காதலர் தினம் என்பது காதலித்துக் கொண்டிருப்பவர்களுக்கு மட்டுமல்ல ஒரு காலத்தில் காதல் பூ பூத்தவர்களுக்கும் ஸ்பெஷலான நாள். இந்தத் தினத்தைக் கேட்டாலேயே பதின்ம வயது நினைவுகள் அப்படியே மீண்டும் ஒரு சுற்று வரும். ஹலோ ஹலோ ஓடாதீங்க, இங்கே நான் ஒன்றும் மலரும் நினைவுகளைச் சுழற்றவில்லை ;)
வானொலியில் "காதலர் கீதங்கள்" என்ற நிகழ்ச்சியை 6 ஆண்டுகளுக்கு மேலாகச் செய்திருக்கின்றேன். குறிப்பாக மு.மேத்தா போன்றோரின் கவிதைகளை நறுக்கிச் சிலவரிகளை மட்டும் சொல்லி அதற்குப் பொருந்துமாற்போலப் பாடல்களைப் பகிர்வேன். ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒவ்வொரு தீம் வைத்துச் செய்திருப்பேன. எனவே காதலர் கீதங்களைப் பகிர்வது என்பது எனக்கு இன்னும் அலாதியான விருப்பு. அந்த வகையில் காதலர் தினம் 2010 சிறப்புப் படையலாக இங்கே வைரமுத்து எழுதிய காதல் கவிதைகளையும் எனக்குப் பிடித்த சில காதல் பாடல்களையும் பகிர்கின்றேன். காதலனாகவும் கவிஞனாகவும் இருந்ததால் வைரமுத்து அணு அணுவாகப் பிளந்து காதலைக் காதலித்து எழுதிய மணியான வரிகள் அவை.
காதலித்துப் பார்!
உன்னைச் சுற்றி
ஒளிவட்டம் தோன்றும்...
உலகம் அர்த்தப்படும்...
ராத்திரியின் நீளம்
விளங்கும்....
உனக்கும்
கவிதை வரும்...
கையெழுத்து
அழகாகும்.....
தபால்காரன்
தெய்வமாவான்...
உன் பிம்பம் விழுந்தே
கண்ணாடி உடையும்...
கண்ணிரண்டும்
ஒளிகொள்ளும்...
காதலித்துப்பார் !
தலையணை நனைப்பாய்
மூன்று முறை
பல்துலக்குவாய்...
காத்திருந்தால்
நிமிஷங்கள் வருஷமென்பாய்...
வந்துவிட்டால்
வருஷங்கள் நிமிஷமென்பாய்...
காக்கைகூட உன்னை
கவனிக்காது
ஆனால்...
இந்த உலகமே
உன்னை கவனிப்பதாய்
உணர்வாய்...
வயிற்றுக்கும்
தொண்டைக்கமாய்
உருவமில்லா
உருண்டையொன்று
உருளக் காண்பாய்...
இந்த வானம்
இந்த அந்தி
இந்த பூமி
இந்த பூக்கள்
எல்லாம்
காதலை கவுரவிக்கும்
ஏற்பாடுகள்
என்பாய்
காதலித்துப் பார்!
இருதயம் அடிக்கடி
இடம் மாறித் துடிக்கும்...
நிசப்த அலைவரிசைகளில்
உனது குரல் மட்டும்
ஒலிபரப்பாகும்...
உன் நரம்பே நாணேற்றி
உனக்குள்ளே
அம்புவிடும்...
காதலின்
திரைச்சீலையைக்
காமம் கிழிக்கும்...
ஹார்மோன்கள்
நைல் நதியாய்ப்
பெருக்கெடுக்கும்
உதடுகள் மட்டும்
சகாராவாகும்...
தாகங்கள் சமுத்திரமாகும்...
பிறகு
கண்ணீர்த் துளிக்குள்
சமுத்திரம் அடங்கும்...
காதலித்துப் பார்!
சின்ன சின்ன பரிசுகளில்
சிலிர்க்க முடியுமே...
அதற்காகவேனும்
புலன்களை வருத்திப்
புதுப்பிக்க முடியுமே...
