்லை பேசும்”
விஜய்யின் ஆரம்ப காலத்துப் படைப்புகளில் கூடப் பாடல்கள் இனிக்கும் என்று வித்யாசாகர் தன் பங்குக்குக் கொடுத்திருப்பார்.
இதெல்லாம் மாயாஜாலம்.
அப்படியே லிங்குசாமிக்கு வெற்றி சமைத்த ரன்னில்
கொடுத்த
“கண்களால் கண்களில்
தாயம் ஆடினாய்
கைகளால் கைகளில்
ரேகை மாற்றினாய்
பொய் ஒன்றை ஒப்பித்தாய்
ஐய்யயோ தப்பித்தாய்
கண் மூடி தேடத்தான்
கனவெங்கும் தித்தித்தாய்”
ஒவ்வொரு அடுக்குகளிலும் ஜாலம் காட்டிச் செல்வார் இந்த வித்தகர்.
அந்தி மஞ்சள் மாலை
ஆளில்லாத சாலை
தலைக்கு மேலே போகும்
சாயங்கால மேகம்
முத்தம் வைத்த பின்னும்
காய்ந்திடாத ஈரம்
எச்சில் வைத்த பின்னும்
மிச்சமுள்ள பானம்
கன்னம் என்னும் பூவில்
காய்கள் செய்த காயம்
ப்ரியம் ப்ரியம்
ப்ரியம் ப்ரியம்
ப்ரியம் ப்ரியம்
ப்ரியம் ப்ரியம்
பனித்துளியை விட மெதுமெதுப்பாய் வார்த்தைகளைக் கையாளும் ஹரிஹர ஜாலம் ஆஹா, இன்னும் எவ்வளவோ சொல்லிக் கொண்டே நீளுமே?
“Muscle memory” என்றதொரு நுட்பத்தை ஹரிஹரன் கோடிட்டுக் காட்டினார். அதாவது தொடர்ச்சியும், பயிற்சியும் தான் ஒரு பாடகனை முழுமையாக்கும் என்று.
அந்தக் கூற்று பாடகர்களின் அகராதி என்று வைத்துக் கொண்டால,
நமக்கோ ஹரிஹரன் பாடலை யார் பாடினாலும் நம் memory இல் ஹரிஹரனின் குரல் தான் அதை மேவியதாக வந்தொலிக்கும்.
நம் ஊனில் உறைந்து போன memory என்பதாலோ?
நேற்று சிட்னியில் இசை விருந்து படைத்து விட்டு
இன்று தனது பிறந்த நாளில் கங்காரு தேசத்தில் இருக்கிறார்.
இன்று எங்கள் திருமண நாள்.
திருமண வீடியோவில் இளையராஜா பாட்டுகள் மட்டும் தான் இருக்க வேண்டும் என்று வீடியோ எடுத்த ஜெகதீசன் அண்ணனிடம் சொல்லி வைத்தேன். ஆனால் அவர் ஹரிஹரன் பாட்டு ஒன்று வைத்தார். அது இதுதான்
தவமின்றி கிடைத்த வரமே
இனி வாழ்வில் எல்லாம் சுகமே
https://www.youtube.com/watch?v=GO1ciIWZJmM
என் கோபமெல்லாம் அதைக் கேட்டுப் பறந்துடுச்சு 😀
என் சுவாசம் உன் மூச்சில்
உன் வார்த்தை என் பேச்சில்
ஐந்தாறு நூற்றாண்டு வாழ்வோம்
என் வாழ்வே வா.....
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
பாடகர் ஹரிஹரன் அவர்களுக்கு
கானா பிரபா
03.04.2023