Pages

Tuesday, October 28, 2014

பாடல் தந்த சுகம் : ஒரு போக்கிரி பார்க்கிற பார்வை தான்

தொண்ணூறுகளில் என் ஆஸ்தான ஒலிப்பதிவுக்கூடமாக இருந்தது ஷண் றெக்கோர்டிங் பார். அந்தக் காலத்தில் ஒலிநாடாவில் பாடல் பதிவு செய்து கேட்ட அனுபவங்களை எல்லாம் சொல்லி மாளாது.
ஷண் றெக்கோர்டிங் பார் யாழ்ப்பாண நகர பஸ் ஸ்ராண்டின் நடு நாயகமாக இருந்த நெட்டை மரப்பலகை மாடியில் இருந்து பதவி உயர்வு பெற்று யாழ்ப்பாணம் நவீன சந்தைக் கட்டடத்துக்கு உள்ளே இருந்த கடைத்தொகுதியில் ஒரு அறையைப் பிடித்துக் கொண்டது. ஒதுக்குப்புறமான இடத்தில் இருந்த அந்த ஒலிப்பதிவுக் கூடத்துக்கு வழி காட்டுவதே அப்போது வந்த இளையராஜாவின் படப்பாடல்களே.

ஸ்பீக்கர் வழியாக அந்த இசை நவீன சந்தைக் கட்டடத்தைத் தாண்டி வழிந்தோடும். அப்படித்தான் ஒருநாள் புதுப்பாட்டு ரெக்கோர்டிங் செய்ய வேண்டும் என்று ஷண் றெக்கோர்டிங் பார் நோக்கிப் படையெடுத்த என்னை வரவேற்றது "ஒரு போக்கிரி ராத்திரி" பாடலின் முகப்பு இசை.  ஒலிப்பதிவுக்கூடத்துக்குப் போய் இறங்கிய கையோடு முதலில் பாடல் பதிவு செய்ய எழுதிக் கொடுக்கும் தாளில் இந்தப் பாடலை எழுதிக் கொடுத்தேன். அந்த அனுபவத்தை இன்னும் தாண்டமுடியவில்லை இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம்.

தொண்ணூறுகளில் சூப்பர் ஹிட் ஜோடிகளில் ஒன்றாக மனோ - ஸ்வர்ணலதாவையும் கண்டிப்பாகக் குறிப்பிட வேண்டும். இதை முன்னுறுத்தி ஒரு தொகுப்பு வருகின்றது என்பதை இப்போதே முன்னோட்டமாகச் சொல்லிக் கொள்கின்றேன். பாடலின் ஆரம்பத்தில் ஆர்ப்பரிக்கும் இசையோடு வாலியின் வாலிப வரிகளுக்கு இசைஞானி கொடுத்த மெட்டின் நளினமே தனியழகு. சரணத்தில் ஒவ்வொரு அடிகளுக்கும் ஆமோதிக்குமாற் போல புல்லாங்குழல் வருடிவிட்டு வழி விடும் பாடகர்களைப் பாட.

 நாளை அக்டோபர் 29 ஆம் திகதி பிறந்த நாளாக அமையும் கவிஞர் வாலி அவர்கள் தனது அறுபதாவது வயதில் எழுதிய பாடல் இது என்பதைச் சொல்லித்தான் நம்ப வைக்க முடியும்.
நடிகர் ராதாரவி "கங்கைக்கரைப் பாட்டு", "இளைஞர் அணி" போன்ற படங்களைத் தயாரித்திருக்கின்றார். "இது நம்ம பூமி" தான் சார்ந்த திரையுலக அங்கத்தவர்களுக்காக, அவர்கள் சார்பில் தயாரித்த படம். வருஷம் 16 இற்குப் பின்னர் கார்த்திக் - குஷ்பு ஜோடியை மகத்துவப்படுத்திய
இன்னொரு படம் இது, பி.வாசு இயக்கியது. ஒரு போக்கிரி ராத்திரி பாடலே வருஷம் 16 படத்தில் வரும் பூப்பூக்கும் மாசம் தை மாசம் பாடலின் காட்சியமைப்போடு நெருங்கி ஆரம்பிக்கும்.

