Pages

Friday, March 24, 2023

TMS என்பதோர் திருக்குரல் ❤️

“என் பாடல் செவி கேட்கும் விருந்தாகலாம்

என் பாடல் நோய் தீர்க்கும் மருந்தாகலாம்

என் மேன்மை இறைவா உன் அருளாகலாம்”

இவ்வளவு தான் அவரைப் பற்றிப் பேச என்று அவர் தம் பாடலின் வழியாகவே சொல்லி விடலாம். 

அதுதான் T.M.செளந்தரராஜன் என்ற பாட்டுலகச் சக்கரவர்த்தியின் பெருமை. அந்தப் பெயரைச் சொன்னால் ஒரு கம்பீரம் பிறக்கிறதே அந்தக் குரல் வலிமை தான் திரையிசையை நாடாள வைத்ததன் தார்ப்பரியம்.

எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல், ரஜினி என்று நீண்ட திரையுலக உச்ச நட்சத்திரங்களின் அணி செய் குரலாக இருந்ததும், அதுவும் எப்படி இவர் எம்.ஜி.ஆருக்குப் பாடும் போது அவரே ஆகவும்,

சிவாஜிக்குப் பாடும் போது சிவாஜியே ஆகவும் பிரதிபலிக்கிறாரே என்ற வியப்பெல்லாம் இயல்பாகி விட்டது.

அதை விட வியப்பான காரியம், ஒவ்வொரு பாத்திரப்படைப்பையும் செளந்தரராஜன் அவர்கள் அணி செய்த விதம். அதுதான் மிக முக்கியமானது. திரைப்படைப்புகளில் அண்ணனாக, தந்தையாக, நண்பனாக, இலட்சிய வேட்கை கொண்ட புரட்சிக்காரனாக, அப்பாவியாக என்று ஒவ்வொரு பாத்திரங்களுக்கும் இவர்தம் குரல் அணி செய்த விதம் ஒருவகை என்றால்,

இன்னொரு பக்கம் அண்ணனில் தான் எத்தனை வகை பாருங்கள்

“மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்" அண்ணன் சிவாஜிக்கும்,

“கல்யாணச் சாப்பாடு போடவா” அண்ணன் நாகேஷுக்கும் தான் எத்தனை வித்தியாசம்? இந்த நுணுக்கங்களையெல்லாம் ஒரு பாடலைக் கேட்கும் போது கொண்டு வர முடிகின்றதென்றால், அந்தக் குரல் ஆளுமையின் பின்னால் எப்பேர்ப்பட்ட ரகசியம் ஒளிந்திருக்கிறது பாருங்கள்.

பக்தி இலக்கியங்களாகவும், பாடியே நடித்தவர்களாகவும் திரையிசை இலக்கணம் இயங்கிய காலத்தில் இருந்து படிமுறை மாறுதலாக,

நடிகர்களுக்குக் குரல் கொடுக்கும் நிலைக்கு மாறிய போது அதில் எல்லா இலக்கணங்களுக்கும் சரிவரப் பொருந்தியவர் செளந்தரராஜன் அவர்கள். அவரின் நீட்சியே பின்னால் வந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்ற இன்னொரு சகாப்தம்.

ஆனாலும் தனக்கு முந்திய யுகத்தின் பிரதிபலிப்பையும்

“வசந்த முல்லை போலே வந்து 

அசைந்து ஆடும் பெண் புறாவே

மாயமெல்லாம் நான் அறிவேனே 

வா வா ஓடி வா....”

தொட்டுக் காட்டி பழமைக்கும் புதுமைக்கும் பாலம் அமைத்தவர்.

இன்னும் நீட்டித்துப் பார்த்தால்,

சிவாஜி கணேசன் என்ற மகா நடிகருக்கு என்னதான் மாற்றுக் குரல்கள் வந்தாலும்,

“பாசமலரே.....!

அன்பில் விளைந்த வாசமலரே....!”

என்று எண்பதுகளில் குரல் கொடுத்த போது அச்சொட்டான அப்பன்காரனின் கனிவை எழுப்ப முடிகின்றதென்றால் அந்தக் குரலுக்கு ஓய்வில்லை என்று தானே அர்த்தப்படும்?

அற்ப வாழ்நாள் கொண்டிருந்தாலும் அற்புதக் கவியாற்றல் கொண்ட பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல்களின் எழுச்சி மிகு பாடல்களுக்கு உணர்வு வடிவம் கொடுத்தது இன்னும் உயர வைத்தது டி.எம்.எஸ் இன் குரல்.

“பிறப்புக்கு முன்னால்

இருந்தது என்ன

உனக்கும் தெரியாது

இறந்த பின்னாலே

நடப்பது என்ன

எனக்கும் புரியாது

இருப்பது சிலநாள்

அனுபவிப்போமே

எதுதான் குறைந்துவிடும்

இரவினில் ஆட்டம்

பகலினில் தூக்கம்

இதுதான் எங்கள் உலகம்”

அந்த முரடனின் ஒவ்வொரு தள்ளாட்டத்தையும் பதிவு செய்யும் குரலாகி விடுவார்.

கண்ணதாசனின் காதலில் இருந்து எல்லா உணர்வையும் அசரீரியாகக் கொடுத்ததில் டி.எம்.செளந்தரராஜனின் குரலே முதன்மையானது.  தமிழ்த்திரையின் முன்னணி நடிகர்களான எம்.ஜி.ஆர், சிவாஜி தொடங்கி ஜெய்சங்கர், சிவக்குமார் வரையான நாயகர்களுக்கு ஏற்ற விதத்தில் பாடிச் சென்றவரின் பாடல்களை வெறுமனே ஒலி வடிவில் கேட்கும் போதே இது யாருக்கானது என்று கண்டுபிடித்துச் சொல்லுமளவுக்கு நுணுக்கம் நிறைந்தவர்.  

அவருக்குப் பின்னர் தான் திரைப்படத்தின் நாயகனின் பாத்திரத்துக்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டு பாடும் வல்லமையைத் தமிழ்த்திரையிசையுலகம் பதிவு செய்து கொண்டது. அந்த நிலையை இழந்து நிறமற்றது போலப் போய் நிற்கின்றது இன்றைய தமிழ்த்திரையிசையுலகம். 

டி.எம்.செளந்தரராஜன் குரல் போர்க்கால இலக்கியமாகக் கொண்டாடப்பட்ட அதே சமயம் ஆலயங்கள் தோறும் கொடியேறிக் கொண்டாட்டம் நடக்கும் போதும் இன்னும் முக்கிய திருவிழாக்களிலும் "உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே" என்றும் "புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே" என்றும் "தில்லையம்பல நடராஜா" என்றும் அந்தந்த ஆலய மூல மூர்த்தியின் பெருமைதனைக் கூறும் பக்திப்பாடல்களிலும் இடம்பிடித்தவர் இன்னும் தொடர்கின்றார்.

"கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தே" என்ற பாடலை எங்களூர் வீரமணி ஐயர் அவர்கள்  கபாலீஸ்வரர் கோயில் உறையும் அன்னை மீது எழுத  அதை டி.எம்.செளந்தரராஜன் குரல் வடிவம் கொடுத்து ஈழத்தமிழகத்துக்கும், இந்தியத்தமிழகத்துக்கும் உறவுப்பாலம் அமைத்ததை இன்றும் பெருமையாகச் சொல்லிக்கொள்வோம்.

அன்றைய காலகட்டத்தில் நாங்கள் சிறுசுகளாக இருந்த போது,  மாமன், மச்சான் உறவுகளும் சரி ஊரில் தோட்டவேலை செய்து களைத்து விழுந்து வீடு திரும்பும்  உழைப்பாள சமூகமும் சரி இடம், பொருள் ஏவல் பாராமல், டி.எம்.எஸ் இன் குரலைத் தம்முள் ஆவாகித்துக் கொண்டு பாடியபோதெல்லாம் வேடிக்கை பார்த்ததை இப்போது நினைத்துப் பார்க்கும் போது அந்தக் கலைஞன் எவ்வளவு தூரம் எல்லாத்தளங்களிலும் நின்று தன்னை நிறுவியிருக்கிறான் என்ற ஆச்சரியமே மேலோங்குகின்றது.

