Pages

Tuesday, June 28, 2022

“வாராயோ வான்மதி” பாடலோடு திரையிசையிலிருந்து விலகிய பாடகி உஷா ஶ்ரீனிவாசன் 🎧❤️


இரு வாரம் முன்  “வாராயோ வான்மதி தாராயோ நிம்மதி” பாடலை முன்வைத்து அந்தப் பாடலில் இடம்பெற்ற ஆண் குரல் மாதவம்பட்டி ரமேஷ் குறித்து ஒரு பகிர்வை இட்டிருந்தேன்.

அப்போது இந்த “வாராயோ வான்மதி” பாடலில் இடம் பிடித்த பெண் குரல் உஷா ஶ்ரீனிவாசன் அவர்கள் குறித்த தகவலைப் பகிருமாறு ஒரு கோரிக்கை வந்தது.

உஷா ஶ்ரீனிவாசன் அவர்கள் தற்போது அமெரிக்காவில் இருப்பதை அறிந்து அவருக்குத் தகவல் அனுப்பினேன். உடனே அழைக்குமாறு சொன்னார். அவரிடம் சிட்னியில் இருந்து தொலைபேசினேன்.

“வாராயோ வான்மதி” https://www.youtube.com/watch?v=lL7Pe2D98u4 பாடலுக்கு அவர் அழைத்து வரப்பட்ட வரலாற்றையும் மகிழ்ச்சியோடு கூறினார்.

உஷா ஶ்ரீனிவாசன் அவர்கள் சாஸ்திரிய இசையில் துறை போனவர். அவரின் நட்பு வட்டத்தில் ஒருமுறை குடும்ப நிகழ்வில் இவர் பாடியதை அங்கு வந்த விஜயரமணி என்ற டி.எஸ்.ராகவேந்தர் அவர்கள் கண்டு கொண்டார். உஷா ஶ்ரீனிவாசனின் குரல் அவருக்குப் பிடித்துப் போய் விட்டது.

விஜயரமணி வேறு யாருமல்ல இந்தக் காலத்து 2கே கிட்ஸுக்குப் புரியும்படி சொல்ல வேண்டுமென்றால் விஜய் சூப்பர் சிங்கர் நடுவராக வரும் பாடகி கல்பனாவின் அப்பா.

வைதேகி காத்திருந்தாள், சிந்து பைரவி போன்ற படங்களில் குணச்சித்திரமாக மிளிர்ந்தவர். மெல்லிசை இசைக்குழுவை எண்பதுகளிலும் தொடர்ந்தவர், இசையமைப்பாளர், பாடகர் என்பது அவரின் முதற் தகுதி. இளையராஜாவோடு ஆரம்ப நாட்கள் தொட்டு நட்பாக இருந்து வந்த விஜயரமணி உடனே உஷா ஶ்ரீனிவாசனிடம்

“ஏன் நீங்கள் இளையராஜா சாரைப் பார்க்கக் கூடாது?” 

என்று அன்பு வேண்டுகோளை முன்வைக்கிறார்.

உஷா ஶ்ரீனிவாசனும் இளையராஜாவைச் சந்திக்கவும், ராஜா இவரை ஒரு கீர்த்தனை பாடச் சொல்லிக் கேட்கிறார். பாடி முடித்த பின்னர் 

“பாடும் போது அருமையாகச் சஞ்சாரம் செய்கிறீர்கள்” என்ற பாராட்டை ராஜாவிடம் வாங்கிக் கொண்டவர் பதிலுக்குப் பரிசாகப் பெற்றது “பகல் நிலவு” படத்துக்காக “வாராயோ வான்மதி” பாடல்.

“வாராயோ வான்மதி பாடலை நான் முதலில் பாடும் போது கொஞ்சம் சோகம் அப்பியது போலப் பாடவும்”, ராஜா சார் 

“அப்படி இல்லைம்மா அந்தப் பாடலில் நீங்க பாடும் போது அந்தத் தொனி வரக்கூடாது” என்று சொல்லி வைத்தாராம். 

தனக்கு இந்தப் பாடலுக்குப் பயிற்சி கொடுத்த, ஆர்மோனியமும் கையுமாக இருந்த ராஜாவின் உதவியாளர் சுந்தரராஜன் சார் ரொம்பத் தங்கமான மனுஷன்” என்றும் இந்தப் பாடல் அனுபவத்தைச் சொன்னார் உஷா ஶ்ரீனிவாசன்.

“கேளாயோ கண்ணா

 நான் பாடும் கீதம்” (நானே ராஜா நானே மந்திரி)

https://www.youtube.com/watch?v=d6XuRWXEcYk

என்ற பாடலில் பி.சுசீலாவுடன் நீங்களும் சேர்ந்து பாடுவதாக ரெக்கார்ட் இல் எல்லாம் இருக்கே ஆனா அந்தப் பாட்டில் சுசீலாம்மா தனித்துப் பாடுவது தானே இருக்கு?

கானா பிரபா இன்னொரு கேள்வியைக் கேட்டேன்,

“வாராயோ வான்மதி” பாடல் அந்த நேரம் ஹிட் ஆனதும் நம்ம குடும்பத்துக்குச் சினிமாப் பாட்டு ஒத்து வராதுன்னு தடை போட்டு விட்டார்கள். அதே சமயத்தில் இந்தப் பாடல் பாடும் வாய்ப்பு வந்தும் நான் பாடவில்லை” என்று தெளிவுபடுத்தினார் உஷா ஶ்ரீனிவாசன்.

ஏழு வயதில் சங்கீதம் பயின்று தன் 14 வது வயதில் அரங்கேற்றியவர், ஈஸ்வராலயா http://www.eswaralaya.com/home.html என்ற இசைப் பள்ளியை இன்று வரை நடத்திப் பல இசைச் செல்வங்களை உருவாக்கிய திருமதி. உஷா ஶ்ரீனிவாசன் “சங்கீத ரத்னா” என்ற விருதை சென்னை மியூசிக் அக்கடமி வழி பெற்றதோடு இன்னும் பல விருதுகளைத் தான் கொண்ட சங்கீத உலகத்துக்காகப் பெற்றிருக்கிறார்.

உஷா ஶ்ரீனிவாசன் வரவுக்கு முன்னர் சாஸ்திரிய இசைப் பாடகி எஸ்.ராஜேஸ்வரி அவர்களுக்காக இளையராஜா கொடுத்த வாய்ப்பு “இசையரசி என்னாளும் நானே” என்று தாய் மூகாம்பிகை படத்தில் பி.சுசீலா & எஸ்.ஜானகி ஆகிய இமயங்களுடனும், எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்ற சிகரத்தோடு “ஒரு ஓடை நதியாகிறது படத்தில் இடம் பிடித்த

“தலையைக் குனியும் தாமரையே” பாடல்கள். ஆனால் இணையம் இந்தப் பாடலை மழலைக் குரல் புகழ் எம்.எஸ்.ராஜேஸ்வரி கணக்கில் எழுதி வைத்திருக்கின்றது.

கானா பிரபா

28.06.2022


Friday, June 24, 2022

தேன்மல்லிப் பூவே ❤️🎸

இன்று கவியரசு கண்ணதாசனுக்கு 96 ஆவது அகவை பிறந்திருக்கிறது. நேற்றே அதைக் கட்டியம் கூறுமாற் போல நான் கட்டுண்டு கிடந்தேன் “தேன்மல்லிப் பூவே” பாடலோடு.

அன்னக்கிளிக்குப் பின்னான அடுத்த சில ஆண்டுகளில் தான் அதுவரை அடைகாத்த சங்கீதத்தை மடை திறந்தாற் போலக் கொண்டிய போது கிட்டிய மாணிக்கங்களில் இந்தப் பாடலும் ஒன்று.

தன் முன்னோர்கள் கட்டியாண்ட சங்கீதத்தின் பிரதிபலிப்பில் எழுந்த பாடல்களில் இதுவுமொன்று என்று சொல்லாமற் சொல்லும்.

மாற்றம் என்பது பாதிப்பின் நீட்சியாகத் தான் வளர்ந்து மெல்லத் தன் தனித்துவத்தை விளைவிக்கும் என்பதற்கு இளையராஜாவின் ஆரம்ப காலத்துப் பயணமும் நீட்சியும் நல்லுதாரணம்.

பாட்டுத் தொடங்கும் போது ஒரு சூறாவளிச் சுழற்சி போலச் சுழரும் வாத்திய இசை வட்டப் பாதை அப்படியே மெல்ல மெல்ல உறையும் சமயம் “தேன்மல்லிப் பூவே” என்று ஞாபகப்படுத்தும் வயலின் ஆர்ப்பரிப்பு. அப்படியே தேன்மல்லியைத் தேடும் வண்டின் ரீங்காரம் போலவும் ஆரம்ப இசைத்துணுக்கு ஒன்று மெல்ல எழும்பி அடங்கும்.

செளந்தரராஜன் கட்டுக்கடங்காத சுதந்திரப் பறவையாக “தேன்மல்லிப் பூவே” என்று ஒலிக்கும் போது மலையுச்சியில் இருந்து கூப்பிடுவது போலவும், மெல்லிய வெட்கத்தோடு தொடருமாற்போல ஜானகியுமாக வருவார்.

இளையராஜா இசையில் இவ்வளவு விஸ்தாரமான தொடக்கத்தோடு TMS பாடிக் கேட்பது இனிய அனுபவம்.

“என் கண்ணா”, “என் மன்னா” எனும் போது இலேசான தாமதத்தோடு தலைவனை வேண்டுமாற் போல ஒரு சின்னச் சாதகம் கொடுப்பார் ஜானகிம்மா. 

அப்படியே படிக்கட்டில் உருண்டு போகுமாற் போலத் தொடரும் இடையிசையோடு மீண்டும் வயலின் கோவை சரணத்தை ஞாபகப்படுத்தி ஒலிக்கும்.

முத்தாரம் மார் மீது தவழ்கின்றது

எனக்கதில் கொஞ்சம் இடமும் கொடு

தேர் உண்டு நீ உண்டு திருநாள் உண்டு

திருமகள் நெஞ்சில் துயில் கொள்ள வா

ஆகா போட்டி போட்டுக் கொண்டு பாடலைக் காதலிப்பார்கள் இருவரும். காது கொடுத்து வேடிக்கை பார்க்கும் எங்களுக்கோ கொண்டாட்டம் தான் போங்கள்.

கவியரசு வரிகளில் ஆன்மிகத்தையும் உரசிப் பார்ப்பார்.

 “திருவுறைமார்பன்” என்பது திருமாலின் இன்னொரு பெயர். அதன் அர்த்தம் திருமாலின் மார்பில் திருமகள் உறைகிறார் என்று பொருட்படும். இங்கே பாருங்கள் கவிஞர் குறும்பாக 

“திருமகள் நெஞ்சில் துயில் கொள்ள வா”

எனும் போது காட்சிச் சூழலுக்கும் பொருந்திப் போக, இன்னொரு முரண் நிகழ்வையும் காட்டிச் செல்கின்றார்.

இந்த மாதிரியான சாகித்தியர்களோடு தானும் கூட்டுச் சேரும் போது, நிறை கொள்ளாத பூரிப்பைக் கொடுக்குமாற்போல அந்த இரண்டாவது சரணத்துக்கு முந்திய இசை ஆவர்த்தனத்தில் வாத்தியங்கள் ஒவ்வொன்றாய் அணிவகுத்து சூரியகாந்தித் தோட்டத்தின் அழகியலைப் பிரதிபலிக்கும். 

அந்த இசைப் பரிமாணம் தான் முன் சொன்னமாற்றத்தின் திறவுகோலாய் அழகுறக் காட்டி நிற்கும் வீணை மீட்டலோடு, புல்லாங்குழலும், வயலினும் கலக்கும் நாத சங்கமமாக.

