Pages

Saturday, February 27, 2010

விண்ணைத் தாண்டி வருவாயா....ஜெஸ்ஸி


நன்றி: என் பழைய டயறியின் முதல் காதல் பக்கங்களைப் பிரித்துப் படிக்க உதவிய கெளதம் வாசுதேவ் மேனனுக்கு



Thursday, February 18, 2010

"கரகாட்டக்காரன்" இசைத் தொகுப்பு

எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் இணைந்த கங்கை அமரன் - இளையராஜா - ராமராஜன் என்ற வெற்றிக் கூட்டணி இணைந்து மாபெரும் வெற்றிப்படமாக கரகாட்டக்காரனை அளித்திருந்தார்கள். ஒருவருஷம் ஓடிச் சாதனை படைத்த இந்தப் படத்தின் வெற்றிக்கு
இசைஞானி இளையராஜாவின் இசையா?
கங்கை அமரனின் எளிமையான திரைக்கதை இயக்கமா?
கவுண்டமணி - செந்தில் கூட்டணியின் கலக்கல் நகைச்சுவை இசையா என்று பட்டிமன்றமே வைக்கலாம். இருந்தாலும் இசைஞானி இளையராஜாவின் இசையே இந்தப் படத்தின் வெற்றிக்கு முதற்காரணம் என்று சொல்லி வைக்கலாம்.

21 வருஷங்கள் கழித்து இந்தப் படத்தைப் பார்த்தாலும் அதே புதுப்பொலிவுடன் ரசிக்க வைக்கின்றது. அமெரிக்காவில் இருக்கும் Elite Vision என்ற நிறுவனம் இப்படத்தினை கலக்கலான டிவிடியாக அதி உச்ச தரத்துடன் அளித்திருந்தது. அதை வாங்கி அடிக்கடி போட்டுப் பார்த்துக் கரகாட்டக்காரனை ரசித்து வருகிறேன். இன்னும் அலுக்கவில்லை.

1989 ஆம் ஆண்டில் வெளிவந்த இப்படத்தில், அந்தக் காலகட்டத்தில் நம்ம ஊரு நல்ல ஊரு திரைப்படத்தின் நாயகனாக அறிமுகமாகி (அதற்கு முன்னர் இயக்குனராக இருந்தவர்) எங்க ஊரு பாட்டுக்காரன், எங்க ஊரு காவல்காரன் போன்ற பெரு வெற்றிப்படங்களின் மூலம் முன்னணி நாயகனாக விளங்கிய ராமராஜன் நாயகனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக முன்னாள் நடிகை தேவிகாவின் மகள் கனகா அறிமுகமாகியிருந்தார். கவுண்டமணி, செந்தில், ஜீனியர் பாலையா, சண்முக சுந்தரம், சந்திரசேகர், காந்திமதி, கோவை சரளா போன்றோருடன் வில்லனாக நடித்தவர் இயக்குனர் சந்தானபாரதி. கிராமியத்தோற்றத்துக்கு எடுப்பாகப் பொருந்தும் ராமராஜனும், அறிமுகம் என்றே சொல்லமுடியாத அளவான, அழகான நடிப்பை வழங்கிய கனகாவுடன் ஏனைய கலைஞர்களின் பாத்திரத் தேர்வு எல்லாமே குறை சொல்லமுடியாத அளவுக்கு அமைந்த கிராமியப் பொங்கல் இது.

முத்தையன், காமாட்சி என்று நாயகன், நாயகிக்கான பெயர்த்தெரிவில் இருந்து காட்சி அமைப்புக்கள் எல்லாமே கிராமத்தின் அக்மார்க் எளிமை படம் முழுக்க இருக்கின்றது.