உயர்ந்தவன் 

           தாழ்ந்தவன் 

இல்லையே நம்மிடம்.......

பள்ளிக்கால நண்பனைத் தேடி அலையும் மனம், அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே கேட்கும் போதெல்லாம்.

“நீ கொண்ட பெயரை

நான் உரைத்து கண்டேன் சாந்தி

நீ காட்டும் அன்பில்

நான் கண்டு கொண்டேன் சாந்தி

நீ பெற்ற துயரை

நான் கேட்டு துடித்தேன் சாந்தி

நீ பிரிந்த பின்னே நான் இழந்து நின்றேன் சாந்தி”

எண்பதுகளின் திரையிசைப்பாடல்களிலே டி.எம்.செளந்தரராஜனுக்கான கெளரவத்தை மீளவும் நிலை நிறுத்தியவர் டி.ராஜேந்தர். அவரின் ஒரு தலை ராகம் படத்தில் வரும் "நானொரு ராசியில்லா ராஜா" அன்றைய அண்ணன்மாரின் காதலுக்கான தேசிய கீதமாகவும், "என் கதை முடியும் நேரமிது" காதலின் விரக்தியில் நின்றோரின் உள்ளத்து ஓசையாகவும் அமைத்துக் கொடுத்தார் டி.ராஜேந்தர். இளையராஜா காலத்தில் புதுமையைத் தேடி எஸ்.பி.பாலசுப்ரமணியம், மலேசியா வாசுதேவன், ஜேசுதாஸ் என்று மும்முனைப் போட்டியிருக்க, அங்கும் தன்னை நிலை நாட்ட வைத்தது ஒரு தலை ராகம் திரைப்படப் பாடல்கள். டி.ராஜேந்தரின் அடுத்த படைப்புக்களிலும் குறிப்பாக "ரயில் பயணங்களில்" படத்தில் "அமைதிக்குப் பெயர் தான் சாந்தி" என்றும் "நெஞ்சில் ஒரு ராகம்" திரைப்படத்தில் "குருடான கவிஞனுக்கு ஊதாப்பூ என்ன ரோசாப்பூ என்ன" என்றும் டி.எம்.செளந்தரராஜனின் குரலை அடுத்த தலைமுறையும் ஆராதிக்கும் வண்ணம் செய்தார். இதில் முக்கியமாக டி.ராஜேந்தரின் கவியாழமும் சிறந்ததால் இன்னும் ரசிக நெஞ்சங்களில் இடம்பிடிக்க முக்கிய ஏதுவாக அமைந்திருந்தன.

உன்னை தினம் தேடும் தலைவன்

கவி பாடும் கலைஞன்

காவல் வரும்போது கையில்

விலங்கேது கால்கள் நடமாடட்டும்

லலலலலலலலாலா

எண்பதுகளிலே திரைப்படக்கல்லூரி வழியாக வந்து பிரமாண்டத்தைத் திரையில் புகுத்தும் பரம்பரையில் மூத்தவர் ஆபாவாணன் வருகையும் டி.எம்.செளந்தரராஜனை மீள நிறுவுவதற்கு உசாத்துணையாக அமைகின்றது.  மனோஜ் கியான் இசையில் "உழவன் மகன்" திரைப்படத்தில் "உன்னைத் தினம் தேடும் தலைவன்" என்று அன்றைய முன்னணி நாயகன் விஜய்காந்துக்கான குரலாகப் பயன்படுத்திக் கொண்டார். இதற்கெல்லாம் மணிமகுடமாக அமைந்தது மனோஜ் கியான் மீண்டும் இசையமைக்க ஆபாவாணன் உதவி இசையை வழங்கிய 1989 இல் வெளிவந்த "தாய் நாடு" திரைப்படம். இந்தப் படத்தின் ஐந்து பாடல்களிலும் டி.எம்.செளந்தரராஜனைப் பாடவைத்துக் கெளரவம் சேர்த்தார் ஆபாவாணன்.

“அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி

அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி

பொன்னான உலகு என்று பெயரும் இட்டால்

 இந்த பூமி சிரிக்கும் அந்த சாமி சிரிக்கும்

நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா

நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா”

குதிரை வலுவைப் பிறப்பிக்கின்ற அந்தக் குரலின் சக்தி ஒரு கட்டத்தில் அரசியல் மாற்றத்தின் திறவுகோலாகவும் பயன்படுகிறது.

“அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்”, "ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறதே" என்றும், "அச்சம் என்பது மடமையடா" என்றும் சில்லென்று காதை ஊடுருவுகிறது டி.எம்.எஸ் இன் கணீர்க்குரல், அந்தக் காலகட்டத்தில் இளைஞர்களின் எழுச்சிக் குரல் அது.

“சிந்து நதியின் மிசை நிலவினிலே

சேர நன்னாட்டிளம் பெண்களுடனே

சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து

தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம்”

என்று இன்னோர் புறம் கனிவான கவியாகவும் பாட முடிகிறதே?

“பன்னீர் மலர் சொரியும் மேகங்களே – எங்கள் 

பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களேன்”

கேட்கும் போது நின்ற இடத்தில் இருந்து மனமுருகிக் கைக்கூப்பி மெய்யார இறைஞ்சுதல் நிலைக்குப் போக முடிகின்றதென்றால் அந்தக் குரலை இயக்கும் சக்திக்குத் தான் என்ன பெயர்?

நான் நிரந்தரமானவன்

அழிவதில்லை

எந்த நிலையிலும் எனக்கு

மரணமில்லை

என்று கவியரசர் எழுதியதைப் பாடியளித்த செளந்தரராஜன் என்பதோர் திருகுரலுக்கும் கூட இது பொருந்திப் போகும்.

கானா பிரபா


Sunday, March 19, 2023

இசையமைப்பாளர் ஷியாம் ❤️🎸

"மழை தருமோ என் மேகம்
மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்"
https://www.youtube.com/watch?v=yCpdVX7mBOg

கேட்டதுமே "அடடா இளையராஜா என்னமா இசையமைத்திருக்கிறார்" என்று என் காது படச் சொன்னவர்கள் உண்டு. இன்னும் அப்படியே நம்புபவர்களும் உண்டு. ஆனால் அந்தப் பாடல் இடம்பெற்ற "மனிதரில் இத்தனை நிறங்களா" படத்தின் இசையமைப்பாளர் ஷியாம். இந்தப் பாடலில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களோடு பின்னணியில் ஒலிக்கும் பெண் குரல் எஸ்.பி.சைலஜாவுக்கு

இதே படத்தில் "பொன்னே பூமியடி"
https://www.youtube.com/watch?v=Ym9ma0KcVd8
அந்தக் காலத்து றேடியோ சிலோன் நினைவுகளைப் பலருக்குக் கிளப்பி விடும் அழகான பாட்டு. எஸ்.ஜானகியும் வாணி ஜெயராமும் பாடியிருப்பார்கள்.

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுடைய இசைப் பட்டறையில் விளங்கிய வாத்திய விற்பன்னர் சாமுவேல் ஜோசப் தான் இந்த ஷியாம்.

நாடக உலகில் இருந்து வந்தாலும் எண்பதுகளில் தன் படங்கள் ஒவ்வொன்றையும் சற்று மாறுதலான வடிவத்தில் கொடுத்துக் கவனிக்க வைத்தார் இயக்குநர் மெளலி.
"ஆனந்த தாகம் உன் கூந்தல் பூக்கள் சூடுமே" https://www.youtube.com/watch?v=ndKsYdKmqJ8

இந்தா இன்னொரு பாட்டு வானொலி நினைவுகளைக் கிளப்ப என்று வந்து சொல்லும் அந்தப் பாட்டு மெளலி இயக்கத்தில் ஷியாம் இசையில் தீபன் சக்ரவர்த்திக்குப் பேர் கொடுத்த முத்து, கூடப் பாடியவர் எஸ்.ஜானகி.
இதே படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம் பாடும் "இவள் தேவதை" https://www.youtube.com/watch?v=NYzqX49S0VQ
பாடலில் ஷியாமின் வயலின் முத்திரை இருக்கும்.
இந்தப் பாடல்கள் இடம் பிடித்த வா இந்தப் பக்கம் படமும் ரசிக்கும் வண்ணமிருக்கும்.

