

கீதாஞ்சலி, இயக்குனர் மணிரத்னம், இசைஞானி இளையராஜா, நாகார்ஜீனா என இந்தப் படத்தில் பணியாற்றிய முக்கிய கலைஞர்களுக்குப் பெரும் பேர் வாங்கிக் கொடுத்த படம் மட்டுமல்ல 21 வருஷங்களுக்குப் பின்னர் இன்றும் அதே புத்துணர்வைப் படம் பார்க்கும் இரண்டு மணி நேரம் கொடுக்கும் வல்லமை நிறைந்த காதல் காவியம். ஆரம்பத்தில் சற்றுத் தட்டு தடுமாறிப் பின்னர் மெளனராகம், நாயகன், அக்னி நட்சத்திரம் என்று தமிழில் தொடர்ச்சியான வெற்றிகளைக் குவித்த மணிரத்னம், மெல்ல ஆந்திராவை முற்றுகையிட்டு அப்போது வளர்ந்து வந்த வாரிசு நடிகர் நாகர்ஜீனாவை வளைத்துப் போட்டு கீதாஞ்சலி என்ற காவியத்தைக் கொடுத்தார். தந்தை நாகேஸ்வரராவ் தேவதாஸ் படத்தில் பின்னி எடுத்தவராயிற்றே, மகன் நாகார்ஜீனா விடுவாரா என்ன.

கூடவே ஜோடி கட்டிய கிரிஜா அப்போது புதுமுகம், அமெரிக்காவிலிருந்து வந்திருந்தார். கீதாஞ்சலி படத்தைத் தொடந்து மலையாளத்தில் பிரிதர்ஷன் இயக்கி மோகன்லால் நடித்த வந்தனம் படத்திலும் தலைகாட்டினார். அன்றைய காலகட்டத்தில் நடிகை அமலா மோகம் எங்கும் வியாபித்திருந்ததால் சற்றேறக்குறைய அதே முகவெட்டுடன் கிரிஜாவை மணி கட்டியிருக்கலாம். கீதாஞ்சலி படத்தின் வெற்றியில் கிரிஜாவின் அடக்கமான அதே சமயம் நாசூக்காகப் பண்ணும் குறும்பு நடிப்பும் பங்கு போட்டிருக்கும். நுறு நாட்களுக்கு மேல் ஓடிய கீதாஞ்சலி வெற்றிச் சித்திரம் சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த கதை, கலை இயக்கம் உட்பட ஆந்திர அரசின் ஏழு நந்தி விருதுகளையும், தேசிய அளவில் சிறந்த பொழுதுபோக்குச் சித்திரமாகவும் விருதுகளை அள்ளியது. பாரதிராஜாக்கள் காலத்துக்குப் பின் தமிழ் சினிமாவில் இன்னொரு பரிமாணத்தை ஆரம்பித்த மணிரத்னத்தின் ஓவ்வொரு வெற்றிப்படமும் வித்தியாசமான களங்களை அன்று கொண்டிருந்தது. அந்த வகையில் முழுமையாக காதலை மையப்படுத்தியிருந்தது இப்படம். மணிரத்னம் என்ற கலைஞனின் உயிர் நாடியாக ஒளிப்பதிவாளர் பி.சி.சிறீராமும் , இசைஞானி இளையராஜாவும் படமுழுதும் செயற்பட்டிருப்பது தெரிகின்றது.


இந்தப் படத்தில் வரும் ஆத்தாடி அம்மாடி பாட்டின் இடையில் வரும் ஆர்மோனிய இசையைத் தன் இசைக் குழுவில் இருந்தவர் சரிவர உள்வாங்காமல் இசையமைக்க, சலித்துப் போய் அந்த ஆர்மோனிய இசையைத் தானே இசையமைத்துப் பாட்டை உருவாக்கினார் இளையராஜா என்று முன்னர் பாடகி சித்ரா சிட்னி வந்த போது சொன்னதை இங்கே சொல்லியிருக்கிறேன்.
பாடகி சித்ரா சொன்ன அந்தப் பாட்டு
தெலுங்கில் "ஜல்லண்ட" என்றும் தமிழில் "ஆத்தாடி அம்மாடி தேன் மொட்டு தான்" என்றும் சித்ரா பாடும் அந்தப் பாட்டில் இசைஞானி இளையராஜாவே ஆர்மோனியம் வாசித்த பகுதி இதுதான்.
இதயத்தைத் திருடாதே பற்றிப் பேசிக்கொண்டே இருக்கலாம், எனவே இத்தோடு முற்று புள்ளி வைத்து ராஜாவை அழைக்கிறேன் இசை ராஜாங்கம் படைக்க

