படிக்கும் காலத்தில் இருந்தே நான் இரு தோணிகளில் கால் வைத்தேன். படிப்பு ஒரு பக்கம் பாட்டு ஒரு பக்கம். பாட்டை ஒரு பக்கத் தோணியில் போடுவதற்குக் காரணம் திரையிசைப் பாடல்களை அவ்வளவு வெறித்தனமாகக் காதலித்தேன். ஒரு காலத்தில் ஒரு இசைக் கூடமொன்றை அமைத்துப் பாடல் பதிவு செய்து கொடுப்பதெல்லாம் என் இமாலயக் கனவுகளில் ஒன்றாக இருந்தது.
ஈழத்தில் இருந்து மெல்பர்னுக்குப் புலம் பெயந்த காலத்திலும் இந்த வேட்கை விடவில்லை. அதனால் தான் படிப்பு, பகுதி நேர வேலை இதைத் தாண்டி நானாக ஒரு சம்பளமில்லாத வேலையில் அமர்ந்து கொண்டேன். அது தான் இங்கே பாட்டை முடிச்சுப் போடும் வேலை.
நண்பர் ஒருவர் அப்போது மெல்பர்னில் புதிதாக இலங்கை இந்திய மளிகைக் கடை ஒன்றைத் திறந்தார். வெளிநாட்டில் பேருக்குத் தான் மளிகைக்கடை ஆனால் சில சமயம் மளிகையே இல்லாமல் சோப்பு, சீப்பு, கண்ணாடி ஈறாக இருக்கும். நண்பரின் மளிகைக் கடையிலும் ஒரு பக்கம் வீடியோ காசெட்டுகளும், இசைத் தட்டுகளுமாக இறைந்து கிடக்கும். என்னுடைய வேலை படிப்பு முடிந்து அடுத்ததாக வேலைக்குப் போக முன் கிடைக்கும் அவகாசத்தில் நண்பரின் கடையை மேய்வது. மேய்வது என்றால் வெறும் மேய்வது மட்டுமல்ல.
வாடிக்கையாளர் யாராவது புதுப் படப் பாட்டு சீடி கேட்டால்
“பிரபா ! அந்தப் படம் வந்திட்டுதோ?”
என்று என்னிடம் தான் கேட்பார் நண்பர்.
அவருக்கு உள்ளூர என் மேல் பயம் :-)
ஏனென்றால் முன்பொரு முறை அவரிடம் இப்படி ஒரு வாடிக்கையாளர் ஒரு படத்தின் பாடல் சீடியை வந்து கேட்க,
கவனக் குறைவால் “அது எங்களிடம் இல்லை” என்று விட்டார்.
நானோ விடாப் பிடியாக அந்த சீடி அடுக்குகளில் இருந்து தேடிப் பிடித்துக் கொடுத்தேன். ஏனென்றால் அங்கு என்ன பாட்டு சீடியெல்லாம் வரும் என்று என் கம்பியூட்டர் மூளை ஏற்கனவே நகல் எடுத்து வைத்திருக்கும்.
அதனால் “இந்த பிரபா வந்தாச்சு” என்று அந்தப் படப்பெட்டி பக்கம் என்னை தள்ளி விடுவார். நானும் ஒவ்வொரு இசைத்தட்டாகத் தொட்டுத் தொட்டுப் படங்களாக வேடிக்கை பார்த்து, யார் யார் இசை, யார் யார் பாடியிருக்கிறார்கள் என்று மனதில் சேமிக்கத் தொடங்குவேன்.
அப்படித் தான் ஒரு நாள் பொழுது படும் வரை அந்தச் சம்பளமில்லா வேலை செய்து கொண்டிருந்தேன். ஒரு வாலிபர் கூட்டம் கடையை முற்றுகையிட்டது. அதில் ஒரு பெடியனைத் தவிர மீதி இரண்டு, மூன்று பேர் புதுமுகங்களாகத் தெரிந்தது.
