Pages

Monday, September 24, 2012

கிரீடத்தை இறக்கி வைத்த நடிகர் திலகன்

'பவித்ரம்" என்றதொரு மலையாளப் படம், கிட்டத்த ஏழெட்டு வருஷங்களுக்கு முன்னர் பார்த்திருந்தேன். இளந்தாரி மகன் மோகன்லால் ஷோபனாவுடன் காதல் வயப்பட்டு கல்யாணம் முடிக்கும் தறுவாயில் ஒரு புறம், இன்னொரு புறம் மூத்த மகன் சீனிவாசன் மணம் முடித்தும் குழந்தைப் பாக்கியம் இல்லாதிருப்பவர், இவர்களின் பெற்றோர் திலகன், ஸ்ரீவித்யா. தன் மூத்தமகனுக்குக் குழந்தை கிடைக்கவேண்டும் என்று வேண்டுதலோடு இருக்கும் ஸ்ரீவித்யாவுக்கு திலகன் மூலம் மீண்டும் ஒரு குழந்தை. பிறக்கும் போதே தாயைப் பரலோகம் அனுப்பிய பாவம் அந்தக் குழந்தைக்கு. திலகனுக்கோ தன் இச்சையின் விளைவு குழந்தையாக வந்து எள்ளலுக்கு ஆட்படும் அவமானம், ஒரு நாள் எல்லோரது கண்காணாத இடத்துக்குப் போய்விடுகிறார். தன் காதலை இழந்து, தந்தையாகவும், சகோதரனாகவும் மாறவேண்டிய அவல வாழ்வில் மோகன்லால். இறுதியில் எல்லாம் இழந்து பைத்தியக்காரன் ஆகிவிடுவார் மோகன்லால் . இப்படியான சின்னப்பாத்திரம் என்றாலும் மிகை நடிப்பற்ற, இயல்பான தன் நடிப்பினால் கேரளம் கடந்தும் அறியப்பட்டவர் திலகன். செங்கோல், கிரீடம் போன்ற படங்களில் திலகனின் பங்கு பெரும்பங்கு.

மலையாள சினிமாவின் குணச்சித்திரங்களின் பட்டியலில் முரளி, கொச்சின் ஹனீபா, ராஜன்.பி.தேவ் ஐத் தொடர்ந்து திலகனின் இழப்பு இன்று. இப்படியான மலையாள நடிகர்களை பெரும்பாலும் வில்லத்தனமாகக் காட்டும் எல்லையோடு நிற்கும் தமிழ் சினிமாவிலும் திலகனின் பரவலான அறிமுகம் சத்ரியன் படத்தின் அருமை நாயகம் என்ற வில்லனாக மலையே கவிழ்ந்தாலும் காட்டுக்கூச்சல் கத்தாத மென் நடிப்பில் பன்னீர்ச்செல்வம் என்ற விஜயகாந்த் இற்கு பெரும் தலைவலியாகப் படம் முழுதும் வருவார். பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகனுக்கோ கடுப்பேத்தும் நோகாமல் கொல்லும் இவரின் வில்லத்தனம். கரகரத்த சிரிப்பும், தீர்க்கமான பார்வையும், அலட்சியமான முகபாவமும் திலகனின் சொத்து.

சாணக்யன் போன்ற மலையாளப்படங்களில் முக்கிய வில்லன் பாத்திரத்தில் வைத்திருந்தாலும் தமிழில் கமல் போன்ற முன்னணி நடிகர்களே திலகனை ஆராதிக்கவில்லை. சத்ரியனுக்குப் பிறகு அவருக்குக் கிடைத்த பாலா படத்தில் சிறப்பாகச் செய்திருந்தாலும் அதற்கு முன் வந்த மேட்டுக்குடி படம் தான் அவருக்கான இன்னொரு சொல்லிக்கொள்ளும் படமாகத் தமிழில் கிட்டியது. மலையாளத்தின் எண்ணற்ற படங்களில் நடித்துக் கரைகண்டிருந்த திலகனின் சமீப ஆண்டுகள் தொழில் ரீதியில் அல்லல் மிகுந்தவை ஆனாலும் சளைக்காத போர்க்குணத்தோடு தன் கருத்தில் வழுவாது இருந்தவர். அவரின் ஆன்மா சாந்தியடையட்டும்.
திலகன்  oil paint வரைஞர்:  Rajasekharan Parameswaran

