Pages

Tuesday, April 27, 2010

இளையராஜா & சத்யன் அந்திக்காடு - இன்னொரு வெற்றிக கூட்டணி


ஒரு இயக்குனருக்குள் இசையையோ குறித்த இசையமைப்பாளரையோ நேசிக்கும் ஆத்மார்த்தமான ரசிகர் இருப்பாரேயானால் எந்தக் காலத்திலும் அவர் யாசிக்கும் மெட்டுக்களை குறித்த இசையமைப்பாளரிடம் பெற்றுக் காலத்தால் அழியாத இசைக்காவியம் படைக்கலாம் என்பதற்கு எத்தனையோ இயக்குனர்களை முன்னுதாரணங்களாகக் காட்டலாம். இங்கே நான் கொண்டுவருபவர் மலையாளப் படவுலகின் ஜனரஞ்சக இயக்குனர் சத்யன் அந்திக்காட்.

சத்யன் அந்திக்காட் பற்றி தமிழ் ரசிகர்களுக்குப் பரிச்சாயம் இருக்காது ஆனால் அவரின் காந்தி நகர் 2nd Street, அண்ணா நகர் முதல் தெருவாகவும், நாடோடிக்காற்று கதாநாயகனாவும் தமிழில் மீள எடுக்கப்பட்ட படங்கள். இவையெல்லாம் தாண்டி சத்யன் அந்திக்காட் வெறுமனே மசாலா இயக்குனராக மட்டுமன்றி குடும்ப உறவுகளைப் பலவிதமான கோணங்களில் அவர் உருவாக்கித்தந்த வரவேற்பு, வீண்டும் சில வீட்டுக்கார்யங்கள், மனசினக்கரே, அச்சுவிண்டே அம்மா, ரசதந்திரம், பாக்யதேவதா என்று பட்டியல் நீளும் படங்களை எடுத்து வெறுமனே விருதுகளை மட்டும் குவிக்காமல் ரசிகர்கள் நெஞ்சிலும் இடம்பிடித்துக் கொண்டவர்.

சத்யன் அந்திக்காட் இன் ஆரம்பகாலப் படங்களை எடுத்துக் கொண்டால் அவற்றில் இளையராஜாவின் பங்களிப்பு இல்லை. கொச்சு கொச்சு சந்தோஷங்கள் படத்தை தொடர்ந்து ஒரு சிறு இடைவெளி விட்டு மீண்டும் சத்யன் அந்திக்காட் - இளையராஜா கூட்டணி சேர்ந்த போது வந்த படங்கள் அனைத்துமே இசைச்சாகரம் என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாக அவை வெறுமனே நல்ல பாடல்களைக் கொண்ட படங்கள் என்பதை விட , சத்யன் சொல்ல வந்த படைப்பை நுணுக்கமான இசையால் நெய்தளித்த அருமையான பின்னணி இசை குறித்த படங்களை ஒரு படி உயர்த்தியும் விட்டன.

இன்றைக்கு இளையராஜாவின் இசைக்கு வர்த்தக உலகில் சற்றே இறக்கம் இருந்தாலும் தொடர்ந்து ஏழாவது படமாக தொடர்ச்சியாக இளையராஜாவைப் பயன்படுத்திவரும் சத்யன் சந்தேகமே இல்லாமல் அவரின் தீவிர ரசிகராக இருக்கிறார் என்பதில் ஐயமே இல்லை. அதை நிரூபிக்குமாற் போல, இளையராஜா சத்யனோடு சேரும் ஓவ்வொரு படங்களிலும் தனித்துவமான இசையை விட்டுச் செல்வார்.
இந்த ஆண்டு சத்யன் அந்திக்காட் இற்கு மிகவும் விசேஷமான ஆண்டு. காரணம் அவர் இயக்கி வெளிவரும் 50 வது படமான "கதா தொடருன்னு" வரவிருக்கின்றது. சத்யனும் ராஜாவும் கூட்டணி வைத்த ஓவ்வொரு படத்தையும் ஆழ அகலமாக ஆய்வு செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், அதை ஆறப்போட்டு விட்டு திடீர் விருந்தாக, இவர்கள் கூட்டணியில் வந்த சில முத்துக்களை இங்கே தருகின்றேன்.