“அண்ணை ! இப்ப தான் கொழும்பில் இருந்து வந்திருக்கினம் என்ர ப்ரெண்ட்ஸ். ஒரு புதுப் பாட்டு கேசட் இருக்கு வேணுமோ?”
என்று அந்த ஒலிப் பேழையை மெல்பர்ன் குளிருக்குப் போர்த்திருந்த கவச உடைப் பாக்கெட்டிலிருந்து எடுத்துக் கடைக்காரரிடம் நீட்டினார்.
“காதல் தேசம்”
அதுதான் அந்த ஒலிப் பேழை. கடைக்கார அண்ணல் என்னைப் பார்க்க நானோ அந்த ஒலிப்பேழையைக் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.
அந்தப் பழக்கப்பட்ட பெடியன் வந்து என்னிடம் கேட்டார்
“உமக்கு வேணுமோ?”
“ஓமோம் நானே வாங்குறன்” என்னிடம் அரை நாள் சம்பளமாகப் பொத்தி வைத்திருந்த சேமிப்பில் இருந்து அந்த காசெட்டுக்கு முதலிடுகிறேன்.
“காதல் தேசம்” என் கைக்கு வருகிறது.
“இவருக்கு பாட்டென்றால் பயங்கர இன்ரறஸ்ட் எடா” என்று தன் சகாவுக்குச் சொல்லிக் கொண்டே அந்தப் பெடியன் மேற்கொண்டு மளிகை மேய்ந்தார்.
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு படங்களுக்கு இசையமைப்பதை விட சுயாதீன இசைப் படைப்புகளைக் கொடுப்பதில் தான் மிகையான ஆர்வம் என்பதை அவர் ஆரம்ப காலப் பேட்டிகளில் இருந்து சொல்லி வருகிறார்.
இயக்குநர் கதிரோ இதயம் படத்துக்குப் பின்னால் நேராகச் செய்ய வேண்டியது “காதல் தேசம்”. அதுவும் அவரே தயாரித்து இயக்குவதாகச் சொல்லி ரஹ்மானிடம் முற்பணம் கூடக் கொடுத்தாகி விட்டது. ஆனால் தவிர்க்க முடியாத சூழலால் இருவரும் இணைந்த படம் “உழவன்”. இருவருமே தவிர்த்திருக்க வேண்டிய ரக படமாயிற்று.
இதோ மீண்டும் கதிர் வருகிறார். இம்முறை அவரோடு குஞ்சுமோன் என்ற பிரமாண்டம் சூழ.
ரஹ்மானும் இணைகிறார்.
“காதல் தேசம்” பிறக்கிறது.
வினீத் என்ற பழக்கப்பட்ட இளம் நாயகனுடன் அப்பாஸ் அறிமுகமாக, தபூ இறக்குமதியாகிறார். அந்தக் காலத்தில் இவர்களுக்கு தபூ அக்கா மாதிரி இருக்கிறார் பொருந்தவே இல்லை என்று விமர்சனங்களையும் கொடுத்தோம்ல :). முதலில் நடிக்க அணுகப்பட்டிருந்தவர் ரவீனா டாண்டனாம், நல்ல வேளை.
ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் தமிழில் முதன் முதலில் ஒப்பந்தமான படம். அந்தக் காலத்தில் ஒவ்வொரு frame ஐயும் பார்க்கும் போது வெளிநாட்டுத் தரம் மின்னும் ஒளிப்பதிவு. இப்போது கூட காதல் தேசம் படத்தின் நிறக் கலவை தனித்துவமாக மின்னும்.
காதல் தேசம் படைப்பைப் பொறுத்தவரை அது எவ்வளவு தூரம் இயக்குநர் கதிருக்கு ஆத்மார்த்தமாக அமைகிறதோ அது போலவே ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் என்பதைப் பாடல்கள் சொல்லிக் காட்டின.
இனி மீண்டும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எது ஆத்மார்த்தம் என்று “காதல் தேசம்” படப் பாடல்களைக் கேட்டாலேயே போதும்.
