Pages

Sunday, November 14, 2021

இயக்குநர் திலகம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இசைஞானி இளையராஜாவின் பாடலாசிரியராக

"கற்பகம்" என்ற திரைப்படத்தைத் தயாரித்து இயக்கி எடுத்து அந்தப் படத்தின் வசூலை வைத்து கற்பகம் ஸ்டூடியோ என்று கட்டினார் என்ற உண்மையை இந்தக் காலத்தில் சொன்னால் எவ்வளவு தூரம் வாய் பிளப்போம். இந்தப் படத்தின் வழியாக நாயகியாக அறிமுகமாகி முன்னணி நட்சத்திரம் ஆனார் கே.ஆர்.விஜயா.
"முந்தானை முடிச்சு" படத்தை கே.பாக்யராஜ் இயக்கி வெளியிட்ட போது அது தனது கற்பகம் படத்தின் தழுவல் என்று அந்தக் காலத்தில் சாடியிருந்தார் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்.
அப்போது கே.பாக்யராஜ் அதை மறுத்தெல்லாம் பேட்டி கொடுத்திருந்தார். ஆனால் காலம் எவ்வளவு தூரம் கணக்கைக் காட்டுகிறது. ஆனால் 2015 ஆம் ஆண்டு குமுதம் இதழில் கே.பாக்யராஜ் எழுதிய தொடரில் தனது முந்தானை முடிச்சு படம் உருவாக கற்பகம் படம் அடிப்படை என்று எழுதியிருந்தார். இது கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இறப்பதற்குச் சில காலம் முன்பே நிகழ்ந்தது.
பெண்களை மையப்படுத்திய கதைகளை எடுத்த வகையில் அந்தக் காலத்து பாக்யராஜ் இவர்.
"கற்பகம்" படத்தில் இன்னொரு சுவாரஸ்யம், விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்த இந்தப் படத்தில் வெறும் பெண் குரல் பாட்டுகள் மட்டுமே உண்டு. இதே போல தனி ஆண் குரல்களோடு பாடல்கள் அமைந்த வகையில் டி.ராஜேந்தரின் "ஒரு தலை ராகம்" , இளையராஜாவின் "இதயம்" ஆகியவை அமைந்திருந்தன.
இன்னொரு சுவாரஸ்யத் துணுக்கு, கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இசைஞானி இளையராஜா இசையில் இயக்கிய "பார்த்தால் பசு" (ராமராஜன் & பல்லவி நடித்தது) படத்திலும் சித்ரா மற்றும் சைலஜா பாடிய பெண் குரல் பாடல்கள் மட்டுமே உண்டு.
சித்தி, சாரதா, பணமா பாசமா உள்ளிட்ட வெற்றிச் சித்திரங்களை இயக்கியவர்.
கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய இறுதித் திரைப்படம் விஜய்காந்த், பானுப்பிரியா (இரட்டை வேடம்) நடிப்பில் "காவியத் தலைவன்" . பிரமாண்ட இயக்குநர் & தயாரிப்பாளர் ஆபாவாணனால் கதை, திரைக்கதை எழுதப்பட்டது.
நடிகர் தியாகராஜன், ஶ்ரீதேவி நடிப்பில்"தேவியின் திருவிளையாடல்" படத்தை எடுத்திருந்தார்.
தமிழ் சினிமாவில் இயக்குநரே பாடலாசிரியர் ஆக விளங்கிய பெருமையின் முன்னோடி இயக்குநர்களில் ஒருவராகவும் விளங்கியவர். பல்வேறு இசையமைப்பாளர்களுக்கு எழுதியிருக்கிறார்.
“உன்னழகைக் கன்னியர்கள் கண்டதினாலே” https://www.youtube.com/watch?v=GhxXHrBIP3c என்ற புகழ்பூத்த பாடல் கூட கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் கைவண்ணம் தான். அவரின் குரு நாதர் ஶ்ரீதர் தயாரித்த “உத்தம புத்திரன்” படத்தில் ஜி.ராமநாதன் இசையில் எழுதியிருந்தார்.
பொதுவாக ஶ்ரீதர், கே.பாலசந்தர் போன்ற தமிழ் சினிமாவின் புதுமை யுகத்தின் தொடக்க இயக்குநர்கள் இளையராஜாவோடு இணைந்து கொடுத்த படங்கள் வெற்றியையும் தனி கவனிப்பையும் பெற்றன.
ஆனால் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்க இளையராஜா இசையமைத்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கே.ஆர்.விஜயா (200 வது படம்) நடித்த "படிக்காத பண்ணையார்", "யுக தர்மம்", "பார்த்தால் பசு" போன்றவை அதிகம் பேசாப் படங்கள்.
இளையராஜா இசையில் இயக்குநர் திலகம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் நான்கு பாடல்களை எழுதிருக்கின்றார்.

யுகதர்மம் படத்தில்
மலேசியா வாசுதேவன் பாடிய “உன்னால் விளைந்ததடா’

எஸ்.ஜானகி பாடிய “என்னமோ பண்ணுதே”

மற்றும் "உருக்கு மனசு" என்ற பாடலும்,

இவற்றோடு படிக்காத பண்ணையார் படத்தில்
மலேசியா வாசுதேவன், எஸ்.சைலஜா பாடிய பாட்டு
“அட ஒண்ணும் தெரியாத பாப்பா”

ஆகியவையே அவையாகும்.

இன்று இயக்குநர் இமயம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்களது 6 வது நினைவாண்டாகும்.
புகைப்படம் நன்றி : கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் மகன் ரவி கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். Ravi KS Gopalakrishnan
கானா பிரபா
14.11.2021

Wednesday, November 10, 2021

பிள்ளைப் பாசமும் மனித ஜாதியும்



1991 ஆம் ஆண்டு நவம்பர் 5 தீபாவளி வெளியீடுகளில் வந்த இன்னொரு இளையராஜா படமும் உண்டு. ஆனால் காலவோட்டத்தில் இப்படியொரு படம் வந்த சுவடே இல்லாத உலகமும் வந்து விட்டது. அதுதான் வி.எம்.சி.ஹனீபா இயக்கத்தில் உருவான “பிள்ளைப்பாசம்”. 

முரசொலி செல்வம் தனது பூம்புகார் புரடெக்க்ஷன்ஸ் வழியாக வி.எம்.சி.ஹனீபாவை மலையாளத்தில் இருந்து தமிழுக்கு அழைத்து வந்து, கலைஞர் கருணாநிதி வசனத்தில் வந்து “பாசப் பறவைகள்” என்ற வெற்றிச் சித்திரத்தையும், தொடர்ந்து பாடாத தேனீக்கள் என்று தொடர்ந்ததும் வி.எம்.சி.ஹனீபா தொடர்ந்து தமிழில் இயங்கியதையும் முன்னொரு விரிவான பகிர்வில் கொடுத்திருந்தேன். அதன் தொடர்ச்சியாகத் தன் “ப” வரிசைப் படங்களில் ஒன்றாக மீண்டும் பூம்புகார் தயாரிப்பு நிறுவனத்தோடு இணைந்து வி.எம்.சி.ஹனீபா இயக்கிய படமே பிள்ளைப்பாசம்.

