Pages

Monday, October 26, 2015

பாடகர் மனோ 50 வது பிறந்த நாள் - இளையராஜா இசையில் ஐம்பதுக்கு ஐம்பது


இன்று பாடகர் மனோவின் பிறந்த நாள் என்பதை ஒரு மணி நேரத்துக்கு முன்பே அறிந்து கொண்டேன். அவருக்கு இசைஞானி இளையராஜா இசை கொடுத்த பாடல்களோடு என் இளமைப் பருவமும் இசைந்ததால் இவரின் பாடல்களை வைத்தே பல்வேறு பதிவுகளைப் பகுதி பகுதியாகக் கொடுக்க இருந்தேன்.

இன்று பாடகர் மனோவின் 50 வது பிறந்த நாளில் திடீர் சமையலாக, இசைஞானி இளையராஜா இசையில் அவர் பெண் பாடகிகளோடு ஜோடி கட்டிப் பாடிய ஐம்பது தலை சிறந்த காதல் பாடல்களின் தொகுப்பைக் கொடுக்கிறேன்.
இதில் அவரின் தனிப்பாடல்களான "தேன்மொழி எந்தன் தேன்மொழி" (சொல்லத் துடிக்குது மனசு) "மலையாளக் கரையோரம்" (ராஜாதி ராஜா),"தூளியிலே ஆடவந்த" (சின்னத் தம்பி) போன்ற பாடல்களும், சோகப் பாடல் வரிசையில் "அடி கானக் கருங்குயிலே (பொன்மனச் செல்வன்), "குடகு மலைக் காட்டில் வரும்" (கரகாட்டக்காரன்) , வெண்ணிலவு (சின்ன மாப்ளே), "வா வா மஞ்சள் மலரே" (ராஜாதி ராஜா) போன்றவற்றோடு இன்னும் ஏராளம் பாடல்களைப் பதிவின் போக்கினை மாற்ற முடியாததால் சேர்க்க முடியவில்லை.
தொடர்ந்து இதோ ஐம்பது வயசுக்கு ஐம்பது பாட்டு :-)

1. மீனம்மா மீனம்மா - ராஜாதி ராஜா
2. வா வா வா கண்ணா வா - வேலைக்காரன்
3. பாராமல் பார்த்த நெஞ்சம் - பூந்தோட்டக் காவல்காரன்
4. மதுரை மரிக்கொழுந்து வாசம் - எங்க ஊரு பாட்டுக்காரன்
5. வானத்துல வெள்ளி ரதம் - எங்க ஊரு மாப்பிள்ளை
6. மல்லியே சின்ன முல்லையே - பாண்டித்துரை
7. ஒரு போக்கிரி ராத்திரி பார்க்கிற பார்வை தான் - இது நம்ம பூமி
8. அருகமணி கருகமணி - மாப்பிள்ளை வந்தாச்சு
9. காதோரம் லோலாக்கு - சின்ன மாப்ளே
10. நிலாக்காயும் நேரம் சரணம் - செம்பருத்தி
11. ஆடிப்பட்டம் தேடிச் செந்நெல் வெத போட்டு - தென்மதுரை வைகை நதி (மைக்கேல் மதன காமராஜன் ரெக்கார்ட்டில் வந்தது)
12. அடிச்சேன் காதல் பரிசு - பொன்மனச் செல்வன்
13. வானில் விடிவெள்ளி - ஹானஸ்ட் ராஜ்
14. மாலை நிலவே - பொண்ணுக்கேத்த புருஷன்
15. ஓ ப்ரியா ப்ரியா - இதயத்தைத் திருடாதே
16. ஆத்தாடி ஏதோ ஆசைகள் - அன்புச் சின்னம்
17. நினைத்தது யாரோ - பாட்டுக்கு ஒரு தலைவன்
18. சித்திரை மாதத்து நிலவு வருது - பாடு நிலாவே
19. ஒரு நாள் நினைவிது - திருப்புமுனை
20. அன்பே நீ என்ன - பாண்டியன்
21.சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு - பாண்டி நாட்டுத்தங்கம்
22. அழகான மஞ்சப்புறா - எல்லாமே என் ராசாதான்
23. ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு - குரு சிஷ்யன்
24.நிக்கட்டுமா போகட்டுமா - பெரிய வீட்டுப் பண்ணக்காரன்
25. அடி பூங்குயிலே பூங்குயிலே - அரண்மனை கிளி
26. சித்திரத்துத் தேரே வா - நாடோடிப் பாட்டுக்காரன்
27. மலைக்கோவில் வாசலில் - வீரா
28. ஒரு மந்தாரப்பூ - சின்ன ஜமீன்
29. ஒரு மைனா மைனாக்குருவி - உழைப்பாளி
30. சின்ன ராசாவே - வால்டர் வெற்றிவேல்
31. சோலை இளங்குயில் - காவலுக்குக் கெட்டிக்காரன்
32. நிலவ நிலவ - காத்திருக்க நேரமில்லை
33. மணியே மணிக்குயிலே - நாடோடித் தென்றல்
34. வந்தாள் வந்தாள் ராஜகுமாரி - ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி
35. மருதாணி அரைச்சேனே - ராஜா கைய வச்சா
36. சிங்கார மானே தேனே - தாய் மொழி
37. சொல்லிவிடு வெள்ளி நிலவே - அமைதிப்படை
38. மானே மரகதமே - எங்க தம்பி
39. சத்தம் வராமல் - மை டியர் மார்த்தாண்டன்
40. தென்றல் காத்தே தென்றல் காத்தே - கும்பக்கரை தங்கய்யா
41. தண்ணீரிலே முகம் பார்க்கும் - மணிக்குயில்
42. வெட்டுக்கிளி வெட்டி வந்த வாசம் - பிரியங்கா
43. நினைக்காத நேரமில்லை - தங்கக்கிளி
44. கண்ணே இன்று கல்யாணக்கதை - ஆணழகன்
45. கேக்குதடி கூக்கூ கூ - கட்டுமரக்காரன்
46. நீ ஒரு காதல் சங்கீதம் - நாயகன்
47. அடி அரைச்சு அரைச்சு - மகராசன்
48. பூங்காற்றே இது போதும் - படிச்ச புள்ள
49. பூத்தது பூந்தோப்பு - தங்க மனசுக்காரன்
50. விழியில் புதுக்கவிதை படித்தேன் - தீர்த்தக்கரையினிலே

