Pages

Monday, March 25, 2024

பெரியோனே…. என் ரஹ்மானே…….❤️ ரஹ்மானும் அவர் தந்தையும் அளித்த ஆன்மாவின் பாடல்கள் ❤️



புகை போல சிட்னியின் விடிகாலைப் புகார் முட்டியிருந்த அந்தச் சனிக்கிழமை விடிகாலை.


காரை வெளியில் எடுத்துக் கொண்டு வழக்கமாக ஓட்டப் பயிற்சி எடுக்கும் பூங்காவை நோக்கிப் பயணிக்கும் சமயம் “பெரியோனே” 

பாடலை ஒலிக்க விடுகிறேன்.


அந்த ஏகாந்தச் சூழலில் அந்தப் பாடல் எழுப்பிய உணர்வுக்கு மொழியில்லை.

அந்த மலையாளப் பாடலோடே ஐக்கியமாகின்றேன்.


கையறு நிலைப்பட்ட ஒரு ஆன்மாவின் மன ஓசையாகப் பிறக்கும்  இந்தப் பாடலின் முதலடிகள் தான் இறைவனை யாசிக்கும், அதன் பின்னெல்லாம் வருவது அவனின் சுய பச்சாதாபமாக இருக்கும்.


ரஹ்மானைப் பொறுத்தவரை ஆன்மிகப் பாடல்களைத் தனித்தும் செய்தவர்.


உதயங்கள் எல்லாமும் 

மேற்கில் அல்லவா

அது உண்மை நபி நாதர் 

தரும் வாக்கில் அல்லவா


https://youtu.be/-XdmSHm2xWk?si=n-6O2CNMl_Jv50yn


வாங்கிக் குவித்த இசைத்தட்டுகளின் குவியலில் முதல் இறையருள் பாடல்கள் கொண்ட இசைத்தட்டு என்ற பெருமையப் பெறுவது தீன் இசை மாலை எனும் இசை வட்டு. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் திரையுலகுக்கு வருவதற்கு முன்னர் இசையமைத்து வெளிவந்த இஸ்லாமியத் தனிப்பாடல் திரட்டு இதுவாகும்.

இலங்கையில் இருந்த காலத்தில் வானொலி வழியாக, இங்கே நான் பகிர்ந்த சுஜாதா பாடிய பாடல் வழியாகத் தான் இந்த இசைவட்டு குறித்த அறிமுகம் எனக்குக் கிட்டியது.

"தீன் இசைமாலை" இஸ்லாமிய இறைபக்திப் பாடல்களுக்குப் புது வடிவம் கொடுத்ததென்பேன்.


“பெரியோனே” பாடலில் ஜித்தின் ராஜ் இன் குரலை எப்படித்தான் ரஹ்மான் கச்சிதமாக அமர்த்திக் கொண்டரோ, எல்லா மொழிகளிலும் அவர் குரல் அந்தப் பாடலின் ஆன்மாவாகவே பிரதிபலிக்கின்றது.


“ஆடு ஜீவிதம்” படத்துக்காக மிகவும் சிரத்தையெடுத்துக் கொண்டேன் என்ற ஏ.ஆர்.ரஹ்மானின் கூற்றின் மெய்த்தன்மையைக் கட்ட “பெரியோனே” ஒரு சிறு உதாரணம் பறையும்.


https://youtu.be/mX8JxEc2_mk?si=dDi7dTjBg1yf44uR


பின்னணி ஓசையை ஆற்றுப்படுத்தி, குரலுக்கே முக்கியத்துவம் தருகிறார்.

“பெரியோனே” என்று தொடங்கும் போதே பாலைவனத் திடலில் நின்று ஒலிக்கும் ஒற்றைக் குரலாகவே தொனிக்கிறது.


“ஒரு ஆன்மிக இடம் போல எந்த வித தேவையற்ற பேச்சுக்கள் அற்ற சூழலாக ரஹ்மானின் ஒலிப்பதிவுக் கூடம் இருக்கும்” என்று சாய் வித் சித்ராவில் கெளதம் வாசுதேவ மேனன் பேட்டியில் குறிப்பிட்டிருப்பார். அது சரியான நேரத்தில் இந்தப் பாடலின் வழியே உணர வைக்கின்றது.


ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை ஆர்.கே.சேகர் மலையாள சினிமாவின் உதவி இசையமைப்பாளர், இசை ஒருங்கமைப்பாளராகவும் இயங்கியவர்.

ஆர்.கே.சேகர் இசையமைப்பாளராய் அறிமுகமானது 1964 இல்  “பழசிராஜா” படைப்பின் வழியாக பின்னாளில் மம்மூட்டி நடிக்க இளையராஜா இசையில் இதே பெயரில் ஈராயிரங்களில் உருவானதும் நாமெல்லோரும் அறிந்ததே.


ஆர்.கே.சேகரின் அறிமுக இசைமைப்பில் வயலூர் ரவிவர்மா பாடல் வரிகளில் கே.ஜே.ஜேசுதாஸ் ஒரு பாடல் இருக்கின்றது. அந்தப் பாடலில்


காலன் கோழிகள் கூவி

கழுவன் சுற்றி நடந்தூ…..


என்று இடைவரி அமைந்திருக்கும்.

அதை இப்போது தனையன் ரஹ்மானின் ஆடு ஜீவிதத்தோடு பொருத்திப் பார்க்கிறேன்.


ரஹ்மானின் தந்தை கொடுத்த 

அந்தப் பாடல்

.

