பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் ராஜாதி ராஜா வந்த நேரம் என்று நினைக்கிறேன். அதுவரை ரஜினிகாந்த் நடித்த படங்களை ஒன்று திரட்டி அபூர்வமான புகைப்படங்கள், செய்திகளோடு ஒரு பெரிய புத்தகம் கிட்டியது. ஆசையாக அதைப் பள்ளி நண்பர்களுக்குக் காட்ட எடுத்துச் சென்றது தான் அது பின்னர் வீடு திரும்பவில்லை. யாரோ ஒரு நண்பன் அதைச் சுட்டுட்டான் என்ற வருத்தம் இன்றளவும் உண்டு :-)
விகடன் தீபாவளி மலரில் இருந்து சிறப்பிதழ்கள் வரும்போது இயன்றவரை வாங்கிப் பத்திரப்படுத்திவிடுவேன். பின்னர் கட்டுரை எழுதும் போது சும்மா எறியாமல் ஆதாரங்களோடு துணை நிற்கும் என்பது முக்கிய காரணம். அந்த வகையில் குமுதம் சஞ்சிகை சமீபகாலமாக வெளியிட்டு வரும் சிறப்பு மலர் வரிசையில் நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாள் சிறப்பு மலரை முன்னர் வாங்கிப் படித்த போது பெரும் ஏமாற்றமே கிட்டியது. கட்டுரைகளில் கருத்துச் செறிவை விட ஏகப்பட்ட பொன்னாடைகளும், மாலை மரியாதைகளும் குவிந்திருந்தன. நான் எதிர்பார்த்திருந்த அபூர்வமான தகவல் குறிப்புகள் கிட்டாது ஏமாற்றமளித்த மகர் அது.
நடிகர் கமல்ஹாசனின் 60 வது பிறந்த நாள் சிறப்பு மலரை குமுதம் வெளியிடப் போவதாக அறிவிப்பு வந்ததும் பாதி நம்பிக்கையோடு தான் சிட்னிக் கடைகள்ல் அதைத் தேடினேன். அப்படி ஒரு வஸ்து இல்லை என்று எல்லா இடமும் கை விரித்தார்கள். கடைசி முயற்சியாக ஒரு கடைக்குத் தொலைபேசினேன்.
"ஓம் புத்தகம் இருக்கு வாங்கோ எடுத்து வைக்கிறன்" என்ற கடைக்காரரின் உறுதிமொழியை அடுத்து ஒரு மணி நேரப் பிரயாணத்தில் "கமல் 60 சிறப்பு மலர்" என் கையில் கிட்டியது. இரண்டு நாட்கள் என் காலை ரயில் பயணம் இந்த நூலை வாசிக்க அர்ப்பணமாயிற்று.
பத்திரிகை உலகில் நீண்ட நெடிய அனுபவம் கொண்ட "மணா" அவர்களைத் தொகுப்பாசிரியராகக் கொண்டு வந்திருக்கும் இந்தச் சிறப்பு மலர் படித்து முடித்ததுமே கமல்ஹாசன் குறித்து ஒரு நிறைவான விவரணப்படம் பார்த்த திருப்தி தான் மனதில் எழுந்தது. அவ்வளவு சிறப்பாக ஒன்றுக்கொன்று ஒற்றுமையாக அமையாத தனித்துவமான அம்சங்களைக் கொண்ட கட்டுரைகளின் கோர்வையாக வெகு சிறப்பாக வந்திருக்கிறது இந்த மலர்.
இந்த மலரில் என்னுடைய வாசிப்பில் மதிப்புக்குரிய இரா.முருகன் சார் பகிர்ந்த "கமல்: மூன்று அழைப்புகள்" என்ற கட்டுரை எழுதிய உத்தி முதன்மையாகக் கவர்ந்தது. இரா.முருகன் சார், கமலோடு திருவனந்தபுரம் போய் நீல.பத்மநாபனைக் கண்டு பின்னர் அமரர் ரா.கி.ரங்கராஜனின் நினைவுகளோடு இறுதியில் கமலின் மூன்றாவது அழைப்பின் மூலம் கமல்ஹாசனின் தேடலை மிகவும் சிறப்பான உத்தியில் வடிவமைத்திருந்தார்.