Thursday, October 15, 2015

"மனசோடு பாடிய பெண் குயில்கள்" இசைஞானி இசையில்

"வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்துப் பாடலை"

இன்றைய காலைப் பொழுதின் ரயில் பயணத்தில் என் காதில் அமர்ந்து கொண்ட அந்த வரிகளுக்குச் சொந்தக்காரி "மாலையில் யாரோ மனதோடு பேச". ஞாயிற்றுக்கிழமை தோறும் ஒலிபரப்பாகும் சிங்கப்பூர் ஒலி வானொலியின் இளையராஜாவின் பாடல்கள் இசை விருந்தை ஒலிப்பதிவு செய்து கேட்ட போது இந்தப் பாடலும் வந்து சேர்ந்தது.

நம் சினிமாவின் அழகியலே உணர்வுகளுக்குப் பாடல் வழியே அர்த்தம் கற்பிப்பது. அதுவும் காதல் வயப்பட்ட பெண்ணின் மனநிலையை ஆதி முதல் வித விதமான பாட்டுச் சித்திரங்களாக அழகுறத் தந்திருக்கிறார்கள். 

அந்த வகையில் "மாலையில் யாரோ மனதோடு பேச" எனது சிந்தனையைக் கிளறி இசைஞானி இளையராஜாவின் இசையில் முன்னணிப் பாடகிகள் பாடிய தனிப்பாடல்களில் தேர்ந்தெடுத்தவற்றை மனதில் ஓட்டிப் பார்த்தேன். இவற்றில் ஒரே அலைவரிசையில் வந்து சேரும் பாடல்களாகப் பதினாறு பாடல்கள் திரண்டன. இந்தப் பாடல்களில் மெதுவான ஓட்டமும் உண்டு இலேசான துள்ளிசையும் உண்டு. ஆனால் இவை எல்லாவற்றையுமே காதல் வயப்பட்ட பெண் தனக்குள் பாடி இன்பம் சுகிக்கும் உணர்வின் அலையாகவே ஒரு சேரப் பார்க்கிறேன். இங்கே இசையும் சேர்ந்து அந்தப் பெண்ணின் உணர்வின் வடிகாலாக அமைகிறது.

