Pages

Saturday, January 29, 2022

Bro Daddy (மலையாளம்)

Bro Daddy (மலையாளம்) 😍🥰❤️ தொடக்கப் புள்ளியில் இருந்து ஒரு புன்முறுவல், அவ்வப்போது வெடிச்சிரிப்பு என்று ஒரு இதமான அனுபவம் கிடைக்க வேண்டில் இந்தப் படத்துக்காக ஒதுக்குங்கள். ஐஸ்கிரீம் சாப்பிட்டு முடித்த சப்புக் கொட்டலை நாக்குத் தருவது போல Bro Daddy பார்த்து முடித்ததும் இதே நினைப்பில் என்னைப் போல நீங்களும் சுற்றக் கூடும். மகனின் தோளில் கை போட்டுக் கலாய்த்துப் பேசும் நண்பனின் தந்தையைக் கண்டு அதிசயித்திருக்கிறேன். இந்தப் படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது அந்த ரம்மியமான நினைவுகளையும் கிளப்பியது. லூசிபர் படைப்பு எப்படி பிருதிவிராஜ் ஐ ஒரு அற்புதமான படைப்பாளியாக அடையாளப்படுத்தியதோ அதற்கு நேர் மாறான கும்மாளம் கொட்டும் இன்னொரு பிரிவிலும் கூடத் தன்னால் சாதிக்க முடியும் என்று இங்கே நிரூபித்திருக்கிறார். அண்மையில் "சாய் வித் சித்ரா" பேட்டியில் இயக்குநர் ராதாமோகன் பிருதிவிராஜ் தன் ஆரம்ப காலத்திலேயே ஒரு வலுவான சினிமா நுணுக்கங்களைத் தேடிக் கற்கும் கலைஞர் என்று குறிப்பிட்டார். அதையெல்லாம் இப்போது நாம் பார்க்க முடிகிறது.

லட்டு மோகன்லாலுக்கு லட்டு மாதிரி ஒரு பாத்திரம். படத்தின் ஆரம்பப் பாடலை https://youtu.be/P_esgk37U0s இருவரும் பாடித் தொடங்குவதில் இருந்தே எதிர்பார்ப்பைத் தக்க வைத்திருக்கிறார்கள். அடப்பாவிகளா மீனாவை பிருதிவிக்கு அம்மா ஆக்கிட்டீங்களே என்று ஃபேஸ்புக்கைக் கொளுத்தாத குறையாகப் போராடிய 90ஸ் கிட்ஸ் கூட படம் பார்த்ததும் அடங்கி விடுவார்கள். அப்புறம் அந்த கனிகா சர்ரி சர்ரி கல்யாணி பிரியதர்ஷனுக்கு லட்டு மாதிர்ப் படங்கள் வாய்க்கின்றன. இந்தப் படம் போல இன்னும் நூறு கொடுக்கலாம். கல்யாணி பிரியதர்ஷனின் தந்தையாக வரும் லாலு அலெக்ஸ் இற்கு இது வாழ் நாள் பெயர் சொல்லும் பாத்திரம். பிருதிவி ராஜின் பாட்டியாக வரும் அவரின் நிஜ அம்மா மல்லிகா சுகுமாரன் கொஞ்ச நேரமே வந்தாலும் அதகளம். "பவித்ரம்" என்றொரு மலையாளப் படம். இளந்தாரி மகன் மோகன்லால் ஷோபனாவுடன் காதல் வயப்பட்டு கல்யாணம் முடிக்கும் தறுவாயில் ஒரு புறம், இன்னொரு புறம் மூத்த மகன் சீனிவாசன் மணம் முடித்தும் குழந்தைப் பாக்கியம் இல்லாதிருப்பவர். இவர்களின் பெற்றோர் திலகன் & ஸ்ரீவித்யா. தன் மூத்தமகனுக்குக் குழந்தை கிடைக்கவேண்டும் என்று வேண்டுதலோடு இருக்கும் ஸ்ரீவித்யாவுக்கு திலகன் மூலம் மீண்டும் ஒரு குழந்தை. பிறக்கும் போதே தாயைப் பரலோகம் அனுப்பிய பாவம் அந்தக் குழந்தைக்கு. திலகனுக்கோ தன் முதுமைக்கால இச்சையின் விளைவு குழந்தையாக வந்து ஊர் எள்ளலுக்கு ஆட்படும் அவமானம், ஒரு நாள் எல்லோரது கண்காணாத இடத்துக்குப் போய்விடுகிறார். தன் காதலை இழந்து, தந்தையாகவும், சகோதரனாகவும் மாறவேண்டிய அவல வாழ்வில் மோகன்லால். இறுதியில் எல்லாம் இழந்து பைத்தியக்காரன் ஆகிவிடுவார் மோகன்லால் . இந்தப் படத்தில் மோகன்லால் நடித்த போது அவருக்கு வயது 34. ஆனால் மனுஷர் வாழ்ந்து காட்டியிருப்பார். மோகன்லாலின் நடிப்பை உச்சமாகப் போற்றும் ஏராளம் படங்கள் இருந்தாலும் இந்தப் படம் கொடுத்த பாதிப்பு தனி. பவித்ரம் படத்தில் மையப் புள்ளியை இன்னொரு கோணத்தில் ஜாலியாகக் காட்டி, கருக்கொள்ளும் குழந்தையின் தேவையை நச்சென்று ஒரு வரியில் காட்டி விட்டுக் கடக்கும் Bro Daddy ஒரு சுகானுபவம்.
https://youtu.be/zdCLPqEHHew அந்த “மாமா உன் பொண்ணைக் கொடு” அடி வரும் போது அடிப்பொளி 😀😍❤️ கானா பிரபா 29.01.2022

Thursday, January 27, 2022

என்னுயிர்த் தோழியே.... என்னுயிர்த் தோழியே....❤️

இந்தப் பாட்டு நேற்றிலிருந்து என்னைச் சுற்றி வந்து கொண்டே இருக்கிறது. இம்மட்டுக்கும் பாடலை இருந்து கேட்காமலேயே மனசில் இசையெழுப்பிக் கொண்டிருக்கிறது உன்னிமேனனின் அந்த நாசிக் குரலாக.

“நான்கைந்து சூரியன்

ஆறேழு வெண்ணிலா வந்ததென்ன”

என்று பாடும் போது அப்படியே போகிற போக்கில் அந்தக் கோள்கள் எல்லாம் எதுவுமில்லை, தன் காதலியின் முன் என்னுமாற்போலவொரு இயல்பானதொரு அலட்சிய நடையில் மிளிர்வார் உன்னிமேனன்.

உன்னிமேனனின் மீள் வருகை ரஹ்மானின் தொடக்கத்தில் இருந்து பரந்து விரிந்தது. அது போலவே பாடகி சுஜாதாவும் கூட. இருவருமே இளையராஜா வழியாகத் தமிழுக்கு வந்தவர்கள், இருவருமே மீளவும் அடுத்த சுற்றில் தமிழுக்கு வரும் போது ஜோடியாகவே ரஹ்மானின் இசையில் “புது வெள்ளை மழை பொழிந்தார்கள்”.

ரஹ்மான் தாண்டி பல்வேறு இசையமைப்பாளர்களிடமும் இவ்விருவரும் பயணப்பட்டாலும், உன்னிமேனனுக்குத் தோதான ஆள் ரஹ்மான் தான் என்று மீள நிறுவியது “என்னுயிர்த் தோழியே” பாடல் தான். இதற்கு முன்னர் கூட “என்ன விலை அழகே” பாடலில் அந்த அற்புதம் நிகழ்ந்திருக்கும்.

அகண்ட வெளியில் தன்னைச் சுற்றி ஒரு நட்சத்திரக் கூட்டம் போல இசை ஆவர்த்தனங்கள் ஒலியெழுப்ப, தன்பாட்டில் ஒரு “தியானி” போல அமைதியாகப் பாடிகொண்டிருப்பார் உன்னிமேனன். இசைமேடைகளில் கூட இம்மாதிரியானதொரு அசைவியக்கம் தான் கொடுப்பார். கண்கள் மூடிய தியான நிலையில் உதடுகள் பிரித்து அந்த மென் நாசிக்குரல் பீறிடும் போது கேட்கும் நாங்கள் கண்ணை மூடிக் கொண்டு அந்தப் பரவச நிலைக்குப் போய் விடுவோம்.

அப்பேர்ப்பட்ட பாடல்களில் ஒன்று தான் இந்த “என்னுயிர்த் தோழியே” கூட.

“இனியவளே.......

அமைதி புரட்சி ஒன்று நடந்ததே

உன் விழிகள் இங்கே 

புதிய உலகம்

ஒன்றைத் திறந்ததே 

ஓ.....”

எனும் கட்டத்தில் அந்த அனுபவத்தை மனவெளியில் நுகரலாம்.

“கண்களால் கைது செய்” படத்தின் நாயகனின் மனவோட்டத்துக்குத் தோதான குரலும், பாடலும் இது.

பா.விஜய் அழகாக வரிகளைப் பொருத்தியிருப்பார். இந்தப் படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றுமே வெவேறு பாடலாசிரியர்களால் மின்னியவை.

“ஒற்றை ஜடையில் உனை கட்டி

எடுத்து வந்து வைப்பேன்

எனது கள்ள சிரிப்பழகில்

காயம் செய்து பார்ப்பேன்.....

தீ பிடித்த தங்க மீனை

பார்த்ததுண்டா

என்னை நீயும் தான்

பார்த்து கொள்வாய்”

உன்னிமேனனின் குரலுக்கு முற்றிலும் மாறுபட்டவொரு திசையில் ஒரு மிதர்ப்பான வெளிப்பாடாய் சின்மயி.

ஆனால் அதற்கெல்லாம் அசராமல் “என்னுயிர்த் தோழியே என்னுயிர்த்தோழியே” என்று மீண்டும் அந்தத் தியானியாகிவிடுவார்.

மூச்சு முட்ட

கவிதைகள் குடித்துவிட்டு

எந்தன் செவியில் சிந்துகிறாய்

என்று பாடலில் வருமாற்போல, மூச்சு முட்ட இசையைக் குடித்து விட்டு எம் நெஞ்சில் கொப்பளிப்பது போலிருக்கும் இந்தப் பாட்டைக் கேட்கையில்.

என்னுயிர் தோழியே

நான்கைந்து சூரியன்

ஆறேழு வெண்ணிலா வந்ததென்ன

என் வானம் புதுமையாய்

ஆனதென்ன

https://www.youtube.com/watch?v=mEe0IQm-cyM

கானா பிரபா

27.01.2022

Wednesday, January 19, 2022

வள்ளி வரப் போறா….. வெள்ளிமணித் தேரா.......❤️


“வள்ளி வரப் போறா…..