ஏறக்குறைய தில்லானா மோகனாம்பாள் படத்தின் மீள் வடிவமாக இந்தப் படத்தின் திரைக்கதையைக் கணிக்கலாம். ஆனால் கரகாட்டம் என்னும் பழம்பெரும் நாட்டுப்புறக்கலையை எளிமையான கதையினூடே காதல், கிராமிய மணம் கலந்த இசை, மூலக்கதையோடு இழையோடும் நகைச்சுவை என்று கலந்து எல்லாவிதமான ரசிகர்களையும் திருப்திப்படுத்திய விதத்தில் இப்படத்தின் எல்லாவிதமான தொழில்நுட்ப சமாசாரங்களையும் ஒருங்கிணைத்து இயக்கிய கங்கை அமரனைப் பாராட்டத்தான் வேண்டும்.

படத்தில் வந்த பிரபலமான நகைச்சுவைகள்

டேய் நாதஸ்! இந்தா ஒர்ரூபா ரெண்டு பழம் வாங்கிட்டு வா



"என்ன கேட்டானா? காரை நமம வச்சிருக்கிறோம் இந்தக் காரை வச்சிருந்த சொப்பனசுந்தரியை இப்ப யாரு வச்சிருக்கிறாங்கன்னு கேட்கிறான், ஒரு வித்துவானைப் பார்த்துக் கேட்கிற கேள்வியாய்யா இது?"



பழைய இரும்புச்சாமான், பித்தளைக்கு பேரீச்சம்பழம்



என்னதான் மற்றவர்களின் திரைப்படங்களுக்குக் கலக்கலான இசையை வழங்கி வந்தாலும், தன் தம்பி கங்கை அமரனோடு கூட்டுச்சேரும் படங்களுக்கு இன்னும் ஒரு படி மேல் கவனமெடுத்து ராஜாங்கம் நடத்துவார் என்பதை ராஜாவே மறுத்தாலும் அதுதான் உண்மை. அதற்கு ராஜா - கங்கை அமரன் இணைந்த பெரும்பாலான படங்களே எடுத்துக்காட்டு. அதுவும் சுத்தமான கிராமியக் கதைகளம் என்றால் கேட்கவேண்டுமா, ராஜா அதகளம் பண்ணிவிட்டார். ஐம்பதாவது றேடியோஸ்புதிராக அமைத்து, தொடர்ந்து கரகாட்டக்காரன் பின்னணி இசையை வழங்க வேண்டும் என்ற என் கனவை இப்பதிவு மூலம் நிறைவேற்றியிருக்கிறேன். தொடர்ந்து இசைஞானியின் ராஜபாட்டை முழங்க வரும் கிராமிய இசையனுபவத்தை அள்ளிப்பருகுங்கள். இந்தப் பதிவுக்கான மொத்த உழைப்பு 2 நாள் இரவுப் பொழுதுகள் ;)

பின்னணி இசையில் என்னைக் கவர்ந்தது இந்த இசைத்துண்டம்

முத்தையன் , காமாட்சியை சந்திக்கும் காட்சி (மாங்குயிலே பூங்குயிலே இசைக்கலவையில்)





ராஜா முதல் பாட்டு பாடினால் படம் ஹிட்டாமே
"பாட்டாலே பக்தி சொன்னார் பாட்டாலே புத்தி சொன்னார்"



உறுமி மேளம், நாதஸ்வரம் முழங்க கரகம் ஆடியவாறே காமாட்சி அறிமுகமாகும் காட்சி




முத்தையன் கரகக்குழு (ராமராஜன்) குழு திருவிழாவுக்கு கரகம் ஆட கிராமத்துக்கு வருதல்




திருவிழாவில் கரகமாடும் முத்தையன் கோஷ்டி



"நந்தவனத்தில் வந்த ராஜகுமாரி" கங்கை அமரன் பாடும் இப்பாடல் படத்தின் இசைத்தட்டுக்களில் இடம்பெறாதது




நள்ளிரவில் முத்தையன், காமாட்சியை சந்திக்க வரும் காட்சி



முத்தையன் குழு கரகமாடிப் பாடும் "மாங்குயிலே பூங்குயிலே"



