Saturday, January 21, 2012
இசைஞானி இளையராஜா & இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் கூட்டுப்படையல்
எண்பதுகளின் தமிழ் சினிமாவின் அறிமுக இயக்குனர்களின் பெருங்கனவாக இருந்தது இசைஞானி இளையராஜாவோடு சேர்ந்து படம் பண்ணவேண்டும் என்பது, அதன் தொடர்ச்சி தொண்ணூறுகளிலும் இருந்ததென்று தான் சொல்ல வேண்டும். இளையராஜாவின் இசை தம்முடைய இலட்சியப்படைப்புக்கு உணர்வூட்டிப் லம் சேர்க்கும் என்பதே இதன் அடிப்படை என்பதைச் சொல்லவும் வேண்டுமா?
அறிமுக இயக்குனர்களோடு இசைஞானி இளையராஜாவின் இசை ஜோடி சேர்ந்து கொடுத்த வெற்றிப்படங்களை ஒரு பட்டியல் போடலாம். அது இன்னொரு பதிவுக்கு உதவும் :)
எண்பதுகளிலே திரைப்படக்கல்லூரி மாணவர்களின் வருகை தமிழ் சினிமாவில் அதிகம் கவனிக்கப்பட்டபோது அந்த வாசல் வழியாக வந்தவர் தான் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார். எடுத்த எடுப்பிலேயே அன்றைய தமிழ் சினிமாவின் முன்னணி ஏழு நட்சத்திரங்களில் இருவர் பிரபு, கார்த்திக் ஆகியோரை வைத்து ஆர்.வி.உதயகுமார் கொடுத்த படம் "உரிமை கீதம்" அந்தப் படத்துக்கு ஆபாவாணன் வழியில் இசையமைப்பாளர்கள் மனோஜ் கியானை இசைக்க வைத்தார். தொடர்ந்து "புதிய வானம்" படத்தில் சிவாஜி,சத்யராஜை இயக்கிய போதும் அவர் தேர்ந்தெடுத்தது இசையமைப்பாளர் ஹம்சலேகாவை.
முதற்படத்தில் இருந்து தானும் பாடலாசிரியராகத் தன் படங்களில் இருக்க ஆர்.வி.உதயகுமார் தவறவில்லை.
இசைஞானி இளையராஜாவோடு ஆர்.வி.உதயகுமார் கூட்டணி அமைத்த முதற்படமாக அமைந்தது தொடர்ந்து வந்த "கிழக்கு வாசல்". தயாரிப்பாளர் ஜி.தியாகராஜனின் சத்யஜோதி ஃபிலிம்ஸ் இசைஞானி இளையராஜாவை வைத்துப் பண்ணிய வெற்றிப்படங்களில் "கிழக்கு வாசல்" பெரு வெற்றி கண்ட படமாக அமைந்து சாதனை படைத்தது. கார்த்திக், ரேவதி ஆகியோரின் சினிமாப் பயணத்தில் தவிர்க்க முடியாத படமாக இது இன்றளவும் இருக்கின்றது.
"தாங்கிடத்தத்த தரிகிட தத்த" என்று சந்தம் போட்டு நெஞ்சின் கதவுகளைத் தட்டி உள்ளே சென்று உட்காரும் "அட வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி வேணும்" பாடலாகட்டும் சித்ராவின் தேன் குரலில் "வந்ததேஏஏஏஏ குங்குமம்" என்ற மெல்லிசையாகட்டும் படத்தில் மீதமுள்ள பாடிப் பறந்த கிளி உள்ளிட்ட எல்லாப் பாடல்களையும் சேர்த்து கிழக்கு வாசல் படத்தின் பாடல்கள் தங்கக் கிரீடம் சூட்டவேண்டிய தராதரம். "வந்ததே குங்குமம்" பாடலை இன்னொரு ஸ்பெஷல் பதிவுக்காக மனதில் ஒதுக்கி வைத்திருக்கிறேன்.
அதிலும் குறிப்பாக "பச்சமலப்பூவு நீ உச்சி மலைத் தேரு" பாடலை பாடல் ஒலி நாடாவில் இரண்டு பக்கமும் ஒலிப்பதிவு செய்து நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கேட்டு ரசித்ததாக அன்றைய காலகட்டத்தில் அறிவிப்பாளர் அப்துல் ஹமீட் ஒரு மேடை நிகழ்ச்சியில் சொல்லியிருந்தது ஞாபகத்து வருகின்றது. கிழக்கு வாசல் பாடல்களில் எதை இங்கே கொடுப்பது என்று வரும் போது ஓரவஞ்சனையுடன் "பச்சமலைப் பூவு" தான் வந்து விழுகிறது.