வெள்ளிமணித் தேரா.......”

என்னவொரு கொண்டாட்டத்தின் உச்ச இசை என்று இந்தப் பாடல் வந்த நாள் தொட்டுக் கொண்டாடிக்கின்றேன். இன்றோ எல்லாவற்றையும் ஓரம் வைத்து விட்டு இதை மட்டும் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். வாங்கி வைத்திருந்த பிரமிட் இசைவட்டு இன்று தான் பிரிக்கப்பட்டு வெள்ளோட்டம் காணுகின்றது.

அவன் காதல் கோட்டையில் பால்யத்தில் இருந்தே குடியிருப்பவள் கிராமத்துக்குத் திரும்பி வரப் போகும் செய்தியைக் கொட்டமடித்துச் சொல்லுகிறார்கள் அவனின் கூட்டாளிமார்.  

ஆனால் அதற்குள் எத்தனை பீடிகை பாருங்கள்

“சந்தனம் ஜவ்வாது பன்னீரை நீ 

எடுத்துச் சேர்த்துக்கோ”

அத்தனையையும் கட்டளை பிறப்பித்து, குழம்பி நிற்கும் அவனுக்கு

வாயில் சக்கரையை அள்ளிப் போடுமாற் போலச் சொல்லி மகிழ்கிறார்கள்.

“அது ஏன் தான் தெரியுமா?

“அது” என்னும் போது ஒரு வினவல் கொடுத்து விட்டு

அப்படியே

நான் சொன்னா புரியுமா...

என்று எஸ்பிபி அடியெடுக்க, கூட்டமே கூவுகிறது

“வள்ளி வரப் போறா…..

வெள்ளிமணித் தேரா.......”

ஒரு கிராமியத் தெம்மாங்குத் துள்ளலில்  நனவிடை தோய்தலாக அந்த நண்பனின் காதல் இன்று நேற்றல்ல, அரை ட்ராயர் போட்ட காலம் தொட்டு என்று அப்படியே அங்கே கொண்டு போய் விட்டு மீட்டும் நிகழ் யுகத்துக்கு வந்து கொண்டாடுவார்கள்.

“பசும்பொன்னு என முறைப்பொண்ணு வர நீ 

முன்னால 

          போய் வரவேற்க”

பாடும் போது அந்த “முன்னால” என்ற சொல்லை உயிரூட்டி அப்படியே நடந்து போகும் வள்ளியின் முன்னால் எட்டி வரவேற்பது போல உயிரூட்டியிருப்பார் நம் பாட்டுத்தலைவன் எஸ்பிபி அவர்கள்.

“தேவதை போலொரு 

பெண்ணிங்கு வந்தது நம்பி”

என்று கவிஞர் வாலி அவர்களிடம் இரண்டு வருடங்களுக்கு முன்னர் தான் (கோபுரவாசலிலே - 1991) ஒரு நவ நாகரிக நண்பர் கோஷ்டியோடு  பாட்டெழுத வைத்தவர், கிட்டத்தட்ட அதே பரிமாணத்தில் (வள்ளி – 1993) இங்கே கிராமத்துப் பக்கம் கொண்டு வந்து நிறுத்தி விட்டார் ராஜா. அந்தக் கொட்ட இசையோடு அப்படியே நினைவுகளின் மிதப்பிற்குப் போகும் மெல்லிசை மீண்டும் கொட்டத்தோடு பாட்டு என்று பாயும், ஆனால் ஏந்தவித நெருடலும் இல்லாது இயல்பான ஓட்டமாக நம் மனதில் நிறுத்துவார் இசைஞானி.

அங்கே மலேசியா வாசுதேவன், சுரேந்தர், தீபன் சக்ரவர்த்தி, மனோ என்று பகட்டான நண்பர் பட்டாளம். இங்கே இரண்டே இரண்டு பேர்

ஒருவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், இன்னொருவர் எஸ்.எஸ்.சுரேந்தர் மீதிப் பேரெல்லாம் அயலில் இருக்கும் மக்களின் குரலாகக் கோரஸ் கூட்டணி. அடிப்படையில் எஸ்பிபியின் குரலும், சுரேந்தரின் குரலும் இரு வேறு தன்மை கொண்டவை. ஆனால் எவ்வளவு அற்புதமான நண்பர் கூட்டாக மிளிர்கிறார்கள் பாருங்கள்.

ஒரு பாடலில் ஒரே சொல்லை விதவிதமாகப் பாடும் வித்தைக்காரர் எஸ்பிபி. இங்கே அந்த முத்திரையை விடாது கொடுத்துக் கொண்டே போவார்.

“எதுக்குத் தெரியுமா?

நான் சொன்னா புரியுமா

ஹெஹ்ஹெஹ்ஹேஏஏ...”

அங்கே ஒரு நையாண்டித் துள்ளல், இன்னொரு தடவை அதுவே 

“எதுக்குத் தெரியுமா ஹா (ஒரு நக்கல் சிரிப்பு)

நாஞ் சொன்னா புரியுமா

ஹஹ்ஹா ஹா.....”

அத்தோடு விட்டாரா மனுஷர்?

அடி சக்க

அது ஏன்தான் தெரியுமா?

என்று துள்ளுவாரே அப்படியே அரைக்காற்சட்டையில் பாதி லுங்கி வடிவேலு ஆகிடுவார்.

எழுபதுகளில் சுருளிராஜனாகவே ஆகாவித்து அப்படியே ஒப்புவித்தவர், நாகேஷ், தேங்காய் சீனிவாசன், ஜனகராஜ் என்று முன்னணி நகைச்சுவைக் குணச்சித்திரங்களின் குரலாகவும் இருந்தவர், அடுத்த தலைமுறையை ஆட்சி செய்யப் போகும் கலைஞனையும் மட்டும் விட்டு வைப்பானேன் என்று வடிவேலுவுக்கும் ஒரு வரவேற்பு வாழ்த்துப் பாடி விட்டுச் சென்று விட்டாரா நம் எஸ்பிபி?

இம்மட்டுக்கும் வள்ளி படத்தில் குணச்சித்திர நாயகன் ரஜினிக்கே மனோ என்று ஆன கணக்கில், பளிச்சென்று வடிவேலுவின் ஆரம்ப அடையாளத்தில் ஒரு மணிக்கிரீடம் சூட்டியிருக்கும் எஸ்பிபி கொடுத்த பாட்டு.

எதுக்கு தெரியுமா 

நான் சொன்னா புரியுமா.....?

வள்ளி வர போறா துள்ளி வர போறா ஹே

வள்ளி வர போறா வெள்ளிமணி தேரா

https://www.youtube.com/watch?v=eZv_u_8xZSw

கானா பிரபா 

19.01.2022


Sunday, January 16, 2022

பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம் ❤️

முந்திய தினம் பல்கலைக்கழக வகுப்பு முடிந்த கையோடு ஓடிப்போய் இரவு எட்டு மணிக்கு எரிபொருள் நிரப்பு நிலையத்துக்குப் போய் வேலை செய்து விட்டு, அடுத்த நாள் காலை எட்டு மணிக்கு வேலை முடித்து முன்னால் இருக்கும் பஸ் ஸ்டாண்டில் பஸ்ஸுக்குக் காத்திருந்து பஸ் பிடித்து மெல்பர்ன் நகரத்துக்குப் போய், அங்கிருந்து ட்ராம் வண்டியில் ஏறி 45 நிமிடப் பயணத்தில் வீட்டுக்குப் போய் குளித்து முடித்து விட்டுக் கிடைத்த பாண் துண்டைக் கடிக்கும் போது, அன்றுதான் அண்ணன் ஒருவரது திருமணம் என்று நினைப்பூட்டவே உடனே அந்தத் திருமண நிகழ்வில் கலந்து கொள்ள இருக்கும் இன்னொரு நண்பருக்குத் தொலைபேசி விட்டு அவர் வரும் வரை தூங்காமல் காத்திருந்து, அந்த அருங்காட்சியக வாசனை வீசும் அந்தப் பழைய காருக்குள் ஏறி உட்கார்ந்தால், முறுவலித்து விட்டு ஒரு டேப்பைப் போடுகிறார்,

கிண்ண்ண்ண் என்ற மணியாரத்தோடு  புல்லாங்குழல் ஓசை ஏதோ ஊதுபத்தி கொளுத்தியது போலவொரு சுகந்தம் பரவ அப்படியே அந்தக் கார் மாயமாகிறது, கண் மூடிக் கேட்கிறேன். நான் இருக்கும் இடம் தொலைந்து ஏதோ அந்தரத்தில் பறந்து பறந்து அதிசயங்களில் குதித்துக் குதித்துப் பயணித்து அடுத்து, அடுத்து என்று போய்க் கொண்டே இருக்கிறேன்.

இப்படித்தான் 

“பூவுக்குள் ஒளிந்திருக்கும் 

கனிக்கூட்டம் அதிசயம்”

பாட்டை முதல் கேட்ட அனுபவம் இன்னும் என் மனதில் ஆணியடித்தது போல இருக்கின்றது. 

இன்று காலை வழக்கத்துக்கு மாறான வெள்ளாப்பில் நித்திரை கலைந்து வெளியே போன போது சனம் சந்தடியில்லாத அந்த ஏகாந்தம் என் பழைய வரலாற்றை ஏனோ கிளறிப் பார்த்தது.

வீட்டுக்கு வந்து குளித்து முடித்து விட்டு இந்தப் பாட்டில் தான் இப்போது உட்கார்ந்திருக்கிறேன். 

அதே “கிண்ண்ணாரம்” வரும் போது மெல்ல மெல்ல இலேசாகிறது உடம்பு. காற்றில் கரைவது போல இந்த இசைஜாலம் அப்படியே கரைத்து விடுகிறது.

“பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்”

அந்த ஏழு அதிசயங்களைக் காட்சிப்படுத்த முன்பே ரஹ்மானின் இசை வழி காட்சிப்படுத்தி விட்டது. அதற்குப் பிறகு ஷங்கர் கூட்டணி கொடுத்ததெல்லாம் போனஸ் எனலாம்.

இந்தப் பாட்டை இதை விடப் பகட்டாக இசை கொடுக்கக் கொடுக்கக்கூட வல்லமை ரஹ்மானுக்கு இருந்தாலும், 

தட் தட் தட் ரிதத்தோடு அவ்வப்போது அந்தந்தக் கலாசார வாசத்தை நினைப்பூட்டும் இசைஜாலம் என்ற பகிட்டில்லாத பிரமாண்டம் தான் பாடலைத் தூக்கி நிறுத்தியிருக்கிறது. அதுவும் அந்த கோரஸ் குரல்களும், இசை ஆவர்த்தனமும் ஒத்த அலைவரிசையில் பயணிக்கும் போது உலகைச் சுற்றும் ஒரு இன்ப யாத்திரை.

