Pages

Wednesday, August 10, 2022

ஒரு மாலைச்சந்திரன் மலரைத் தேடுது மலையடிவாரத்திலே ❤️


கடந்த இரண்டு நாட்களாக இலக்கியாவைப் பள்ளிக்கூடத்தில் விடும் போதும், மீண்டும் அழைத்து வரும் போதும் இந்தப் பாடலையே தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கிறேன்.


அந்தத் தாள லய ஓசை நயம் என் காதுகளை விட்டு நகராமல் அப்படியே இருக்கிறது.


“பால் நெலவு சூரியன்போல் 

சுட்டதென்ன நியாயம்

பச்சக்கிளி தோளக் கொத்தி 

வந்ததிந்த காயம்

ஓடிவந்த வைகை நதி 

காஞ்சதென்ன மாயம்

கூட வழி இல்லையென்றே 

ஆனது பெண் பாவம்“


https://www.youtube.com/watch?v=eATA-QcfSOw


பாடலாசிரியர் காமராசனுக்குக் கிடைத்த பொக்கிஷப் பாட்டு.

அந்தப் பாட்டில் அழகானதொரு தொகையறாவும் முத்தாய்ப்பாய் இருக்கும்.


மின்மினி குரலைப் பிரதிபண்ணவே முடியாத ஒரு நுணுக்கம் இருக்கும். 

டி…யில் தொடங்கி

ஒரு தேகம் வெந்தது மோகத் தீயினிலே ஆ..ஆ..

அந்த “ஆஆஆ” எனும் போது அது அவரின் முத்திரையாக மிளிரும். கேட்கும் போதெல்லாம் மிண்ட் சுவை. இதற்காக அவர் குரல் ஒன்றும் அதிக பிரயாசைப்படாது, மின்மினியின் இயல்பான குரல் அது.


பாட்டு முழுக்க உணர்ச்சிப் பிரவாகத்தில் எஸ்பிபி தனித்துப் பன்முக ஏற்ற இறக்கங்களை அப்படியே நம்முள் கடத்தி விடுவார்.


வெண்ணிலவில் தேடுகிறேன் 

கன்னி முகம் காணோம்

புன்னகையும் நான் இழந்தேன் 

என் மனதில் சோகம்

சித்திரத்தை பார்க்க வந்தேன் கற்குவியல் கண்டேன்

தென் மலையை போல் இருந்தேன் தென்னிலங்கை ஆனேன்


செல்லக் குயில் கூவ 

மெல்ல வரும் மேகம்

சொல்லில் வரும் சோகம் 

கங்கை நதி ஆகும்

எங்கிருந்த போதிலும் 

நீ வந்து விடு தேவி


மாலைச் சந்திரன் மலரைத் தேடுது

மலையடிவாரத்திலே


எஸ்.பி.பாலசுப்ரமணியம் சோக ராகம், மின்மினி குதூகலக் குரல் என்ற முரணோடு பயணிக்கும். இந்த மாதிரி இரண்டு விதமான மனோ நிலையை எப்படி ஒரு பாட்டுக்குள் அடக்க முடியும், அதை எப்படி உறுத்தாமல் ரசிகன் மனதில் பதியம் வைக்க முடியும் என்பதெல்லாம் எல்லாம் தெரிந்த வித்தைக்காரர் இசைஞானிக்கே கண்கூடு.


“வானில் விடிவெள்ளி" (ஆனஸ்ட் ராஜ்), “தாயறியாத தாமரையே” (அரங்கேற்ற வேளை) இந்த மாதிரிக் கலவை உணர்வை ஒரே பாட்டில் கடத்தும் வித்தைக்கார ராஜா.


2000 நாட்களுக்குப் பின் இசைச்சக்கரவர்த்தி இளையராஜாவுடன் கோவைத்தம்பி

ஒரு ராகம் தராத வீணை

நல்ல காதல் சொல்லாத பெண்மை

இந்த மண்ணில் ஏனடி

பதில் கூறு கண்மணி

அழகான கைகள் மீண்டும் வேளை

உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் திரைப்படத்துக்காக இசைஞானி இளையராஜா இசையமைப்பில், பாடல் வரிகளை பிறைசூடன் எழுத, கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்.ஜானகி ஆகியோர் பாடியிருக்கிறார்கள். 

எண்பதுகளில் கோவைத்தம்பி தன் தயாரிப்பில் இசைஞானி இளையராஜாவோடு இணைந்து பயணங்கள் முடிவதில்லை உள்ளிட்ட  பல வெற்றிப் படங்களைக் கொடுத்த பின்னர் இடையில் லஷ்மிகாந்த் பியாரிலால் கூட்டணியோடு "மங்கை ஒரு கங்கை" போன்ற படங்களை எடுத்துக் கையைச் சுட்டுக் கொண்டார்.

கோவைத்தம்பியின் அடுத்த சுற்றில் அவரின் தயாரிப்பில் "உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்" படம் வெளியானது.


2000 நாட்களுக்குப் பின் இசைச்சக்கரவர்த்தி இளையராஜா இசையில் என்ற அறிவிப்போடு தான் இந்தப் படம் ஆரம்பிக்கும்.


நடிகர் பார்த்திபன் அப்போது வெளியார் இயக்கத்தில் நாயகனாக நடித்துக் கொண்டிருந்த சமயம் இந்தப் படமும் இயக்குநர் ஶ்ரீதேவ் இயக்கத்தில் வெளியானது.