ஒரு படம் இடைவேளைக்குப் பின் மீண்டும் தன் வழக்கமான இரட்டை நாயகர்கள் செண்டிமெண்டில் வந்த படம் "உறுதிமொழி" இதில் சிவகுமார், பிரபு முக்கிய நாயகர்கள். ஆர்.வி.உதயகுமாரோடு திரைப்படக் கல்லூரி மாணவராக இருந்து வெளியே வந்து ஒளிப்பதிவாளராக இயங்கிய ரவி யாதவ், இவரின் தயாரிப்பில் வந்த படமே உறுதிமொழி. இப்போது ரவி யாதவ் முழுமையாகத் தமிழ் சினிமாவில் இருந்து ஒதுங்கி மும்பை சென்று விட்டார். கிழக்கு வாசல் கொடுத்த பெருங்கவனிப்போடு ஒப்பிடுகையில் உறுதிமொழி திரைப்படம் பெரிதாக எடுபடவில்லை. ஆனால் இந்தப் படத்தில் வந்த "அதிகாலை நிலவே அலங்காரச் சிலையே புதுராகம் நான் பாடவா" பாடல் அந்த நாளில் சென்னை வானொலியில் திரைகானத்திலும், நேயர் விருப்பத்திலும் ஒலித்துத் தன் இருப்பைக் காட்டியது இன்னும் இந்த ஜெயச்சந்திரன், எஸ்.ஜானகி கொடுத்த இந்த ஜோடிப்பாட்டை நேசிப்பவர்கள் நெஞ்சாங்கூட்டில் வைத்திருப்பர்.
தொடர்ந்து கார்த்திக், சிவகுமார் கூட்டணியோடு வந்தது "பொன்னுமணி". இந்தப் படத்தை எவ்வளவு தூரம் தமிழகத்து ரசிகர்கள் ரசித்தார்களோ தெரியவில்லை. ஆனால் ஈழத்து ரசிகர்களிடையே இந்தப் படம் வந்த காலகட்டத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. மின்சாரம் இல்லாது மண்ணெண்ணையில் நீர் இறைக்கும் மெஷினை இயக்கி மின்சாரம் தருவித்துப் படம் பார்த்த அந்தக் கற்காலத்தில் வந்த பொற்காலச் சினிமா இது. இசைஞானி இளையராஜாவின் மூத்த புதல்வர் கார்த்திக் ராஜா தன் தந்தையை "ஏ வஞ்சிக்கொடி" என்று முதன்முதலில் பாடவைத்து இசையமைத்தார். ஏனைய பாடல்களில் "நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா" எம் ஊரில் நாதஸ்வரம் வாசிப்பவர்களின் வாசிப்பில் அந்தக் காலத்தில் தவிர்க்க முடியாத ஒரு பாடலாகக் கல்யாண வீடுகளிலும், கோயில் திருவிழாவின் ஜனரஞ்சக வாசிப்பு நேரத்திலும் இடம்பிடித்த பாடலது.
