இந்த 2015 ஆம் ஆண்டைப் பொறுத்தவரை நீண்ட காலத்துக்குப் பின் ந்ன் வேலைத்தளப் பயணத்தின் முக்கால்வாசியை கார்ப் பயணம் பங்கு போட்டதால் நிறைய தமிழ் பண்பலை ஒலிபரப்புகளை Tunein app வழியாகக் கேட்கும் வாய்ப்புக் கிட்டியது. அதில் பெரும்பாலான நேரத்தில் புதிய பாடல்களையே கேட்க வேண்டிய வாய்ப்பு வந்ததால் அவற்றில் நான் ரசித்தவற்றை ஆண்டு முடிவதற்குள் கொடுக்கலாம் என்ற நோக்கில் பகிர்கிறேன். இது என்னுடைய தனிப்பட்ட விருப்பு சார்ந்தது, இவற்றில் விடுபட்டவை ஏதும் உங்கள் ரசனையில் இருப்பின் பின்னூட்டம் வழியாகத் தரலாம். ஊஃஃஃப்ப்ப் மூச்சு வாங்குது எவ்வளவு பெரிய டிஸ்கி.
இந்த ஆண்டில் அதிகம் பேசப்பட்ட இசையமைப்பாளர் என்றால் அனிருத் தான். அதில் துரதிஷ்டம் என்னவென்றால் நல்ல இசையமைப்பாளராகவும், பாடகராகவும் பேரெடுத்து இறுதியில் பீப் என்ற கறையில் மாட்டுப்பட்ட வகையில் ஏற்றமும் இறக்கமுமாக அமைந்தது அவருக்கு.
இந்த ஆண்டு ஓட்டத்தில் மற்றைய இசையமைப்பாளர்களில் இருந்து அனிருத் எவ்வளவு தூரம் தனித்து நிற்கின்றார் என்பதற்கு அழகான உதாரணம், "நானும் ரவுடி தான்" படத்தில் வந்த "நீயும் நானும்" http://youtu.be/wo8PLSPW88c அனிருத் ஏற்கனவே மெல் இதம் தரும் பாடல்களைக் கொடுத்திருந்தாலும் இந்தப் பாட்டைப் பொறுத்தவரை தனித்த நிறம் கொண்டது. இசையும், மெட்டமைப்பும், பாடகர் தேர்வும் கூடவே தானும் சேர்ந்து பாடும் பாங்கும் என்று முதலிடத்தில் வைத்துப் போற்றக் கூடிய பாட்டு இது.
இதே படத்தில் வந்த "தங்கமே தங்கமே" கேட்கும் ரகம் தான்.
அனிருத் ஐப் பாடகராக எனக்கு மிகவும் பிடிக்கும். லேசான உதார் தனத்துடன் அவரின் பாடும் பாங்கு சிறப்பானது. "ஆளைச் சாய்ச்சுப் புட்டே தன்னாலே" http://youtu.be/zZipMA0aN4Y பாட்டு அனிருத் பாடி இசையமைத்ததாகவே நினைக்குமளவுக்கு அவரின் பாணி இருக்கும். ஆனால் அந்தப் பாட்டு வில் அம்பு படத்துக்காக நவீன் இசையமைத்தது. இந்த ஆண்டு நான் அடிக்கடி கேட்ட துள்ளிசைப் பாடலில் இதற்குத் தான் முதலிடம். இதே போல "டண்டனக்கா" பாடல் கூட ரோமியோ ஜூலியட் படத்துக்காக அனிருத் பாட இமானின் இசையில் வெளிவந்து வெகுஜன அந்தஸ்துப் பெற்றது.
அனிருத் இசையில் மாரி படத்தில் வரும் "டானு டானு டானு" பாடலும் துள்ளிசையில் என்னைக் கவர்ந்த பாட்டு.