முடிக்கும் போது ஜானகிம்மா ஒரு சாதகம் கொடுப்பாரே

ஆஹா ஹா ஹா 

ம்ம்ம்ம்ம்ம் 😍

உலகமெல்லாம் ஒரு நிலவு

இதயமெல்லாம் ஒரு நினைவு

என் வாழ்வின் ஆனந்தம் நீயே

தேன்மல்லிப் பூவே........

“தேன்மல்லிப் பூவே” பாடலைக் கேட்டால் தேன் குடித்த வண்டாகி விடும் மனசு.

https://www.youtube.com/watch?v=OSSPpxL9dwU

கவியரசர் கண்ணதாசனுக்கும், மெல்லிசை மாமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுக்கும் பிறந்த நாள் புகழ் வணக்கங்கள்.

கானா பிரபா

24.06.2022


Thursday, June 23, 2022

இசையமைப்பாளர் ஹம்சலேகா 71 🎸❤️

கோவிந்தராஜூ கங்காராஜூ என்ற இயற்பெயர் கொண்டவர் இசையைப் படைக்கும் பிரம்மனின் புனைபெயர் தாங்கி "ஹம்சலேகா" ஆனவர். இவர் பாடலாசிரியராகவும், இசையமைப்பாளராகவும் இயங்குபவர். இன்று தனது 71 வது அகவை
காண்கிறார்.
“பருவ ராகம்” படத்துக்குப் புதுப் புதுக் குரல்களில் புத்திசை கொடுக்க வேண்டும் என்று நான் நினைத்து அந்த முயற்சியில் சோர்ந்து தோல்வி காணும் நம்பிக்கையற்ற தருணத்தில் தான் எஸ்பிபி பாட வந்தார்.
என்னுடைய திரையுலக வாழ்க்கையின் விதியை அப்படியே மாற்றி எழுத வைத்தார்”
என்று நேசிப்போடு எஸ்பிபியை நினைவு கூருகிறார் ஹம்சலேகா. ( நன்றி : metrosaga இணையம்)
“பூவே உன்னை நேசித்தேன்
பூக்கள் கொண்டு பூஜித்தேன்”
கர்னாடகா எல்லை தாண்டி தமிழகத்தில் ஊடுருவி ஒரு மிகப் பெரிய இசைத் தாக்கத்தை, அதுவும் இளையராஜா காலத்தில் நிகழ்த்திக் காட்டியது “பருவராகம்”.
தமிழராக இருந்தாலும் கன்னட சினிமா உலகில் கடை விரித்தவர் தயாரிப்பாளர் வீராச்சாமியும் மகனும் நடிகனுமான ரவிச்சந்திரன்.
ரவிச்சந்திரன் நடித்த கன்னடத் திரைப்படமான “பிரேம லோகா” மிகப் பெரிய வெற்றியைக் குவித்தது. பாடல்கள் சூப்பர் ஹிட். அதுவே தமிழில் “பருவ ராகம்” ஆனது.
எனது வாழ்க்கைத் துணை என் மனைவி
எனது திரையுலகத் துணை ரவிச்சந்திரன்
என் இசையுலகத் துணை எஸ்பிபி என்று நன்றியோடு கொண்டாடினார் “பிரேம லோகா (பருவ ராகம்) தந்த விளைச்சலால் தொடர்ந்த பந்தத்தால்.
நாயகன் ரவிச்சந்திரன் கதை, திரைக்கதை, இயக்கத்தைக் கவனித்துக் கொண்டார். ஹம்சலேகா பாடல்கள் தமிழுக்கு வந்த போது அம்சலேகா ஆனார்.
பருவ ராகம் படத்தில் மொத்தம் 11 பாடல்கள். அவற்றுள்
கே.ஜே.ஜேசுதாஸ் & எஸ்.ஜானகி கூட்டில்
“காதல் இல்லை என்று சொன்னால்”
எஸ்.ஜானகி & எஸ்பிபி கூட்டுச் சேர்ந்த
“பூவே உன்னை நேசித்தேன்”
பட்டி தொட்டியெங்கும் எண்பதுகளில் பருவ ராகம் பாடியது.
“பிரேம லோகா” கன்னடப் பாடல் திரட்டு
“பருவ ராகம்” தமிழ்ப் பாடல் திரட்டு
“கொடி பறக்குது” படத்தில் இணைந்த இயக்குநர் பாரதிராஜா மற்றும் இசையமைப்பாளர் ஹம்சலேகா கூட்டணி இன்னொரு இளையராஜா ஊடலோடு மீண்டும் "கேப்டன் மகள்" படத்துக்காகச் சேர்ந்தது.
"நந்தவனப் பூக்கள் பூத்ததே" பாடல் பிடித்துப் போனதுக்குக் காரணமே எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொடுக்கும் அந்த கெத்தான குரல் தான்.
“எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று” பாடலில் மெது மெதுப்பாகப் பாடும் எஸ்பிபியா இப்படி ஒரு மிரட்டல் குரலில் பாடுவது என்ற பிரமிப்பும் கூடவே.
மென்மையாக ஒடுங்கும் சித்ரா குரலுக்கு மாறுபட்ட வில்லத்தனம் மிளிரும் குரல் நெப்போலியனுக்கான முதல் பாடல் என நினைக்கிறேன். இதே மாதிரித் தானே "மண வினைகள் யாருடனோ" என்று எம்.எஸ்.விஸ்வநாதன் முதன் முதலாக ரஜினிக்கு குரல் கொடுத்திருப்பார்.
கேப்டன் மகள் பாடல்கள்
அந்தக் காலத்தில் “கொடி பறக்குது” பாடல்கள் ஒரு புறம் பட்டையைக் கிளப்ப, இன்னொரு புறம் “கொடி பறக்குது” சேலைக்கும் ஏக மவுசு. ஒரு படத்தில் நாயகி அணியும் வித்தியாசமான நிற வடிவமைப்புக் கொண்ட சேலைக்கு அந்தப் படத்தின் பெயரையே வைத்து விடும் பாரம்பரியம் அது. சேலைக் கடைகளில் தீபாவளிக்கு “கொடி பறக்குது” சேலை என்ற விளம்பரம் யாழ்ப்பாணத்தின் நகரப் பகுதி விளம்பர ஒலிபரப்பு லவுட்ஸ்பீக்கட் வழியே பரவியது இன்னும் பசுமையாக நினைவில்.
தமிழில் இளையராஜா & பாரதிராஜா கூட்டணியில் விரிசல் வந்த போது இசையமைப்பாளர் தேவேந்திரனோடு “வேதம் புதிது” வழியாக ஒரு மெல்லிசைக் கூட்டணி எழுந்தது. தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினி, அமலாவோடு பாரதிராஜா சேர்ந்து எதிர்பார்ப்பைக் கிளப்பிய படமாக “கொடி பறக்குது” வந்தது. அம்சலேகாவோடு முதன்முறை இணைந்தார் பாரதிராஜா.
சொல்லி வைத்தது போலக் கில்லி அடித்தது கொடி பறக்குது படப் பாடல்கள். தன் பாணியில் ஒவ்வொரு பாடல்களுக்கும் அறிமுகம் வேறு கொடுத்துச் சிறப்பித்திருந்தார் “கொடி பறக்குது” இசைப் பேழையில் பாரதிராஜா.
“ஓஓஓ காதல் என்னைக் காதலிக்கவில்லை”
இரண்டு வடிவங்களில் ஒலிப்பதிவானது.
ஒன்று எஸ்.பி.பாலசுப்ரமணியத்தோடு வாணி ஜெயராம், இன்னொன்று சித்ரா சேர்ந்தது. படத்தில் வந்தது எஸ்பிபி & வாணி ஜெயராம் சேர்ந்தது தான்.
“சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு” எண்பதுகளின் பாடல் தொகுப்புகளில் தவிர்க்க முடியாத பாட்டு. கூடவே சேலைக் கடைகளுக்கான வானொலி விளம்பரங்களுக்கும் கை கொடுத்தது.
எஸ்பிபியின் “அன்னை மடியில்” உருக வைத்தது, மொத்தத்தில் கொடி பறக்குது படம் வணிக ரீதியாகப் போகா விட்டாலும், பாடல்கள் இளையராஜாத்தரமாக இருந்தன.
கொடி பறக்குது பாடல்கள்
ரஜினிக்கும் ஹம்சலேகாவுக்கும் அப்படி என்ன ராசியோ, கொடி பறக்குது பாடல்கள் சூப்பர் ஹிட்டாகியும் படம் எதிர்பார்த்த அளவில் போகாத சூழலில், இன்னொரு படம் பெரிதாக எதிர்பார்க்கப்பட்டது அதுதான் “நாட்டுக்கு ஒரு நல்லவன்”. ரஜினி ரசிகர்களே இந்தப் படத்தைக் கெட்ட கனவாக மறக்க நினைக்கும் வேளை இங்கேயும் அம்சலேகா தான் கை கொடுக்கிறார். கானா பிரபா
எஸ்பிபி & எஸ்.ஜானகி பாடிய “சின்னக் கண்ணம்மா”, “தென்றலே தென்றலே” ஆகியவை ரசிக்கும் ரகம்.
நாட்டுக்கு ஒரு நல்லவன் படத்தைத் தயாரித்தவர் கன்னட நடிகர் ரவிச்சந்திரன், தான் கன்னடத்தில் அறிமுகமாக்கிய குஷ்புவோடு இங்கே ரஜினியோடு இணை நாயகனாகவும் நடித்தார். அதாவது கன்னடத்தில் ரவிச்சந்திரன், தெலுங்கில் நாகார்ஜூனா, தமிழில் ரஜினி என்று மூன்று நாயகர்கள் மூன்று மொழிகள் என்று சம காலத்தில் இந்தப் படங்களை இயக்கி வெளியிட்டார் ரவிச்சந்திரன். தமிழ், தெலுங்கில் இணை நாயகனாக ரவிச்சந்திரன், கன்னடத்தில் தானே முக்கிய நாயகனாகவும், ரமேஷ் அரவிந்த் இணை நாயகனாகவும் என்று இயக்கிய அந்தப் படங்கள் மூன்று மொழிகளிலுமே பப்படம் ஆயின.
நாட்டுக்கு ஒரு நல்லவன் பாடல்கள்
பிரபல தயாரிப்பாளர் ஜி.கே.ரெட்டி (நடிகர் விஷாலின் அப்பா) 1989 இல் இரண்டு படங்களில் இசையமைப்பாளர் அம்சலேகாவை ஒப்பந்தம் செய்தார். அதில் ஒன்று “இது உங்க குடும்பம்”,
ரகுவரன் ராதிகா போன்றோர் நடித்தது. பாடல்கள் பெரிதாகப் போய்ச் சேரவில்லை எனினும் அந்தக் காலகட்டத்தில் பழைய பாடல்களைக் கலந்து புது வரிகளை இட்டுக் கட்டிப் பாடல்கள் புனையும் மரபிருந்தது. உதாரணத்துக்குத் தாய்க்கு ஒரு தாலாட்டு படத்தில் வரும் “அலையில பிறந்தவள்” பாட்டு இளையராஜாவின் பங்குக்கும், சங்கர் - கணேஷ் இரட்டையர்கள் இராம நாராயணன் படங்களிலும் இந்தக் கலவைப் பாடல்களைக் கொடுத்து வந்தனர். அதே பாங்கில் இது உங்க குடும்பம் படத்தில் “நாணமோ இன்னும் நாணமோ” என்ற கலவைப் பாடலை மலேசியா வாசுதேவன், சித்ரா ஆகியோர் பாடினர்.
இது உங்க குடும்பம் பாடல்கள்
“ஜாடிக்கேத்த மூடி” படத்தில் மொத்தம் ஐந்து பாடல்களும் எஸ்.பி.பாலசுப்ரமணியம், நான்கு பாடல்கள் எஸ்.ஜானகியோடு என்று அள்ளிக் கொண்டார்.
“தாலி கட்டிய கட்டிய தங்கக்கிளியே
தள்ளிப்படுத்துக்கடி”
“விட்டு விட்டுத் துடிக்குது மனசு”
என்று எஸ்பிபி & எஸ்.ஜானகி கொடுத்த ஹிட் பாடல்கள் பாண்டியராஜனுக்கு இந்தப் படம் வழியாகப் போய்ச் சேர்ந்தது.
இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் Dir RV Uthayakumar & இசைஞானி இளையராஜா கூட்டணி தொண்ணூறுகளில் எப்படிக் கலக்கியது என்பதை இந்த உலகமே அறியும். ஆனால் ஆர்.வி.உதயகுமாரின் முதல் இரண்டு படங்களில் “உரிமை கீதம்” மனோஜ் - கியான் இரட்டையர்கள் இசையிலும், தொடர்ந்து வந்த “புதிய வானம்” படம் அம்சலேகாவின் இசையிலும் வந்தது. கானா பிரபா
புதிய வானம் படத்திலும் ஐந்து பாடல்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியமே சுளையாக அனைத்தையும் எடுத்துக் கொண்டார். சிவாஜிக்கும் & சத்யராஜுக்குமான கூட்டுப் பாடலை மலேசியா வாசுதேவன் & எஸ்.பி.பாலசுப்ரமணியம் (பெண் குரல் பேபி சங்கீதா) சேர்ந்து “ஒரு பாடல் சொல்கிறேன்” என்றும்,
“ராக்குயிலே” என்ற சூப்பர் ஹிட் பாடலையும் ஆர்.வி.உதயகுமாரே எழுதினார்.
புதிய வானம் பாடல்கள்
இயக்குநர் P.வாசு நட்சத்திர இயக்குநராக மிளிர்ந்து கொண்டிருந்த காலத்தில் “வேலை கிடைச்சிடுச்சு” படம் அமைகிறது அவருக்கு. ஶ்ரீ ராஜகாளியம்மான் நிறுவனத்தின் தயாரிப்பு.
வாசுவுக்கு மிகவும் பிடித்த சத்யராஜ் தான் நாயகன், இதைத் தொடர்ந்து “நடிகன்” படத்திலும் இந்தக் கூட்டணி பட்டையைக் கிளப்பியது. அதற்குப் பின்னர் கூட சின்னத்தம்பி படத்தில் சத்யராஜே நடிக்க வேண்டியிருந்தது. தயாரிப்பாளர் பாலு வேறு சத்யராஜின் தீவிர ரசிகர். ஆனால் சத்யராஜ் பிரபு தான் பொருத்தமானவர் என்று மறுத்துத் திருப்பி விட்டார்.
இப்பேர்ப்பட்ட சத்யராஜ், கவுண்டமணி, P.வாசு கூட்டணி இருந்தால் வேலை கிடைச்சிடுச்சு சொல்லவா வேண்டும்.
இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தையும் கவிஞர் வாலியே கவனித்துக் கொண்டார்.
“நெனச்சதும் நடந்தாச்சு உனக்கொரு வேல கிடைச்சிடுச்சு” பாட்டு அந்தக் காலத்தில் வானொலிகளின் பிரியப் பாட்டு.
“எலேலேலோ ஆஆஆஆஆ”
எஸ்.பி.பியின் அற்புதமான ஆலாபனை அந்த வயல் தோப்பு எங்கும் வியாபிப்பது போன்ற பிரமை எழ, பாட்டு வருகிறது இப்படி
“சேத்துக்குள்ள நாத்து நட்டு
நாத்துக்கொரு பாத்தி கட்டுறோம்
காட்டுக்குயில் போட்டுத் தந்த
மெட்டுக்குள்ள பாட்டுக் கட்டுறோம்”
என்று “கூட்டுக் குரல்கள் குலவ”
“களினியிலே நெல் மணிகள் கண் மலர”
என்று தொடரும் அற்புதமான பாட்டுத் தலைவன் எஸ்பிபி & கூடவே சின்னக்குயில் சித்ரா இணையும் அற்புதமான பாட்டு, வேலை கிடைச்சிடுச்சு படத்தில் உண்டு.
வேலை கிடைச்சிடுச்சு பாடல்கள்
என்னைப் பொறுத்தவரை அம்சலேகா தமிழுக்கு வந்து கொடுத்த கொடி பறக்குது பாடல்க்ளையோ அன்றி கேப்டன் மகள் பாடல்களையும் கடந்து நான் வெகுவாக ரசிக்கும் பாட்டு இது. உண்மையில் அம்சலேகா அந்தக் கர்னாடக மண்ணின் இசைச் சாயத்தைத் தமிழில் கலக்க விட்டிருப்பது போன்ற அற்புதமான கலாசாரப் பரிமாற்றமாக இந்தப் பாட்டை எப்போதும் ரசிப்பேன்.
இதே படம் கன்னடத்தில் மீள் தயாரித்த போதும் அம்சலேகா தான் இசை. அங்கே இதே சூழலுக்கு எஸ்பிபி & சித்ரா பாடும் இன்னொடு வடிவத்தில் மிளிரும் இந்தப் பாடலை Kolu Kolenna Kole ( படம் ரெளடி எம்.எல்.ஏ) https://www.youtube.com/watch?v=oXA1Ti8EseA என்று கொடுத்திருக்கிறார் பாருங்கள் அங்கே தான் அவரின் இசை வற்றாத நதி என்று நிரூபிக்கிறது.
சங்கீத சாகர ஞானயோகி பஞ்சாட்சர கவி படத்தில் மொத்தம் 10 பாடல்கள். கே.ஜே.ஜேசுதாஸ் உட்பட்ட ஜாம்பவான்களோடு தன் பங்குங்கு 3 பாடல்களை எஸ்பிபி பாடினார். இந்தப் படத்தின் வழியாக எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்குச் சிறந்த பாடகர் என்ற விருதும், ஹம்சலேகாவுக்கு சிறந்த இசையமைப்பாளர் என்ற விருதும் ஆக தேசிய விருதைச் சுவீகரித்துக் கொண்டனர்.
அதுவரை கவனிக்கப்படாத நாயகனாக, தமிழில் “பொய்முகங்கள்" என்ற தோல்விப் படத்திலும், கன்னடத்தில் ஒரு சில படங்களையும் நடித்த பக்காத் தமிழர் ரவிச்சந்திரனும், அது போலவே ஒரு முக்கிய அடையாளம் இல்லாமல் இயங்கிய ஹம்சலேகாவும் “பிரேமலோகா” (பருவ ராகம்) வெற்றியைத் தொடர்ந்து அடுத்த தசாப்தங்கள் கன்னட லோகத்தையே கூட்டணி போட்டு கட்டியாண்டார்கள்.
இசையமைப்பாளர் ஹம்சலேகா எண்பதுகளில் தொடங்கி கன்னடப் படவுலகில் இசையமைப்பாளராக, கதாசிரியராக, பாடலாசிரியராக இயங்கியிருக்கிறார். கன்னட உலகில் அவர் ஒரு கடல்.
ஹம்சலேகா குறித்த விரிவாகவும், அவரோடு எஸ்பிபி இயங்கிய பன்முகப்பட்ட பாடல்கள் குறித்தும் மூன்று அத்தியாயங்களில் SPB பாடகன் சங்கதி நூலில் விபரித்துள்ளேன்.
அந்த நூலின் மூன்றாம் பதிப்பு இங்கே விற்பனையில்
அகநாழிகை Pon Vasudevan Aganazhigai வழியாக
வாட்சாப் + 91 70101 39184
கானா பிரபா