படத்தில் எல்லாப் பாடல்களுமே சூப்பர் ஹிட் ரகம். இதே படத்தில் கே.ஜே.ஜேசுதாசுடன் இணைந்து ஸ்வர்ணலதா பாடிய "ஆறடிச் சுவரு தான்" பாடலை மறக்கமுடியுமா?

இளமைக் காலத்து நினைவுகளை அந்தக் காலகட்டத்தில் கேட்ட பாடல்கள் தான் பின்னணி இசை போல மீட்டிப் பார்க்கும். "ஒரு போக்கிரி ராத்திரி பார்க்கிற பார்வை தான்" எனக்குத் தவிர்க்க முடியாத பின்னணி இசையாகFriday, October 24, 2014

ஒளிப்பதிவு இயக்குநர் அசோக்குமார் நினைவில்


ஒரு இயக்குநரின் தோளின் இருபுறமும் பயணிக்க வேண்டியவர்களில் இசையமைப்பாளர் மற்றும் ஒளிப்பதிவாளரின் பங்கு மிக முக்கியமானது. கட்புலனை கைவரப்பெறாதோர் எவ்வளவு தூரம் காட்சியோட்டத்தில் இழைந்திருக்கும் வசனத்தையும் அத்தோடு நயமாகப் பொருந்தியிருக்கும் இசையமைப்பையும் உள்வாங்கி அந்தக் கலைப்படைப்பைக் கச்சிதமாக உணர முடியும் வல்லமை கிட்டும் பாங்கிலேயே ஒலியைக் கேட்டு நுகரமுடியாதோருக்கு ஒரு ஒளிப்பதிவாளரின் முக்கியத்துவம் பெரிதும் உணரப்படுகின்றது.

இவற்றுக்கும் மேலாக ஒரு இயக்குநரின் மனக்கண்ணில் ஓடுவதை உள்ளது உள்ளவாறோ அல்லது அதற்கும் மேலாகவோ கச்சிதமாகத் தன் கேமராக் கண்ணுக்குள் அடக்கும் ஒளிப்பதிவாளரே இயக்குநரின் ஜீவனாக நின்று தொழிற்படுகின்றார்.

"அழகிய கண்ணே உறவுகள் நீயே" பாடல் ஒன்றே போதும் உதிரிப்பூக்கள் படத்தில் பொதிந்திருக்கும் வலியை இயக்குநரின் சார்பில் ஒளிப்பதிவாளரும், இசையமைப்பாளரும் பங்கு போட்டுக்கொண்டு செய்த கைங்கர்யத்தை. http://www.youtube.com/watch?v=VhZrCanB9L0 

அந்தப் பாடலில் அந்தப் பாடலில் விளையாடும் குழந்தை, சோப்பு போட்ட எரிச்சலோடு துள்ளிக் கொண்டே குளிக்கும் அண்ணன்காரன், துன்பச்சுமையை அப்படியே தன் முகம் வழியே வாக்குமூலம் பகிரும் இவர்களின் தாய் என்று அந்தப் பாடலின் காட்சியோட்டத்தின் சில துளிகளே ஒரு நாவலின் பல்வேறு பக்கங்களைத் திரட்டித் தந்தது போல.
35 வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த இந்த "உதிரிப்பூக்கள்" படத்தின் வாயிலாகத் தம் நேர்மையான உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள் இயக்குநர் மகேந்திரன், இசையமைப்பாளர் இளையராஜா இவர்களோடு சில நாட்களுக்கு முன்னர் மறைந்த ஒளிப்பதிவாளர் அசோக்குமார்.