இந்தப் படத்தில் வரும் "இப்போதும் நிப்போம்" பாடல் மூலமாகத்தான் நடன இயக்குநராக பிரபுதேவா அறிமுகமானர். படத்தின் எழுத்தோட்டத்திலும் அது வரும்.

இங்கே தரும் பாடலை எழுதிய பிறைசூடன் மற்றும் ஏனைய பாடல்களை வாலி, மு.மேத்தா, நா.காமராசன், முத்துலிங்கம், கங்கை அமரன் என்று ஏறக்குறைய அன்றைய எல்லாப் பாடலாசிரியர்களை இணைத்த படம் இது. இப்படியே ராஜாவின் எல்லாப் படப் பாடல்களும் ஒரு கூட்டுக் கலவையாக வந்திருக்கலாம் என்றெண்ணுவதுண்டு.


"ஒரு ராகம் தராத வீணை

நல்ல காதல் சொல்லாத பெண்மை

இந்த மண்ணில் ஏனடி

பதில் கூறு கண்மணி

அழகான கைகள் மீண்டும் வேளை"


https://www.youtube.com/watch?v=PJ7TLouNLUM


காலைவேளைக்குப் பூச்சுட்டிப் பொட்டும் வைக்கும்  பாட்டு

https://twitter.com/kanapraba/status/229370508544733184

என்று பத்து வருடங்களுக்கு முன் ட்விட்டியிருக்கிறேன் 🙂


பாடலின் ஆரம்ப வரிகளில் "வீணை" என்ற பதத்தைச் சேர்த்திருப்பார் பிறைசூடன், பாடலுக்கு அணி செய்வதுமே இந்த வீணை என்ற வார்த்தையை முன்னுறுத்திய வரிகள் தான். மெட்டமைத்து வரிகளை வாங்கும் போது கண்டிப்பாக வீணை வாசிப்பு இருந்திருக்காது. 


ஆனால் பாடலின் இன்ன பிற வாத்தியங்களின் சிறப்பான வாசிப்போடு இந்த வீணை வாத்தியம் பாடலில் நளினமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. ராகம் வந்தாடும் வீணை" என்று பாடும் சமயமும் "நல்ல காதல் கொண்டாடும் பெண்மை" என்னும் போதும் சுண்டி இசைக்கிறது வீணை. அப்படியே முதல் சரணத்திலும் காவிக் கொண்டு ஏனைய வாத்திய இசைக்கருவிளை இணைக்கின்றது.


“ஓஹோஹோ காலைக்குயில்களே” 

https://www.youtube.com/watch?v=4VQ7qzKEzxI


அப்படியே தண்ணி வாளியை இறைத்தாற் போலக் கூட்டுக்குரல்களோடு எஸ்.ஜானகியம்மாவின் பரவசக் குரல் வந்து மனதை நிறைக்கும்.


“எல்லாப் பாடல்களும் இந்தப் படத்தில் அருமையாக  இருந்தும் இந்தப் படம் ஏன் ஓடவில்லை என்று மனம் வெறுத்து நான் சினிமாவை விட்டு ஒதுங்க இதுவும் காரணமாயிற்று" என்று அண்மையில் சாய் வித் சித்ராவில் கோவைத்தம்பி பேசினார்.


ஈழத்தில் போர்ச் சூழலில் சைக்கிள் டைனமோ சுத்திப் பாட்டுக் கேட்ட காலத்தில் என்னை வந்து சேர்ந்த பாடல்கள் இவையும் கூட.


கானா பிரபா

10.08.2022

Saturday, August 6, 2022

தந்தன தந்தன தை மாசம்... அது தந்தது தந்தது உன்ன தான்...❤️மெல்லிசை இளவல் வித்யாசாகர் கொடுத்த மென் வருடல் பாடல் தொகுப்பில் தவிர்க்கக் கூடாததொன்று இது. 


“இரு விழி இரு விழி...

இமை கொட்டி அழைக்குது...

உயிர் தட்டி திறக்குது...

ரெக்கை கட்டி பறக்குதம்மா...

ரெக்கை கட்டி பறக்குதம்மா...”


தோழிமார் தொடக்கி வைக்கக் கூடு சேரும் அந்தப் பாடகக் காதலர்கள்.

திருமண வீடுகளில் அதிகாரபூர்வமற்ற ஒலிபரப்பாளனாக இயங்கும் போதும், அந்த வீடியோப் பேழைகளிலும் போய் இடம் பிடித்து விடும் இது.


தோழிமார் தொகையறாவை முடிக்கும் போது அப்படியே கையேந்தும் தள வாத்தியத் தபேலாக்காரார் இலேசாக “தந்தனத் தந்தன” வை உருட்டிப் பார்ப்பார். இந்தத் தாள லயம் அப்படியே கே.ஜே.ஜேசுதாஸ் & சாதனா சர்க்கம் கூடிப் பாடும் போது தம்பாட்டுக்கு பின்னால் இசைத்துக் கொண்டே பயணிக்கும் போது இரண்டுக்காகவும் தனித்தனியாகக் கேட்க வேண்டும் போலவொரு பேராசை பிறக்கும்.


இந்தப் பாடலின் மெட்டுக்கட்டல் அபாரமாக இருக்கும். தந்தனத் தந்தனப் போட்டுக் கொண்டு அப்படியே இன்னொரு திசைக்குக் கிளை போடும்


“என் காது ரெண்டும் கூச...