Monday, June 13, 2022

“வானத்தில் இருந்து குதிச்சு வந்தேனா” பாடலாசிரியர் வாசன் ♥️

தான் படைத்ததற்கு ஆயுளைக் கூட்டுவதாலோ என்னமோ சில படைப்பாளிகள் நம்மை விட்டுச் சீக்கிரமாகவே மறைந்து விடுகிறார்கள் என்று எண்ணத் தோன்றும். 

அப்படியாகச் சமீப வருடங்களுக்கு முன் வலியை இறக்கி விட்டுப் போனவர் நா.முத்துக்குமார். 

அவரின் இலக்கியக்கார அண்ணன் வாசனும் தன் தம்பிக்கு வழிகாட்டி விட்டுப் போனாரோ, அல்லது தம் இலக்கியப் பாட்டன் பட்டுக்கோட்டையாரின் வழியிலேயே போனார்களோ என்றும் நினைப்பதுண்டு.

வானத்தில் இருந்து குதிச்சு வந்தேனா

பூமிக்குள் இருந்து வெடிச்சு வந்தேனா.....

https://www.youtube.com/watch?v=oAYbcubUg_A

தன்னையும் நினைத்துப் பார்க்க வைத்த வரிகளைச் சமைத்தவர்,

எம் பிரியத்துக்குரிய பாடலாசிரியர் வாசன் அவர்களுக்கு இன்று அகவை 52 பிறக்கிறது. 

பால்ய காலத்த்தில் நம் உணர்வோடும், ரசனையோடும் உறவாடிய படைப்பாளிகள் நம் குடும்பத்தில் ஒருவராகி விட்டது போன்று வாழ்ந்து விடுவார்கள். அப்படி ஒருவர் தான் பாடலாசிரியர் வாசன் அவர்களும். தொண்ணூறுகளின் அவரின் வருகையும் தொடர்ச்சியாக அவர் திரையிசையில் வழங்கிய செழுமையான பங்களிப்பையும் கண்டு அதிசயித்துக் கொண்டே அவர் பாட்டை ரசித்தோம்.

தொண்ணூறுகளில் அடுத்த தலைமுறைப் பாடலாசிரியர்களில் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக உதித்தவர் நம் பாடலாசிரியர் வாசன் அவர்கள். ஆனால் பட்டுக்கோட்டை கல்யாணம் சுந்தரம் போன்றே பாட்டுக் கோட்டை கட்டிய வாசன் அவர்களைக் கலையுலகம் வெகு சீக்கிரமாகவே இழந்தது இன்னமும் பேரதிர்ச்சியோடு திரையிசை ஆர்வலர்களால் பார்க்கப்படுகிறது. அதற்குக் காரணம் பாடல்கள் தோறும் அவர் கட்டிக் கோர்த்த வரிகளின் செழுமை, எனவே தான் அவர் பாடல்களை அடையாளம் கண்டு கேட்கும் போதெல்லாம் அந்த இழப்பின் வலி உணரப்படும். 

மலராய்ச் சிரிப்பாள் மனதைப் பறிப்பாள்

கனவில் தினமும் வந்து கண்ணடிப்பாள்

வானத்துத் தாரகையோ

யாரவள் தேவதையோ

வார்த்தைகளும் மயங்கிடும்

கலைவாணியின் மகளோ

https://www.youtube.com/watch?v=C8N4t4ByTKA

இசைஞானி இளையராஜாவின் தொண்ணூறுகளின் பிரியத்துக்குரியவை என்று ஒரு பட்டியல் போட்டால் தவிர்க்க முடியாத 

“வைகை நதிக்கரை சின்ன மணிக்குயிலே”

https://www.youtube.com/watch?v=JUTlA6jvpjA

“தென்றலைக் கண்டு கொள்ள மானே”

https://www.youtube.com/watch?v=f-7ZRDiW6pE

பாடல்களின் கரு முட்டையாக இருப்பார் கவிஞர் வாசன். 

