பின்னணிப் பாடகி கல்யாணி மேனன் சற்று முன்னர் இவ்வுலகை விட்டு நீங்கி விட்டார். இவர் பிரபல ஒளிப்பதிவாளர் சக இயக்குநர் ராஜீவ் மேனனின் தாயாருமாவார். மறையும் போது இவருக்கு வயது 80.
எண்பதுகளில் இலங்கை வானொலியில் ஓயாது ஒலித்த "நீ வருவாய் என நான் இருந்தேன்" பாடலின் வழியாகப் பரவலாக அறியப்பட்டவர்.
https://www.youtube.com/watch?v=9cCLwq-DSag
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் என்று தொடர்ச்சியாக அவருக்கு முத்தான பாடல்கள் கிட்டின. கோவிந்த் வசந்தாவின் 96 பாடலில் சின்மயியுடன் இணைந்து பாடிய "காதலே காதலே" அவருக்கு நிறைவாகப் புகழ் சூட்டிய பாட்டு.
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் தண்ணியைப் போட்டா சந்தோஷம் (சவால்), நீ வருவாய் என (சுஜாதா),
சங்கர் கணேஷ் இசையில் “விதி வரைந்த பாதை வழியே” (விதி), நான் இரவில் எழுதும் (சுப முகூர்த்தம்),
இசைஞானி இளையராஜா இசையில் செவ்வானமே பொன் மேகமே ( நல்லதொரு குடும்பம்), “அம்பத்தொன்பது பெண் பக்ஷி (ஆலோலம்),
கங்கை அமரன் இசையில் "என் ராஜாவே" (வாழ்வே மாயம்),
இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அலை பாயுதே கண்ணா (அலைபாயுதே) , வாடி சாத்துக்குடி (புதிய மன்னர்கள்) , அதிசயத் திருமணம் (பார்த்தாலே பரவசம்), ஓமணப் பெண்ணே ( விண்ணைத் தாண்டி வருவாயா) போன்ற கூட்டுப் பாடல்களையும் பாடிச் சிறப்பித்தவர். ராஜீவ் மேனனின் நண்பர் ரஹ்மானின் ஆரம்ப காலம் தொட்டுத் தொடர்ந்த பாடகி இவர். ஓமணப் பெண்ணே பாடலின் மலையாள வரிகள் இவரே எழுதியது.
நம் வாழ்க்கையில் சில அபூர்வங்கள் நிகழ்வதுண்டு. மறைந்த கல்யாணி மேனன் குறித்து நினைத்த போது இன்னொரு விஷயம் புலப்பட்டது. இசையமைப்பாளர் வி.தட்சணாமூர்த்தி சுவாமிகளின் நினைவு தினத்திலேயே அவர் மறைந்திருக்கிறார். கல்யாணி மேனனுக்கு அவர் இசையில் குருவாக விளங்கியிருக்கிறார். அத்தோடு வி.தட்சணாமூர்த்தி அவர்களின் இசையில் தான் முதன் முதலில் திரைப்படத்தில் பாடி அறிமுகமாகி இருக்கின்றார். அது தச்சோளி மருமகன் அம்பு படத்துக்காக "இல்லம் நிற வல்லம்" https://www.youtube.com/watch?v=OpabQEhiP_I என்ற பாட்டு. இந்தப் பாட்டு அவர் கோரஸ் சூழ, அதாவது கூட்டுக் குரல்களோடு பாடியிருக்கிறார். தனது முதல் பாடல் போலவே கல்யாணி மேனன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடியவை கூட்டுக் குரல்களாகவே அதிகம் மிளிர்ந்திருக்கின்றன. கல்யாணி மேனன் தமிழில் இளையராஜா இசையில் அறிமுகமான "செவ்வானமே பொன்மேகமே" (நல்லதொரு குடும்பம்) https://www.youtube.com/watch?v=PMKhB5QW5RE பாடலும் கூடக் கூட்டுக் குரல்களாக ஜெயச்சந்திரன், சசிரேகா, T.L.மகராஜனோடு சேர்ந்து பாடியது தான்.
பாடகி கல்யாணி மேனன் ஆன்மா இளைப்பாறட்டும்.
0 comments:
Post a Comment