வாய் சொன்னதென்ன நீ சொல்...

அந்த நேரம் என்ன பேச...

அறியாது போலே நீ சொல்...”


அழகியல் இன்பம். அந்த வரிகளுக்குப் பின்னால் ம்ம்ம்ம்ம் கொட்டும் ஒரு இசைக் கோவை அழகான ஐசிங்.


இரண்டாவது சரணத்துக்கு முன்னர் நானும் பாடிப் பார்க்கட்டா? என்பது போல

புல்லாங்குழலும் பாடிப் பார்ப்பார்.


தை ரத்தத் தை தை ரத்தத் தை


வித்யாசாகரம் ❤️


கே.ஜே.ஜேசுதாஸ் & சாதனா சர்க்கம் ஒரு விநோதமான கூட்டு.

அதனால் தான் ரட்சகன் படத்தின் அத்துணை துள்ளிசைப் பாடல்களும் கொட்டமடிக்க, ஓரமாக இருந்து நெஞ்சை அள்ளி விடும்

“நெஞ்சே நெஞ்சே 

 மறந்து விடு 

நினைவைக் கடந்து விடு”


https://youtu.be/ugbdnewtQJM


வித்யாசாகரின் பாடகர் தேர்வில் ரஹ்மானின் தாக்கம் அதிகமாக இருக்கும். தொண்ணூறுகளின் பிற்பகுதியில் அவர் கூட்டுச் சேர்ந்த பாடகர்களையும், ஜோடிகளையும் ஆழமாக அவதானித்தால் புரியும்.

ஆனால் வித்யாசாகரின் தனித்துவம் மிளிரும்.


அப்படியே இந்த ஜேசுதாஸ் & சாதனா சர்க்கத்தைக் கவர்ந்து வந்து

“காதல் வந்ததும்

 கன்னியின் உள்ளம்

காதலை யாருக்கும் சொல்வதில்லை” 


https://youtu.be/Fs3u1mDSPT4


என்றவொரு தன்னன்னான கொடுத்திருப்பார். 


“நில்லாத காற்று 

சொல்லாது தோழி 

நீயாக உந்தன் 

காதல் சொல்வாயா”


😍


அறுபதைக் கடந்த கானக் கந்தர்வனின் குரலை விட மனமில்லாமல் அவருக்காகக் கொஞ்சம் இயல்பாக, கீழ்த்தளத்தில் போடப்பட்ட பிரவாகமாக இந்த இரண்டு பாடல்களும் இருக்கும்.


“தந்தனத் தந்தனத் தை மாசம்” பா.விஜய் கொடுத்த அழகிய பாடல்.


ஒரு வணிகச் சூழலுக்குச் சமரசம் செய்யும் துள்ளிசைப் பாடல்களைக் கொடுத்து அங்கும் தன் முத்திரை பதித்தாலும், அடி மனதின் ஆழத்தில் உறைந்திருக்கும் இம்மாதிரியான மெல்லிசை கீதங்களைக் கொடுக்கும் போது தன் ஆத்மார்த்தமான உழைப்பை அங்கு காட்டுவார் வித்யாசாகர்.


எங்கள் “சொக்கக் தங்கம்” விஜயகாந்தும், செளந்தர்யாவும் அழகு ஜோடியாகப் பயணித்த முன்னோடி இந்தத் தவசி.


https://youtu.be/c4ObfHk6ZFM


உன் கண்களோடு நானும் 

முகம் பார்த்து வாழ வேண்டும்

உன்னைப் பார்த்து பார்த்து 

வாழ நகக் கண்ணில்

பார்வை வேண்டும்


https://youtu.be/8bG1r005-jI


அய்யா உன் முகம் பார்க்க 

என் கண்ணே

கண்ணாடி ❤️


கானா பிரபா

06.08.2022

Thursday, August 4, 2022

வாசலிலே பூசணிப்பூ வச்சுப்புட்டா வச்சுப்புட்டா ❤️


“மீண்டும் மீண்டும் கூடி சேருது 

பொன்னிஆறு

மோகத்தோடு கூடி பாடுது....”

இசைஞானி இளையராஜா அலையில் வாழ்பவர்களுக்கு இந்த வரிகள் அனிச்சையாக வாயில் மிதக்கும். அவ்வளவுக்கு ஊறிப் போன பாட்டு இது.

அந்தக் காலத்து இளவட்டங்கள் நம் ஊர்ப்பக்கப் பெண்களைக் கண்டால் குறும்பாகப் பாடும் பாடல்களில் இதுவுமொன்றாக இருக்கும் 

ஏன் இப்போது கூட விடிகாலை இருளில் எங்காவது பயணப்படும் போதும் அந்தச் சூழலில் மனதில் எழும் பாடலில் இது முதல் இடத்தில் இருக்கும். அதற்குப் பாடலின் அந்த ஆரம்பக் காட்சிப்படுத்தலின் பாதிப்பு இருக்கலாம். 

அந்த ண்ண்ண்ண் என்ற தொடக்க இசையே விடிகாலையின் அழகிய தொடக்கம் போல உவமானப்படும்.

பாட்டு ஒரு அழகியல் என்றால் இதன் காட்சிப்படுத்தல் இன்னோர் அழகியல்.