ஒரு நாள் உனை விழிகள் பார்க்க

இது யார் என இமைகள் கேட்க

இவள் தான் உன் இதயம் என்றது 

காதல் 

https://www.youtube.com/watch?v=2A_Jijz58ik

ஹரிஹரன் பாடும் தொனியில் மனதின் அடியாழத்தில் இருந்து எழும் ஏக்க வெளிப்பாடாகத் தொனிக்கும். பரிபூரணமாகத் தன் மனசை ஒப்படைத்த காதலனின் மன ஓசை அது.

மிகப் புதுமையாக மெட்டமைக்கப்பட்ட இந்தப் பாடல் தொல்லி பிரேமா என்ற தெலுங்குப் மொழி மாற்றுப் படத்துக்கான பாடலுக்கே (ஆனந்த மழை) வாசன் அவர்கள் நிரப்பிய வரிகள் என்றெண்ணும் போது அகல விரியும் ஆச்சரியம்.

“கொல்லாமல் கொல்லும் காதல் 

பொல்லாதது......

ஜில் என்ற தீயில் ஜீவன் நனைகின்றது

எங்கே 

           எங்கே 

                      எங்கே

ஒரு நாள் உனை விழிகள் பார்க்க

இது யார் என இமைகள் கேட்க

இவள் தான் உன் இதயம் என்றது 

காதல்

உயிரை திறந்து விடு புரியும்

உனக்குள் இருப்பது யார் தெரியும்

மனதில் எனதுருவம் விரியும் 

காதல்

கொல்லாமல் கொல்லும் காதல் 

பொல்லாதது

இப்படியாக நேரடித் தமிழ்ப் படங்களிலும், மொழி மாற்றிலும் கூடத் தன் சாகித்தியத்தைக் கொட்டிய திரையிசைக் கவிஞர் அவர்.

“முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே

எனை மறந்து எந்தன் நிழல் போகுதே

என்னில் இன்று நானே இல்லை

காதல் போல ஏதும் இல்லை

எங்கே எந்தன் இதயம் அன்பே வந்து சேர்ந்ததா”

https://www.youtube.com/watch?v=gkbRLhDN48g

தஞ்சை வாசன் என்ற பாட்டுக்காரரின் திரையிசைத் திறவுகோல் தேனிசைத் தென்றல் தேவாவால் கொடுக்கப்பட்டதோடு தொடர்ந்து அவரை தன்னிசையில் பாடல்கள் சமைக்க வழி சமைத்தார்.

“காஞ்சிப் பட்டு சேல கட்டி

கால் கொலுசில் தாளம் தட்டும்

கன்னிப் பொண்ணே நின்னு கேளம்மா

என் மனைவி வந்த பின்னால்

என்னவெல்லாம் செய்வேனென்று

சேர்த்து வைத்த ஆசை சொல்லவா”

https://www.youtube.com/watch?v=Q1dz_h4UD_I

97 ஆம் வருஷம் வெளிவந்த “ரெட்டை ஜடை வயசு” படத்தில் ஐந்து பாடல்களைக் கொடுத்து அழகு பார்த்தவர் தேனிசைத் தென்றல் தேவா.

கானா பிரபா

பாடலாசியர் வாசனின் சகோதரி திருமதி கற்பகவள்ளி துரைராஜ் 

தன் அண்ணன் வாசன் அவர்களது படைப்புலக முயற்சிகளைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருபவர் அவர்.

தன் சகோதரிக்காகவே அண்ணன் எழுதி வைத்து விட்டுப் போனதாக அமையும்

இரு கண்கள் போதாது

ராசாத்தி ஊர்கோலத்தைப் பார்க்க

என் இமையும் மூடாது

கல்யாணத் தேரில் உன்னைப் பார்க்க

ஆனந்தத்தால் விழி நீரிலே

பாடுகின்றேன் ஒரு பாடலே

வாழ்த்துச் சொல்லி பாடும் குயில் நான்

https://www.youtube.com/watch?v=g7Xm3W72HhQ

சகோதரி கற்பகவள்ளி துரைராஜ் வழியாக அவரின் வாசனின் கலை, இலக்கியப் பயணத்தைப் பேச ஒரு வாய்ப்புக் கிடைத்தது.  அவரிடம் நான் வாசனோடு பேசுவதாக நினைத்துக் கேட்டவை இவை.

முதலில் உங்கள் சகோதரர் வாசன் பாடலாசிரியராக அறியப்படுவதற்கு முன்னால் அவரது வாழ்வியல் இயக்கத்தின் ஆரம்பம் பற்றிச் சொல்லுங்களேன்?

திரையுலகில் பாடலாசிரியராக வருவது என்பது ஒப்பீட்டளவில் மற்றைய திரையிசைப் பணிகளை விடச் சவால் நிறைந்தது. இந்த நிலையில் இப்படியானதொரு பாதையை அவர் தேர்ந்தெடுக்கக் காரணம் என்ன?

அதில் எப்படி வெற்றி கண்டார்?

கவிஞர்களைப் பொறுத்தவரை அவர்களின் பாடல்களில் தம்முடைய வளர்ப்பு, வாழ்வியல் பின்னணி என்பது பிரதிபலிக்கும் அப்படி வாசன் அவர்களின் பாடல்களில் நீங்கள் கண்டு கொண்ட பாடல்களை ஒரு உடன் பிறப்பாக உதாரணங்களுடன் காட்ட முடியுமா?

இயக்குநர் சேரனது ஆரம்ப கால இயக்கத்தில் கவிஞர் வாசன் அவர்கள் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணியிருக்கிறார் என்பதை அவரின் இழப்பின் போது சேரன் கொண்ட துயர் வெளிப்படுத்தியது. அதைப் பற்றி?

இசைஞானி இளையராஜாவின் கோட்டைக்குள் பல மூத்த பாடலாசிரியர்களுக்குத் தொடந்து வாய்ப்பு வழங்கப்பட்ட சூழலில் வாசன் எப்படி அவர் மனதில் நீங்கா இடம் பிடித்துக் கொண்டார்?

ஒரு குறுகிய காலப்பகுதியிலேயே வாசன் அவர்கள் நூறு பாடல்களைத் திரையிசைக்காகப் பிரசவித்ததும், இப்போது அதனை நினைவுகூர்ந்து 2 ஆண்டுகளுக்கு முன்னர் அவை திரையிசைப் பாடல் திரட்டாகவும் வெளிவந்தது. அது பற்றிச் சொல்லுங்களேன்?

திரையிசைப் பாடலாசிரியர் தாண்டி அவர் கவிஞராக வெளிப்பட்ட போது வெளியான நூல்கள்?

வாசன் அவர்களைச் சக கவிஞர்கள் எப்படி நோக்கினார்கள்?

தன்னுடைய திரையிசைப் பாடல் அனுபவங்கள் குறித்தெல்லாம் வாசன் பேசியிருக்கிறாரா? அவற்றில் நினைவுபடுத்தக் கூடிய சுவையான நிகழ்வுகள்?

ஒரு பாடலாசிரியரின் ஒரு பாடலே அவரின் தன்மையை அடையாளப்படுத்தி விடும் அப்படி ஒரு பாட்டாக “வானத்தில் இருந்து குதிச்சு வந்தனா” பாடலை இன்று அவர் இல்லாத சூழலில் வாசனோடு பொருத்திப் பார்க்கிறேன். குறிப்பாக இந்தப் பாடலோ அல்லது வேறு ஏதாவது ஒரு பாடலோ உங்களுக்கும் அப்படியானதொரு தாக்கத்தை எழுப்பியிருக்கிறதா?

இந்த உரையாடலில் நான் கேட்ட கேள்விகளும் அவர் தந்த பதில்களுமாக வீடியோஸ்பதி காணொளித் தளத்தில் 

இந்தப் பகிர்வைக் காணொளியில் பார்க்க

https://www.youtube.com/watch?v=3vLIozYGzPw&t=451s

தன் அண்ணன் வாசனின் அரிய புகைப்படங்களையும் பகிர்ந்தளித்தார் சகோதரி.

கவிஞர்கள் காலத்தின் கண்ணாடிகள், சமூகத்தின் அறைகூவல்கள். அதனால் தான் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் தம் அக வெளிப்பாட்டைப் படைப்பில் கொட்டித் தீர்த்து விடுவார்கள்.

தேசிய கீதத்தில் இரண்டு விதமான சமூகப் பார்வைக்குக் களம் அமைக்கப்படுகிறது கவிஞர் வாசனுக்கு

அதில் ஒன்று, தான் கனவு தேசம் குறித்த தேடலாக 

“என் கனவினைக் கேள் நண்பா

உனக்குப் புரியும்”

https://www.youtube.com/watch?v=YVGaKkfQSbs

98 இல் அவர் கண்ட கனவு

“பாட்டி பால் விற்ற

கணக்கை கம்பியூட்டர்

பதிய வேண்டும்

நாற்று நடுகின்ற பெண்ணும்

செல்போனில் பேச வேண்டும்”

கண்டு விட்டோம் இன்று.

 இன்னொன்று தான் காணும் தேசத்தைக் கண்டு மனம் வெதும்பிப் பாடும்

“நண்பா நண்பா 

நாடிருக்கும் நிலையைப் பாரடா...

https://www.youtube.com/watch?v=EX273SjoN68

1998-ம் ஆண்டு டிசம்பர் 11

வாசன் அண்ணனின் பிரிவுச் செய்தியை எடுத்து வந்த நா.முத்துக்குமார் ரிலே பந்தயத்தின் ஆட்டக்காரன் போல அவரின் பேனாவை எடுத்துக் கொண்டு, அடுத்த ஆண்டு 99 இலிருந்தே அடுத்த தசாப்தம் திரையிசை உலகை ஆண்டது வரலாறு.

கவிஞர் வாசனுக்குப் பிறப்பு உண்டு 

ஆனால் மரணமில்லை. 

இன்று அவரின் பிறந்த நாளில் ஏதோவொரு வானொலி ஏதோவொரு சந்தர்ப்பத்தில் அவரின் பெயரைக் கூறாது விடினும் அவரின் பாடலைக் காற்றலையில் தவழ விடும். 

அப்போது முகில் கூட்டங்களின் நடுவில் இருந்து 

மெல்லிய புன்னகையைத் தவழ விடுவார் எங்கள் வாசன்.

நொடிக்கொரு தரம் உன்னை 

நினைக்க வைத்தாய்

அடிக்கடி என்னுடல் 

சிலிர்க்க வைத்தாய் ♥️

கவிஞர், பாடலாசிரியர் தஞ்சை வாசனுக்குப் புகழ் வணக்கங்கள்.

கானா பிரபா

13.06.2022



Sunday, June 12, 2022

“சக்கு சக்கு வத்திக்குச்சி சடுன்னுத்தான் பத்திக்கிச்சு ஒயிலே ஒயிலே” 💃🕺

27 வருடங்களுக்குப் பிறகு தன் பழைய கெத்தோடு வந்து துள்ளிசைத்துக் கொண்டிருக்கிறது இந்தப் பாடல். ஆனால் துரதிஷ்டவசமாக பாடலை எழுதிய கவிஞர் பிறைசூடன் அவர்களும், இசையமைத்துப் பாடிய (சுஜாதாவுடன்) ஆதித்யன் அவர்களும் நம்மோடு இல்லை.

பழைய பாடல்கள் மீளுருவாவது தமிழ் சினிமாவில் அப்படியொன்றும் புதுமையல்ல. “பேர் வச்சாலும்” பாடல் கூட 30 வருடங்கள் கழித்து 2.2K kids ஆல் கொண்டாடப்பட்ட போது 

“டேய்! நம்ம யுவன் போட்ட பாட்டைத் தான் 

முன்னாடி அவர் அப்பா போட்டது” 

என்று பேசிக் கொண்டார்கள்.