பிரசாந்த் மேல் எப்போதும் எனக்கு ஒரு மென்பார்வை உண்டு. இந்தப் பாடலில் ஐஸ்வர்யா ராய் என்ற பேரழகியோடு போட்டி போடும் அழகு, உயர வேற்றுமையும், உருவ ஒற்றுமையும் கூடக் கச்சிதமாகப் பொருந்த அந்த நளினமான நடன அசைவுகளில் இருவருக்குமே 50:50 கொடுக்கலாம். என்னதான் பாடலைக் கேட்டுக் கற்பனையில் ஒரு அதிசயப் பயணத்தை நடத்தி முடித்து விட்டாலும், காட்சி சிதைந்தால் எல்லாம் போச்சு. ஆனால் இங்கே எல்லாமே கச்சிதம். ஐஸ்வர்யா ராய் என்ற அழகுப் பதுமையும், பிரசாந்தும் அசையும் அதியசயத்தைக் கண்வெட்டாமல் காதல் நிறையப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். 

வைரமுத்து வரிகளில் அதிசயத்தை அப்படியே தன் காதலியோடு ஒப்பு நோக்கித் தன்னவளை உயர்த்தும் வார்த்தை ஜாலம் கட்டிப்போடும்.

ஜீன்ஸ் படம் வரப் போகும் சூழலில் ஒரு வேடிக்கை நடந்ததும் இப்போது நினைப்பு வருகிறது. அப்போது ஆனந்த விகடனில் வாராவாரம் விஐபிகளை ஏதாவது ஒரு குறும்பு (prank) வேலைகளில் மாட்டி விடுவார்கள். பிறகு அதைக் கவர் ஸ்டோரியாகக் கொடுப்பார்கள். அப்படித்தான்  

“ஜீன்ஸ்” ப்ரிவியூ காட்சி இருக்கிறது என்று விவேக் உள்ளிட்ட பிரபல நடிகர்கள், ஜேம்ஸ் வசந்தன் போன்ற அன்றைய டிவி பிரபலங்களை அழைத்துப் போய் தியேட்டரில், அவர்களின் கடுப்பைச் சம்பாதித்தது விகடனார் போட்டுக் காட்டிய “ஜீன்ஸ்” என்ற ஆடை எப்படி ஒருவாகிறது என்ற படம்.

அந்த நேரத்தில் வந்த ஆகப்பெரிய ரஹ்மான் பாட்டு (6.48 நிமிடங்கள்) உன்னிகிருஷ்ணன் உச்சரிப்பில் நெருடல் இருந்தாலும் அந்த ஐஸ் குரல் சுஜாதாவோடு கரையும் அதிசயம்.

ஆஸ்காருக்கு முன்பே ரஹ்மான் ஆஸ்கார் போன்ற அங்கீகாரங்களைக் கொடுத்து விட்டார் என்பேன். அப்படி வந்ததில் இதுவும் ஒன்று.

துளைசெல்லும் காற்று 

மெல்லிசையாதல் அதிசயம்

அதிசயமே அசந்து போகும் 

நீ எந்தன் அதிசயம்....

https://www.youtube.com/watch?v=FWvZdFOv95Y

கானா பிரபா

16.01.2022


Saturday, January 15, 2022

இசையமைப்பாளர் தீனா பிறந்தநாள்


சரவண சமையல்

இது சர்வ யோகினி

அறுசுவை தருவாள்

அவள் அன்னபூரணி

https://www.youtube.com/watch?v=1KMEl_tmviI

கேட்டவுடன் ஒரு ஆன்மிக நிலைக்கு அழைத்துச் சென்ற அற்புதமான பாடலையும் தன்னால் கொடுக்க முடியும் என்று நிரூபித்த இசையமைப்பாளர் தீனா அவர்களுக்கு இன்று பிறந்த தினம்.

அந்த "சரவண சமையல்" தீனாவின் 50 வது படமான சீடன் படத்தில் இடம்பிடித்திருந்தது.

"கண்ணின் மணி கண்ணின் மணி கதை கேளம்மா"

https://www.youtube.com/watch?v=pE5kXX4-oDo

தீனாவின் சின்னத்திரை விலாசம் சொன்ன "சித்தி" என்ற பிரமாண்டப் படைப்பின் இனிய பாடலை இன்று வரை திரையிசைப் பாடல்களுக்கு நிகராகக் கொண்டாடுகிறார்கள்.

அப்படியே “மெட்டி மெட்டி மெட்டி ஒலிதான்” https://www.youtube.com/watch?v=f_qlm5dedNM

கூட வரும் இல்லையா?

“கிங்”, “திருடா திருடி” என்று பட்டியலில் ஏறும் ஹிட் பாடல்களோடு

“பேருந்தில் நீ எனக்கு

ஜன்னல் ஓரம் பின் வாசல்

முற்றத்திலே துளசி மாடம்

விடுமுறை நாட்களில்

பள்ளிக்கூடம் விளையாட்டு

பிள்ளைகளின் செல்ல கோபம்”

https://www.youtube.com/watch?v=r__ZUS1UiRM

யுகபாரதியின் வரிகளை உயிர்ப்பித்த மெல்லிசையிலும் நிறைந்திருக்கிறார் தீனா.

அவ்விதம் அமைந்த சில முத்தான பாடல் தொகுப்பு

https://www.youtube.com/watch?v=KhwhsNHut28

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் இசையமைப்பாளர் தீனா அவர்களுக்கு.

கானா பிரபா

15.01.2022

Sunday, January 9, 2022

“SPB பாடகன் சங்கதி” நூல் அறிமுகம் ஆசிரியர் : கானா பிரபா


“SPB பாடகன் சங்கதி” என்ற நூல் தமிழ்த்திரையிசையில் கோலோச்சிய மாபெரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் திரையிசைப் பயணத்தின் வரலாற்றை ஒரு ரசிகனின் பார்வையில் கண்டு பயணிக்கும் நூலாக வெளிவந்துள்ளது.
இந்த நூலில் 52 கட்டுரைகள் தாங்கி, 448 பக்கங்களோடு பல்வேறு இசையமைப்பாளர்கள், திரைத்துறைப் பிதாமகர்களோடு எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களது பயணம், இவற்றோடு SPB பாடிய அரிய பல பாடல் தொகுப்புகள், தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என்று பிராந்திய மொழிகளிலும் அவர் எவ்விதம் கொண்டாடப்பட்டு நேசிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார் போன்ற விடயங்கள் சம்பவ உதாரணங்களோடு பதியப்பட்டு வெளிக் கொணரப்பட்டிருக்கின்றது.
இந்தியாவில் “அகநாழிகை” மற்றும் இதர நாடுகளில் “மடத்துவாசல்” பதிப்பங்கள் வழியாக இந்த நூல் வெளியிடப்பட்டிருக்கின்றது.


இந்த நூலின் முதற்பிரதியை எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களது வாழ்நாள் சகா கங்கை அமரன் (இசையமைப்பாளர், பாடகர் மற்றும் இயக்குநர்) அவர்கள் பெற்றுக் கொண்ட சம்பிரதாயபூர்வ நிகழ்வு கடந்த ஜனவரி 8 ஆம் திகதி திரு.கங்கை அமரன் அவர்களது இல்லத்தில் “அகநாழிகை” பதிப்பாசிரியர் திரு. பொன்.வாசுதேவன் அவர்களுடன், திரைப் படைப்பாளி அஜயன் பாலா அவர்கள் வெளியிட்டு வைக்க இனிதே நிகழ்ந்தது.
தற்போது நிகழும் அசாதாரண நிகழ்வுகளால் நூல் வெளியீடு தள்ளிப் போடப்பட்டாலும், எதிர்வரும் காலத்தில் இந்த நூலின் வாசிப்பு அனுபவ நிகழ்வை நடத்தத் தீர்மானித்திருக்கின்றார்கள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த நூல் குறித்து முன்னுரை எழுதிய எழுத்தாளர் என்.சொக்கன் பகிர்விலிருந்து
கானா பிரபாவின் இசை சார்ந்த பதிவுகளைப் படித்துதான் நான் அவருடைய ரசிகனானேன், ஒவ்வொரு பாடலையும் இசைத்துணுக்கையும் அவர் ரசிக்கிற விதம் என்னை மயக்கியது. பின்னர் அவருடைய சுற்றுலா, வாழ்வியல் கட்டுரைகளையும் படித்து மகிழ்ந்தேன். இவை அனைத்திலும் என்னை மிக ஈர்த்த விஷயங்கள், ஒரே நேரத்தில் ஆழமாகவும் அகலமாகவும் செல்கிற அவருடைய கவனிப்பு, மயக்கும் மொழி, ஈக்கும் தீங்கு செய்யாத அன்பு.
இவை அனைத்தும், இந்தப் புத்தகத்தில் நிறைந்திருக்கின்றன, அவருடைய ஒவ்வோர் எழுத்திலும்தான்!
பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு இணையத்திலும் அதற்கு வெளியிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள், இவர்கள் எல்லாரும் அவர்மீது மிகுந்த அன்பு கொண்டவர்கள், அவருடைய குரலில் ஒரு சிறு இசைத்துணுக்கைக் கேட்டாலும் நிமிர்ந்து கைதட்டுகிறவர்கள். ஆனால், அப்படிப்பட்ட புகழ் பெற்ற, பரவலாகக் கேட்கப்பட்ட கலைஞருடைய இசைப் பயணத்திலும் நாம் அறியாத அல்லது கவனித்திருக்காத குறிப்புகளை, பார்வைகளைக் கானா பிரபா திரட்டித் தருகிறார், வெவ்வேறு இசையமைப்பாளர்களுடன், நடிகர்களுடன், மொழிகளுடன் SPB அமைத்த கூட்டணியைத் தனித்தனியாக எடுத்து ருசிக்கத் தருகிறார். ஆங்காங்கே பொருத்தமான வரலாற்று நிகழ்வுகள், ரசிக்கக்கூடிய வரிகள் என்று எந்தவிதத்திலும் சலிப்பூட்டாத இனிய பயணம் இது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அணிந்துரை வழங்கிய திரைப்பட ஆய்வாளர் திரு. தம்பிஐயா தேவதாஸ் அவர்களது பகிர்விலிருந்து
திரையிசைப் பாடல்களை ஒலிபரப்பும் சாதனங்களில் வானொலி முக்கிய மானதாகும்.
இலங்கை வானொலியில் திரைக்கு வராத படப்பாடல்களையும் ஒலிபரப்புவார்கள். இலங்கை வானொலியில் இதற்கென "மலர்ந்தும் மலராதவை” என்ற நிகழ்ச்சியையேவைத்திருக்கிறார்கள்.
இந்த அனுபவங்களை நூலாசிரியர் சிறுவயதிலேயே பெற்றிருப்பார்
அவ்வாறான பாடல்களையும் இந்நூலில் சேர்த்திருக்கிறார்.
எஸ்.பி.பியின் வாழ்க்கை வரலாறு இங்கு எழுதப்படவில்லை ஆனால் அவர் பயணம் செய்த பாதை பற்றி எழுதப்பட்டிருக்கிறது.எஸ்பிபியின் இசைப்பாதையில் எம்எஸ்வியும், இளையராஜாவும்ஆக்கிரமித்திருப்பார்கள். ஆனால் இந்நூலில் எஸ்பிபியுடன் கடமையாற்றிய புகழ் வெளிச்சம் பெறாத திறமை வாய்ந்த இசையமைப்பாளர்கள் பற்றியும் குறிப்பிட்டிருப்பது விசேட அம்சமாகும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அணிந்துரை வழங்கிய திரைக் கலைஞர் திரு. சித்ரா லட்சுமணன் அவர்களது பகிர்விலிருந்து
தமிழ்நாட்டிலிருந்து தொலைதூரத்தில் இருந்தாலும் தமிழ்த் திரை இசைக்கு மிகவும் பக்கத்தில் இருப்பவர் என் இனிய நண்பரான கானா பிரபா.
தமிழிலே வெளியான எல்லா திரைப் பாடல்களைப் பற்றியும் முழுமையான தகவல்களை தன்னுடைய மனதிலே இவரால் பதிந்து வைத்திருக்க முடிகிறது என்றால் அதற்கு அடிநாதமாக இருப்பது தமிழ்த் திரைப்பாடல்கள் மீது இவருக்குள்ள அளவில்லாத காதல்தான்.
இசையின் காதலனான கானா பிரபாவிற்கு எஸ்.பி.பால சுப்ரமணியத்தின் மீது இருக்கும் காதலின் பிரதிபலிப்புதான் இந்த “பாடகன் சங்கதி” என்ற நூல்.
எஸ்,பி.பாலசுப்ரமணியத்தோடு அன்றாடம் பழகியவர்கள் கூட இப்படி ஒரு நூலை எழுதியிருக்க முடியாது என்று கூறத்தக்க அளவில் பல புதுப்புது தகவல்கள் இந்த நூலிலே இருக்கின்றன.
எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்ற அந்த மகா கலைஞனுக்கு காலத்தைக் கடந்து நினைவிலே நிற்கக் கூடிய அருமையான பதிவுகள் மூலம் அஞ்சலி செலுத்தியுள்ள கானா பிரபாவிற்கு வாழ்த்துகள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
கானா பிரபா எழுதிய “SPB பாடகன் சங்கதி” வெளிவந்து ஒருவார காலத்திலேயே முதற்பதிப்பின் பதிவு செய்யப்பட்ட பிரதிகள் விற்பனை செய்யப்பட்டு அடுத்த பதிப்புக்காகத் தயாராகிக் கொண்டிருக்கின்றது இந்த நூல்.