காமாட்சி போட்டிக்காகக் கரகப்பயிற்சி எடுத்தல்



வழியனுப்ப ஓடிவரும் காமாட்சி, பின்னணியில் மாங்குயிலே பூங்குயிலே பாடல் இசை புல்லாங்குழலில் ஒலிக்க



முத்தையன் சால்வை காற்றைக் கிழித்துக் காமாட்சியின் முகத்தை வருடி அணைக்க வருகிறது "இந்த மான் உந்தன் சொந்த மான்"



காமாட்சியின் ஊருக்குத் திருட்டுத்தனமாக முத்தையன் அவளைப் பார்க்கவரும் காட்சியின் பின்னணி இசை


முத்தையனின் கோஷ்டி அவரைக் கிண்டல் பண்ணிப் பாடும் "ஊரு விட்டு ஊரு வந்து காதல் கீதல் பண்ணாதீங்கோ"




உறுமி மேளம், நாதஸ்வரம் கலக்க கரகம் ஆடியவாறே முத்தையன் நடத்தும் சண்டை



காமாட்சி வீட்டில் முத்தையன் அவமானப்பட்டு நிற்றல், பின்னணியில் வயலின் ஆர்ப்பரிப்பில் மாங்குயிலே பூங்குயிலே" இசை



தன்னைக் காண வந்த முத்தையனைத் தேடிக் காமாட்சி ஓடும் காட்சி, மாங்குயிலே பாடலின் சந்தோஷ இசை மெல்ல சோக இசையாக மாறும்




காமாட்சியைத் தேடிக்காண முத்தையன் பாடும் "குடகு மலைக்காட்டில் வரும் பாட்டுக் கேட்குதா என்பைங்கிளி"



காமாட்சியைத் துரத்தும் வில்லன் கோஷ்டி



முத்தையன், காமாட்சி காதலுக்கு வீட்டில் பச்சைக்கொடி காட்ட, "மாங்குயிலையும் பூங்குயிலையும் சேதி சொல்ல அழைக்கிறார்கள்



பஞ்சாயத்தில் காமாட்சி, முத்தையன் குற்றவாளிகளாக




முத்தையன், காமாட்சி தீக்குழித்துத் தம்மைப் புனிதராக்கும் காட்சி, "மாரியம்மா மாரியம்மா பாடல்" பின்னணியில்




வில்லன் பழிவாங்கத் தருணம் பார்க்கும் காட்சியில் அகோர இசை




இயக்குனர் கங்கை அமரன் வந்து ஜோடியை வாழ்த்தும் காட்சியோடு மாங்குயிலே பூங்குயிலே புல்லாங்குழலிசை பரப்பி நிறைவாக்குகின்றது.



Tuesday, February 16, 2010

உங்கள் ஆதரவுடன் 50 வது றேடியோஸ்புதிர் ;)

நேற்று ஆரம்பித்த ஓட்டம் போல இருக்கிறது, மடமடவென்று 50 ஆவது புதிரை எட்டிப் பிடித்து விட்டது றேடியோஸ்புதிர் தொடர்.

பொதுவாகவே இந்தப் புதிரில் வரும் கேள்விகள் சுலபமாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டு இருந்தாலும், கடந்த 49 புதிர்களைப் பார்த்தீர்களாயின், ஒருவருக்குச் சுலபமாக இருக்கும் பதில் இன்னொருவருக்கு கடும் கஷ்டமானதாக அமைந்து விடும். இருந்தாலும் இந்தப் புதிரில் சுவாரஸ்யமாகக் கலந்து கொள்ளவேண்டும் என்ற நோக்கோடு வருகை தரும் உங்களுக்கு மீண்டும் இனிய நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டு இந்த 50 வது புதிரில் ஒரு கலக்கலான திரைப்படத்தின் பின்னணி இசையோடு சந்திக்கிறேன். வழக்கம் போல் புதிர் முடிவில் அந்தப் படத்தின் முழுமையான பின்னணி இசையும் வரும்.

