
"முதல் மரியாதை" தமிழ் சினிமா வரலாற்றில் மரியாதையோடு உச்சரிக்கவேண்டிய காவியம் அது. படம் வெளிவந்த காலத்தில் இருந்து இன்றுவரை சினிமா உலக ரசிகர்களால் மரியாதைக்குரிய படமாகப் போற்றப்படுகின்றது. 1985 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்தத் திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ராதா, வடிவுக்கரசி, தீபன், ரஞ்சனி ஆகியோர் முக்கிய பாத்திரமேற்று நடித்திருந்தனர்.

1986 ஆம் ஆண்டில் தேசிய விருதாக வெள்ளித் தாமரை விருது சிறந்த பாடலாசிரியர் வைரமுத்துவுக்கும், சிறந்த பிராந்திய மொழித் திரைப்படமாக இப்படத்தின் தயாரிப்பாளர் பாரதிராஜாவுக்கும் கிடைத்திருந்தது.
கதை வசனத்தை ஆர்.செல்வராஜ் எழுத, இப்படத்தைத் தயாரித்து இயக்கிவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா. ஆர்.செல்வராஜின் சிறந்ததொரு கதாசிரியர். பொண்ணு ஊருக்கு புதுசு, நீதானா அந்தக் குயில், பகவதிபுரம் ரயில்வே கேட் உட்பட ஆர்.செல்வராஜே ஒரு சில படங்களை இயக்கியும் இருக்கின்றார். ஆனால் இயக்குனராக அவர் வெற்றியடையவில்லை. பாரதிராஜாவின் இயக்கத்தில் ஆர்.செல்வராஜின் பல படங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன. அங்கே தான் ஒரு நல்ல கதையை படமாக்கும் வித்தை ஒரு நல்ல இயக்குனர் கைகளில் இருக்கின்றது என்பதைக் காட்டுகின்றது. அதற்கு மிகச்சிறந்த உதாரணங்களில் ஒன்று இந்த முதல் மரியாதை.

பெரிய மாப்பிள்ளை என்ற ஊர்ப்பெரிய மனுஷனுக்கு நிர்ப்பந்தமாய் வாய்க்கும் திருமண பந்தம் தரும் வேதனை வாழ்வில் பரிசல்காரியின் நட்பு அவருக்கு அவருக்கு ஒத்தடமாகின்றது. தூய அன்பைத் தேடும் இரு உள்ளங்களின் நட்பே காதல் என்னும் நீறுபூத்த நெருப்பாய் இருக்கின்றது. இன்னொரு பக்கம் இளவட்டங்கள் இரண்டின் காதல் என்னும் காமம் கலந்த நேசத்தைக் காட்டுகின்றார் இயக்குனர். அங்கேயும் தன் அத்தையின் அன்பில்லாத, வஞ்சிக்கப்பட்ட வாழ்வில் இருக்கும் இளைஞன் தான் காட்டப்படுகின்றான்.
சிவாஜி கணேசனுக்கு மிகைப்படுத்தப்பட்ட நடிப்புத் தான் வரும் என்ற வீணர்களின் பேச்சுக்கு சாவு மணி போல் வந்த படங்களில் முதல் மரியாதை தலை சிறந்தது. மனுஷர் என்னமாய் வாழ்ந்திருக்கின்றார். அடக்கி வைக்கப்பட்ட தன் உணர்வுகளை மெளனமாகக் காட்டும் விதம், பரிசல்காரியின் அன்பில் பொங்கிப் பாயும் மகிழ்ச்சிப் பிரவாகம் என்று காட்சிக்குக் காட்சி நடிகர் திலகத்தின் நடிப்பின் பரிமாணம் சிறப்பாகப் பதியப்பட்டிருக்கின்றது. பரிசல்காரியாக வரும்