Saturday, January 8, 2022

ஹாரிஸ் ஜெயராஜ்


வெண்பனியே.....
முன்பனியே.....
என் தோளில் சாய்ந்திட வா....


அப்படியே உருகி விழும் பனித்துகளாக இருக்கும் ஹாரிஸ் ஜெயராஜின் இசைப் பிரவாகம்.
ஒவ்வொரு இசையமைப்பாளருக்கும் தனித்த இலக்கணம் வகுக்கும் போது ஹாரிஸ் ஜெயராஜ் என்றால் முன்னே வந்து நிற்பது இவரின் மெல்லிசை தழுவிய தனித்துவமும், இசைக் கருவிகளை உள் வாங்கிய ஒலிப்பதிவு ஒரு மிருதுவான பட்டு விரிப்பைத் தடவும் உணர்வும் எழும்.
என்னதான் ஆர்ப்பரிப்பான, துள்ளிசைப் பாடல் என்றாலும் அதில் இரைச்சல் இல்லாத, கரடு முரடு இல்லாத ஒரு பனிச்சறுக்குப் பளிங்குத் தன்மை இவரின் தனித்துவம்.

ஒரு குறிப்பிட்ட மெட்டு வட்டத்துக்குள் சுற்றிக் கொண்டிருக்கிறார் என்ற விமர்சனம் இருந்தாலும் ஒவ்வொரு படத்தின் இசை வெளியீட்டிலும் ஆர்வத்தோடு தேடிக் கேட்க வைக்கும் திறனை இன்னமும் வைத்திருக்கிறார். அந்த மாதிரியான விமர்சனங்களை முறியடித்துத் தனித்துவமாக அவர் கொடுத்தவையும் ஏராளமுண்டு,


யம்மா யம்மா காதல் பொன்னம்மா
நீ என்ன விட்டு போனதென்னம்மா


கேட்கும் போது மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்கும் உணர்ச்சியலையைக் கொடுப்பார். அங்கே அதீத ஆர்ப்பரிப்பு இல்லாது எஸ்பிபியைப் பாட வைத்து அழகு பார்த்திருப்பார்.

“ஒருமுறை உன்னைக் காணும் பொழுது
இரு விழிகளில் ரோஜாக் கனவு

வானத்தை கட்டி வைக்க வழிகள் உண்டு
ஞானத்தை கட்டி வைக்க வழிகள் இல்லை”


அப்படியே வளைவு நெளிவுகளோடு குதிக்கும் அந்தப் பாட்டைக் கேட்கும் போதே சபாஷ் போடும் மனசு. ஹாரிஸ் ஜெயராஜை ஒரு மிகச் சிறந்த ஒலிச்சேர்க்கையாளர் என்ற எல்லை கடந்து அவர் அற்புதமான இசையமைப்பாளர் என்று நிறுவிய மெட்டுக்கட்டல் திறனை நிரூபிக்கும் அது.


“ஜன்னலின் வழி வந்து விழுந்தது
மின்னலின் ஒளி அதில் தெரிந்தது
அழகு தேவதை அதிசய முகமே,

வெண்மதி வெண்மதியே நில்லு……”


ஊரெல்லாம் “வசீகரா”வில் மையல் கொண்ட போது நானோ கட்டுண்டு கிடந்தது இதில். உச்சரிப்பு பேதம் இருந்தாலும் ஆட்கொண்டது ஹாரிஸின் மகுடி இசையில் மயங்கிய காலம் அது.


அனேகன் படத்தை முதன்முறை பார்த்த போது அதில் முகப்புப் பாடலாக வந்த

"தெய்வங்கள் இங்கே
திரவியம் இங்கே
மழலை பேசும் மழை இங்கே"


பாடலின் எளிமையே இப்போது வரைக்கும் மனசில் நிறைந்திருக்கிறது. அனேகன் பாடல்கள் ஒவ்வொன்றுமே ஒவ்வொரு தினுசாக இருக்கும் இசைக் கோவை.


தனிப்பட்ட ரீதியில் எனக்கு இன்றைய கால இசையமைப்பாளர்களில் காதல் ரசம் கொண்ட பாடல்களைக் கொடுப்பதில் ஹாரிஸ் ஜெயராஜ் தந்தவைகளை மிகவும் பிடிக்கும்.

அப்படியொரு தொகுப்பு கடந்த ஆண்டு கொடுத்தது.


சிலரைப் பார்த்தாலேயே இவர் என்றென்றும் நல்லா இருக்க வேண்டும் என்று மனசார நினைக்கத் தோன்றும் அப்படியொரு
முக இலட்சணம் பொருந்தியவர்.

https://www.youtube.com/watch?v=CyahRkPPoWY

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் 🎹💚

கானா பிரபா
08.01.2022


Friday, January 7, 2022

நினைவில் வாழும் பாடலாசிரியர் காமகோடியன்

பூஞ்சிட்டுக் குருவிகளா 

புதுமெட்டுத் தருவீகளா 

பாடத்தான் போறேன் பாட்டு

பலபேரு கதைய கேட்டு

அம்மாடி ஆத்தாடி 

பொல்லாத ஒலகமடா

https://youtu.be/po6s62vUzxk

சந்திரபோஸ் அவர்களே பாடி இசையமைத்த “பூஞ்சிட்டு குருவிகளா” (ஒரு தொட்டில் சபதம்) போன்று எண்ணற்ற இசையமைப்பாளர்கள், ஐம்பது ஆண்டுகளைக் கடந்த பாட்டிசைப் பயணம் என்று தன் இறுதி மூச்சு வரை இசையாக வாழ்ந்த பெருந்தகை காமகோடியன்.

பெண் வேணும் 

ஒரு பெண் வேணும் 

பசும் பொன்னு நெறத்துல 

பெண் வேணும்

சொல்லவா....சுகம் அல்லவா

https://youtu.be/oG7RULDjTwY

தொண்ணூறுகளில் இலங்கையின் பண்பலை வானொலிகள் தோற்றம் பெற்ற போது அள்ளிச் சுமந்த பாடலது, இன்னும் இறக்காமல் வைத்திருக்கிறார்கள் அவ்வளவுக்குப் புகழ் பூத்தது அங்கே. ஆனால் இந்தப் பாடல் வரிகளுக்குச் சொந்தக்காரர் காமகோடியான் அவர்களை இசை ரசிகர் உலகம் அவ்வளவாக அறிந்து வைத்திருக்கவில்லை. 

அதில் உச்சபட்சக் கொடுமை என்னவென்றால் விக்கிப்பீடியாவில் பகிர்ந்த 

“2015 ஆம் ஆண்டு திருட்டு ரயில் திரைப்படத்தில் ஒரு பாடல் ௭ழுதுவதற்காக அழைக்கப்பட்டார். இத்திரைப்படத்தில் அந்த பாடல் நன்றாக அமைந்ததால் அனைத்து பாடல்களையும் ௭ழுதும் வாய்ப்பை பெற்றார்.”

என்ற தவறான கருத்தைப் பத்திரிகைகள் ஈறாகப் பகிருந்திருக்கிறார்கள். ஆனால் அதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பே அவர் முழுப்பாடல்களும் கொடுத்த பிரபலம்.