அதற்காகவேனும்...
ஆண் என்ற சொல்லுக்கும்
பெண் என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத
அர்த்தம் விளங்குமே..
அதற்காகவேனும்...
வாழ்ந்துகொண்டே
சாகவும் முடியுமே
செத்துக் கொண்டே
வாழவும் முடியுமே...
அதற்காக வேணும்...
காதலித்துப் பார்!
டூயட் திரைப்படத்தில் இருந்து "கவிதைக்குப் பொருள் தந்த கலைவாணி நீயா?"
கவிதைக்குப் பொருள் தந்த கலைவாணி நீயா?
என் கனவோடு கேட்கின்ற காற்சலங்கை நீயா?
பேச்சுக்கு உயிர் தந்த சத்தங்கள் நீயா?
என்னைப் பேசாமல் செய்கின்ற மௌனங்கள் நீயா?
சத்தங்கள் இல்லாத சங்கீதம் நீயா?
என்னைச் சாகாமல் செய்கின்ற சஞ்சீவி நீயா?
பருவத்தின் தோட்டத்தின் முதற் பூவும் நீயா?
என் பாலைவனம் காண்கின்ற முதல் மழையும் நீயா?
இரவோடு நான் காணுகின்ற ஒளிவட்டம் நீதான்!
என் இருகண்ணில் தெரிகின்ற ஒரு காட்சி நீதான்!
வார்த்தைக்குள் ஊடாடும் உள்ளர்த்தம் நீதான்!
என் வாத்தியத்தில் இசையாகும் உயிர் மூச்சு நீதான்!
தூரத்தில் மயிலிறகால் தொட்டவளும் நீதான்!
என் பக்கத்தில் அக்கினியாய் சுட்டவளும் நீதான்!
காதலுக்கு கண் திறந்து வைத்தவளும் நீதான்!
நான் காதலித்ததால் கண்மூடிக் கொண்டவளும் நீதான்
அடுத்து இருவர் படத்திற்காக வைரமுத்து குழைத்த காதல் வரிகள்
உன்னோடு நானிருந்த
ஒவ்வொரு மணித்துளியும்
மரணப்படுக்கையிலும்
மறக்காது கண்மணியே
தொன்னூறு நிமிடங்கள்
தொட்டணைத்த காலம் தான்
எண்ணூறு ஆண்டுகளாய்
இதயத்தில் கணக்குதடி
பார்வையிலே சில நிமிடம்
பயத்தோடு சில நிமிடம்
கட்டியணைத்தபடி கண்ணீரில் சில நிமிடம்
இலக்கணமே பாராமல்
எல்லாயிடங்களில் முத்தங்கள்
விதைத்த மோகத்தில் சில நிமிடம் (உன்னோடு)
எது ஞாயம் எது பாவம்
இருவருக்கும் தோன்றவில்லை
அது இரவா அது பகலா
அதை பற்றி அறியவில்லை
யார் தொடங்க யார் முடிக்க
ஒரு வழியும் தோன்றவில்லை
இருவருமே தொடங்கிவிட்டோம்
இதுவரைக்கும் கேள்வியில்லை
அச்சம் கலைந்தேன்
ஆசையினை நீ அணைத்தாய்
ஆடை கலைந்தேன்
வெட்கத்தை நீ அணைத்தாய்
கண்டதிரு கோலம்
கனவாக மறைந்தாலும்
கடைசியிலே அழுத கண்ணீர்
கையிலின்னும் ஒட்டுதடி
உன்னோடு நானிருந்த
ஒவ்வொரு மணித்துளியும்
மரணப்படுக்கையிலும்
மறக்காது கண்மணியே
அடுத்து என்னை ஆட்கொண்ட சில காதல் பாடல்களைப் பகிர்கின்றேன்.