மரண தண்டனைக் கைதிகளைக் கழுவேற்றும் சிறைப் பணியாளராக சிவகுமாரும், தன் மகன் ராம்கியே அந்த மரண தண்டனைக் கைதியாகவும் எதிர் கொள்ளும் ஒரு சவால் நிறைந்த படமாக “பிள்ளைப் பாசம்” வெளியானது. ஆனால் முன்னணி நட்சத்திரங்களின் படங்களின் அலையில் அந்தத் தீபாவளித் திருநாளில் இம்மாதிரியான கனதியான கருப்பொருளில் அமைந்த இந்தப் படத்தை மக்கள் ஒதுக்கி விட்டார்கள்.

அதே ஆண்டு இன்னொரு படம் சிவகுமாரும் ராம்கியும் நடிக்க வெளியாக இருந்தது. அதுதான் மனித ஜாதி. 

பிரபல கதாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் கலைமணி அவர்கள் தன்னுடைய கதை, தயாரிப்பில் மனோபாலா இயக்கிய “மல்லுவேட்டி மைனர்” என்ற வெற்றிச் சித்திரத்தைக் கொடுத்த பின்னர், தானே கதை எழுதி இயக்கிய படம் தான் மனித ஜாதி.

ஆனால் பட வெளியீட்டில் சிக்கல் எழுந்து, தமிழகத்தில் திரையிட முடியாத சூழலில் வெளிநாட்டில் திரையிட்டு, படம் திருட்டு வீடியோவாக வந்து கலைமணி அவர்கள் இயக்கிய இந்த இறுதித் திரைப்படத்துக்கு இந்த நிலை நேர்ந்தது வருத்தம்.

1991 ஆம் ஆண்டில் இரட்டை நாயகர்களாக நடித்த சிவகுமார் & ராம்கி கூட்டணியின் பிள்ளைப் பாசம் மற்றும் மனித ஜாதி இரண்டுக்குமே இவ்வகைத் துரதிஷ்டம்.

பாடலாசிரியர், இசையமைப்பாளர், இயக்குநர்  என்று பன்முகம் கொண்ட ஆளுமை கங்கை அமரன் அந்தந்தத் துறைகளின் வழியாக என் ரசனைக்குத் திறமான தீனி போட்டவர் பாடகராகவும் கூட இதில் பங்கு போட்டிருக்கிறார். 

இசைஞானி இளையராஜாவின் குரலுக்கு நெருக்கமாக இருந்தாலும் கங்கை அமரன் குரலை அடையாளப்படுத்த முடியும். அவருக்குக் கிடைத்த பாடல்களை வைத்து ஒரு தனிப்பதிவு கொடுக்க வேண்டும். நான் கேட்ட வகையில் ஒன்று கூடச் சோடை போகாத ரகம்.

ஒரு சோறு "சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்" இசையரசி P.சுசீலாவுடன் பாடிய அந்தப் பாட்டைப் பற்றி எழுதும் போது "பூஜைக்கேற்ற பூவிது" என்று  கூடப் பாடிய சித்ரா ஞாபகப்படுத்துகிறார் இன்னொன்றை.

"மன்னன் கூரைச் சேலை" (சிறைச்சாலை) பாடலைப் பற்றி முன்னர் சிலாகித்து எழுதியிருக்கிறேன். ஒவ்வொரு மொழியிலும் ஒவ்வொரு ஆண் குரல்கள், மலையாளத்தில் இளையராஜா என்றால் தமிழில் கங்கை அமரன். 

 "அடி குயில்கள் பாடும் நாள் வந்தால்" என்று கடக்கும் அந்த அடிகளை இழுத்துப் பிடித்து ரசித்துக் கொண்டே இருப்பேன் மீண்டும் மீண்டும்.

அவ்வளவுக்கு கங்கை அமரன் இந்தப் பாடலில் ஒரு குறுகிய பகுதியில் நிறையவே நியாயம் செய்திருப்பார். 

மனித ஜாதி படத்தில் வரும் 

"இரு பாதம் பார்த்தேன்" பாடலும் கிட்டத்தட்ட "மன்னன் கூரைச் சேலை" பாட்டோடு ஒட்டி உறவாடக் கூடிய அளவுக்கு மெதுவாகப் பயணித்து

மனதைச் சூறையாடும் பாங்கு கொண்டது. இந்தப் பாடலில் கங்கை அமரன், சித்ரா இருவருக்குமே சம பங்கு. 

"இரு பாதம் பார்த்தேன் சிறு பூவைப் போலே”

https://www.youtube.com/watch?v=iJYhut5wNQ8

அந்தத் தொண்ணூறுகளின் ஆரம்பம் ஈழத்தில் கனத்த போர்க்காலம். உணவுப் பொருட்களுக்கே கூப்பன் கடைகளில் (ரேஷன்) வரிசையில் நின்றாலும் வித விதமாகப் பாட்டுக் கேட்கும் சுவைக்கு ஒன்றும் குறைச்சலில்லை நமக்கு.

புதிய கேஸட்டுகளை வாங்க வக்கில்லாத சூழலில், இருப்பிலும் இல்லை என்பது வேறு விடயம் பழைய நைந்து போன லேபல் எல்லாம் நொதிந்த ஒரு கேஸட்டை ரெக்கார்டிங் பார் காரரிடம் கொடுத்துப் பதிவு செய்து, சைக்கிள் டைனமோவில் மின் பிறப்பாகிப் பாடலைப் போட்டால் அந்த அறையே அதிர்ந்தது 

“நல்ல தலைவனும் தலைவியும் வாழும் வீடு தேவன் ஆலயம்”

https://www.youtube.com/watch?v=cEgTHkOgRHM

பிள்ளைப் பாசம் படத்தில் முதல் பாடலாகப் பதிவு செய்து கேட்ட அந்தப் பாட்டின் அதிர்வலையை இன்றும் நெஞ்சில் சுமந்து கொண்டிருக்கிறேன். பின்னாளில் நான் வானொலி நிகழ்ச்சி செய்யும் காலத்தில் எல்லாம் திருமண நாள் வாழ்த்துப் பாடல்களில் இந்தப் பாடலை நேயர் வாழ்த்துப் பகிர்வாக் கொடுத்து மகிழ்வது என்பது கொடுப்பினை.