முகப்பவுடர், உதட்டுச் சாயம் இல்லாத ஏன் ஒப்பனையே இல்லாத ராமராஜனின் அந்தக் களையான முகம், கூடச் சேர்ந்த ரேகாவின் ஜோடிப் பொருத்தம் என்று எண்பதுகளில் ராஜாவின் பாடல்களில் காட்சிப்படுத்திய உன்னதங்களில் இதுவுமொன்று.

https://www.youtube.com/watch?v=ASZVLcLHvWg

இந்த மாதிரிப் பாட்டெல்லாம் போகிற போக்கில் எடுத்து விடுவது போல அந்தக் காலத்தில் ராஜா கொடுத்தது. ஆனாலும் சாதாரணர்கள் நமக்கோ அந்தப் பிரமிப்பு இத்தனை ஆண்டுகாலம் கடந்தும் அந்த எஸ்பிபி & ஜானகி கூட்டணியின் கனிவும், குழைவும், இசையுமாக நம்மை ஒரு வழி பண்ணிவிடும் “தேனகம்” இது.

முன்பெல்லாம் டி.கே.போஸ் இயக்கிய “ராசாவே உன்னெ நம்பி" படத்தோடு, கங்கை அமரன் இயக்கிய இந்த “செண்பகமே செண்பகமே” படத்தைப் போட்டுக் குழப்பிக் கொள்வேன். 

பின்னர் ஞாபகத்தில் போட்டு வைத்தது இப்படித்தான் “செண்பகமே செண்பகமே” பாட்டு வந்த “எங்க ஊரு பாட்டுக்காரன்" படத்துக்குப் பின்னர் ராமராஜனோடு கங்கை அமரன் சேர்ந்தது என்ற கணக்கு.

“வெளுத்துக் கட்டிக்கடா என் தம்பி தங்கக்கம்பி” ராஜாவே எழுதித் தன் தம்பியோடு அந்த முகப்புப் பாடலில் தோன்றிய அழகிய ஒற்றுமைக்காலம் அது.

பின்னாளில் எடுக்கப் போகும் கரகாட்டக்காரன் படத்துக்கு ஒத்திகை பார்த்தாரோ என்றெண்ண வைக்கும் சிலுக்கின் நடனத்தோடு வரும்

“தென்பழனி ஆண்டவனே தெய்வயானை நாயகனே” 

https://www.youtube.com/watch?v=f3Bg1_1vfpo

மலேசியா அண்ணனின் “பதினாறு வந்த மயிலே மயிலே” https://www.youtube.com/watch?v=Lj6eXwNOnvI பாடல் அருமையாக இருந்தும் அதிகம் பேசாப்பொருள் ஆகி விட்டது.

“வாசலிலே பூசணிப்பூ” எண்பதுகளின் காதல் ஜோடிப் பாடல்கள் உள்ளூர் ஒலிப்பதிவு கூடங்களில் தவறாமல் வாடிக்கையாளர் பட்டியலில் ஒன்றாக இருக்கும்.

“ஏதோ ஒன்னை சொல்லிச்சொல்லி

என்னை இப்ப கிள்ளாதே....”

ஜானகி முடிக்க அப்படியே 

“ஹ்ஹா” 

“ஏதோ ஒன்னை சொல்லிச்சொல்லி

என்னை இப்ப கிள்ளாதே

போதும் போதும் கண்ணால்

என்ன கட்டி இழுக்கற செண்பகமே!”

என்ற தன் அக்மார்க் குறும்பை உதிர்த்து விட்டுத் தான் முடிப்பார் எஸ்பிபி. விடமாட்டாரே பாடல் முடியும் தறுவாயில் கூடக் காத்திருந்து ஒரு ஜாலமா? என்ற வியப்பு வந்து போகும்.

கேட்டுகேட்டு கிறங்கத்தோணுது 

உங்க பாட்டு..

கேள்வி போல என்னை வாட்டுது

❤️

https://www.youtube.com/watch?v=n1Sw4pO9Wn4


Tuesday, August 2, 2022

❤️பின்னணி இசை விருதின் முதல்வர்❤️ 🥁 இசைஞானி இளையராஜா 🪘 🤺கேரள வர்மா பழசிராஜா 🏹


ஈராயிரங்களுக்குப் பின் இளையராஜா என்ன சாதித்தார்? 

ஒரு வரலாற்றுப் பின்னணி சார்ந்த படத்துக்கு அவரின் தேவை

எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது? போன்ற கேள்விகளுக்கான

ஒரு ஆய்வு ரீதியான பகிர்வாக இது அமைகின்றது.

பின்னணி இசைக்கான தேசிய விருது என்ற பிரிவு அறிமுகப்படுத்தப்பட்ட போது  முதல்வராக விருதைப் பெற்றுக் கொண்டவர் இசைஞானி இளையராஜா.

"தாரை தப்பட்டை" படத்தின் பின்னணி இசைக்காக மீண்டும் இந்த விருதைப் பெறும் இசைஞானி இளையராஜா, பின்னணி இசையில் எவ்வளவு தூரம் தனித்துத் துலங்குபவர் என்பதை மீள நிரூபிக்க இதோ "கேரள வர்மா பழசிராஜா" படத்தின் பின்னணி இசை முழுத் தொகுப்பு  இடுகையாக.