படத்தின் முகப்பு இசை ஒன்று
படத்தின் முகப்பு இசை இரண்டு
டாக்டரை கல்யாணம் பண்ணக் கேட்கும் பிரகாஷ் - பின்னணியில் விடிய விடிய நடனம் பாடலின் இசை வடிவம்
டாக்டரிடம் தனது வியாதி பற்றி அறியும் பிரகாஷின் அப்போதைய மனநிலையைக் காட்டும் இசை
பிரகாஷ் தன் பெற்றோரிடமிருந்து விலகித் தனியாகப் போகும் நேரம் துணையாக வரும் இசை
குறும்புக்கார கீதாஞ்சலியின் அறிமுகத்துக்குத் துணையாக வரும் இசை
"காவியம் பாடவா தென்றலே" பாடகி சித்ரா குரலில் ஒரு சில அடிகள், கீதாஞ்சலி பிரகாஷை கலாய்க்கும் தொனியில்
கீதா ஞ்சலியின் குறும்புத்தனக்காட்சி ஒன்றில் வளையவரும் இசைவடிவம்
விளையாட்டாக கீதாஞ்சலி சொல்லும் "ஐ லவ் யூ" பிரகாஷ் மனதில் விதையாக, பின்னணியில் எல்லாம் கலந்த இசைக்கலவை
பிரகாஷ் தன் மனம் இளைப்பாற பியானோ வாசிக்கும் காட்சி
கீதாஞ்சலியை தனியே விட்டு விட்டு வந்த விபரீதம் உணர்ந்து பிரகாஷ் அவளைத் தேடும் காட்சியில் பயம், ஏக்கம் எல்லாம் கலந்த இசையில் மேற்கத்தேய இசையோடு ஈடுகொடுக்கும் மிருதங்கத்தின் உணர்வும்
இந்தப் படத்தின் அடி நாதமாக விளங்கும் கதைக்கருவை கீதாஞ்சலி தன் உணர்வாக வெளிப்படுத்தும் நேரம் பரவசமாகப் பாயும் இசை பிரகாஷின் உள்ளத்துடிப்பாய் , இப்படத்தின் உச்சபட்ச இசை ஆலாபனை இதுதான். இதில் வரும் வயலின்களின் ஆர்ப்பரிப்பு ஏற்கனவே ராஜாவின் தனி ஆல்பமான nothing but wind இல் வரும் Mozart I Love You என்ற பாகம் தான்.
கீதாஞ்சலியை கல்யாணம் பண்ணச் சீண்டும் பிரகாஷ், குறும்புக்கார இசையோடு
பிரகாஷ் கீதாஞ்சலியின் இதயத்தைத் திருடிய போது வரும் காதல் ரீங்காராம்
கீதாஞ்சலி தன் காதலை வெளிப்படுத்தும் நேரம் புல்லாங்குழலில் "ஓ ப்ரியா ப்ரியா" மெட்டிசைக்க
பிரகாஷிற்கு நோய் இருப்பதை அறிந்து கீதாஞ்சலி அவனை விட்டு விலகும் நேரம்
நோய் முற்றிய நிலையில் கீதாஞ்சலி, எல்லாம் தொலைத்த நிலையில் பிரகாஷ் வயலின் மட்டும் அவனுக்குத் துணையாக சோகராகம் இசைக்கிறது ஓ ப்ரியா ப்ரியா என்று ஒலிக்கும் வயலின் அந்த இசையை மெல்லப் புல்லாங்குழலுக்குக் கையளிக்கின்றது.
கீதாஞ்சலி பிழைப்பாளா என ஏங்கும் உணர்வாய் எழுப்பும் இசையலைகள் அவள் எழும்பியதைக் கண்டு ஆரவாரிக்கின்றன
படத்தின் இறுதிக்கட்டம் கீதாஞ்சலியோடு பிரகாஷ் இணைவானா என்ற ஆர்ப்பரிப்பில் இசை மட்டும் பரவி நிற்க 4.17 நிமிடக்காட்சியில் "ஓடிப்போயிடலாமா" எனக் கீதாஞ்சலி அவன் காதில் கிசுகிசுக்கும் ஒற்றை சொல் மட்டுமே வசனமாக இருக்கிறது.
ஏக்கம் என்ன பைங்கிளி என்னை வந்து சேரடி
நெஞ்சிரண்டு நாளும் பாட காவல் தாண்டி பூவை இங்காட
காதல் கீர்த்தனம் காணும் மங்கலம்
ப்ரேமை நாடகம் பெண்மை ஆடிடும்
"கீதாஞ்சலி தெலுங்குப் படத்தில் வந்த பாடல்களின் தொகுப்பு
1. ஓ ப்ரியா ப்ரியா - எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா
2. நந்தி கொண்ட - எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா
3. ஓம் நமஹ -எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி
4. ஆமனி பாடவா - எஸ்.பி.பாலசுப்ரமணியம்
5. ஜல்லன்ர - சித்ரா
6. ஜகட ஜகட ஜகடம் - எஸ்.பி.பாலசுப்ரமணியம்