சத்யராஜ் துடுப்புக் கட்டையால் அடிவாங்கி கடற்கரை ஓரமாய் இறந்து கிடக்கையில் கூட்டத்தின் நடுவே அவரின் முன்னாள் காதலி வடிவுக்கரசி அதிர்ச்சியால் உறைய, கூடி நிற்கும் மக்களை போலிஸ் விரட்ட கடற் தண்ணீர் தெறிக்க அது வடிவுக்கரசி நெற்றியில் தெறித்து அவரின் குங்குமத்தை மெல்லக் கரைக்கின்றது. வடிவுக்கரசியை ஏமாற்றிய காதலன் அவர் தான் என்பதை சிம்பாலிக்காக அது காட்டுகின்றது.இதை ஜிராவிடம் சொல்லும் போது அவர் சொன்னார் விதவையாகும் போது அவளின் குங்குமம் கைபட்டு அழிக்க வேண்டியது, ஊர் மக்கள் கால் பட்டு அழிப்பது போல் காட்டப்படுகின்றது என்ற சிறப்பைக் காட்டினார்.
இன்னொன்று, தன் காதலி இசக்கியின் மறைவுக்குப் பின் தன் வாழ்வில் சுமை தாங்க வந்தவளின் மரணத்தின் நினைவாக எழுப்பியிருக்கும் சுமைதாங்கியில் காலம் தள்ளும் காதலன்.
இன்னொரு உதாரணம், சிவாஜியின் வெள்ளி நரைமயிர் ஒன்றில் ராதா கோத்த பாசிமணி மாலையை ராதா ஜெயிலுக்கு போகும் போது கடல்மணலில் தெரியாமல் தொலைக்கின்றார். காலம் பல கடந்து மரணப்படுக்கையில் இருக்கும் சிவாஜியைப் பார்க்க வரும் ராதாவுக்கு அதுவரை தான் பாதுகாத்த அந்தப் பாசிமணிமாலையைத் தன் உள்ளங்கை விரித்துக் கொடுத்துவிட்டு மூச்சை விடுகின்றார் சிவாஜி. ஒரு சில நிமிடங்களில் ரயிலேறி எங்கோ போக நினைக்கும் ராதா ரயிலிலேயே இறக்கின்றார். அந்தப் பாசிமணி மாலை கீழே விழுகின்றது.


முதல் மரியாதை போன்ற உயரிய படைப்பில் சிவாஜி, ராதா, பாரதிராஜா, ஆர்.செல்வராஜ், வைரமுத்து என்று அவரவர் பங்கைச் செய்து தனித்தன்மையோடு இருந்தது போல ராஜாவின் இசையிலும் தனித்துவம் இருக்கின்றது என்பதை நான் சொல்லி நீங்கள் தெரியவேண்டியதில்லை. பின்னணி இசையைப் பொறுத்தவரை குயிலோசை, குழலோசை படமெங்கும் ஆங்காங்கே தூவ மற்றைய கிராமிய வாத்திய இசையும் கலக்கின்றது.