"பாவலர் கிரியேஷன்ஸ்" இளையராஜாவின் அண்ணன் பாஸ்கர் தயாரிப்பில் கமலை "சிங்காரவேலன்" ஆக்கி ஆர்.வி.உதயகுமார் இயக்கிய படம். "அதிவீரராம பாண்டியன்" என்ற படத்துக்காக கமல் தனக்குக் கொடுத்த கால்ஷீட் என்றெல்லாம் தம்பி கங்கை அமரன் கோபித்தார். ஆனாலும் படம் இன்னொரு கரையில் வளர்ந்தது. படத்தில் வில்லன் உட்பட எல்லோருமே சிங்காரமாக இருக்கவேண்டும் என்பதை முன்னுறுத்துவதாக அப்போது பேட்டியில் எல்லாம் சொன்னார் ஆர்.வி.உதயகுமார். இசைஞானி இளையராஜாவின் நீண்ட சாம்ராஜ்யத்தில் எக்கோ இசைத்தட்டுக்கள் காலம் பெரியது. ஆனால் அவர்களோடு கொண்ட பிரிவால் தயாரிப்பாளர் ஏக்நாத் உடன் சேர்ந்து பனையோலை விசிறியைச் சின்னமாகப் போட்டு வந்த "ராஜா ரெக்காட்ஸ்" இல் சிங்காரவேலனும் வந்தது. அப்போது பாடல் ஒலிநாடா வாங்குபவர்களுக்குப் போட்டியும் பரிசு வெல்பவர்களுக்கு சிங்காரவேலன் படத்தின் வெற்றி விழாவில் கெளரவமும் கிட்டும் என்றெல்லாம் விளம்பரம், ஆனால் என் சிற்றறிவுக்கு எட்டியவரை அதெல்லாம் நடக்கவில்லை. ஏக்நாத்தும் காணாமற் போய்விட்டார் திரையுலகில் இருந்து. சும்மாவே இசைஞானியின் பாடல்கள் பட்டையைக் கிளப்பும், அதிலும் தன் குடும்பத் தயாரிப்பில் வந்த படம் என்றால் சொல்ல வேண்டுமா? பம்சுக்க பம்சுக்க பம்பம் தான் ;0
புதுச்சேரி கச்சேரி பாடலில் வரும் "டைகராச்சாரி" சொல் மட்டும் ஒலி இழந்து இலங்கை வானொலியில் ஒலித்தது, காரணம் ஏன் என்பதும் வேணுமோ?
இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய் பாடல் இன்றளவும் என்னை இம்சை செய்யும் இனிய காதலியாய்
"சின்னக்கவுண்டர்" ஆர்.வி.உதயகுமாருக்கு கிழக்கு வாசலுக்குப் பின் மீண்டும் பெரியதொரு வெற்றியைக் கொடுத்து அழகு பார்த்தது. படத்தில் விஜயகாந்த், மனோரமாவின் கெட் அப் மற்றும் சுகன்யாவின் பொருத்தமான பாத்திரத் தேர்வு, கவுண்டமணி செந்தில் இவற்றையெல்லாம் விஞ்சி இசைஞானி இளையராஜா போட்டுக் கொடுத்த ஒவ்வொரு பாடல்களுமே வெறும் அஞ்சு பாட்டுக் கணக்கல்ல. ஒவ்வொன்றும் காட்சிகளோடு இழத்துச் சேர்த்த முத்துக்கள். அதிலும் "முத்துமணி மாலை என்னைத் தொட்டுத்தொட்டுத் தாலாட்ட" பாடல் கடந்த ஒரு வருஷமாக நான் செய்யும் புதிய வானொலி நிகழ்ச்சியான "முத்துமணிமாலை" இன் மகுடப்பாடல். இந்தப் பாடல் வந்த சமயத்தில் இலண்டனில் இருக்கும் அண்ணர் வாங்கித் தந்த டேப் ரெக்காடரில் அப்போது இயங்கிய எஃப் எம் 99 என்ற வானொலியை ஒலிக்கவிட்டு "முத்துமணி மாலை" பாடலைப் பதிவாக்கியது ஒரு அழகிய நினைவாக.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன் பார்வை தொடர்ந்து வெற்றிப்படம் கொடுக்கும் ஆர்.வி.உதயகுமார் மீது விழுந்த போது அது ஏவி.எம் என்ற பெரும் தயாரிப்பு நிறுவனமும் கூட்டுச் சேர "எஜமான்" படமாகியது. படம் முழுவதும் ரஜினியை வேஷ்டி கட்டவைத்து வானவராயர் ஆக்கியது ஒரு புதுமை என்றால், ஏவிஎம் உடன் ஊடல் கொண்டிருந்த இசைஞானி இளையராஜாவை வைத்துத் தான் படம் பண்ணுவேன் என்று விடாப்பிடியாக இருந்து அதைச் சாதித்தது ஆர்.வி.உதயகுமாரின் இன்னொரு சாதனை. கிழக்கு வாசல் படத்தில் வாலியும் பாட்டெழுதினார் ஆனால் தொடர்ந்து வந்த உறுதி மொழி, பொன்னுமணி படங்களில் முழுமையாக ஆர்.வி.உதயகுமாரே எல்லாப்பாடல்களையும் எழுதினார். மீண்டும் வாலிக்கும் ஒரு வாய்ப்பு எஜமான் படத்தில்.