இயக்குநர் மகேந்திரனைப் பொறுத்தவரையில் அசோக்குமார் கிடைத்திராவிட்டாலும் இன்னொரு ஒளிப்பதிவாளரைத் தன்னுடைய படைப்பாற்றலின் நிலைக்கண்ணாடியாகத் தான் வரித்திருப்பார். அவரின் முதற்படமான முள்ளும் மலரும் படமே இதற்குச் சாட்சி. முள்ளும் மலரும் படத்தின் ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திரா படம் எடுக்கும் போதே சில பல தயாரிப்புச் சிக்கல்கள் மற்றும் இவரும் சொந்தமாகப் படம் இயக்கும் முனைப்போடு கிளம்பியது அடுத்த படமான உதிரிப்பூக்கள் படத்தில் அசோக்குமாருடன் மகேந்திரன் இணைய அச்சாரம் வைத்தது.

தொடர்ந்து பூட்டாத பூட்டுக்கள், ஜானி, நெஞ்சத்தைக் கிள்ளாதே, நண்டு என்று தொடர்ந்தது மகேந்திரன் - அசோக்குமார் கூட்டணி. இதில் நெஞ்சத்தைக் கிள்ளாதே அசோக்குமாருக்குத் தேசிய விருதை வாங்கிக் கொடுத்த படம். நண்டு படம் இயக்குநர் மகேந்திரனை மீறித் தயாரிப்பாளர் கைமா பண்ணிச் சிதைத்திருந்தாலும் அந்தப் படத்தில் வரும் அள்ளித்தந்த பூமி, மஞ்சள் வெய்யில் பாடல்கள் எடுக்கப்பட்ட விதம் ஏமாற்றாமல் இன்னும் அந்தப் படத்தின் பேர் சொல்ல வைக்கும். அதே போல் ஜானி படத்தின் தொழில்நுட்பச் சிறப்பில் அசோக்குமாரும் பங்கெடுத்துக் கொண்டார். அசோக்குமாரின் ஒளிப்பதிவுத்திறனை மகேந்திரனே கச்சிதமாகப் பயன்படுத்திக்கொண்டார். இளையராஜாவின் பாடல்கள் தரம் குன்றாது இந்தக் கூட்டணியால் மிளிர்ந்தன.

முதல் 3D திரைப்படமான மை டியர் குட்டிச்சாத்தான் படத்துக்கு அசோக்குமார் ஒளிப்பதிவு செய்தது இவருக்குக் கிட்டிய இன்னொரு மகுடம் எனலாம்.

பி.வாசு இயக்கிய படங்கள் பலவற்றில் ரவீந்திரன் முக்கிய ஒளிப்பதிவாளர். ஆனால் நடிகன், கட்டுமரக்காரன், மன்னன் போன்ற படங்களில் அசோக்குமாரும் பங்கு போட்டார். பவித்திரனின் சூரியன் படமும் ஷங்கரின் ஜீன்ஸ் படமும் அசோக்குமாரின் காமெராவின் பிரம்மாண்டத்தை உணர்த்தி நிற்கின்றன. குறிப்பாக சூரியன் படத்தை தியேட்டரில் அந்தக்காலத்தில் பார்த்தபோது கிட்டிய காட்சி அனுபவம் இன்னும் மனசுக்குள் ஒட்டியிருக்கு.

ஒளிப்பதிவாளர்கள் இயக்குநராவது திரையுலகம் காணும் நிகழ்வு. அசோக்குமார் இயக்குநராக "காமாக்னி" என்ற படத்தை ஹிந்தியில் இயக்கியபோது இசைத் தோள் கொடுத்தவர் இளையராஜா.

தொடர்ந்து  "அன்று பெய்த மழையில்" படத்தை இயக்கினார். அந்தப்படம் அப்போது பரபரப்பான சில்க் இன் கவர்ச்சி அலையால் வெகுவாகக் கவனிக்கப்பட்டது. அந்தப் படத்துக்கு இசை தாயன்பன். இவரின் பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். ஏனோ ஒரு சில படங்கள் தான் தாயன்பனுக்குக் கிட்டியது.