“நினைத்திருந்தது நடந்து விட்டது"
https://www.youtube.com/watch?v=g41IK_8oGJE
கெளசல்யாவோடு, எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றவை நேரில் படத்துக்காக இதே கூட்டணிக்காகக் கொடுத்ததும் எண்பதுகளின் பசுமை வண்ணங்கள்.

"காதல் கனவுகளே நீராடும் நினைவுகளே" (எஸ்.ஜானகி & எஸ்.பி.பாலசுப்ரமணியம்)
https://www.youtube.com/watch?v=Zt6u4K_0Gm4 என்ற அட்டகாஷ் பாட்டு இயக்குநர் மெளலியோடு இசையமைப்பாளர் ஷியாம் கூட்டமைத்துக் கொடுத்தது "நன்றி மீண்டும் வருக" படத்துக்காக.
இதே கூட்டணி ஒரு புல்லாங்குழல் அடுப்பூதுகிறது படத்திலும் இணைந்தனர்.

தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த இசையமைப்பாளர் ஷியாமை உச்சத்தில் வைத்துக் கொண்டாடியது என்னவோ மலையாளத் திரையுலகம் தான். குறிப்பாக எண்பதுகளில் உச்ச நாயகர்களது பல படங்களில் இவரின் இசை வண்ணம் தான்.
மோகன்லாலின் நாடோடிக் காத்து படம் தமிழில் பாண்டியராஜன் நடிக்க கதாநாயகன் என்றான போது மலையாளத்தில் ஷியாம் இசைத்த "வைசாக சந்தே"
https://www.youtube.com/watch?v=GJCj4lfraDc
பாடலின் மெட்டைப் பயன்படுத்தி "பூ பூத்தது யார் பார்த்தது" 

https://www.youtube.com/watch?v=411Jbwg-ia4 

என்று இசையமைப்பாளர் சந்திரபோஸ் கொடுத்தார்.

சாமுவேல் ஜோசப் என்ற இயற்பெயர் கொண்ட, தமிழகத்தின் இசை மேதை ஷியாமைத் தமிழகத்தவர்களை விட அதிகம் கொண்டாடியது மலையாள தேசத்தவர்கள் தான்.
தட்சணாமூர்த்தி சுவாமிகளைத் தொடர்ந்து இன்றும் கேரளத்தவர்கள் போற்றிக் கொண்டாடும் இசை ஆளுமை இவர். நாடோடிக் காத்து, நியூ டெல்லி, ஒரு சிபிஐ டைரிக் குறிப்பு உள்ளிட்ட அதிரி புதிரி மசாலா வெற்றிச் சித்திரங்கள் ஒரு பக்கம், பிரதாப் போத்தனின் புகழ் பூத்த “டெய்சி" போன்ற காதல் மற்றும் அழுத்தமான கதைகள் போன்ற இரு பரிமாணங்களிலும் அங்கு கோலோச்சியவர் ஷியாம்.

இசையமைப்பாளர் ஷியாம் மலையாளத் திரையுலகில் கொடுத்த பங்களிப்பைப் பற்றி எழுதவே பல பக்கங்கள் தேவை.

தமிழ்த் திரையிசையின் மூத்த கிட்டார் இசை விற்பன்னர் பிலிப்ஸ் அவர்களோடு கூட்டாக “கருந்தேள் கண்ணாயிரம்" படத்திற்கு இசையமைத்த ஷியாமும் இருவருமாக மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வியின் பாசறை வாத்திய விற்பன்னர்கள்.
கருந்தேள் கண்ணாயிரம் படத்தில் சதன், மனோரமாவுடன் எஸ்பிபி பாடிய “பூந்தமல்லியிலே ஒரு பொண்ணு பின்னால" https://www.youtube.com/watch?v=mLy1pU16Ehc
பாடலை மறக்க முடியுமா என்ன?

அதே படத்தில் இன்னொரு பொக்கிஷம் “நேற்று வரை விண்ணில் இருந்தாளோ” https://youtu.be/xYz7x6BVyfA


“கலீர் கலீர்"
https://www.youtube.com/watch?v=rFWBggvEg4I

என்று தேவதை படத்துக்காக ஷியாமின் இசையில் எஸ்.ஜானகி பாடியதும் கூட இலங்கை வானொலியின் பொற்கால நினைவுகளைத் தட்டியெழுப்பும். கானா பிரபா

அப்படியே
“குப்பத்துப் பொண்ணு தொட்டுப்புட்டா”
https://www.youtube.com/watch?v=SS0AluO7hyY
என்று அதே ஜானகி, ஷியாம் இசையில் பாடிய குப்பத்துப் பொண்ணு பாடலைக் கேட்டால் ஜென்ம சாபல்யம் உங்களுக்கு.

“வானம் பன்னீரைத் தூவும்
காலம் கார்காலமே”

https://www.youtube.com/watch?v=kU-iWGPXuUY

“கள் வடியும் பூக்கள்" படத்துக்காக ஷியாம் கொடுத்ததை எல்லாம் எண்பதுகளின் திரையிசை ரசிகர்கள் மறக்காமல் தம் மனதில் பதியம் போட்டு வைத்திருக்கிறார்கள்.

புரட்சிக் கலைஞர் விஜயகாந்தின் அழுத்தமான கதையம்சம் கொண்ட சந்தோஷக் கனவுகள் படத்தில்
“முத்து முத்துப் புன்னகையோ” https://www.youtube.com/watch?v=VMEL94BUCPg
வாணி ஜெயராமுடன்,
“மேகங்களே”
https://www.youtube.com/watch?v=YqZVtK7c_OA
சுசீலாவுடன் என்று எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் பாடிய அதிமதுரப் பாடல்கள் உண்டு கேட்டுப் பாருங்கள். இவையெல்லாம் ஷியாமின் வற்றாத இசை வெள்ளத்தின் ஊற்றுகள்.

இயக்குநர் ஆர்.சி.சக்தியின் அறிமுகப்படம், கமல்ஹாசனின் இணைக் கதைப் பங்களிப்பில் வெளியான "உணர்ச்சிகள்" படத்திலும் ஷியாமின் அற்புதமான " நெஞ்சத்தில் போராடும் எண்ணங்கள்" https://www.youtube.com/watch?v=-0zktlUIduM இசையமைப்பாளர் பேர் சொல்லும்.   தமிழில் ஏராளமான சிறு முதலீட்டுப் படங்களுக்கு ஷியாம் இசையமைத்தாலும் அவற்றில் வந்தவை, வராதவை என்று ஏராளம் உண்டு.

“பூவே வா வா”
https://www.youtube.com/watch?v=uVw0onqtBoE
பாடல் எல்லாம் “அந்தி மயக்கம்” என்ற வந்த சுவடே தெரியாதவைக்குக் கொடுத்தவை.
ஷியாம் அற்புதமான மனிதர் என்று அவரை வைத்துத் தொடந்து தமிழில் படங்களைத் தயாரித்த ஜெயதேவி குறிப்பிட்டிருக்கிறார் சமீப பேட்டியில். கானா பிரபா
ஜெயதேவியின் பிரமாண்டச் சித்திரம் விலங்கு படம் ஈறாக ஷியாம் தன் இசைச் சிறப்பைக் காட்டினார்.
“சொல்லத்தான் நினைத்தேன்'
https://www.youtube.com/watch?v=oxWHS_U_h_I
என்று எஸ்பிபியைப் பாட வைத்தவர் அதே மெட்டில்
“உன்னைத்தான் நினைத்தேன்"
https://www.youtube.com/watch?v=u9AiLyfaEhs
என்று ஜேசுதாஸைப் பாட வைத்திருப்பார்.
அதே படத்தில் தானே குழுவினரோடு பாடியுமிருக்கிறார் ஷியாம்
“இது எங்கள் ராஜாங்கம்"
https://www.youtube.com/watch?v=jSUacgpJqZg

என்று.


