“வா வா என் இதயமே...
என் ஆகாயமே...
உன்னை நாளும் பிரியுமோ
இப் பூமேகமே....
https://youtu.be/sW_stgFQ4SY
பாடலைக் கேட்ட மாத்திரத்தில் பாடலின் உணர்வுக்குள் ஐக்கியமாகி, இந்த அற்புதமான இசையமைப்பைக் கொண்டாடவும் செய்யும் மனது.
“தேவ லோக பாரிஜாதம்
மண்ணில் வீழ்தல் என்ன ஞாயம்.....”
என்ற கணங்களில் உதாராக, விரக்தியின் வெளிப்பாட்டோடு தன் ஸ்டைலான வார்த்தைப் பிரயோகத்தைக் காட்டும் ரஜினி தான் ஞாபகத்துக்கு வரும் அளவுக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம் நியாயம் செய்திருப்பார்.
“ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான்
ஓயாமல் இசைக்கின்றது
இரு கண்ணிலும் உன் நியாபகம்
உறங்காமல் இருக்கின்றது
இந்தப் பாடல் எண்பதுகளின் இளசுகளின் காதல் தேசிய கீதம் என்றால், இதன் சோக வடிவில் எஸ்.பி.பி காட்டும் நளினங்களையும் ஆங்கில வார்த்தைப் பிரயோகத்தையும், “நான் யாருக்கும் அடிமை இல்ல” என்ற அந்தத் தெனாவெட்டையும் பிரதி பண்ணி நடித்த வாண்டுகளில் நானும் அடக்கம்.
யப்பா என்னமா இளையராஜா இசையமைத்திருக்கிறார் என்று உச் கொட்டி
“நான் அடிமை இல்லை” படப் பாடல்களை
ரசித்துக் கேட்கும் ரசிகர்கள் இன்றும் இருக்கிறார்கள்.
அதுவும் “வா வா இதயமே” பாடலைக் கேட்கும் போதெல்லாம் “என்னதான் சுகமோ நெஞ்சிலே” (மாப்பிள்ளை) பாடலுக்குள் என்னை இழுத்துப் போய் விடும்.
ஜூட் மேத்யூ என்பவரை உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ஆனால் விஜய் ஆனந்த் அல்லது விஜயானந்த் என்று சொன்னால் எண்பதுகளின் திரையிசைப் பிரியர்கள் சட்டென்று இனம் கண்டு கொள்வார்கள்.
இளையராஜா, கங்கை அமரன், ஹம்சலேகா போலவே சினிமாவுக்காகப் பெயர் மாற்றியவர் இவர்.
இசைஞானி இளையராஜாவின் தனி ராஜ்ஜியமாக எண்பதுகள் திகழ்ந்து கொண்டிருக்க ஆங்காங்கே உள்ளிருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் இசையமைப்பாளர்கள் பலர் வந்து உரசிப் பார்த்திருக்கிறார்கள். ஆனால் தமிழ் ரசிகர்களின் தாராள மனசு, என்ன நல்ல பாட்டாக இருந்தாலும் அது யார் கொடுத்தாலும் அது இளையராஜா போட்டதாகவே கண்ணை மூடிக் கொண்டு வரவில் வைத்து விடுவார்கள்.
மெல்லிசை மன்னர் காலத்தில் ஜி.கே.வெங்கடேஷ், ராஜன் நாகேந்திரா, விஜய பாஸ்கர் போல ராஜா காலத்தில் விஜயானந்த், மற்றும் ஹம்சலேகா ஆகிய கன்னடப் பட உலகில் கோலோச்சிய இசையமைப்பாளர்கள் வந்தார்கள்.
அப்படி வந்தவர் தான் விஜய் ஆனந்த். ஆனால் இவரைச் சில படங்களில் விஜய் ஆனந்த் என்றும் வேறு படங்களில் விஜயனந்த் என்றும் போட்டுக் குழப்பி விட்டார்கள்.
இந்த விஜயானந்த் ஐப் பரவலாக அறிமுகப்படுத்தியது “நான் அடிமை இல்லை”.
ஹிந்தியிலிருந்து கன்னடத்துக்குப் போய் அங்கு விஷ்ணுவர்த்தன் நடித்த
Nee Bareda Kadambari
படத்தை இயக்கிய துவாரகீஷ் அப்படியே கதையோடு அதே படத்தின் இசையமைப்பாளர் விஜயானந்தையும், ரஜினியின் கால்ஜீட்டையிம் வைத்து இந்தப் படத்தை இயக்கினார்.