“சொட்ட முதல் சுடலை வரே

  சுமடும் தாங்கி 

  துக்கத்தின் தண்ணீர்ப்பந்தலில்

  நில்குன்னவரே…. நில்குன்னவரே


https://youtu.be/0H2dqpx6R8M?si=xwfz8X05pfjr2vt7


✍🏻

கானா பிரபா

Wednesday, March 20, 2024

கவிஞர் முத்துலிங்கம் 82 💚❤️


“பூபாளம்....
இசைக்கும் பூமகள் ஊர்வலம்....”

நான் கேட்ட கேள்வியை மறந்து விட்டுப் பாட ஆரம்பித்தார் கவிஞர் முத்துலிங்கம்.
“கே.பாக்யராஜ் இற்கும் உங்களுக்கும் அப்படியென்ன ஒரு பந்தம்?”

என்று நான் கேட்டதுக்குத் தான் அப்படிப் பாடியபடி ஆரம்பித்தார் தன் பதிலோடு.

இன்று தமிழ்த் திரையிசையின் செழுமையான பாடல் பயிர்களை விளைவித்த கவிஞர் முத்துலிங்கம் ஐயா அவர்களுக்கு அகவை 82. திரையிசைப் பாடலாசிரியராக ஐம்பது ஆண்டுகளைத் தொடுகின்ற அவரது பாட்டு ஓட்டத்தில் கிடைத்த ஒவ்வொரு துளியும் நமக்குப் பெறுமதியான பாடல்களாக ஏந்த முடிந்தது.

ஒரு காலத்தில் வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளராக வருவதற்கு முன்னர் வானொலி உரையாடல் நிகழ்ச்சிகளில் நேயராக நான் பங்கு பெறும் போதெல்லாம் ஏதோ ஒரு பாட்டு எப்படி உருவானது என்று குறித்த பாட்டின் பின்புலம் குறித்து எனக்குத் தெரிந்த செய்திகளைப் பகிர்வேன். பின்னர் என் வானொலி நிகழ்ச்சியாக அமைந்ததும் "பாடல் பிறந்த கதை" தான்.

கவிஞர் முத்துலிங்கம் அவர்களின் பாடல் பிறந்த கதை என்ற நூலை 2011 இல் சிங்கப்பூர் சென்றிருந்த போது வாங்கி ஒரே மூச்சில் வாசித்திருந்தேன். அந்த நூலில் வெறுமனே அவரின் திரையுலக அனுபவங்கள் மாத்திரமன்றி அந்தக் காலத்தில் இருந்து இந்தக் காலம் வரையான திரையிசைக் கவிஞர்களின் வாழ்வில் நடந்த சில சுவையான அனுபவங்களையும் அதில் சொல்லியிருந்தார். அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் "முத்து மணி மாலை" என்னும் புதிய நிகழ்ச்சியைப் படைக்கவெண்ணி அதில் ஒரு பகுதியாக பல வருஷங்களுக்குப் பின் "பாடல் பிறந்த கதை" என்ற அம்சத்தையும் சேர்த்தேன். அப்போது முதலில் நினைவுக்கு வந்தவர் கவிஞர் முத்துலிங்கம் அவர்கள். அவரை அழைத்தபோது மறுப்பேதும் இன்றி ஒரு சில நாட்களில் வானொலி நேர்காணலைச் செய்வதற்கு இணங்கினார். கவிஞர் முத்துலிங்கத்தில் தமிழ் மீதான காதல், திரையுலகிற்கு அவர் வந்த சூழ்நிலையில் ஆரம்பித்து புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் தொட்டு விருமாண்டி கமல்ஹாசன் ஈறாகப் பாடல்கள் பிறந்த கதைகளை 50 நிமிடங்களுக்கு மேல் ஒரு அழகிய தமிழ் விருந்தைத் தந்தார்.

என் மனசில் உட்கார்ந்திருந்த அந்தக் கேள்விக்குப் பின்புலமாக அமைந்தது, இயக்குநர் கே.பாக்யராஜுடன், கவிஞர் முத்துலிங்கம் போட்ட அற்புதமான கூட்டணி.

கே.பாக்யராஜ் நாயகனாக அறிமுகமான “புதிய வார்ப்புகள்” படத்தில் “இதயம் போகுதே”,
அது போல அவர் இயக்குநராக அமைந்த முதல் படமான “சுவர் இல்லாத சித்திரங்கள்” படத்திலும் “ஆடிடும் ஓடமாய்” இரண்டுமே
அவலச் சுவை நிறைந்தவை. ஆனால் பாக்யராஜ் திரைப்பயணத்தில் இந்த இரண்டுமே அடுத்தடுத்த படிக்கற்களாய் அமைந்த படங்கள்.

எம்.ஜி.ஆரின் கலையுலக வாரிசாய்க் கொண்டாடப்பட்டவர் அவ்விதமே புலமைப்பித்தன், வாலி, முத்துலிங்கம் ஆகியோரையும் அரவணைத்துக் கொண்டார்.

“அண்ணா நீ என் தெய்வம்” படத்தில் எம்ஜிஆருக்காக எம்.எஸ்.விஸ்வநாதன் கொடுத்த உன்னைத் தேடி வந்தாள் தமிழ் மகராணி
https://www.youtube.com/watch?v=6iWO_euqDjc

பாடல் முத்துலிங்கம் எழுத, அது தோதாகப் பின்னாளில் அவசரப் போலீஸ் 100 படத்தின் பாடல் பட்டியலிலும் அமைந்தது. அந்தப் படத்தில் பாக்யராஜ் இசையமைத்த பாடல்களில் முத்துலிங்கம் இல்லை என்றாலும் தானாகக் கனிந்த நிகழ்வு இது.

இவ்விதம் இயக்கு நர் கே.பாக்யராஜ் & பாடலாசிரியர் முத்துலிங்கம் கூட்டணி அமைத்து பல்வேறு இசையமைப்பாளர்களோடு பணியாற்றியவை எல்லாமே ராசியான வெற்றிப் படங்களாய் அமைந்ததற்கு நான் தொகுத்துப் பகிரும் இந்தப் பட்டியல் ஓர் சான்று.