ஒரு சூழலுக்குப் பொருந்தக் கூடிய வகையில் ஒவ்வொரு பாடகியும் என்ன மாதிரிப் பாடியிருப்பார்கள் என்ற சின்னக் கற்பனையையும் ஏற்படுத்திப் பார்த்தேன். காட்சி வடிவம் கண்ட போது சிலது முரணான சூழலுக்கு அவை படம் பிடிக்கப்பட்டாலும் இந்த எல்லாமுமே ஒரே பெண்ணின்  தனக்குள் மட்டும் பகிர்ந்து கொண்டாடும் உணர்வுப் பெருக்காய் ஒரே நதியில் சங்கமிக்க, வீடு நோக்கிப் பயணிக்கிறேன் இதோ இந்தப் பாடல்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டே. 
இதுவும் இன்னொரு ரயில் பயண ஆக்கம்.

1. மாலையில் யாரோ மனதோடு பேச - ஸ்வர்ணலதா (சத்ரியன்)
 http://www.youtube.com/watch?v=QwS3i0_iLOg&sns=tw

2. ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் -  சித்ரா (புன்னகை மன்னன்)
 http://www.youtube.com/watch?v=OrV5yxTDsRI&sns=tw

3. ராசாவே உன்னை நம்பி- எஸ்.ஜானகி (முதல் மரியாதை)
 http://www.youtube.com/watch?v=lL-7q3g0k3k&sns=tw

4. காலைப் பனியில் ஆடும் மலர்கள் - சுஜாதா (காயத்ரி)
 http://www.youtube.com/watch?v=hcFwEAkcBxw&sns=tw

5. அடிப் பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை - ஜென்ஸி (முள்ளும் மலரும்)
  http://www.youtube.com/watch?v=Uje_MqHKYEE&sns=tw

6. ஆனந்த ராகம் கேட்கும் காலம் - உமா ரமணன் (பன்னீர் புஷ்பங்கள்)
 http://www.youtube.com/watch?v=_j3goSKLjaw&sns=tw

7. ராசாவே உன்னை காணாத நெஞ்சு
(பி.சுசீலா (வைதேகி காத்திருந்தாள்
  http://www.youtube.com/watch?v=nhpo86rMDlQ&sns=tw

8. என்னுள்ளில் எங்கோ - வாணி ஜெயராம் 
(ரோசாப்பூ ரவிக்கைக்காரி)
 http://www.youtube.com/watch?v=jnZ2gPfkxoo&sns=tw

9. ராசாவே உன்னை நான் எண்ணித்தான்
(எஸ்.பி.சைலஜா (தனிக்காட்டு ராஜா)
 http://www.youtube.com/watch?v=D3XWdfLBUM8&sns=tw

10. பூவே செம்பூவே - சுனந்தா (சொல்லத் துடிக்குது மனசு)

11. எங்கிருந்தோ அழைக்கும் - லதா மங்கேஷ்கர் (என் ஜீவன் பாடுது)
 http://www.youtube.com/watch?v=0heiukbzv1E&sns=tw


12. தொட்டுத் தொட்டு - மின்மினி (உன்னை நினைச்சேன் பாட்டுப் படிச்சேன்)
 http://www.youtube.com/watch?v=vfzl0gkO58g&sns=tw

13.  பாட்டுச் சொல்லி பாட்டுச் சொல்லி - சாதனா சர்க்கம் (அழகி)
 http://www.youtube.com/watch?v=6NdExQZKNro&sns=tw

14. அலை மீது விளையாடும் - பவதாரணி (காதல் கவிதை)

16. கூட வருவியா - பெல்லா ஷிண்டே (வால்மீகி)

Saturday, October 10, 2015

எட்டணா இருந்தா எட்டூரும் வடிவேலு பாட்டு கேக்கும்

B

"வடிவேலுவோடு தமிழ் சினிமாவின் நகைச்சுவை போம்" என்று சமீபத்தில் ட்விட்டியிருந்தேன்.
வடிவேலுவின் அரசியல் வருகையும், தமிழ் சினிமாவின் ரசனைப் போக்கும் சமகாலத்தில் பாதாளத்தில் போய்ச் சேர, இன்றைய மோசமான இறப்பர் நகைச்சுவைகளை ஒப்பிட்டுப் பார்ப்பவர் எல்லோருமே இதை ஏற்றுக் கொள்வர். இன்று 24 மணி நேர நகைச்சுவைச் சின்னத்திரை அலைவரிசைகளில் இவர் தான் என்றும் சூப்பர் ஸ்டார்.