"1792 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பதினெட்டாம் தேதி ஶ்ரீரங்கப்பட்டணத்தில் கவர்னர் ஜெனரல் கான்வாலிஸ் பிரபுவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் படி திப்புசுல்தான் மலபார் பிரதேசத்தின் பலபகுதிகளை பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பனிக்கு விட்டுக் கொடுத்தார். வர்த்தகம் மட்டுமல்லாது கம்பனி ஆட்சியையும் கைப்பற்றியது. கடுமையான வரிச்சட்டங்களை விதித்து மக்களைக் கொடுமைப்படுத்தியது. அங்கிருந்த குறுநில மன்னர்கள் படைபலமோ துணிவோ இல்லாததால் வெள்ளையனுக்கு அடிபணிந்து கிடந்தனர். 

ஒரேயொரு ராஜகுமாரன் மட்டும் உரிமைக்காகவும் விடுதலைக்காகவும் போராட மக்களைத் திரட்டினார்"

பழசிராஜா என்ற வரலாற்றுக் காவியம் இப்படித் தான் ஆரம்பிக்கின்றது. ஆரம்பம் முதல் பழசிராஜாவின் அந்தத் தீரவரலாற்றின் பக்கங்களின் பங்காளிகளாக எம்மையும் இணைத்துக் கொண்டு பயணிக்கின்றது. ஈற்றில் பழசிராஜா மடியும் போது எம் மனங்களில் கனமாக உட்கார்ந்து கொண்டு விடுகிறார்.

கோகுலம் நிறுவனத்தின் சார்பில் கோபாலன் தயாரிப்பில் கேரளத்தின் பெரும் எழுத்தாளர்  

M. T.வாசுதேவன் நாயர் எழுதிய கேரளவர்மா பழசிராஜா என்ற காவியத்தை இயக்கியவர் மலையாளத்தின் உச்ச இயக்குநர்களில் ஒருவரான ஹரிஹரன். இசையமைப்பை இசைஞானி இளையராஜா கவனித்துக் கொள்ள, ஒலிச்சேர்க்கையை ஆஸ்கார் விருதைக் கவர்ந்த ரசூல் பூக்குட்டி கவனித்துக் கொண்டார். 2009 ஆம் ஆண்டு தேசிய விருதுப்பட்டியலில் சிறந்த பின்னணி இசைக்காக இசைஞானி இளையராஜா, சிறந்த ஒலிச்சேர்க்கைக்காக ரசூல் பூக்குட்டி, சிறந்த துணை நடிகைக்கான தேர்வுக்குழுவின் சிறப்பு விருதாக பத்மப்பிரியா ஆகியோருக்கு இந்தப் படம் உச்ச விருதுகளைக் கொடுத்துக் கெளரவித்தது.

மலையாளத்தின் பெரும் நடிகர் மம்முட்டி பழசிராஜாவாகவும் அவரின் தளபதி இடைச்சேன குங்கனாக சரத்குமார், பழசிராஜா நாயகி கனிகா, நீலி என்ற வீரப்பெண் பத்மப்ரியா, திலகன் என்று தொடங்கி மலையாள சினிமா உலகின் பெரும் நட்சத்திரங்களையும் இணைத்த படமாக இது திகழ்கின்றது. படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை எடுத்துக் கொண்ட கதையின் நோக்கத்துக்கு இம்மியும் பிசகாமல் பயணிப்பது அனுபவப்பட்ட ஜாம்பவான்களின் கூட்டினை நிரூபிக்கின்றது.

இந்தப் படத்தைத் தமிழில் மொழிமாற்றிய போது பாடல்கள் முழுவதையும் கவிஞர் வாலி கவனித்தார். படத்தின் இன்னொரு பலமாக நேர்த்தியான, எளிமையான வசன அமைப்புக்களைச் சிறப்பாகச் செய்திருக்கின்றார் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன். படத்தைப் பார்க்கும் போது பாத்திரங்களின் வாயிலாக அவற்றைக் கேட்கும் போது எவ்வளவுதூரம் இந்த வசனப்பகுதியை ஜெயமோகன் சிறப்பாகக் கொடுத்திருக்கின்றார் என்பதை உணர முடியும்.

பழசிராஜாவின் பின்னணி இசைக்கோர்ப்பில் ராஜாவின் இசையை Hungarian National Philharmonic இன் இசைவல்லுனர்கள் இசைய வைத்தார்கள். ஆரம்பத்தில் இந்தப் படத்துக்கு ஏற்கனவே பட்ஜெட்டை மீறிய செலவாகிவிட்டது எனவே ஹங்கேரிய இசைக்குழுவை வைத்துப் பண்ணுவதைத் தவிர்த்து விடலாம் என்று இயக்குநர் வேண்டினாலும் ராஜா, "இந்தப் படத்தை இன்னொரு முறை எடுக்கப் போகிறீர்களா, இதிலேயே சிறப்பாகக் கொடுத்து விடுவோமே" என்று சொல்லிச் சம்மதிக்க வைத்தார். ராஜாவின் தளராத அந்த எண்ணம் தான் இப்படத்தின் பின்னணி இசையில் பெரும் உச்சத்தைக் காட்டியிருக்கிறது.