இவ்விதம் தேனிசைத் தென்றல் தேவா யுகத்திலும், ஏன்

“என் அன்பே என் அன்பே

என் கண்ணுக்குள் கவிதாஞ்சலி

என் அன்பே என் அன்பே

என் நெஞ்சுக்குள் காதல் வலி....”

https://youtu.be/EeU9bJ3FwEA

என்று “மெளனம் பேசியதே” வழியாக யுவன் ஷங்கர் ராஜா யுகத்திலும் எழுதவல்ல ஆற்றல் மிக்கோன் காமகோடியன் அவர்கள்.

“என் உடல் இங்கு

கடல் ஆனதே” என்பார் 

அப்படியே நீட்டி

“விழி பட்ட இடம் இன்று உளி பட்ட சிலையாக

இதுதானோ காதல் என்று அறிந்தேனடி”

என்றும் அந்தப் பாடலில் காமகோடியன் அவர்களின் வார்த்தை ஜாலம் இளமைத் துடிப்போடு அலைபாயும்.

அப்படியே எண்பதுகளுக்கு அழைத்துப் போனால் இசைஞானி இளையராஜாவின் “நினைக்கத் தெரிந்த மனமே” படத்தின் அனைத்துப் பாடல்களுமே இவரின் கை வண்ணம் தான்.

“நினைக்கத் தெரிந்த மனமே” படத்தில் “எங்கெங்கு நீ சென்ற போதும்” என்று உருகித் தள்ளியவர் “கண்ணுக்கும் கண்ணுக்கும் மோதல்” என்று துள்ளிசையிலும் தன் வார்த்தைக் குதிரையைத் தட்டி விட்டார். 

இந்தப் படத்தின் ஒவ்வொரு பாடல்களுமே முத்து முத்தாய் அமைந்ததை முன்னர் சிலாகித்திருந்தேன்.

http://www.radiospathy.com/2021/10/blog-post.html

இசைஞானி இளையராஜாவுக்கு ஆத்மார்த்தமான மூத்தோர்கள் கவிஞர் கண்ணதாசன், புலவர் புலமைப்பித்தன், வாலி, நா.காமராசன், மு.மேத்தா, பொன்னடியான் வரிசையில் இருந்த முக்கிய பாடலாசிரியர் காமகோடியன்.

இன்னும் இவரின் புகழ் பூத்த பாடல்களைக் கொண்டாட வேண்டுமென்றால்

“பாட்டு இங்கே ராபப்பா” என்று பூவிழி வாசலிலும், 

https://www.youtube.com/watch?v=CqjjL2p_Sm0

“தேவியே நான் சரணம்” என்று “தங்கத் தாமரைகள்”,

https://www.youtube.com/watch?v=oIsSQtxDSsQ

 “பாட்டுக்குள்ளே பாட்டிருக்கு (தங்க மனசுக்காரன்) 

https://youtu.be/dZhYPLrHnBU

“ஒரு கோலக்கிளி சொன்னதே” (பொன் விலங்கு) 

https://www.youtube.com/watch?v=5Yw8-gSG6Oc

“வெண்ணிலவில் மல்லிகையில் (அதிரடிப்படை), 

https://www.youtube.com/watch?v=eZNLWPKKEFs

“மல்லிகை மொட்டு மனசைத் தொட்டு இழுக்குதடி மானே (சக்திவேல்), 

https://www.youtube.com/watch?v=PrfpPwYzxIQ

“மேலூரு மாமன் மேலாகப் பாக்குறான்” (மக்கள் ஆட்சி) 

https://youtu.be/u9ygU8GFbSQ

“ஒரு சின்ன மணிக்குயிலு” (கட்டப் பஞ்சாயத்து), 

https://youtu.be/WL5A-QYWlQM

“வேண்டினால் வேண்டும் வரம்”(கட்டப் பஞ்சாயத்து), 

https://www.youtube.com/watch?v=vGW2o1PKoFY

“செம்பருத்தி பெண்ணொருத்தி” ( ராமன் அப்துல்லா),

https://www.youtube.com/watch?v=alZGH4hiJYs

“நாள் தோறும் எந்தன் கண்ணில்” (தேவதை),

https://www.youtube.com/watch?v=QRTSL6gmIpg

 “உன் பேரைக் கேட்டாலே” (பூஞ்சோலை),

https://www.youtube.com/watch?v=6KuVxwR56iM

 “கண்மணிக்கு வாழ்த்துச் சொல்லும்” (அண்ணன்), 

https://www.youtube.com/watch?v=z5XBD9visH4

“உன்னை நம்பும்” (கண்ணாத்தாள்), 

https://www.youtube.com/watch?v=HUBsd3-K7JU

என்று ஐம்பதைத் தொடும் பாடல்களோடு

“அலையெலாம் நடனமாடும்

தமிழர் கலையெலாம் தமது பண்பைப் பாடும்” 

https://www.youtube.com/watch?v=dxGeZhR4KS8

என்ற “உளியின் ஓசை” படம் ஈறாக இசைஞானியோடு கொடுத்த புகழ் பூத்த பாடல்கள். (இளையராஜா பாடல் பட்டியல் நன்றி நண்பர் அன்பு)

“கண்ணதாசனே கண்ணதாசனே வந்துவிடு”

https://www.youtube.com/watch?v=wYVAiGJ4_Xo

என்று “மரிக்கொழுந்து” படத்தில் தேவா இசையிலும்,

“அழகா அழகா அழுதால் அழகா” (பொன்மனம்) 

https://youtu.be/k18zXs0xgKQ

என்று எஸ்.ஏ.ராஜ்குமார் இசையிகும் புகழ் பூத்த பாடல்களைக் கொடுத்தவர்.

பதிவை எழுதியவர் கானாபிரபா 

பாடகர் மலேசியா வாசுதேவன் இசையமைத்த “கொலுசு” படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் காமகோடியன் தான்.

“கானம் தென்காற்றோடு போய்ச் சொல்லும் தூது”

https://youtu.be/2vN3QPBSSCU

என்ற அற்புதமான பாடல் இளையராஜா பாடி, இசை படைத்திட்ட காமகோடியன் வரிகள் படைத்த வெளிவராத “கண்ணுக்கொரு வண்ணக்கிளி” படத்தின் முத்தான பாடல்களில் ஒன்று.

எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களது மகன் சரணின் பிறந்த தினம். சரண் வளர்ந்த பாடகராக முதன் முதலாகப் பாடிய “புண்ணியவதி” படத்தில் பாடிய 

“உனக்கொருத்தி பொறந்திருக்கா”

https://www.youtube.com/watch?v=lLAeI8THtPk

என்று தன் தந்தை எஸ்.பி.பாலசுப்ரமணியம், இளையராஜா, சுனிதா குழுவினரோடு இணைந்த பாடல் கூட காமகோடியன் வரிகள் தான்.

“இருப்பவர்க்கு ஒரு வீடு

இல்லாதவர்க்கு பல வீடு

யாரை நம்பி யாரும் இல்ல

ஆண்டவன் துணையை நீ தேடு….

வாழுகின்ற மக்களுக்கு

வாழ்ந்தவர்கள் பாடமடி

பெற்றவர்கள் பட்ட கடன்

பிள்ளைகளைச் சேருமடி”

https://www.youtube.com/watch?v=m0Mt_LnGz8Q

என்ற அற்புதமான தத்துவப் பாடலை “பொன்னகரம்” படத்தில் சங்கர் – கணேஷ் இசையிலும் கொடுத்தவர் காமகோடியன்.

இப்படியாகப் பல நூறு பாடல்கள் ஊற்றெடுத்த கவியருவி காமகோடியன்.

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களது இறுதிக்காலம் வரை இயங்கிய பாடலாசிரியர்களில் ஒருவர் காமகோடியன். “வெற்றி விநாயகர்” படப் பாடல் “சந்தானமடி” அதற்கோர் சான்று.

இதற்கெல்லாம் மேலாக மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களது இசை நிகழ்ச்சி தோறும் நிறைவுப் பாடலாக அலங்கரிக்கும் பாடலை எழுதியவர் காமகோடியன். அந்தப் பாடல் 

“அறிஞனாய் இரு,

கலைஞனாய் இரு,

அற்புதம் செய்யும் சிற்பியாய் இரு,

அரசனாய் இரு,

புருஷனாய் இரு,

ஆயிரம் கோடிக்கு அதிபனாய் இரு,

வீரனாய் இரு,

சூரனாய் இரு,

வித்தக தத்துவ ஞானியாய் இரு,

அனைவருக்கும் இங்கு ஒரே ஞாயிறு,

அதனால் என்றும் 

மனிதனாய் இரு…….”

ஜனவரி 5, 2022 இல் நம்மை விட்டு மறைந்த பாடலாசிரியர் காமகோடியனை நினைவில் நிறுத்துவோம்.

கானா பிரபா

05.01.2023


பிரபல கவிஞரும், பாடலாசிரியருமான காமகோடியன் மறைவுக்கு இசையமைப்பாளர் இளையராஜா இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழில் பிரபல பாடலாசிரியராக திகழ்ந்தவர் கவிஞர் காமகோடியான். எம்.எஸ்.வி தொடங்கி இளையராஜா, தேவா, யுவன் ஷங்கர் ராஜா, பரத்வாஜ் என பல்வேறு முன்னணி இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். 76 வயதாகும் காமகோடியன் நேற்று (ஜன 05) இரவு வயது மூப்பின் காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


தகவல்  நன்றி : தமிழ் இந்து திசை

Thursday, January 6, 2022

ஏ.ஆர்.ரஹ்மான் 🎸🎹🥁💚

இந்தியத் திரையிசையில் புது வெள்ளமாய்த் தன் இசையினைப் பரவ விட்டுக் கோலோச்சிக் கொண்டிருக்கும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இன்று 55 வது பிறந்த நாள்.

சாஸ்திரிய சங்கீத மும்மூர்த்திகள் போலத் தமிழ்த் திரையிசையின் மும்மூர்த்திகளாக

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரைக் கொண்டாடலாம். இவர்களுக்கு முன்னும் பின்னும் ஏராளம் இசையுலக சாகித்தியர்கள் இருந்தாலும் இந்த மூவரினால் தமிழ்த் திரையிசையின் நிறம் கால அளவு தாண்டிய புதுமை என்ற  அளவுகோலாய் அமைந்தது.

இந்தியப் பொருளாதாரத்தின் கதவுகள் தொண்ணூறுகளில் அகல வாசல் விரித்த போது இசைத்துறையிலும் ஒரு புத்துணர்வு அது ரஹ்மானால் அடையாளப்படுத்தப்பட்டது.

"சின்னச் சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை" பாடலை எதேச்சையாக எப்போது கேட்டாலும் புத்துணர்வு தருகிறது, 

மாற்றம் என்பது அப்படி இருக்கவேண்டும் என்றொரு ட்விட்டை முன்னர் பகிர்ந்திருந்தேன்.

"வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலரவே" பாடலைக் கேட்கும் போது யாழ்பாணத்தில் நின்று அழுது கொண்டிருக்கும் என் மனது.

ஆஸ்கார் விருது கிட்டிய சமயம் ஈழத்தில் மாபெரும் இன அழிப்பில் தமிழர் துடைத்தழிக்கப்பட்ட போது மானசீகமாக நொந்த ஜீவன்களில் ரஹ்மானும் ஒருவர் என்ற வகையில் அவர் மாபெரும் இசையமைப்பாளர் என்ற எல்லையைக் கடந்து நெஞ்சில் நிலைத்தவர்.

இந்தப் பத்தியை இப்போது ரயில் பயணத்தில் எழுதிக் கொண்டிருக்கும் போது "சந்தோஷக் கண்ணீரே" ஒரு வானொலி வழியாக என் ஹெட்போனில் ஒலிக்கிறது.

ரோஜா காலத்தில் இருந்து இன்று வரை தன் இசையைப் பாத்திரமறிந்து கொடுக்க வேண்டும் என்ற முனைப்பும், ஒலித்தரத்தில் ரசிகனுக்கு மேம்பட்டதொரு அனுபவத்தை எப்போதும் கொடுக்க வேண்டும் என்பதில் சமரசம் செய்து கொள்ளாதவர். இங்கே அவர் கொடுத்த ஒட்டுமொத்தப் படங்களின் வணிக ரீதியான வெற்றியையோ அல்லது தேர்ந்தெடுத்த படங்களின் பொத்தலான கதையமைப்பையோ நான் குறிப்பிடவில்லை. 

பாடலின் பல்லவியைப் பாடிக் காட்டி விட்டு சரணத்தை பாடகர் விரும்பும் விதமாய் வித விதமாய்ப் பாட வைத்து அதில் பொருத்தமானதைத் தேர்தெடுத்துக் கொடுக்கும் வித்தையையும் ரஹ்மான் கைக் கொண்டு வருகிறார்.

இந்த யுக்தியை நாம் செய்யும் எல்லாக் காரியத்திலும் உள்வாங்கலாம். தெரிவுகளை அள்ளி விட்டுத் தேவையானதைத் தேர்ந்தெடுப்பது வாழ்க்கைப் பாடத்திலும் கைக் கொள்ள வேண்டியது.

இன்றைய நவீன சந்தைப்படுத்தல் முறைமையை வெற்றிகரமாக உள்வாங்கி அதைப் பத்திரமாக ரசிகனுக்குக் கொண்டு சேர்ப்பதில் ஏ.ஆர்.ரஹ்மான் முன்னணியில் திகழ்கிறார்.

"தேடித் தேடித் தேய்ந்தேனே" 

எந்த ஒரு உயரிய படைப்பாளியும் தன் படைப்பில் தன் ரசிகனோ, தன் வாசகனோ கொண்டாடியதை மட்டுமே வைத்து, பாதுகாப்பான சூழலாக அதை மாற்றிக் கொண்டு வளைத்து வளைத்துக் கொடுத்துக் கொண்டிருக்க மாட்டான். 

இசைஞானி இளையராஜாவின் இசைப்போக்கில் ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்தப் பரிசோதனையை நிகழ்த்திக் காட்டினார்.

அந்த வகையில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையின் பரிமாணமும் மாறுதல் கண்டிருப்பதைக் காணலாம் அது புதுயுக ரசிகர்களை உள்வாங்குவதற்கான தேடல். 

இருப்பினும் அவரின் தொண்ணூறுகளுக்கு நான் அடிமை.

Slumdog Millionaire படைப்புக்கு அவர் கொடுத்தது ஆஸ்காருக்கான அளவுகோலாக இருக்கலாம். ஆனால் அதற்கு முன்பே அவர் அந்தத் தரத்தை விட மேம்பட்டதைக் கொடுத்திருக்கிறார்.

ஆஸ்கார் விருதை ஏ.ஆர்.ரஹ்மான் தட்டிக்கொண்ட சமயம் "அம்ருதா" என்ற சஞ்சிகை வேண்டிக் கொண்டதன் பேரில் ஏப்ரல் 2009 இல் நான் எழுதிய கட்டுரையை இங்கே தருகின்றேன். 

00000000000000000000000000000000000000

54 ஆவது பிலிம் பேர் அவார்ட் மேடையில் அறிவிக்கப்படுகின்றது, சிறந்த வளர்ந்து வரும் பாடகர் என்ற பிரிவில் கஜினி (ஹிந்தி)

படத்துக்காக பென்னி தயாள் விருதை வாங்கிக்கொள்ள அழைக்கப்படுகின்றார். இது சமீபத்தில் நடந்த ஒரு அங்கீகாரம். இந்த அங்கீகாரத்தின் பின்னால் இருந்தது பென்னி தயாள் என்ற பாடகனை அறிமுகப்படுத்தி வேலை வாங்கிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானைச் சாரும் என்று சொல்லத் தேவையில்லை. இந்தப் பண்பு இன்று நேற்று ஆரம்பித்தது அல்ல ஏ.ஆர்.ரஹ்மான் என்ற இசையமைப்பாளன் திரைமறை காயாக இருந்து 1992 இல் வெளிப்பட்ட போது ஆரம்பித்தது. இன்றும் தொடர்கின்றது.

1992 ஆம் ஆண்டில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு "ரோஜா" படத்தில் இசையமைக்கும் வாய்ப்புக் கிடைக்கின்றது. எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய

"காதல் ரோஜாவே" ஒரு பாடல் மட்டுமே அந்த நேரத்தில் தமிழ் ரசிகர்களுக்கு பெரிதும் பரிச்சயமான குரலாக ஒலிக்கின்றது. ஏற்கனவே

இளையராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டுப் பாடிக் கொண்டிருந்த மின்மினி என்ற பாடகியை எல்லைகள் கடந்து தெரியவைத்ததும், விஜய் என்ற பெயரில் முன்னர் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பாடி வந்த உன்னிமேனன் என்ற பாடகனை எல்லா ரசிகர் முன்னும் அறியவைத்ததும், பத்து வருஷங்களுக்கு மேல் தமிழில் பாடாமல் ஓய்ந்திருந்த பாடகி சுஜாதாவை மீள இயங்கவைத்ததும், மும்பையை கடந்தால் யார் இவர் என்று கேட்க வைத்த ஹரிஹரன் குரலை தேசங்கள் கடந்தும் ஒலிக்கவிட்டதும் என்று ஆரம்பித்தது ரஹ்மானின் இசைப்பயணம். பொதுவாகவேமிகவும் கஷ்டப்பட்டுக் கிடைக்கும் வாய்ப்பு, அதுவும் பேர் போன ஒரு தயாரிப்பு நிறுவனம் கவிதாலயா, நாடறிந்த இயக்குனர் மணிரத்னம் இப்படியாக மிகவும் சவாலாக வந்த அந்த இசைப்பணிக்கு வேறு யாரும் என்றால் நிச்சயம் இவ்வளவு புதுக் குரல்களைப் போடுவதைக் கொஞ்சம் யோசித்திருப்பார்கள். ஆனால் அங்கே தான் ரஹ்மானுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசம் தெரிகின்றது. அதுவரை இளையராஜா என்னும் மாபெரும் கலைஞன் பதினாறு ஆண்டுகளாகக் கட்டிப்போட்ட இசைமுடிச்சை அவிழ்த்துப் புதிதாக ஒன்றை ரசிகனுக்குக் கொடுப்பது என்பது மிகவும் சவாலானதொரு விடயம். ஒரு ட்ரெண்ட் செட்டராக ரஹ்மான் அடையாளப்படும் போது வெறுமனே அவரின் புது மாதிரியான இசை மட்டுமே மாற்றத்தைக் கொடுக்கவில்லை, கூடவே ஆண்டாண்டு காலமாக ஒரு குறிப்பிட்ட பாடகர் வட்டத்துக்குள்ளே இருந்த தமிழ் சினிமாவின் கூட்டை அகலத் திறந்து விட்டார் இவர். குறிப்பிட்ட பாடகர்களைத் தவிர்த்து வேறும் புதுப் பாடகர்களை அறிமுகப்படுத்துவது ரஹ்மான் காலத்துக்கு முன்னரும் இருந்திருக்கின்றது. ஆனால் ரஹ்மானுக்குப் பின்னான போக்கைப் பார்த்தீர்களானால் இந்த மாற்றம் எவ்வளவு பெரியதாக அமைந்திருக்கின்றது என்பதை இனங்காணலாம்.

இப்போதெல்லாம் ஒரு படத்தில் ஐந்து பாட்டென்றால் ஐந்து பாடகர்களோ, இல்லாவிட்டால் ஒரு பாட்டையே இரண்டு மூன்று பாடகர்களோ பாடுவது சர்வசாதாரணம். இந்த மாற்றத்தின் விதையைப் போட்டவர் ஏ.ஆர்.ரஹ்மான் என்றால் அது மிகையில்லை. டிவிக்களில் வரும் அறிமுகப் பாடகர்களுக்குக் களம் அமைத்துக் கொடுத்த சப்தஸ்வரங்கள், ராகமாலிகா, பாட்டுக்குப் பாட்டு போன்ற நிகழ்ச்சிகளில் திறமையை வெளிக்காட்டும் பாடகர்களில் பலருக்கு இப்போதெல்லாம் சினிமா வாய்ப்பு என்பது எட்டும் கனியாகி விட்டது. ஆனால் இப்படியான நிகழ்ச்சிகள் பரவலாக இல்லாத காலத்தில் ஒரு கல்லூரி ஆண்டு விழாவுக்கு நடுவராகப் போன ரஹ்மானில் கண்ணில் பட்டார் அந்த நிகழ்ச்சியில் பாடிய ஹரிணி. பின்னர் நிலாக் காய்கிறது என்று ஆரம்பித்தது ஹரிணியின் இசையப்பயணம்.

ஹோரஸ் கொடுக்கும் பாடகர்கள் என்னதான் திறமைசாலிகளாக இருந்தாலும் அந்த எல்லையைக் கடந்து பெரும் பாடகராகச் சாதிக்க முடியாத காலமும் இருந்தது. ரஹ்மானின் காலத்தில் தான் இந்த விஷயத்திலும் மாறுதல் கண்டது. இவரின் பாடல்களுக்கு ஹோரஸ் கொடுத்த பலர் பின்னாளில் முன்னணிப் பாடகர்களாக வரக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டது. ரஹ்மானின் பாடல்கள் வரும் இசைத் தட்டுக்களைக் கவனித்தால் வெறுமனே முன்னணிப் பாடகர்கள், மற்றும் இசையமைப்பாளர் பெயர் மட்டுமே இருக்காது. கூடவே அந்தப் பாடல்களுக்குப் பயன்பட்ட வாத்தியக் கலைஞர்கள், மற்றும் ஹோரஸ் பாடிய பாடகர்கள் பெயர் இருப்பதும் தவிர்க்க முடியாத ஒன்று. அது என்னதான் பெரிய லிஸ்டாக இருந்தாலும் கூட.

