Pages

Wednesday, February 21, 2024

1 of 5,748 இலங்கை இந்திய வானொலிகளில் கோலோச்சிய குரலோன் பினாகா கீத்மாலா" புகழ் அமீன் சயானி விடை பெற்றார்


றேடியோ சிலோன் காலத்து வானொலி உலகின் பொற்கால நாயகர்களில் ஒருவர் அமீன் சயானி தனது 91 வது வயதில் பெப்ரவரி 20 ஆம் திகதி விடைபெற்றிருக்கிறார்.

1952 ஆம் ஆண்டு தொடங்கி இலங்கை வானொலியிலும், பின்னர் 1989 ஆம் ஆண்டு முதல் 1988 ஆம் ஆண்டு வரை இந்திய வானொலியின் "விவித் பாரதி" வர்த்தக ஒலிபரப்பிலும் இந்த பினாகா கீத்மாலா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிப் பெரும் புகழோடு விளங்கியவர்.

வாராந்தம் தலை சிறந்த பத்து ஹிந்திப் பாடல்களின் அணிவகுப்பாக அமைந்த அந்த நிகழ்ச்சியைத் தமிழில் இசை அணித்தேர்வு என்று இலங்கை வானொலியும் அமைத்திருந்தது.பினாகா கீத்மாலாவுக்கு மில்லியனுக்கும் மேற்பட்ட ரசிகர்கள் இருந்தார்கள். 


வாணி ஜெயராம் அவர்களை நான் பேட்டி கண்ட போது,

தான் ஹிந்திப் பாடல்களைப் பாடவேண்டும் என்ற இலட்சியத்துக்குக் காரணமாக அமைந்த தன் இளம் பிராயத்தில் றேடியோ சிலோன் இல் புதன் கிழமைகள் தோறும் ஒலிபரப்பான ஹிந்திப் பாடல்கள் பினாகா கீத் மாலா நிகழ்ச்சி, அந்த நிகழ்ச்சியில் பின்னர் தன் ஹிந்திப் பாடலான போலாரே பாடல் 16 வாரங்கள் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து ஒலிபரப்பானதும் கனவு பலித்ததும், தமிழ்ப் பாடல்களை றேடியோ சிலோன் கவி நயத்தோடு தொகுத்து அளித்ததை நெகிழ்வோடு பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

"சகோதர சகோதரிகளே!" என்று விளித்துத் தன் நிகழ்ச்சிகளை ஆரம்பிக்கும் அமீர் சஹானி 54,000 க்கும் மேற்பட்ட வானொலிப் படைப்புகள் செய்த அசுர சாதனையாளர். 

கானா பிரபா

21.02.2024

Tuesday, February 20, 2024

சின்னப்பொண்ணு சின்னப்பொண்ணு கண்ணுக்குள்ள என்ன கண்ணு….


நிலை தளர்ந்து அப்படியே உடைந்து சரியும் நிலையை அப்படியே மனக்கண் முன்னே கொண்டு வர முடியுமானால் அந்த உணர்வைப் பிரதிபலிக்கக் கூடிய அரிய பாட்டு இது.

மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி & வாணி ஜெயராம் என்று மூன்று குரல்களின் சோகப் பிரதிபலிப்பு ஒரே அலைவரிசையில் இருக்கும்.

அதெப்படி மூன்றுமே ஒன்றாகி ஒரே உணர்வைக் கொடுக்கிறது என்ற ஆச்சரியம் மேலிடும்.

பாடல் வரிகளை மறந்து “சின்னப்பொண்ணு” “சின்னப்பொண்ணு”  என்று அந்த மெட்டில் உட்காரும்படி பாடிப் பார்த்தால் கூடப் பொருந்திப் போகும் நெளிவு சுழிவு இருக்கும்.

விழுந்து கிடக்கும் பிரபுவை எழுப்ப எஸ்.ஜானகியின்  ஆலாபனை காதலிக்குப் (பல்லவி) போய்ச் சேர, அதை முந்திக் கொண்டு கட்டிய மனைவி (ராசி) ஓடி வரும் போது தோதாக வாணி ஜெயராமின் ஆலாபனை வரும் பாருங்கள். இந்த இடத்தில் நிறுத்தி விட்டு அந்தக் காட்சியை ஒருமுறை பாருங்கள் இந்த இசைக்குக் காட்சி கொடுத்த மரியாதை புரியும்.

எத்தனையோ பிறப்பில் வாழ்ந்து கழித்து விட்டோம் இப்பிறப்பில் ஏனிந்தப் பிரிவினை என்று நொந்து கொள்ளும் காதலி, 

கொண்டவன் வேதனையைக் கண்டு மருகும் மனைவி,

இருவருக்கும் நடுவில் மலேசியா வாசுதேவனின் தளர் நடையில் எழும் சோக ராகமாய் அமைந்திருக்கும்.

அதில் சுயபச்சாதாபம் இல்லாதிருக்கும்.

கங்கை அமரனின் பாடல் வரிகள் இந்தச் சூழலுக்கு நியாயம் செய்திருக்க, அண்ணனின் இசை மெல்லிய நீரோடை போலப் பின்னணியில் ஓடும். சிவாஜி புரடெக்ஸன்ஸ் இசைஞானி இளையராஜாவோடு இணைந்த முதல் படம் அறுவடை நாள் தொடர்ந்த ஆனந்த் ஆகிய இரு படங்களுக்கும் கங்கை அமரன் தான் முழுப் பாடல்களும்.

மலேசியா வாசுதேவனைக் கொண்டாடும் போது இம்மாதிரியான பாடல்களையும் தேடி எடுத்துச் சிலாகிக்க வேண்டும். அவர் உயிர்ப்புடன் இருப்பார்.