ஆனால் “சக்கு சக்கு” பாடல் எல்லாம் கொண்டாடப்படும் போது ஒரு தனிப் புளகாங்கிதம் மனதில் தோன்றிப் பரவசமாக்கும். இதே போலத் தான் செளந்தர்யன் இசையில் சிந்து நதி - பூ படத்தில் வந்த “ஆத்தாடி என்ன உடம்பு” https://www.youtube.com/watch?v=zWSwx-3wSiA பாடல் ஹிப் ஹாப் ஆதியால் “நட்பே துணை”யில் https://www.youtube.com/watch?v=8ydPi2viWFE வைரல் ஆகி (பார்த்தீர்களா எனக்கும் 2K kids எழுத்து வருது ) கொண்டாடப்பட்ட போது நாமும் கொண்டாடி மகிழ்ந்தோம்.

காரணம் இந்த மாதிரி அதிகம் பேசப்பட்டாத இசையமைப்பாளர்களுக்கு ஏதோ ஒரு வகையில் கெளரவம் கிட்டுகிறதே என்ற திருப்தி தான்.

“அமரன்” பாடல்கள் வெளிவந்து பட்டி தொட்டியெல்லாம் முழங்கிய போது இலங்கையில் பண்பலை வானொலிகள் தோற்றம் பெற்ற சமயம் அது. எனவே அதற்குப் பின் “ரோஜா” பாடல்கள் வெளிவந்த போது இந்த மாதிரியான எலெக்ட்ரானிக் கருவிகளின் சப்தங்களை நாம் ஆதித்யனிடமேயே முன்பே கேட்டு விட்டோமே என்ற உணர்வே எழுந்தது. அப்போது என்னுடைய மன நிலை ஆதித்யனுக்கும் ரஹ்மானுக்கும் ஒரு சுற்றுப் போட்டி இருக்கும் என்று.

ஆனால் பல வருடங்கள் கழித்து சன் சிங்கர் நிகழ்ச்சியில் “ஒயிலா பாடும் பாட்டுல” https://www.youtube.com/watch?v=Bh2FnegeVIc

பாடலை ஒரு சிறுமி பாடி முடித்ததும் 

 முதன்மை நடுவராக இருந்த கங்கை அமரன் அவர்கள் ஒரு செய்தியைச் சொன்னார்.

“இந்தப் பாட்டு வந்த சீவலப்பேரி பாண்டி படத்தின் பாடல்களுக்கு கீபோர்ட் வாசிச்சது ஹாரிஸ் ஜெயராஜ், இதற்கு முன்னால

“அமரன் படத்தில் கீ போர்ட் வாசித்தது ஏ.ஆர்.ரஹ்மான்.

என்று. அப்பேர்ப்பட்ட திறமைகளின் கூட்டோடு ஆதித்யன் தன் ஆரம்ப காலத்தைக் கட்டமைத்திருக்கின்றார்.

“அமரன்” படத்தின் பாடல்களைக் கேட்டால் அப்படியே பளிங்கு மாதிரி மேம்பட்ட ஒலித்தரம் தெரியும். இன்று ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்களைக் கொண்டாடுவதும் இதே மாதிரியானதொரு உச்சபட்ட ஒலி நய நுணுக்கங்களுக்காகத் தான்.

“அமரன்” படத்தின் பாடல்களில் “சந்திரரே சூரியரே” (ஜேசுதாஸ் பாடியது), முஸ்தபா ஆகிய இரு பாடல்களையும் விஸ்வகுரு இசையில் வைரமுத்து எழுதினார். மீதி 6 பாடல்களையும் இந்தப் படத்தில் அறிமுகமான ஆதித்யனுக்காக கவிஞர் பிறைசூடன் எழுதினார்.

பின்னாளில் தன் பேட்டியில் தனக்கு ஒரு படத்தின் முழுப்பாடல்களும் வேண்டும் என்று ஆசைப்பட்ட போது ஆதித்யன் ஓரளவு அதற்குக் களம் அமைத்துக் கொடுத்ததாகவும், அமரன், லக்கிமேன் போன்றவை உதாரணங்கள் என்றும் பிறைசூடன் குறிப்பிட்டிருக்கின்றார்.

இதோ ஆதித்யன் & பிறைசூடன் கூட்டணி ஒன்று சேர்ந்து தம் கூட்டணியில் உச்ச பட்ச ஹிட் பாடலைக் கொடுக்கிறார்கள். அதுதான் “சக்கு சக்கு வத்திக்குச்சி சட்டுன்னு தான் பத்திக்கிச்சு”

அசுரன் (1995) படத்துக்காக அமைகின்றது.

அப்போது ஹாலிவூட்டில் வேற்றுக் கிரகவாசிகளின் படங்களின் கதைகளை உருவித் தமிழில் படங்கள் வெளியான காலத்தில் தக்காளி சீனிவாசன் வெகு பிரபலமான பெயர். அவருடைய தயாரிப்பில் பிரபு (அமலாவும் ஹிஹி) நடித்த “நாளைய மனிதன்”, “அதிசய மனிதன்” போன்ற படங்களை இயக்கியவர் ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான வேலு பிரபாகரன் அவர்கள். இந்த மாதிரித் தந்திரக் காட்சிகள் வரும் படங்களை இது போலவே என்.கே.விஸ்வநாதன் போன்ற ஒளிப்பதிவாளர்களையே இயக்க விடுவதுண்டு.  அப்படியாகத் தான் ஆர்.கே.செல்வமணி தயாரித்த “அசுரன்” படத்துக்கும் வேலு பிரபாகரன் அவர்களே இயக்குநர்.

வீரப்பனின் கதையை மையப்படுத்தி கேப்டன் பிரபாகரனின் “வீரபத்திரன்” என்ற பாத்திரத்தை உருவாக்கிய செல்வமணி இங்கே அசுரன் கதையை எழுதிய போது அதே வீரபத்திரனைக் கொண்டு வருகிறார். மன்சூரலிகானுக்கும் அதே பாத்திரம். அவரின் தம்பி மாதையனாக ( நிஜத்தில் அண்ணன், சமீபத்தில் தான் சிறையில் இறந்து போனவர்) நெப்போலியன், நெப்போலியனின் முறைப் பெண் ஆக ரோஜா. மாதையன் கொல்லப்பட்ட சூழலில் வீரபத்திரனை வேட்டையாட வரும் காவல்துறையில் அருண் பாண்டியன் கூட்டணி. சத்திய மங்கலம் காட்டுப் பகுதியில் வீரபத்திரனைத் தேடும் வேட்டையில் தன் அணியினர் ஒவ்வொருவராகக் கொல்லப்பட, அதற்குப் பின்னால் இருப்பது பூமிக்கு வந்த வேற்றுக்கிரக வாசிகள் என்று வீரப்பனின் கதைக்குள் ஆர்னால்டின் Predator ஐத் திணித்து, அப்படியே குழப்பியடித்துப் போட்ட படம் தான் அசுரன். நன்றாக வர வேண்டிய படத்தில் விசித்திராவின் காமக் களியாட்டம், செந்திலின் கொடுமையான நகைச்சுவை இழுவைத் திரைக்கதையோடு பயமுறுத்தி விட்டது.

என்ன கொடுமை என்றால் இதே மாதிரி வீரப்பனின் தம்பியாக நெப்போலியன் நடித்த தரணி இயக்கிய முதல் படம் எதிரும் புதிரும். 

ரோஜாவுக்கும் நெப்போலியனுக்கும் இடையில் நிச்சயதார்த்தம் நடக்கும் போது தான் இந்த “சக்கு சக்கு” பாடல் பிறக்கிறது. பிரபுதேவா & ராஜூ சுந்தரம் தொடக்கி வைத்த நடன இயக்குநர் ஒரு பாட்டுக்கு ஆடும் ராசியாக நடன இயக்குநர் கல்யாண் (கல்லூரி வாசல் வில்லன்) இந்தப் பாடலில் தோன்றி ஆடுவார். 

இந்தப் பாட்டுக்கு கவிஞர் பிறைசூடன் அவர்கள் வந்தமைந்தது ஒரு அழகான நிகழ்வு. ஏனெனில் இதே ஆர்.கே.செல்வமணியின் “ஆட்டமா தேரோட்டமா” பாடலுக்கும் வீரபத்திரன் குழு ஆட்டம் போடும் சூழலுக்கு அவரே பாட்டு எழுதுகிறார். ஆனால் இம்முறை ஆதித்தனோடு ராசியான கூட்டணியாக இன்னொரு வாசல் வழியாக வருகிறார் பிறைசூடன்.

“சக்கு சக்கு வத்திக்குச்சி” பாடல் வெளிவந்த காலம் சின்னத்திரையில் Music Video யுகம் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தது. ஒரு பக்கம் சன் டிவியின் சூப்பர் ஹிட் பாடலாக, பின்னாளில் SS Music தத்தெடுத்துக் கொண்டது போல என்று போட்டுத் தாக்கினார்கள். மன்சூரலிகான் தன் தனித்துவமான உடல் மொழியோடு பாடலில் அதகளம் பண்ண, வெட்கப் புன்னகையோடு நெப்போலியன், தன் கனவு கை கூடும் குதூகல ஆட்டத்தோடு ரோஜா குழு என்று பாடல் அவ்வளவு அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கும். 

“சக்கு சக்கு வத்திக்குச்சி” பாடலின் துள்ளிசை மட்டுமல்ல அந்தப் பாடலின் 

அமைப்பே அழகாக இருக்கும். பங்க்ரா பாணியோடு நம் தமிழ்ப் பண்பாடும் கலந்து கட்டி ஆடும் அழகியல் தொனிக்கும்.

தூண்டில் போட்டது கண்ணிலா

அட நீயும் உள்ளது என்னிலா

தேரில் வந்தது தேன் பலா 

போதை வந்தது நெஞ்சிலா

மஞ்சள் பூசிடும் பெண் நிலா

அவள் மங்கை ஆனதும் திருவிழா

தெய்வம் வந்தது நேரிலா

குளிர் தென்றல் வந்தது ஓர் உலா

பூ ..மாலை போட வா...

பூ...ங்காற்றே ஓடி வா...

இந்த வரிகளைப் படிக்கும் போதே அந்தத் துள்ளலும், தாமததித்து மீண்டும் கலக்கும் வரிகள் என்று அற்புதமான மெட்டுக் கட்டமைப்பு அது.

இந்தப் பாடலுக்கெல்லாம் ஆதித்யன் என்ற பாடகரைத் தாண்டி வேறொருவரையும் சிந்திக்க முடியாது. 

பாடகர் ஹரிஷ் ராகவேந்திரா Harish Sai Raghavendra தன்னுடைய காணொளித் தளத்தில் பாடலாசிரியர் பிறைசூடன், இசையமைப்பாளர் ஆதித்யன் ஆகியோர் குறித்த நெகிழ்வான அனுபவப் பகிர்வையும் பகிர்ந்திருக்கிறார் பாருங்கள். 

https://youtu.be/OGaxSYgs6Vk

இசையமைப்பாளர் ஆதித்யன் குறித்த என் முந்திய பதிவு

https://www.facebook.com/1393380529/posts/10224943115270465/?d=n

“சக்கு சக்கு” பாடல் விக்ரம் புண்ணியத்தில் மீண்டும் இணையத்தைக் கலக்கிய போது இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தானும் அந்தப் பாடலில் இணைந்து பங்களித்ததை மகிழ்வோடு பகிர்ந்தார். 

https://twitter.com/Jharrisjayaraj/status/1533737175241613312?s=20&t=znFt8WeBaCE8bgIqu8GDRA&fbclid=IwAR2r8t1YROyasacaMkOIyj7kSz9OwbNBYnwAeHrbrV1ZECWZ3ZZVgFDOnIM

இன்று இசையமைப்பாளர் ஆதித்யனும், பாடலாசிரியர் பிறைசூடனும் நம்மோடு இருந்திருந்தால் இன்னும் அக மகிழ்ந்திருப்பார்கள் இல்லையா?