"கருப்பு நாகேஷ்" என்றும் "வைகைப் புயல்" என்றும் அடைமொழியோடு சிறப்பிக்கப்பட்ட நகைச்சுவைக் கலைஞர் வடிவேலுவின் பிறந்த நாள் இன்றாகும். தமிழ் சினிமாவில் நாயகர்களில் இருந்து குணச்சித்திர நட்சத்திரங்கள் வரை பார்க்கும் போது விரல் விட்டுப் பார்க்கும் ஒரு சிலருக்கே தமிழ் மண்ணின் அடையாளம் வாய்த்திருக்கிறது. அதில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நாயகர்கள் என்று பார்க்கும் போது வடிவேலுவை முன்னணியில் வைத்துப் பார்க்க வேண்டும். காரணம், அவரின் முகத்தோற்றம் மட்டுமல்ல, உடல் மொழியும், வசன உச்சரிப்பும் மேலதிகமாகச் சேர்ந்து நம்ம கிராமத்து ஆளு ஆகி விடுகிறார்.

டி.ராஜேந்தரின் "என் தங்கை கல்யாணி" யில் யாருமே அடையாளம் கண்டிராத சிறு வேடம், பின்னர் சில வருடம் கழித்து ராஜ்கிரண் தயாரித்து நடித்த "என் ராசாவின் மனசிலே" வில் கவனிக்கத்த ஒரு வேடம் என்று வடிவேலுவின் திரைப்பயணம் ஆரம்பித்த போது பின்னர் ராஜ்கிரணை விடவும் வெகு சிறப்பாகப் பயன்படுத்திய ஆரம்ப கால இயக்குநர் என்ற வகையில் ஆர்.வி.உதயகுமார் அவர்களே புண்ணியம் கட்டிக் கொள்கிறார். "சின்னக் கவுண்டர்" இல் ஆரம்பித்தது இந்தக் கூட்டுப் பயணம்.
"தேவர் மகன்" வடிவேலுவின் குணச்சித்திர நடிப்புக்கும் பாலம் போட்டுக் கெளரவப்படுத்தியது.
பாரதிராஜா "கிழக்குச் சீமையிலே" எடுத்த போது வடிவேலுவை ஏகமாகக் கொண்டாடியதை அன்றைய சினிமா உலகை அறிந்தவர்களுக்குப் புரியும். 
சுந்தர்.C எல்லாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடிய இயக்குநர் அல்ல, இவரின் ஒவ்வொரு படங்களிலும் ஒரு காலத்தில் முன்னணியில் கோலோச்சிய நடிகர்களை மீளவும் பயன்படுத்தியிருப்பது ஒரு சிறப்பு என்றால் இன்னொரு சிறப்பு தொண்ணூறுகளில் இருந்து இன்று வரை நகைச்சுவை சார்ந்த முழு நீள அல்லது நகைச்சுவைக் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த படங்களின் முதல்தர இயக்குநர் என்றால் சுந்தர்.C தானே. வடிவேலுவின் திரைப்பயணத்தில் இவரோடு இணைந்த படங்களில் "வின்னர்" முத்திரை பதித்த நகைச்சுவைக்கு உதாரணமாகியது. கிரி, தலைநகரமும் சேர்க்க வேண்டியது.

வெளியில் என்னதான் மாறுபட்டுக் காட்டிக் கொண்டாலும் நம் எல்லோருக்குள்ளும் வடிவேலுவின் குணாதிசியம் ஒட்டி உறவாடுகிறது. அந்தப் பலவீனத்தைக் , கோழைத்தனத்தைத் தன் நகைச்சுவையில் பலமாக வெளிப்பட்டுத்தி வெற்றி கண்டிருக்கிருக்கிறார் இவர். இதன் தொடக்கமாக நான் "அரண்மனைக் கிளி"யைச் சுட்டுவேன். https://m.youtube.com/watch?feature=youtu.be&v=1wWfZL9rVxo

வடிவேலு தொண்ணூறுகளில் பிரபல நட்சத்திரமாக மாறிய போது இசைஞானி இளையராஜா இசையில், கவிஞர் வாலி கதை எழுத "இளையராஜாவின் மோதிரம்" என்றொரு படம்  வடிவேலுவை நாயகனாக்கி எடுக்க முயற்சித்தார்கள். ஏனோ அது கிடப்பில் போடப்பட்டு விட்டது. அது மட்டும் வந்திருந்தால் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசிக்கு முன்னோடி ஆகியிருக்கும்.