பிள்ளைப் பாசம் படத்தின் பாடல்களைக் கேட்க, குறிப்பாக இளையராஜாவின் “விடிந்ததா” பாடலைக் கேட்டுப் பாருங்கள் படத்தில் எதிர்கொள்ளப் போகும் அந்த அவலத்தை நோக்கி நகரும் ஒரு துன்பியல் சங்கீதம்

https://www.youtube.com/watch?v=kPem1YyAU-Q

கானா பிரபா

10.11.2021

மனிதஜாதி படப்பிடிப்புப் புகைப்படம் நன்றி IMDB மற்றும் தினமலர்

Tuesday, November 9, 2021

இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்



இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் & இசைஞானி இளையராஜா கூட்டணி தொண்ணூறுகளில் எப்படிக் கலக்கியது என்பதை இந்த உலகமே அறியும். ஆனால் ஆர்.வி.உதயகுமாரின் முதல் இரண்டு படங்களில் “உரிமை கீதம்” மனோஜ் - கியான் இரட்டையர்கள் இசையிலும், தொடர்ந்து வந்த “புதிய வானம்” படம் அம்சலேகாவின் இசையிலும் வந்தது.
எப்படி ஆபாவாணன் குழு என்ற திரைப்படக் கல்லூரி மாணவர் கூட்டத்துக்கு மனோஜ் கியான் இரட்டையரின் மிரட்டும் இசை கை கொடுத்ததோ அது போல அடுத்த பிரிவு மாணவர் அணியில் இருந்து வந்த ஆர்.வி.உதயகுமாருக்கு முகவரி எழுதிய “உரிமை கீதம்” படத்துக்கும் மனோஜ் – கியான் தான் இசை. கார்த்திக் – பிரபு ஆகிய இரண்டு பெரும் நட்சத்திரங்கள் இணைந்த இப்படத்தின் எல்லாப் பாடல்களுமே சூப்பர் ஹிட்டானதில் வியப்பில்லை அப்படியொரு பிரபலம் கிட்டியது. அதில் “மெல்ல மெல்ல நடந்து வந்தது பாதம்” (வித்யாவுடன்) https://www.youtube.com/watch?v=DpKo-qDU9Y0 இனிமை சொட்ட, “பொன் மானே நில்லடி” (சித்ராவுடன்), “விடுகதை போட்டு விட்டு விடை ஒன்று தேடுகிறேன் ( உமா ரமணன், சுந்தரராஜன் இணைந்து) பாடல்களும் ரசிக்கப்பட்டவை.
அந்த நேரம் சத்யா மூவீஸ் தயாரிப்பில் சங்கர் - கணேஷ், கங்கை அமரன் உள்ளிட்டோர் இசையமைப்பாளர்களாக இருக்க, இந்தப் படம் நடிகர் சிவாஜி கணேசன் & சத்யராஜ் இணைந்து நடித்த பிரமாண்டப் படமாக அமைந்தது. தனது முதல் படமான
“உரிமை கீதம்” படத்தில் அனைத்துப் பாடல்களையும் தானே எழுதிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் “புதிய வானம்” படத்தில் மற்றைய பாடலாசிரியர்களுக்கும் வழி விட்டார்.அப்படியாக கங்கை அமரன் கூட ஒரு பாட்டை எழுதினார். இந்தப் படத்தில் எழுந்த நட்பால் கங்கை அமரன் இளையராஜாவிடம் ஆர்.வி.உதயகுமாரிடம் அறிமுகப்படுத்தினார். பின்னர் தொடந்தது அந்த இசைக் கூட்டணி. அதன் பிறகு தொடர்ந்து 9 படங்களில் இளையராஜா & ஆர்.வி.உதயகுமார் இணைந்த போது பெரும்பாலும் ஆ.வி.உதயகுமாரும், ஒன்றிரண்ட்ஜ் வாலியுமாக இருக்க, சிங்காரவேலன் படத்தில் மட்டும் பாடலாசியர் கலவையில் கங்கை அமரனுக்கு ஒரேயொரு பாட்டு கிடைத்தது, அது “ஓ ரங்கா ஶ்ரீலங்கா கொப்பரத் தேங்கா”.
இந்தப் படத்திலும் ஐந்து பாடல்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியமே சுளையாக அனைத்தையும் எடுத்துக் கொண்டார். சிவாஜிக்கும் & சத்யராஜுக்குமான கூட்டுப் பாடலை மலேசியா வாசுதேவன் & எஸ்.பி.பாலசுப்ரமணியம் (பெண் குரல் பேபி சங்கீதா) சேர்ந்து “ஒரு பாடல் சொல்கிறேன்” என்றும்,
“ராக்கிளியே” என்ற சூப்பர் ஹிட் பாடலையும் ஆர்.வி.உதயகுமாரே எழுதினார்.
புதிய வானம் பாடல்களைக் கேட்க
கானா பிரபா
இசைஞானி இளையராஜாவோடு ஆர்.வி.உதயகுமார் கூட்டணி அமைத்த முதற்படமாக அமைந்தது தொடர்ந்து வந்த "கிழக்கு வாசல்". தயாரிப்பாளர் ஜி.தியாகராஜனின் சத்யஜோதி ஃபிலிம்ஸ் இசைஞானி இளையராஜாவை வைத்துப் பண்ணிய வெற்றிப்படங்களில் "கிழக்கு வாசல்" பெரு வெற்றி கண்ட படமாக அமைந்து சாதனை படைத்தது. கார்த்திக், ரேவதி ஆகியோரின் சினிமாப் பயணத்தில் தவிர்க்க முடியாத படமாக இது இன்றளவும் இருக்கின்றது.
"தாங்கிடத்தத்த தரிகிட தத்த" என்று சந்தம் போட்டு நெஞ்சின் கதவுகளைத் தட்டி உள்ளே சென்று உட்காரும் "அட வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி வேணும்" பாடலாகட்டும் சித்ராவின் தேன் குரலில் "வந்ததேஏஏஏஏ குங்குமம்" என்ற மெல்லிசையாகட்டும் படத்தில் மீதமுள்ள பாடிப் பறந்த கிளி உள்ளிட்ட எல்லாப் பாடல்களையும் சேர்த்து கிழக்கு வாசல் படத்தின் பாடல்கள் தங்கக் கிரீடம் சூட்டவேண்டிய தராதரம்.