கானா பிரபா

12.06.2022

புகைப்படம் நன்றி : நடிகர் நெப்போலியன் தளம்


Saturday, June 11, 2022

❤️ இயக்குநர் பாபு வை வழியனுப்பி வைத்த ஶ்ரீ ராம ராஜ்ஜியம் ❤️

தெலுங்குத் திரையுலகின் மூத்த இயக்கு நராக விளங்கிய பாபு (Bapu) என்ற சட்டிராஜூ லஷ்மிநாராயணா அவர்கள் தனது 78 வது வயதில் இயக்கிய திரைப்படம் ஶ்ரீ ராம ராஜ்ஜியம் வெளிவந்தது. 

இந்தப் படத்தை லவ குச சகோதரர்களின் கதையாகவே முதலில் எடுக்க இருந்தவர் சில மாற்றங்களோடு ஶ்ரீ ராம ராஜ்ஜியம் என்று எடுக்க முனைந்த போது மறு பேச்சில்லாமல் நந்தமூரி பாலகிருஷ்ணா பாபு என்ற மூத்த இயக்குநர் மீது நம்பிக்கை வைத்து முழு ஒத்துழைப்பு கொடுக்கிறார். 

இயக்குநர் பாபுவுக்கு சிறந்த இயக்குநருக்கான நந்தி விருதை அளிக்கிறது. அது மட்டுமல்ல சிறந்த படம், சிறந்த இசை (இளையராஜா) உட்பட இன்னும் பல நந்தி விருதுகளையும் அது அள்ளுகிறது.  

அந்தத் திருப்தியிலோ என்னமோ அதுவே தன் இறுதிப் படைப்பாகக் கொடுத்து விட்டு 2014 ஆம் ஆண்டில் இவ்வுலகை விட்டு மறைகிறார்.

இயக்குநர் பாபு அவர்கள் சமுதாயக் கண்ணோட்டம் சார்ந்த படங்கள் மட்டுமல்ல பக்தி இலக்கியங்களையும் திரையில் கொண்டு வந்தவர். 

சீதா கல்யாணம் என்ற தன் படைப்பில் இராமன் சீதையை மணம் முடிக்கும் வரையிலான கதையமைப்பைச் செய்திருக்கிறார். மேலும் பக்த கண்ணப்பாவும் இவர் படைப்பே.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக NTR என்ற என்.டி.ராமராவ் அவர்களின் இறுதித் திரைப்படமான Srinatha Kavi Sarvabhoumudu படைப்பை இயக்கியவரும் அவரே. இது 15 ஆம் நூற்றாண்டில் இயங்கிய ஶ்ரீநாத என்ற பெரும் புலவரின் வாழ்வில் சரிதம் பேசுவது.

மனிதனும் தெய்வமாகலாம், கிழக்கே போகும் ரயில், முள்ளும் மலரும், வண்டிச் சக்கரம், மயங்குகிறாள் ஒரு மாது, அந்த ஏழு நாட்கள், தூறல் நின்னு போச்சு இவையெல்லாம் தெலுங்கு, ஹிந்தியில் உருவான போது அந்தந்தப் படங்களின் இயக்குநர் பாபு அவர்களே.

இவற்றில் கிழக்கே போகும் ரயில், முள்ளும் மலரும் படங்களின் தெலுங்குத் தழுவலுக்கு (Seethamma Pelli) இசை எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள்.

இந்தப் படத்தில் நெகிழ்வூட்டும் பாடலொன்றைத் தன் பாணியில் SPB கொடுத்து வெகு பிரபலம் ஆக்கியிருக்கிறார். அந்தப் பாடல்  https://youtu.be/hLmF1Vykxd4

தமிழில் நீதி தேவன் மயக்கம் என்ற படம் வெளிவந்து எண்பதுகளில் பரபரப்பை உண்டு பண்ணியிருந்தது. அந்தப் படத்தில் கெளரவ வேடமேற்று ஒரு இராணுவ வீரராக நடித்திருப்பார். (தெலுங்கில் கிருஷ்ணா பண்ணியது).

இவரின் ஆஸ்தான இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன் என்று சொல்லுமளவுக்கு தெலுங்கில் தொடர்ந்து இணைந்தே இயங்கினர். விதி விலக்காக எம்.எஸ்.விஸ்வநாதன், எஸ்.பி.பாலசுப்ரமணியம், பப்பி லஹரி, இவர்களோடு இளையராஜாவுமாக விரல் விட்டு எண்ணக் கூடிய படங்களில் பணியாற்றி இருக்கிறார்கள்.

இளையராஜாவோடு ஶ்ரீ ராம ராஜ்ஜியத்துக்கு முன்பே இணைந்து சிரஞ்சீவியை நாயகனாக்கி எடுத்த படம் Mantri Gari Viyyankudu அந்தப் படத்தின் பாடல்களெல்லாம் லட்டு மாதிரி. தெலுங்கில் சூப்பர் ஹிட் அடித்தவை.

குறிப்பாக இது

https://youtu.be/NQOPYi35LqQ

தமிழும் ஞாபகத்துக்கு வந்து போகுமே 😍😀

முழுப் பாடல்களையும் கேட்க

https://youtu.be/qS5QA-B2qEE

இயக்குநர் பாபு அவர்களின் திரையிலகச் சாதனைக்கு நிகராகக் கொண்டாடப்படுவது அவரின் அற்புதமான ஓவிய ஆற்றலுக்காக. 

அது குறித்த காணொளி ஒன்று

https://youtu.be/qmT5dqkBhw8

ஓவியர் பாபுவின் சித்திரக் களஞ்சியம் இங்கே ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றது.

https://bapuartcollection.com/phone/index.html

இராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட இதிகாசங்களில் ஊறித் திளைத்தவர் பாபு அவர்கள்.

நந்தமூரி பாலகிருஷ்ணாவின் தந்தை என்.டி.ராமராவின் இறுதிப் படத்தை இயக்கியவர், தன்னுடைய இறுதிப் படமாக என்.டி.ஆரின் தனையன் பாலகிருஷ்ணாவின் படத்தைத் தேர்ந்தெடுத்தாரோ என்று எண்ணத் தோன்றும்.

இதிகாசங்களைக் காதலித்த இந்தக் கலைப்படைப்பாளி இயக்குநர் பாபுவை

இசைஞானி இளையராஜாவின் 15 இறை அனுபவம் தரும் இன்னிசைப் படையல்  

https://youtu.be/dVoqDJMAM6c

ராஜமரியாதையோடு வழியனுப்பி வைத்தது.

கானா பிரபா

11.06.2022

Monday, June 6, 2022

மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே 🌷 ✍🏻பாடலாசிரியர் ஆலங்குடி சோமு நினைவில் ❤️


பின்னணிப் பாடகி B.S.சசிரேகாவின் பாட்டுப் பயணத்தின் தொடக்க காலத்திலேயே ஒரு மகுடமாக அமைந்து விட்ட பாட்டு. அவரின் பாடல்களில் உச்சபட்சமாகக் கொண்டாட வேண்டியதும் கூட.

அப்பேர்ப்பட்ட பாடலின் மயக்குறு வரிகளைப் பாருங்கள்,

“ஆல வட்டம் போடுதடி

நெல்லுப்பயிரு

ஆள வட்டம் போடுதடி

கள்ளப் பருந்து

ஆல வட்டம் போடுதடி

நெல்லுப்பயிரு

ஆள வட்டம் போடுதடி

கள்ளப் பருந்து”

அந்த உவமைகளுக்குள் ஒரு சொல் விளையாட்டை நிகழ்த்தியிருப்பவர் அடுத்த சரணத்திலும், 

“ஊருக்கெல்லாம் பாக்கு வச்சு

காத்திருப்பேன்

ஊரையெல்லாம் பாக்க வச்சு

மணம் முடிப்பேன்”

அந்த வரிகளுக்குச் சொந்தக்காரர் எம்.ஜி.ஆர் காலத்திலேயே கொடிகட்டிப் பறந்த ஆலங்குடி சோமு அவர்கள். இன்று அவர் நம்மை விட்டு மறைந்து 25 வது நினைவு தினம் (06.06.1997) ஆகும்.

“இளையராஜா தான் நேசித்த முன்னோர்கள் பாடகர்கள், பாடலாசிரியர்கள் இசை வல்லுநர்களோடு இணைந்து இயங்கியது அவருக்குக் கிட்டிய பெரு வரம். 

எழுபதுகள் காலகட்டங்களில் இந்தப் பிணைப்பின் தாக்கம் அதிகமாக இருக்கும்.” என்று சமீபத்தில் ஃபேஸ்புக் நிலைத்தகவலை நான் பகிர்ந்து கொண்டது இவரையும் மனதில் நிறுத்தித்தான்.

தமிழ்த்திரை இசை இயக்கத்தில் ஆலங்குடி சோமு அவர்களின் பாடல்களின் கவிச்சிறப்பைத் தேடித் தேடி ரசிக்க வேண்டும்.

“ஆண்டவன் உலகத்தின் முதலாளி”, “கத்தியைத் தீட்டாதே உன் புத்தியைத் தீட்டு” “தாயில்லாமல் நானில்லை” போன்ற தத்துவார்த்தம் மிகுந்த பாடல்களில் மட்டுமன்றி “பொன்மகள் வந்தாள் பொருள் கோடி தந்தாள்”, “ஆடலுடன் பாடலைக் கேட்டு” என்று துள்ளிசை உலகிலும் தன் முத்திரையைக் காட்டியவர். 

காரைக்குடியை அடுத்த ஆலங்குடி கிராமத்தைச்சேர்ந்தவர் தன் ஊரையே அடையாளமாகப்பெயரோடு பொருத்திக் கொண்டார்.

ஆலங்குடி சோமுவின் மகள் ஆல் இந்தியா ரேடியோவில் தன் தந்தை குறித்தநினைவுப் பகிர்வில் சில சுவையான பகிர்வுகளைப் பகிர்ந்திருக்கிறார். அதில்தந்தை எழுதியவற்றுள் “வெள்ளை மனம் கொண்ட” (பத்தாம் பசலி) பாடல்தனக்குப் பிடித்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார்

“ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை” என்ற பாடலின்மூல வரிகளை எழுதியவரும் இவரே.

எம்.ஜி.ஆரின் நேசத்துக்குரிய பாடலாசிரியர்களில் இவரும் ஒருவர். காஞ்சித்தலைவன் 6 பாடல்களை எழுதியிருக்கிறார்.

“மலருக்குத் தென்றல் பகையானால்” (எங்க வீட்டுப் பிள்ளை) பாடல் ஆலங்குடிசோமு என்றே தெரியாமல் இன்றைய த்லைமுறையும் ரசிப்பதுண்டு.

“மலர்ந்தும் மலராத” தங்கைப் பாசம் போலவே ஆலங்குடி சோமுவிடம் கேட்டுவாங்கிய பாட்டு

“ஒரு கொடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா”.

அது போலவே 

“எண்ணப் பறவை சிறகடித்து விண்ணில் பறக்கின்றதா” என்றதொரு காவியப்பாடலும் இவர் கை வண்ணமே.

தன் மனைவியின் இளவயது மரணத்தோடு அந்த வேதனையோடு திரையில் எழுதியசூழ்நிலைப் பாடல் தான்

“மலை சாய்ந்து போனால் சிலையாகலாம்”.