1. இதயம் போகுதே – புதிய வார்ப்புகள் – இளையராஜா
https://www.youtube.com/watch?v=mOWb09m4WoM

2. ஆடிடும் ஓடமாய் – சுவர் இல்லாத சித்திரங்கள் – கங்கை அமரன்
https://www.youtube.com/watch?v=ahV59QQa6D8

3. பல நாள் ஆசை – இன்று போய் நாளை வா – இளையராஜா
https://www.youtube.com/watch?v=wMTr8b4ks4Y

4. அம்மாடி சின்ன – இன்று போய் நாளை வா – இளையராஜா
https://www.youtube.com/watch?v=bNAT1MmgNN4

5. கோகுலக் கண்ணன் – பாமா ருக்மணி – எம்.எஸ்.விஸ்வநாதன்
https://youtu.be/6ck944lkH_M?si=jmw11Q_k99M4RtaD

6. கதவைத் தெறடி பாமா - பாமா ருக்மணி – எம்.எஸ்.விஸ்வநாதன்
https://www.youtube.com/watch?v=ybpChLMFM7o

7. மச்சானே வாங்கய்யா – எல்.ஆர்.ஈஸ்வரி - எம்.எஸ்.விஸ்வநாதன்
https://www.youtube.com/watch?v=1483GPagLH8

8. வான் மேகமே – குமரிப் பெண்ணின் உள்ளத்திலே – சங்கர் – கணேஷ் (இயக்கம் ரா.சங்கரன்)
https://www.youtube.com/watch?v=o2wxZE4ss94

9. பொன்னோவியம் ஒன்று - குமரிப் பெண்ணின் உள்ளத்திலே – சங்கர் – கணேஷ் (இயக்கம் ரா.சங்கரன்)
https://www.youtube.com/watch?v=xSud9bwq_7c

10. டாடி டாடி – மெளன கீதங்கள் – கங்கை அமரன்
https://www.youtube.com/watch?v=YfZUARsc6oM

11. பூபாளம் இசைக்கும் – தூறல் நின்னு போச்சு – இளையராஜா
https://www.youtube.com/watch?v=4XPvUOPYp24


12. My dear my sweet – டார்லிங் டார்லிங் டார்லிங் - சங்கர் – கணேஷ்
https://www.youtube.com/watch?v=TBpAZ4Pwrc0

13. சின்னஞ்சிறு கிளியே – முந்தானை முடிச்சு – இளையராஜா
https://www.youtube.com/watch?v=9Z8MOGIgSmA

14. வானம் நிறம் மாறும் – தாவணிக் கனவுகள் – இளையராஜா
https://www.youtube.com/watch?v=u9IwaT36Lco

15. அட மச்சமுள்ள – சின்ன வீடு – இளையராஜா
https://www.youtube.com/watch?v=hTOPpRf8tTA

16. ஒரு ரகசியப் பூஜை – இது நம்ம ஆளு – பாக்யராஜ் (இசைத்தட்டில் மட்டும், இயக்கம் பாலகுமாரன்)

17. என் ஜோடிக்கிளி – காவடிச் சிந்து – பாக்யராஜ் (வெளிவரவில்லை)
https://www.youtube.com/watch?v=Z5Yh-FnIN_w

கவிஞர் முத்துலிங்கம் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

கானா பிரபா
20.03.2024

Sunday, March 10, 2024

இருவர் 🔥 ஏ.ஆர்.ரஹ்மானின் புதுப் பரிமாணம் ✨❤️

நேற்று வெகு நாட் கழித்து சூப்பர் சிங்கரில் பாடகர் மனோவின் 40 ஆண்டுக் கலைப்பயண சிறப்பு நிகழ்ச்சியைத் தேடிப் பார்த்தேன்.

அந்த நிகழ்வில் அற்புதமான பாடல்கள் பலதும் பகிரப்பட்டிருந்தாலும் இன்று காலை அனிச்சையாக ஒரு பாடல் மேல் மையல் கொண்டேன்.

அந்தப் பாடல் தான் “இருவர்” படத்தில் வந்த “ஆயிரத்தில் நான் ஒருவன்".

ஈராயிரக் குழவிகள் அடிக்கடி சொல்வது போல இந்த “இருவர்” படப் பாடல்களே ஒரு underrated தான்.

ஆங்காங்கே போட்டி மேடைகளில் “நறுமுகையே” பாடல் மட்டும் அடிக்கடி சாஸ்திரிய இசைச் சுற்றில் எட்டிப் பார்க்கும். காரணம் இந்தப் பாடலை விட மிகவும் சிக்கலான சாஸ்திரிய இசைப் பாடல்கள் கே.வி.மகாதேவன் காலத்தையதை எடுத்தால் மேல் மூச்சு, கீழ்மூச்சு, ஃபீமேல் மூச்சு வாங்கும் என்ற செளகரியச் சூழலும் (comfort zone) கூட இதை எடுக்க ஒரு காரணம். அங்கே தான் ஏ.ஆர்.ரஹ்மானின் தனித்துவத்தைக் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்.

“இருவர்” மாதிரியான ஒரு மெய் வாழ்வின் காலச் சூழலைப் பிரதிபலிக்கும் படத்துக்கு (period film) அப்படியே பழைய நொடி அடிக்கக் கூடிய பாடல்களைத் தானே பொதுவாக மீளுருவாக்கம் செய்ய முனைவார்கள்?