சின்னப்பொண்ணு சின்னப்பொண்ணு

கண்ணுக்குள்ள என்ன கண்ணு….

https://youtu.be/dNcsEuZQyqw?si=CHXRvg5iOaH7Tiw0

மலேசியா வாசுதேவன் நினைவில் 

(20 பெப்ரவரி 2011)

கானா பிரபா


Wednesday, February 7, 2024

இசையமைப்பாளர் விஜயானந்த்/ விஜய் ஆனந்த் விடை பெற்றார் 🙏“வா வா என் இதயமே...

என் ஆகாயமே...

உன்னை நாளும் பிரியுமோ 

இப் பூமேகமே....


https://youtu.be/sW_stgFQ4SY


பாடலைக் கேட்ட மாத்திரத்தில் பாடலின் உணர்வுக்குள் ஐக்கியமாகி, இந்த அற்புதமான இசையமைப்பைக் கொண்டாடவும் செய்யும் மனது. 


“தேவ லோக பாரிஜாதம்

மண்ணில் வீழ்தல் என்ன ஞாயம்.....”

என்ற கணங்களில் உதாராக, விரக்தியின் வெளிப்பாட்டோடு தன் ஸ்டைலான வார்த்தைப் பிரயோகத்தைக் காட்டும் ரஜினி தான் ஞாபகத்துக்கு வரும் அளவுக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம் நியாயம் செய்திருப்பார்.

“ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் 

ஓயாமல் இசைக்கின்றது

இரு கண்ணிலும் உன் நியாபகம் 

உறங்காமல் இருக்கின்றது


இந்தப் பாடல் எண்பதுகளின் இளசுகளின் காதல் தேசிய கீதம் என்றால், இதன் சோக வடிவில் எஸ்.பி.பி காட்டும் நளினங்களையும் ஆங்கில வார்த்தைப் பிரயோகத்தையும், “நான் யாருக்கும் அடிமை இல்ல” என்ற அந்தத் தெனாவெட்டையும் பிரதி பண்ணி நடித்த வாண்டுகளில் நானும் அடக்கம். 


யப்பா என்னமா இளையராஜா இசையமைத்திருக்கிறார் என்று உச் கொட்டி 

“நான் அடிமை இல்லை” படப் பாடல்களை

ரசித்துக் கேட்கும் ரசிகர்கள் இன்றும் இருக்கிறார்கள். 

அதுவும் “வா வா இதயமே” பாடலைக் கேட்கும் போதெல்லாம் “என்னதான் சுகமோ நெஞ்சிலே” (மாப்பிள்ளை) பாடலுக்குள் என்னை இழுத்துப் போய் விடும்.


ஜூட் மேத்யூ என்பவரை உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ஆனால் விஜய் ஆனந்த் அல்லது விஜயானந்த் என்று சொன்னால் எண்பதுகளின் திரையிசைப் பிரியர்கள் சட்டென்று இனம் கண்டு கொள்வார்கள்.


‪இளையராஜா, கங்கை அமரன், ஹம்சலேகா போலவே சினிமாவுக்காகப் பெயர் மாற்றியவர் இவர்.‬


இசைஞானி இளையராஜாவின் தனி ராஜ்ஜியமாக எண்பதுகள் திகழ்ந்து கொண்டிருக்க ஆங்காங்கே உள்ளிருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் இசையமைப்பாளர்கள் பலர் வந்து உரசிப் பார்த்திருக்கிறார்கள். ஆனால் தமிழ் ரசிகர்களின் தாராள மனசு, என்ன நல்ல பாட்டாக இருந்தாலும் அது யார் கொடுத்தாலும் அது இளையராஜா போட்டதாகவே கண்ணை மூடிக் கொண்டு வரவில் வைத்து விடுவார்கள்.

மெல்லிசை மன்னர் காலத்தில் ஜி.கே.வெங்கடேஷ், ராஜன் நாகேந்திரா, விஜய பாஸ்கர் போல ராஜா காலத்தில் விஜயானந்த், மற்றும் ஹம்சலேகா ஆகிய கன்னடப் பட உலகில் கோலோச்சிய இசையமைப்பாளர்கள் வந்தார்கள்.


அப்படி வந்தவர் தான் விஜய் ஆனந்த். ஆனால் இவரைச் சில படங்களில் விஜய் ஆனந்த் என்றும் வேறு படங்களில் விஜயனந்த் என்றும் போட்டுக் குழப்பி விட்டார்கள்.


இந்த விஜயானந்த் ஐப் பரவலாக அறிமுகப்படுத்தியது “நான் அடிமை இல்லை”.

ஹிந்தியிலிருந்து கன்னடத்துக்குப் போய் அங்கு விஷ்ணுவர்த்தன் நடித்த 

Nee Bareda Kadambari

படத்தை இயக்கிய துவாரகீஷ் அப்படியே கதையோடு அதே படத்தின் இசையமைப்பாளர் விஜயானந்தையும், ரஜினியின் கால்ஜீட்டையிம் வைத்து இந்தப் படத்தை இயக்கினார்.

ஏற்கனவே கன்னடத்தில் கொடுத்த பாட்டு

“ஒரு ஜீவன் தான்” பாடலின் மூலம் “நீ மீட்டிடா” (சந்தோஷம்) 


https://youtu.be/XdrL41v2hms?si=cLn0LalQWxEwUqcm


சோகம்


https://youtu.be/fHTr_wY-s8Q?si=LoqydbsRUoiP_qpL


 என்று தமிழுக்கும் வருகிறது. அத்தோடு புதிதாகவும் “வா வா இதயமே” பாடலோடு இன்னொரு அற்புதமான பாடலான

தேவி தேவி 


https://youtu.be/uHNR2d--vAE


பாடலையும் கொடுத்தார் விஜயானந்த்.