அது படத்துக்காகப் பண்ணாமல் தனி இசை ஆல்பம் போலவும் மிளிரும். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ரகம். எல்லாமே இளைஞரின் நட்பு, கொண்டாட்டம், காதல், சோகம் என்ற கலவையான ஆல்பம். ஆகவே ரஹ்மானுக்கும் கனவு மெய்ப்பட்டதொரு படம் என்று சொன்னால் மிகையில்லை.
இதற்கு முன் “காதலன்” படம் கூட முழு நீளக் காதல் படம் என்றாலும் அந்தக் கால 29 வயசு இளமையின் விளிம்பில் நிற்கும் ரஹ்மானுக்குத் தோத்தான ஒரு படைப்பு என்று கணித்தால் கச்சிதமாக அமைந்து விட்டது அது.
காதல் தேசம் இசை ஆல்பம் ஒரு MTV இசை அலைவரிசைக்கான ஒத்திகை. இளமைத் தீனி. 29 வயசுக்காரரின் மெட்டுக்கு அப்போது 65 வயது நிரம்பியவர் கொடுத்த வரிகள் என்றால் தொட்டிலில் கை சூப்பிக் கொண்டிருந்த 90ஸ் கிட் கூட விரலை எடுத்து விட்டு ஆவென்று பார்க்கும். அந்த 65 வயசுக்காரர் வேறு யார் வாலின்னா ஜாலி ஆச்சே.
தமிழ்த் திரையிசைப் பாடல்களில் ஆங்கிலச் சொற்களைப் பாடல்களின் நயத்துக்காகப் பொருத்திய பாடலாசிரியர் பலருண்டு. ஆனால் வாலி அளவுக்குப் பொருத்தமாகவும், தமிழோடு இயைபாகவும் கொடுத்தவர் யாருமுண்டா சொல்லுங்களேன்?
இதயம் படத்தில் இருந்து தொடர்ந்து வாலியோடு பயணித்தவர் அது இளையராஜாவோ அன்றி ரஹ்மானோ என்று விடாக்கண்டனாக இயக்குநர் கதிர்.
வாலி தன் வயசுக்காரர் போல கதிர் ஆட்களையும் “நண்பர்” என்று அடைமொழி இடுவதைச் சொல்லி நெகிழ்ந்தார் கதிர்.
வேடிக்கை என்னவென்றால் இந்தப் பதிவை எழுதி முடித்த பின் வாலி & கதிர் சந்திப்பைப் பார்த்தேன். அதில் வாலி கதிரைப் பார்த்து “விடாக்கொண்டன்” என்றிருப்பார். :)
“உனக்கு வரிகள் எழுதி எழுதி எனக்கு வரிகள் அதிகமாச்சுப்பா” என்று வாலி 1000 நிகழ்வில் வாலி வேடிக்கையாகக் கதிரைப் பார்த்துச் சொல்லுவார் :)
அதுவரை நானொரு கோயில் நீயொரு தெய்வம் (நெல்லிக்கனி), “காட்டுக்குயிலு மனசுக்குள்ள (தளபதி) ரகங்களோடு நட்பைக் கொண்டாடிய தலைமுறை
“முஸ்தபா முஸ்தபா Don’t worry முஸ்தபா” https://www.youtube.com/watch?v=FC3rg-G-Rpw
பாடித் தோளோடு தோள் கொடுத்து ஆடியது.
நண்பன் ஒருவன் வந்த பிறகு
விண்ணை தொடலாம் உந்தன் சிறகு
வானுக்கும் எல்லை உண்டு நட்புக்கில்லையே
இந்த மாதிரி ஒரு பாட்டை மிஸ் பண்ணிட்டேனே என்று ஆதங்கப்பட்டாராம் இயக்குநர் ஷங்கர்.