கிழக்கு வாசல் பாடல்கள்
ஒரு படம் இடைவேளைக்குப் பின் மீண்டும் தன் வழக்கமான இரட்டை நாயகர்கள் செண்டிமெண்டில் வந்த படம் "உறுதிமொழி" இதில் சிவகுமார், பிரபு முக்கிய நாயகர்கள். கானா பிரபா
ஆர்.வி.உதயகுமாரோடு திரைப்படக் கல்லூரி மாணவராக இருந்து வெளியே வந்து ஒளிப்பதிவாளராக இயங்கிய ரவி யாதவ், இவரின் தயாரிப்பில் வந்த படமே உறுதிமொழி. இப்போது ரவி யாதவ் முழுமையாகத் தமிழ் சினிமாவில் இருந்து ஒதுங்கி மும்பை சென்று விட்டார். கிழக்கு வாசல் கொடுத்த பெருங்கவனிப்போடு ஒப்பிடுகையில் உறுதிமொழி திரைப்படம் பெரிதாக எடுபடவில்லை. ஆனால் இந்தப் படத்தில் வந்த "அதிகாலை நிலவே அலங்காரச் சிலையே புதுராகம் நான் பாடவா" பாடல் அந்த நாளில் சென்னை வானொலியில் திரைகானத்திலும், நேயர் விருப்பத்திலும் ஒலித்துத் தன் இருப்பைக் காட்டியது இன்னும் இந்த ஜெயச்சந்திரன், எஸ்.ஜானகி கொடுத்த இந்த ஜோடிப்பாட்டை நேசிப்பவர்கள் நெஞ்சாங்கூட்டில் வைத்திருப்பர்.
உறுதி மொழி பாடல்கள்
தொடர்ந்து கார்த்திக், சிவகுமார் கூட்டணியோடு வந்தது "பொன்னுமணி". இந்தப் படத்தை எவ்வளவு தூரம் தமிழகத்து ரசிகர்கள் ரசித்தார்களோ தெரியவில்லை. ஆனால் ஈழத்து ரசிகர்களிடையே இந்தப் படம் வந்த காலகட்டத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. மின்சாரம் இல்லாது மண்ணெண்ணையில் நீர் இறைக்கும் மெஷினை இயக்கி மின்சாரம் தருவித்துப் படம் பார்த்த அந்தக் கற்காலத்தில் வந்த பொற்காலச் சினிமா இது. இசைஞானி இளையராஜாவின் மூத்த புதல்வர் கார்த்திக் ராஜா தன் தந்தையை "ஏ வஞ்சிக்கொடி" என்று முதன்முதலில் பாடவைத்து இசையமைத்தார். ஏனைய பாடல்களில் "நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா" எம் ஊரில் நாதஸ்வரம் வாசிப்பவர்களின் வாசிப்பில் அந்தக் காலத்தில் தவிர்க்க முடியாத ஒரு பாடலாகக் கல்யாண வீடுகளிலும், கோயில் திருவிழாவின் ஜனரஞ்சக வாசிப்பு நேரத்திலும் இடம்பிடித்த பாடலது.
பொன்னுமணி பாடல்கள்
"பாவலர் கிரியேஷன்ஸ்" இளையராஜாவின் அண்ணன் பாஸ்கர் தயாரிப்பில் கமலை "சிங்காரவேலன்" ஆக்கி ஆர்.வி.உதயகுமார் இயக்கிய படம். "அதிவீரராம பாண்டியன்" என்ற படத்துக்காக கமல் தனக்குக் கொடுத்த கால்ஷீட் என்றெல்லாம் தம்பி கங்கை அமரன் கோபித்தார். ஆனாலும் படம் இன்னொரு கரையில் வளர்ந்தது. படத்தில் வில்லன் உட்பட எல்லோருமே சிங்காரமாக இருக்கவேண்டும் என்பதை முன்னுறுத்துவதாக அப்போது பேட்டியில் எல்லாம் சொன்னார் ஆர்.வி.உதயகுமார். இசைஞானி இளையராஜாவின் நீண்ட சாம்ராஜ்யத்தில் எக்கோ இசைத்தட்டுக்கள் காலம் பெரியது. ஆனால் அவர்களோடு கொண்ட பிரிவால் தயாரிப்பாளர் ஏக்நாத் உடன் சேர்ந்து பனையோலை விசிறியைச் சின்னமாகப் போட்டு வந்த "ராஜா ரெக்காட்ஸ்" இல் சிங்காரவேலனும் வந்தது. அப்போது பாடல் ஒலிநாடா வாங்குபவர்களுக்குப் போட்டியும் பரிசு வெல்பவர்களுக்கு சிங்காரவேலன் படத்தின் வெற்றி விழாவில் கெளரவமும் கிட்டும் என்றெல்லாம் விளம்பரம். சும்மாவே இசைஞானியின் பாடல்கள் பட்டையைக் கிளப்பும், அதிலும் தன் குடும்பத் தயாரிப்பில் வந்த படம் என்றால் சொல்ல வேண்டுமா? பம்சுக்க பம்சுக்க பம்பம் தான் ;0
புதுச்சேரி கச்சேரி பாடலில் வரும் "டைகராச்சாரி" சொல் மட்டும் ஒலி இழந்து இலங்கை வானொலியில் ஒலித்தது, காரணம் ஏன் என்பதும் வேணுமோ? கானா பிரபா
இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய் பாடல் இன்றளவும் என்னை இம்சை செய்யும் இனிய காதலியாய்
சிங்கார வேலன் பாடல்கள்
"சின்னக்கவுண்டர்" ஆர்.வி.உதயகுமாருக்கு கிழக்கு வாசலுக்குப் பின் மீண்டும் பெரியதொரு வெற்றியைக் கொடுத்து அழகு பார்த்தது. படத்தில் விஜயகாந்த், மனோரமாவின் கெட் அப் மற்றும் சுகன்யாவின் பொருத்தமான பாத்திரத் தேர்வு, கவுண்டமணி செந்தில் இவற்றையெல்லாம் விஞ்சி இசைஞானி இளையராஜா போட்டுக் கொடுத்த ஒவ்வொரு பாடல்களுமே வெறும் அஞ்சு பாட்டுக் கணக்கல்ல. ஒவ்வொன்றும் காட்சிகளோடு இழத்துச் சேர்த்த முத்துக்கள். அதிலும் "முத்துமணி மாலை என்னைத் தொட்டுத்தொட்டுத் தாலாட்ட" பாடல் கடந்த ஒரு வருஷமாக நான் செய்யும் புதிய வானொலி நிகழ்ச்சியான "முத்துமணிமாலை" இன் மகுடப்பாடல். இந்தப் பாடல் வந்த சமயத்தில் இலண்டனில் இருக்கும் அண்ணர் வாங்கித் தந்த டேப் ரெக்காடரில் அப்போது இயங்கிய எஃப் எம் 99 என்ற வானொலியை ஒலிக்கவிட்டு "முத்துமணி மாலை" பாடலைப் பதிவாக்கியது ஒரு அழகிய நினைவாக.