கொச்சு கொச்சு சந்தோஷங்கள்


ஜெயராம் காவ்யா மாதவன் நடித்து வெளிவந்த இப்படம் 2001 ஆம் ஆண்டுக்கான சிறந்த பிராந்திர மொழிப்படமாகத் தேர்வு செய்யப்பட்டுத் தேசியவிருதைப் பெற்றுக் கொண்டது.

இந்தப் படத்தில் இருந்து கே.ஜே.ஜேசுதாஸ் பாடும் ஒரு இனிய பாடல் "கோட மஞ்ஞில்"மனசினக்கரேமுதுமை வரமா, சாபமா? விடைதேடும் கேள்வியோடு மனதில் பாரத்தை விதைத்த படம். அதைப்பற்றி அனுபவித்து எழுதிய பதிவு மனசினக்கரே - முதுமையின் பயணம்

மனசினக்கரே தரும் "தங்கத்திங்கள்"
அச்சுவிண்டே அம்மா


இந்தப் படத்தைப் பார்த்து மூன்று வருஷங்கள் கழிந்தும், பதிவாகப் பகிர்ந்து கொள்ள முடியா அளவுக்கு வார்த்தைகளில் அடக்கமுடியாத உணர்ச்சிச் சித்திரம் இது. ஊர்வசிக்கு காலாகாலத்துக்கும் உயிலில் எழுதி வைக்க வேண்டிய நடிப்பை அளித்தது. இசைஞானியும் சத்தியன் அந்திக்காடுவும் இணைந்து சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டே மெட்டுப் போட்டு ரசித்த சீடிக்களும் வந்து பரபரப்பைக் கிளப்பியது. இசைஞானி மத்திய கிழக்கு நாட்டுக்குக் கடத்திப் போகும் பாட்டு ஒன்று இதில் இருந்து "எந்து பறஞ்சாலும்"
ரசதந்திரம்


இந்தப் படத்தை கேரளாவின் ஆலப்புழாவில் ஒரு தியேட்டரில் பார்த்து இன்புற்ற அந்த நாள் இன்னும் பசுமரத்தாணி போல. அதைப் பற்றி தமிழ்மண நட்சத்திர வாரத்தில் நான் எழுதிய பதிவு.

ரச தந்திரம் - திரைப்பார்வைரசதந்திரம் தரும் "பொன்னாவணிப் பாதம் தேடி" மதுபாலகிருஷ்ணன், மஞ்சரி குரல்களில்


வினோதயாத்ராகதையே இல்லாத படத்தையும் கூட, ரசிகனின் கைப்படித்து உட்காரவைத்து விசிறி விட்டுப் பார்க்க வைக்கும் தந்திரம் சத்தியன் அந்திக்காடுவுக்கு உண்டு என்று நிரூபித்த இந்தப் படம் திலீப் இன் நகைச்சுவை நடிப்புக்குத் தீனி கொடுத்தது. அதில் வரும் மதுபாலகிருஷ்ணன் பாடும் "மந்தாரப்பூ" என் சர்வகாலத்து இசைப்பட்டியலில் ஒன்றுஇன்னதே சிந்த விஷ்யம்மூன்று ஆர்ப்பாட்டமான பெண்மணிகளுக்குப் பாடம் படிப்புக்கும் வேலை மோகன் லாலுக்கு, கூடவே குறும்புக்காரி மீரா ஜாஸ்மினும். சொல்லவா வேண்டும் இவர்கள் கொட்டத்துக்கு. ராஜாவை மனதில் இருத்தி வைத்து நேசிக்கும் பாடகன் சிறீகுமாருக்குக் கிடைத்த இன்னொரு பொக்கிஷ வாய்ப்பு "கண்டோ கண்டோ காக்கைக் குயிலே"பாக்யதேவதாசத்யன் அந்திக்காடு இயக்கி இறுதியாக வெளி வந்த படமிது. இதைப் பற்றியும் ஒரு பதிவு போட்டு நிறைவடைந்தேன்.

