எண்பதுகளில் இசைஞானி இளையராஜா கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில் இயங்கிய அடுத்த சுற்று இசையமைப்பாளர்களில் மிக முக்கியமானவர்கள் மனோஜ் - கியான் இரட்டையர்கள்.
பொதுவாக வட நாட்டு இசையமைப்பாளர்களின் செவ்வியல் தாக்கம் தமிழ்ப் படங்களில் ஒட்டாது இருக்கும் சூழலில் மனோஜ் கியான் வரவு தமிழுக்கு அந்நியப்படாமல் ஒட்டிக் கொண்டதால் தான் தமிழ்த் திரையிசையில் அவர்களில் பல காலம் நின்று நினைக்க முடிந்தது.
அதற்கு மிக முக்கியமான காரணம் அவர்களோடு இணை இசையாக ஆரம்பத்தில் தொடர்ந்த படைப்பாளி ஆபாவாணன் அவர்கள்.
ஆனால் மனோஜ் கியானை ஆபாவாணனுக்கு அறிமுகப்படுத்தியதே கே.ஜே.ஜேசுதாஸ் அவர்கள் தான்.
ஆபாவாணனோடு நான் நடத்திய பேட்டியில் இவ்விதம் மனோஜ் கியானோடு கூட்டுச் சேர்ந்த பின்னணியைக் கேட்ட போது ஆபாவாணன் இப்படிச் சொல்லியிருந்தார்.
“திரைப்படங்களுக்கு எப்போதுமே டியூன் போடறது முக்கியமான இசை சம்பந்தப்பட்ட முக்கிய முடிவுகளை எடுக்கிறதுன்னா நான் தான் எடுப்பேன். எனக்கு ஒரு நல்ல associate தேவைப்பட்டார்.
இரவுப் பாடகன் என்ற படத்தை நான் வந்து இயக்கி தயாரித்த போது எல்.வைத்யநாதனை ஒப்பந்தம் செய்து விட்டு பம்பாய் போனோம். பம்பாய்ல தான் ரெக்காடிங் எல்லாம் வைச்சிட்டிருந்தோம். இந்த பம்பாய் ரெக்காடிங்ல கியான் வர்மாவை அறிமுகப்படுத்தினது ஜேசுதாஸ்.
நாங்க வேறொரு லிஸ்ட் எடுத்திட்டு போயிருந்தோம். வேறொரு வெளியாளை வைத்துத் தான் செய்றதுன்னு. அப்ப ஜேசுதாஸ் சொன்னாரு. இல்லையில்ல ஒரு நல்ல ஒரு மியூசிக் டைரக்டரை அறிமுகப்படுத்தறேன், சிறப்பாய் செய்வாருன்னு சொல்லிட்டு எங்களை கியான் வர்மா வீட்டுக்கு கூட்டிட்டு போனார். நல்ல உதவியாளரோடு. இவர வைச்சு பண்ணுங்க சிறப்பாக பண்ணிக் கொடுப்பாருன்னு சொல்லி அறிமுகப்படுத்தி வைத்தார். அப்படித் தான் கியான்வர்மாவை நான் சந்திச்சேன். அவரு அந்த இரவுப் பாடகனுக்கு உதவி இசையமைப்பாளராக பணிபுரிந்தார். அப்போ நல்ல புரிந்துணர்வு ஏற்பட்டிச்சு. அதுக்கப்புறம் அந்தப் படத்தை இப்போ பண்ண வேண்டாம். ஏன்னா இப்ப இருக்கிற காலகட்டத்தில ஒரு தயாரிப்பாளராக போராடி படத்தை வெளிக் கொண்டு வாறது முக்கியம். அதனால நாம வந்து ஒரு தயாரிப்பாளராக நடந்துக்குவோம். அப்போ எனது வகுப்புத் தோழர் அரவிந்தரராஜ் வந்து என்னோட உதவியாளராக இருந்தார். அப்ப நான் சொன்னேன், நீ இயக்குநராக வேலை பாருன்னு. நான் கதை, திரைக்கதை, இணை இசை, தயாரிப்பாளர். இது என்னுடைய இலக்கு. அதனால அந்த படத்தை வந்து promote பண்ண முழு ஈடுபாடு வேணும். அதனால வந்து இயக்குநராக வந்து என்னால நூறு சதவீதம் கவனம் செலுத்த முடியாது. அதால நீங்க இந்த படத்துக்கு டைரக்டர், அப்பிடின்னு ஆரம்பிச்சு முதல்ல வந்து ஊமைவிழிகள் திரைப்படத்தை ஆரம்பிச்சோம்.