ஒரு காலகட்டத்தில் முன்னணி நட்சத்திரமாக விளங்கிய நடிகையின் மகள் நடித்த முதல் படம் இது, கூட நடித்த நாயகருக்கு அன்று தொட்டதெல்லாம் வசூல்படங்களாக அமைந்து விட்டது. எல்லாம் ராஜ யோகம். அண்ணன் மெட்டுக் கட்ட, தம்பி கட் சொன்ன படங்கள் பெரும்பாலும் ஹிட்டு தானே ;)

"என்ன கேட்டானா? காரை நமம வச்சிருக்கிறோம் இந்தக் காரை வச்சிருந்த சொப்பனசுந்தரியை இப்ப யாரு வச்சிருக்கிறாங்கன்னு கேட்கிறான், ஒரு வித்துவானைப் பார்த்துக் கேட்கிற கேள்வியாய்யா இது?"



போட்டியில் பங்கு கொண்ட அனைத்து நெஞ்சங்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டு
பதிலைப் பார்ப்போம்.

படம்: கரகாட்டக்காரன்
நடிகர்கள்: ராமராஜன், கனகா (நடிகை தேவிகா மகள்)
இசை: இசைஞானி இளையராஜா
இயக்கம்: கங்கை அமரன்

Saturday, February 13, 2010

காதலர் தினம் 2010

காதலர் தினம் என்பது காதலித்துக் கொண்டிருப்பவர்களுக்கு மட்டுமல்ல ஒரு காலத்தில் காதல் பூ பூத்தவர்களுக்கும் ஸ்பெஷலான நாள். இந்தத் தினத்தைக் கேட்டாலேயே பதின்ம வயது நினைவுகள் அப்படியே மீண்டும் ஒரு சுற்று வரும். ஹலோ ஹலோ ஓடாதீங்க, இங்கே நான் ஒன்றும் மலரும் நினைவுகளைச் சுழற்றவில்லை ;)

வானொலியில் "காதலர் கீதங்கள்" என்ற நிகழ்ச்சியை 6 ஆண்டுகளுக்கு மேலாகச் செய்திருக்கின்றேன். குறிப்பாக மு.மேத்தா போன்றோரின் கவிதைகளை நறுக்கிச் சிலவரிகளை மட்டும் சொல்லி அதற்குப் பொருந்துமாற்போலப் பாடல்களைப் பகிர்வேன். ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒவ்வொரு தீம் வைத்துச் செய்திருப்பேன. எனவே காதலர் கீதங்களைப் பகிர்வது என்பது எனக்கு இன்னும் அலாதியான விருப்பு. அந்த வகையில் காதலர் தினம் 2010 சிறப்புப் படையலாக இங்கே வைரமுத்து எழுதிய காதல் கவிதைகளையும் எனக்குப் பிடித்த சில காதல் பாடல்களையும் பகிர்கின்றேன். காதலனாகவும் கவிஞனாகவும் இருந்ததால் வைரமுத்து அணு அணுவாகப் பிளந்து காதலைக் காதலித்து எழுதிய மணியான வரிகள் அவை.
















காதலித்துப் பார்!




உன்னைச் சுற்றி
ஒளிவட்டம் தோன்றும்...
உலகம் அர்த்தப்படும்...
ராத்திரியின் நீளம்
விளங்கும்....

உனக்கும்
கவிதை வரும்...
கையெழுத்து
அழகாகும்.....
தபால்காரன்
தெய்வமாவான்...

உன் பிம்பம் விழுந்தே
கண்ணாடி உடையும்...
கண்ணிரண்டும்
ஒளிகொள்ளும்...

காதலித்துப்பார் !

தலையணை நனைப்பாய்
மூன்று முறை
பல்துலக்குவாய்...

காத்திருந்தால்
நிமிஷங்கள் வருஷமென்பாய்...
வந்துவிட்டால்
வருஷங்கள் நிமிஷமென்பாய்...