"பாக்ய தேவதா" என்னும் இளையராஜா


கனிகா மீது மையல் கொண்டு ஜெயராம் பாடும் "ஸ்வப்னங்கள் கண்ணெழுதிய" (பாடியவர்கள் சித்ரா, ராகுல் நம்பியார்) பாடலைக் வெறும் கேட்கும் போது இருந்த சுகம் பார்க்கும் போது இரட்டிப்பாகின்றது காட்சியோடு அளவாகப் பொருந்தி.கத தொடருன்னுசத்யன் அந்திக்காடுவின் கலையுலக வாழ்வில் ஐம்பதாவது படமாக வரவிருக்கும் கத தொடருன்னு ராஜாவோடு அமர்க்களமான கூட்டணியாகத் தொடர்கின்றது. சத்யனும் ராஜாவும் இன்னும் தமது வெற்றிக்கூட்டணியில் இன்னும் பல நிறைவான படைப்புக்களைத் தர வாழ்த்தி இந்தப் படத்தில் இருந்து ஹரிகரன், சித்ரா குரல்களில் "ஆரோ" பாடல் நிறைக்கின்றது.

Monday, April 26, 2010

றேடியோஸ்புதிர் 54 - ஆண்கள் மட்டுமே பாட்டிசைத்த படம்

கற்பகம் என்று பழைய படம், அதில் பெண் குரல் மட்டுமே பின்னணி பாடல்கள் எல்லாவற்றிலும் இருக்கும். பின்னர் ஒருதலை ராகம் படத்தில் டி.ராஜேந்தர் ஆண் குரலை மட்டுமே பின்னணிப் பாடல்களில் பயன்படுத்தி இருப்பார். அப்படி வந்த இன்னொரு படம் தான் இது. இந்தப் படத்தின் இயக்குனர் அடிப்படையில் ஓவியர் என்பதால் ஒவ்வொரு காட்சியையும் ஸ்கெட்ச் ஆக வரைந்து விட்டுத் தான் எடுப்பாராம் என்று படம் வெளிவருவதற்கு முன்னான காலத்தில் ஜெமினி சினிமா, பொம்மை போன்ற ஊடகங்கள் அப்போது பரபரப்பு பப்ளிசிட்டியை கிளப்பியிருந்தன.

இதயத்தை திருடாதே படத்துக்குப் பிறகு இசைஞானி இளையராஜாவுக்குக் கிடைத்த இன்னொரு இளமையான அழகான கரு என்பதால் மனுஷர் பின்னணி இசையில் பின்னி பெடல் எடுத்து விட்டார். கூடவே கவிஞர் மு.மேத்தாவின் காதல் ரசம் கொட்டும் புதுக்கவிதையையும் அழகாகச் சேர்த்து நெய்த அற்புதக் களஞ்சியம் இப்படம்.

இளையராஜாவும் இந்த இயக்குனரும் இணைந்த முதல் படமே பெரு வெற்றி. ஆனால் இயக்குனர் தொடர்ந்து ராஜாவுக்கு கா விட்டு விட்டு ரஹ்மானுடன் ராசியாகி விட்டார்.