ஆங்கிலேயரின் தேடலுக்கு மறைவாக பழசிராஜா தன் மக்களுடன் காடுகளில் பயணிக்கும் போது வரு பாடல் "ஆதியுஷாசந்யா போததிதுவே" பாடலை கேரளத்தின் புகழ்பெற்ற பாடலாசிரியர் ஓ.என்.வி.குருப் எழுதும் போது கவிஞர் அந்த காட்சியின் காத்திரமான உணர்வைக் கொண்டுவரவில்லை என்று ராஜா சொல்லப் போக அதனால் கேரளத்தில் பெருஞ் சர்ச்சை கிளம்பியது. பின்னர் இயக்குநர் ஹரிஹரன் தலையிட்டு, "ராஜாவுக்கு அது திருப்தி கொடுக்காதது அவரின் சொந்தக் கருத்து, ஆனால் இயக்குநராக என்னை குருப் இன் கவி வரிகள் திருப்திப்படுத்தியது" என்று சொல்லி பிரச்சனையை ஓரளவு தணித்தார். ஆனாலும் ஏஷியா நெட் என்ற கேரள தொலைக்காட்சியின் 2009 ஆம் ஆண்டு சினிமா விருதுகள் வழங்கப்பட்டபோது இசைஞானி இளையராஜா பெயரை அந்த விழா முடியும் வரை மருந்துக்கும் கூடச் சொல்லாமல் அமுக்கிப் பழிவாங்கிவிட்டார்கள். என்றாலும் இந்தப் படத்தில் வந்த "குன்னத்தே" பாடலுக்காக சிறந்த பாடகிக்கான விருதை சித்ரா தட்டிக் கொண்டார். கானா பிரபா

இந்தியத் திரை வரலாற்றில் பின்னணி இசைக்கான முதல் தேசிய விருது கடந்த 2009 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பழசிராஜாவுக்கு இசையமைத்த இசைஞானி இளையராஜாவுக்குக் கிட்டியதும் அவரின் உயிர் ரசிகர்கள் எங்களுக்கெல்லாம் பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கின்றது. இந்த விருதை முப்பது ஆண்டுகளுக்கு முன்னரேயே அறிமுகப்படுத்தி இருந்தால் பின்னணி இசைக்கான தேசிய விருதுகளில் குறைந்த பட்சம் 20 ஐ ஆவது அள்ளியிருப்பார் எங்கள் ராகதேவன்.

பழசி(இளைய)ராஜாவுக்குக் கிட்டிய விருது கொடுத்த தெம்பில் கடந்த மூன்று நாட்களாக பழசிராஜா இசைப்பிரிப்புப் பணியில் இறங்கினேன். படத்தை ஓடவிட்டுப் பதமாக இசையை மட்டும் பிரிக்கும் காட்சிகளை மீனுக்குக் காத்திருக்கும் கொக்குப் போல அவதானமாக இருந்தாலும் அவ்வளவு சுலபமான வேலையாக அது படவில்லை. காரணம், இசைஞானியின் மற்றைய படங்களில் பின்னணி இசைவரும் காட்சிக்கு மட்டும் தனியானதொரு வசன ஆதிக்கம் குறைவான அல்லது இல்லாத காட்சியமைப்பு இருக்குமாற்போல இந்தப் படத்தில் இல்லை. படம் தொடங்கி முடியும் வரை இண்டு இடுக்கெல்லாம் இசையை நுழைத்து இலாவகமாக சங்கமிக்க வைத்ததால் நாலைந்து தடவைகளுக்கு மேல் மீண்டும் மீண்டும் காட்சிகளை மீள ஒடவிட்டு இசைப்பிரிப்புச் செய்ய வேண்டியதாயிற்று. கானா பிரபா

அப்படியாகப் பிரித்தெடுக்கப்பட்ட ஒலிக்குளிகைகள் மட்டும் 38 , அவற்றை இங்கே தருகின்றேன். இந்த இசையைக் கேட்கும் போது பழசிராஜா என்ற பெருங்காவியத்துக்கு இசைஞானியின் எல்லைகடந்த இசைக்கோர்ப்பு எவ்வளவு தூரம் பெரும் பலமாக இருக்கின்றது என்பதை உணர்வீர்கள். காட்சிகளின் நுட்பத்தை உணர்ந்து ஒரு காட்சியிலேயே வரும் பலவிதமான உணர்வுக் கலவைகளையும், காட்சிகளின் வீரியத்தையும் பார்வையற்றவனின் மனக்கண்ணிலே கூடப் பிரகாசமாய்க் காட்டும் உயரிய சங்கீதமாக இந்த இசைக்கலவை விளங்கி நிற்கின்றது. பின்னணி இசையிலே இசைஞானியின் உச்சத்தைத் தொடுவதற்கு இனிமேல் தான் ஆண்டவன் கருணை கூர்ந்து யாரையாவது பிறப்பெடுக்க வைக்கவேண்டும் என்பது போன்றதான உணர்வலையை உண்டுபண்ணும் இசைஜாலத்தின் சங்கமம் இந்தப் படம். சந்தோஷத்தில் ஆர்ப்பரித்தும், வீரத்தில் வெகுண்டெழுந்தும், பலவீனப்பட்டு வீழும் போது முடங்கி முனகியும், பழசிராஜாவின் பெரும்பயணத்தில் அவருக்குத் துணையாக வந்த தளபதி இடைச்சேன குங்கன் போல இசைஞானி இளையராஜாவின் இசை வியாபித்து நிற்கின்றது. 