Thursday, September 13, 2012

றேடியோஸ்புதிர் 67 : ஆதியும் அந்தமும் ஆன இசை

ஏற்கனவே சினிமாவில் தன் பங்களிப்பை வழங்கியிருந்தாலும், இயக்குனர் என்ற வகையில் அவருக்கு முதல் படம் அப்போது பரபரப்பான பிரபலமாக மாறிய ஒரு நாயகனை முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடிக்க வைத்திருந்தார். அந்த முதல் படம் ஒரு நாவலை மையமாக எடுக்க்கப்பட்டிருந்தது. பல சோதனைகளோடு அந்தப் படம் வெளிவந்து கவனிக்கப்படத்தக்க இயக்குனர் என்ற முத்திரையையும் பெற்றுக் கொண்டார்.

இரண்டாவதாக எடுத்த படமும் இன்னொரு நாவலாசிரியரின் கதையை மையப்படுத்தி எடுத்திருந்தார். ஆனால் ஒரு வித்தியாசம், தன்னை இயக்குனராக வெளிப்படுத்திய சமயம் பிரபல நாயகனைக் கொண்டு முதல் படம் எடுத்து அதில் பெரு வெற்றியும் பெற்றிருந்தாலும் அந்த வெற்றியை வைத்து பிரபலங்களின் பின்னால் ஓடாமல் இம்முறை அறிமுகங்களையும், அப்போது வளர்ந்து வந்த நடிகர்களையும் போட்டு எடுத்திருந்தார். படத்தின் பூஜை நாளன்றே "போயும் போயும் இந்தப் பெண்ணா நாயகி" என்று அவர் காதுபடவே பேசுமளவுக்கு நிலமை. ஆனாலும் பிடிவாதத்தோடு இயக்கினார். வெற்றி கண்டார். 32 ஆண்டுகள் ஆகிவிட்டது இன்றும் தமிழ் சினிமாவின் தரம் பேசும் படங்களில் இந்தப் படத்தை விலத்திப் போகமுடியாது. அவ்வளவுக்குக் காலம் கடந்து நிற்கின்றது.

இந்தப் படத்தின் பின்னணி இசை என்பது மிகவும் கவனமாக, காட்சியையும், வசனங்களின் போக்கையும் சிதைத்து விடாது கண்ணாடி இழையாகப் பின்னப்பட்டிருக்கின்றது. படத்தின் குறிப்பாக இங்கு நான் தந்திருக்கும் இசைத்துண்டம் 1.32 நிமிடங்கள் இயங்கும் இசையில் பரபரப்பும், ஆர்ப்பரிப்பும் மேலெழுந்து மெல்ல மெல்ல அடங்கிப் போய்ப் புல்லாங்குழல் வழியே ஏதோவொரு இனம்புரியாத சோகத்தைக் கடத்தி விட்டு ஓயும். படத்தின் முகப்பில் ஆரம்பித் இசை, முடிவில் ஒரு சுற்றுப் பயணித்து மூலத்தில் வந்து நிற்கும் இந்த இசையைக் கேளுங்கள், இந்தப் படம் என்ன பதிலோடு வாருங்கள்.

