கடந்த வார சிறப்பு நேயராக கயல்விழி முத்துலெட்சுமி வந்தாலும் வந்தாங்க, பதிவர்கள் தி.நகர் ஜவுளி நெரிசல் கணக்கா வந்து கு(ம்)மிஞ்சிட்டாங்க.
சரி இந்த வார சிறப்பு நேயர் யாரென்று பார்ப்போம்.
ஒரு இரண்டு வருஷங்களுக்கு முன்னர் தமிழ்மணத்தை வழக்கம் போல் உலாவலாம் என்று பக்கத்தைத் திறந்தால் எடுத்த எடுப்பிலேயே புள்ளிவிபர இலாகாவிலிருந்து கேட்குமாற் போல யாரோ ஒருவர் பதிவிட்டிருந்தார். வழக்கமான பதிவுகளில் இருந்து விலகியிருக்கிறாரே என்று நினைக்கமுன்னரே சரசரவென்று ஒவ்வொரு நாளும் விதவிதமான கேள்விக் கொத்தோடு பதிவுகளைக் குவித்தார். பாராட்டு, விமர்சனம் என்று சம அளவில் இந்தப் புள்ளிவிபரப்பதிவுகளுக்குக் கிடைத்தது. ஆனாலும் விட்டாரா மனுஷன், நான் "ஆக்கியவன் அல்ல அளப்பவன்" என்று தொடர்ந்தும் தன் "பணியை" செய்து ராமராஜன் லெவலுக்கு திடீர் ஹீரோவாகிவிட்டார். அவர் தான் நம்ம
சர்வேசன்.

ஆனால் இவருக்கு புள்ளி விபரம் தான் எடுக்கத் தெரியும் என்று கணக்கு போடுபவர்களின் நினைப்பை மாற்றி "நேயர் விருப்பம்" போன்ற கலக்கல் இசைத் தொடர்களையும் ஆரம்பித்தார். மனசு ரிலாக்ஸாக இருக்க சில பதிவர்களின் பதிவைத் தேடிப்படிப்பது வழக்கம். அதில் சர்வேசனும் ஒருவர். நச் சென்ற விமர்சனமும், குறும்புத்தனமும், கலந்த எழுத்தும் அளவான கஞ்சத்தனமான பதிவும் இவரின் தனித்துவம். தமிழில் புகைப்படக்கலை போன்ற கூட்டுவலைப்பதிவுகளில் கலக்கினாலும்
Surveyசன் -ஆக்கியவன் அல்ல அளப்பவன்
என்ற இவரின் பதிவு தனித்துவமானது. எம்.எஸ்.வி ஐ வாழும் காலத்தில் கெளரவப்படுத்த வேண்டும் என்னும் இவரின் முனைப்பு இன்னும் ஒரு படி இவர் மேல் மதிப்பை ஏற்படுத்துகின்றது.
தொடர்ந்து நண்பர் சர்வேசனின் முத்தான ஐந்து பாடல்கள் பற்றி என்ன சொல்கின்றார் என்று கேட்போம்.
கானா பிரபாவின் றேடியோஸ்பதியில் புதுப்புது யுக்திகளை புகுத்தி வருகிறார்.
சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 'சிறப்பு நேயர்' பதிவில், பதிவர்களின் டாப்-5 விருப்பப் பாடல்களை அருமையாக தொகுத்து வழங்குகிறார்.
தமிழ் திரைப்படங்களில் ஆயிரமாயிரம் பாடல்கள் மெய்சிலிர்க்க வைக்கும் ரகம். அதிலிருந்து வெறும் ஐந்து பாடல்களை மிகவும் பிடித்தது என்று எடுத்துத் தருவது ரொம்பக் கஷ்டமான வேலை.கூட்டிக் கழிச்சுப் பாத்தாகூட ஒரு ஐநூறு பாட்டாவது மிகப் பிடித்த தர வரிசையில் இடம்பெறும்.
அதனால, இந்த ஈ.மடலை தொகுக்கும் இந்த ஞாயிறு மதியம், மனதில் உதிக்கும் ஐந்து பாடல்களை தரலாம் என்று முடிவு. (எழுதி அனுப்பின தினம் பெப்ரவரி 25)
பலப் பல பாடல்கள் பிடித்தாலும், சில பாடல்களின் ஆரம்ப இசை கேட்டதும், மனதில் ஒரு சிலீர் தோன்றும். அப்படிப்பட்ட, எனக்கு மிகவும் பிடித்த ஆயிரமாயிரம் பாடல்களில் ஐந்து உங்கள் பார்வைக்கு.
1) ஒரே நாள் உனை நான்..
இளமை ஊஞ்சலாடுகிறது (இளையராஜா)
இந்தப் பாட்டு பாத்த ஞாபகம் இல்லை.
சின்ன வயசுல, ரேடியோல அடிக்கடி போட்டிருப்பாங்கன்னு நெனைக்கறேன்.
