Pages

Sunday, January 16, 2022

பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம் ❤️

முந்திய தினம் பல்கலைக்கழக வகுப்பு முடிந்த கையோடு ஓடிப்போய் இரவு எட்டு மணிக்கு எரிபொருள் நிரப்பு நிலையத்துக்குப் போய் வேலை செய்து விட்டு, அடுத்த நாள் காலை எட்டு மணிக்கு வேலை முடித்து முன்னால் இருக்கும் பஸ் ஸ்டாண்டில் பஸ்ஸுக்குக் காத்திருந்து பஸ் பிடித்து மெல்பர்ன் நகரத்துக்குப் போய், அங்கிருந்து ட்ராம் வண்டியில் ஏறி 45 நிமிடப் பயணத்தில் வீட்டுக்குப் போய் குளித்து முடித்து விட்டுக் கிடைத்த பாண் துண்டைக் கடிக்கும் போது, அன்றுதான் அண்ணன் ஒருவரது திருமணம் என்று நினைப்பூட்டவே உடனே அந்தத் திருமண நிகழ்வில் கலந்து கொள்ள இருக்கும் இன்னொரு நண்பருக்குத் தொலைபேசி விட்டு அவர் வரும் வரை தூங்காமல் காத்திருந்து, அந்த அருங்காட்சியக வாசனை வீசும் அந்தப் பழைய காருக்குள் ஏறி உட்கார்ந்தால், முறுவலித்து விட்டு ஒரு டேப்பைப் போடுகிறார்,

கிண்ண்ண்ண் என்ற மணியாரத்தோடு  புல்லாங்குழல் ஓசை ஏதோ ஊதுபத்தி கொளுத்தியது போலவொரு சுகந்தம் பரவ அப்படியே அந்தக் கார் மாயமாகிறது, கண் மூடிக் கேட்கிறேன். நான் இருக்கும் இடம் தொலைந்து ஏதோ அந்தரத்தில் பறந்து பறந்து அதிசயங்களில் குதித்துக் குதித்துப் பயணித்து அடுத்து, அடுத்து என்று போய்க் கொண்டே இருக்கிறேன்.

இப்படித்தான் 

“பூவுக்குள் ஒளிந்திருக்கும் 

கனிக்கூட்டம் அதிசயம்”

பாட்டை முதல் கேட்ட அனுபவம் இன்னும் என் மனதில் ஆணியடித்தது போல இருக்கின்றது. 

இன்று காலை வழக்கத்துக்கு மாறான வெள்ளாப்பில் நித்திரை கலைந்து வெளியே போன போது சனம் சந்தடியில்லாத அந்த ஏகாந்தம் என் பழைய வரலாற்றை ஏனோ கிளறிப் பார்த்தது.

வீட்டுக்கு வந்து குளித்து முடித்து விட்டு இந்தப் பாட்டில் தான் இப்போது உட்கார்ந்திருக்கிறேன். 

அதே “கிண்ண்ணாரம்” வரும் போது மெல்ல மெல்ல இலேசாகிறது உடம்பு. காற்றில் கரைவது போல இந்த இசைஜாலம் அப்படியே கரைத்து விடுகிறது.

“பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்”

அந்த ஏழு அதிசயங்களைக் காட்சிப்படுத்த முன்பே ரஹ்மானின் இசை வழி காட்சிப்படுத்தி விட்டது. அதற்குப் பிறகு ஷங்கர் கூட்டணி கொடுத்ததெல்லாம் போனஸ் எனலாம்.

இந்தப் பாட்டை இதை விடப் பகட்டாக இசை கொடுக்கக் கொடுக்கக்கூட வல்லமை ரஹ்மானுக்கு இருந்தாலும், 

தட் தட் தட் ரிதத்தோடு அவ்வப்போது அந்தந்தக் கலாசார வாசத்தை நினைப்பூட்டும் இசைஜாலம் என்ற பகிட்டில்லாத பிரமாண்டம் தான் பாடலைத் தூக்கி நிறுத்தியிருக்கிறது. அதுவும் அந்த கோரஸ் குரல்களும், இசை ஆவர்த்தனமும் ஒத்த அலைவரிசையில் பயணிக்கும் போது உலகைச் சுற்றும் ஒரு இன்ப யாத்திரை.

பிரசாந்த் மேல் எப்போதும் எனக்கு ஒரு மென்பார்வை உண்டு. இந்தப் பாடலில் ஐஸ்வர்யா ராய் என்ற பேரழகியோடு போட்டி போடும் அழகு, உயர வேற்றுமையும், உருவ ஒற்றுமையும் கூடக் கச்சிதமாகப் பொருந்த அந்த நளினமான நடன அசைவுகளில் இருவருக்குமே 50:50 கொடுக்கலாம். என்னதான் பாடலைக் கேட்டுக் கற்பனையில் ஒரு அதிசயப் பயணத்தை நடத்தி முடித்து விட்டாலும், காட்சி சிதைந்தால் எல்லாம் போச்சு. ஆனால் இங்கே எல்லாமே கச்சிதம். ஐஸ்வர்யா ராய் என்ற அழகுப் பதுமையும், பிரசாந்தும் அசையும் அதியசயத்தைக் கண்வெட்டாமல் காதல் நிறையப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். 

வைரமுத்து வரிகளில் அதிசயத்தை அப்படியே தன் காதலியோடு ஒப்பு நோக்கித் தன்னவளை உயர்த்தும் வார்த்தை ஜாலம் கட்டிப்போடும்.

ஜீன்ஸ் படம் வரப் போகும் சூழலில் ஒரு வேடிக்கை நடந்ததும் இப்போது நினைப்பு வருகிறது. அப்போது ஆனந்த விகடனில் வாராவாரம் விஐபிகளை ஏதாவது ஒரு குறும்பு (prank) வேலைகளில் மாட்டி விடுவார்கள். பிறகு அதைக் கவர் ஸ்டோரியாகக் கொடுப்பார்கள். அப்படித்தான்  

“ஜீன்ஸ்” ப்ரிவியூ காட்சி இருக்கிறது என்று விவேக் உள்ளிட்ட பிரபல நடிகர்கள், ஜேம்ஸ் வசந்தன் போன்ற அன்றைய டிவி பிரபலங்களை அழைத்துப் போய் தியேட்டரில், அவர்களின் கடுப்பைச் சம்பாதித்தது விகடனார் போட்டுக் காட்டிய “ஜீன்ஸ்” என்ற ஆடை எப்படி ஒருவாகிறது என்ற படம்.

அந்த நேரத்தில் வந்த ஆகப்பெரிய ரஹ்மான் பாட்டு (6.48 நிமிடங்கள்) உன்னிகிருஷ்ணன் உச்சரிப்பில் நெருடல் இருந்தாலும் அந்த ஐஸ் குரல் சுஜாதாவோடு கரையும் அதிசயம்.

ஆஸ்காருக்கு முன்பே ரஹ்மான் ஆஸ்கார் போன்ற அங்கீகாரங்களைக் கொடுத்து விட்டார் என்பேன். அப்படி வந்ததில் இதுவும் ஒன்று.

துளைசெல்லும் காற்று 

மெல்லிசையாதல் அதிசயம்

அதிசயமே அசந்து போகும் 

நீ எந்தன் அதிசயம்....

https://www.youtube.com/watch?v=FWvZdFOv95Y

கானா பிரபா

16.01.2022


0 comments: