எழுபதுகளின் மத்தியில் மெல்ல மெல்லக் கிளம்பி எண்பதுகளின் மிக முக்கியமானதொரு கதை சொல்லியாக தமிழ் சினிமாவில் மிளிர்ந்தவர் பஞ்சு அருணாசலம் அவர்கள்.
ஒரு வெற்றிப்படத்திற்குண்டான சூக்குமத்தை நுணுக்கமாகத் தன் தயாரிப்பில் மட்டுமன்றிப் பிறர் தயாரித்த படங்களில் பணியாற்றிய போதும் கையாண்டவர். எண்பதுகளின் வசூல் நிறைந்த சினிமா வர்த்தகத்தின் மிக முக்கிய புள்ளி என்ற நிலையில் கதாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் வடிவம். அதற்கு முந்திய கால கட்டங்களில் பாடலாசிரியர் என்று இயங்க ஆரம்பித்த பஞ்சு அருணாசலம் அவர்களது இன்னொரு பரிமாணம் அவர் இயக்குநராகவும் இருந்தது.
தமிழ் சினிமாவில் பல்வேறு ஆற்றொழுக்கான கதாசிரியர்கள் வெற்றிப்படங்களுக்குத் துணை போயிருக்கிறார்கள். பின்னர் இயக்குநர் வடிவம் தரித்த போது வெற்றி பெற்றவர்களுக்கு நிகராகத் தோல்வி கண்டவர் பட்டியலும் இருக்கும். உதாரணமாக ஆர்.செல்வராஜ் அவர்களுக்குக் கதாசிரியர் அந்தஸ்தில் கிட்டிய வெற்றிகளோடு ஒப்பிடும் போது அவர் இயக்கிய படங்கள் என்னதான் வித்தியாசமான கதைக்களனைக் கொண்டும், இசைஞானி இளையராஜாவின் அற்புதம் நிறைந்த பாடல்களைத் தாங்கியும் அமைந்தாலும் அவை அவரை வணிக வெற்றியில் அடையாளப்படுத்தாதவை. பஞ்சு அருணாசலம் அவர்களும் இயக்குநராகச் சாதித்ததை விட பாடலாசிரியராக, தயாரிப்பாளராக, கதை, வசனகர்த்தாவாகப் பெற்ற வெற்ரீ உச்சம் நிரம்பியது. மொத்தம் நான்கு படங்களைப் பஞ்சு அருணாசலம் அவர்கள் இயக்க்யிருக்கிறார். இவை 1988 இலிருந்து ஐந்து வருடங்களுக்குள் இவர் சாதித்து முடித்த கணக்கு.
"மணமகளே வா" இது தான் பஞ்சு அருணாசலம் அவர்கள் இயக்கிய முதல் படம், இதில் விநோதம் என்னவென்றால் இவர் எழுதிய முதல் பாட்டு "மணமகளே மருமகளே வா வா" என்ற சாரதா திரைப்படத்தின் புகழ்பூத்த பாட்டு. அந்தப் பாடலின் முதலடியே இவரின் முதல் படத் தலைப்பானது . இன்னொருவர் தயாரிப்பில் அமைந்த இந்தப் படத்தில் பிரபு, ராதிகா ஜோடியோடு மற்றைய கதாபாத்திரத் தேர்வும் கச்சிதமாக அமைந்த வெற்றிப்படம்.
"Tell me Tell me"
https://youtu.be/gpjBbCZZc14 என்று அருண்மொழி அவர்களுக்கு ஆரம்ப காலத்தில் அமைந்த வித்தியாசமான பாடல் வாலியின் வரிகளில் அமைய, மீதி எலா, பஞ்சு அருணாசலம் அவர்கள் வரிகள் பூண்ட பாடல்கள்.
ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியிலாவது அடிக்கடி கேட்டு ரசிக்கும் பாடல்களில் இதுவுமொன்று "மணமகளே வா" படத்தின் முத்திரைப் பாட்டு.