சின்ன கவுண்டர் பாடல்கள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன் பார்வை தொடர்ந்து வெற்றிப்படம் கொடுக்கும் ஆர்.வி.உதயகுமார் மீது விழுந்த போது அது ஏவி.எம் என்ற பெரும் தயாரிப்பு நிறுவனமும் கூட்டுச் சேர "எஜமான்" படமாகியது. படம் முழுவதும் ரஜினியை வேஷ்டி கட்டவைத்து வானவராயர் ஆக்கியது ஒரு புதுமை என்றால், ஏவிஎம் உடன் ஊடல் கொண்டிருந்த இசைஞானி இளையராஜாவை வைத்துத் தான் படம் பண்ணுவேன் என்று விடாப்பிடியாக இருந்து அதைச் சாதித்தது ஆர்.வி.உதயகுமாரின் இன்னொரு சாதனை. கிழக்கு வாசல் படத்தில் வாலியும் பாட்டெழுதினார் ஆனால் தொடர்ந்து வந்த உறுதி மொழி, பொன்னுமணி படங்களில் முழுமையாக ஆர்.வி.உதயகுமாரே எல்லாப்பாடல்களையும் எழுதினார். மீண்டும் வாலிக்கும் ஒரு வாய்ப்பு எஜமான் படத்தில்.
இசைஞானி இதில் கொடுத்த பாடல் முத்துக்கள் ஒவ்வொன்றுமே நட்சத்திரத் தகுதி. அதிலும்
"ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்
விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்
இனியான இளமானே துணையான இளமானே"
என்ற பாடல் உச்சம். இதே பாடலை சோக மெட்டோடு ராஜாவே பாடியிருப்பது படத்தில் மட்டும் வரும்.
எஜமான் பாடல்கள்
நடிகர் பிரபுவின் 100வது படம் யார் இயக்குவது என்ற தகுதிச் சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டு வாய்ப்புக் கொடுக்கப்பட்டவர் ஆர்.வி.உதயகுமார். அமெரிக்கா சென்ற நதியாவை மீண்டும் களமிறக்கி, மீனாவையும் சேர்த்து இரட்டை ஜோடியாக்கி "ராஜகுமாரன்" படமாக்கினார். அன்றைய காலகட்டத்தில் இந்தப் படத்துக்கான விளம்பரம் கொஞ்ச நஞ்சமல்ல. ஆனால் ஏகப்பட்ட எதிர்பார்ப்பே படத்தின் வெற்றிக்கு ஆப்பு வைத்தது. என்னதான் இசைஞானி இளையராஜாவின் முத்தான பாடல்கள் இருந்தாலும் வெற்றி கொடுக்காத படம், பாடல்களை மட்டுமே வெற்றியாக்கியது. "சித்தகத்திப் பூக்களே" பாடலோடு "என்னவென்று சொல்வதம்மா" பாடல் மறக்கமுடியாத எஸ்.பி.பி கானம்.
ஆர்.வி.உதயகுமாருக்கு. தனக்கு ஆரம்ப காலத்தில் வெற்றி தேடித்தந்த நாயகன் கார்த்திக்கை வைத்து இலக்கியத்தரமான தலைப்பை வைத்தவர் கூட்டணியில் ஒரு சறுக்கலாக அமைந்தது நந்தவனத் தேரு.
அழகான அறிமுகம் ஶ்ரீநிதிக்கும் ஒரு முற்றுப்புள்ளி.
வழக்கம் போல எல்லாப்பாடல்களும் ஆர்.வி.உதயகுமார் எழுதினார். குறிப்பாக "வெள்ளி நிலவே வெள்ளி நிலவே வீண் சோகம் ஏனடி மானே"
பாடல் வெற்று வார்த்தைக் கவிஞர் அல்ல இவர் என்பதைக் காட்டிய ஒரு பாட்டு. மீண்டும் ஒருமுறை கேட்டுப் பாருங்கள் மீண்டும் ஒருமுறை கிறங்கிப் போவீர்கள்.
தமிழ் சினிமாவின் எண்பதுகளின் முக்கிய நட்சத்திரங்கள் அனைவரையும் இயக்கிப் பெருமை கொண்ட ஆர்.வி.உதயகுமாருக்கு முழுமையாக அரிதாரம் பூசிக்கொண்டால் என்ன என்று தோன்றியிருக்கும். அவ்வப்போது சிறு சிறு துண்டு வேடங்களில் வந்தவர், நடிகர் ஜெயராமோடு, தானும் நாயகனாகி "சின்ன ராமசாமி பெரிய ராமசாமி" என்ற படத்தை இயக்கினார். படத்தில் நடித்த பல நடிகர்களே ஃபீல்டை விட்டுப் போய்விட்டார்கள் ஆனால் படம் வருஷங்கள் கடந்தும் வெளிவராமல் இன்னும் பெட்டிக்குள் தூங்குகின்றது. இதுவரை இசைஞானி இளையராஜா, ஆர்.வி.உதயகுமார் சேர்ந்த கூட்டணியில் இறுதிப்படம் என்ற பெருமை மட்டும் தான் இப்போது இதற்கு. வாழையடி வாழையா என்ற கே.ஜே.ஜேசுதாஸ் பாடி இந்தப் படத்துக்காக இசைத்த பாடல் மட்டும் இன்னும் ஒலிக்கிறது வானொலிகளில்.
இசைஞானி இளையராஜாவோடு இணைந்து இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் கொடுத்த இந்த முத்தான பத்துப் படங்களோடு இன்னொரு சுற்றும் இணையவேண்டும் என்பதே உங்களைப் போன்ற என் ரசிகனின் அவா. பார்ப்போம் பொறுத்து.