ஆனால் இங்கே ரஹ்மான் பரீட்சித்துப் பார்த்தது

புதுக் குரல்கள் 

தன்னுடைய தனித்துவமான இசை 

ஆனால் அந்தக் காலத்தைப் பிரதிபலிக்கக் கூடிய உள்ளுணர்வை ரசிகனுக்கு எழுப்ப வேண்டும்.

“கண்ணைக் கட்டிக் கொள்ளாதே

 கண்டதை எல்லாம் நம்பாதே”

ஹரிஹரன் பாடுகிறார். அப்படியே “கண்ணை நம்பாதே” (நினைத்ததை முடிப்பவன்) காலத்தில் இருத்தி விடும்.

என் வானொலிக் காலத்தின் ஆரம்ப அரசியல் கலந்துரையாடல் நிகழ்வுகளின் முகப்புப் பாடலாக இந்த “கண்ணைக் கட்டிக் கொள்ளாதே” பல்லாண்டுகள் ஆட்சி செய்தது.

கேட்கும் போதே அந்தக் கட்சித் தொண்டனை உசுப்பி உள்ளிழுக்கும் தலைவனின் குரலாய் ஓங்கி ஒலிக்கும்.

இதெல்லாம் பாடலாசிரியர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எம்.ஜி.ஆருக்குக் கொடுத்த எழுச்சிப் பாட்டுகளையும் நினைப்பூட்டும்.

அது போலத்தான் TMS  தன் குரலில் ஒரு நெளிவைக் காட்டிக் குழைந்து கொடுக்கும் தொனியை “ஆயிரத்தில் நான் ஒருவன்” பாடலின் வழியே மனோ பிறப்பிப்பார். மனோவைப் பொறுத்தவரை அவரை வித்தியாசப்படுத்திய பாடல்களில் இதுவும் மிக முக்கியமாக மேடையில் கொண்டாடப்பட வேண்டியதொன்று.




பி.சுசீலாம்மாவுக்குப் பதிலாக அவரின் மருமகள் சந்தியாவை அழைத்து வந்து 

“பூ கொடியின் புன்னகை” அந்த பி.சுசீலாம்மாவின் ஏகாந்தம் மிதக்கும் பாடலில். இன்னொன்று “வெண்ணிலா வெண்ணிலா” (ஆஷா போஸ்லே) கூட அதே தொனிதான்.

“நறுமுகையே நறுமுகையே நீயொரு நாழிகை நில்லாய்”

அந்த உன்னிகிருஷ்ணன், பாம்பே ஜெயஶ்ரீ மென்குரல்கள் “எம்.ஜி.ஆருக்கு அரிதாகப் பாடிய ஏ.எம்.ராஜா பாட்டுகளை நினைப்பூட்டும். அந்தப் பாடலில் கையாண்ட வரிகளும் தமிழ்த் திரையிசையின் ஆரம்ப காலத்துத் சங்கத் தமிழைக் காட்டி நிற்கும்.

எல்.ஆர்.ஈஸ்வரி & சதன் கூட்டணியின் அந்த க்ளப் நடன ரேஞ்சில் இங்கே ஹரிணி & ராஜகோபால் “ஹல்லோ மிஸ்டர் எதிர்க்கட்சி” என்று கும்மாளம் போடுவார்கள்.

இருவர் படம் வந்தபோது அந்தப் படத்தை மெல்பர்னில் பார்த்தபோது பக்கத்தில் இருந்தவர் தன் மனைவிக்கு எம்.ஜி.ஆர் & கருணாநிதி காலத்தை நினைவுபடுத்தித் தொடர்புபடுத்திப் பேசிக் கொண்டிருந்தார் 😀 அவ்வளவுக்கு ஒரு குறிப்பிட்ட ரசிக வட்டத்துக்கு அப்போது பிடித்துப் போன படமிது.

“இந்தப் படத்தில், கதாபாத்திரங்களுக்காக எந்தப் பாடலையும் உருவாக்கவில்லை. உண்மையில் “இருவர்” படத்துக்கு என்று எந்தப் பாடலையும் உருவாக்கவில்லை. இந்தப் படத்தினுள் வரும் படங்களில் வரும் பாடல்களைத்தான் நாம் பார்த்தோம்.”

இப்படி மணிரத்னம் தன்னுடைய மணிரத்னம் படைப்புகள் ஓர் உரையாடல் (பரத்வாஜ் ரங்கன்) நூலில் குறிப்பிட்டிருக்கிறது.

இங்கே தான் ஏ.ஆர்.ரஹ்மானின் உழைப்பும், அவரின் வித்தியாச நோக்கையும் மெச்ச வேண்டும். 

இருவரில் பழையதைப் புதுமையாக்கிப் பழையது போல் காட்டியதில் வெற்றி பெற்றிருக்கிறார்.

பின்னாளில் தமிழில் அவருக்கு அப்படியொரு சூழல் வாய்க்கவில்லை அல்லது அவர் அந்த மாதிரியான சூழலை இதுபோல் கையாளவில்லை என்பேன்.

"இருவர்" பாடல்களைக் கேட்க

https://www.youtube.com/watch?v=Z0OIkvlrjuU

கானா பிரபா

படங்கள் நன்றி IMDB


Monday, March 4, 2024

Manjummel Boys ❤️❤️❤️ மஞ்ஞும்மெல் பாய்ஸ் ❤️❤️❤️

“கமலஹாசன் கையில் தான் 

இனி எல்லாம்”

என்று அந்தப் பயண ஓட்டத்தில் கூட்டாளிகளில் ஒருவன் சொல்ல, அந்த நண்பர் கூட்டம் ஆர்ப்பரிப்புடன் கொடைக்கானல் நோக்கிக் கிளம்பும்.

சற்று முன்னர் தான் பழனிமலை அடிவாரக் கடையில் வாங்கிய கமல் ஹிட்ஸ் mp3 ஐக் காரில் கேட்டுக் கொண்டே பயணிக்கிறார்கள்.