ஷியாமின் இன்னொரு இசைச் சித்திரம் பஞ்ச கல்யாணி படத்தின் அனைத்துப் பாடல்களையும் கேட்க
https://www.youtube.com/watch?v=s1wrwQTBEh0

மெல்லிசை மன்னர் குறித்து ஷியாமின் பகிர்வுகள்
https://www.youtube.com/watch?v=_EQC_DaGSTA

https://www.youtube.com/watch?v=gmu5foAyASc

எஸ்பிபி குறித்து ஷியாமின் கருத்துரை
https://www.youtube.com/watch?v=8NwZySKe0MU

மலையாள தேசத்தில் ஷியாமின் இன்னிசை வார்ப்புகள்

https://www.youtube.com/watch?v=a51KtDe32mQ

https://www.youtube.com/watch?v=BGUwY9sDGVA

இன்று 86 வது பிறந்த நாள் காணும் இசை மேதை ஷியாம் Samuel Joseph அவர்களைப் பல்லாண்டு காலம் இசை போல் வாழ வாழ்த்துவோம்.

கானா பிரபா
19.03.2023


Wednesday, March 15, 2023

தன் தம்பி நாயகனாகிய படத்தில் பாடிய லதா ரஜினிகாந்த் 🎸



“பிரபோ! சிவபெருமான் ரவுண்ட்ஸ் வந்து கொண்டிருக்கிறார்"

“இவருக்கு வேறு வேலையே கிடையாதா இப்படி நேரம் கெட்ட நேரத்தில் வந்து ட்ரபுள்ஸ் கொடுக்கிறாரே”

இப்படியெல்லாம் எமலோகத்தில் இங்கிலீஷ் பேசி நடித்தால் எப்படி இருக்கும் 🙂

அந்தக் காலத்தில் வீடியோ காசெட் ஐ வாடகைக்கு வாங்கிப் பார்த்த காலத்தில் “காதுல பூ” என்றொரு படம் வந்திருக்கிறது என்பது மட்டும் தெரியும். ஆனால் யார் நடித்தது என்று “அடி முடி" தெரியாமல் எடுத்துப் பார்த்தோம். வழக்கமாக ஒரு நாள் வாடகைக்குக் கிடைக்கும் அந்தப் படம் நண்பர் வீட்டில் ஒரு வாரம் ஓடியது. உற்றார், உறவினர், நண்பர்கள் ஏதோ விசேஷ வீட்டுக்குப் போவது போல அந்த வாடகை வீடியோப் படத்தைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்து விட்டுப் போனார்கள்.

“காதுல பூ” என்றால் இன்று ஆயிரம் மேடைகள் கண்ட Sve Shekher Venkataraman எஸ்.வி.சேகரின் மேடை நாடகம் தான் ஞாபகத்துக்கு வரும். ஆனால் அந்தக் கதை படமாகவும் அதே பெயரில் வந்தது.

நடிகரும், கதை வசனகர்த்தாவுமான G.K அவர்கள் இயக்கிய அந்தப் படத்தின் நாயகனாக ராகவேந்தர் (இப்போது ரவி ராகவேந்திரா) நடித்தார். வேடிக்கை என்னவென்றால் இந்தப் படத்திலும் அறிமுகம் ராகவேந்தர் என்று எழுத்தோட்டத்தில் இருக்கும். இதற்கு முன் தோன்றிய உருவங்கள் மாறலாம் படத்திலும் அறிமுகம் ராகவேந்தர் என்று போடப்பட்டிருக்கும். உருவங்கள் மாறலாம் “வானில் வாழும் தேவதை” https://www.youtube.com/watch?v=51vrIDMEZeA பாடலை வைத்து முன்பே ஒரு புராணம் எழுதியதால் இத்தோடு நிறுத்.

இந்த ராகவேந்தர் தான் இல்லையில்லை அனுருத்தின் அப்பா தான் ராகவேந்தர் என்பது 2கே கிட்ஸுக்கு ஒரு தகவல்.

காதுல பூ படத்துக்கு இசை வழங்கியவர் கங்கை அமரன். அந்தப் படத்தில் ராகவேந்தரின் சகோதரி லதா ரஜினிகாந்த் இரண்டு பாடல்களைப் பாடியிருக்கிறார்.

ஒன்று, 

இன்றும் சிங்கப்பூர் வானொலி மறக்காமல் நினைவில் வைத்திருக்கும் ஜெயச்சந்திரனோடு லதா ரஜினிகாந்த் பாடிய 

“பூவே புதுபூபாளம் தினம் நீ பாடு”

https://www.youtube.com/watch?v=-as5mph_lOA

கவிஞர் வாலி எழுதிய அற்புதமான பாடலிது.

இன்னொன்று 

லதா ரஜினிகாந்த் & எஸ்.பி.சைலஜா இணைந்து பாடிய

“கண்ணா உனக்கு காதல் எதுக்கு”

https://www.youtube.com/watch?v=ZXYvFbN2U-Y

ஆகிய பாடல்கள். இந்தப் பாடல்கள் பற்றிய விபரங்கள் கடல்லயே (விக்கிப்பீடியா & கூகுள்) இல்லையாம். அதுதான் இந்தப் பதிவுக்காகப் பாடல்களைத் தனித்தனியாகத் தரவேற்றியுள்ளேன்.

“கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே” 

https://www.youtube.com/watch?v=GB1fMHeW-O0

லதா ரஜினிகாந்துக்கு ஆகச் சிறந்த அடையாளமாக அமைந்த அன்புள்ள ரஜினிகாந்த் (1984) படப் பாடல் மட்டும் தான் அவர் பாடிய பாடல் என்று இன்றும் பரவலாக நம்பும் அளவுக்கு இந்தப் பாடல் அவருக்குக் கச்சிதமான தேர்வாக அமைந்து விட்டது.

வாலியார் வரிகளில் லதா பாடிய இன்னொரு பாடலிது.

ஆனால் இதற்கு மூன்று வருடங்கள் முன்னே போனால்

லாலல்ல லாலா

லாலல்ல லாலா

நேற்று இந்த நேரம்

ஆற்றங்கரை ஓரம் 

உன்னைத் தொட்டு 

என்னைத் தொட்டு 

தென்றல் செய்த கோலங்கள்

https://www.youtube.com/watch?v=NxiRziNrtU8

என்று முற்றிலும் மாறுபட்டதொரு மேற்கத்தேயப் படையலைக் கொடுத்திருப்பார் இசைஞானி இளையராஜா. இரண்டு தளங்களிலும் லதாவின் குரல் பளிச்சென்றிருக்கும்.

கண்ணதாசன் வரிகளிலும் லதா ரஜினிகாந்த் பாடிய பெருமையையும் சம்பாதித்துக் கொடுத்தது அந்தப் பாட்டு.

கண்ணதாசன், வாலி என்று பாட்டெடுத்துப் பாடிய லதா ரஜினிகாந்த், முன்னர் குறிப்பிட்ட “காதுல பூ” படப்பாடலான “கண்ணா உனக்கு பாடலை கங்கை அமரன் இசையில் புலவர் புலமைப்பித்தன் எழுதியது போல, 

இசைஞானி இளையராஜா இசையில் புலமைப்பித்தன் அவர்களின் வரிகளில் ஒரு குயில் பாட்டு எழுந்தது.

அதுதான்

குக்கூ கூ கூ 

கூவும் குயிலக்கா

https://www.youtube.com/watch?v=PShrhpFggpo

என்று வள்ளியில் பாடிய போது, அதே படத்தில் இன்னொரு பாடலான “டிங்கு டாக்குரப்பப்போ”

https://www.youtube.com/watch?v=e2y34I2SVa8

பாடலை மனோ குழுவினரோடு பாடினார் லதா ரஜினிகாந்த். பாடல் வரிகள் கவிஞர் வாலி.

Rajini'25 Millenium Celebration என்றொரு நிகழ்வை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கலையுலகத்தில் 25 ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதத்தில் நிகழ்த்திய போது “மாயாஜாலம்” என்ற இசைத் தொகுப்பை வெளியிட்டார் லதா ரஜினிகாந்த்.