ஆர்.வி.உதயகுமார் அர்ஜீனுடனும் நட்சத்திரக் கூட்டணி அமைத்தார் சுபாஷ் படம் மூலம். அந்த நேரம் அர்ஜுனுடன் ராசியான இசையமைப்பாளராக இயங்கி வித்யாசாகரின் இசைக்கு ஆர்.வி.உதயகுமார் கொடுத்த வரிகள் பாடல்களாகப் பரிணமித்தன.
குறிப்பாக “முகம் என்ன மோகம் என்ன” https://www.youtube.com/watch?v=ZhdSLwbQNqU

அந்தப் படத்தில் உச்சம் தொட்ட பாட்டு.

ஆர்.வி.உதயகுமாரின் முதல் படத்தைத் தயாரித்த சுபஶ்ரீ பட நிறுவனமே சுபாஷ் படத்தைத் தயாரித்ததும் குறிப்பிடத்தக்கது.


பின்னர் விக்ராந்த் நாயகனாக தமிழில் அவர் கொடுத்த படம் கற்க கசடற.
தெலுங்கில் திருட்டுப் பயலே படத்தை இயக்கியுமிருந்தார்.

“ஹாய் ஹாய் ஹாய் ஹாய் வெண்ணிலவே ஹாய்” இந்தப் பாடல் பின்னாளில் ஆர்.வி.உதயகுமார் தாரக ராமுடு என்ற தெலுங்குப் படத்தை இயக்கிய போது கோட்டி இசையில் இடம் பிடித்த பாட்டு.
இன்றும் தெலுங்கு தேசம் இப்பாடலைக் கொண்டாடுவதை இசை மேடைகளில் தரிசிக்கலாம். அப்படி ஒன்று எஸ்பிபியின் மேடைப் பகிர்வாக
இந்தப் படம் தெலுங்கில் இருந்து தமிழுக்கு “வெள்ளி நிலவே” என்ற பெயரில் மொழி மாற்றப்பட்ட போது தேடி தேடி ரசித்து வருகிறேன்
ஆர்.வி.உதயகுமார் அவர்கள் வெளியார் படங்களிலும் பாடலாசிரியராக இயங்கியதைப் பின்னர் பகிர்வாகத் தருகின்றேன்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் பாடலாசிரியர் & இயக்குநர் ஆ.ர்.வி.உதயகுமாருக்கு.
கானா பிரபா
09.11.2021
தயவு செய்து இந்தப் பதிவை வாட்சாப்பிலோ பிரதி எடுத்தோ, பெயரை அழித்தோ பகிராதீர்.

Sunday, November 7, 2021

கமல்ஹாசன் 67

உலக நாயகன் கமல்ஹாசனின் 67 வது பிறந்த நாள் இன்று.

கமல்ஹாசன் இளையராஜா கூட்டணிப் பதிவு போடலாமே என்று எண்ணம் தோன்றக் காரணம் "நீ ஒரு காதல் சங்கீதம்" 

அப்போது நினைவுக்கு வந்தது. எனவே இயன்றவரை காதல் பாடல்களாகவும், ஒரு படத்தில் இருந்து ஒரு பாடலாகவும், சோகம் தருவிக்காத பாடலாகவும், கமல்ஹாசன் பாடல் காட்சியில் தோன்றி நடித்ததாக இருக்கவேண்டும் என்றும் ஒரு விதிமுறையை மனதுக்குப் பிறப்பித்துப் பட்டியலை ஆரம்பித்தேன். கானா பிரபா

94 வீதமானவை காதல் பாடல்களாகவும் மீதி தவிர்க்க முடியாத நல்ல இனிமையான பொதுப் பாடல்களாகவும் அமைத்தேன்.

ராணி தேனி, மகளிர் மட்டும் நீங்கலாக 50 படங்கள் கமல்ஹாசன், இளையராஜா கூட்டணியில் வந்ததை இங்கே பகிர்கின்றேன். 

கானா பிரபா மீதமுள்ள 17 பாடல்களும் பிற இசையமைப்பாளர் இசையில் கமல்ஹாசனின் படங்களில் எனக்குப் பிடித்தவை.

இவை அனைத்துமே என் விருப்பம் சார்ந்த பட்டியல், முதலாவது பாடலைத் தவிர மற்றையவை தர வரிசையில் அமைந்தவை அல்ல. 

பாடல் தொகுப்பு கானா பிரபா

1. நீ ஒரு காதல் சங்கீதம் - நாயகன் 

2. வாழ வைக்கும் காதலுக்கும் ஜே - அபூர்வ சகோதரர்கள்

3. வளையோசை கலகலவென - சத்யா

4. பேர் வச்சாலும் - மைக்கேல் மதன காமராஜன்

5. மீண்டும் மீண்டும் வா - விக்ரம்

6. மனசு மயங்கும் - சிப்பிக்குள் முத்து

7. அந்தி மழை பொழிகிறது - ராஜ பார்வை

8. இந்த மின்மினிக்கு - சிகப்பு ரோஜாக்கள்

9. சின்னஞ்சிறு வயதில் - மீண்டும் கோகிலா

10. ஒரே நாள் உனை நான் - இளமை ஊஞ்சலாடுகிறது

11. பூங்காற்று புதிதானது - மூன்றாம் பிறை

12. பூங்காற்று உன் பேர் சொல்ல - வெற்றி விழா

13. காதல் தீபமொன்று - கல்யாண ராமன்

14. பேரைச் சொல்லவா - குரு

15. ஜெர்மனியின் செந்தேன் மலரே - உல்லாசப் பறவைகள்

16. இதழில் கதை எழுதும் நேரமிது - உன்னால் முடியும் தம்பி

17. விழியில் என் விழியில் - ராம் லக்‌ஷ்மண்

18. தாலாட்டுதே வானம் - கடல் மீன்கள்

19. பூ மலர்ந்திட - டிக் டிக் டிக்

20 பொன் மானே - ஒரு கைதியின் டைரி

21. சொல்லச் சொல்ல என்ன பெருமை - எல்லாம் இன்ப மயம்

22. வானம் கீழே வந்தாலென்ன - தூங்காதே தம்பி தூங்காதே

23. முத்தம் போதாதே - எனக்குள் ஒருவன்

24. எங்கே என் ஜீவனே - உயர்ந்த உள்ளம்

25. உன்ன விட - விருமாண்டி

26. காதல் ராகமும் - இந்திரன் சந்திரன்

27. சிறிய பறவை - அந்த ஒரு நிமிடம்

28. கண்மணியே பேசு - காக்கிச் சட்டை

29. ராதே என் ராதே - ஜப்பானில் கல்யாணராமன்

30. நான் பூவெடுத்து - நானும் ஒரு தொழிலாளி

31. கால காலமாக - புன்னகை மன்னன்

32. காதல் மஹராணி - காதல் பரிசு

33. கண்மணி அன்போடு - குணா

34. இன்னும் என்னை - சிங்கார வேலன்

35. இஞ்சி இடுப்பழகி - தேவர் மகன்

36. நீ பார்த்த பார்வைக்கொரு - ஹே ராம்

37. பூ பூத்ததை - மும்பை எக்ஸ்பிரஸ்

38. பன்னீர் புஷ்பங்களே - அவள் அப்படித்தான்

39. ஶ்ரீரங்க ரங்க நாதனின் - மகாநதி

40. எந்தன் நெஞ்சில் - கலைஞன்

41. வெளக்கேத்து வெளக்கேத்து - பேர் சொல்லும் பிள்ளை

42. ஆழக்கடலில் தேடிய முத்து - சட்டம் என் கையில்

43. செவ்வந்தி பூ முடிச்ச - 16 வயதினிலே

44. வான் போலே வண்ணம் - சலங்கை ஒலி

45. நிலா காயுது - சகலகலா வல்லவன்

46. மாருகோ மாருகோ - சதி லீலாவதி

47. இளங்கிளியே - சங்கர்லால்

48. ராக்கோழி கூவும் - மகராசன்

49. பருவம் உருக - ஹரே ராதா ஹரே கிருஷ்ணா

50. நானென்பது நீயல்லவோ – சூரசம்ஹாரம்

51. நல்ல மனம் வாழ்க (வி.தட்சணாமூர்த்தி ஸ்வாமிகள்) - ஒரு ஊதாப்பு கண் சிமிட்டுகிறது