முதலில் வருவது "படித்தால் மட்டும் போதுமா" திரைப்படத்தில் இருந்து "பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை" (குரல்கள்: பி.பி சிறீனிவாஸ், டி.எம்.செளந்தரராஜன்)
அடுத்து வருவது "அலைகள் ஓய்வதில்லை" திரைப்படத்தில் இருந்து "காதல் ஓவியம் பாடும் காவியம்" (குரல்கள்: இளையராஜா, ஜென்சி)
"நலம் நலமறிய ஆவல்" ஒலிப்பது "காதல் கோட்டை" திரையில் இருந்து (குரல்கள்: கிருஷ்ணராஜ், அனுராதா சிறீராம்)
நிறைவாக "என்ன விலை அழகே" கேட்கும் "காதலர் தினம்" (குரல்: உன்னி மேனன்)
Saturday, February 13, 2010
Subscribe to:
Post Comments (Atom)
18 comments:
//ஒரு காலத்தில் காதல் பூ பூத்தவர்களுக்கும் ஸ்பெஷலான நாள்.//
ஹம்ம்ம்ம்ம்
சரி வாழ்த்துக்கள் :)
// ஆயில்யன் said...
//ஒரு காலத்தில் காதல் பூ பூத்தவர்களுக்கும் ஸ்பெஷலான நாள்.//
ஹம்ம்ம்ம்ம் //
பாஸ்.. பலமான பெருமூச்சா இருக்கும் போல :)))
தொகுப்புக்கு நன்றி கானா.. முக்கியமா இருவர் பட ஆடியோவிற்கு :))) நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் உங்கள் புன்னியத்தில் கேட்கிறேன் :D
வருகைக்கு நன்றி ஆயில்ஸ்
வைரமுத்து கவிதைகள் சூப்பர் தல ;)
G8
இருவர் ஆடியோவில் வரும் அர்விந்த்சாமி குரல் கலக்கல் இல்லையா
கலக்கல அண்ணா
கலக்கல் பாட்டுக்கள் பாஸ்
தல கோபி, புதுகைத்தென்றல், யோகா
வருகைக்கு நன்றிகள்,
பகிர்விற்கு நன்றி .
அருமையான தொகுப்புங்க.
எம்மைப்போன்ற யூத்துகளின் வயிற்றெரிச்சலை கொடுக்கும் பதிவு இது. காதல் மன்னன் பிரபாவிற்க்கு இனிய காதலர் தின வாழ்த்துக்கள்.
நல்ல கலெக்ஷன்ஸ் பாஸ்.. மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் பாடல்கள்
//இங்கே நான் ஒன்றும் மலரும் நினைவுகளைச் சுழற்றவில்லை ;)
//
எப்படி பாஸ் சுத்தறது? அதெல்லாம் ஒரு பதிவுல முடியற விஷயமா? :-))
//இங்கே நான் ஒன்றும் மலரும் நினைவுகளைச் சுழற்றவில்லை//
தல
நீங்கள் சுழற்றவில்லை ஆனால் எங்களை சுழற்ற விட்டுவிட்டிர்கள்
கவிதை தொகுப்புக்கு நன்றி
நாடோடி இலக்கியன், யுத்து வந்தி, இயற்கை பாஸ், மகராஜன்
மிக்க நன்றி வருகைக்கு ;)
உள்ளத்தை கொள்ளை கொள்ளும் அற்புதமான கவிதைத்தொகுப்பும் பாடல் தொகுப்பும்...அருமை.....
அட இதெல்லாம் எப்ப நடந்தது நான் பார்க்கவில்லை யே இந்தப்பதிவை.
:)
நல்ல குரல் அமைந்திருந்த நடிகர்களில் அரவிந்த்சாமியும் ஒருவர் உயிரே படத்திலும் இவருடைய குரலிருக்கு.
வணக்கம்
இன்று தங்களின் வலைத்தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி.http://blogintamil.blogspot.com/2013/12/blog-post_25.html?showComment=1387932780339#c1639543455998475651
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
இன்று தங்களின் வலைத்தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி.http://blogintamil.blogspot.com/2013/12/blog-post_25.html?showComment=1387932780339#c1639543455998475651
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இன்றைய வலைச்சரத்தில் இந்த பாடல் தொகுப்பு இடம் பெற்று இருக்கிறது.
கோமதி அரசு
http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_25.html
Post a Comment