இசைஞானி இதில் கொடுத்த பாடல் முத்துக்கள் ஒவ்வொன்றுமே நட்சத்திரத் தகுதி. அதிலும்
"ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்
விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்
இனியான இளமானே துணையான இளமானே"
என்ற பாடல் உச்சம். இதே பாடலை சோக மெட்டோடு ராஜாவே பாடியிருப்பது படத்தில் மட்டும் வரும்.
நடிகர் பிரபுவின் 100வது படம் யார் இயக்குவது என்ற தகுதிச் சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டு வாய்ப்புக் கொடுக்கப்பட்டவர் ஆர்.வி.உதயகுமார். அமெரிக்கா சென்ற நதியாவை மீண்டும் களமிறக்கி, மீனாவையும் சேர்த்து இரட்டை ஜோடியாக்கி "ராஜகுமாரன்" படமாக்கினார். அன்றைய காலகட்டத்தில் இந்தப் படத்துக்கான விளம்பரம் கொஞ்ச நஞ்சமல்ல. ஆனால் ஏகப்பட்ட எதிர்பார்ப்பே படத்தின் வெற்றிக்கு ஆப்பு வைத்தது. என்னதான் இசைஞானி இளையராஜாவின் முத்தான பாடல்கள் இருந்தாலும் வெற்றி கொடுக்காத படம், பாடல்களை மட்டுமே வெற்றியாக்கியது. "சித்தகத்திப் பூக்களே" பாடலோடு "என்னவென்று சொல்வதம்மா" பாடல் மறக்கமுடியாத எஸ்.பி.பி கானம்.
பட்டகாலிலே படும் என்பது போல அடுத்த சறுக்கல் "நந்தவனத் தேரு" படம் மூலமாக ஆர்.வி.உதயகுமாருக்கு. தனக்கு ஆரம்ப காலத்தில் வெற்றி தேடித்தந்த நாயகன் கார்த்திக்கை வைத்து இலக்கியத்தரமான தலைப்பை வைத்தவர் கதையில் கோட்டை விட்டதால் வெற்றியில் ஓட்டை விழுந்து விட்டது. அதனால் அழகான அறிமுகம் ஶ்ரீநிதிக்கும் ஒரு முற்றுப்புள்ளி.
வழக்கம் போல எல்லாப்பாடல்களும் ஆர்.வி.உதயகுமார் எழுதினார். குறிப்பாக "வெள்ளி நிலவே வெள்ளி நிலவே வீண் சோகம் ஏனடி மானே" பாடல் வெற்று வார்த்தைக் கவிஞர் அல்ல இவர் என்பதைக் காட்டிய ஒரு பாட்டு. மீண்டும் ஒருமுறை கேட்டுப் பாருங்கள் மீண்டும் ஒருமுறை கிறங்கிப் போவீர்கள்.
தமிழ் சினிமாவின் எண்பதுகளின் முக்கிய நட்சத்திரங்கள் அனைவரையும் இயக்கிப் பெருமை கொண்ட ஆர்.வி.உதயகுமாருக்கு முழுமையாக அரிதாரம் பூசிக்கொண்டால் என்ன என்று தோன்றியிருக்கும். அவ்வப்போது சிறு சிறு துண்டு வேடங்களில் வந்தவர், நடிகர் ஜெயராமோடு, தானும் நாயகனாகி "சின்ன ராமசாமி பெரிய ராமசாமி" என்ற படத்தை இயக்கினார். படத்தில் நடித்த பல நடிகர்களே ஃபீல்டை விட்டுப் போய்விட்டார்கள் ஆனால் படம் பத்து வருஷங்கள் கடந்தும் வெளிவராமல் இன்னும் பெட்டிக்குள் தூங்குகின்றது. இதுவரை இசைஞானி இளையராஜா, ஆர்.வி.உதயகுமார் சேர்ந்த கூட்டணியில் இறுதிப்படம் என்ற பெருமை மட்டும் தான் இப்போது இதற்கு. வாழையடி வாழையா என்ற கே.ஜே.ஜேசுதாஸ் பாடி இந்தப் படத்துக்காக இசைத்த பாடல் மட்டும் இன்னும் ஒலிக்கிறது வானொலிகளில்.
இசைஞானி இளையராஜாவோடு இணைந்து இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் கொடுத்த இந்த முத்தான பத்துப் படங்களோடு இன்னொரு சுற்றும் இணையவேண்டும் என்பதே உங்களைப் போன்ற என் ரசிகனின் அவா. பார்ப்போம் பொறுத்து.
Subscribe to:
Posts (Atom)