சரி ஏகப்பட்ட க்ளூ கொடுத்திருக்கிறேன், மனசை நோகடிக்காமல் கண்டுபிடிங்க தம்பி தங்கைங்களா ;)

சரியான படம் : இதயம்

இயக்குனர்: கதிர்

போட்டியில் பங்கு கொண்ட அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி

Sunday, April 18, 2010

சுந்தரக் குரல் சொந்தக்காரி சுனந்தா

திரையுலகை எடுத்துக் கொண்டா ல் திறமை இருந்தால் மட்டுமல்ல அதிஷ்டமும் கூடி வந்தால் தான் வாய்ப்புக்கள் கிட்டும் என்பதற்கு திரையிசைப்பாடகர்கள் கூட விதிவிலக்கல்ல. அப்படி ஒரு எடுத்துக்காட்டுத் தான் பாடகி சுனந்தா.

புதுமைப்பெண் திரைப்படத்தின் மூலம் இசைஞானி இளையராஜாவால் காதல் மயக்கம் பாடவைத்து தன் குரலால் மயக்கியவர். தொடர்ந்து அத்தி பூத்தாற்போலத்தான் சுனந்தாவுக்கு வாய்ப்புக்கள் கிட்டியிருக்கின்றது. திரையிசையை எடுத்துக் கொண்டால் என்னதான் சிறப்பான குரல்வளம் இருந்தாலும் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப தன் குரலை மாற்றிப்பாடும் பாங்கும் கைவரப்பெற்றிருக்க வேண்டும். இது காதல் ரசம் கொட்டும் பாடலில் இருந்து, வீரஞ்செறிந்த மிடுக்கான பெண் குரலாக வளைந்தும் கொடுக்க வேண்டும். அந்த வகையில் எஸ்.ஜானகியின் விதவிதமான பரிமாணங்களுக்கு (சித்ரா கூட இந்த வகையில் முயற்சித்திருக்கிறார்)ஈடு கொடுக்கும் வகையில் எண்பதுகளில் பாடகிகள் இல்லையென்றே கூறிவிடலாம். சுனந்தா கூட இந்தப் பட்டியலில் சேர்த்தி. காதலின் ஆத்மார்த்த ராகமாக ஒலிக்கும் அவர் குரலை வேறு எந்த எல்லைக்கும் பயன்படுத்த முடிவதில்லை.
கேரளத்தில் இருந்து வந்த குயில்களில் சுனந்தாவும் சேர்த்தி. இவருக்கு ஈடுகொடுக்கும் அலைவரிசையில் அமைந்த பாடகர் ஜெயச்சந்திரன் அழகாகப் பொருந்தி சிறப்புச் சேர்த்த பாடல்கள் இன்றும் கேட்க இனிமையானவை.எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் "செண்பகமே செண்பகமே" என்ற இனிய பாடலை என்னதான் பெரிய பாடகியாக இருந்தாலும் ஆஷா போன்ஸ்லே பாடும் போது தமிழை விட்டு விலகிய ஒரு அன்னியத்தன்மை தெரியும். அதே பாடலை சந்தோஷ மெட்டில் சுனந்தா பாடிய போது ஆஷாவையே ஓரம் கட்டிவிட்டது போன்ற பரிமாணத்தைக் காணலாம். இன்னொரு சிறப்பான உதாரணம், சொல்லத் துடிக்குது மனசு படத்தில் வரும் "பூவே செம்பூவெ" இந்தப் பாடலை ஆண்குரலில் கே.ஜே.ஜேசுதாஸ் பாடும் போது அதே அலைவரிசையில் பெண்குரலாக சுனந்தா பாடியதும் கேட்கத் திகட்டாத தேன்மழை. உன்னால் முடியும் தம்பி படத்தில் வரும் "என்ன சமையலோ" என்ன கலகலப்பான பாடலில் சுனந்தாவின் குரல் வித்தியாசமாக வெளிப்பட் டிருக்கிறது.