காக்கைகூட உன்னை
கவனிக்காது
ஆனால்...

இந்த உலகமே
உன்னை கவனிப்பதாய்
உணர்வாய்...

வயிற்றுக்கும்
தொண்டைக்கமாய்
உருவமில்லா
உருண்டையொன்று
உருளக் காண்பாய்...

இந்த வானம்
இந்த அந்தி
இந்த பூமி
இந்த பூக்கள்
எல்லாம்

காதலை கவுரவிக்கும்
ஏற்பாடுகள்
என்பாய்

காதலித்துப் பார்!

இருதயம் அடிக்கடி
இடம் மாறித் துடிக்கும்...

நிசப்த அலைவரிசைகளில்
உனது குரல் மட்டும்
ஒலிபரப்பாகும்...

உன் நரம்பே நாணேற்றி
உனக்குள்ளே
அம்புவிடும்...

காதலின்
திரைச்சீலையைக்
காமம் கிழிக்கும்...

ஹார்மோன்கள்
நைல் நதியாய்ப்
பெருக்கெடுக்கும்
உதடுகள் மட்டும்
சகாராவாகும்...

தாகங்கள் சமுத்திரமாகும்...
பிறகு
கண்ணீர்த் துளிக்குள்
சமுத்திரம் அடங்கும்...

காதலித்துப் பார்!

சின்ன சின்ன பரிசுகளில்
சிலிர்க்க முடியுமே...

அதற்காகவேனும்
புலன்களை வருத்திப்
புதுப்பிக்க முடியுமே...

அதற்காகவேனும்...
ஆண் என்ற சொல்லுக்கும்
பெண் என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத
அர்த்தம் விளங்குமே..

அதற்காகவேனும்...
வாழ்ந்துகொண்டே
சாகவும் முடியுமே

செத்துக் கொண்டே
வாழவும் முடியுமே...
அதற்காக வேணும்...

காதலித்துப் பார்!

டூயட் திரைப்படத்தில் இருந்து "கவிதைக்குப் பொருள் தந்த கலைவாணி நீயா?"



கவிதைக்குப் பொருள் தந்த கலைவாணி நீயா?
என் கனவோடு கேட்கின்ற காற்சலங்கை நீயா?
பேச்சுக்கு உயிர் தந்த சத்தங்கள் நீயா?
என்னைப் பேசாமல் செய்கின்ற மௌனங்கள் நீயா?
சத்தங்கள் இல்லாத சங்கீதம் நீயா?
என்னைச் சாகாமல் செய்கின்ற சஞ்சீவி நீயா?
பருவத்தின் தோட்டத்தின் முதற் பூவும் நீயா?
என் பாலைவனம் காண்கின்ற முதல் மழையும் நீயா?

இரவோடு நான் காணுகின்ற ஒளிவட்டம் நீதான்!
என் இருகண்ணில் தெரிகின்ற ஒரு காட்சி நீதான்!
வார்த்தைக்குள் ஊடாடும் உள்ளர்த்தம் நீதான்!
என் வாத்தியத்தில் இசையாகும் உயிர் மூச்சு நீதான்!
தூரத்தில் மயிலிறகால் தொட்டவளும் நீதான்!
என் பக்கத்தில் அக்கினியாய் சுட்டவளும் நீதான்!
காதலுக்கு கண் திறந்து வைத்தவளும் நீதான்!
நான் காதலித்ததால் கண்மூடிக் கொண்டவளும் நீதான்




அடுத்து இருவர் படத்திற்காக வைரமுத்து குழைத்த காதல் வரிகள்



உன்னோடு நானிருந்த
ஒவ்வொரு மணித்துளியும்
மரணப்படுக்கையிலும்
மறக்காது கண்மணியே

தொன்னூறு நிமிடங்கள்
தொட்டணைத்த காலம் தான்
எண்ணூறு ஆண்டுகளாய்
இதயத்தில் கணக்குதடி

பார்வையிலே சில நிமிடம்
பயத்தோடு சில நிமிடம்
கட்டியணைத்தபடி கண்ணீரில் சில நிமிடம்
இலக்கணமே பாராமல்
எல்லாயிடங்களில் முத்தங்கள்
விதைத்த மோகத்தில் சில நிமிடம் (உன்னோடு)