இங்கு பறக்கும் வண்ணப் பறவை
எங்கு இருந்தோ வந்த பறவை
கல்லூரி மண்தான் எங்கள் வேடந்தாங்கல்
முஸ்தபா முஸ்தபா பாடலில் அந்த எலெக்ட்ரானிக் கிட்டாரின் ஜாலத்தோடு கொடுக்கும் பாங்கில் கல்லூரி வளாகத்தின் கொண்டாட்ட மேடைக்குள் போய் விடுவோம். வேடந்தாங்கலைக் கல்லூரிக்குக் கொண்டு வந்து உதாரணப்படுத்துவாரய்யா வாலி(பர்).
“மூழ்காத ஷிப்பே ப்ரெண்ட்ஷிப் தான்” என்று கொடுத்தது மாதிரி ஒரு வரியை எனக்குக் கொடுங்களேன் என்று மணிவண்ணன் வாலியிடம் யாசித்தாராம். படமோ கிராமியப் பின்புலம், வாலியும் சரியென்று போட்டாரம் இப்படி
“வெளுக்காத சாயம் விவசாயம்”.
கதிர் எடுக்கவிருந்த “கல்லூரிச் சாலை” படம் வந்திருந்தால் இவரோடு வாலி கூட்டில் இறுதிப்படமாக இருந்திருக்கும்.
ஏ.ஆர்.ரஹ்மானும் குஷி மூட்டோடு பாடல்களைப் பதிவு பண்ணியிருப்பார் போல. மூன்று பாடல்களில் முன்னணியாகப் பாடியிருப்பார்.
எனது வானொலி ஆரம்ப காலப் பயணத்தில் இரவின் மடியில் “காதலர் கீதங்கள்” கொடுக்கும் போது நேயர்கள் அடிக்கடி கேட்டுப் பழகிப் போனதில் ஒன்றாக இருந்தது
“ஓ வெண்ணிலா இரு வானிலா”
https://www.youtube.com/watch?v=M0uk9NtY3pk
“கண்ணே கண்ணே காதல் செய்தாய்.....”
என்று வரும் கணம் எழும் இசையால் வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லாதது மிதக்கும் உணர்வு எழச் சிலிர்த்துப் போவேன். அதுவும் அந்த இரவின் ஏகாந்தத்தில் இந்தப் பாடலைக் கேட்டால் அந்த இரவே மண்டியிட்டுக் கேட்பது போல இருக்கும்.
இந்தக் காலத்து 2K கிட்ஸ் இற்கு அறிமுகமான இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் இன் தந்தை பிரபல இசைக் கலைஞரும், ரஹ்மானின் ஆரம்ப காலப் படங்களில் பாடியவருமான நோயல் ஜேம்ஸ், அனுபமா, ஸ்ட்ரோம்ஸ் உடன் ஒரு பக்கம் “ஹலோ டாக்டர் ஹார்ட்டு திருடாச்சு”, இன்னொரு பக்கம் “கல்லூரிச் சாலை” ஹரிஹரன், அஸ்லாம் முஸ்தபா கூட்டணி என்று ஏ.ஆர்.ரஹ்மானின் ரகளையான துள்ளிசைப் பாட்டு. இரண்டும் கேட்டுக் கொண்டிருக்கும் போதே களியாட்ட உலகில் இருப்பது போல.
அன்பே....
அன்பே.....
அன்பே.....அன்பே
“என்னைக் காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு.....
https://www.youtube.com/watch?v=1rP7GypOhu0
எஸ்.பி.பி இல்லாத சூழலில் கேட்கும் போது அவரின் இன்மையை நினைத்து இன்னும் ஏங்க வைக்கும் பாட்டுகளில் ஒன்றாகி ஒன்றி விட்டது.
அவரோடு கூட ஒரு சாஸ்திரிய இசைப் பாடகர் ஓ.எஸ்.அருண். நம்ப மாட்டார்கள் இவர் தான் இந்த நவ நாகரிகப் பாடலுக்குக் குரல் அணி சேர்த்தார் என்று. இரண்டு குரல்களுமே ஏக்கம் தொனிக்கும்
ஆனால்
“உன் ஸ்வாசக் காற்றில் வாழ்வேன் நான்....”
