பூவெடுத்தேன் நான் தொடுத்தேன்
பூஜையின் நேரம் நான் கொடுத்தேன்
காலமெல்லாம் காத்திருபேன்
கண்ணனைத் தேடி சேர்ந்திருப்பேன்.......
அனிச்சையாக வாய் முணுமுணுத்து அந்த
“நினைத்தது யாரோ நீதானே”
https://www.youtube.com/watch?v=X2PyCz_PGII
பாடலுக்குள் மூழ்கிவிட்டால் கரையேற ஒரு நாள் போதாது.
அப்படிக் கொண்டாடிக் கொண்டிருக்கும் மனசு. இம்மட்டுக்கும் ஒன்றல்ல இரண்டல்ல 33 ஆண்டுகள் கால வெள்ளத்தில் நம்மிடம் எத்தனை பாடல்கள் வந்து சேர்ந்தாலும் இந்தப் பாட்டுப் போல ஒரு கூட்டம் பாடல்கள் அப்படியே அலையடித்துக் கரையொதுக்கிய முத்துச் சிப்பி போல.
“துள்ளாத மனமும் துள்ளும்
சொல்லாத கதைகள் சொல்லும்”
பாடல் எல்லாம் நம் அப்பன், அம்மை காலமென்றால் நமக்காகவே அந்த ஜிக்கியம்மாவை அழைத்து வந்து பாட வைத்தது போலவொரு பாட்டு இந்த “நினைத்தது யாரோ நீதானே”.
சித்தியின் மகன் துளசி அண்ணாவுக்கு திருமணம் 8.8.1988 இல் நடக்கிறது ஜேர்மனியில். அவர்து திருமண வீடியோ காசெட்டைப் பார்க்க உறவினர்கள் எல்லாருக்கும் அழைப்பு விடுத்து சித்தி வீட்டில் திரள்கிறார்கள். துளசி அண்ணாவின் ஜேர்மனியில் கல்யாணத்தை ஏதோ கண்ணுக்கு முன்னால் நடப்பது போல எல்லாரும் உன்னிப்பாகப் பார்க்கிறார்கள். இடைக்கிடை அந்த வீடியோவில் தலைகாட்டும் சொந்தங்களை அடையாளம் கண்டு "இஞ்சை பார் உவன் நிக்கிறான், அவன் நிக்கிறான்" என்ற நேரடி வர்ணனை வேறு, எனக்கோ அந்தப் பதின்ம வயசிலும் புதுப்பாட்டுக் கேட்கும் தொற்று வியாதி. தொற்றுவியாதி என நான் சொல்லக் காரணம், இரண்டு இளந்தாரிப்பிள்ளைகளைப் பெற்றெடுத்து விட்டாலும் இன்னமும் கிட்டாரும் கையும் இளையராஜா பாட்டும் என்றிருக்கும் துளசி அண்ணரிடமிருந்து தான் இளையராஜா பாடல்களை வெறியோடு நேசிக்கும் பண்பு வந்தது எனக்கு, அவரைப் பற்றி இன்னொரு முறை விலாவாரியாகப் பேசவேண்டும் .
அந்த வீடியோ காசெட்டில் ஒவ்வொரு புதுபுதுப் பாடல்களாகக் கடக்கின்றன ஆனால் அப்போதே மனதை ஆக்கிரமித்துக் கொண்டது " நினைத்தது யாரோ நீதானே" பாட்டு. அப்போது படமே வரவில்லை ஆனால ஆறேழு மாதங்களுக்கு முன்பே எல்பி ரெக்கார்ட்டில் வந்துவிடும். இப்போது கிட்டும் பரவலான வெகுஜனத்தொடர்பு இல்லாததால் அந்த எல்பி ரெக்கார்ட்ஸ் ஐ வைத்து உள்ளூர் ரெக்கார்டிங் பார் எல்லாம் உச்ச ஒலியில் கடைவிரித்துக் கல்லா கட்டிவிடும். படம் வரும்போதும் நல்ல பப்ளிசிட்டி கிட்டிவிடும். அப்படித்தான் இந்தப் பாட்டை நான் கேட்ட அந்த கல்யாண காசெட் ஒளிபரப்பின் பின் சில நாட்களிலேயே உள்ளூர் இசைக்கூடங்களின் இதய நாதமாக மாறிவிட்டது இந்தப் பாட்டு. தாவடிச் சந்தியில் இருந்த ரெக்கோர்டிங் பார் காரர் நான் பள்ளிக்கூடம் விட்டு வரும்போது சொல்லி வைத்தாற்போல இந்தப் பாட்டைப் போடுவார். வேடிக்கை பார்ப்பது போல சீன் போட்டு ஐந்து நிமிடத்தைக் கடத்துவேன். அப்போதெல்லாம் கைக்காசைப் போட்டுப் பாட்டுக் கேட்டால் செவிப்பறையில் வந்து விழும் அடி என்பதும் நான் அறிந்ததே.