போனாப் போகுது புடவை பறக்குது என்ற சில்மிஷப் பாடலும் ரசிக்க வைக்கும்.


“நான் அடிமை இல்லை” பாடல்களைக் கேட்க


https://youtu.be/aLYD-SFxNN4


பெரும்பாலும் விசு இயக்கிய படங்களில் இசை என்பது கோதாவரி கோட்டைக் கிழிடி என்று ஒட்டாமல் ஒப்புக்குச் சப்பாணியாக இருக்கும். 

ஆனானப்பட்ட இளையராஜாவோடு இணைந்த கெட்டி மேளம் படப் பாடல்களே பெட்டிக்குள் போனவை.

ஆனால் அதிசயமாக விசு பல்வேறு இசையமைப்பாளர்களுடன் பயணித்திருக்கிறார். அதில் இந்த விஜய் ஆனந்தும் ஒருவர் என்பது இன்ப ஆச்சரியம். குறிப்பாக ஊருக்கு உபதேசம், வாய்ச் சொல்லில் வீரனடி,

நாணயம் இல்லாத நாணயம், காவலன் அவன் கோவலன் ஆகிய படங்களுக்கு விஜய் ஆனந்த் தான் இசை. அதிலும் நாணயம் இல்லாத நாணயம் படத்தில் 

அழகே நீ பிறந்து இவளிடம் தானோ


https://youtu.be/DRNGfHcmafo


என்ற அட்டகாசமான பாடலையும் கொடுத்திருக்கிறார். விசு கொஞ்சம் விரசத்தை அதிகப்படியாகப் போட்டு எடுத்த

காவலன் அவன் கோவலன் படத்தில் வரும்

சிட்டான் சிட்டான் குருவி 


https://youtu.be/cfN3IyOztqM


அற்புதமான பாட்டு. இந்தப் பாட்டு விஜய் ஆனந்தின் சாகித்தியத்தைப் பறை சாற்றும் இன்னொரு இனிய மெட்டு.


அந்தக் காலத்தில் விஜிபி போன்ற நிறுவனங்கள் தான் புத்தம் புதுப் படங்களின் வீடியோப் பிரதிகளை வெளியிடும். அப்போது 

ஒரு படத்தின் பின்னால் வரப் போகும் புதுப் படங்களின் முன்னோட்டத்தில் 

“வெற்றி” என்ற சொல் வந்து இன்னொரு “வெற்றி” என்ற சொல் கீழே போட்டு இரண்டுக்கும் இடையில் “மேல்” என்ற சொல்லோடு அறிமுகமான “வெற்றி மேல் வெற்றி” பெரியதொரு எதிர்பார்ப்பைக் கிளப்பியது. பிரபு, சீதா நடித்த அந்தப் 

படத்தின் காட்சியமைப்பு, ஒளிப்பதிவு வழியான உருவாக்கத்திலும் புதுமையாக இருந்தாலும் படம் எடுபடவில்லை. அந்தப் படத்திலும் விஜய் ஆனந்த் தான் இசை. அதில் வரும் ஜேசுதாஸ் பாடிய கண்ணான கண்மணியே

https://youtu.be/wIMGDc3bEgc


அதிகம் விரும்பிக் கேட்கும் சோக கீதமானது.


எண்பதுகளில் கை கொள்ளும் அளவு தமிழ்ப் படங்கள் இசைத்தாலும் மறக்க முடியாத “நான் அடிமை இல்லை” பாடல்களால் காலத்துக்கும் நினைப்பில் இருப்பார் விஜயானந்த் என்ற விஜய் ஆனந்த்.


கானா பிரபா

07.02.2024

Friday, February 2, 2024

தாயான ஈசற்கே சென்றூதாய் கோத்தும்பீ ❤️🙏

“திருவாசகத்துக்கு உருகாதார் 

ஒரு வாசகத்துக்கும் உருகார்"

என்னும் வாக்குக்கேற்ப, மணிவாசகர் தில்லையிலே “திருக்கோத்தும்பி” ஐ அருளிச் செய்தார்.

“பூ ஏறு கோனும் புரந்தரனும் பொற்பமைந்த

நாவேறு செல்வியும் நாரணனும் நான்மறையும்

மாவேறு சோதியும் வானவருந் தாமறியாச்

சேவேறு சேவடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ”

https://www.youtube.com/watch?v=-P2pdcmNRTY

அரச வண்டே! 

பூ ஏறு கோனும் - தாமரை மலரில் ஏறி அமர்ந்துள்ள பிரமனும், புரந்தரனும் - இந்திரனும், பொற்பு அமைந்த - அழகு அமைந்த, நா ஏறு செல்வியும் - பிரமனது நாவில் தங்கிய கலைமகளும், நாரணனும் - திருமாலும், நான்மறையும் - நான்கு வேதங்களும், மாவேறு சோதியும் - பெருமை மிகுந்த ஒளி வடிவினனாகிய உருத்திரனும், வானவரும் - மற்றுமுள்ள தேவர்களும், தாம் அறியா - தாம் அறியாவொண்ணாத, சே ஏறு சேவடிக்கே - இடப வாகனத்தில் ஏறுகின்ற சிவபெருமானுடைய 

திருவடிக் கண்ணே, சென்று ஊதாய் - போய் ஊதுவாயாக. 