அப்படியே ஆபத்துக் குழியில் சிக்குகிறார்கள்.

மிக எளிமையான கதை, கதை என்பதை விட ஒரு நிகழ்வு. அதை எந்த வித மாய்மாலமும் இல்லாத, புத்திசாலித்தனமாகக் காட்டிக் கொள்ளாத காட்சியோட்டத்தோடு எடுக்கப்பட்ட படம். ஒளிப்பதிவில் கூட எந்தவிதமான தொழில் நுட்ப மிரட்டல் இல்லை. ஆனால் இரண்டரை மணி நேரப் படத்துக்குள் இறுகக் கட்டிப் போட்டு விடுகின்றது.

“கண்மணி அன்போடு 

காதலன் நான் எழுதும் கடிதமே”

பாடலை ஓவிய வரைகலையோடு ஆரம்ப எழுத்தோட்டத்தில் நகர்த்துவதிலாகட்டும், அப்படியே அந்தப் பாட்டின் இடையிசையை இன்னொரு வடிவத்தில் அதே வாத்தியக் கோப்பை ஒத்திசைவோடு கொடுப்பதிலாகட்டும் இயக்குநர் மட்டுமல்ல, இசையமைப்பாளர் 

சுஷின் ஷியாமும் ஆத்மார்த்தமாக உழைத்துள்ளார்.

எந்த வித பய உணர்ச்சியும் இல்லாத, தங்களுக்குள் அடித்துக் கொண்டும், கூடிக் குலாவிக் கொண்டும் இருக்கும் அந்த இளைஞர் கூட்டணியை அழகாக வரைந்திருக்கும் ஆரம்பக் காட்சிகளில் துள்ளிசை கூட அந்த நிறத்தை அடையாளப்படுத்தி நிற்கின்றது.

எல்லோருமே “கண்மணி அன்போடு” பாடலை உச் கொட்டுகிறார்களே?

இன்னொரு விஷயம் கவனித்தீர்களா?

அந்தப் பழனி மலைச் சூழலில் மெல்ல மிதந்து போகும் “அண்ணாத்தே ஆடுறார் ஒத்துக்கோ” (அபூர்வ சகோதரர்கள்) பாடலின் வாத்திய ஒலிக்கீற்று பேரிகையோடு கடந்து போனதை?

இப்படி கமல் reference படத்தில் ஆங்காங்கே தூவப்பட்டிருக்கும்.

ஏ.ஆர்.ரஹ்மானையும், கமல்ஹாசனையும் இன்னமும் தங்கள் ஆள் என்று தான் கேரளத்தவர்கள் கொண்டாடுகிறார்கள். இந்தப் படத்தைப் பொறுத்தவரை அதை நியாயமாகக் கெளரவம் செய்திருக்கிறார்கள்.

“சிறு பொன்மணி அசையும்” பாடலை வைத்து சுப்ரமணியபுரம் தொட்டு இருந்து ஏராளம் தமிழ்ப் படங்களில் இசைஞானி இளையராஜாவின் பாடல்கள் பயன்படுத்தப்பட்டாலும் அவை hype பண்ண மட்டுமே கையாளப்பட்டிருக்கின்றன. 

ஆனால் இந்த “மஞ்ஞும்மெல் பாய்ஸ்”படத்தைப் பொறுத்தவரை “கண்மணி அன்போடு”

பாடலையும் சரி “குணா” படத்தையும் சரி ஒரு கருவியாகவே அல்லது குறியீடாகவே கையாண்டிருக்கிறார்கள்.

“குணா” என்ற கற்பனைக்கும் “மஞ்ஞும்மெல் பாய்ஸ்” என்ற நிஜத்துக்குமான ஒரு உறவாடல் எனலாம்.

பழனி மலையடியில் பாட்டு சீடி எடுக்கும் போது “விஜய் ஹிட்ஸ்” எடு என்று கூட்டாளி சொல்வது மலையாளிகளின் விஜய் மீதான சமீபகால ஈர்ப்பைக் கோடிட்டிருக்கும். தான் விஜய்யின் மீதான  தன் அபிமானத்தையும் இப்பட இயக்குநர் குறிப்பிட்டிருக்கிறார்.

“மலைக்குளிருக்குக் கட்டிங் போட்டது போல கமல் பாட்டுகள் இருக்கும்” என்று  சொல்லிக் கொண்டே பாட்டைப் போடுவது,

“பாட்டைக் கேட்டு ரூட்டை மாத்தி”

“அபிராமி ஆள் எங்கே” என்று குணா குகைக்குள் குரல் கொடுப்பது என்று வசன அமைப்பில் அ நியாயத்துக்கும் எளிமை அதுவே ஈர்ப்பைக் கொடுக்கிறது.

“Devil's kitchen” என்று வெள்ளைக்காரனாலேயே மிரண்டு போய் வைத்த பூர்வீகப் பெயர்க் காரணத்தோடு, 900 அடி ஆழமிருக்கும், இதுவரை குழிக்குள் போன 13 பேர் போனது போனதுதான்”

என்று பிரச்சார நொடி அற்ற, அந்தக் குகையின் பயங்கர நிலவரத்தைப் பாத்திரங்களினூடு கடத்திய உத்தி சிறப்பு.

இயக்கு நரின் புத்திசாலித்தனத்துக்கு இன்னொரு எடுத்துக்காட்டு, இந்தப் படைப்பின் முக்கிய பாத்திரங்கள் அல்லது கதை நகர்த்திகளுக்கு மிகவும் பரிச்சயமான முகங்களைப் போட்டது.