பின்னர் மெல்ல மெல்ல உள்ளூர் நாதஸ்வரக்காரரின் பெருவிருப்பத்துக்குரிய பாடல்களில் ஒன்றாகி, சுவாமி வீதி வலம் வடக்கு வீதியில் வரும் போது மனோ, ஜிக்கியாக நாதஸ்வரத்தின் குரல் மாறி விடும். எனக்கு இந்தப் பாட்டை அடிக்கடி தீனி போட்ட பெருமை சென்னை வானொலியைச் சாரும். யாழ்ப்பாணத்தில் இருந்து றேடியோவை மயக்கி சென்னை அலைவரிசை தொட்டால் நாலு மணிக்கு நேயர் விருப்பம். அதில் லல்லு , சத்யா, ரேவதி என்று யார் யாரோவெல்லாம் பாட்டுக் கேட்பார்கள், யாராவது ஒருவர் இந்தப் பாட்டைக் கேட்பார். பதின்ம வயது கடந்து ஆதலினால் காதல் செய்த பருவத்திலும் கொண்டாடிய பாட்டு. இப்போது கேட்டாலும் எனக்கான பாட்டு.
பாடகி ஜிக்கி அவர்கள் தனது கணவரும் பாடகர் சக இசையமைப்பாளருமான ஏ.எம்.ராஜாவின் இசை கடந்து பல்வேறு ஆளுமைப்பட்ட இசையமைப்பாளர்களிடம் பாடியிருந்தாலும்,
நம் காலத்து இசைஞானி இளையராஜா காலத்திலும், தேனிசைத் தென்றல் தேவா இசையிலும் பாடியது ஒரு முத்தாய்ப்பு.
“ஒத்தயடி பாதையில ஊரு சனம் தூங்கையில
ஒத்தையா போகுதம்மா என்னோட உசிரு, உசிரு
வெத்தலப் போல் வாடுதம்மா என்னோட மனசு’
https://www.youtube.com/watch?v=Cbsb8SSjhjU
என்று “ஆத்தா உன் கோயிலிலே” பாடலை ஜிக்கியம்மா பாடும் போது,
“ஊரெங்கும் தேடினேன் ஒருவரைக் கண்டு
அந்த ஒருவரிடம் தேடினேன் உள்ளத்தைக் கண்டே
https://www.youtube.com/watch?v=bW-vBXila2k
நம் தலைமுறைக்கு முந்திய தலைமுறைக்குப் பால்வீதியில் கைப் பிடித்து அழைத்துச் செல்லுமாற் போல இருக்கும்.
சங்கர் கணேஷ் இரட்டையர் இசையில் ஏ.எம்.ராஜா & ஜிக்கி பாடிய
செந்தாமரையே செந்தேன் இதழே”
https://www.youtube.com/watch?v=8aTZrjoBpr8
போன்று அதே காலத்தில் புதுமையாக ஐந்து இசையமைப்பாளர்கள் தனித்தனிப் பாடல்களோடு விளைந்த “கண்ணில் தெரியும் கதைகள்” படத்தின்
“நான் ஒன்ன நெனச்சேன்
நீ என்னை நெனைச்சே”
https://www.youtube.com/watch?v=SxV_Tryq2v0
பாடலை சங்கர் கணேஷ் இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், வாணி ஜெயராமுடன் ஜிக்கியம்மா பாடியதும் நம் தொட்டில் காலத்தில் கேட்டுப் பழக்கிய பாடல்கள்.