ரஜினி என்றாலும் கமல் என்றாலும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் போன்ற முன்னணிப் பாடகர்களின் பின்னணிப் பாடல் தான் ரசிகர் மனதில் ஒட்டும் (இன்னும் பலர் பாடியிருந்தாலும்) என்ற நினைப்பை மாற்ற வைத்தது "முத்து" படத்தில் உதித் நாராயணன் பாடிய "குலுவாயிலே" பாட்டும் "படையப்பா" படத்தில் வந்த "மின்சாரப் பூவே" என்ற பாடலும். இந்தியன் கமலுக்கு போட்ட "டெலிபோன் மணி போல்" ஹரிஹரன் குரல்கூட அளவாகப் பொருந்தியதே.

சுரேஷ் பீட்டர்ஸ் குரலில் அமைந்த "சிக்கு புக்கு ரெயிலே" பாட்டு கொடுத்த புகழ் சுரேஷை ஒரு இசையமைப்பாளனாகவே மாற்றி அழகு பார்த்த்து. ஜென்டில்மேனில் "உசிலம்பட்டி பெண்குட்டி" முத்துப் பேச்சி பாடிய சாகுல் ஹமீத்தின் வித்தியாசமான குரலைக் கூட ரஹ்மான் இசையில் அறிமுகப்படுத்த முடிந்தது, தொடர்ந்து அவர் வெறும் வாத்திய இசையில்லாமல் ஹம்மிங்கோடு அமைந்த "ராசாத்தி என்னுசிரு" பாட்டில் கூட வசீகரித்தார். சாகுல் ஹமீத்தின் நட்பு ரஹ்மான் திரைக்கு வரும் முன்னரே அவர் இசையமைத்த தீன் இசைமாலை போன்ற ஆல்பங்களில் ஆரம்பித்தது. அந்த நட்பினை முறிக்காது ஹமீதின் குரலை திரையிலும் தொடர்ந்தார் ரஹ்மான். ரஹ்மான் கொடுத்த திரைப்பாலம் ஹமீதை மற்றைய இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடவைத்தது. கடல் கடந்தும் இசைப்பயணத்தைத் தொடர்ந்த ஹமீத் துரதிஷ்டவசமாக பெரும் விபத்தில் சிக்கி உயிரிழந்தது ரஹ்மானையும் வெகுவாகவே பாதித்தது.

அனுபமா போன்ற மேற்கத்தேயச் சாயல் கொண்ட குரல்களுக்கு "கொஞ்சம் நிலவு" (திருடா திருடா) போன்ற பாடல்கள் களம் அமைத்து போல சுவர்ணலதா போன்ற பாடகிகளுக்கு "போறாளே பொன்னுத்தாயி" போன்ற கிராமிய மெட்டுக்களும் கைகொடுத்து தேசிய விருது வரை அழைத்துச் சென்றது.

திரையிசைக்கு பாலமுரளி கிருஷ்ணா போன்ற முழு நேர சங்கீத வித்துவான்களின் அறிமுகம் புதிதல்ல. ஆனால் ஜேசுதாஸ் போன்று கர்னாடக மேடைகளிலும் திரையிசையிலும் சமகாலத்தில் கலக்கிக்கொண்டிருக்கும் வண்ணம் பாடகர்கள் அமையாதிருந்தனர். அந்தப் போக்கினையும் ரஹ்மானின் காதல் திரைப்படம் உன்னி கிருஷ்ணன் மூலம் மாற்றிக் கொண்டது. ரஹ்மான் இசையில் காதலன் படத்தில் "என்னவளே அடி என்னவளே" பாடலுக்கும் "பவித்ரா" படத்தில் "உயிரும் நீயே" பாடலுக்கும் பாடியதன் மூலம் உன்னிகிருஷ்ணன் தேசிய விருது வரை அங்கீகாரம் பெற்றதோடு உன்னிகிருஷ்ணனுக்கு சபா மேடைகள் தாண்டி ஒலிப்பதிவுக் கூடங்களையும் தினமும் செல்லவைத்தது. கர்நாடக சங்கீதச் சாயல் மட்டுமன்றி ஜீன்ஸ் போன்ற படங்களில் இளமை துள்ளும் பாடல்களுக்கும் உன்னி கிருஷ்ணனை அறிமுகப்படுத்தி வைத்தார் ரஹ்மான்.

அந்த வகையில் இன்னொரு குறிப்பிடத்தக்க அறிமுகமாக அமைந்தது நித்யஶ்ரீயின் "கண்ணோடு காண்பதெல்லாம்" ஜின்ஸ் படப்பாடல்.

நித்யஶ்ரீ போன்ற திரையிசைச் சாயல் கலக்காத அக்மார்க் சபா மேடைக் குரலை ஜீன்ஸ் போன்ற மெகா பட்ஜெட் படத்தில் நுழைத்தது

ரஹ்மானின் சாமர்த்தியம்.

சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சிக்கு நடுவராகச் சென்ற ஶ்ரீநிவாஸ் அந்த நிகழ்ச்சியில் பாடிய சின்மயியின் குரலை ஞாபகம் வைத்திருந்து

பின்னர் ஏ.ஆர்.ரஹ்மான், "கன்னத்தில் முத்தமிட்டால்" திரைப்படத்தில் வரும் "ஒரு தெய்வம் தந்த பூவே" பாடலுக்கு புதுக்குரலைத் தேடியபோது ஶ்ரீநிவாஸ் சின்மயியை பரிந்துரைக்கிறார், சின்மயி என்ற திரையிசைப்பாடகி பிறந்தார். அது போல் அப்துல் ஹமீது நடாத்திய தொலைக்காட்சி இசை நிகழ்ச்சியில் தன் திறமையைக் காட்டிய முகேஷுக்கு ரஹ்மானின் "கண்களால் கைது செய்" அறிமுகம் கொடுக்கின்றது. திறமை எங்கிருந்தாலும், அதை யார் வழிமொழிந்தாலும் அதனைப் பாவிக்கும் ரஹ்மானின் திறனுக்கு இவை சில உதாரணங்கள்.

ரஹ்மான் தமிழுக்கு அறிமுகப்படுத்திய வட நாட்டுக்குரல்கள் விளைவித்த மொழிச் சேதத்தையும் கண்டிக்க இசை ரசிகர்கள் தவறவில்லை. உதித் நாராயணன், மதுஶ்ரீ, சாதனா சர்க்கம் போன்ற பாடகர்களின் அந்நியமான தமிழை ரஹ்மானின் இசை உள்வாங்கிக் கொண்டாலும் அந்தக் குரல்களில் அமைந்த நல்ல பல பாடல்களை ஒதுக்க முடியவில்லை. ஆனால் ரஹ்மானின் அறிமுகத்தில் வந்த கார்த்திக், நரேஷ் ஐயர் போன்ற குரல்களும் சரி சங்கர் மகாதேவன், கவிதா சுப்ரமணியம், ஹரிஹரன் போன்ற ஏற்கனவே அறிமுகமாகி

ரஹ்மானின் பாடகளால் உச்சத்துக்கு சென்றவர்களும் சரி அந்தக் குறையையும் தீர்த்து விட்டார்கள்.

வட நாட்டுக் குரல்களை தமிழில் அழைத்து அறிமுகப்படுத்திய ரஹ்மானின் இன்னொரு சாதனை தமிழில் தன்னால் அறிமுகப்படுத்தப்பட்ட பலரையும் ஹிந்தித் திரையுலகிலும் வெளிக்காட்டி நின்றமை. ஶ்ரீநிவாஸ், கார்த்திக், பென்னி தயாள், சின்மயி போன்ற பாடகர்கள் பலர் ஹிந்தியிலும் தடம் பதிக்க ரஹ்மானின் பாடல்கள் களமாக அமைந்திருந்தன. ஹிந்தித் திரையுலகில் கூட மரபு ரீதியாக அமைந்த பாடகர்கள் வட்டத்திலிருந்து விலகி புதுப் புதுக் குரல்களின் தேடல் அமைந்து வருகின்றது. தமிழிலும் சரி ஹிந்தித் திரையுலகிலும் சரி ரஹ்மானின் அறிமுகத்தில் வெளிக்கொணரப்பட்ட பாடகர்களை ஒரு கட்டுரைக்குள் அடக்கிப் போட்டு விட முடியாது. அந்த அளவுக்கு அவரால் அறிமுகப்படுத்திய பாடகர் பட்டியல் நீள்கிறது.

ஆரம்பத்தில் ரஹ்மான் என்ற இளைஞன் தன் திறமையை வெளிக்காட்டச் சந்தர்ப்பம் தேடிக் காத்திருந்தது போல இன்னும் எத்தனை எத்தனை இளைஞர்கள் யுவதிகள் இப்படி இருப்பார்கள் என்ற அவர் மனதுக்குள் எண்ணியிருக்கலாம். அதுவே பின்னாளில் புதியவர்களைக் கை தூக்கி விடும் பண்பை அவருள் விதைத்திருக்கலாம்.

முதல் படம் கொடுத்த வெற்றிப் போதையில் படங்களை அள்ளிப் போட்டுக் கொண்டு இசையமைத்துத் தன் அடையாளத்தைத் தொலைத்து விடாமல் மிகவும் நிதானமாக நடைபோடும் ரஹ்மானால் தான் இன்று ஆஸ்கார் வரை செல்ல முடிந்தது. பெரும்பாலும்

ரஹ்மானின் சாகித்யத்தையும் புதிய முயற்சிகளையும் காட்டுவதற்கேற்ற களங்களாகத் தான் அவர் ஒப்புக் கொண்ட படங்கள் அமைந்தன.

அதனால் தான் கிராமியப் பின்னணியில் அமைந்த படங்களும் சரி நகர வாழ்வியலோடு அமைந்த கதைக்களனாயினும் சரி புதுப் புதுக் குரல்களைத் தன் மெட்டுக்களுக்குப் பயன்படுத்தி குறித்த அந்தத் திரைப்படங்களின் சாயத்தை வேறுபடுத்திக் காட்டினார். காலாகாலமாக இருந்து வந்த தமிழ் சினிமாவின் பின்னணிப் பாடல்களின் குரலோசைக்கு ரஹ்மானால் புது அர்த்தம் கற்பிக்கப்பட்டது. இன்று அவருக்குப் பின் தொடரும் இசையமைப்பாளர்கள் இப்போது புதுக்குரல்களைத் தேடும் பார்முலாவுக்கு வித்திட்டதும் ரஹ்மான் உருவாக்கிய இன்னொரு பாணி தான்.