தெலுங்கில் வெளிவந்த "கலிகாலம்" படத்தில் சந்திரமோகன், ஜெயசுதா நடித்தது. இயக்குநர் விசுவின் படங்களுக்குண்டான நடுத்தரக் குடும்பத்து அல்லாட்டம் தான் கதைக்கரு. இந்தப் படம் தெலுங்கில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஏன் இந்தக் கதையின் உரிமத்தை வாங்கித் தானே தயாரித்து, பாடல்கள், வசனம், இயக்கத்தையும் கையாளும் துணிவைப் பஞ்சு அருணாசலம் அவர்களுக்கு வந்திருக்காதே. அந்தக் காலகட்டத்தில் நீதிக்குத் தண்டனை, தென்றல் சுடும் போன்ற படங்களில் ஜோடி கட்டிய ராதிகா, நிழல்கள் ரவி ஜோடி போட்டனர். இசைஞானி இளையராஜா இசையில் அவருடன், மனோ, ஸ்வர்ணலதா பாடல்களைப் பாடியிருந்தனர். அன்றைய காலகட்டத்தில் வெளிவந்த பாடல்களோடு ஒப்பிடுகையில் வெளியில் தெரியாத அளவுக்கு இந்தப் படப் பாடல்கள் அமுங்கிப் போயின.
"மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு" இந்தப் பாடல் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் பட்டி தொட்டியெல்லாம் முழங்க, "ஏறுமயில் ஏறி விளையாடு முகம் ஒன்றே" திருப்புகழை யாரோ இதே மாங்குயிலே பூங்குயிலே சந்தத்தில் பாடியதாக அப்போது மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் சேதி அறிந்து சொன்னது அப்போது பரபரப்பான சினிமாச் சமாச்சாரம். பின்னர் அந்த ஏறு மயில் ஏறி விளையாடு முகம் ஒன்றே முதலடிகளை வைத்துக் கொண்டு சினிமா ஜிகினா வரிகளைச் சூடிய பாட்டு வந்தது "தம்பி பொண்டாட்டி" படத்தில். ஆம் பஞ்சு அருணாசலம் அவர்கள் இயக்கிய இன்னொரு படம் இந்த "தம்பி பொண்டாட்டி". ரகு(மான்), சுகன்யா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்தது.
இந்தப் படத்தின் பாடல்கள் வந்த நேரம் நான் வெறி பிடித்தது போல் இளையராஜா பாடல்கள் புதுசா எது வந்தாலும் ஒலிப்பதிவு செய்வித்துக் கேட்ட காற்சட்டைக் காலம். ஆகவே "ஏறு மயில்"
https://youtu.be/dqWpDeiEXt4 (ஸ்வர்ணலதா, கல்பனா, மின்மினி, பிரசன்னா குழுவினர்) பாடல் மட்டுமன்றி இந்தப் படத்தில் வந்த பாடல்கள் அப்போது இசைஞானி கொடுத்த மற்றைய படங்களின் பாடல்களோடு ஒப்பிடும் போது வெகுஜன அந்தஸ்து அடையாவிட்டாலும் எனக்குப் பிடித்துப் போனவை. குறிப்பாக் உமா ரமணின் "உன் எண்ணம் எங்கே எங்கே"
https://youtu.be/6HNmHC-5JxE அருண்மொழியின் "சொன்னாலும் வெட்கம்" http://shakthi.fm/ta/player/play/s2268d322
இவற்றோடு உமா ரமணனின் தெய்வீகப் பாட்டு "கண்ணன் வந்ததாலே"
https://youtu.be/828KdEatCwo ஆகியவை பிடித்தமானவை. இதுவரை கேட்காவிட்டால் நல்ல ஒலித்தரம் மிகுந்த ஒலி வட்டில் கேட்டுப் பாருங்கள், நுணுக்கமாக ரசித்துக் கேட்க.