அந்தப் பாட்டுத் தொகுப்பில் இடம்பெற்ற 

“தித்திமி தா

https://www.youtube.com/watch?v=HEEe_cPkG4Q

ஏக பிரபலம். கானா பிரபா

அக்னி சாட்சி படத்தில் கணவன், மனைவியாகத் தோன்றுவார்கள் திரு & திருமதி ரஜினிகாந்த் ( 6 வது நிமிடத்தில் இருந்து)

https://www.youtube.com/watch?v=14f34EKiDKs

இப்படியாகப் பாடகியாக 40 ஆண்டுகளைக் கடந்து அவ்வப்போது பாடி வருகின்ற லதா ரஜினிகாந்த், முன்னர் தன் கணவர் கதை எழுதிய “வள்ளி”க்குப் பாடியது போலவே தன் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய “கோச்சடையான்” படத்துக்கும் வைரமுத்து வரிகளில், இசைப்புயல் ரஹ்மான் இசையில் பாடிய வகையில் ஒரு நிறைவான பாடலைப் பாடியளித்தார்.

காதல் கணவா

உந்தன் கரம் விட மாட்டேன்

சத்தியம் சத்தியம்

இது சத்தியமே

தாய் வழி வந்த

எங்கள் தர்மத்தின் மேலே

சத்தியம் சத்தியம்

இது சத்தியமே

ஒரு குழந்தை போலே

ஒரு வைரம் போலே

தூய்மையான என் சத்தியம்

புனிதமானது

வாழை மரம் போல

என்னை வாரி வழங்குவேன்

ஏழை கண்ட புதையல் போல

ரகசியம் காப்பேன்

https://www.youtube.com/watch?v=jlp0a4FiOnE

கானா பிரபா

15.03.2023


Tuesday, March 14, 2023

“உன்னைத்தானே தஞ்சமென்று" பாடகி மஞ்சுளா தமிழில் இத்தனை பாடல்கள் பாடியிருக்கிறாரா?



என்னடா Youtube காரர்கள் போலத் தலைப்பு வைத்திருக்கிறீர்கள் என்று கேட்காதீர்கள். விஜய் டிவி நீயா நானாவின் அரிய பாடகர்கள் கலந்துரையாடலை அடியொற்றி இன்னும் சில பல பதிவுகள் வர இருக்கின்றன 🙂

கன்னடத் திரையுலகில் எண்பதுகளில் தொடங்கிக் கோலோச்சிய பின்னணிப் பாடகி மஞ்சுளா குருராஜ் எடுத்த எடுப்பிலேயே கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்து வந்து தான் பாடிய நான்காவது பாடலாக “நல்லவனுக்கு நல்லவன்" படத்தில் சேர்த்துக் கொண்ட “உன்னைத்தானே தஞ்சமென்று நம்பி வந்தேன் நானே”

பாடல் அமைந்து கொண்டது. கானா பிரபா

அதென்னது நல்லவனுக்கு நல்லவன் படத்தில் “சேர்த்துக் கொண்ட” என்று ஒரு பொடி வைக்கிறீர்களே என்று கேட்டால் அதற்கும் விளக்கம் தரப்படும். ஏனெனில் இந்த ஜேசுதாஸ் & மஞ்சுளா குருராஜ் பாடிய ஜோடிப்பாடல் “நல்லவனுக்கு நல்லவன்" படத்துக்காகப் பதிவு செய்த பாடலே அல்ல.

தர்மாத்முடு" என்னும் தெலுங்குத் திரைப்படத்தை ஏவிஎம் நிறுவனம் தமிழில் மீண்டும் எடுக்கலாம் என்று தீர்மானித்தபோது அது தமிழுக்குச் சரிப்படாது என்று தான் முதலில் பலர் அபிப்பிராயப்பட்டார்கள்.  பின்னர் கதையில் சின்னச் சின்ன மாற்றங்கள் செய்து ரஜினிகாந்த்தை வைத்தே நாயகனாக்கி இப்படத்தை எடுத்தார்கள்.

"உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே" 

https://www.youtube.com/watch?v=-jqkWhRk-NI

என்ற பாடலினை இயக்குநர்வி.சி.குகநாதன் தன் படமொன்றுக்கு வைரமுத்து பாடலை எழுத இளையராஜா இசையில் உருவாக்கியிருந்தார். ஆனால் அந்தக் குறித்த படத்தில் பயன்படுத்த முடியவில்லை. ஜேசுதாசின் பாடல்களை விரும்பி ரசிக்கும் ஏ.வி.எம்.சரவணன் இப்பாடலைப் பயன்படுத்தும் நோ அப்ஜெக்க்ஷன் ரிப்போர்ட்டை வி.சி.குகநாதனிடம் இருந்து பெற்றுப் பயன்படுத்தினார். கூடவே இப்பாடலின் மெட்டை வைத்தே இன்னொரு சிறு சோகப் பாடலும் அமைக்கப்பட்டது. கானா பிரபா

நடிகர் ரஜினிகாந்தை வைத்து இதுவரை எடுத்த படங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்த படம் இது என்று மேலே சொன்ன செய்திகளோடு தனது "ஏ.வி.எம் 60 - சினிமா" என்ற தனது நூலில் குறிப்பிட்டிருக்கின்றார் தயாரிப்பாளர் சரவணன்.


“உன்னைத்தானே தஞ்சமென்று நம்பி வந்தேன்” பாடலை 150 வாத்தியக் கலைஞர்கள், பென்னம்பெரிய பியானோவோடு ஒரு நேரடி ஒலிப்பதிவாகப் பதிவு செய்தார்கள் என்று ஒரு பேட்டியில் மஞ்சுளா குருராஜ் குறிப்பிட்டிருக்கிறார்.

அதுசரி இவரைத் தமிழில் பாட அழைத்து வந்தது யார் தெரியுமா?

இளையராஜாவின் குரு, கன்னடத்தில் கோலோச்சிய ஜி.கே வெங்கடேஷ் அவர்கள் தான். அவரே இளையராஜாவிடம் மஞ்சுளாவை அறிமுகப்படுத்திப் பாட வைத்தாராம்.

இந்தப் பாடலைக் கேட்கும் போது ஒரு வித்தியாசத்தை நீங்கள் அவதானிக்கலாம். என்னதான் ஜோடிப் பாடலாக இருந்தாலும், ஆரம்பத்தில் பெண் குரலும், அதனைத் தொடர்ந்து ஆண் குரலுமாக அமைந்திருக்கும். பாடலின் இறுதி வரை இருவரும் மாறி மாறிப் பாடுவது போல இருக்காது.  தமிழ் மொழிப் பரிச்சயம் இல்லாத பாடகியைத் தனியாகச் சுதந்திரமாகப் பாட வைக்கும் உத்தியை அப்போது ராஜா கையாண்டிருக்கலாம் என்று எண்ணுவதுண்டு.

எண்பதுகளின் கல்யாண வீடியோக்களில் தாலி கட்டும் நிகழ்வின் அந்தத்தில் வீடியோக்காரர் “உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன்” பாடலைப் பொருத்தியிருப்பதை உங்களின் குடும்ப கல்யாண நிகழ்வுகளில் கண்டிருப்பீர்கள்.

கல்யாணத்தோடு சம்பந்தப்பட்டுத் தான் அடுத்த பாட்டு :-)

மஞ்சுளா குருராஜ் தமிழில் பாடிய இன்னொரு பாட்டு, இளையராஜா இசையில் “கல்யாணக் கச்சேரி” படத்தில் இடம்பெற்ற 

“காதல்கிளி கதை பேசுது”

https://www.youtube.com/watch?v=aL3ETlOYQXc

பாடலை மலேசியா வாசுதேவனுடன் பாடியிருந்தார். மிக அற்புதமான பாடலிது. ஆனால் மணிவண்ணன் இயக்கிய இந்தப் படமும் சரி பாடலும் சரி பிரபலமாகாமல் போய் விட்டது.


மலேசியா வாசுதேவனோடு இன்னொரு பாட்டு ஆனால் அதுவொரு கூட்டணிப் பாடலாக சுரேந்தர்,எஸ்.பி.சைலஜா ஆகியோரோடு மஞ்சுளா இணைந்து பாடிய பாடல் “தென்றலே தென்றலே” https://www.youtube.com/watch?v=zUUz2ZNPzHc பாடல் இளமை படத்துக்காக கங்கை அமரனின் இசையில் அமைந்தது.