தொண்ணூறுகளில் செவ்வந்தி படத்தில் வரும் "செம்மீனே செம்மீனே", உழைப்பாளி படத்தில் வரும் "அம்மா அம்மா எந்தன் ஆருயிரே", வால்டர் வெற்றிவேல் படத்தில் வரும் "மன்னவா மன்னவா" பாடல்கள் சுனந்தாவுக்குக் கிடைத்த சொற்ப வாய்ப்புக்களிலும் சிக்சர் அடித்த பாட்டுக்கள். சுனந்தாவின் குரலை பலசமயம் நினைவு படுத்தும் குரலாக பின்னாளில் அறிமுகமாகி புயல்போல் புரட்டிப் போட்ட சொர்ணலதாவின் குரல் சுனந்தாவிற்கு கிடைத்த மிச்ச சொச்ச பாடும் வாய்ப்புக்களைக் கூடப் பங்கு போட்டு விட்டது போல.

இன்றைய யுகத்து நாயகிகளுக்கும் பொருந்திப் போகக் கூடிய சுந்தரக் குரல் கொண்ட சுனந்தாவின் பாடல்பெட்டகத்தில் இருந்து ஒரு சிலபாடல்களை உங்கள் ரசனைக்கு விருந்தாகப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

முதலில் வருவது சுனந்தாவை தமிழ்த்திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய "காதல் மயக்கம்" ஜோடி கட்டி இணைந்து பாடுவது ஜெயச்சந்திரன்சொல்லத் துடிக்குது மனசு திரைப்படத்தில் இருந்து சுனந்தா பாடும் "பூவே செம்பூவே" என்ற இதமான ராகம் இதயத்தில் ஊடுருவகாதல் பாடல்களில் என் விலக்க முடியாத விருப்பத் தேர்வாக இருக்கும் "பூ முடிச்சு பொட்டு வச்ச வட்ட நிலா" ஜெயச்சந்திரன், சுனந்தா குரல்களில் "எம் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்" படத்தில் இருந்து
இசைஞானி இளையராஜா ஹீரோவாக இருந்த படங்களில் ஒன்றான "எங்க ஊரு பாட்டுக்காரன்" படத்தில் இருந்து மனோவுடன் சுந்தரக் குரல் சுனந்தா பாடும் "செண்பகமே செண்பகமே"எஸ்.பி.பி, சித்ராவோடு சுனந்தா பாடும் வித்தியாசமான பாடல் ரகமான "என்ன சமையலோ", உன்னால் முடியும் தம்பி திரைக்கா கசெவ்வந்தி திரையில் இருந்து கலக்கல் ஜோடி ஜெயச்சந்திரன், சுனந்தா மீண்டும் இணையும் "செம்மீனே செம்மீனே"குழந்தையை மட்டுமா தாலாட்டியது, இல்லை இல்லை நம் எல்லோரையும் தாலாட்டும் சுனந்தாவின் "மன்னவா மன்னவா" , வால்டர் வெற்றிவேல் தருகிறது.நிறைவாகவும் "நிறைவாகவும்" ஜெயச்சந்தி ரன், சுனந்தா ஜோடி கட்டும் "ஒரு கோலக்கிளி" பொன் விலங்கு திரைப்படத்துக்காக

Sunday, April 11, 2010

என்றோ கேட்ட இதமான ராகங்கள்

என்றோ ஒரு நாள் கேட்டு ரசித்த பாடலை ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் இன்னொரு தடவை எதிர்பாராதவிதமாகக் கேட்கும் போது அதில் பெறும் சுகமே தனி தான். அந்த வகையில் இன்று நான் முணுமுணுத்துக் கொண்டிருக்கும் பாடல்கள் மூன்றைத் தருகின்றேன்.