கமல்ஹாசனின் அறிமுகத்தோடு ஆரம்பமாகும் முகப்பு இசை

http://www.radio.kanapraba.com/praja/p1.mp3

ஆங்கிலேய அதிகாரிகள் அவர்களின் விசுவாசிகளைச் சந்தித்தல்

http://www.radio.kanapraba.com/praja/p3.mp3

ஆங்கிலப்படையின் அணிவகுப்பு

http://www.radio.kanapraba.com/praja/p4.mp3

பழசிராஜாவின் சுதேசிப்படைகளின் வாட்களும் ஆங்கிலப்படைகளின் துப்பாக்கிகளும் மோதும் காட்சி

http://www.radio.kanapraba.com/praja/p5.mp3

கானா பிரபா

பழசிராஜாவின் அறிமுகம், தனது மாமனார் குரும்பிரநாடு ராஜவர்மாவைச் சந்தித்தல்

http://www.radio.kanapraba.com/praja/p6.mp3

http://www.radio.kanapraba.com/praja/p7.mp3

அமைதி தவழும் அந்தக் கிராமத்தில் பழசிராஜாவைத் தேடி நுழையும் ஆங்கிலேயப்படை

http://www.radio.kanapraba.com/praja/p8.mp3

இடைச்சேன குங்கன் (சரத்குமார்) அறிமுகமும், ஆங்கிலச் சிப்பாய்களுடன் அவரின் மோதலும்

http://www.radio.kanapraba.com/praja/p9.mp3

பழசிராஜா மரபுமுறை போர்முறையின் அவசியத்தை உணர்த்தித் தன் அணியில் இருக்கும் வீரர்களைப் பயிற்சி எடுக்கச் செய்யும் காட்சி

http://www.radio.kanapraba.com/praja/p10.mp3

இடைச்சேன குங்கனுக்கும் பழசிராஜாவுக்கும் நடக்கும் நட்புரீதியான வாட்போர்

http://www.radio.kanapraba.com/praja/p11.mp3

தன் மக்களோடு தான் தொடர்ந்து இருப்பேன் என்று பழசிராஜா தன் மக்களுக்கு உறுதிகூறும் காட்சி

http://www.radio.kanapraba.com/praja/p12.mp3

பழசிராஜா படைகளுக்கும் ஆங்கிலச் சிப்பாய்களுக்கும் ஒரு திடீர் மோதல்

http://www.radio.kanapraba.com/praja/p13.mp3

ஆங்கிலேயர்களுடன் நட்புறவாடும் குரும்பைநாடு தாசில்தாரர் பழயம்வீடான் சந்து ஆங்கிலச் சிப்பாய்களுடன் பழசிராஜாவைப் பிடிக்க வரும் காட்சியும் அதை பழசிராஜா தந்திரமாக எதிர்கொள்ளலும்

http://www.radio.kanapraba.com/praja/p14.mp3

காட்டுக்குள் பழசி படைகளை வேட்டையாட வரும் ஆங்கிலேயப்படைகளை சுதேசிப்படைகள் தந்திரமாக மடக்கிப் போர் புரிதல்

http://www.radio.kanapraba.com/praja/p15.mp3

பழசிராஜா ஆங்கிலேயருடன் ஒப்பந்தம் போட முனையும் வேளை

http://www.radio.kanapraba.com/praja/p16.mp3

பழசிராஜாவும் ஆங்கிலேயப் பிரதிநிதிகளும் நேருக்கு நேர்

பழசிராஜாவைக் கொல்லத் தருணம் பார்க்கும் ஆங்கிலேய அதிகாரி மேஜர் ஜேம்ஸ் கோர்டனுக்கு அவரின் மேலதிகாரி , கோட்டையைச் சுற்றி வளைத்து நிற்கும் பழசி படைகளைக் காட்டும் காட்சி, அட்டகாசமான பின்னணி இசையோடு

http://www.radio.kanapraba.com/praja/p18.mp3

பழசிராஜா ஆங்கிலேயருடன் ஒப்பந்தம் போடும் முன் தன் கோரிக்கையைச் சொல்லும் வேளை

http://www.radio.kanapraba.com/praja/p19.mp3

பழசிராஜா ஆங்கிலேயருடன் போட்ட ஒப்பந்தத்தால் அதிருப்தியடையும் இடைச்சேன குங்கன், கைதேறி அம்பு (மனைவியின் சகோதரன்) ஆகியோருக்குத் தன் நிலைப்பாட்டை விளக்கும் போது

http://www.radio.kanapraba.com/praja/p20.mp3

இடைச்சேன குங்கன் (சரத்குமார்) குரும்பைநாடு தாசில்தாரர் பழயம்வீடான் சந்து (சுமன்) நேருக்கு நேர்

http://www.radio.kanapraba.com/praja/p21.mp3

பழசிராஜா தன் வாளை எடுத்துப் பரிசோதிக்கும் போது

http://www.radio.kanapraba.com/praja/p22.mp3

"உண்மையைச் சொல்லு! யார் நீ, பழசியோட ஆளு தானே?"