(பொருள் விளக்கம் நன்றி : தமிழ் இணையப் பல்கலைக்கழகம்)

என்ற பொருட்படும் அந்தப் பாடலோடு தொடரும் “திருகோத்தும்பி”

ஐத் தன் திருவாசக இசைப் பாடல்களில் பயன்படுத்திய போது தன் மகள் பவதாரிணியை இணைத்துப் பாடவைத்திருக்கிறார்.இசைஞானி இளையராஜாவின் பக்தி இசை இலக்கியங்களான “அம்மா பாமாலை”, ரமண மாலை (ஆராவமுதே) ஆகியவற்றில் தன் செல்வமகள் பவதாரிணிக்கும் பாடல்களைப் பகிர்ந்தளித்து வழங்கியவர் தன் ஆன்மிக இசைப் பயணத்தில் கூடவே வைத்திருந்தார்.

முறையே தன் திருவாசக இசைப் பணியில் சரியாக இருபது வருடங்களுக்கு முன், சிவனோடு ஐக்கியம் கொள்ள வைக்கும் பாடலைத் தேர்ந்தெடுத்துப் பாட வைத்தன் பொருளை பவதாரிணியின் இன்மையோடு பொருத்திப் பார்த்து உணர்வு வசப்பட்ட நிலையில் இருக்கின்றேன்.

“தாயான இறைவன்” எனும் ஈசன் திருவடிகே அழைத்துப் போகும் அந்தப் பாடல் பவதாரிணியின் ஆன்ம ஈடத்துக்குப் போய்ச் சேரட்டும். 

(அறிவுச் சமூகம் - இசை ஆய்வு நடுவகம் ஒருங்கிணைப்பில் தமிழிசைத் தென்றல் பவதாரிணி நினைவேந்தலில் நான் பகிர்ந்த அஞ்சலிப் பகிர்வின் ஒரு பகுதி இது)

கானா பிரபா

02.02.2024

பவதாரிணி ஒளிப்படம் நன்றி : மு.உதயா

Friday, January 26, 2024

ராஜா மகள் பவதாரிணி ❤️ ஒளியிலே தெரிவது நீ இல்லையா....?

“பல்லாக்கு வந்திருக்கு

 ராணி மகராணிக்கு

 நில்லாம சுத்தும் கண்ணு

 தேடுதவ சோடிக்கு”

https://www.youtube.com/watch?v=wH4pDX05nck

என் வானொலிக் காலத்தின் ஆரம்ப நாட்களில் பெண் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துப் பாடலாக அர்ப்பணிக்கும் போது, மானசீகமாக இளையராஜா தன் மகளைப் பல்லக்கில் சுமக்க வைத்த பாட்டு என்று எண்ணுவேன்.

இசைஞானி இளையராஜா தன் மனைவியைப் பிரிந்த போது நட்பு வட்டத்தில் நம் குடும்பத்தில் எழுந்த இழப்பாக நாம் பரிதவித்த அதே உணர்வை இன்றைய விடிகாலை பவதாரிணியின் இழப்பை எதிர்கொண்ட போது உள் வாங்கினேன்.

“பாடகக் குரல்களில் பவதாரிணியின் குரல் தனித்துவமானது" என்று இளையராஜா பொது மேடையில் சொன்ன போது, தந்தையின் நேசமோ என்று எண்ணுபவர்களுக்கு, பல்லாண்டுகளுக்கு முன்பே இசையமைப்பாளர் சிற்பி வெற்றியின் உச்சாணிக் கொம்பில் இருந்த போது, பவதாரிணியின் குரலைச் சிலாகித்துப் பேட்டி கொடுத்ததை ஞாபகத்தில் எழுப்ப வேண்டும்.

பவதாரிணி குழந்தைப் பாடகியாகத் தன் எட்டாவது வயதில் குழந்தைப் பாடகியாகத் தன் தந்தை இளையராஜா இசையிலேயே அறிமுகமானது, இந்தியாவின் முதல் 3D திரைப்படமான “மை டியர் குட்டிச் சாத்தான்” படத்துக்காக, “தித்தித்தே தாளம்” என்ற மலையாளப் பாடலின் வழியே.“குயிலே குயிலே குயிலக்கா” 

https://www.youtube.com/watch?v=NOvNMnpJ-9U

பாடலை சித்ராவோடு “என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு" படத்துக்காக குழந்தைப் பாடகியாகத் தந்தை இளையராஜா இசையில் பாடிய வகையில் நூறைத் தொடும் திரையிசைப் பாடல்களைத் தன் தந்தை இசையில் பாடியிருக்கிறார்.

தவிர “அம்மா பாமாலை” போன்ற தனி இசை வெளியீடுகளிலும் தன் மகளின் குரலை இசைக்க வைத்திருக்கிறார்.

"பவதாரிணியோடு, வெங்கட்பிரபு, கார்த்திக் ராஜா, பிரேம்ஜி, யுவன் ஷங்கர் ராஜா இவர்களை இணைத்து, சித்ராவோடு  பாடவைத்தேன்" என்று பவதாரிணியின் சித்தப்பா இசையமைப்பாளர் கங்கை அமரன் குறிப்பிட்டிருந்தார். அந்தப் பாடல் “கோயில் மணியோசை” படத்துக்காக அமைந்த 

“ஓடப்பட்டி பிச்சமுத்து”

https://www.youtube.com/watch?v=UHU4WOAghTw

இளையராஜா, கங்கை அமரன் தவிர்ந்து, தன் சகோதரர்கள் கார்த்திக் ராஜா, யுவன் ஆகியோர் இசையிலும் பாடியவர் சிற்பியின் இசையில் “ஆல்ப்ஸ் மலைக்காற்று” வழி புகழ் சேர்த்தவர்.