 கானா பிரபா

06.01.2022

Wednesday, January 5, 2022

சாருஹாசன் 90


“எனக்கும் உனக்கும் இனிமேல் என்ன குறை

இருக்கும் வரைக்கும் படிப்போம் அன்புக் கதை”

https://www.youtube.com/watch?v=WwSOp5Nfb0c

ராமகிருஷ்ணராஜா இசையில் இந்த அழகான பாடலை இலங்கை வானொலியின் பொற்கால யுகத்தில் கேட்டு மகிழ்ந்தோர் மறந்திருக்க மாட்டார்கள். 

SPB பாடகன் சங்கதி நூலின் இறுதிக் கட்ட வரைபை மீளப் படித்துக் கொண்டிருக்கும் போது தான் அடடா இந்தப் பாடலை எப்படி மறந்தேன் என்று நினைத்துச் சேர்த்துக் கொண்டேன்.

இந்த இனிய பாடலுக்குப் பின்னால் சுவாரஸ்யமானதொரு விடயமும் இருக்கின்றது. குறித்த பாடல் இடம்பெற்ற “புதிய சங்கமம்” படத்தின் இயக்குநர் வேறு யாருமல்ல கமல்ஹாசனின் மூத்த சகோதரரும் நடிகருமான சாருஹாசன் தான். தன் மகள் சுஹாசினியை நாயகியாக்கி இயக்கிய இந்தப் படத்துக்குப் பின்னால் இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால் “புதிய சங்கமம்” படத்தின் தயாரிப்பாளர் பழம் பெரும் நாயகன் எம்.கே.ராதா.  இவர் பற்றி அதிகம் தெரியாத 2கே கிட்ஸ்க்கு ஒரு துணுக்குத் தகவல். எம்.ஜி.ஆர் அறிமுகமான “சதிலீலாவதி” படத்தின் நாயகன் எம்.கே.ராதா தான். தன்னுடைய மூத்த சகோதரனாகவே எம்.கே.ராதாவைப் போற்றியவர் எம்.ஜி.ஆர். இப்போது போய் நீங்கள் கூகிளிட்டால் எம்.கே.ராதாவின் காலில் விழும் எம்.ஜி.ஆர் படத்தைப் பார்க்கலாம். சரி மீண்டும் சாருஹாசனிடன் வருவோம்.

சாருஹாசன் “புதிய சங்கமம்” படம் தவிர IPC 215 என்ற படத்தையும் இயக்கியது குறிப்பிடத்தக்கது. இவரை இயக்குநராக்கி அழகு பார்க்க வேண்டும் என்று துடித்தவர் புகழ் பூத்த தயாரிப்பாளர் எல்.வி.பிரசாத் என்ற தகவலை நேற்று சாருஹாசன் எழுதிய “அழியாத கோலங்கள்’  நூலைப் படித்த போது தான் தெரிந்தது. ஆனால் சாருஹாசனுக்கும், எல்.வி.பிரசாத்துக்குமான சந்திப்பு மோதலில் தான் தொடங்கியிருக்கிறது. 

“மரோ சரித்திரா” படத்தை ஹிந்தியில் “ஏக் துஜே கேலியே” ஆக எடுப்பதற்கு எல்.வி.பிரசாத் முனைந்த போது கே.பாலசந்தர் & கமல்ஹாசன் சார்பில் ஒப்பந்தப் போடப் பணிக்கப்பட்டவர் சாருஹாசன். அப்போது கமல் மூன்றரை லட்சம் சம்பளம் வாங்கிய காலகட்டத்தில் எல்.வி.பிரசாத்தோ ஒரு லட்சம் தான் தருவேன் என்று அடம் பிடித்தாரம். பேச்சு வளர்ந்து கொண்டு போகவே ஒரு கட்டத்தில் “சரி இப்படிச் செய்வோம், முதலில் இருவருக்கும் முன் பணமாக ஐம்பதாயிரம் கொடுங்கள், படம் 175 நாள் ஓடிய பின் மீதி மூன்று லட்சத்தைக் கொடுங்கள்” என்றாராம் சாருஹாசன்.

எல்.வி.பிரசாத்துக்கோ சாருஹாசன் மீது எள்ளல் பார்வை.

ஆனால் ஜெயித்தது சாருஹாசன் தான். படம் 175 கடந்தது, எல்.வி.பிரசாத்தும் சொன்ன வாக்குறுதியைக் காப்பாற்றினாராம்.

 “நல்ல நடிப்பைப் பார்த்தால் பாலச்சந்தர் துள்ளிக் குதித்துப் பாராட்டுவார் ஆர்.சி.சக்தி கண்ணீர் விட்டே அழுவார்”

போன்ற நெகிழ்வான அனுபவங்களோடு,

அன்னக்கிளி படத்தின் படத்தின் முதல் பாடல் பதிவு நடக்கிறது தன்  நண்பர் இளையராஜா இசையமைக்கிறார் தன்னால் வர முடியாத சூழல் என்று கமல் சாருஹாசனை அனுப்புகிறார். சாருஹாசனுக்கோ அல்லது அந்தப் பாடல் பதிவு நடக்கும் ஏவிஎம் இல் இருந்த நாயகன் சிவகுமாருக்கோ இளையராஜாவைத் தெரியாது, சாருஹாசன் அந்த ஒலிப்பதிவுக் கூடத்தில் ஆர்மோனியத்தோடு தரையில் இருந்தவரைக் கடந்து போய் வாத்தியக்காரர்களை வேலை வாங்கியவரைக் கை குலுக்கி 

“மிஸ்டர் இளையராஜா...மை நேம் இஸ் சாருஹாசன்...பிரதர் ஆஃப் கமல்” என்று கைகுலுக்கி வாழ்த்துப் பெற்றவர் கங்கை அமரனாம்  பின்னர் தான் அந்தத் தரையில் இருந்த ஆர்மோனியக்காரர் இளையராஜா என்று புரிந்ததாம். 

சினிமா, அரசியல், வாழ்வியல் அவ்வப்போது கமல் (கமல்ஹாசன் பிறந்த போது மூத்த அண்ணன் சாருஹாசன் வயது 23) என்று எல்லாமே கலந்து கட்டி சாருஹாசனால் வெகு சுவாரஸ்யமான நடையில் எழுதப்பட்ட வாழ்வியல் அனுபவங்கள் “அழியாத கோலங்கள்” என்ற நூல் சூரியன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. ஐந்து வருடங்களுக்கு முன் நீங்கள் தீவிர ஃபேஸ்புக் போராளியாக இருந்திருந்தால் அப்போது மிகத் தீவிரமாக ஃபேஸ்புக்கில் கலக்கிய சாருஹாசனை மறந்திருக்க மாட்டீர்கள். அவரின் தேர்ந்தெடுத்த எழுத்துகள் குங்குமம் வார இதழில் வந்து பின்னர் இவ்விதம் நூலுருக் கொண்டது. இந்த எழுத்துகளைப் படிக்கும் போது சுஜாதாவுக்குப் பின் ஒரு வெகுஜன எழுத்துக்காரர் தாமதமாக எழுத வந்துவிட்டாரோ என்ற ஏக்கமும் மெல்ல எழும்.




“இந்தாளுதாண்டா நம்ம தலைவருக்குப் பொண்ணு 

கொடுக்கமாட்டேன்னு சொன்ன துரோகி!”

என்று தளபதி ரஜினி ரசிகர்களிடம் தான் வாங்கிக் கட்டிய அனுபவத்தை சாருஹாசன் சொன்னது போலவே என்னுடைய சாபத்தையும் இவர் இன்னொரு படத்துக்காக வாங்கியிருக்கிறார்.

நான் சிறுவயதில் பயந்து பயந்து பார்த்த “அழகிய கண்ணே” என்ற மகேந்திரன் இயக்கிய ஆவிக் கதையில் சாருஹாசன் தான் கொடூரச் சாமியார். அந்தச் சின்ன வயசிலேயே நான் இவருக்கு ஏகப்பட்ட சாபம் கொடுத்தேன் அப்போது. ஆனால் பின்னர் என்னை ஆற்றுப்படுத்தியது “மீண்டும் ஒரு காதல் கதை” படத்தில் சாருஹாசன் மிஷனரியின் தலைமை ஆசிரியராகத் தோன்றிய அந்தக் குறும்பு நடிப்பில் தான்.

சாருஹாசன் தன்னுடைய 48 வயதில் தான் “உதிரிப் பூக்கள்” படத்தில் நடிக்க வந்த போதும் அவருக்குச் சில முத்திரை பதித்த வேடங்கள் கிடைத்திருக்கின்றன. இவற்றுக்கெல்லாம் தலையாயது அவருக்கு 1986 இல் சிறந்த நடிகராகத் தேசிய விருது கொடுத்த “தபரானே கதே” கன்னடப் படத்தை இயக்கியவர் இலேசுப்பட்டவர் அல்ல. இந்திய சினிமாவின் மிக முக்கிய ஆளுமை கிரிஷ் காசரவள்ளி அவர். 

ஒரு அரசு அதிகாரி ஓய்வு பெற்ற பின்னர் தன் ஓய்வூதியத்துகாக அலையும் அலைச்சல், அந்தப் பணம் கிடைத்தால் தான் தன் மனைவிக்கான மருத்துவச் செலவைக் கட்ட முடியும் என்ற நிர்ப்பந்தம், கடைசியில் ஓய்வூதியம் கிடைத்தால் மனைவி அதற்கு முன்பே இறந்து விடுவாள் இதுதான் “தபரானே கதே” சொல்லும் கதை. 

இன்று 90 வயதைத் தொட்டிருக்கும் சாருஹாசனிடம் படிப்பதற்கு நிறைய விடயம் உள்ளது. வக்கீல் தொழிலில் 30 ஆண்டுகள் தீவிரமாக ஈடுபட்டு விட்டுத்தான் 48 வயதில் சினிமாவுக்கே வந்தவர்.

80 வயதில் தான் தன் அனுபவங்களை எழுத வந்தவர். 

ஆகவே சாதிக்க வயது தடை இல்லைத்தானே?

சாருஹாசன் நோய் நொடியின்றிப் பல்லாண்டு காலம் வாழட்டும்.

கானா பிரபா

05.01.2022