"பழசியோட ஆள் இல்லை, பழசியே தான் பழசி கேரள வர்மா"

http://www.radio.kanapraba.com/praja/p23.mp3

பழசிராஜாவின் விசுவாசி கண்ணவது நம்பியார் (தேவன்) அவர் மகன் ஆகியோரைத் தந்திரமாகப் பிடித்த ஆங்கிலேயர் பொது இடத்தில் தூக்கிலிடும் போது

http://www.radio.kanapraba.com/praja/p24.mp3

ஆங்கிலேய அசிஸ்டெண்ட் கலெக்டர் பேபரின் செயற்பாடுகளால் அதிருப்தியடையும் அவர் வருங்காலத் துணை டோரா 

http://www.radio.kanapraba.com/praja/p25.mp3

பழசிராஜா படைகளுக்கும் ஆங்கிலேயப் படைகளுக்கும் பெரும் மோதல்

http://www.radio.kanapraba.com/praja/p26.mp3

தலைக்கால் சந்துவும் (மனோஜ் கே ஜெயன்) அவரின் மனைவியாகப் போகும் நீலியும் (பத்மப்பிரியா) ஆங்கிலேயப் படைகளை எதிர்கொள்ளும் போது

http://www.radio.kanapraba.com/praja/p27.mp3

பழசிராஜாவின் தலைக்கு ஆங்கிலேயர் விலை வைத்தலும் தலைக்கால் சந்து கொட்டும் மழையில் மரணத்தை முத்தமிடுதலும்

http://www.radio.kanapraba.com/praja/p28.mp3

அதுவரை அழாமல் இருந்த நீலி பழசிராஜாவைக் கண்டதும் தன் அழுகையைக் கொட்டித் தீர்க்கும் பெருஞ்சோகம்

http://www.radio.kanapraba.com/praja/p29.mp3

தன் வலதுகரமாக இருந்த தலைக்கால் சந்துவின் (மனோஜ் கே ஜெயின்) கோரமரணத்தைத் தொடர்ந்து இடைச்சேன குங்கன் (சரத்குமார்) மேஜர் ஜேம்ஸ் கோர்டனை வேட்டையாடல்

http://www.radio.kanapraba.com/praja/p30.mp3

ஆங்கிலேயப் படை பழசிராஜாவின் இருப்பிடத்தை அறிந்து வரப்போகும் வேளை ஊரே இடப்பெயரும் நேரம் நிகழும் காட்சிகள், கைதேறி அம்பு காயம்படல்

http://www.radio.kanapraba.com/praja/p31.mp3

பழசிராஜா தன் வாளுக்கு வேலைகொடுக்கும் நேரம் வந்து விட்டதை உணர்தல்

http://www.radio.kanapraba.com/praja/p32.mp3

கைதேறி அம்பு காலனின் கைகளில் தன் உயிரைக் கொடுக்கும் நேரம் பழசிராஜா அவனுக்கு ஆறுதல் கொடுத்தலும் ஆனால் அவன் உயிர் பிரிந்ததை உணரும் வேளை அவன் கைகளை ஒதுக்கிவிட்டு மனம் உடைந்து போதலும்

http://www.radio.kanapraba.com/praja/p33.mp3

இடைச்சேன குங்கன் எட்டப்பன் குரும்பைநாடு தாசில்தாரர் பழயம்வீடான் சந்து (சுமன்)வை வேட்டையாடிக் கொல்லும் வேளை

http://www.radio.kanapraba.com/praja/p34.mp3

ஆங்கிலேயப் படைகளை நேரெதிரே சந்திக்கும் போது சரணடையாமல் இடைச்சேன குங்கன் பழசிராஜாவுக்குத் தன் குருதட்சணயாக உயிரைக் கொடுக்கும் வேளை 

http://www.radio.kanapraba.com/praja/p35.mp3

பழசிராஜா தன் மனைவி கைதேறி மக்கம் (கனிகா) தன்னை விட்டு விலகி கைதேறிக்குப் போகுமாறு சொல்லும் நேரம்

http://www.radio.kanapraba.com/praja/p36.mp3

"தம்புரானோட உயிர் எங்களுக்குப் பெருசு" - எம்மன் நாயர் (லாலு அலெக்ஸ்)

பழசிராஜா பெருஞ்சிரிப்புடன்

 "துருப்பிடிச்ச வாளைப்பார்த்து வயசான காலத்துல இல்லாத வீரகதைகளை உருவாக்கி அதை எல்லாரையும் நம்பவச்சு அதைப்பேசி நாம் வாழணும்,

எம்மன்! பிறந்ததில் இருந்து ஒரு நிழல் கூடவே வந்துகிட்டிருக்கு, என்னைக்காவது ஒருநாள் அது திரும்பி நேருக்கு நேரே வந்து நிற்கும் அதுதான் மரணம், பயமில்லை"

"அழாதீங்க, அழணும்னு தோணிச்சின்னா அழுதுக்குங்க, என்னை நினைச்சில்லை

அதிர்ஷ்டம் கெட்ட இந்த நாட்டை நினைச்சு, நாட்டோட மக்களை நினைச்சு...

வீரசொர்க்கங்கங்களின் வர்ணனைகளைக் கேட்டு ஆசைப்படுற ஒரேயொரு கடமை மட்டும் தான் பாக்கியிருக்கு

இந்த நாட்டை ஆளுற உரிமை யாருக்குன்னு இங்க, என்னோட ரத்தத்தால குறிக்கணும்

அது போதும்...."

http://www.radio.kanapraba.com/praja/p37.mp3

பழசிராஜா ஆங்கிலேயப்படைகளோடு நேரடிச் சமரில், வாத்தியங்களின் உச்சபட்ச ஆர்ப்பரிப்போடு

http://www.radio.kanapraba.com/praja/p38.mp3

பழசிராஜாவின் வீரமரணமும், ஆங்கிலேய அசிஸ்டெண்ட் கலெக்டர் கொடுக்கும் இராணுவ மரியாதையும்

"He was our enemy, 

but he was a great man, 

a great warrior,

we honour him"

http://www.radio.kanapraba.com/praja/p39.mp3

கானா பிரபா

02.08.2022