மேற் சொன்ன மூன்று பாடல்களையும் எழுதியது வைரமுத்து என்பது குறிப்பிடத்தக்கது.கானா பிரபா

பாடகி மஞ்சுளாவை கல்யாணத்தோடு சம்பந்தப்படுத்தி இன்னொரு படம் சொல்லவா? 

அதுதான் “கெட்டி மேளம்”. நடிகர் விசு இயக்கி, அவருக்காக இளையராஜா இசையமைத்த ஒரே படமிது. அதுவும் படத்தின் தயாரிப்பாளரிடம், “இளையராஜா இருக்கும் பிசியான நேரத்தில் பாடல்களை வாங்குவது கஷ்டம் என்னுடைய வழக்கமான செட்டையே வைத்து விடுவோம் என்று விசு சொன்னாராம். ஆனால் தர்மயுத்தம் போன்ற படங்களைத் தயாரித்தவராயிற்றே “சாருசித்ரா” சீனிவாசன், அவரோ விடாப்பிடியாக இளையராஜாவையே ஒப்பந்தம் 

செய்தார். விசு போன்ற இயக்குநர்களுக்கும் இளையராஜாவுக்கும் அப்படி என்ன ராசியோ கார்த்திக் நடித்தும் படம் வந்த சுவடே தெரியவில்லை. வழக்கமான குடும்பக்கதை விசு இல்லை என்பதும் ஒரு காரணம்.

“கெட்டி மேளம்” படத்துக்காக மஞ்சுளா மீண்டும் மலேசியா வாசுதேவனோடு இணைந்தார். அப்படியாக வந்த பாடல் “தொட்டுக்கோ பட்டுக்கோ” https://www.youtube.com/watch?v=qNgwNvVC5x8

மலேசியா வாசுதேவனுடன் அப்படி என்ன ராசியோ இளையராஜா, கங்கை அமரனைத் தொடர்ந்து சங்கர் – கணேஷ் இரட்டையர்கள் இசையிலும் “ராசா ஏ உன்னைத்தான்” என்ற பாடலை மஞ்சுளா பாடியிருக்கிறார் மாருதி படத்துக்காக. இராம நாராயணன் பிற்காலத்தில் சாமிப்படங்களை எடுப்பதற்கு முன்னோடியாக அமைந்த அவரின் படங்களில் இதுவுமொன்று. கானா பிரபா



மஞ்சுளா பாடியதாகக் “கணக்கு வைத்த” பின்னாளையப் பாடல்களில் “பக் பக் பக் ஏ மாடப்புறா” (பார்த்திபன் கனவு) கூடச் சேர்த்தி. 

கன்னடத்தில் கோலோச்சிய இவர் அங்கே புகழ்பெற்ற தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரான துவாரகீஷ் ( ரஜினியின் நான் அடிமை இல்லை இயக்கியவர்) கன்னடத்தில் எடுத்த “ஆபிரிக்காவில் ஷீலா” படத்தின் தமிழ் மீள் வடிவத்திலும் (கிழக்கு ஆபிரிக்காவில் ஷீலா) பாட வந்தார். மூலப் படத்தில் மூன்று பாடல்களைப் பாடியவருக்குத் தமிழ் ஒரு பாடல் கொடுத்துச் சிறப்பித்தது. 

அந்தப் பாடல் தான் “பூவும் இருக்கு காயும் இருக்கு”

https://www.youtube.com/watch?v=w1zi_YP0nSY

என்னடா ஹிந்திப்பாடல் போல இருக்கா? இல்லையா பின்னே? இந்தப் படத்தின் இசையமைப்பாளர் ஹிந்தியில் கோலோச்சிய பப்பி லஹரி ஆச்சே.


உயிர்

பூவெடுத்து ஒரு மாலை

இட்டேன் விழி நீர் தெளித்து

ஒரு கோலம் இட்டேன்

உன்னைத்தானே

தஞ்சம் என்று நம்பி

வந்தேன் நானே 

கானா பிரபா

14.03.2023



புகைப்படங்கள் நன்றி : பாடகி மஞ்சுளா குருராஜ் ஃபேஸ்புக் தளம்

Friday, March 3, 2023

ஜெயச்சந்திரன் 79 ❤️ மனதோடு இசை பாடி

 


தமிழ் மொழியை நேசிக்கின்ற மலையாள தேசத்துப் பாடகர், ஜெயசந்திரன், தமிழ் சினிமாவின் தனி அத்தியாயம். இசைஞானி இளையராஜா காலத்து ஜெயச்சந்திரன் அளவுக்கு அல்லது அதற்கும் மேலாக மற்றைய இசையமைப்பாளர்கள் அவருக்குக் கொடுத்த சாகித்தியங்களை உச்சி மேந்து கெளரவிப்பது தகும். அப்படியாகப்ப்பட்டவை ஒரு சிலவற்றோடு ஒரு கூட்டு.

தென்றலது உன்னிடத்தில் சொல்லி வைத்த
சேதி என்னவோ.....❤️

மெல்லிசை மன்னரின் எண்பதுகளும் இன்னும் அதிகமாகக் கொண்டாடப்பட வேண்டியவை. அதுவும் அந்த ஆர்மோனியக்காரின் காதல் கதைக்குப் பொருத்தமான பண் அமைத்துப் பாடல்களில் கூட அந்த நிறத்தைக் கலவையாக்கிக் கொடுத்த அழகுணர்ச்சியைச் சிலாகித்துக் கொண்டே அந்த ஏழு நாட்கள் பாடல்களைக் கேட்க வேண்டும்.

பாலக்காட்டு மாதவன் என்ற பாக்யராஜ் மெட்டமைக்கும் தோற்றப்பாட்டிலேயே மெல்லிசை மன்னரை ஞாபகப்படுத்துவார்.
“கவிதை அரங்கேறும் நேரம் மலர்க்கணைகள் பரிமாறும் தேகம்” பாடலிலும் சரி,
“தென்றலது உன்னிடத்தில் சொல்லி வைத்த சேதி என்னவோ” பாடலும் கூட ஆரம்பத்தில் கொடுக்கும் ஸ்வர ஆலாபனையில் அந்த இசையமைப்பாளனின் காதல் ஒட்டியிருக்கும்.
“ஸ்வர ராக” பாடலில் மலையாளமும், தமிழும் காதல் கொள்ளும் பாட்டு,இதுவும் தென்றலது பாடலும் கண்ணதாசன் கை வண்ணம். அது போல் குருவிக்கரம்பை சண்முகம் “கவிதை அரங்கேறும் நேரம் பாடலை எழுதியிருக்கிறார்.
“எண்ணி இருந்தது ஈடேற” பாடல் வைரமுத்துவை வைத்துப் படத்தின் வணிக சமரங்களுக்காகக் கொடுத்த குத்து வகையறாவோ என்று எண்ணிக் கொண்டே ரசித்தாலும் அதிலும் தன் முத்திரையைக் காட்டியிருப்பார் எம்.எஸ்.வி.
எண்பதுகளில் சங்கீதத் திலகம் கே.வி.மகாதேவனைக் கொண்டாட ஒரு சங்கராபரணத்தையும், இசைஞானி இளையராஜாவுக்கு சிந்து பைரவியுமாக அமைய,
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு அந்த 7 நாட்கள் ஐ எழுதி வைக்கலாம் போல. அதுவும் ஜெயச்சந்திரனுக்கு வைதேகி காத்திருந்தாளுக்கு முன் வந்த ஒரு பொக்கிஷம் இது.
பின் வரும் வரிகளில் தபேலாவை வழித்து தாள லயம் கொண்டும் மெல்லிசை மன்னரின் முத்திரை இசை.