"திருத்தேரில் வரும் சிலையோ சிலைபூஜை ஒரு நிலையோ அழகின் கலையோ கலைமலரோ மணியோ நிலவோ நிலவொளியோ எனும் சுகம் தரும் திருத்தேரில் வரும் சிலையோ" இந்த இனிமையான பாடல் கே.ஆர்.விஜயா தயாரித்த "நான் வாழ வைப்பேன்" திரையில் மலர்ந்தது. எஸ்.பி.பாலசுப்ரமணியமும், பி.சுசீலாவும் பாடும் இந்தப் பாடலின் தனித்துவம் என்னவென்றால் பாடலின் முதல் அடிகள் ஓ என்ற சொற்கட்டோடு போகும். பாடல் முழுவதும் ஐம்பதுகளில் கேட்ட பாடல்களின் வரியமைப்பை ஒத்தது போல அமைக்கப்பட்டிருக்கும். பாடலை எழுதியவர் கூட திரையிசைக் கவிதைகளில் பழுத்த பழம் கவிஞர் கண்ணதாசனாச்சே. இளையராஜாவின் ஆரம்ப காலப்பாடல்கள் மெல்லிசை மன்னர் விஸ்வநாதனின் பாணியின் சாயலில் இருப்பது போல ஒரு பிரமை இருக்கும். இந்தப் பாடலில் தபேலாவின் ரிதம் அட்சரசுத்தமாக எம்.எஸ்.வி இன் பல பாடல்களில் இருக்கு. பாடலில் ராஜாவின் தனித்துவமுத்திரையாக கிட்டார் இசை அழகாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.
"அடுத்தாத்து ஆல்பட்" பலருக்கு இப்படி ஒரு படம் வந்ததே தெரியாது. ஆனால் "இதயமே.... நாளும் நாளும் காதல் பேச வா...." இந்தப் பாடலை மறக்க மாட்டார்கள். எண்பதுகளில் மலேசியா வாசுதேவனின் தனித்துவமான குரல் மிளிர்ந்த காலகட்டத்தில் அவரோடு இணைந்து எஸ்.ஜானகி பாடிய பாடல். இப்பாடலின் ஆரம்ப சங்கதியே மலை மேட்டொன்றின் மீது மெல்ல உச்சி நோக்கி ஓடுவது போல இருக்கும். அந்த ஆரம்ப வரிகளும் அப்படியே மூச்சுவிடாமல் பதியப்பட்டிருக்கும்.

வானம்பாடி போல நாங்கள் கானம் பாடி ஓடினோம்
வாசம் வீசும் பூவைப்போல வாசம் வீசி பாடினோம்

இப்படி காதலன் பாட பின்னணியில் கொங்கோ வாத்தியம் இதமாகத் தாளம் தட்டும் அதற்கு

ஜாதி பேயை ஓட்டுவோம் நீதி நாட்டுவோம்
சாமி வந்து தோன்றினும் காதல் பேசுவோம்

இப்படி காதலி பாடுவாள் அந்த சரணம் முடியும் போது இன்னொரு புது மெட்டில்

அன்பின் உறவே இன்றும் நமதே என்றும் நமதே
இதயமே நாளும் நாளும் காதல் பேசவா

எனப் பயணிக்கும் வகையில் புதுமையாக அமைக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடல் முழுவதும் மெட்டுக்கள் மாயாஜாலம் காட்டும். பின்னணி இசை கூட காதலின் இலக்குத் தேடி ஓடும் பயணமாக வெகு வேகமாக வாத்திய ஆலாபனை இசைஞானி இளையராஜாவின் முத்திரை பதிவு செய்யப்பட்டிருக்கும்.

"ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்" இலங்கை வானொலியில் கலக்கிய பாடல், உறவாடும் நெஞ்சம் படத்திற்காக எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பாடியது. இளையராஜா தன் ஆரம்பகாலத்தில் அவசரமாக படங்களை ஒப்புக்கொண்டு சூடு போட்டுக் கொண்ட அனுபவம் இந்தப் படத்தையும் சேர்த்து ஒரு பட்டியல் இருக்கு. ராஜாவின் அழகான மெட்டும், இசையும் இப்பாடலை இன்னொரு தனித்துவமான கீதமாகக் காட்டினாலும் படம் பிரபலமில்லாத வகையில் பாடலின் உழைப்பும் வீணாகி விட்டது. ஆனால் வருஷங்கள் பல கடந்தும் இன்றும் கேட்க இதமான ராகம் இது.