ஒகே மக்கள்ஸ்

போட்டி முடிவடைந்து விட்டது,

சரியான பதில்கள்

மகேந்திரனின் முதற்படம் முள்ளும் மலரும்
இரண்டாவது படம் உதிரிப்பூக்கள்

போட்டியில் கலந்து சிறப்பித்த உங்கள் அனைவருக்கும் நன்றி

Saturday, September 1, 2012

"தட்டத்தின் மரயத்து" ஒரு சுகானுபவம்

அனுபவப்பட்ட எழுத்தாளர்களின் கதைகளையும், கவிதைகளையும் படித்துப் பழகியவனுக்கு அறிமுகப் படைப்பாளியின் படைப்பைப் பார்த்தபின் எழும் திருப்தியான சுகானுபவம் கிட்டியிருக்ககிறது இன்று பார்த்த மலையாள சினிமா "தட்டத்தின் மரயத்து" மூலம். இந்தப் படம் குறித்த எதிர்பார்ப்பை எற்கனவே இணையத்தளங்கள், சஞ்சிகைகள் மற்றும் படத்தின் இயக்குநர் வினித் ஶ்ரீனிவாசனின் விகடன் பேட்டி ஆகியவை கிளப்பியிருந்தாலும், தியேட்டருக்குப் போய்ப் படம் பார்க்கும் வரை ஒருவித சந்தேக உணர்வே தொடர்ந்தது. காரணம் இப்போதெல்லாம் ஆகா ஓகோவென்று விமர்சனத்தில் கிளப்பப்படும் படங்களைப் பார்த்தபின் "கல்"அடிபடுவதுதான்.

வினோத் என்ற இந்துமத நாயர் பையனுக்கும் ஆயிஷா என்ற முஸ்லீம் பெண்ணுக்கும் வரும் காதல், தடைகளை மீறி அவர்கள் ஜெயித்தார்களா? என்ற சாதாரண ஒற்றைவரிக் கதைதான். ஆனால் படம் ஆரம்பித்த நிமிடம் முதல் இறுதிக் காட்சி வரை கட்டிப்போட வைக்கும் சுவாரஸ்யமிக்க காட்சியமைப்புக்கள், வசனம், ஒளிப்பதிவு, இசை என்று எல்லாமே கூட்டணி அமைத்து அதகளம் பண்ணியிருக்கின்றன.

மலையாள சினிமாக்களில் நடிகர் தேர்வு என்று வரும்போது அதிகம் அவர்கள் மெனக்கெடுவதில்லை. K.P.A.C லலிதா, இன்னசெண்ட், சலீம்குமார் உள்ளிட்ட ஒரு தொகை நடிகர்களே பெரும்பாலான படங்களின் குணச்சித்திரங்களாக ஆக்கிரமிப்பர். ஆனால் இந்தப் படத்தில் நாயகன் நிவின் பெளலி (இரண்டாவது படம்), மனோஜ்.கே.ஜெயன், மற்றும் ஶ்ரீனிவாசன் தவிர்ந்த மற்ற எல்லோருமே மலையாள சினிமாக்களில் அதிகம் அறியப்படாதவர்கள். அதிலும் குறிப்பாக நாயகியாக வரும் அறிமுகம் இஷா தால்வார் என்னவொரு கச்சிதமான தேர்வு, முஸ்லீம் பெண் பாத்திரத்துக்கு இவரை விட்டால் வேறு பிரபலங்களையே நினைத்துப்பார்க்க முடியாத அடக்கமான நடிப்பு. இப்படியான படங்களுக்குக் கூடவே ஒட்டும் நண்பன் என்ற சமாச்சாரத்துக்கு விதிவிலக்கில்லாமல் வரும் நடிகர் அஜூ வர்கீஸ் இன் நகைச்சுவையும் அளவான அழகு. மனோஜ் கே.ஜெயனுக்கு குரலை வித்தியாசப்படுத்திப் பேசுவதில் இருந்து படத்தின் ஓட்டத்துக்குக் கணிசமான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்.
நாம் நேசிக்கும் படைப்பாளிகளின் வாரிசுகள் நல்லதொரு நிலைக்கு வரும் போது நம் வீட்டுப் பிள்ளையை ஆராதிப்பது போல ஒரு மானசீகமான கொண்டாட்டம் இருக்கும். நடிகர் ஶ்ரீனிவாசன் மலையாளத் திரையுலகின் எண்பதுகளில் இருந்து இன்று வரை தன்னளவிலான கெளரவமான பங்களிப்பைக் கதாசிரியராகவும், நடிகராகவும் வழங்கியிருக்கிறார். அவரின் மகன் வினீத் ஶ்ரீனிவாசன் பாடகராகவும், ஒரு சில படங்களில் நடிகராகவும் அறியப்பட்டிருந்தாலும் இந்தப் படம் அவரைப் பொறுத்தவரை இவருக்கான துறையைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்துக் கைகாட்டி விட்டிருக்கிறது.



மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களின் படங்களே துண்டைக்காணோம் துணியைக் காணோம் என்ற நிலையில் இருக்கும் சூழல், மாபெரும் கதா நடிகன் மம்முட்டி "ஒய் திஸ் கொலவெறி" என்றெல்லாம் பஞ்ச் அடித்து ஓவர் ஹீரோயிசம் காட்டி எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற காலமிது. ஆனால் ரசிகர்களுக்கு, அது பழகிப்போன கதையாகக் கூட இருக்கட்டும் ஆனால் நேர்மையான விதத்தில் கொடுத்தால் ஏற்றுக் கொள்வார்கள் என்பதற்கு இந்தப் படம் இன்னொரு சாட்சி. சக நடிகர் முகேஷ் உடன் நடிகர் ஶ்ரீனிவாசனும் இணைந்து 14 லட்சத்தில் எடுத்த படம் இன்று பத்துக் கோடியைத் தாண்டியிருக்கிறது இலாபம். (ஆதாரம் விக்கிப்பீடியா)

கதையோடு ஒட்டாது விலகி நிற்கும் நகைச்சுவை, வேண்டாத காட்சியமைப்பு எல்லாம் களைந்து கதையோட்டத்தோடு வரும் நகைச்சுவையிலும் நடைமுறை வாழ்வில் காணும் சினிமா, கிரிக்கெட் உதாரணங்களையெல்லாம் கலந்து கட்டி அடித்திருக்கிறார். நாயகனுக்கும் ஓவர் ஹீரோயிசம் கொடுக்காமல் நம்மில் ஒருவராகப் பள்ளி நாட்களை அசைபோட வைக்கும் அளவுக்குக் குணாதிசியங்களைக் கொண்டு உருவாக்கிய பாத்திரம்.

இந்தப் படத்தின் பாடல்களை முன்னரேயே கேட்ட அனுபவம் இல்லாத நிலையில் ஒவ்வொரு பாடல்களும் கதையோடு பயணிக்கையில் இதில் எது நல்லது என்று மனக்கணக்கில் போடுமளவுக்கு முத்து முத்தான பாடல்கள். பாடல் இசை, பின்னணி இசை இரண்டிலும் ஷான் ரஹ்மான் நம்மை ஈர்க்கிறார். அவரைப்போலவே ஒளிப்பதிவாளர் ஜோமோன் T.ஜான்
வினீத் ஶ்ரீனிவாசனுக்கு இசை, ஒளிப்பதிவு ஆகிய இரண்டும் பெரிய பலமாக அமைந்திருக்கின்றன. இதுவே பாதி வெற்றி அவருக்கு.

"நாம ஆசைப்பட்ட விஷயங்களைப் பின்னாளில் நாமளே மறந்தாலும் ஆண்டவன் மறக்கமாட்டான்" படத்தை முடித்து வைக்க இயக்குநர் வினீத் ஶ்ரீனிவாசன் கொடுத்த வாசகம் அது, அவரிடம் இன்னும் நல்ல படைப்புக்களை எதிர்பார்க்க வைக்கின்ற ஆரம்பமாக.