ஆகக் கூடிய எதிர்பார்ப்போடு வெளிவந்த வேதாளம் படப்பாடல்களைத் திரும்பத் திரும்பக் கேட்டும் என்னளவில் திருப்தி அடையாத இசை. ஆலுமா டோலுமாவின் சின்னச் சின்ன இசைச் சங்கதிகளில் மட்டும் ஜாலம்.
அனுருத் இசையில் இந்த ஆண்டின் நிறைவுப் படமாக வந்த "தங்க மகன்" இல் "ஜோடி நிலவே" http://youtu.be/-wZTrV0M6Yo பாடல் தான் முதலில் பிடித்தது ஆனால் அதை மேவி இப்போது ரசிக்கும் பாட்டு "என்ன சொல்ல" http://youtu.be/5iR5V9sHEtQ
இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கு சுளையாக மூன்று பெரும் படங்கள் அதுவும் தொடர்ந்து கமல்ஹாசனோடு. என்னைப் பொறுத்தவரை ஜிப்ரானுக்கு இந்தளவு புகழ் வெளிச்சம் கிடைக்க முன்னர் கொடுத்ததெல்லாம் பொன் என்பேன். இந்த ஆண்டு ஏமாற்றம் தரும் ஆண்டு. "யேயா என் கோட்டிக்காரா" (பாபநாசம்) மட்டும் மன்னிக்கலாம் ரகம்.
ஒரு காலத்தில் வெள்ளிக்கிழமை நாயகன் என்று பேரெடுத்த ஜெய்சங்கர் போல சமீப ஆண்டுகளில் இசையமைப்பாளர் டி.இமானின் காட்டில் மழை. ஆனால் அதுவே இன்னொரு சவாலையும் இவருக்கு உண்டு பண்ணியிருக்கிறது. தனக்குப் பாதுகாப்பான சூழலில் நின்று விளையாடும் ஹாரிஸ் ஜெயராஜ் போன்று இவரும் ஒரே வார்ப்புருவில் இசையமைக்க வாழ்க்கைப்பட்டுட்டாரோ என்று நினைக்குமளவுக்கு சமீப காலங்களில் டி.இமான் கொடுத்ததெல்லாம் ஒரே மாதிரியாகப் படுகிறது. நல்ல உதாரணம் "ரஜினி முருகன்" பாடல்கள் இன்னொரு வருத்தப்படாத வாலிபர் சங்கம். "உம் மேல ஒரு கண்ணு" http://youtu.be/slMqJRSfPfc பாட்டு என்னதான் இதமாய் இருந்தாலும் ஓரளவுக்கு மேல் ஜில்லாவுக்கு அழைத்துப் போகிறது.
சிலுக்கு மரமே (பாயும் புலி) இந்த ஆண்டு இமானுக்கு வெகுஜன அந்தஸ்தைக் கொடுத்த இன்னொரு பாட்டு என்றாலும் என் விருப்பப் பட்டியலில் இல்லை.
"ஆகா காதல் வந்து" (வலியவன்) http://youtu.be/VjkrjyKUZRA பாடல் ரசிக்க வைக்கிறது.
இந்த ஆண்டு டி.இமானை மனதில் நிறுத்தி ரசிப்பதற்கு "ஆனாலும் இந்த மயக்கம்" (10 எண்றதுக்குள்ள) http://youtu.be/KwYoNNAjspw பாட்டு ஒன்றே போற்றி ரசிக்கக் கூடிய ஒன்று.
