வெள்ளிமணித் தேரா.......”
என்னவொரு கொண்டாட்டத்தின் உச்ச இசை என்று இந்தப் பாடல் வந்த நாள் தொட்டுக் கொண்டாடிக்கின்றேன். இன்றோ எல்லாவற்றையும் ஓரம் வைத்து விட்டு இதை மட்டும் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். வாங்கி வைத்திருந்த பிரமிட் இசைவட்டு இன்று தான் பிரிக்கப்பட்டு வெள்ளோட்டம் காணுகின்றது.
அவன் காதல் கோட்டையில் பால்யத்தில் இருந்தே குடியிருப்பவள் கிராமத்துக்குத் திரும்பி வரப் போகும் செய்தியைக் கொட்டமடித்துச் சொல்லுகிறார்கள் அவனின் கூட்டாளிமார்.
ஆனால் அதற்குள் எத்தனை பீடிகை பாருங்கள்
“சந்தனம் ஜவ்வாது பன்னீரை நீ
எடுத்துச் சேர்த்துக்கோ”
அத்தனையையும் கட்டளை பிறப்பித்து, குழம்பி நிற்கும் அவனுக்கு
வாயில் சக்கரையை அள்ளிப் போடுமாற் போலச் சொல்லி மகிழ்கிறார்கள்.
“அது ஏன் தான் தெரியுமா?
“அது” என்னும் போது ஒரு வினவல் கொடுத்து விட்டு
அப்படியே
நான் சொன்னா புரியுமா...
என்று எஸ்பிபி அடியெடுக்க, கூட்டமே கூவுகிறது
“வள்ளி வரப் போறா…..
வெள்ளிமணித் தேரா.......”
ஒரு கிராமியத் தெம்மாங்குத் துள்ளலில் நனவிடை தோய்தலாக அந்த நண்பனின் காதல் இன்று நேற்றல்ல, அரை ட்ராயர் போட்ட காலம் தொட்டு என்று அப்படியே அங்கே கொண்டு போய் விட்டு மீட்டும் நிகழ் யுகத்துக்கு வந்து கொண்டாடுவார்கள்.
“பசும்பொன்னு என முறைப்பொண்ணு வர நீ
முன்னால
போய் வரவேற்க”
பாடும் போது அந்த “முன்னால” என்ற சொல்லை உயிரூட்டி அப்படியே நடந்து போகும் வள்ளியின் முன்னால் எட்டி வரவேற்பது போல உயிரூட்டியிருப்பார் நம் பாட்டுத்தலைவன் எஸ்பிபி அவர்கள்.
“தேவதை போலொரு
பெண்ணிங்கு வந்தது நம்பி”
என்று கவிஞர் வாலி அவர்களிடம் இரண்டு வருடங்களுக்கு முன்னர் தான் (கோபுரவாசலிலே - 1991) ஒரு நவ நாகரிக நண்பர் கோஷ்டியோடு பாட்டெழுத வைத்தவர், கிட்டத்தட்ட அதே பரிமாணத்தில் (வள்ளி – 1993) இங்கே கிராமத்துப் பக்கம் கொண்டு வந்து நிறுத்தி விட்டார் ராஜா. அந்தக் கொட்ட இசையோடு அப்படியே நினைவுகளின் மிதப்பிற்குப் போகும் மெல்லிசை மீண்டும் கொட்டத்தோடு பாட்டு என்று பாயும், ஆனால் ஏந்தவித நெருடலும் இல்லாது இயல்பான ஓட்டமாக நம் மனதில் நிறுத்துவார் இசைஞானி.
அங்கே மலேசியா வாசுதேவன், சுரேந்தர், தீபன் சக்ரவர்த்தி, மனோ என்று பகட்டான நண்பர் பட்டாளம். இங்கே இரண்டே இரண்டு பேர்
ஒருவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், இன்னொருவர் எஸ்.எஸ்.சுரேந்தர் மீதிப் பேரெல்லாம் அயலில் இருக்கும் மக்களின் குரலாகக் கோரஸ் கூட்டணி. அடிப்படையில் எஸ்பிபியின் குரலும், சுரேந்தரின் குரலும் இரு வேறு தன்மை கொண்டவை. ஆனால் எவ்வளவு அற்புதமான நண்பர் கூட்டாக மிளிர்கிறார்கள் பாருங்கள்.
ஒரு பாடலில் ஒரே சொல்லை விதவிதமாகப் பாடும் வித்தைக்காரர் எஸ்பிபி. இங்கே அந்த முத்திரையை விடாது கொடுத்துக் கொண்டே போவார்.
“எதுக்குத் தெரியுமா?
நான் சொன்னா புரியுமா
ஹெஹ்ஹெஹ்ஹேஏஏ...”
அங்கே ஒரு நையாண்டித் துள்ளல், இன்னொரு தடவை அதுவே
“எதுக்குத் தெரியுமா ஹா (ஒரு நக்கல் சிரிப்பு)
நாஞ் சொன்னா புரியுமா
ஹஹ்ஹா ஹா.....”
அத்தோடு விட்டாரா மனுஷர்?
அடி சக்க
அது ஏன்தான் தெரியுமா?
என்று துள்ளுவாரே அப்படியே அரைக்காற்சட்டையில் பாதி லுங்கி வடிவேலு ஆகிடுவார்.
எழுபதுகளில் சுருளிராஜனாகவே ஆகாவித்து அப்படியே ஒப்புவித்தவர், நாகேஷ், தேங்காய் சீனிவாசன், ஜனகராஜ் என்று முன்னணி நகைச்சுவைக் குணச்சித்திரங்களின் குரலாகவும் இருந்தவர், அடுத்த தலைமுறையை ஆட்சி செய்யப் போகும் கலைஞனையும் மட்டும் விட்டு வைப்பானேன் என்று வடிவேலுவுக்கும் ஒரு வரவேற்பு வாழ்த்துப் பாடி விட்டுச் சென்று விட்டாரா நம் எஸ்பிபி?
இம்மட்டுக்கும் வள்ளி படத்தில் குணச்சித்திர நாயகன் ரஜினிக்கே மனோ என்று ஆன கணக்கில், பளிச்சென்று வடிவேலுவின் ஆரம்ப அடையாளத்தில் ஒரு மணிக்கிரீடம் சூட்டியிருக்கும் எஸ்பிபி கொடுத்த பாட்டு.
எதுக்கு தெரியுமா
நான் சொன்னா புரியுமா.....?
வள்ளி வர போறா துள்ளி வர போறா ஹே
வள்ளி வர போறா வெள்ளிமணி தேரா
https://www.youtube.com/watch?v=eZv_u_8xZSw
கானா பிரபா
19.01.2022
0 comments:
Post a Comment