அந்த வகையில் நண்பனைக் காப்பாற்றும் சகபாடியாக ஷோபின் ஷகிர் (தயாரிப்பாளர்களில் ஒருவர்) (விசில் பறக்கிறது தியேட்டரில் அவர் தோன்றும் முதற்காட்சியில்),  குழிக்கும் விழும் நண்பனாக ஶ்ரீநாத் பாஸி இருவருமே  தமிழ் உலகத்திலும் OTT புண்ணியத்தில் பரிச்சயமானவர்கள். 

அது போல் படமே 90 வீதம் தமிழ்ப்படம் பார்க்கின்ற உணர்வில் இருக்கும் போது தமிழ் நடிகர்கள் ஜோர்ஜ் மரியான், கதிரேசன் மற்றும் ராம்ஸ் ஆகிய தமிழின் முக்கிய நடிகர்கள் வலுச் சேர்க்கிறார்கள்.

ராம்ஸ் ஐ இன்னும் முழு அளவில் தமிழ் சினிமா பாவிக்கவில்லை என்ற ஆதங்கத்தை இந்தப் பதிவில்

https://www.facebook.com/photo.php?fbid=10204585223775901&set=a.10200950943041154&type=3

 நான் எழுதிய போது நண்பர் ஹரி Hari HK S தொலைபேசியில் ராம்ஸ் உடன் பேச வைத்தார் அப்போது.

தனக்கு நல்ல வாய்ப்புகள் வரவில்லையே என்று என்னிடம் ஆதங்கத்தோடு ராம்ஸ் பேசியிருந்தார்.

அந்த நிலை இன்றும் தொடர்வது அந்தக் கலைஞனுக்கு நிகழும் பேரவலம் 

ஒரு காலத்தில் மலையாளப் படம் என்றால் இரண்டே இரண்டு காட்சி அதுவும் ஒரேயொரு தியேட்டரில் என்ற நிலை மாறி சிட்னியின் பெரும்பான்மை திரையரங்கில் தினமும் மூன்று காட்சி, அதுவும் நான் பார்த்த காட்சியில் 2 டிக்கெட் தான் நான் பதிவு பண்ணும் போது எஞ்சி இருந்தது.

படம் முடிந்ததும் கை தட்டிக் கொண்டாடினார்கள்.

மஞ்ஞும்மெல் பாய்ஸ்

குறித்து இரண்டு ஆதங்கங்கள் உள்ளன. 

ஒன்று

படத்தின் முடிவில் மீண்டும் இயக்குநர் விபரம் வந்த பின்னர் தான் 2006 இல் நிகழ்ந்த ஒரு உண்மைக்கதை படமாக்கப்பட்ட செய்தியே நிழற்படங்களோடு காட்டப்படுகிறது.

முன்னர் படம் பார்த்தவர்களே இந்தப் படத்தின் மெய்த்தன்மையைத் தவற விட்டு விட்டார்கள். அதிலும் குறிப்பாக நண்பனுக்காகத் தன் உயிரைப் பணயம் வைத்து விருது பெற்ற சைஜு டேவிட் குறித்த தகவலும்.



இரண்டு

குழியில் இருந்து நண்பன் காப்பாற்றப்பட்டு மேலெழும் தருணத்தில்

“கண்மணி அன்போடு” பாட்டு திடுதிப்பென்று பாய்வது அந்த உணர்வோட்டத்தைச் சிதைப்பது போலவும் படுகிறது.

என் அபிப்பிராயத்தில் இதையே வேறு விதமாகக் காண்பித்திருக்கலாம்.

அதாவது அந்த குணா குகையில் இருந்து வெளியேறும் சூழலில் 

“மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல” என்று கத்தி விட்டு கமல் மலையில் இருந்து விழும் போது எழும் அசரீரியைக் கொடுத்திருக்கலாம்.

பின்னணி இசையோடு அதைக் கொடுக்கிறேன் ஒப்பிட்டுப் பாருங்கள்.

மனிதர் உணர்ந்து கொள்ள

இது மனிதக் காதல்

அல்ல……..

http://www.radio.kanapraba.com/Guna/guna17.mp3

அது போல எல்லோரும் கேரளம் திரும்பும் போது “கண்மணி அன்போடு” பாடலை ஒலிக்க விட்டிருக்கலாம்.

குணா படமும், பாடலும் காட்சி  உத்திக்கு மெருகூட்டி,  பார்வையாளர் ஈர்ப்புக்குக் கைகொடுத்தாலும், தெரிந்த முடிவோடு பயணிக்கும் ஓட்டத்தைச் சுவாரஸ்ய சித்திரமாக்கியதில் படக் குழுவின் பங்கு அபாரம். ஆகவே குணாவை மட்டும் முன்னுறுத்த முடியாது.

ஆக மொத்தத்தில் இயக்குநர் சிதம்பரம் குழுவினரை சபாஷ் போட்டுக் கொண்டாடலாம்.

கானா பிரபா

04.03.2024



Saturday, March 2, 2024

வித்யாசாகரம் ❤️❤️❤️


அடி தோழி..அடி...தோழி

அடை காக்கும் சிறு கோழி

மயில்முட்டை வாங்கி உனது

கூட்டில் வச்சேனே...

அடை காக்கும் முட்டைக்குள்ள

உசுர வச்சேனே....

https://www.youtube.com/watch?v=kvR4aXh315o

கல்யாணியின் குரல் நம் காதுகளை எட்டும் போது ஒரு இரட்டைப் பின்னல் கொண்ட பெண் குமரி ஆகிவிடும் மனசு.

வித்யாசாகரைக் கொண்டாட ஏராளம் கூறுகள் இருந்தாலும், அவர் தன் பாடல்களில் கையாண்ட பாடகர்களை, அதுவும் குறிப்பாக அதிகம் அறியப்படாதவர்களை, அல்லது அறியப்பட்டவர்களை விதவிதமாகக் காட்டிய வகையிலும் தனித்து நோக்க வேண்டிய ஒரு இசை ஆளுமை.