உள்ளம் எங்கும் பொங்கும் ஆசை
இன்று தங்கரதம் ஏறியது
உன்னைப் பார்த்து சொல்லும் வார்த்தை
இன்று கங்கையென மாறியது

https://www.youtube.com/watch?v=Yq5gHvy4aqU

ஒரு காதல் சாம்ராஜ்யம் கண்ணில் வரைந்தாள்
கனவென்னும் முடி சூடி கன்னம் சிவந்தாள் 💕

இப்போதெல்லாம் சூப்பர் சிங்கர் மேடைக்கென்றே எழுதி வைத்த பாடல்கள் என்ற பட்டியலில் தவிர்க்க முடியாதது “நந்தா என் நிலா நிலா நிலா” என்ற பாடல். அதுவும் எஸ்.பி.பிக்கு முன்னால் பாட வேண்டிய சூழல் வரும் போது போட்டியாளர் தன்னிடமிருந்து அத்தனை திறமைகளையும் கொட்டித் தீர்க்க முற்படுவார். ஆனால் இந்தப் பாடல் இடம் பெற்ற “நந்தா என் நிலா” திரைப்படத்தில் இன்னொரு அரிய முத்து “ஒரு காதல் சாம்ராஜ்ஜியம் கண்ணில் வரைந்தாள்” பாடல் இருப்பதை ஏனோ இசை மேடைகள் மறந்து விட்டன.
“நந்தா என் நிலா” படத்தின் மூலக்கதை புஷ்பா தங்கதுரை, தினமணி கதிரில் தொடராக வெளிவந்து பின் ஏ.ஜெகன்னாதன் இயக்கத்தின் படமான போதும் புஷ்பா தங்கதுரையே கதை, வசனத்தைக் கையாண்டிருக்கிறார். விஜயகுமார், படாபட் ஜெயலட்சுமி, சுமித்ரா நடித்தது.
தொண்ணூறுகளின் இறுதியில் பிரபலமாக இருந்த சன் டிவி "சப்தஸ்வரங்கள்" பாடற் போட்டி நிகழ்ச்சியின் வழியாகத் தான் V.தட்சணாமூர்த்தி என்ற இசையமைப்பாளரை அறிந்து கொண்டேன். அதற்கு முன்னர் அவரின் இசையில் வெளிவந்த ஓரிரு தமிழ்ப்படங்களில் குறிப்பாக "நந்தா என் நிலா" என்ற பாடலை இலங்கை வானொலி மூச்சு விடாமல் முன்னூறு தடவைக்கு மேல் அலுக்க அலுக்கப் போட்ட போதெல்லாம் கூட இந்த இசையமைப்பாளர் குறித்த தேடல் இருந்திருக்கவில்லை. எழுபதுகளின் இறுதியிலே வி.குமார், விஜயபாஸ்கர், ஷியாம் போன்ற இசையமைப்பாளர்களின் இசையில் வந்த பல நல்ல பாடல்களை சங்கர் கணேஷ், எம்.எஸ்.விஸ்வநாதன் கொடுத்தவையாக இருக்கும் என்று அதிகம் மெனக்கடவில்லை. அந்த வகையில் வி.தட்சணாமூர்த்தி அவர்களை சுவாமிகள் என்று விளித்து அவரின் பெருமைகளை சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ரமணன் சிலாகித்தபோதுதான் அவர் மேல் வெளிச்சம் பட்டது எனக்கு. தமிழ்த்திரையுலகில் இரண்டு தட்சணாமூர்த்திகள் இருந்திருக்கிறார்கள், ஒருவர் எஸ்.தட்சணாமூர்த்தி இவர் அலிபாபாவும் 40 திருடர்களும்" போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்தவர், பின்னவர் தான் வி.தட்சணாமூர்த்தி சுவாமிகள். கொஞ்சக்காலம் எல்லாவற்றையும் உதறவிட்டு காசிக்குப் போய் சாமியாராக இருந்ததாக செய்திகளின் வாயிலாக அறிந்தேன்.
"நந்தா என் நிலா" படத்தில் வந்த பாடலான எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் பாடிய "நந்தா என் நிலா பாடலை விடவும் என்னை அதிகம் கவர்ந்ததென்னவோ ஜெயச்சந்திரன், டி.கே. கலா பாடியிருந்த "ஒரு காதல் சாம்ராஜ்யம் கண்ணில் வரைந்தேன்" என்ற பாடல் தான். அன்றைய சனிக்கிழமை இரவுப்பொழுதில் அதிகாலை ஒரு மணியைத் தொடும் போது வானொலி நிகழ்ச்சி செய்து கொண்டிருக்கும் என் தனிமையை விரட்டிப் பல தடவை சொந்தம் கொண்டாடிய பாடல் அது.

இசையமைப்பாளர் V.தட்சணாமூர்த்தி இசையில் நந்தா என் நிலா திரைப்படம் உருவான போது “ஒரு காதல் சாம்ராஜ்ஜியம் கண்ணில் வரைந்தாள்” என்ற ஜோடிப் பாடலை ஜெயச்சந்திரனும், T.K.கலாவும் பாடியிருக்கிறார்கள்.

“போய் வா நதியலையே”, “தாயிற் சிறந்த கோயிலுமில்லை” ஆகிய புகழ் பூத்த பாடல்களோடு “குளிச்சா குத்தாலம்”, “செங்காத்தே” ஆகியவற்றை ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடியவர் T.K.கலா.

ஜெயச்சந்திரனைப் பொறுத்தவரை அவரின் ஆரம்ப காலத்தில் அரவணைத்து வளர்த்த மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் போன்றே அப்போது மலையாளத்தின் உச்ச இசையமைப்பாளராக விளங்கிய V.தட்சணாமூர்த்தி அவர்களின் பார்வை பட்டு மலையாளத்தில் மட்டுமன்றித் தமிழிலும் “நந்தா என் நிலா” வழியாகப் பாடும் பேறு கிட்டியிருக்கிறது.

“ஒரு காதல் சாம்ராஜ்ஜியம் கண்ணில் வரைந்தாள்” பாடலின் வரிகளை விடுத்து அந்தப் பாடல் கொண்டிருக்கும் சந்தத்தை மட்டும் ஒரு முறை மனதில் மீட்டில் பாருங்கள். ஒரு வீச்சுக்குள் (range) நின்று மேலும் கீழுமாக ஜாலம் புரியும் அற்புதமான சாகித்தியம் அது. ஆண், பெண் பாடகருக்கான சங்கதியும் ஒரே மாதிரி இருக்கும். அது போலவே தேர்ந்தெடுத்த இந்தப் பாடகர்களும் கொஞ்சமும் தடம் மாறாமல் அதே போலக் கொடுத்திருப்பார்கள். ஆனால் T.K.கலா தன் முத்திரை உச்ச ஸ்தாயி வரை போய் வர, ஜெயச்சந்திரனோ அதிக கஷ்டப்படாமல் தன் எல்லையில் நின்று அடித்து ஆடுவார்.

பகலான இரவோடு
அழகான மலரோடு
மனதோடு இசை பாடி
விதியோடு ஆடு......
ஒரு காதல் சாம்ராஜ்யம்
கண்ணில் வரைந்தாள்

https://www.youtube.com/watch?v=LDC8eQyP_wU

சங்கீதமே என் தெய்வீகமே
நான் தேடும் என் காதல்
ராஜாங்கமே என் ராஜாங்கமே
வானோரும் காணாத பேரின்பமே .. பேரின்பமே ❤️
ஜெயச்சந்திரனும் சரி சுசீலாவும் சரி அதிக நெகிழ்வுத் தன்மையோடு சாஸ்திரிய சங்கீதம் இல்லாது ஒரு இறுகிய குரலோடு பாடலைக் கையாண்டிருப்பார்கள். உதாரணத்துக்கு பாடலின் ஆரம்ப வரிகளான “சங்கீதமே என் தெய்வீகமே” ஐ ஒருமுறை இரை மீட்டிப் பாருங்கள். இதை இன்னும் நெகிழ்வுத் தன்மையோடும் பாடிக் காட்ட முடியும். ஆனால் முழுப் பாடலிலும் இசை ஆவர்த்தனங்களின் கோட்பாட்டோடு பயணிக்கும் பாங்கில் இந்தக் குரல்களும் இருக்கும். பாடலில் கோவையாக்கிய இசையில் நவ நாகரிகம் நேர்த்தியோடு மிளிரும். இந்தப் பாடலையெல்லாம் இசை மேடைகளில் பாடினால் எவ்வளவு அற்புதமாக இருக்கும்?
“காஷ்மீர் காதலி” பாடல்கள் ஜி.கே.வெங்கடேஷ் அவர்கள் தமிழி மீண்டும் விஸ்வரூபம் எடுத்துக் காட்டியது. அதில் இந்த “சங்கீதமே என் தெய்வீகமே” பாடல் ஜெயச்சந்திரனின் இசை வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு மைல்கல்.