என்று எஸ்பிபியின் மன ஓலத்துக்குச்
சற்றுக்
கீழிறங்கி
“என்னைக் காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு....”
என்று ஓ.எஸ்.அருண் பாடுவதைச் சிலாகிப்பதா அன்றி இந்த இருவேறு குரல்களை வெவ்வேறு ரேஞ்சில் பொருத்திப் பார்த்த ஏ.ஆர்.ரஹ்மானின் அழகியலை மெச்சுவதா என்று மனம் சலனப்படும். கூடப் பாடிய ரஃபி ரஹ்மானின் ஆஸ்தான குரல்களில் ஒன்றாக இயங்கிவர். அந்தக் காலத்தில் ரஹ்மானுக்கான குரல் படையணி ஒன்றிருக்கும். மேற்கத்தேயப் பாடல்களில் துள்ளிசையில் சோகம் கொடுக்கும் மரபை ரஹ்மான் அட்டகாசமாக இந்தப் பாடலில் உள்வாங்கிப் பதித்திருப்பார்.
கரையின் மடியில் நதியும் தூங்கும்
கவலை மறந்து தூங்கு
இரவின் மடியில் உலகம் தூங்கும்
இனிய கனவில் தூங்கு
தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு
https://www.youtube.com/watch?v=nwjZuqTRgIg
இரண்டு குரல்கள் உன்னிகிருஷ்ணன், மனோ சேர்ந்து இன்னொன்று.
இங்கே மனதின் ஆர்ப்பரிப்பு அல்ல, காதலிக்கான தாலாட்டு. ஊசி விழுந்தாலும் சத்தம் எழா வண்ணம் நோகாத ஒரு பியானோ வழியலில் வருடி நித்திரை ஆக்கும் பாட்டு.
மாலை வானில் கதிரும் சாயும்
மடியில் சாய்ந்து தூங்கடா
பூமி யாவும் தூங்கும் போது பூவை நீயும் தூங்கடா
இந்த காதல் தேசம் படத்தின் பாட்டுக் கூட்டமெல்லாம் இளமைத் துள்ளல், கூடச் சேர்ந்த ஐம்பது வயதுக்கார எஸ்பிபியையும் சேர்த்துத் தான் சொல்கின்றேன். ஏ.ஆர்.ரஹ்மான் பரபரப்பான இசையமைப்பாளராக இயங்கிய சூழலிலும் தனிப் பாட்டுத் தொகுப்புக் கொடுத்ததன் முன்னத்தி ஏர் இந்தப் படப் பாடல்கள் என்றும் சொல்லலாம்.
என் கைக்கு வந்த “காதல் தேசம்” படம் வெளியீடு கண்டு நேற்றோடு (23.08.2021) 25 ஆண்டுகளாம்.
இந்த 25 வருட காலத்தில் மெல்பர்னில் இருந்து சிட்னிக்கு இடப் பெயர்வு, தவிர எத்தனை வீடெல்லாம் மாறியிருப்பேன். ஆனால் என் கூடவே இந்தக் காதல் தேசம் ஒலிப்பேழை பாத்திரமாக இருக்கின்றது. இதைப் பார்க்கும் போதெல்லாம் முன் சொன்ன சம்பவம் டயரி மாதிரி விரித்துப் படிக்கும்.
என் வீட்டு இசைக் கூட இதய அறையில் 25 வருடங்களாகக் காதல் தேசம் இன்னும் பத்திரமாக இருக்கிறது.
மழை நீரில் வானம்
நனையாதம்மா
விழி நீரில் பூமுகம்
கரையாதம்மா
எனைக் கேட்டு
காதல் வரவில்லையே
நான் சொல்லி
காதல் விடவில்லையே
கானா பிரபா
காதல் தேசம் படங்கள் நன்றி : K.T.குஞ்சுமோன் தளம்
#காதல்தேசம்25 #25YearsOfKadhalDesam Kathir
0 comments:
Post a Comment