அப்போ நான் கியான்வர்மாவ கூப்பிட்டேன். இந்த மாதிரி தமிழ் இரவுப் பாடகனை ஆரம்பிக்க போறோம். நீங்க வாங்க நீங்க வந்து மியூசிக் பண்ணுங்க என்று கூப்பிட்டேன். முந்தின படங்கள்ல வேலை பார்த்தப்போ என்னை பற்றி முழுமையாகத் தெரிஞ்சுக்கிட்டார்.
டியூன்ஸ் எல்லாம் நான் போடறேன். இசையை வந்து நான் அடிப்படையாக கத்துக்கலையே ஒழிய கேள்விஞானத்தை வைச்சு நான் டியூன் போடறேன்றத கூட இருந்து கவனிச்சதால அவரு வந்து என்ன சொன்னாருன்னா நீங்க வந்து இசையமைப்பாளராக செய்யுங்க. நான் உங்க உதவியாளாராகப் பண்ணித்தாறேன்னு.
நான் சொன்னேன், எந்த ஒரு துறையையும் வந்து முழுமையாக தெரிஞ்சுக்காம தலையிடக் கூடாது. அதால இசையைப் பொறுத்தவரைக்கும் எனக்கு கேள்விஞானம் தான். டியூன் போடறேன் எல்லாமே செய்வேன்.
அதைப் பற்றி அடிப்படை அறிவு எனக்கு கிடையாது. அது இல்லாம எனக்கு வந்து அந்தப் போஸ்ட்ல பண்றதுக்கு விருப்பம் இல்ல. அதால நீங்க இசையமைப்பாளராக வாங்க. நான் வந்து இணை இசை ஆக சேர்ந்துக்குவோம் என்றேன். அப்ப கேட்டாரு தன் நண்பன் மனோஜ்னு இருக்கார். அவர நான் கூப்பிட்டுக்கல என்றார். எனக்கு ஒன்றுமில்லை. படத்தில நீங்க மனோஜ் கியான்னு போட்டாலும் சரி கியான்வர்மான்னு போட்டாலும் சரி. நீங்க அவர வந்து கூப்பிடுங்க என்றேன். கூட்டணியாக வந்து ஊமைவிழிகள் படத்திற்கான பாடல்களுக்கு இசையமைத்தோம். அதுக்கு முன்னாடி நாலைஞ்சு டியூனை ரெடி பண்ணி வைச்சிருந்தோம். அந்த ரெடி பண்ணி வைச்சிருந்த டியூனை போட்டுக் காண்பிச்சேன். அது ரொம்ப நல்லாயிருக்கு. அதெல்லாத்தையும் எடுத்துக்கிட்டோம். ப்ரெஷ்ஷா கம்போஸிங்ல உட்கார்ந்து சில பாடல்களை தயார் பண்ணினம். 7 பாடல்கள் பதிவு செய்யப்பட்டுச்சு”
என்று அந்தப் பேட்டியில் பகிர்ந்தார்.
இவ்விதம் மனோஜ் - கியான் கூட்டுச் சேர்வதற்கு ஆரம்பத்தில் விதையாக இருந்த ஜேசுதாஸ் அவர்களும் தமிழில் அவர்கள் இசையமைத்த ஊமை விழிகள் தொட்டுத் தொடர்ந்தார்.
“நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில் வாழும் மனித ஜாதி
அதில் வாழ்வதில்லை நீதி”
https://youtu.be/ANJ3N1D06UA
என்ற ஊமை விழிகளில் இடம் பெற்ற தத்துவப் பாடல் அந்தக் காலத்து இளைஞர்களின் தேசிய கீதங்களில் ஒன்று.
ஆரம்பத்தில் ஒரு தத்துவ முத்தைக் கொடுத்தவர்கள் அடுத்ததாக ஒரு அழகிய ரம்யமான காதல் பாடலை ஜேசுதாஸுக்கு அளித்தார்கள். அப்படி வந்தது தான் சுந்தர் கே.விஜயனின் இயக்கத்தில் வெளியான “வெளிச்சம்”.
வெளிச்சம் படத்தில் வரும் "துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே" பாடலை கே.ஜே.ஜேசுதாஸ் பாடியிருப்பார். அந்தக்காலத்துச் சென்னை வானொலி நிலைய நேயர் விருப்பம் வாயிலாக எனக்கு அறிமுகமான பாடலிது. கே.ஜே.ஜேசுதாஸ் பாடிய பாடல்களில் இளையராஜாவுக்குக் கொடுத்தது மட்டுமன்றி ரவீந்திரன் (உதாரணம் ஏழிசை கீதமே, பாடி அழைத்தேன்), சந்திரபோஸ் (சந்தோஷம் காணாத வாழ்வுண்டா) வரிசையில் மனோஜ் கியானுக்காகப் பாடிய பாடல்களைத் தேடிக் கேட்பதே சுகம். மற்ற இசையமைப்பாளர்களின் இசையில் கே.ஜே.ஜேசுதாஸ் இன் குரலுக்குக் கிடைத்த இன்னொரு பரிமாணம் துலங்கும்.
துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே பாடலில் இழைத்திருக்கும் மெல்லிசையும், வைரமுத்துவின் அழகிய வரிகளும், ஜேசுதாஸ் இன் குரலும் சேர்ந்து கிட்டிய இந்த அழகிய பாடலை இரவு நேரத்தில் கேட்கும் போது அது தரும் சுகமே தனி.
https://youtu.be/gqjDWuiBi10
அழகான புள்ளிமானே
உனக்காக அழுதேனே
பொண்ணுக்கு தாலி எதுக்கு...
மூணு முடிச்சு வெகுமானம்
ஓ...
ஆறுமுடிச்சு அவமானம்
https://youtu.be/trBiM2M4afQ
மனோஜ் கியான் இரட்டையர் கொடுத்த காதல் சோக கீதம் இசைத்தார் ஜேசுதாஸ் இம்முறை இராம நாராயணன் இயக்கிய மேகம் கருத்திருக்கு படத்துக்காக.
எண்பதுகளின் அண்ணன்மாரின் பாடல் கேசட் படிக்கும் இந்தப் பாடலின் ஆட்டோகிராபை.
ஆயிரம் தலைமுறை கேட்கும்
காதலின் சங்கீதம்
காற்றிலும் கேட்கும்
கடலிலிலும் கேட்கும்
எங்களின் ராகம்
வேதம் வேதம்
https://youtu.be/yWwfFnHR5p4
ஞாபகமிருக்கிறதா? கார்த்திக் & ரஞ்சனி நடித்த கல்யாண ராசி படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை சித்ராவோடு ஜேசுதாஸ் பாடியிருந்தார்.
இந்தப் படத்தை மனோஜ் கியான் இசைத்தனர்.
இவ்விதம் கே.ஜே.ஜேசுதாஸ் அவர்கள் திரையிசையில் கோலோச்சிய பல்வேறு இசையாளுமைகளோடு பயணப்பட்டு அங்கும் தன் அடையாளத்தை நிறுவினார்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
கான கந்தர்வன் கே.ஜே.ஜேசுதாஸ் ❤️
கானா பிரபா
10.01.2022