https://www.youtube.com/watch?v=7INffdH4jzw

52. பாரதி கண்ணம்மா (எம்.எஸ்.வி) - நினைத்தாலே இனிக்கும்

https://www.youtube.com/watch?v=tj2ch971czQ

53. கல்யாணக் கோயிலில் (கே.வி.மகாதேவன்) – சத்யம்

https://www.youtube.com/watch?v=fLRw7-buz_I

54. நினைத்தை முடிப்பது (வி.குமார்) – ஆயிரத்தில் ஒருத்தி

  https://www.youtube.com/watch?v=HzR1pm6CoHA

55. உன்னை நான் பார்த்தது (சங்கர் கணேஷ்) – பட்டிக்காட்டு ராஜா

https://www.youtube.com/watch?v=LZK-BG6CmyQ

56. வா வா என் வீணையே (கங்கை அமரன்) – சட்டம்

https://www.youtube.com/watch?v=oDl_yfNQEsI

57. சர்க்கரைப் பந்தலில் (P.ஶ்ரீனிவாசன்)– பட்டம்பூச்சி

https://www.youtube.com/watch?v=5k8_B-aDoAo

58. புதுமுகமே சிறு மதுக்குடமே (ஜி.தேவராஜன்) - அந்தரங்கம் 

https://www.youtube.com/watch?v=6ENAxrM5qDE

59. நெஞ்சத்தில் போராடும் (ஷியாம்) – உணர்ச்சிகள்

https://www.youtube.com/watch?v=ibQ2L6xLgpE

60. எனது வாழ்க்கைப் பாதையில் (விஜய பாஸ்கர்) – மோக முப்பது வருஷம் 

https://www.youtube.com/watch?v=pLbEiNLzV1c

61. நான் எண்ணும் பொழுது (சலீல் செளத்ரி) – அழியாத கோலங்கள்

https://www.youtube.com/watch?v=xmcopYTiCXI

62. ஸ்வாசமே ஸ்வாசமே (ஏ.ஆர்.ரஹ்மான்) - தெனாலி

63. பூ வாசம் புறப்படும் பெண்ணே (வித்யா சாகர்) - அன்பே சிவம்

64. காதலி காதலி (தேவா) - அவ்வை ஷண்முகி

65. பூங்குயில் பாடினால் (மகேஷ்) - நம்மவர்

66. உன்னைக் காணாது (சங்கர் எசான் லாய்) - விஸ்வரூபம்

67. காதலாம் கடவுள் போல் (ஜிப்ரான்) -உத்தம வில்லன்

போனஸ் பாடல் : பரிந்துரை சரவணன் நடராஜன்

அண்ணா வாடா அட தம்பி வாடா (சந்திரபோஸ்) - சரணம் ஐய்யப்பா

https://www.youtube.com/watch?v=MmXkDbGJo2Eகானா பிரபா

07.11.2021


Friday, November 5, 2021

குணா










குணா திரைப்படம் வெளிவந்து இன்றோடு 30 ஆண்டுகளை எட்டிப் பிடிக்கின்றது.

05.11.1991 ஆம் ஆண்டு தீபாவளி நாளில் வெளியானது இப்படம்.

கமல்ஹாசன், புதுமுகம் ரோஷிணி, ரேகா, வரலஷ்மி ஆகியோர் நடித்த இந்தத் திரைப்படம் சாப்ஜானின் கதை, திரைக்கதையிலும் சந்தான பாரதி இயக்கத்திலும் அமைந்திருந்தது. வசனத்தின் கனதியில் எழுத்தாளர் பாலகுமாரனின் ஆழம் புரியும்.

குணா படத்துக்கான லொகேஷன் தேடியபோது கமலின் கண்ணிற்பட்டது கொடைக்கானலில் இருந்த குகையடிவாரம், அது குணா படத்தின் முக்கியமான காட்சிகளுக்குப் பயன்பட்டுப் பின்னாளில் குணா கேவ்ஸ் என்ற புகழோடு இப்போது சுற்றுலாப்பயணிகளின் கண் கவரும் இடமாக இருக்கின்றது.

இந்தப் படத்தைப் பற்றி அணு அணுவாக ரசித்து எழுதவேண்டும் என்பது என் வெகு நாள் ஆசை. அதற்கு முன் இந்தப் படத்தின் பின்னணி இசைத் தொகுப்பைப் கொடுத்து விடுகின்றேன். அபிராமியின் மேல் தீராத பக்தி கொண்டவர் அபிராமிப் பட்டர்.
இந்த அபிராமி மீது தீராக் காதல் கொள்கின்றான் குணசேகரன் என்னும் குணா. இப்படத்தின் பின்னணி இசையில் தெய்வீகம் கலந்ததொரு இசையைக் கொடுத்துச் சிறப்பித்திருக்கிறார் இசைஞானி இளையராஜா.



“பார்த்த விழி பார்த்த படி பூத்து இருக்க
காத்திருந்த காட்சி இங்கு காண கிடைக்க”
ஆன்மாவானது இந்த உலகியல் ஆசைகளைத் துறந்து இறைவனடி சேரும் மெய்த்தன்மையைச் சைவ சித்தாந்தம் வலியுறுத்துகின்றது. அதையே “பாசம்” என்ற உலகியல் இன்பங்களைக் கடந்து “பசு” ஆகிய மனிதப் பிறவி “பதி” எனும் இறைவனை அடையும் நெறியையே பதி, பசு, பாசம் என்ற முப்பொருளாக சைவ சித்தாந்தம் காட்டுவதை நாம் சிறு வயதில் படித்திருப்போம்.

“குணா” படத்தின் அடி நாதமும் இதுதான். வெளிப்பூச்சுக்கு அதன் கதை சித்த் சுவாதீனம் கடந்த இளைஞனின் அன்புத் தேடலாகவே இருக்கும்.
அபிராமியின் மேல் தீராத பக்தி கொண்டவர் அபிராமிப் பட்டர். இந்த அபிராமி மீது தீராக் காதல் கொள்கின்றான் குணசேகரன் என்னும் குணா. இப்படத்தின் பின்னணி இசையில் தெய்வீகம் கலந்ததொரு இசையைக் கொடுத்துச் சிறப்பித்திருக்கிறார் இசைஞானி இளையராஜா.

தனது அண்ணன் சாருஹாசனின் தொண்ணூறாவது பிறந்த நாளின் போது கமல்ஹாசன் கூட இருக்க இன்னொரு பாடகர் பாடிய “பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க” பாடலைக் கேட்ட போது குணா தன் காதலி அபிராமியை முதன் முதலில் தரிசித்த அதே மெய்சிலிர்ப்பும், பரவசமும் எழுந்தது. பாடிய விதத்தில் கொஞ்சம் சாஸ்திரிய சங்கீதத்தின் நிரவல் பூசப்பட்டு அக்மார்க் கர்நாடக சங்கீத வித்துவானின் தொனியை அவதானிக்க முடிகிறது. இதையும் இதே தொனியில் கமலே படத்தில் பாடியிருக்கலாமோ என்ற எண்ணம் எழுமளவுக்கு அதியற்புதம்.