தன் அண்ணன் கார்த்திக் ராஜாவின் முதல் படத்தில் “நதியோரம்” (அலெக்சாண்டர்) பாடலில் உன்னிகிருஷ்ணனோடு ஜோடி சேர்ந்து பாடியவர், இந்த ஜோடிக் குரல்கள் அதிகம் ஹிட் கொடுத்திருக்கின்றன என்று சொல்ல வைத்தன. 

யுவனின் ஆரம்ப கால ஹிட் பாடல்களில் தோள் கொடுத்தவர் பவதாரணி. யுவன் முதலில் இசையமைத்த “ஆல் த பெஸ்ட்” (அரவிந்தன்),  “நீ இல்லை என்றால்” (தீனா), “மெர்க்குரிப் பூவே” (புதிய கீதை” என்று அது நீளும்.

பெண்களை முக்கிய தொழில் நுட்பக் கலைஞர்களாக வைத்து நடிகை ரேவதி இயக்கிப் பெரும் புகழைப் பெற்ற மித்ர் மை ப்ரெண்ட் (2002) படத்தின் மூலம் இசையமைப்பாளரான பவதாரிணி கடந்த 22 ஆண்டுகளில் , “இலக்கணம்”, “அமிர்தம்” தமிழ் உள்ளிட்ட தெலுங்கு, கன்னடத்தில் பத்துப் படங்களை இசையமைத்திருக்கிறார்.

பாவலர் வரதராஜன் சகோதர்கள், அவர்களின் வாரிசுகளில் ஒரே பெண் வாரிசு இசையமைப்பாளராகத் தனித்துவம் படைத்தார்.

“மங்காத்தா” படத்தின் இசையுருவாக்கத்தில் யுவன், பிரேம்ஜி மட்டுமல்ல, கூட்டு முயற்சியில் பவதாவும் கூட உதவினார் என்று வெங்கட் பிரபு கூடக் குறிப்பிட்டிருக்கிறார்.

“அஞ்சலி” படத்தின் குழந்தைப் பாடல்கள், அப்படியே தென்றல் சுடும் படத்தில் ஜானகியோடு ‘தூரி தூரி” என்று தொடர்ந்த பவதாரிணியின் பாட்டுப் பயணத்தில் “பாரதி” தேசிய விருதை வாங்கிக் கொடுத்தார்

“மயில் போல பொண்ணு ஒண்ணு பாடலுக்காக. இதை எழுதும் போதே

“வண்டியில வண்ண மயில் நீயும் போனா

சக்கரமா என் மனசு சுத்துதடி”

என்று காதுக்குள் ரீங்காரமிடுகிறார் பவதாரிணி.

இளையராஜாவின் இசையில் பவதாரிணியின் அடுத்த பயணம் தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் அமைந்த போது

“ஒரு சின்ன மணிக்குயிலு” (கட்டப்பஞ்சாயத்து), மஸ்தானா மஸ்தானா (ராசையா), உன்னை விட மாட்டேன் (இரட்டை ரோஜா), என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்குறே” (ராமன் அப்துல்லா), “பூங்காற்றே நீ என்னைத் தொடலாமா? “, “அக்கா நீ சிரிச்சாப் போதும்” (கிழக்கும் மேற்கும்), “கண்மணிக்கு வாழ்த்துச் சொல்லும்” (அண்ணன்), “இளவேனிற்காலப் பஞ்சமி” (மனம் விரும்புதே உன்னை), “காயத்ரி கேட்கும்” (காக்கைச் சிறகினிலே), “தவிக்கிறேன்” (டைம்), “ஓ பேபி பேபி” (காதலுக்கு மரியாதை), தென்றல் வரும் வழியை” (ப்ரெண்ட்ஸ்), “மாமரத்துல ஊஞ்சல் கட்டணும்” (கரிசக்காட்டுப் பூவே), “ஏதோ உன்னை நினைச்சிருந்தேன்” (சொல்ல மறந்த கதை), “ஆலாபனை செய்யும்” (பொன் மேகலை), “காற்றில் வரும் கீதமே” (ஒரு நாள் ஒரு கனவு), “கண்ணனுக்கு என்ன வேண்டும்” (செந்தூரம்) உள்ளிட்ட புகழ் பூத்த பாடல்கள் அடங்கும்.

“இது சங்கீதத் திருநாளோ ரதி நம் வீட்டில் பிறந்தாளோ” பாடல் ஒரு தசாப்தம் பல லட்சம் தமிழர் வீட்டுப் பிறந்த நாள் பாட்டுக் குரலாகவே ஆகிப் போனார். 

“ஒளியிலே தெரிவது தேவதையா” அழகியின் அடையாளக் குரலாக இன்று வரை பவதா தெரிகிறார்.

ஆத்மாத்தமாக பவதாரிணியின் குரல்களில் 

“உன் காதலன்” (நானும் ஒரு இந்தியன்/தேசியப் பறவை)

https://www.youtube.com/watch?v=OBT2WFCpalQ

மற்றும் 

“ஆலமரம் மேல வரும்” (செந்தூரம்)

https://www.youtube.com/watch?v=ZHSPM7EiQpg

ஆகிய பாடல்களைத் தேடி ரசிப்பேன்.

“அலை மீது விளையாடும் இளம் தென்றலே”

https://www.youtube.com/watch?v=zxwJMG1OKz8

ஒரு சின்னப் பாட்டுக்குள் பேரலையாய் நம்மை ஆக்கிரமிப்பார் பவதாரிணி.

“கானக்குயிலே கண்ணுறக்கம் போனதடி”

https://www.youtube.com/watch?v=fYzDNepWXLI

இந்தப் பாடலை இப்போது நினைத்துப் பார்த்தால் மனதை ஏதோ செய்கிறது.

“பவதா!” என்று ராஜா தன் மகளை அழைக்கும் பாங்கை நினைத்துப் பார்ப்பேன். 