அதனாலத்தான் என்னவோ, எப்ப இந்த பாட்ட எங்க கேட்டாலும், நான் மேலே சொன்ன 'சிலீர்' அனுபவம் கிட்டும்.
ஆரம்ப, கிட்டார் strumming ம், அதைத் தொடரும் வயலினும் போதும், இது எப்பேர்பட்ட பாட்டு என்பதைச் சொல்ல.
ஒவ்வொரு interludeல் வரும் கிட்டாரும் சுண்டி இழுக்கும்.
Vow! what a song!
அந்த கால SPB குரல், சொல்லணுமா? கட்டியணைக்கும் ரகம்.
வாணி ஜெயராமின் கணீர் குரலும் அமக்களமா இருக்கும்.
வீடியோவில் பார்க்க
கேட்க
2) எங்கேயும் எப்போதும்...
நினைத்தாலே இனிக்கும் (MSV)
யப்பா யப்பா யப்பா. என்னமாதிரியான பாட்டு இது. இந்த மாதிரி ஒரு துள்ளலான பாடல், இதுக்கு முன்னாடி இருந்ததும் இல்லை, இதுக்கப்பரமும் வந்ததில்லை.
ஆரம்ப கிட்டாரும், பின்னணி ட்ரம்ஸும், அதைத் தொடரும் ட்ரம்பெட்டும் சாமி ஆடவைத்துவிடும்.
இந்தப் பாடலின் ஒரே குறை, கமலின் ஆட்டமும், நம் சூப்பர் ஸ்டார் கிட்டாரை சொறிவதும் தான் ;)
ஒருவேள படம் வந்த நேரத்துல, இந்த டான்ஸ் 'சகித்தல்' ரகமா இருந்திருக்குமோ என்னமோ :)
கண்ணதாசனின் எளிமையான வரிகளும், MSVன் அதிரடி இசைக் கோர்வையும் கேட்டால் ஆடாத கால்களும் ஆடும்.
வழக்கம் போல், SPB இந்த பாடலை பின்னி பெடலெடுத்திருப்பார்.
'இங்கும் எங்கும் நம்முலகம்'னு அசத்துவாரு பாருங்க அசத்தல்.
அடேங்கப்பா, திக்குமுக்காடவைக்கும் பாடல் இது.
MSVக்கும், கண்ணதாசனுக்கும், SPBக்கும் தலை வணக்கங்கள்!
வீடியோவில் பார்க்க
கேட்க
3) என்னைத் தாலாட்ட வருவாளா...
காதலுக்கு மரியாதை (இளையராஜா)
ஹரிஹரன் சின்ன வயசுல ராஜா கிட்ட சான்ஸ் கேட்டு அலஞ்சாராம். ராஜா கண்டுக்காம விட்டுட்டாராம். அவரும் அக்கடான்னு கஜல்ஸ் பாடிக்கிட்டு பொழப்பு நடத்திட்டிருந்தாரு. ரஹ்மான் புண்ணியத்துல சினிமால தலைகாட்டி, அவரு வித்த காட்டினது நமக்கு தெரியும்.
சினிமால பாட ஆரம்பிச்சு கிட்டத்தட்ட அஞ்சு வருஷமாகியும், ராஜா ஹரிஹரனுக்கு சான்ஸ் கொடுக்கல. (சான்ஸ் கொடுக்கர மாதிரி பாடல்கள் அமையலையோ?)
90களில் ரஹ்மான் வந்தப்பரம், ராஜாவின் ஆட்டத்தின் வேகம் குறைந்தது போல் தோன்றியது. ரஹ்மான் புகுத்திய புதுமையில் நம்மாளுங்கெல்லாம் மெய்மறந்து கெடந்தோம். சின்ன சின்ன ஆசை, சிக்கு புக்கு ரயிலே, ஒட்டகத்த கட்டிக்கோன்னு மந்திரிச்சு விட்ட மாதிரி இருந்தோம் எல்லாரும்.
ராஜாவும், அப்பப்ப electronics percussion எல்லாம் அங்கங்க போட்டு என்னென்னமோ பண்ணிப்பாத்தாரு எடுபடல.
ஒரு ரெண்டு மூணு வருஷம் பெருசா ஹிட்டும் வரல ராஜாகிட்டயிருந்து.
ஜனமும், ராஜா ரிட்டையர் ஆகவேண்டியதுதான்னு அனத்த ஆரம்பிச்சிருந்த காலம்.
லன்ச் டின்னர் டிஸ்கஷனிலெல்லாம், ரஹ்மான் ஸைட், ராஜா ஸைட்னு டீம் கட்டி சண்டைகள் வலுப்பெற்றிருந்த காலம். ராஜா வலுவிழந்து இருந்தாலும், விட்டுக் கொடுக்காம சண்ட போட்டோம்ல :)
அப்ப வந்ததுங்க இந்த 'காதலுக்கு மரியாதை' படம்.
ஹரிஹரனுக்கு முதல் வாய்ப்பு, ராஜாவின் இசையில்.