இந்தக் காணொளியைப் பார்த்ததில் இருந்து மனம் “பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க” பாடலோடே ஐக்கியமாகிக் கிடக்கிறது. இந்தப் பாடல் தான் குணா படத்தின் theme music என்று சொல்லக் கூடிய அடி நாதம் எனலாம்.

நாயகி நான்முகி நாராயணி கை நளின பஞ்ச சாயகி
சாம்பவி சங்கரி சயமளை ஜாதினச்சுவாயனி
மாலினி வாரக சூலினி மாதங்கி என்று
ஆய கியாதி உடையாள் சரணம்…
சரணம்… சரணம்… சரணம்… சரணம்… சரணம்…
அபிராமி அந்தாதிப் பாடல் நிறையும் தருணம் இசை அதைத் தாங்கிப் பிடிக்கிறது.

அபிராமியைக் காணும் கணத்தில் துள்ளிக் குதித்து தன் தலையை மணி மேல் அடிப்பதை அப்படியே இந்தப் பாடலின் இசையோடு வரும் மணிச் சத்தத்தோடு பொருத்திய நுட்பம் தான் கலைஞானியும் இசைஞானியும் இரு வேறு ஆட்கள் அல்லர் என்பதைக் காட்டும். இங்கேயும் இவ்விருவருக்கும் இடையில் பதி, பசு, பாசம் நிறைந்த கூட்டு. இங்கே பாட்டெழுதிய வாலியாரையும் சேர்த்தணைக்க வேண்டும்.

படத்தின் நிறைவின் தன் அபிராமியின் ஆவி பிரியும் தருணத்தில்
புண்ணியம் செய்தனமே-மனமே.- புதுப் பூங் குவளைக்
கண்ணியும் செய்ய கணவரும் கூடி, நம் காரணத்தால்
நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப்
பண்ணி, நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே.
என்று குணா பாடி அரற்றுவான். அதனால் தான் சொன்னேன் குணாவின் ஆதியும் அந்தமும் இந்த அபிராமி அந்தாதி என்று.

குணா படத்தின் பின்னணி இசைத் தொகுப்பைச் செய்த வேளை அந்த இறுதிக் காட்சியில் கமல் இயலாமையோடும், பெருந்துயரத்தோடும் அழும் கணத்த்தை மிக நெருக்கமாக உணர்ந்து அப்படியே உறைந்து அழுது விட்டேன்.

“குணா!
நான் பேசணும்
போலீஸ் கிட்டப் பேசணும்
உன் மேல எந்தத் தப்பும் இல்லேன்னு...

என்று காயம்பட்ட மரணப் படுக்கையில் அபிராமி சொல்ல, குணாவோ தன்னை இவள் காப்பாற்றுகிறாளே என்ற எந்த வித கரிசனையும் இல்லாமல் அழுது கொண்டே தன் அபிராமி பட்ட காயங்களைப் பார்த்துத் துடித்துக் கொண்டே இருப்பான். இதை விட மெய்யான காதல் வேறு எங்கே உண்டு சொல்லுங்கள்?
பந்த பாசங்கள் துரத்த, பிறவிப் பெருங்கடலில் இருந்து நீங்கி பதி எனும் அபிராமியோடு சேர்கிறான் பசு எனும் ஆன்மாவாகிய குணா.‬
அந்த நாளில் இருந்து பின்னாளில் எல்லாம் இந்த கமல் “இல்ல இல்ல இல்ல” என்று அபிராமியின் பிரிவை ஏற்க மறுக்கும் காட்சியைப் பார்க்கவோ அன்றிப் பின்னணி இசையைக் கேட்கவோ நேர்ந்தால் கண்கள் அருவி மாதிரிக் கொட்டும் எனக்கு. இதனால் இலக்கியா அம்மா இந்த ஒலியைக் கேட்க விடாமலும் செய்திருக்கிறார். அவ்வளவுக்கு எனது வாழ்க்கையில் மிக நெருக்கமானது.

உயர் வகுப்புப் படித்த காலத்தில் எனக்கு உள ரீதியாகப் பெரும் அழுத்தம் வந்த போது ஊரில் இருந்த ஒரு சைவப் பாரம்பரியம் கொண்ட பெண் இந்த “அபிராமி அந்தாதி” பாடச் சொல்லி நான் பாடிய காலமும் அதன் வழி நிகழ்ந்த மனமாற்றமும் நினைவுக்கு வருகிறது. அந்த அளவுக்கு என் வாழ்க்கையில் புரையோடிப் போனது இந்த அபிராமி அந்தாதி.

பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க
காத்திருந்த காட்சி இங்கு காண கிடைக்க
ஊன் உருக உயிர் உருக தேன் தரும் தடாகமே
வழி வருக வழி நெடுக ஒளி நிறைக வாழ்விலே




படத்தின் முகப்பு எழுத்தோட்ட இசை


முதன் முதலில் ஆலயத்தில் அபிராமியைக் காணல்


அபிராமியை கவர வரும் வில்லனிடம் இருந்து தப்பித்தல்


மலையுச்சி சமாதிப் புகலிடத்தைத் தேடிப் போதல்


அபிராமி, குணாவை காரால் இடிக்கும் காட்சி


அவளை அபிராமியாக நினைத்து குணா உருகும் காட்சி


ஏகாந்த இரவில்


குணாவிடம் இருந்து மீண்டும் அபிராமி தப்பிக்கும் காட்சி


அபிராமியின் மனதில், தான் இருக்கிறேன் என்ற காதலோடு மெய்யுருகும் குணா. கலக்கல் இசை பரவ


காட்டுக்குள் காணும் நீரோடை, இசையால் குளிர்விக்க


எழுதி வைக்கப்பட்ட விதி "எனக்கு நீ உனக்கு நான்"


அபிராமி குணா மேல் கொள்ளும் காதல்



அபிராமியை குகைக்குள் வைத்து மணம் முடித்தல்


வைத்தியரைத் தேடிப் போகும் குணா


வில்லனால் தாக்கப்பட்ட குணா, அபிராமியிடம் ஆறுதல் தேடுதல்


அபிராமியும், குணாவும் இந்த உலகத்தை விட்டு நீங்கல். பிறவிப்பிணி என்னும் தளையால் கட்டுண்ட ஆன்மா இறைபதம் நாடி இறைமேல் பற்று வைத்து முத்தி நிலையை அடைதல் என்னும் உட்பொருளோடு அமைகின்றது இப்படத்தின் உட்பொருள்


படங்கள் நன்றி IMDB தளம்