ஏற்கனவே கன்னடத்தில் கொடுத்த பாட்டு
“ஒரு ஜீவன் தான்” பாடலின் மூலம் “நீ மீட்டிடா” (சந்தோஷம்)
https://youtu.be/XdrL41v2hms?si=cLn0LalQWxEwUqcm
சோகம்
https://youtu.be/fHTr_wY-s8Q?si=LoqydbsRUoiP_qpL
என்று தமிழுக்கும் வருகிறது. அத்தோடு புதிதாகவும் “வா வா இதயமே” பாடலோடு இன்னொரு அற்புதமான பாடலான
தேவி தேவி
https://youtu.be/uHNR2d--vAE
பாடலையும் கொடுத்தார் விஜயானந்த்.
போனாப் போகுது புடவை பறக்குது என்ற சில்மிஷப் பாடலும் ரசிக்க வைக்கும்.
“நான் அடிமை இல்லை” பாடல்களைக் கேட்க
https://youtu.be/aLYD-SFxNN4
பெரும்பாலும் விசு இயக்கிய படங்களில் இசை என்பது கோதாவரி கோட்டைக் கிழிடி என்று ஒட்டாமல் ஒப்புக்குச் சப்பாணியாக இருக்கும்.
ஆனானப்பட்ட இளையராஜாவோடு இணைந்த கெட்டி மேளம் படப் பாடல்களே பெட்டிக்குள் போனவை.
ஆனால் அதிசயமாக விசு பல்வேறு இசையமைப்பாளர்களுடன் பயணித்திருக்கிறார். அதில் இந்த விஜய் ஆனந்தும் ஒருவர் என்பது இன்ப ஆச்சரியம். குறிப்பாக ஊருக்கு உபதேசம், வாய்ச் சொல்லில் வீரனடி,
நாணயம் இல்லாத நாணயம், காவலன் அவன் கோவலன் ஆகிய படங்களுக்கு விஜய் ஆனந்த் தான் இசை. அதிலும் நாணயம் இல்லாத நாணயம் படத்தில்
அழகே நீ பிறந்து இவளிடம் தானோ
https://youtu.be/DRNGfHcmafo
என்ற அட்டகாசமான பாடலையும் கொடுத்திருக்கிறார். விசு கொஞ்சம் விரசத்தை அதிகப்படியாகப் போட்டு எடுத்த
காவலன் அவன் கோவலன் படத்தில் வரும்
சிட்டான் சிட்டான் குருவி
https://youtu.be/cfN3IyOztqM
அற்புதமான பாட்டு. இந்தப் பாட்டு விஜய் ஆனந்தின் சாகித்தியத்தைப் பறை சாற்றும் இன்னொரு இனிய மெட்டு.
அந்தக் காலத்தில் விஜிபி போன்ற நிறுவனங்கள் தான் புத்தம் புதுப் படங்களின் வீடியோப் பிரதிகளை வெளியிடும். அப்போது
ஒரு படத்தின் பின்னால் வரப் போகும் புதுப் படங்களின் முன்னோட்டத்தில்
“வெற்றி” என்ற சொல் வந்து இன்னொரு “வெற்றி” என்ற சொல் கீழே போட்டு இரண்டுக்கும் இடையில் “மேல்” என்ற சொல்லோடு அறிமுகமான “வெற்றி மேல் வெற்றி” பெரியதொரு எதிர்பார்ப்பைக் கிளப்பியது. பிரபு, சீதா நடித்த அந்தப்
படத்தின் காட்சியமைப்பு, ஒளிப்பதிவு வழியான உருவாக்கத்திலும் புதுமையாக இருந்தாலும் படம் எடுபடவில்லை. அந்தப் படத்திலும் விஜய் ஆனந்த் தான் இசை. அதில் வரும் ஜேசுதாஸ் பாடிய கண்ணான கண்மணியே
https://youtu.be/wIMGDc3bEgc
அதிகம் விரும்பிக் கேட்கும் சோக கீதமானது.
எண்பதுகளில் கை கொள்ளும் அளவு தமிழ்ப் படங்கள் இசைத்தாலும் மறக்க முடியாத “நான் அடிமை இல்லை” பாடல்களால் காலத்துக்கும் நினைப்பில் இருப்பார் விஜயானந்த் என்ற விஜய் ஆனந்த்.
கானா பிரபா
07.02.2024