எது ஞாயம் எது பாவம்
இருவருக்கும் தோன்றவில்லை
அது இரவா அது பகலா
அதை பற்றி அறியவில்லை

யார் தொடங்க யார் முடிக்க
ஒரு வழியும் தோன்றவில்லை
இருவருமே தொடங்கிவிட்டோம்
இதுவரைக்கும் கேள்வியில்லை

அச்சம் கலைந்தேன்
ஆசையினை நீ அணைத்தாய்
ஆடை கலைந்தேன்
வெட்கத்தை நீ அணைத்தாய்

கண்டதிரு கோலம்
கனவாக மறைந்தாலும்
கடைசியிலே அழுத கண்ணீர்
கையிலின்னும் ஒட்டுதடி

உன்னோடு நானிருந்த
ஒவ்வொரு மணித்துளியும்
மரணப்படுக்கையிலும்
மறக்காது கண்மணியே






















அடுத்து என்னை ஆட்கொண்ட சில காதல் பாடல்களைப் பகிர்கின்றேன்.


முதலில் வருவது "படித்தால் மட்டும் போதுமா" திரைப்படத்தில் இருந்து "பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை" (குரல்கள்: பி.பி சிறீனிவாஸ், டி.எம்.செளந்தரராஜன்)



அடுத்து வருவது "அலைகள் ஓய்வதில்லை" திரைப்படத்தில் இருந்து "காதல் ஓவியம் பாடும் காவியம்" (குரல்கள்: இளையராஜா, ஜென்சி)



"நலம் நலமறிய ஆவல்" ஒலிப்பது "காதல் கோட்டை" திரையில் இருந்து (குரல்கள்: கிருஷ்ணராஜ், அனுராதா சிறீராம்)



நிறைவாக "என்ன விலை அழகே" கேட்கும் "காதலர் தினம்" (குரல்: உன்னி மேனன்)


Wednesday, February 3, 2010

திரைக்கலைஞன் கொச்சின் V.M.C ஹனீபா நினைவாக

எண்பதுகளின் தமிழ் சினிமாவை அதிகம் நெருங்கி நேசித்தவர்கள் வி.எம்.சி.ஹனீபா என்ற இயக்குனரை சிலாகித்துப் பேச மறக்க மாட்டார்கள். இவ்வளவுக்கும் இவர் மலையாளத்தில் இருந்து பாசில் வித்தியாசமான கதையம்சங்களை அறிமுகப்படுத்தியது போல தன் படங்களைக் கொடுத்தவரல்ல ஆனா குடும்பச்சிக்கல்களைத் தன் பாணி பொழுதுபோக்கு அம்சங்களைக் கலந்து ராஜாவின் இசைக் கூட்டணி சேர ஜனரஞ்சக ரீதியில் வெற்றிப் படங்கள் சிலதைக் கொடுத்தவர் என்ற வகையில் மறக்கமுடியாது.

பாசிலைப் போல மலையாளத்தில் இருந்து வந்து வெற்றி பெற்றவர்களில் ஹனீபாவைத் தாராளமாகச் சேர்க்கலாம். கதையின் இடைவேளக்குப் பின்னான காட்சி ஒன்றி ஒரு திருப்பதைக் கொடுக்கும் காட்சியில் வில்லன் வேஷம் கட்டி அதுவரை கதைக்களன் நகர்த்திய மர்மமுடிச்சுக்களைப் பார்வையாளனுக்கு எடுத்துச் செல்லுவார். இவரும் தான் மலையாளத்தில் இயக்கிய ஜனரஞ்சக ரீதியில் கவனத்தை ஈர்த்த படங்களைத் தமிழுக்கு ஏற்ற நடிகர்களை வைத்து இயக்கினார். பாசப்பறவைகள், பாடாத தேனீக்கள் போன்ற படங்கள் கொடுத்த காலகட்டத்தில் இவரும், ரேவதியும் நடித்த ஏதோவொரு மலையாளப் படத்தினை மொழிமாற்றி வந்ததை உள்ளூர் வீடியோக் கடைப் போஸ்டரில் பார்த்த ஞாபகம்.


