"நடிப்பின் வேறுபாட்டைக் கோடிட்டுக் காட்டியவர்" என்ற சுகுமாரனின் படைப்பே இந்த மலர் எவ்வளவு சுயாதீனமாக இயங்கியிருக்கிறது என்பதற்கான மிகச் சிறப்பான சான்று. கமலின் மலையாள சினிமா உலகத்தில் இருந்து இன்று வரை நடிப்பின் பரிமாணத்தை வெறும் புகழ் மாலையாக அல்லாமல் தர்க்க ரீதியாகவும் ஆங்காங்கே குட்டு வைத்தும் எழுதுகிறார் சுகுமாரன். இம்மாதிரிக் கட்டுரையை ஒரு சிறப்பு மலரில் எதிர்பார்க்க முடியாது. கட்டுரை இறுதில் சுகுமாரன் கேட்ட அந்தக் கேள்விக்கு கமல் தன் பாபநாசம் படம் மூலம் நிரூபிக்கவேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தி நிற்கின்றது.
சுகுமாரனின் எழுத்தை இதுகாறும் நான் வாசித்ததில்லை இப்போது இவரின் எழுத்தில் ஈர்ப்பு வருமளவுக்கு இந்த ஒரு கட்டுரையிலேயே ஆட்கொண்டு விட்டார்.
டிஸ்கோ காலத்து இளைஞனில் இருந்து பரிணாமம் பெற்ற இந்திய இளைஞர் வாழ்வியலோடு ஒப்பிட்டு ஜெயமோகன் எழுதிய கட்டுரை வழியாக தென்னிந்தியச் சமூகத்தின் பிரதிபலிப்பாக கமல்ஹாசனை நிறுவி முடிக்கின்றார்.
நடிகை கெளதமி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மோகன்லால், மம்முட்டி, பாடகர் கார்த்திக், கன்னட ராஜ்குமார், ரமேஷ் அர்விந்த் போன்றோரின் பகிர்வுகளில் ஒரு சில தகவல் கிட்டினாலும் மாமூல் வாழ்த்து மடல்களாகவே மேலோங்கி நிற்கின்றன.
ஆச்சரியமாக எதிர்பார்த்திராத சிறப்புப் பகிர்வுகளாக ரமேஷ் கண்ணா, சார்லி போன்றோரிடமிருந்தும், கமலின் உடற்பயிற்சியாளர் ஜெய்குமாரிடமிருந்தும் வந்தவை சுவாரஸ்யம் மிக்கவையாக உள்ளன.
இயக்குநர் சிகரம் பாலசந்தர், இயக்குநர் இமயம் பாரதிராஜா ஆகியோரின் வழியாக வந்த செய்திகளில் கமலோடு இணைந்த காலகட்டத்து அனுபவ வெளிப்பாடுகளையே பெரிதும் எதிர்பார்த்திருந்தேன்.
நண்பர் ராசி அழகப்பன் அவர்கள் கமல்ஹாசனின் உதவி இயக்குனராகவும், கமலின் பிரத்தியோக சஞ்சிகை "மய்யம்" இதழின் துணை ஆசிரியராகவும் இருந்தார் என்ற செய்தியை மட்டுமே அறிந்திருந்த எமக்கு அவரின் "மருதநாயகத்துக்குப் போட்ட விதை" என்ற கட்டுரை வழியாக "மய்யம்" காலத்தை அடக்கிய கட்டுரையும் சிறப்பானது.
கமல் 60 என்ற செய்தித் துளிகளும் கமல்ஹாசன் குறித்த பல சுவையான செய்திகளைத் தாங்கி நிற்கின்றது.
கமலின் பல்வேறு பரிமாணங்களையும் காட்டிய இந்தத் தொகுப்பில் அவரின் ஆரம்ப கால நண்பர் சந்தானபாரதி, இயக்குநர் சிங்கிதம் சீனிவாசராவ் போன்றோருக்கும் இடம் ஒதுக்கியிருக்கலாம்.