“புத்திர சோகம் பெருஞ்சோகம்" என்பார் என் அப்பா.

வெளி உலகம் தெரியாது இசையே உலகமாகக் கொண்ட இளையராஜாவின் பிறந்த நாட்களில் அவருக்குப் பக்கத்தில் சின்னக் குழந்தை போல கேக் ஊட்டி மகிழும் அந்தச் செல்வ மகளின் பூரித்த கண்கள் தான் மனதில் நிறைந்திருக்கிறது.

எம் பெருமான் சிவனை நினைக்கும் போது எழும்

“ஆதிசிவன் தோளிருக்கும் நாகமணி நாகமணி”

https://www.youtube.com/watch?v=cqGblneQY2w

பாடலை இந்த நேரத்தில் மனசாரக் கேட்டு, எங்கள் பவதாரிணி இறைவனின் பாதத்தில் இளைப்பாறி ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.

கானா பிரபா

26.01.2024

Tuesday, January 16, 2024

சிப்பியின் உள்ளே முத்தாடும் சேதியோடு விடை பெற்ற இசையமைப்பாளர் கே.ஜே.ஜாய் (K. J. Joy)

மலையாளத்தின் மகோன்னதமான இசையமைப்பாளர்களில் ஒருவர், நமக்கெல்லாம் “சிப்பியின் உள்ளே முத்தாடும் சேதி” (யாருக்கு யார் காவல்)

https://youtu.be/4qshfRBf78Y?si=pEu2ZnqGHN0Uvp8f

பாடல் வழியாக அடையாளம் கொடுத்தவர் நேற்று 15.01.2024 இவ்வுலகை விட்டு நீங்கி விட்டார்.

பெண் என்றால் பெண் படத்துக்காக, 1967 இல் எம்.எம்.விஸ்வ நாதனிடம் முதன் முதலில் வாத்தியக் கலைஞராகப் பணியாற்றியவர். 

அந்த நேரத்தில் மங்கள மூர்த்தி, பென் சுரேந்தர் ஆகியோர் அங்கு அவருக்கு முன் மூத்த வாத்தியக் கலைஞர்களாக இயங்கியுள்ளார்கள்.

அக்கார்டியன் வாத்தியத்தைத் தானே சுயமாகக் கற்ற சுயம்பு இவர்.


மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விவநாதனைத் தன் இசை வழிகாட்டியாகக் கொண்டு 71 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் என்பதே அவரின் இசைச் சாதனை சொல்லும். கானா பிரபா

அக்கார்டியன் வாத்திய விற்பன்னராக இருந்தவர் 1969 முதல் கீபோர்ட் வாத்தியக் கலைஞராகவும் தன்னை ஆக்கிக் கொண்டார். @கானாபிரபா

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளப் படங்களில் ஏராளம் இசையமைப்பாளர்களிடம் பணியாற்றியவர்.  முதல் கீபோர்ட்டை வாங்குவதற்காகத் தான் காரை அடகு வைத்து 20,000 ரூபாவுக்கு வாங்கினாராம்.

ஆராரோ ஆராரோ அச்சன்ட மோள் ஆராரோ

https://youtu.be/YMNyFMD9jxk?si=3edyInAHigNlwESC

இவரின் புகழ் பூத்த பாடல்களில் ஒன்று.

கே.ஜே.ஜாய் கொடுத்த பேட்டி

https://youtu.be/lyJbUxmJGFs?si=4Tvgj6i_APTfO7bj


அவரின் இசையில் மிளிர்ந்த பாடல்கள் சில

https://youtu.be/eVzEp1WxBIM?si=If9Fehzcm6GOLP5D

தமிழில் “வெளிச்சம் விளக்கைத் தேடுகிறது”, “அந்தரங்கம் ஊமையானது” உள்ளிட்ட படங்களுல்கும் மேலும் இசை வழங்கியுள்ளார்.

“காதல் ரதியே கங்கை நதியே

 கால் தட்டில் காணும் ஜதியே”

https://youtu.be/_TToXX2JVYw?si=7fLlKWAdVE802Z3X

பாடல் எல்லாம் அந்தக் காலத்து இலங்கை வானொலியின் பொற்கால நினைவுகளைக் கிளப்பி கே.ஜெ.ஜாய் அவர்களை உயிர்ப்பித்து வைத்திருக்கும். 

எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு “சிப்பியின் உள்ளே” மற்றும் “காதல் ரதியே” பாடல்கள் அவரின் புகழ் கிரீடத்தை அலங்கரித்த முத்துகள்.

ஆழ்ந்த இரங்கல்கள் கே.ஜே.ஜாய் (K. J. Joy) 🙏

கானா பிரபா

16.01.2024Wednesday, January 10, 2024

❤️❤️❤️ கருப்பு நிலா விஜயகாந்துக்கு கான கந்தர்வன் ஜேசுதாஸ் ❤️❤️❤️

ஏதோ நினைவுகள்.....

கனவுகள்......

மனதிலே....மலருதே....

காவேரி ஊற்றாகவே

காற்றோடு காற்றாகவே.....

https://www.youtube.com/watch?v=rUyraZFVPA8

புரட்சிக் கலைஞர் விஜயகாந்தின் திரையுலகத் திறவுகோல்

பாட்டு, நம்மில் பலருக்கோ வசந்த கால நினைவுகளைக் கிளப்பும் நெம்புகோல் அது.

இப்படியாக போர்க்குணம் கொண்ட இளைஞன் விஜயகாந்தின் ஆரம்பம் தொட்டு அவர் தம் முக்கியமான படங்களிலே குரலாக அணி செய்தவர் கானகந்தர்வன் கே.ஜே.ஜேசுதாஸ்.