அருமையான கதைக்களம் உள்ள படம்.
பாடல் சிச்சுவேஷனும் அருமை.
ஆரம்ப ட்ரம்ஸும் அருமை. அப்படியே, இதையத் துடிப்பு மாதிரி ஆகிடுச்சு.
FMல அந்தப் பாட்டு ஒரு நாளைக்கு நூறு வாட்டி போட்டானுங்க.
டி.வி.ல எல்லாச் சேனல்லயும் இந்தப் பாட்டுதேன்.
ஹரிஹரன் அதுக்கு முன்னாடி எவ்ளவோ பாடல்கள் பாடியிருந்தாலும், இந்த பாடல் தந்த பன்ச் வேற எதுவும் தந்ததில்லை.
பவதாரணியின் ஹம்மிங்குடன் தொடங்கும் இந்தப் பாடல் பலருக்கு காதல் அரும்பக் காரணமான ஒரு பாடல் ;)
வீடியோவில் பார்க்க
கேட்க
4) தூங்காத கண்ணென்று ஒன்று...
குங்குமம் (கே.வி.மகாதேவன்)
சுசீலாவின் குரலில் வரும் இந்தப் பாட்டு கேட்டாலே மனசு இளகிடுது. படத்தின் வீடியோ கெடச்சா யாராவது போடுங்க. இதுவரை பாத்ததா ஞாபகம் இல்லை.
கேட்க
5) காற்றில் எந்தன் கீதம்..
ஜானி (இளையராஜா)
டாப் லிஸ்ட்ல, எஸ்.ஜானகி பாடின பாட்டு இல்லன்னா என் தலை சுக்கு நூறாயிடும் ;)
ஜானகி பாடர மாதிரி ஒரு ஸ்டைல், வேறு பெண் பாடகியர் பாடி நான் கேட்டதில்லை. சுசீலா பாடரதும் பிடிக்கும், ஆனா அவங்க, ரூல்ஸ் படி பாடிட்டு போயிடுவாங்களோ? ஜானகி, SPB மாதிரி, இவங்களுக்கான ஒரு ஸ்டைல் பாடலில் சேர்த்து, மேலும் மெருகேத்துவாங்கங்கரமாதிரி ஒரு தோணல் எனக்கு.
ஜானியில், வரும் "காற்றில்.." பாட்டும் சிலீர் ரகம்.
கிட்டார் ஒரு புறம், மழை சத்தம் மறுபுறம்.
நடுவில், அந்த ஹம்மிங், 'ஹா.. ஆ..ஆ.அ.ஆ. ஆ. ஆ" ன்னு நானும் எவ்ளவோ முயற்சி செய்து பாத்துட்டேன். வர்ல. :)
இந்தப் பாடலின் இசைக் கோர்வை ப்ரமிப்பூட்டும்.
ஃப்ளூட்டு, ட்ரம்பெட்டு, கிட்டாரு, ட்ரம்ஸு, இடி, மழை எல்லாம் சேந்து ஒரு ப்ரவாகமா மாறி மதிமயக்க வைக்கும் பாடல்.
stageல யாராச்சும் இந்த ஹம்மிங்க சரியா பாடினா கண்டிப்பா விசில் அடிச்சு அவங்களுக்கு மரியாதை செய்வேன், எல்லா வாட்டியும்.
ஜானகி மேடம், Salutes!
வீடியோவில் பார்க்க
கேட்க
ஐயோ, அஞ்சு ஆயிடுச்சா அதுக்குள்ள? ஹ்ம். லிஸ்ட்ல எதையாச்சும் எடுத்து, வேற பாட்ட நொழைக்கலாமான்னு தோணுது. ஆனா, அப்படிப் பண்ண ஆரம்பிச்சா அதுக்கு முடிவேயில்லாம போயிட்டே இருக்கும்.
செந்தாழம் பூவில், உறவுகள் தொடர்கதை, சின்னக் கண்னன் அழைக்கிறான், ஞாயிறு என்பது பெண்ணாக, எங்கிருந்தாலும் வாழ்க, நினைவெல்லாம் நித்யா, கனவு காணும் வாழ்க்கையாவும், பூமாலையில் ஓர் மல்லிகை, மாலைப் பொழுதின் மயக்கத்திலே, கண்ணாலே பேசிப் பேசிக் கொல்லாதே, நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால், தென்றல் வந்து தீண்டும்போது, கீரவாணி, ஓம் நமச்சிவாயா, இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே, லாலி லாலி, கற்பூர பொம்மை ஒன்று, சுந்தரி, தேனே தென்பாண்டி, மண்ணுக்கு மரம் பாரமா, நீதானே என் பொன்வசந்தம், உன்னை நான் சந்தித்தேன், .... இப்படி எழுதிக்கிட்டே போலாமே மக்களே. :)
நல்ல பாடல்களைக் கேளுங்க. கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க.
வாய்ப்பளித்த கானா பிரபாவுக்கு நன்னி!