நடிகராகவும், நடனத்திலும் சிறப்பு மிகு கமல் பாடகராகவும் தன்னை நிரூபித்தவர். அதற்கும் இந்த மலரில் இடமில்லாதது ஓரவஞ்சனை. சிங்காரவேலன் பாடல் ஒலி நாடாவில் இளையராஜா கமலின் தனித்துவமான குரலைச் சிலாகித்திருப்பார். அதைப் போன்றதொரு கட்டுரை அமையவில்லை இங்கு.
எழுத்தாளர் வண்ண நிலவன்,தொ.பரமசிவம் போன்றோரின் பகிர்வுகளும் நிறைவானவை, கமலின் குணம்சத்தின் இன்னொரு சாட்சியங்கள்.
வசூல் ராஜா பட அனுபவம் வழியாக இயக்குநர் சரண் கொடுத்த கட்டுரையும் நன்று.
எஸ்.பி.முத்துராமன், கிரேஸி மோகன் போன்றோர் கமலுக்காகவே நேர்ந்துவிடப்பட்டவர்கள். அவர்களின் கட்டுரைகள் எதிர்பார்த்தது போலவே.
தாயம்மா, சுதந்திரமான கவிதை ஆகிய கமல் எழுதிய கவிதைகள் சிறப்புச் சேர்க்கின்றன.
ஓவியர் ஶ்ரீதரின் கட்டுரையோடு வித விதமான கமல் ஓவியங்கள் அட்டகாச இரட்டை விருந்து.
நடிகர் சிவகுமார் பேஸ்புக்கில் எழுதுவது போல இன்னும் சிறப்பாகக் கொடுத்திருக்கலாம். சிகப்பு ரோஜாக்கள் அனுபவத்தோடு முடித்துக் கொண்டுவிட்டார்.
மனோ பாலாவின் கட்டுரையைத் தாண்டி தான் நேசித்த பத்து கமல் பாத்திரங்களை வைத்து இயக்குநர் ஆர்.சி.சக்தி தந்த கட்டுரை கமல் ரசிகனின் நுட்பமான வெளிப்பாடாக அமைகின்றது. அந்தப் பத்துப் படங்களின் மீதான பார்வையில் கமல் மீதான இவரின் ஆழமான நேசிப்பு முலாம் பூசப்பட்டிருக்கிறது.
இன்னும் எஸ்.பி.பாலசுப்ரமணியம், இயக்குநர் கே.விஸ்வ நாத் போன்ற தவிர்க்க முடியாத ஆளுமைகளும் கமல் குறித்த இந்தப் பெட்டகத்தில் வந்திருந்தால் இன்னும் சிறப்புச் சேர்ந்திருக்கும்.
தேசாபிமானி என்ற மலையாள இதழுக்கு கமல் கொடுத்த பேட்டியை அச்சொட்டாகத் தமிழ் வடிவமாக்கிப் புண்ணியம் சேர்த்துவிட்டார்கள். மாமூல் கேள்விகளாக இல்லாது கமலின் ஆரம்ப கால வாழ்க்கை, மலையாள சினிமா உலகம் என்று விரியும் கேள்வி பதில்களில் மலையாள நடிகர் சத்யனுடனான ஆத்ம பந்தத்தைப் படிக்கும் போது கமலின் இடத்தில் இருந்தேன், நெகிழ்ந்தேன்.
"எழுத்தாளன் அவனது படைப்புகளில் வாழ்வது போல ஒரு நடிகன் எல்லாத் தலைமுறையினரின் மனதில் இடம்பெற்றிருப்பதாகச் சொல்ல முடியாது" என்று தன் பேட்டி வழியாகச் சொன்ன இந்தக் கூற்றை மறுபரிசீலனை செய்ய வைக்கின்றது இந்த "கமல் 60 சிறப்பு மலர்".
சினிமா ஊடகத்தில் சவாரி செய்து நிதமும் தேடிக்கொண்டே "தேடலும் பதித்தலும்" ஆக வாழும் ஒரு மகா கலைஞனுக்கான சாந்துப் பொட்டு இந்த மலர்.