இயக்குனர் மணிவண்ணனுக்கும் வி.எம்.சி.ஹனீபாவுக்கும் உள்ள ஒற்றுமைகள், இருவருமே இயக்குனராக இருந்து வில்லன் பாத்திரம், நகைசுவைப் பாத்திரம் என்று காலத்துக்கேற்ப தன்னை மாற்றியவர். அண்மைக்கால சினிமா ரசிகர்களுக்கு வி.எம்.சி.ஹனீபா என்ற இயக்குனரை விட கொச்சின் ஹனீபா என்ற இயல்பான நகைச்சுவை நடிகனைத் தான் தெரியும். அடிப்படையில் ஒரு இயக்குனராக இருந்ததாலோ என்னவோ அளவுக்கு மிஞ்சிய நடிப்பை இவரிடம் எதிர்பார்க்க முடியாது, அதுவே இவரின் பலமும் கூட. மலையாளிகளோடு தம் ஊர்ப்பெயரையும் ஒட்டி வைப்பது போல கொச்சின் ஹனீபாவைத் தான் கேரளம் விரும்பியது.

தமிழிலும் கேரளத்திலும் சமகாலத்தில் சினிமா ரசிகனின் பெரு விருப்புக்குரிய குணச்சித்திரமாகத் திகழ்ந்தவர் வி.எம்.சி.ஹனிபா. அவர் நேற்று தனது 58 வது வயதில் காலமானர் அவரது நினைவாக ஹனீபா இயக்கிய படங்களில் பாடல்களைத் தொகுப்பாகத் தருகின்றேன்.

கலைஞரின் வசனத்தில் அவரது பூம்புகார் புரொடக்ஷனில் வெளியான "பாசப்பறவைகள்" திரைப்படத்தில் இருந்து கே.ஜே.ஜேசுதாஸ், சித்ரா பாடும் "தென்பாண்டித் தமிழே என் சிங்காரக் குயிலே"



பாசப்பறவைகள் வெற்றியைத் தொடர்ந்து "பாடாத தேனீக்கள்" திரையில் இருந்து கே.ஜே.ஜேசுதாஸ் பாடும் "வண்ண நிலவே"



இளையராஜா, ஹனீபா கூட்டணியில் பெருமளவு ரசிக ஈர்ப்பைக் கொடுக்காத படங்களில் ஒன்று "பகலில் பெளர்ணமி" அந்தத் திரைப்படத்தில் இருந்து இளையராஜா அடியெடுத்துக் கொடுக்க, எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா பாடும் "கரையோரக் காற்று"



நிறைவாக நான் தரும் இந்தப் பாடலை நீண்ட நாட்களாகப் பொருத்தமான சூழல் வரும் வரை பதிவில் தரக் காத்திருந்தேன். காரணம் இந்தப் பாடல் என் விடலைப் பருவத்தில் பெரு விருப்புக்குரிய பாடலாக இருந்தது. ஆனால் இப்படியான பதிவு ஒன்றில் பகிர்வேன் என்று நினைத்தும் பார்க்கவில்லை. குறித்த இந்தப் பாடல் "வாசலில் ஒரு வெண்ணிலா படத்தில் இருந்து எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா கூட்டணியில் வரும் "மாலையிலே தெற்கு மூலையிலே மோகனம் பாடுது ஆண் குயில்". ஹனிபாவோடு இசையமைப்பாளர் தேவா கூட்டுச் சேர்ந்த ஒரே படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.