ஹாரிஸ் ஜெயராஜ் ஐ நம்பிப் பாட்டுக் கேட்கலாம். அவரும் பெரிதாக அலட்டிக் கொண்டு எங்களையும் கஷ்டப்படுத்த மாட்டார், தெரிந்த சங்கதியில் சந்துல சிந்து பாடுவார்
என்ற நம்பிக்கை தான். உண்மையில் இந்த ஆண்டு அனைத்தும் அட்டகாசமான பாடல்கள் என்ற ரீதியில் வந்த மிகச் சில படங்களில் இவரின் அனேகனும் சேர்த்தி. இந்த நிமிஷம் வரை "ரோஜாக் கடலே" http://youtu.be/9iX4HQeW1aM (படமாக்கலும் அட்டகாஷ்) , "ஆத்தாடி ஆத்தாடி" http://youtu.be/MGjBQDrtGbA பாடல்கள் என் போதை மருந்து என்றால்
"பூவெல்லாம் உன்னைக் கண்டு வியந்தாரா" http://youtu.be/oiCgukqSnMU காதில் விழும் கணம் காதலியை மீண்டும் புதிதாகப் பார்க்கும் ஒரு புத்துணர்வு. இந்த ஆண்டு எனது பாலொத் தீவு பயண இலக்கியம் வெளிவந்த அதே வேளை நண்பேன்டா படத்தில் வந்த இந்தப் பாட்டு படமாக்கப்பட்டதும் பாலித்தீவின் சரஸ்வதி ஆலயம் என்பது ஆச்சரியமான ஒற்றுமை. எனக்குத் தெரிந்து வேறெந்தத் தமிழ்ப் பாடலும் இதற்கு முன்னர் இந்த ஆலயத்தில் படமாக்கப்படவில்லை.
"உனக்கென்ன வேணும் சொல்லு" http://youtu.be/SdcAN3dobz4 கேட்டால் அழுது விடுவேன், அவ்வளவுக்கு என் செல்ல மகள் இலக்கியா என் அருகில் இருந்தாலும் இந்தப் பாட்டு தரும் பிள்ளை நேசம் சொல்லில் எழுதி மாளாது. தனிப்பதிவு எழுத வைத்திருக்கிறேன் இந்தப் பாட்டுக்காக. இந்தப் பாடல் தவிர இதே "என்னை அறிந்தால்" படத்தில் வந்த "மழை வரப்போகுதே" பாட்டு வழக்கமான சங்கதி என்றாலும் பிடிக்கும் எனக்கு. "அதாரு உதாரு" பிச்சை வேண்டாம் ஆளைப் பிடி ரகம்.
இந்த ஆண்டின் சிறந்த அறிமுகப் பாடலாசிரியர் விருது எனக்குக் கொடுக்கும் உரிமை எனக்குக் கிட்டினால் மெல்லிசை படத்தில் "வெள்ளைக் கனவொன்று" https://m.facebook.com/kana.praba/posts/10208068246129283 எழுதிய ரஞ்சித் இற்குக் கொடுப்பேன். மெல்லிசை படம் இசையமைப்பாளர் சாம்.C.S இற்கு முதல் படமோ என்னும் அளவுக்குப் பரவலான அங்கீகாரத்தைக் கொடுத்திருக்கிறது. ஒரே படத்தின் பாடல்கள் அனைத்துமே ரசிகர்களுக்குப் பிடித்துப் போவதென்பதும் அதுவே வளர்ந்து வரும் இசையமைப்பாளருக்கு என்பதும் உழைப்போடு கூடிய வரம் தானன்றி வேறென்ன.
"அலை பாயுதே" காலத்துக்கு 15 வருடங்கள் காத்திருப்பா என்னுமளவுக்கு இயக்குநர் மணிரத்னத்தோடு கூட்டுச் சேர்ந்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் "ஓ காதல் கண்மணி" இந்த ஆண்டில் வெளிவந்த படங்களில் அனைத்துப் பாடல்களும் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றன. என் தனிப்பட்ட தேர்வில் "நானே வருகிறேன்"
"காரா ஆட்டக்காரா" http://youtu.be/VVoO9cdk5Eo இரண்டும் விருப்பப் பட்டியலில்.
2015 இன் அழகான ஒரு இளமைத் துள்ளல் "வாய்யா என் வீரா" http://youtu.be/uwk-fMOVKRM எனக்கு மிகவும் பிடித்த இன்னொன்று. இந்தப் பாட்டை ஏற்கனவே இசையமைத்து
யூடியூபில் பகிர்ந்ததைக் கண்டு இயக்குநர் ராகவா லாரன்ஸ் தனது காஞ்சனா 2 இல் பயன்படுத்த அனுமதியெடுத்ததாக இதன் வழி அறிமுகமான இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் குறிப்பிட்டார்.