“குயிலே குயிலே கொஞ்சும் தமிழே”

“புலன் விசாரணை” என்றொரு திகிலூட்டும் படத்தில் விறைப்பான அதிகாரியின் கனிவான முகத்தை அணி செய்ய ஜேசுதாஸ் குரலே போதுமானதே?

“சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு” கேட்டால் அந்த நிறை மாதப் பெண்ணைத் தாங்கும் கணவன் குரலோடு கேப்டனின் முகமும் அல்லவா நிறைந்திருக்கும்?

கேப்டனுக்காக எழுச்சி முரசாகவும், ஜோடிக் குரலாகவும் T.M.செளந்தரராஜன் தொட்டு, கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்ரமணியம், மலேசியா வாசுதேவன், ஜெயச்சந்திரன் என்று அடுத்த யுகத்தின் முன்னணிப் பாடகர் வரிசை நீண்டு கொண்டு போகும்.

“உள்ளமெல்லாம் தள்ளாடுதே

 உள்ளுக்குள் ஏதேதோ எண்ணங்கள் போராடுதே”

https://www.youtube.com/watch?v=YGBrg32T2U0

என்று இந்தியத் திரையிசையின் மேதமையான சலீல் செளத்ரியுடமும் தப்பாமல் ஜேசுதாஸ் விஜயகாந்திடம் போய்ச் சேர்ந்தவர், அளவு கணக்கில்லாத இளையராஜா பாடல்களில் எல்லாவிதமான உணர்வோட்டங்களிலும் தீனி போட்டிருக்கிறார்.

இளையராஜாவின் தம்பி கங்கை அமரன் கொடுத்த விஜயகாந்தின் ஜேசுதாஸ் பாடிய “ஶ்ரீரஞ்சனி” https://youtu.be/hMRuCrsojbE?si=7zS1MRda0cpNEIne பாடலை இதுவரை கேட்காதவர்கள் கேட்டுவிட்டு ஓடி வாருங்கள். அரிதாக விளைந்த திரையிசை முத்து அது.

அதுபோலவே இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன் மகன் இளையகங்கை இசையமைத்த “ஆகாயம் கொண்டாடும் பூபாளமே” பாடலை இன்னும் கூட இலங்கையின் பண்பலைகள் விட்டுக் கொடுக்காமல் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.

“தோடி ராகம் பாடவா...

 மெல்லப் பாடு....”

அன்று ஆல் இந்தியா ரேடியோவை யாழ்ப்பாணத்தில் இருந்து கேட்ட காலத்து ஞாபகங்களை சந்திரபோஸ் ஜேசுதாஸ் ஊடாக விஜயகாந்த் வழி கடத்துவார்.

ஒரு சில படங்களே இசையமைத்த தேவேந்திரனிடம் கூட

“ராத்திரிக்குக் கொஞ்சம் ஊத்திக்கிறேன்” என்றும் “வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்” என்றும் 80களின் இளைஞர்களின் சோக ராகத்தை ஜேசுதாஸ் விஜயகாந்த் வழி கடத்தினார்.

சங்கர்- கணேஷ் இசையமையத்த ஒரு தொகை படங்களாய் விஜய்காந்த் நடித்த போது “சித்திரமே உன் விழிகள்” பாடலையும் அவர்கள் தம் பங்குக்குக் கொடுத்ததையெல்லாம் இலங்கை வானொலியின் பொற்காலம் பறையும்.

விஜய்காந்த் என்றதோர் ஆக்ரோஷமான நாயகனுக்கு ஜெயேட்டனும், தாஸேட்டனும் அளவெடுத்த குரலாய் அமைந்ததுதான் ஆச்சரியம்.

அதனால் தான் கொண்டாட்டம், தத்துவம், சோகம் என்று எல்லாவிதமான கலவைகளிலும் அவருக்காக அவர்கள் பாடியபோது அவரே ஆகினர். 

“நிலைமாறும் உலகில் 

நிலைக்கும் என்ற கனவில் 

வாழும் மனித ஜாதி

அதில் வாழ்வதில்லை நீதி"

கே.ஜே.ஜேசுதாஸ் பாடிய அந்தப் பாட்டு வந்தது என்னவோ விஜய்காந்தின் “ஊமை விழிகள்" திரைப்படம் தான். ஆனால் அவருக்காக அந்தப் படத்தில் அமைந்ததல்ல. இருந்தாலும் என்ன, அவரின் இறுதி ஊர்வலத்தில் பிரியாவிடை கொடுக்க, தொலைக்காட்சி ஒன்று அடிக்கடி இந்தப் பாடலை ஒலிபரப்பி சோக வலையில் சிக்கி இருந்தது அன்றைய தினம்.  

புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் நடித்த படங்களிலும், இன்னொருவருக்கான குரலாகவும் அவ்விதம் அணி சேர்த்த ஜேசுதாஸ், அன்று கேப்டனின் தோழன் சந்திரசேகருக்கான ஜோடிப் பாடலான 

“ரெண்டு கண்ணும் சந்தனக் கிண்ணம்" (சிவப்பு மல்லி)

கொடுத்ததைக் காலம் தான் மறந்து போகுமா?

அதுபோலவே “நம்பினால் கெடுவதில்லை” என்று அதே பெயரில் வெளிவந்த படத்திலும், “கண்ணே வா” (குழந்தை ஏசு), “ராஜ்ஜியம் தான் ஏதுமில்லை” (மக்கள் ஆணையிட்டால்), “ஒரு குள்ள நரி புல்லுக்கட்டு வெள்ளாடு" (சட்டம் ஒரு விளையாட்டு) என்று விஜயகாந்த் படங்களில் இன்னொருவருக்காக ஜேசுதாஸ் பாடியவை என்ற கணக்கு நீண்டு செல்லும்.