"ஐயோ சொக்கா ஒன்றா இரண்டா மொத்தம் பத்துப் பாட்டுகள்" என்று இன்பத்தில் ஏங்க வைத்த பத்துப் பாட்டுப் பொட்டலமாக "புதுப்பாட்டு" படம் வெளிவந்தது. சிறியதும், பெரியதுமாக அந்தப் பாடல்கள் கிராமியத் தெம்மாங்கும், மேற்கத்தேய இசையுமாக அமைந்த அருமையான இசைப் பெட்டகம் இந்தப் படம். பஞ்சு அருணாசலம், வாலி, கங்கை அமரன் பாடல்களை எழுதினார்கள்
மீண்டும் பஞ்சு அருணாசலம் அவர்கள் இயக்க, "மணமகளே வா" படத்துக்கு அடுத்து இவருக்குப் புகழ் கொடுத்த படம் இது.
அந்தக் காலத்துப் பேசும் படம் இதழின் முன்னட்டை, பின்னட்டை, நடுப்பக்கங்கள் நாலு எல்லாவற்றிலும் இந்தப் படத்தின் விளம்பரங்கள் அப்போது வந்தன. மக்கள் நாயகன் ராமராஜன், வைதேகி ஆகியோர் மாட்டு வண்டி மேலேறிப் பயணிக்க, இன்னொரு நாயகி சுமா ரங்கநாத் நவ நாகரிக ஆடை போட்டு மிளிர வித விதமான புகைப்பட விளம்பரங்கள் அவை.
ஐயோ அந்த "நேத்து ஒருத்தரை ஒருத்தரு பாத்தோம்"
https://youtu.be/qRpeXjMxXr0 பாட்டை விட்டு மற்றப் பாடல்களுக்குப் போக மனசு வரவில்லை அப்போது. பின்னர் "எங்க ஊரு காதலைப் பத்தி என்னா நெனக்கிறே" (இளையராஜா & ஆஷா போஸ்லே) பாடலைச் சிரித்துக் கொண்டே கேட்டதும்,
"சொந்தம் வந்தது வந்தது இந்தச் சுகமே மச்சான் தந்தது"
https://youtu.be/Ftn1OmErJ2o சித்ரா பாடிய அந்த பாடலை காதல் காய்ச்சலில் உருகி உருகிக் கேட்டதும் மறக்க முடியுமா என்ன?
"பப்பாபப்பா" என்ற எள்ளலோடு "குத்தாலத்தில் தண்ணி இல்லேன்னா வெறும் பாறை மட்டும் தான் பாட்டுப் படிக்கும்"
https://youtu.be/21hnuqQ0N0k கங்கை அமரன் குரலை மாற்றிக் கொண்டாட்டம் போட்ட பாட்டு, கூடவே எஸ்.பி.சைலஜாவும்.
இதில் டச்சு மொழியில் அமைந்த பாடலும் உண்டு, கதைக்களனில் ஜேர்மனியும் வருவதால். அந்தப் பாடலை எஸ்.ஜானகி பாடியிருக்கிறார்.
"புதுப்பாட்டு" திரைப்படத்தின் அத்தனை பாடல்களையும் கேட்டு ரசிக்க.
http://m.raaga.com/tamil/album/pudhu-paattu-t0000332
கலிகாலம், மற்றும் தம்பி பொண்டாட்டி படங்களில் கிரேசி மோகன் நடித்ததும் குறிப்பிடத்தக்கது. ஒரு காலகட்டத்தின் முக்கியமானதொரு இயக்குனர் சி.ஐ.ராஜேந்திரந்தின் கலை வடிவமைப்பைக் கவனித்திருக்கிறார்.
பஞ்சு அருணாசலம் அவர்கள் இயக்குநராக அவதாரம் எடுத்த இந்த நான்கு திரைப்படங்கள் எந்தச் சூழலில் அவரால் இயக்க வேண்டிய நிலை வந்தது என்ற கேள்வியைக் கேட்க முடியும். ஆனால் அவர் அதற்கான பதிலை விட்டுச் சொன்றிருக்கிறாரா.... தெரியவில்லை.