தெலுங்குத் திரை ரசிக உலகம்  மறக்காத காதல் படங்களில் அசோக்குமார் இயக்கிய "அபிநந்தனா" படம் முக்கியமானது. இது வழக்கமான அசோக்குமாரின் கவர்ச்சி, பாலியல் ஈர்ப்பு சார்ந்த படங்களில் இருந்து மாறுபட்ட அழகான காதல் கதை. கார்த்திக், ஷோபனா போன்றோர் நடித்த இந்தப் படம் தமிழில் "காதல் கீதம்" என்ற பெயரில் மொழி மாறியது. இந்தப் படத்தின் பாடல்கள் எல்லாமே அட்டகாச ரகம். இந்த மெட்டுகள் அன்பின் முகவரி, சிறைப்பறவை போன்ற படங்களின் பாடல்களாகவும் வந்திருக்கின்றன. காதல் கீதம் படத்தில் "மஞ்சள் அந்தி வேளையோ", "வாழ்வா சாவா", "பெண்மை கொண்ட மெளனம்" எல்லாம் அந்தக் காலத்து இளைஞரின் காதல் கீதங்கள்.

பின்னர் கங்கை அமரன் வசனம்,பாடல்கள் எழுதிய "தம்பிக்கு ஒரு பாட்டு" படம் இயக்குநராக அசோக்குமார் இளையராஜாவோடு சேர்ந்த முக்கிய படங்களில் ஒன்று என்பதற்கு இந்தக் கூட்டணியில் விளைந்த பாடல்கள் முக்கிய காரணம். "தை மாசம் கல்யாணம் அன்று காதல் ஊர்கோலம்" ஜெயச்சந்திரன், ஸ்வர்ணலதா பாடிய தெள்ளமுதல்லவா அது.

ஒளிப்பதிவாளராக, இயக்குநராக அசோக்குமார் நினைவுகூரப்படுவார் அவர் பணியாற்றிய முன் சொன்ன படங்களுக்காக.

பிற்சேர்க்கையாக ஒளிப்பதிவு இயக்குநர் அசோக்குமாரின் ஒளியோவியத்தில் இருந்து

பருவமே புதிய பாடல் பாடு (நெஞ்சத்தைக் கிள்ளாதே)


அள்ளித்தந்த பூமி அன்னையல்லவா ( நண்டு)


காற்றில் எந்தன் கீதம் (ஜானி)


Manchu Kuruse Velalo  (அபிநந்தனா)

Thursday, October 16, 2014

நான் பெருமைக்குரிய கிரேஸி மோகன் ரசிகன்

கமலஹாசனுக்குப் பொருத்தமான ஜோடி ஶ்ரீதேவி என்ற நினைப்பை மாற்றி கமலுக்குப் பொருத்தமான ஜோடி கிரேஸி மோகனே என்று சொல்லுமளவுக்கு அபூர்வ சகோதரர்கள் காலத்தில் இருந்து வெற்றிக் கூட்டணியாக இருந்து வருகிறார்கள்.

நாடக மேடைகளில் இருந்து திரைத்துறைக்கு பாலசந்தரின் "பொய்க்கால் குதிரை" திரைப்படத்தின் வழியாக அறிமுகப்படுத்தப்பட்டாலும் சிஷ்யப்பிள்ளை கமலின் அபூர்வ சகோதரர்களே கிரேஸி இருக்கிறார் கொமாரு என்று அவர் பெயரைச் சொல்ல வைத்தது. அதற்குப் பின்னால் இன்னும் அழுத்தமாக கிரேஸி மோகன் யார் என்பதை மைக்கேல் மதன காம ராஜனில் ஆரம்பித்து, சதிலீலாவதி,  மகளிர் மட்டும், அவ்வை ஷண்முகி, காதலா காதலா,  பஞ்ச தந்திரம், வசூல்ராஜா எம்பிபிஎஸ், தெனாலி, பம்மல் கே சம்பந்தம் என்று தொடரும் கமல் - கிரேஸி மோகன் பந்தம்  வசனத்தில் பஞ்ச் தந்திரம் அடித்து ரசிகர்களைக் கவர்ந்திழுக்கும் அளவுக்குக் கடந்த முப்பதாண்டுகளில் இம்மாதிரி தொடர்ச்சியான வெற்றிக் கூட்டணி அமைந்ததில்லை.