ஜேசுதாஸை இணை நாயகன் ரகுமானுக்குப் பாட வைத்து, விஜயகாந்துக்கு சுரேந்தரைப் பாடவைத்த “நான் உள்ளதைச் சொல்லட்டுமா?” (வசந்த ராகம்) தந்த புதுமையை மறக்கத்தான் முடியுமா? ஆரம்ப காலத்தில் எஸ்.என்.சுரேந்தர் தான் விஜயகாந்தின் பின்னணிக் குரலாகவும் இருந்தவர். கானாபிரபா

தொடந்து புரட்சிக் கலைஞர் விஜயகாந்துக்காக அன்று தொட்டு ஈராயிரம் வரை குரல் கொடுத்த கே.ஜே.ஜேசுதாஸின் பாடல் தொகுப்பை இங்கே முழுதுமாகப் பகிர்ந்து கொள்கின்றேன்.

1. எதோ நினைவுகள் – அகல்விளக்கு (இளையராஜா)

2. உள்ளமெல்லாம் தள்ளாடுதே – தூரத்து இடிமுழக்கம் (சலீல் செளத்ரி)

3. இன்றோ மனம் கலங்கி – தூரத்து இடிமுழக்கம் (சலீல் செளத்ரி)

4. சித்திரமே உன் விழிகள் – நெஞ்சிலே துணிவிருந்தால் ( சங்கர் – கணேஷ்)

5. மச்சமுள்ள பச்சக்கிளி – சபாஷ் (சங்கர் – கணேஷ்)

6. வெண்ணிலா ஓடுது – நாளை உனது நாள் (இளையராஜா)

7. அலை அலையாய் – நாளை உனது நாள் (இளையராஜா)

8. பூவோ பொன்னோ – புதுயுகம் (கங்கை அமரன்)

9. ஒரே ராகம் – அமுத கானம் (இளையராஜா)

10. மாலைக் கருக்கலில் – நீதியின் மறுபக்கம் (இளையராஜா)

11. மாலைக் கருக்கலில் (சோகம்) – நீதியின் மறுபக்கம் (இளையராஜா)

12. உன் பார்வையில் – அம்மன் கோவில் கிழக்காலே ( இளையராஜா)

13. உன் பார்வையில் (தனித்து) – அம்மன் கோவில் கிழக்காலே ( இளையராஜா)

14. இச்சென்று முத்தம் – எனக்கு நானே நீதிபதி (இளையராஜா)

15. ஊருக்கு உழைத்தான் – தர்ம தேவதை – (ரவீந்திரன்)

16. தொடு தொடு – தர்ம தேவதை – (ரவீந்திரன்)

17. ஆனந்தம் பொங்கிட – சிறைப்பறவை ( இளையராஜா)

18. உணவினிலே நஞ்சு வைத்தான் – வேலுண்டு வினையில்லை ( எம்.எஸ்.விஸ்வநாதன்)

19. வங்காளக் கடலே – மனதில் உறுதி வேண்டும் (இளையராஜா)

20. ராத்திரிக்கு கொஞ்சம் – காலையும் நீயே மாலையும் நீயே ( தேவேந்திரன்)

21. சிந்திய வெண்மணி – பூந்தோட்டக் காவல்காரன் ( இளையராஜா)

22. அடி கானக் கருங்குயிலே – பூந்தோட்டக் காவல்காரன் ( இளையராஜா)

23. ஶ்ரீரஞ்சனி – தம்பி தங்கக் கம்பி ( கங்கை அமரன்)

24. முத்துக்கள் பதிக்காத கண்ணில் – உழைத்து வாழ வேண்டும் (தேவேந்திரன்)

25. வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம் – உழைத்து வாழ வேண்டும் (தேவேந்திரன்)

26. மீனாட்சி கல்யாண வைபோகமே – மீனாட்சி திருவிளையாடல் ( எம்.எஸ்.விஸ்வநாதன்)

27. குயிலே குயிலே – புலன் விசாரணை ( இளையராஜா)

28. ஓ தென்றலே – சந்தனக் காற்று (சங்கர்-கணேஷ்)

29. அதிசய நடமிடும் – சிறையில் பூத்த சின்னமலர் ( இளையராஜா)

30. காலை நேரம் – மாநகர காவல் (சந்திரபோஸ்)

31. தோடி ராகம் பாடவா - மாநகர காவல் (சந்திரபோஸ்)

32. சந்தனக் கிளி ரெண்டு – மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் (இளைய கங்கை)

33. ஆகாயம் கொண்டாடும் – மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் (இளைய கங்கை)

34. – ஆகாயம் கொண்டாடும் (சோகம்) – மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் (இளைய கங்கை)

35. சந்தன மலர்களைப் பார்த்து – காவியத் தலைவன் (அரவிந்த் சித்தார்த்தா)

36. வண்ணக்கிளி வண்ண – காவியத் தலைவன் ( அரவிந்த் சித்தார்த்தா)

37. குங்குமம் மஞ்சளுக்கு – எங்க முதலாளி ( இளையராஜா)

38. வண்ணமொழி மானே – சேதுபதி ஐபிஎஸ் ( இளையராஜா)

39. ரோஜா வண்ண ரோஜா – வாஞ்சி நாதன் (கார்த்திக் ராஜா)

40. தந்தனத் தந்தன தை மாசம் – தவசி (வித்யாசாகர்)

இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் எங்கள் கான கந்தர்வன் கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களை நாமும் அவர் தம் பாடல்களோடு கொண்டாடி மகிழ்வோம்.

கானா பிரபா

10.01.2024