“இறந்தவன சொமந்தவனும் இறந்திட்டான்

அதை இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டான்” பாடல் கூட அவரின் அனுபவவெளிப்பாடே. தனது தம்பியின் நண்பர் சவக்காலை ஊழியர் எதிர்பாராத விதமாகஇறந்த துயரில் “இரவும் பகலும்” படத்தில் அந்த வரிகளைப் பொருத்திக்கொண்டார்.  அந்த வரிகளை முணுமுணுத்து ரசித்தவரைப் பார்த்து நீங்களேபாடுங்கள் என்று இயக்குநர் வேண்டினாராம்.

அவர் தான் பாடலைப் பாடிய நடிகன் அசோகன் அவர்கள்.

“அருள்வாயே அருள்வாயே”

https://youtu.be/JBUrMIc0pQE

“சாது மிரண்டால்” படத்துக்காக T.K.ராமமூர்த்தி இசையில் டாக்டர்எம்.பாலமுரளிகிருஷ்ணா பாடியது பின்னர் தன் இசை மேடைகளில் கூடப் பாடிச்சிறப்பித்த ஆலங்குடி சோமு அணி சேர்த்த வரிகள் அவை.

தயாரிப்பாளராக “பத்தாம் பசலி” மற்றும் ஜெய்சங்கர் நடித்த “வரவேற்பு” இரண்டுமே இவரின் பணப் பையை நிறைக்கவில்லை.

“கத்தியைத் தீட்டாதே உன் புத்தியைத் தீட்டு” தமிழக அரசால் எட்டாம் வகுப்புபாடப் புத்தகத்தில் சேர்த்துப் பெருமை கொள்ள வைத்தது.

அப்படியே எழுபதுகளில் கொஞ்சம் இறங்கிப் பார்த்தால் “ஒரு கோடி இன்பங்கள்”  https://www.youtube.com/watch?v=VuShIlGyGMQ என்று சங்கர் – கணேஷ் கூட்டணிக்கும் விருந்து வைத்த பாடலாசிரியர் நம் ஆலங்குடி சோமு.

ஆலங்குடி சோமு அவர்களே தயாரித்து கே.பாலசந்தர் இயக்கிய “பத்தாம் பசலி” படத்தில் அனைத்துப் பாடல்களையும் வி.குமார் இசையில் எழுதியவர். “வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒன்று” https://www.youtube.com/watch?v=qlwGXhGdtFw பாடலை மறந்து விட முடியுமா என்ன?

பின்னாளில் வி.குமாரின் இசையில் எண்பதுகளில் வெளியான “சங்கரி” படத்திலும் பி.சுசீலா பாட “வாய் பேச" என்றொரு பாடலை எழுதியளித்தார்.

“மேளம் கொட்ட நேரம் வரும்” பாடல் மட்டுமன்றி லட்சுமி படத்தில் சுளையாக மூன்று பாடல்களை ஆலங்குடி சோமு அவர்கள் கைவண்ணத்தில் எழுத வைத்து இசையமைத்தார் இளையராஜா. 

“வேலாயி வீராயி” எஸ்.ஜானகி குழுவோடும், “பந்தயத்திலே” என்று வாணி ஜெயராமுக்காகவும் அமைந்தவை ஏனையவை.

அப்படியே “வேலாயி வீராயி” https://www.youtube.com/watch?v=39FCas-CuLw பாடலைக் கேட்கும் போது இன்னொரு பாடலை ஞாபகமூட்டும். 

அதுதான் “மஞ்சக்குளிச்சு அள்ளி முடிச்சு” https://www.youtube.com/watch?v=eNL69g00z_U

இந்தப் பிரபல பாடல் லட்சுமிக்கு முற்பட்ட “16 வயதினிலே” படத்துக்காக ஆலங்குடி சோமுவால் எழுதிப் பிரபலமாக அமைந்தது.

“எஞ்சோட்டுப் பெண்டுகளே

 இளவாழைத் தண்டுகளே”

அந்த அப்பட்டமான கிராமியத்தனத்தையும் தன்னால் சித்தரிக்கவும் முடியும் என்று எழுதிக் காட்டிவர். அந்தப் பாடலில் ஒரு கதைப்பாடல் உத்தியில் உரையாடல் சார்ந்தது போல வடிவமைத்திருப்பார் ஆலங்குடி சோமு.

உமா ரமணக்குக்காக குலுங்கக் குலுங்க இளமை (கண்ணே ராதா), எஸ்.பி.சைலகாவுக்காக கண்டாங்கி சேலை (கெட்டி மேளம்) என்று மேலும் பாடகிகளுக்கான தனிப்பாடலும் இளையராஜா இசையில் எழுதியவர் விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் பாடிய “அவள் ஒரு பச்சைக் குழந்தை” படத்தில் “பொண்ணு பார்க்க வந்தாரு மாப்பிள்ளை”

https://mio.to/album/Aval+Oru+Pachai+Kuzhantai+%281978%29

பாடலில்

‘இளையராசாவ நினைச்சு 

இளைச்சுப் போனீங்க தனிச்சு” 

என்று குறும்பு வரிகளையும் அதில் இட்டிருப்பார்.

எண்பதுகளில் புறப்பட்டவர்களுக்கும் தான் சளைத்தவர் இல்லை என்று காட்டுமாற்போல ஆலங்குடி சோமு அவர்கள் இசைஞானி இளையராஜா இசையில் கொடுத்த “நியாயம்” படப் பாடல் “கங்கை நதி மீனோ”

https://www.youtube.com/watch?v=VuxkDtnhqTk

என் பெருவிருப்புகளில் ஒன்று.

மாலையிடப் போறவன

கண்ணில் கலந்து

மங்கை மனம் அலையுதடி

மெல்லப் பறந்து

தங்கமே வைரமே இளங்கிளியே

குயிலே மயிலே இது உண்மையடி

மேளம் கொட்ட நேரம் வரும்

பூங்கொடியே

இந்தப் பாடலின் சந்தோஷ வடிவமும், சோக வடிவமும் ஒரு சேர அமைந்த ஒலிப் பகிர்வு

https://www.youtube.com/watch?v=gSYBDYzfwxo

கானா பிரபா

06.06.2022


Saturday, June 4, 2022

கேட்டதெல்லாம் நான் தருவேன் எனை நீ மறக்காதே ❤️ SPB

15 வருடங்களுக்கு முன்னர் கலைஞர் தொலைக்காட்சியில் வந்த ‘வானம்பாடி" என்ற பாட்டுப் போட்டி நிகழ்ச்சியின் இறுவட்டைக் கடந்த வாரம் போட்டுப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் ஒரு இளைஞர் பாடுகிறார்

“ஓ... பார்ட்டி நல்ல பார்ட்டி தான்

ஓ பியூட்டியின்னா பியூட்டி தான்"

பாடி முடித்த பிறகு அந்த நிகழ்ச்சியின் முதன்மை நடுவராக இருக்கும் SPB கருத்துச் சொல்ல ஆரம்பிக்கிறார். 

அது எப்படியென்றால் இந்தப் பாடலில் ஒவ்வொரு சங்கதிகளும் எப்படி விழ வேண்டும், எப்படி மெருகேறிப் பயணிக்க வேண்டும் என்று சல்லடை சல்லடையாகப் பிரித்து விளக்குகிறார்.

பார்த்துக் கொண்டிருக்கும் நான் உறை நிலைக்குப் போய் இந்த மனுஷரைப் பிரமிப்போடு வெறிக்கிறேன்.

ஏன் அப்படியானதொரு உணர்வை நான் எதிர்கொண்டேன் என்றால்,

இந்த “ஓ பார்ட்டி நல்ல பார்ட்டி தான்" பாடலில் SPB யின் பங்கு துளியளவும் இல்லை. பாடியவர்கள் மலேசியா வாசுதேவன், தீபன் சக்ரவர்த்தி குழுவினர். இந்தப் பாடல் கூட இசைஞானியின் அற்புத விளைச்சல்களில் ஒன்று என்றாலும் கூட உச்சபட்சமாகக் காலம் காலமாகக் கொண்டாடப்படுவதும் அல்ல. உதாரணத்துக்கு ஒருமுறை விஜய் சூப்பர் சிங்கரில் “அன்பே ஆருயிரே” (செவ்வந்தி) படப் பாடலைப் பாடிய போது நானா இந்தப் பாடலைப் பாடினேன் என்று அந்த மேடையில் வியந்து கேட்டார் SPB. அப்படியாக வகை தொகையில்லாமல் பாடிக் குவித்த காலம் அது.

ஆனால்....ஆனால்.....

இந்த மாதிரியான தனக்கு அந்நியமான பாடல்களில் கூட அதன் ஜீவன் எப்படி அமைந்திருக்கிறது என்பதை அப்படியே ஸ்கேன் செய்து பதிக்கும் அளவு அசாத்திய நுண்ணறிவு எங்கள் SPB க்கு உண்டு. பாட்டுப் போட்டிகளில் இந்த மாதிரிப் பாடல்களை ஒருமுறை கேட்டு விட்டே நடுவர்கள் களம் இறங்குவார்கள் என்றாலும் கூட SPB யின் ஆழ்ந்த நுட்பமான பார்வையை நீங்கள் பல இடங்களில் என்னைப் போலவே பார்த்து வியந்திருப்பீர்கள்.

அதுதான் SPB.

ஒரு உன்னதமான பாடகரின் தனித்துவம் என்பது அவரின் குரலை நகல் எடுக்க முடிந்தாலும் அவர் குரலில் தங்கியிருக்கும் ஜீவனைப் பறிக்க முடியாது, 

எஸ்.பி.பாலசுப்ரமணியம் வாழும் உதாரணம் என்று முன்னர் சொல்லியிருந்தேன். SPB மாதிரி அச்சொட்டாகப் பாட வரலாம் ஆனால் அந்த ஜீவனை அவர் தான் ஒளித்து வைத்திருக்கின்றார்.

55 ஆண்டுகளாகப் இசையுலகில் மங்காது பாடும் நிலா என்று ஒளிர் விட்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் நோயுற்று நம்மை விட்டுப் 

பிரிந்த போது மொழி கடந்து ரசிகர்கள் அழுதார்கள், 

அது மட்டுமா? 

ஒட்டு மொத்தக் கலையுலகமே இன்னும் அழுது கொண்டிருக்கிறது.

பொதுவாகவே கலைஞரது இழப்பு என்பது கடைக்கோடி ரசிகன் வரை 

தம் குடும்ப இழப்பாகவே கொண்டு துயருறுதல் வழமை. இங்கே எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களது மறைவை ஒரு பெரும் ஏமாற்றமாகவும் கொண்டே ஒட்டுமொத்த கலையுலகமும், ரசிகர்களும் ஏங்கித் தவிக்கிறார்கள். 

காரணம் அவரது குரல் வன்மை குறைந்தது இன்னும் 

பத்தாண்டுகளாவது வற்றாது செழுமையோடு இருக்கும் பாங்கிலேயே துடிப்போடு இயங்கியவர்.

ஒரு பாடகர் என்ற எல்லை கடந்து சிறந்த மனித நேயராகவும், 

இசையார்வம் கொண்ட குஞ்சு குருமான்களுக்குக்குக் கூட அவர்களின் 

எல்லைக்குக் கீழிறங்கித் தோளில் கை போட்டு ஆலோசனை 

கொடுக்கும் நண்பனாகவும் திகழ்ந்த ஒரு அபூர்வப் பிறவி அவர். 