கமல்ஹாசன் தவிர்த்து வேறு பல இயக்குநர் படங்களிலும் கிரேஸி மோகன் பணியாற்றியிருந்தாலும் "ஆஹா" படம் தவிர்த்து  கிரேஸி மோகனின் தனித்துவத்தை மெய்ப்பிக்கக்கூடிய படங்கள் வாய்க்கவில்லை என்பேன். "கொல கொலயா முந்திரிக்கா" படத்தை கிரேஸி மோகனை ஹீரோவாக நினைத்துக்  கொண்டுதான் பார்த்து ரசித்தேன். 

என்னதான் திறமைசாலியாக இருந்தாலும் அவரிடம் தனக்குத் தேவையானதை பொருத்தமான களத்தில் முழுச்சுதந்தரம் கொடுத்து வேலை வாங்குபவர் ஜெயித்துக் காட்டுவார். இந்தச் சூத்திரம் இளையராஜாவின் பாடல்களில் கூடப் பொருத்திப் பார்க்கலாம். கமல்ஹாசன் அளவுக்கு கிரேஸி மோகனின் நுண்ணிய நகைச்சுவை உணர்வைத் தன் படைப்புகளில் வெற்றிகரமாகப் பயன்படுத்தும் அளவுக்கு கிரேஸி மோகனை அவ்வளவு புரிந்து கொள்ளாத படைப்புலகம் இருக்கிறது என்றும் கொள்ளலாம்.

மெல்பர்னில் இருந்த போது பல்கலைக்கழகத்தில் படித்த காலத்தில் "காதலா காதலா" படத்தைத் தியேட்டரில் பார்த்து விட்டு நண்பர்களுடன் ட்ராம் வண்டியில் திரும்புகிறோம். படத்தைத் தியேட்டரில் பார்க்கும் போது ஓயாத சிரிப்பு மழையால் அமுங்கிப் போன வசனங்கள் ஒவ்வொன்றையும் அந்த நேரம் அவதானித்த வகையில் ஒவ்வொருவராகச் சொல்லிச் சிரித்து மகிழ்கின்றோம். பின்னர் அடுத்த வாரம் ஆனந்த விகடனின் இரண்டு பக்கங்களில் "காதலா காதலா" படத்தின் குறித்த சில வசனப் பகுதிகளை மட்டும் பகிர்ந்த போது விடுபட்ட இன்னும் பல நகைச்சுவைப் பகிர்வுகளைத் தெரிந்து சிரித்துச் சிரித்துத் தேய்ந்து போனோம்.
அதுதான் கிரேஸி மோகன்.

இளையராஜாவின் பாடல்களைப் பல்லாண்டுகளாகக் கேட்டு வந்தாலும் குறித்த பாடல்களை ஒவ்வொரு முறை கேட்கும் போது புதிதாய் ஒரு சங்கதி இசையிலோ அல்லது மெட்டமைப்பிலோ கிட்டும். அது போலவே கிரேஸி மோகனின் வசனப் பங்களிப்பும். சோகம் துரத்தும் தருணங்களில் ராஜாவின் இசைக்கு நிகராக இன்னொரு தளத்தில் கை கொடுப்பது அவ்வை சண்முகி மாமியின் அட்டகாசங்கள்.
வெளிநாட்டுப் பயணத்தில் கண்டிப்பாக ஒரு  காட்சி "மைக்கேல் மதன காமராஜன்"ஆக இருக்குமாறு பார்த்துக் கொள்வேன்.