இதே ஆண்டில் சிறந்த இசையமைப்பாளருக்காக "சிந்து பைரவி" திரைக்காக தேசிய விருது பெற்ற இளையராஜா முதல்மரியாதை திரைப்படத்துக்கும் போனசாக பெற்றிருக்கவேண்டும்.
இம்முறை வழக்கமாக கொடுக்கும் பின்னணி இசையோடு காட்சிகளோடு மிளிரும் முதல் மரியாதை காட்சியும் கானமும் சிறப்பாக அனைத்துப் பாடல்களோடும் இடம்பெறுகின்றது. இதில் ராஜாங்கத்தின் பெருமையை என் எழுத்துக்களை விட அவரின் இசையே மெய்ப்பிக்கும்.
"மீண்டும் ஒரு கிராமத்து ராகத்தை எனது பரிவாரங்களோடு பாட வருகின்றேன்" பாரதிராஜ குரலோடு முகப்பு இசையும் இளையராஜா குழுவினர் பாடும் "ஏ கிளியிருக்கு" என்ற பாடலும், கூவும் குயில், புல்லாங்குழல் இசை பரவ வருகின்றது
"ஓவ்வொரு கிராமத்திலும் ஏதாவது ஒரு புல்லாங்குழல், வார்த்தைக்கு வராத சோகத்தை வாசித்துக் கொண்டு தான் இருக்கும், அப்படி ஒரு சோகராகத்தைத் தான் சுரம் பிரித்தேன், அதைத்தான் உங்கள் பார்வைக்குப் படம் பிடித்தேன்" என்று சொல்லும் பாரதிராஜாவின் அறிமுகம்
பரிசல்காரியும் அவள் தந்தையும் கிராமத்துக்கு வருதல்
பெரியமாப்பிளையின் மனைவி தன் மூக்கைச் சிந்திய கையால் அவருக்கு உணவு பரிமாறுதல். இந்த ஒரே காட்சியில் அவளின் குணாம்சம் காட்டப்படுகின்றது.
வயற்கரையில் பெண்களைச் சீண்டிப் பாட வைக்கும் பெரியமாப்பிளை, தொடர்ந்து வரும் தாலாட்டு
பெரியமாப்பிளை குருவியைப் பார்த்து "ஏ குருவி" பாட மருமகப்புள்ளை எசப்பாட்டு பாட, பரிசல்காரி பாடும் எதிர்ப்பாட்டு
பரிசல்காரி பெரியமாப்பிளை மனைவியின் கண்ணிற் படாமல் ஓடுதல்
கோழிக்கூட்டில் அடைபட்ட பரிசல்காரியை காப்பாற்ற நினைத்த பெரியமாப்பிளை மனைவியிடம் அகப்படல்
"ஏறாத மலை மேலே எலந்தை பழுத்திருக்கு" பாடலை பெரிய மாப்பிளை பாட, எதிர்ப்பாட்டு பாடும் பரிசல்காரி
மனைவியின் கோப தாண்டவத்தில் மனம் வெதும்பி பெரிய மாப்பிளை பாடும் "பூங்காத்து திரும்புமா" கூடவே "ராசாவே வருத்தமா" என்று தொடரும் பரிசல்காரி பின்னணி இசை ஆரம்பத்தில் வர ஒலிக்கின்றது
பரிசல்காரியின் சவாலுக்கு முகம் கொடுக்க பெரிய மாப்பிளை இளவட்டக் கல்லை தூக்கும் முயற்சி, தோல்வியில் முடிகின்றது
பரிசல்காரியிடம் செருப்பு தைப்பவன் பெரியமாப்பிளையின் சோகக்கதையைச் சொல்லுதல், வசனம் இன்றி இசை மட்டும் உடுக்கை ஒலியோடு
விடலைப் பருவக்காதலர்கள் பேசும் காதல் மொழி, நாயனத்தோடு முடிகின்றது
பெரியமாப்பிளையும், பரிசல்காரியும் போட்டிக்கு மீன்பிடித்தல், இருவரும் சேர்ந்து முயற்சி செய்யும் போது வரும் மீன் குவியலோடு பின்னணி இசை, கூடவே"என்ன சொல்லுவேன் என்னுள்ளம் தாங்கல"
பெரியமாப்பிளை ஆசையோடு அவள் ஆக்கி வைத்த மீன் சோறு சாப்பிடுதல்
சோகத்தோடு உட்கார்ந்து புல்லாங்குழல் இசைக்கும் காதலனுக்கு நீரில் அள்ளிய நிலாவைத் தண்ணீரில் போட்டுக் காட்டுகிறாள் காதலி. "அந்த நிலாவாத்தான் கையில புடிச்சேன் என் ராசாவுக்காக" பாடல் ஒலிக்கின்றது. வைரமுத்து இப்படி முன்னர் விளக்கம் சொல்லியிருந்தார். "நிலவை பூமிக்கு வரச்சொல்லிக் காலம் காலமாய் கவிஞர்கள் கட்டளையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லம் கட்டுப்படாத அந்த வட்ட நிலவு இந்தக் காதலியின் கையில் கட்டுப்பட்டதே"
இளவட்டக்கல்லை தூக்கும் முயற்சியில் பெரிய மாப்பிளை வெற்றி, கிட்டார் இசையோடு வரும் காட்சி
காதலி இசக்கிக்கு இன்னொரு மாப்பிளை பார்த்திருப்பதாக செய்தியோடு தன் காதலனைத் தேடி ஓடும் காட்சி
பெரியமாப்பிளையை நேசத்தோடு பாராட்டும் பரிசல்காரி, வயலினில் "பூங்காத்து திரும்புமா" இடையடிகள் ஒலிக்க "வெட்டி வேரு வாசம்" பாட்டு கலக்கின்றது
இசக்கி தன் காதல் புல்லாங்குழல் வாசிக்க தான் ஓடுவதாகப் போட்டி வைத்து துர்மரணத்தை தழுவுதல்
இசக்கியின் தந்தை பெரிய மாப்பிளையிடம் சொல்லும் "ஐயா எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்". இசக்கியின் காதற்கணவன் புத்தி பேதலித்தல்
இசக்கியின் இறப்புக்குக் காரணமாக இருந்த தன் மருமகனை பெரியமாப்பிளை போலீசில் காட்டிக் கொடுத்தல்
பஞ்சாயத்தில் பெரியமாப்பிள்ளை பரிசல்காரியை வச்சிருக்கேன் என்று சொன்னதை தவறாக நினைக்கவேண்டாம் என்று அவளிடம் சொல்ல, அவள் தன் காதலைச் சொல்லுதல். சோக ராகம், குயிலோசையோடு
பரிசல்காரி பெரிய மாப்பிளையை நினைத்து "ராசாவே உன்னை நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க"
சொல்லமுடியாத காதலோடு மருகும் சோகராகம்
பரிசல்காரி குயிலு ஊரை விட்டுக் கிளம்ப ஆயத்தமாதல்
பெரியமாப்பிளை பரிசல்காரி குயிலுவைத் தேடி வருதல்
பூங்காத்து திரும்புமா சோக இசையோடு ஜெயிலுக்கு போகும் குயிலு
ஜெயிலில் வைத்து பெரியமாப்பிளை தன் உள்ளார்ந்த காதலை பரிசல்காரி குயிலுவிடம் சொல்லுதல், அதைத் தொடர்ந்து மரணப்படுக்கையில் பெரியமாப்பிளை, அவரின் இறப்பு, குயிலுவின் நிறைவான மரணம் என்று தொடரும் இறுதிக்காட்சிகளின் இசைத் தொகுப்பு