எம்ஜிஆர் - சிவாஜி

கமல் - ரஜினி

விஜய் - அஜித்

என்று திரையுலகின் மூன்று சகாப்தமும் கண்ட எங்கள் எஸ்பிபி தனது 

25 வது வயதில் 43 வயது சிவாஜிக்குக் குரல் கொடுக்கிறார் முதன் 

முதலில், 22 வயது அஜித்துக்கு (அமராவதி) எஸ்பிபி முதன் முதலில் குரல் 

கொடுத்த போது 43 வயது.

தலைமுறை இடைவெளி காணா ஒரேயொரு பாடகர் தமிழ் திரையுலக வரலாற்றில் ஒரேயொருவராக எஸ்பிபி விளங்கி நிற்கிறார்.

1966 ஆம் ஆண்டு தொடங்கி கலைத்துறையில் மூன்று 

தலைமுறைகளை கண்டவர், 

16 மொழிகளுக்கு மேல் பாடியவர், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய 

மூன்று மொழிகளிலும் முதன்மை இலக்கப் பாடகராகத் தொடர்ந்து தன் இருப்பைத் தக்க வைத்த ஒரு ஆளுமை இப்பேர்ப்பட்ட ஒரு நற் குணம் கொண்டவராகத் திகழ்ந்ததைக் காணொளிகளூடாகக் கண்டு கண்ணீர் 

வடிக்கிறது இசை ரசிகர் உலகம்.

இளையராஜாவின் பாடல்கள் என்றால் அவர் இசையமைத்த நாலாயிரம் கடக்கும் பாடல்களில் சில நூறைத்தான் பரவலாகக் கொண்டாடிக் 

கொண்டிருக்கிறார்கள். அது போலவே எஸ்பிபி பாடியதில் பிரபல 

இசையமைப்பாளர் தவிர்ந்த பாடல்கள் கொட்டிக் கிடக்கின்றன. அது 

என்னவெனில் புத்தம் புது இசையமைப்பாளர்களின் அடையாளத்தை 

நிறுவ எஸ்பிபி எவ்வளவு துணை நின்றிருக்கிறார் என்பதைக் காட்டி 

நிற்கும். இந்த இடத்தில் எஸ்பிபி பழமைக்கும் புதுமைக்கும் ஒரு பாலமாகவே விளங்குகிறார் என்றே நோக்கவேண்டும். இசைத்துறையில் ஐம்பது 

ஆண்டுகளைத் தொட்டவர் மூன்று தலைமுறைகளைக் கண்டவர். 

இம்மூன்றிலும் தன் ரசிகர் குழாத்தை வளைத்தும் போடும் குரல் 

வித்தகர்.

அதனால் தான் ரஹ்மான் வழியாக ஒரு புத்திசை இயக்கம் எழுந்த போது “காதல் ரோஜாவே”  இல் ஆரம்பித்து இன்று வரை தவிர்க்க முடியாத 

குரலாக இருந்திருக்கிறார். அது சூப்பர் ஸ்டார் ரஜினி கடந்து, வினீத், 

அப்பாஸ் என்றெல்லாம் ரஹ்மானோடு பயணப்பட்டு நீண்டிருக்கிறது, 

அதையும் கடந்து போயிருக்கிறது.

ரஹ்மானுக்கு முந்திய சகாப்தம் இசைஞானி இளையராஜா காலத்திலும் கூட இசையாலும், எண்ணற்ற பாடகர்களை உள்ளிளுத்த வகையாலும் எழுந்த மாற்றம் எஸ்பிபி கணக்கில் கை வைக்கவில்லை. இளையராஜாவின் இசையில் அதிகம் பாடி வைத்தவர் எஸ்பிபி தான்.

மாற்றம் என்பது சடுதியாக விளைவது அல்லது, அது மெல்ல மெல்ல விளைவிப்பது. ராஜாவின் ஆரம்ப காலத்தின் இசையோட்டங்கள், பாடகர் ஒழுங்கு என்பது மெல்ல மெல்ல மாறிய பாங்கு ஓருதாரணம். ஆனால் 

எல்லா மாற்றங்களிலும் எஸ்பிபி தன்னை நிலை நிறுத்தியிருக்கிறார். 

புதியதொரு இசையமைப்பாளர் இசைக்க வரும் போதும் கூட எஸ்பிபி முத்திரையோடு தன் பாடலை அடையாளப்படுத்தும் சூழல் 

இருந்திருக்கிறது. ஒரு இசையமைப்பாளர் தன்னை

நிலை நிறுத்துவதற்கும், தன் பாடலை மிகஇலகுவாகக் கடைக்கோடி 

ரசிகனிடம் கொண்டு சேர்ப்பதற்கும் இங்கே உறுதுணை எஸ்பிபியின் 

குரல்.

நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும், ஒவ்வொரு 

இசையமைப்பாளரின் பாணியும் ஒவ்வொரு தினுசாக இருக்கும். 

அந்தந்த இசைக் கலவைக்கு ஈடு கட்டி எப்படிப் பாம்புச்சட்டை போலத் 

தன்னை உருமாற்றுகிறார் இந்தப் பாடும் நிலா என்றஆச்சரியத்துக்கு 

விடை காண முடிவதில்லை.

ஏராளம் மாநில அரசு விருதுகள், விருதுகள் கலை அமைப்புகளின் 

விருதுகள் இவற்றோடு, இந்திய அரசின் மிக விருதான 2010 ஆம் ஆண்டுக்கான பத்மபூஷண் விருதும் இவரை வந்து சேர்ந்தது. பாடகர் என்பதைத் தவிர நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என்ற பன்முகம் 

கொண்டவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.

திரையிசைப் பாடல்களுக்காகத் தேசிய விருது என்ற ரீதியில்

1979 ஆம் ஆண்டில் கே.வி.மகாதேவன் இசையில் 

சங்கராபரணம் (தெலுங்கு), 1981 ஆம் ஆண்டில் லஷ்மிகாந்த் பியாரிலால் இசையில் ஏக் துஜே கேலியே (ஹிந்தி), 1983 ஆம் ஆண்டில் இளையராஜா இசையில் சாகர சங்கமம் (தெலுங்கு), 1988 ஆம் ஆண்டில் இசைஞானி இளையராஜா இசையில் 

ருத்ரவீணா (தெலுங்கு), 1995 ஆம் ஆண்டில் ஹம்சலேகா இசையில் 

சங்கீத சாகர ஞானயோகி பஞ்சாட்சர கவி (கன்னடம்), 1997 ஆம் ஆண்டில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் 

மின்சாரக்கனவு (தமிழ்) ஆகிய படங்களில் கிட்டிய வகையில் இங்கேயும் பன்முக மொழிகளில் தன் சாதனையை நிலை நிறுத்தியிருக்கின்றார்.

"எங்க அப்பா ரொம்பக் குறும்புக்காரர்

1979 ஆம் ஆண்டில் அவர் யூ எஸ் இல் இசை நிகழ்ச்சிக்குப் போன போது குடும்பத்தில் இருந்து நாங்க யாரும் அந்தப் பயணத்தில் இல்லை. 

யூ எஸ் போய் விட்டு வந்த அப்பாவின் சூட்கேசில் என்ன வாங்கிக் கொண்டு வந்திருக்கிறார் என்று அம்மா பார்க்க, அதற்குள் wine glasses மட்டும் இருந்தன.

"என்ன இது" என்று அம்மா விநோதமாகப் பார்த்துக் கொண்டே கேட்க

"இது அவ்வளவு சீக்கிரம் உடையாத glasses" 

என்று அப்பாவித்தனமாக எஸ்பிபி சொல்லவும் வீடே போர்க்களமானது என்று சரண் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். 

பக்கத்தில் இருந்த பல்லவியும் இதைக் கேட்டு ஆமோதித்தவாறே விழுந்து விழுந்து சிரித்தார்.

எஸ்பிபி அஞ்சலியில் பாடகர் பிறைசூடன் உட்படப் பலரும் சரணை 

"இனி விளையாட்டுத்தனத்தை மூட்டை கட்டவும்"

என்று சொன்ன போது நிறைவுரை செய்ய வந்த சரண்

"எங்க அப்பா தான் இறக்கும் வரை விளையாட்டுத்தனமாகவே, 

ஜாலியாக இருந்தவர் அதையே நமக்கும் சொல்லிக் கொடுத்தார்" என்று நெகிழ வைத்தார்.

"உங்க வாழ்க்கையில் பின்னோக்கிப் போய்ப் பார்த்து 

ஏதாவது ஒன்றை மாத்தணும்னா எதை மாற்றுவீங்க?

ஏன்னா சரண் கூடச் சொல்லியிருந்தார் காலை ஆறு மணி 

கால்ஷீட்டெல்லாம் இருந்ததில்லை ஆனா அப்பாவுக்காக அது வந்துச்சு, அவர் எங்களோட இருந்த நேரம் வெகு குறைவு என்று"

இப்படி ஒரு கேள்வியை ஒரு பேட்டியில் எதிர் கொண்ட போது எஸ்பிபி சொன்னார்

"நான் என்னோட கடந்த காலத்தை மாற்ற விரும்பல

அது கடினமானதும், அழகிய தருணங்களாலும் ஆனது

விட்டுக் கொடுப்புகளும், இழந்தவைகளும் அதிகம் இருந்தாலும்

அந்த வாழ்க்கை இனிமையானது 

இப்போது கிடைக்கும் கேக் ஐச் 

சுவைப்பது அவ்வளவு சாதாரணமானது அல்ல"

என்று நேர் சிந்தனையோடு சொன்னார்.

கூடவே இன்னொன்றையும் சொன்னார்

"நான் என்னுடைய பேரப் பிள்ளையின் ஆரம்பக் கல்வி graduation day க்கு என்னோட எல்லா நிகழ்ச்சிகளையும் ரத்துச் செய்து விட்டு, பு

து சூட் எல்லாம் எடுத்து குடும்பத்தோடு போனேன். அதைப் பார்த்து என் மருமகன் கூடக் கண் கலங்கினார்.

"எங்களோட பல்கலைக்கழகப் பட்டமளிப்புக்குக் கூட நீங்க வந்ததில்லை" என்று என் பிள்ளைகள் குறைப்பட்டார்கள்.

"ஆனா நான் என் பிள்ளைகளோடு இருந்ததை விட, அவர்களுக்குச் 

சொல்லிக் கொடுத்ததை விட என் பேரப் பிள்ளைகளோடு நிறைய நேரம் செலவு பண்றேன், இதுதான் வாழ்க்கை” என்றார் அந்தப் பேட்டியில் 

எஸ்பிபி.

எவ்வளவு அழகான பார்வை இது, சமூகத்துக்காகத் தன் சுக, துக்கங்களைச் சமரசம் செய்தாலும் அதை நோகாமல் எடுத்துக் கொள்ளும் பண்பு, அதுதான் எஸ்பிபி என்ற எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்ற பாடும் நிலா.

நித்திய ஜீவனாக வாழ்ந்து கொண்டிருக்கும் எங்கள் பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் புகழ் யுகம் கடந்த. நீடித்து வாழ்க.

“கேட்டதெல்லாம் நான் தருவேன்

எனை நீ மறக்காதே” 

என்று சொல்லி விட்டுப் போயிருக்கிறார். சுக துக்கங்கள், இன்ப துன்பங்கள் மகிழ்ச்சிப் படுக்கைகளில் எல்லாம் அவற்றை மொழி பெயர்க்கக் கூடியதொரு குரலாக எங்கள் SPB என்றென்றும் நிலைத்திருப்பார்.

எம்மோடு “வாழும் நிலா” எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு 76 வது அகவை நிறை வாழ்த்துகள்.


"காலமெல்லாம் நான் வருவேன்
எனை நீ தடுக்காதே....."

கானா பிரபா

04.06.2022