“தொட்டுத் தொட்டுப் பேசும் சுல்த்தானாஹ்ஹ்ஹ்"

அப்படியே கிண்ணென்று பிரதிபலிக்கும் மணிக்குரலாக புஷ்பவனம் குப்புசாமியைக் கொண்டு வந்து ஒரு மேற்கத்தேய இசைச்சாயம் கொண்ட குத்துப் பாடலுக்குப் போடுவார் பாருங்கள்.

ஆஹா சுல்த்தானே சுல்த்தானே என்று ஸ்வர்ணலதா போல ஆர்ப்பரிக்கும் மனசு. இந்த இடத்தில் நிறுத்தி விட்டு அப்படியே ஒருமுறை புஷ்பவனத்தார் தொடங்கும் சுல்த்தான்ஹாஆஆஆ வைக் கேட்டுவிட்டு வாருங்கள், கிறங்க வைக்கும்.

https://www.youtube.com/watch?v=0hxz-JMsu0I

இவரைப் போலவே ஒரு சாஸ்திரியப் பாடகரை வைத்து “கண்ணுக்குள்ள கெழுத்தி” ரேஞ்சில் எவ்வளவு கொடுத்திருப்பார் மணிக்க விநாயகம் அவர்களுக்கு. இதெல்லாம் வித்யாசாகரின் உள்ளே இருக்கும் வித்தியாச பார்வையின் வெளிப்பாடு.

பாதிக்கண்ணால் மூடும் மீதிக் கண்கள் தேடும்

மூடிக்கொண்டும் கண்கள் பார்க்கும் அய்யோ

https://www.youtube.com/watch?v=7Q_jK5mf9oc

பாடகி ஶ்ரீவர்த்தனிக்கு இன்று வரை அடையாளமாகத் திகழும் இந்த “கண்ணாலே மிய்யா மிய்யா” . 

“பார்வை தப்பும் நேரம் நாணம் கப்பல் ஏறும்

கூந்தல் கூட கொஞ்சம் கூசும் அல்லோ”

கூடப்பாடிய உன்னிமேனன் என்ன குறைச்சலா? அவர் எத்தனை ஆயிரம் பாடியிருந்தாலும் இந்த மாதிரிப் பாடல் எல்லாம் அவருக்குப் புதுமையானது. கானாபிரபா

ஹரிஹரன் என்ற இசை அசுரனின் அலைவரிசைக்குச் சற்றே கீழே இருக்கும் “குரல்வாகு” ஆனாலென்ன 

“பள்ளிநாளில் அரும்பாய் இருந்தேன்

பருவநாளில் முதலாய் இருந்தேன்

பார்வை உசுப்ப மலா்கள் தவிழ்ந்தேன்

ஸ்வரிசம் எழுப்ப மலராய் மலர்ந்தேன்”

https://www.youtube.com/watch?v=jro0C5Idg0U

அப்படியே அசரடித்து விடுவார் சந்தனபாலா “ஒரே மனம்....ஒரே குணம்" தொடங்கும் கணத்திலும் ஒரு ஏக்கம் தொனிக்கும் அங்கே.

மது பாலகிருஷ்ணனை அதிகம் அற்புதமாகக் கையாண்ட இசையமைப்பாளர், அல்லது மதுபாலகிருஷ்ணனின் பாடல்களில் அதிகம் அற்புதம் வாய்ந்தவை என்று கேட்டால் நோகாமல் கை நீட்டி விடலாம் வித்யாசாகர் இருக்கையை நோக்கி,

“நான்.....தேடுகின்ற யாவும் உன்னிடம்”

என்று ஒரு இழுப்பு இழுப்பாரே……..

ஆகா மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்கும்

“அற்றைத் திங்கள் வானிடம்...”

https://www.youtube.com/watch?v=e8UR4e_phMM

கேட்கையில்.

அங்கே அடக்கி வாசிப்பவர் தான், 

“கனாக் கண்டேனடி தோழி......”

https://www.youtube.com/watch?v=ZCm3FwF0has

என்று துள்ளிசைப்பார்.

சிவப்பதிகாரம் போல வித்யாசாகர் & மதுபாலகிருஷ்ணன் கூட்டைப் பற்றிப் பேச்செடுத்தால் அதை எழுதவே தனி அதிகாரம் தேவை.

பாடகி சுஜாதாவை மிக அழகாக ஒவ்வொரு பாடல்களிலும் வித்யாசாகர் கையாண்ட விதத்தையும் அவ்விதம் எழுதலாம். குறிப்பாக அவரின் பலவீனம் உச்ச ஸ்தாயியை உணர்ந்து ஒரு மத்திம அலைவரிசையிலேயே வித்யாசாகர் பாடல்கள் வைத்திருந்து சுஜாதாவுக்குப் பெருமை சேர்க்கும்.

இதை எழுதும் போதே “அழகூரில் பூத்தவளே” என்ற ஏக்கப் பெருமூச்சோடு எஸ்பிபி வந்து நிற்கிறார். 

“மெளனமே பார்வையாய் 

பேசிக்கொண்டோம்

நாணமே வண்ணமாய்

பூசிக் கொண்டோம்....” 

https://www.youtube.com/watch?v=jalDrNf2HdQ

இவ்வளவு அற்புதமாக வந்த பாடலைப் பயன்படுத்தாது விட எப்படிய்யா உங்களுக்கு மனசு வந்தது? என்று எஸ்பிபி நொந்து சொன்ன அந்த “அன்பே சிவம்” பாட்டில் கூட 

“புன்னகை புத்தகம் வாசிக்கின்றோம்

என்னிலே உன்னையே சுவாசிக்கின்றோம்....” 