ஏ.ஆர்.ரஹ்மானின் ஆரம்ப காலத் திரைப்படப் பாடல்களில் பாடும் கூட்டுக் குரல்களில் ஒருவர் நோயல் ஜேம்ஸ். தற்போது பாடும் திறனை இழந்திருப்பதாக அவரின் மகன் இந்த லியோன் ஜேம்ஸ் சொன்னதைச் சமீபத்தில் படித்தேன்.
காஞ்சனா 2 இல் "மொட்டப் பையன்" http://youtu.be/OG8uQMm2pHI சித்ராவுக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு கிடைத்த அழகான பாட்டு. தமன் இசையில் ரசித்துக் கேட்கலாம் இதை.
"பச்சைத் தீ நீயடா" http://youtu.be/qIef34bj_xY என்ற பாகுபலி படப் பாட்டு கீரவாணி இசையிலும், "ஜிங்கிலியா" http://youtu.be/Ky8bo-l7Jkk புலி படப் பாட்டு தேவி ஶ்ரீ பிரசாத் இசையிலும் எங்கேயோ எப்போதோ கேட்ட மெட்டு என்றாலும் கேட்கப் பிடித்தது.
என்னவொரு நல்ல இசையமைப்பாளர் நடிச்சு நாசமாகுறாரே என்று என் சக தர்மிணியே கவலைப்படும் அனுதாபப் பாத்திரம் ஜி.வி.பிரகாஷ்குமார். இந்த ஆண்டு வெளிவந்த டார்லிங் படத்தில் அவர் கொடுத்த "உன்னாலே" http://youtu.be/4gMV4Dn02tI பாட்டு மட்டும் தொடர்ந்து ரசிக்கக் கிடைத்தது. கொம்பன், இது என்ன மாயம் என்றெல்லாம் இசையமைத்தார்.
யுவன் ஷங்கர் ராஜாவின் பழைய பாடல்களைக் கேட்கும் போது 2016 இலாவது அவர் மீண்டு வர வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.
இந்த ஆண்டு கலக்கலான வெற்றிக் கனியைப் பறித்த இசையமைப்பாளராக Hiphop தமிழா
தனியொருவன் படத்தின் அதகள வெற்றியோடு கூட்டுச் சேர்ந்துள்ளார். "கண்ணோரமா" http://youtu.be/7dDeAE2V0oM இந்த ஆண்டின் ஆகச் சிறந்த காதல் பாடல்களில் ஒன்று.
இதே படத்தில் வந்த "காதல் கிரிக்கெட்" பாட்டும் கேட்கும் ரகம். "தீமை தான் வெல்லும்" http://youtu.be/yLFm1i6YVdI பாட்டு நன்றாக இருந்தாலும் "யார் யார் சிவம்" பாட்டைத் தேடி ஓடுது எனக்கு மட்டும்.
இசைஞானி இளையராஜாவின் ஆயிரமாவது கொடை "தாரை தப்பட்டை" பாடல்களும், பின்னணி இசைப் பகிர்வுகளும் 2015 ஐ நிறைவானதொரு ஆண்டாக்கியிருக்கின்றன. சமீப நாட்களாக இவற்றில் கட்டுண்டு கிடக்கின்றேன். இந்தப் பதிவை எழுதிக் கொண்டிருக்கும் போது 2015 ஆம் ஆண்டின் நிறைவான எனது வானொலி நிகழ்ச்சியில் "தாரை தப்பட்டை" பாடல்கள் சிறப்பு அறிமுகமாக ஒலிபரப்பாகிக் கொண்டிருப்பது இன்னொரு சிறப்பு.
2016 ஆம் ஆண்டை நல்லிசையோடு வரவேற்போம்.