Pages

Tuesday, August 10, 2021

இசைக்கவோ நம் கல்யாண ராகம்.....



இந்தப் பாட்டின் மீது இலங்கை வானொலி காலத்தில் இருந்து கொள்ளைப் பிரியம். கங்கை அமரன் இசையமைப்பாளராக உருவெடுத்த காலத்தில் வந்த ஆரம்பப் படங்களில் ஒன்று “மலர்களே மலருங்கள்”. விஜயகாந்த், ராதிகா, சுதாகர் என்று நிறம் மாறாத பூக்கள் படத்தின் நடிகர்கள் கூட்டத்தோடு (ஆயிரம்) மலர்களே மலருங்கள் என்று தலைப்பு ஈறாகக் கவர்ந்த படம் ஆனால் ரசிகர்களைக் கவராது பெட்டிப் பாம்பாய் அடங்கிப் போனது. ஆனாலும் பாடல்களைச் சுளை சுளையாகக் கொடுத்திருந்தார் கங்கை அமரன்.

அதில் ஒன்று தான் “இசைக்கவோ நம் கல்யாண ராகம்”. 

https://www.youtube.com/watch?v=HzkX4ThiTRo&t=72s

வீணை, ஷெனாய் வாத்தியங்களில் அப்படியென்ன ஈடுபாடோ இவருக்கு என்னுமளவுக்கு கங்கை அமரன் பாடல்களில் இவற்றின் பயன்பாடு அமைந்திருக்கும். இந்தப் பாட்டில் வீணையின் ஆலாபனம் அழகாக இருக்கும். பாடல் வரிகள் எம்.ஜி.வல்லபன்.

ஜெயச்சந்திரன் & எஸ்.ஜானகி ஜோடி சேர்ந்த இனிய பாடல்களில் இதையும் சேர்த்து எழுத வேண்டும். நல்ல மெட்டுகளைக் கொடுக்கும் இசையமைப்பாளர்கள், பாடலோடு பயணிக்கும் இசையில் நெருடலை உண்டு பண்ணி விடுவார்கள். ஆனால் இந்தப் பாட்டில் கங்கை ஆகக் கொட்டும். இடையில் ஸ்வர சாதகத்தையும் வரிகளைக் கொடுக்கும் பாங்கே தனி.


“மலர்களே மலருங்கள்” படத்தைச் சொல்லும் போது கங்கை அமரனுக்கு முதலில் வாய்ப்புக் கிட்டிய “மலர்களிலே அவள் மல்லிகை” படத்தையும் சொல்லி வைக்க வேண்டும். இதுதான் கங்கை அமரன் இசைத்த முதல் படம். ஒரு தயாரிப்பாளரிடம் மலேசியா வாசுதேவன் கங்கை அமரனைப் பரிந்துரைத்து அந்தப் பட வாய்பைப் பெற்றுக் கொடுத்ததை கங்கை அமரன் வேடிக்கையாகப் பேட்டியில் பகிர்ந்திருக்கின்றார்.

ஆனால் வெளிவராத பாவத்தால் “விடுகதை ஒரு தொடர்கதை” படம் அந்த லாபத்தைப் பெற்றுக் கொண்டது.

மலர்களே அவள் மல்லிகை படத்தில் பி.சுசீலாவோடு ஜெயச்சந்திரன் பாடும் “சிந்து நதி ஓரம் தென்றல் விளையாடும்” https://www.youtube.com/watch?v=jcyZ-26pcUw

பாடலும் அந்தக் காலத்து றேடியோ சிலோன் பிரபலங்களில் ஒன்று தான். அற்புதமான பாட்டு.

மலர்களிலே மலருங்கள் படத்தில் இன்னொரு முத்து “சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா ” https://www.youtube.com/watch?v=zgj6cUps8v4

மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் பாடலுக்கு பி.சுசீலா குரல் கொடுத்தது. இந்தப் பாடலையும் கேட்கும் போது கங்கை அமரன் இசைத்திறன் துலங்கும். 

கே.ஜே.ஜேசுதாஸ் & எஸ்.ஜானகி பாடிய “ஞாபகம் இல்லையோ” https://www.youtube.com/watch?v=-ikrfOOuzJI வெகு காலத்துக்கும் நீடித்த வானொலிப் புகழ் கொண்ட பாட்டு.


கானா பிரபா


1 comments:

சேக்காளி said...

இசையில் மட்டும் கவனம் செலுத்தியிருந்தால் ராஜாவுக்கு சரியான போட்டியாளராக இருந்திருப்பார்