கூட்டிசைக்கும் சந்தரயி உடைய நாசிக்குரல் இசைக்கருவிகளில் ஒன்று போலப் பேதமில்லாமல் இருக்கும்.

வித்யாசாகர் தான் முழுமையான இசையமைப்பாளராகப் பிறப்பெடுத்த “பூமனம்” படத்திலேயே அந்தக் காலத்து மெல்லிசைக் குரல் P.B.ஶ்ரீநிவாஸ் அவர்களை வைத்து

“சில நேரம் ஏதோ நடக்கும்” 

https://www.youtube.com/watch?v=siGifvcUFgA

பாடலைக் கொடுத்துப் புதுமை படைத்தவர்.

பாபநாசம் சிவன் அவர்களது “என்ன தவம் செய்தனை யசோதா” கீர்த்தனையை ஜலபதி சுப்ரமணியம் அவர்களை வைத்து மாதங்கள் ஏழு படத்தில் இப்படிக் கொடுத்தவர்

https://www.youtube.com/watch?v=dLg4VgfBEOA

அப்படியே அதைத் தூக்கிக் கொண்டு போய் பார்த்திபன் கனவு படத்தில் ஹரிணிக்குக் கொடுத்திருப்பார் இப்படி

https://www.youtube.com/watch?v=82wUgYO-PYI

இதே போலத்தான் பூமனம் படத்தில் கையாண்ட 

என் அன்பே

https://www.youtube.com/watch?v=4QEAtji8N-4

பாடலை மறுசுழற்சியில் பக் பக் பக் மாடப்புறா ஆகினார் பார்த்திபன் கனவில். இந்த என் அன்பே பாடலில் ஜொலிக்கும் தினேஷ் குரல் உன்னிமேனனை ஞாபகமூட்டும்.

கர்நாடக சங்கீதப் பாடகிகள் திரையுலகில் கோலோச்சிப் புகழ் பூத்து விளங்குவது என்னமோ காலத்தும் நிற்கும் விஷயம் என்றாலும் சுதா ரகுநாதன் என்னுமொரு ஒரு சாஸ்திரிய சங்கீதக் குரலை அழுத்தமான காட்சிச்சூழலுக்குக் கொடுப்பாரே

இப்படி

கண்ணா...... கண்ணா......கண்ணா....

https://www.youtube.com/watch?v=gPXdcBlVSeE

பல நாட்கள் இந்தப் பாடலில் நான் கட்டுண்டு கிடந்தேன். கானாபிரபா

“யமுனை ஆற்றிலே” என்று தளபதிக்காக ஒரு சில அடிகளோடு நிறுத்திக் கொண்ட மித்தாலிக்கு மீள் வரவாக வித்யாசாகர் கொடுத்தது, ஹரிஹரனை இணைத்து “உச்சிமுதல் பாதம் வரை”

https://www.youtube.com/watch?v=ZnW4t0KDE70

உமா ரமணனுக்கு அத்திப்பூவாய் ஒரு சில பாடல்கள் வித்யாசாகர் கூட்டில் அமைந்தாலும் “பூத்திருக்கும் வனமே” 

https://www.youtube.com/watch?v=wNNwhHrKflE

ஒரு தங்கப்”புதையல்”என்றால் 

ஹரிஷ் ராகவேந்திராவின் ஆரம்ப காலத் திறப்புப் பாடல் “வா சகி வா சகி வள்ளுவன் வாசுகி” 

https://www.youtube.com/watch?v=Zyd1k2vEcwc

இரண்டு பேரும் கூட்டாய் பண்ணிய அற்புதச் சுரங்கம். இரண்டு பாடல்களின் இசைக் கோப்புக் கூட ஒரே தொட்டிலில் வளர்ந்த குழந்தைகள் போல.

ஹரிஷ் ராகவேந்திராவின் குரல் அளவுப் பிரமாணங்களை அகலத் திறந்து விட்ட முதல் பாடலாக “வா சகி” ஐத் தான் அழைத்து வருவேன். “சிறகே இல்லாத” (தாலி புதுசு) முன்வரவாக அமைந்தாலும் கூட.

“கண்ணாளனே கண்ணாளனே

உன் கண்ணிலே

என்னை கண்டேன்

கண் மூடினாள் கண் மூடினாள்

அந்நேரமும் உன்னை கண்டேன்....”

நூறாண்டுக்கொருமுறை பூக்கின்ற பூவல்லவா”

https://www.youtube.com/watch?v=vvLsy7C3zew

கோபால் சர்மாவையும், தேவி நேத்தியாரையும்  இன்னமும் இலங்கையின் பண்பலை வானொலிகள் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன இந்தப் பாடல் வழியாக.

மழை நின்ற பின்பும் தூறல் போல 

உனை மறந்த பின்பும் காதல்.....

அலை கடந்த பின்பும் ஈரம் போல 

உனை பிரிந்த பின்பும் காதல்....

https://www.youtube.com/watch?v=_2H6b1exlLM

இந்தப் பதிவைத் தொடக்கி வைத்த கல்யாணியே நிறைத்து வைக்குமாற்போல நினைப்பூட்டுகிறார் வித்யாசாகரத்தின் இன்னொரு முத்தாய்ப்புப் பாடலாக. இதைக் கேட்கப் போய் இதையும் கேட்டு விட்டு வந்தேன்

https://www.youtube.com/watch?v=SsNm1RzNf0E

இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே

இப்பவே இப்பவே பேசணும் இப்பவே.....

அதுதான் வித்யாசாகரம்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் இசையமைப்பாளர் வித்யாசாகர்.

✍🏻 கானா பிரபா

      02.03.2024