கிரேஸி மோகனின் பங்களிப்பு திரைத்துறை தாண்டி மேடை நாடகத்திலும் வெற்றிகரமாக இயங்கினாலும் எனக்கு அந்த அனுபவம் கிட்டவில்லை. ஆனால் ஒலி நாடாவில் வெளிவந்த கிரேஸி மோகன் நாடகங்கள் ஓரளவு ஆறுதல். தொலைக்காட்சியில் கிரேஸி மோகன் நாடகத் தொடர்கள் வந்திருந்தாலும் ஒன்றிரண்டு அங்கங்களுக்கு மேல் என்னை ஈர்க்காதது அவர் குற்றமன்று. அவரின் வசனத்தில் இருக்கும் நவீனத்துவத்தையும் புத்திசாலித்தனத்தையும் சின்னத்திரை ஊடகத்தில் பயன்படுத்தும் போது இன்னும் பலபடிகள் தொழில் நுட்ப ரீதியிலும் சிறப்பாக அமைந்திருக்க வேண்டும்.
வெள்ளைக்காரனின் நகைச்சுவைத் தொடர்களுக்கு இஞ்சித்தும் குறைந்ததல்ல கிரேஸி மோகனின் பங்களிப்பு ஆனால் அதைப் பணக்காரத்தனமாகக் கொடுக்கும் போது இன்னும் பரவலான ஈர்ப்பைப் பெறும் என்பது இசைஞானியின் ஒரு அற்புத இசையை மொக்கைப் படத்தில் கைமா பண்ணும் போது ஏற்படும் ஏமாற்றத்துக்கு நிகரானது. கிரேஸி மோகன் வசனங்களுக்கென்றே பொருத்தமான கலைஞர்கள் வாழ்க்கைப்பட்டு விட்டார்கள்.

தமிழர்களுக்கு நகைச்சுவை உணர்வு குறைவு என்போர் கிரேஸி மோகன் போன்ற ஆளுமைகளையும் அவரால் உருவாக்கப்பட்ட பல்லாயிரம் ரசிகர்களையும் தெரிந்திராதவராக இருப்பர்.

கிரேஸி மோகனின் சினிமாப் பதிவுகளைத் தொகுக்க எண்ணி நண்பர்களை இணைத்து கிரேஸி மோகன் சினிமாப்பக்கம் http://crazymohanincinema.wordpress.com என்ற தளத்தை ஒரு வருடம் முன்னர் உருவாக்கியிருந்தேன்.
இன்று பிறந்த நாள் காணும் கிரேஸி மோகனுக்கு கடைக்கோடி ரசிகனாக என் வாழ்த்துகளைத் தெரிவித்து மன நிறைவு கொள்கிறேன்.

Wednesday, October 1, 2014

நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் இசைஞானி இளையராஜாவும்

இன்று அக்டோபர் 1 ஆம் திகதி நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்த தினமாகும். எனவே ஒரு சிறப்புத் தொகுப்பாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த படங்களுக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்த பாடல் தொகுப்பை YouTube தொகுப்பாக இங்கே பகிர்கின்றேன்.தொகுப்பில் இடம்பெறும் படங்கள்
நான் வாழ வைப்பேன்
தீபம்
பட்டாக்கத்தி பைரவன்
தியாகம்
கவரிமான்
நல்லதொரு குடும்பம்
ரிஷிமூலம்
வெள்ளை ரோஜா
எழுதாத சட்டங்கள்
ரிஷிமூலம்
வாழ்க்கை
படிக்காதவன்
சாதனை
தாய்க்கு ஒரு தாலாட்டு
ஜல்லிக்கட்டு
முதல் மரியாதை
நாங்கள்
தேவர் மகன்
ஒரு யாத்ரா மொழி (மலையாளம்)

பி.கு கிருஷ்ணன் வந்தான், படிக்காத பண்ணையார் போன்ற படங்களிலும் இளையராஜா இசை இடம்பெற்றாலும் பொருத்தமான பாடல்களைப் பகிர இயலவில்லை.இந்தப் பகிர்வின் முகப்புப் புகைப்படம் நன்றி www.chakpak.com
இந்தப் பகிர்விற்குப் பாடல் தோடியபோது கைக்கெட்ட உதவிய YouTube இல் பகிர்ந்திட்டவர்களுக்கும் நன்றி