சங்கீதமே....என் தெய்வீகமே
நான் தேடும் என் காதல் ராஜாங்கமே
என் ராஜாங்கமே.....
வானோரும் காணாத பேரின்பமே....
பேரின்பமே.....

https://youtu.be/iyln-hCzD2Y

முத்து ரதமோ முல்லைச் சாரமோ
மூன்று கனியோ பிள்ளைத் தமிழோ
கண்ணே நீ விளையாடு
கனிந்த மனதில் எழுந்த நினைவில்
காதல் உறவாடு.....❤💚

இந்த அழகான பாடலோடு இன்றைய மாலையில் மூழ்கியிருக்கிறேன். ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம் பாட்டு ஜோடிக்கான இன்னொரு பொக்கிஷப் பாட்டு இது.
சங்கர் - கணேஷ் இரட்டையர்கள் இசையில் "பொன்னகரம்" படத்தில் கவிஞர் சுல்த்தான் என்பவரின் வரிகளில் வந்த இந்தப் பாடலின் இசை இனிமை, வரிகளின் இனிமை இரண்டையும் சிலாகித்துக் கொண்டே இந்தப் பாட்டு ஜோடி பாடுவதில் கிறங்கி விடலாம்.
அந்தக் கிராமத்தில் ஒருகாலத்தில் அட்டூழியம் செய்த பண்ணையாரின் பிள்ளைகள் சரத்பாபு மற்றும் அவரது தங்கையும் வருகிறார்கள். ஆனால் அந்தப் பண்ணையாரின் பேரில் கடும் வெறுப்பில் இருக்கும் மக்களின் அபிமானத்தை அவர்கள் வென்றார்களா என்பதே இந்தப் படத்தின் கதை. இயக்குநர் மாதங்கன் இயக்கிய “பொன்னகரம்” படத்தில் இன்னொரு புகழ் பூத்த பாடலான “வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாரமடி” பாடலை கடந்த வாரம் பாடலாசிரியர் காமகோடியன் மறைந்த போது கொடுத்திருந்தேன்.
“முள்ளும் மலரும்” புகழ் சரத்பாபு & ஷோபா காதல் ஜோடிக்குத் தான் இந்த “முத்து ரதமோ” பாடல்.

பாடலைக் கேட்கும் போது அந்தக் கால இலங்கை வானொலி நினைவுகள் தட்டியெழுப்பும்.

“உனது பார்வை எனது பாடல்
தினமும் நான் பாட
நினைவில் கனவில் சுகமோ
உலக நிலையை மறந்து கொஞ்சம்
விண்ணில் நான் ஆட
அமுதக் கனிகள் தருமோ”

சரணத்தில் என்னவொரு அற்புதமான ஆவர்த்தனம் ஆகா

https://www.youtube.com/watch?v=rYxyKoVM5h0

தென்றல் ஒரு தாளம் சொன்னது
சிந்தும் சங்கீதம் வந்தது ❤💚

ஒரு நல்ல பாடலாசிரியர் மட்டுமல்ல, சந்தம் தரும் இன்னிசை பிறப்பிக்கும் நல்லதொரு இசையமைப்பாளர் என்றும் நிரூபித்த கங்கை அமரன் அவர்களின் இசை வண்ணத்தில் பிறந்த இப்பாடல் “கனவுகள் கற்பனைகள்” படத்துக்காக உருவானது. பாடலின் ஆரம்ப அடிகளைப் படித்தவுடனேயே இலங்கை வானொலிக்காலத்துக்கு அழைத்துப் போய் விடுமே.
தானே ஒரு நல்ல பாடலாசிரியராக இருந்தும், இங்கே துள்ளிக் குதிக்கும் வரிகளை வாங்கியிருக்கிறார் பாவண்ணனிடமிருந்து கங்கை அமரன்.

“கலை அன்னம் பல வண்ணம் கொண்டது
மண்ணும் புது பொன்னில் நின்றது
இன்னும் எனை பின்னிக் கொண்டது
கன்னி பெண்ணே..
இரு கண்ணில் ஒரு மின்னல் வந்தது
சின்ன பெண்ணே”

சாதாரணமாகப் படித்தாலேயே லகர, ழகரக் குழப்பம் எழும் வரிகளை அனாயாசமாகக் கையாண்டு ஒரு விருந்து படைத்திருப்பார் ஜெயச்சந்திரன். தன் தாய்மொழியை மட்டுமல்ல தான் வரித்த கலைமொழியிலும் மொழிச்சுத்தம் பேணும் நற்பண்பாளர் இவர்.

எண்ணங்களே தேன் அள்ளுங்களேன்
பொன் வண்டாகி நாதம்
கொஞ்சம் சொல்லுங்களேன்

https://www.youtube.com/watch?v=OxfIx-zkfFk

“ஊரெங்கும் உன்னைத் தேடுதோ
மேகங்கள் அந்த வானிலே
மழை நாளிலே குடையானவள்
நனைகின்றதே கண்களே... ❤💚”

ஜெயசந்திரன் & வாணி ஜெயராம் ஜோடி என்பது ஒவ்வொரு இசையமைப்பாளர் இசையிலும் மிளிர்ந்த சோடை போகாத அற்புதக் கூட்டணி. இசைஞானி இளையராஜா அவர்களின் இசையில் ஜெயச்சந்திரன் தனி அத்தியாயம் என்றால், ஜெயேட்டன் & வாணிம்மா கூட்டணியின் “இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே” முத்தாய்ப்பாக வந்து நிற்கும்.
இந்தப் பதிவையும் அப்படியே கொடுக்கவிருந்தேன்.

ஆனாலும் பல்வேறு இசையமைப்பாளர்களின் பாடல்களில் ஜெயச்சந்திரன் என்று மாற்றிக் கொண்டாலும் இங்கேயும் வந்து சேர்ந்து கொண்டார்கள். சந்திரபோஸ் இசையில், மு.மேத்தா வரிகளில் “கை நாட்டு” படத்தில் இடம்பிடித்த இந்தப் பாடலை ஜெயச்சந்திரனுக்கான நினைவுபடுத்திய போது கேட்கவும் நெகிழ்வாக இருந்தது.

https://www.youtube.com/watch?v=q49uORh5fzE

“சின்ன பூவே மெல்லப் பேசு
உந்தன் காதல் சொல்லிப் பாடு
வண்ணப் பூ விழி பார்த்ததும்
பூவினம் நாணுது ❤💚”

இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமாரின் இன்னிசைத் திறவுகோலாய் அமைந்த படத்தின் முகப்பு வரிகளோடமைந்த பாடலில் இணைந்த ஜெயச்சந்திரன் அவர்கள், பாடல் ஒலிப்பதிவில் தாமதம் எழுந்த போது கொஞ்சம் சங்கோஜப்பட்டாராம், ஆனால் அந்த ஒலிப்பதிவுக் கூடத்தில் திரட்டியிருந்த வாத்தியக் கூட்டணியைப் பார்த்து மிரண்டு விட்டாராம், ஒரு புத்தம் புது இசையமைப்பாளரின் முதல் படத்துக்கு ராஜ பேரிகையாக அமைந்த இசை வெள்ளத்தில் மிதந்து பாடிய ஜெயச்சந்திரனின் பாராட்டும் கூடவே கிடைத்ததாம்.

இந்தப் பாடலை இப்போது கேட்டால் அந்த ஒலிப்பதிவுக் கூடத்தில் கூடவே இருக்கும் பிரமிப்பு எழும். ஜெயச்சந்திரன் அவர்களுக்குக் கிடைத்த எண்பதுகளின் பொக்கிஷங்களில் இதுவுமொன்று.

“வாலிபச் சோலையின் வாசமே
எந்தன் வாசலில் ஆடிடும் நேசமே
ஆனந்த சங்கம சந்தமே”

https://www.youtube.com/watch?v=lHec6KZVs4E

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஜெயேட்டன்

கானா பிரபா
02.03.2023