இசைஞானி இளையராஜாவும் நமக்கெல்லாம் பழக்கப்பட்ட “நினைத்து யாரோ நீதானே” பாடலுக்கு முன்பே “வட்டத்துக்குள் சதுரம்” படத்தில் பஞ்சு அருணாசலம் அவர்களின் வரிகளில் அற்புதமானதொரு பாடலை ஈன்றிருக்கிறார். ஜிக்கியம்மா தனித்துப் பாடும் அந்தப் பாட்டு
“காதலெனும் காவியம்
கன்னி நெஞ்சின் ஓவியம்
ஓராயிரம் பாடலும் பாடுமே
மங்கை உள்ளமே வருவாய்....
https://www.youtube.com/watch?v=apzH-KcDmIg
இதுவரை கேட்காதவர்கள் இந்த இடத்தில் நிறுத்தி விட்டு அந்தப் பாடலைக் கேட்டு விட்டு வாருங்கள். எவ்வளவு அற்புதமான தேவார்தம் என்று புரியும்.
“காதலெனும் காவியம்” பாடலின் தாளக் கட்டைக் கொஞ்சம் வேகம் பூட்டி ஒரு பாட்டு. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வ நாதனும், இசைஞானி இளையராஜாவும் இணைந்து இசையமைத்துப் பல்லாண்டுகளுக்குப் பின் வெளிவருகின்றது. அதுதான்
“வண்ண வண்ணச் சொல்லெடுத்து
வந்தது செந்தமிழ்ப் பாட்டு”
https://www.youtube.com/watch?v=7ccLsgNgleA
படத்திலும் ஒரு பாடகிக்கான குரலாகக் கெளரவம் பூணும் ஜிக்கி குரல், அந்தப் படம் எம்.எஸ்.வியின் குடும்பத் தயாரிப்பு என்பதும் இன்னொரு விசேஷம்.
இசைஞானி இளையராஜாவும் இன்னும் இன்னும் பாடல்களைக் கொடுத்து அழகு பார்த்தவர்.
“தாயம் ஒண்ணு” படத்தில்
“ராத்திரி பூத்தது காட்டு ரோஜா
பார்த்ததும் பூங்கரம் நீட்டு ராஜா”
https://www.youtube.com/watch?v=u5RBG8pcZWw
என்று சில்க் ஸ்மிதாவின் விரகதாபப் பாடலுக்குப் பொருத்திப் பார்த்தவர் விட்டாரா என்ன?
அதே சில்க்குக்கு கிருஷ்ணதேவராயர் காலத்து 16 ஆம் நூற்றாண்டு காலத்துப் பாட்டுக்கும் ஜிக்கியை இணைத்துக் கொடுத்தார்.
அது தெலுங்கிலும், தமிழிலும் ஜிக்கியம்மாவே பாடிச் சிறப்பித்த பாட்டு. இறுதியில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.பி.சைலஜா கூட இணைந்து பாடியிருக்கும் அந்தப் பாட்டைக் கேட்டால் ஐம்பதுகளுக்குப் போய் ராஜா இசைத்தது போலிருக்கும்.
தெலுங்கில் “Jaanavule”
https://www.youtube.com/watch?v=xisd-3n8EEw
தமிழில் “இள வாலிபனே”
https://www.youtube.com/watch?v=D8-6KuO4-Hw&t=999s
என்று அமைந்திருக்கும்.
அப்படியே ஒரு தாய்மை உணர்வுக்கு ஜிக்கியம்மாவைக் கடத்தி
“பூவோடு காற்று வந்து
புது ராகம் சொல்லித் தர”
https://www.youtube.com/watch?v=ezpM6Hyw4mg
என்று தர்மம் வெல்லும் படத்திலும் (இதே பாடல் இளையராஜாவின் குரலிலும் உண்டு),
இன்னொரு தாய்மை சுரக்கும் பாடலாக பங்காளி படத்திலும்”
“செல்வமே சித்திரமே பூந்தேரே”
https://www.youtube.com/watch?v=7EQj4QC_Fes
பாடகி ஜிக்கிக்கு தன்னால் இயன்ற இசைக் கெளரவத்தைக் கொடுத்துச் சிறப்பித்திருக்கிறார் இசைஞானி இளையராஜா.
இன்று பாடகி ஜிக்கி அவர்கள் மறைந்து 17 ஆண்டுகள் ( 16.08.2004) தொடுகின்றது. நம் காலத்துப் பாடல்கள் வரை அவரின் நினைவுகள் தொடரும்.
“நீதானே என் கோயில்
உன் நாதம் என் வானில்
ஊர்வலம் போவோம் பூந்தேரில்
நினைத்தது யாரோ நீதானே.......”
கானா பிரபா
0 comments:
Post a Comment