இசைஞானி இளையராஜா இசையில் "எல்லாமே என் ராசா தான்" படத்தில் "எட்டணா இருந்தா எட்டூரும் எம் பாட்டைக் கேட்கும்"பாடலாசிரியன் பொன்னடியான் வரிகளில்  வடிவேலு முதன்முதலில் பாடிய முழு நீளப் பாடல். ஜே.பி.சந்திரபாபுவுக்குப் பின் ஒரு நகைச்சுவை நடிகர் தேர்ந்த பாடகராக அடையாளப்படுத்தப்படுவது வடிவேலு வழியாகவே. அதன் பின் நிறையப் படங்களில் பாடியிருக்கிறார். "எட்டணா இருந்தா" பாடல் ஒலிப்பதிவின் போது வடிவேலுவின் சேஷ்டைகளைப் பார்த்து இளையராஜா விழுந்து விழுந்து சிரித்து ரசித்தது அப்போதைய சினிமாச் செய்தி.
 http://www.youtube.com/watch?v=7LTrDF-S0Kk&sns=tw


அது சரி, "எட்டணா இருந்தா" பாடலைப் பற்றி எழுத வந்து வடிவேலு புராணமே பாடிட்டேனே அவ்வ்வ்வ்வ்வ்வ்




Thursday, October 8, 2015

வேதாளம் வந்திருக்குது

அப்போதெல்லாம் படம் பார்ப்பதே அபூர்வம். யாராவது ஒரு நண்பர் வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டியும், வீடியோவும் இருக்கும். வீட்டுப் பெரியவர்கள் கையில காலில விழுந்து அனுமதி கேட்டுத்தான் படம் பார்க்க முடியும். 

அப்படித்தான் ஒருமுறை கந்தசஷ்டி விரதம் முடிந்து எங்களூர் கந்தசுவாமி கோயிலில் சூரனை முருகன் வேட்டையாடிய சூரசம்ஹாரம் முடிந்த கையோடு எங்கள் திருவிளையாடலைக் காட்டினோம். இணுவில் சந்தியில் இருந்த வீடியோக்கடையில் வாடகைக்குப் படக் கொப்பியும் எடுத்தாச்சு. 
நண்பரின் பெரியப்பா முறையானவர் பக்திப் பழம். விரதக் களைப்போடு ஆர்வமாக "என்ன படம் தம்பி போடுறியள்" என்று கேட்க
"சூரசம்ஹாரம்" என்று நாங்கள் சொல்லவும் அவருக்குப் புழுகம் தாங்க முடியவில்லை அவரும் வந்து படக் கோஷ்டியோடு குந்திக் கொண்டார். எமக்கோ அந்த நாளில் வந்த பொம்மை, பேசும்படம் சஞ்சிகைகளில் சூரசம்ஹாரம் படக் காட்சிகளைக் கண்ட அனுபவத்தில் திண்டாட்டம். படம் அரைவாசிக் கட்டத்துக்குப் போக முன்பே பெரியப்பா வீரவாகு தேவர் ஆனார் என்பதையும் எழுத வேண்டுமா?

போதைவஸ்தின் கேட்டை மையைப்படுத்தி வந்த தமிழ் சினிமாக்களில் ரஜினி "ராஜா சின்ன ரோஜா" கமல் "சூரசம்ஹாரம்" என்று பங்கு போட்டுக் கொண்டார்கள்.
இந்தப் படத்தின் இயக்குநர் சித்ரா லட்சுமணன் அந்தக் காலத்தில் மண்வாசனை உள்ளிட்ட படங்களின் பிரப தயாரிப்பாளர். இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக  இருந்த அவர் "சூரசம்ஹாரம்" மூலம் இயக்குநர் அந்தஸ்த்துப் பெற்றார். சித்ரா லட்சுமணனை முன்னர் வானொலிப் பேட்டி எடுத்திருக்கிறேன். அப்போது சூரசம்ஹாரம் படம் இயக்கிய அனுபவத்தையும் விரிவாகப் பகிர்ந்து கொண்டார்.
அக்னி நட்சத்திரம் வந்த சூட்டோடு சூடு கிளப்பிய நடிகை நிரோஷா, உச்ச நட்சத்திரம் கமலுடன் இணைந்து இந்தப் படத்தில் நடித்தது அப்போது எங்களுக்கு ஆச்சரியமாகப்பட்டது. அப்போது நிரோஷா மைதிலி என்ற பெயராலும் அழைக்கப்பட்டிருந்தார். இந்தப் படத்தில் மைதிலி என்றே குறிப்பிடப்படுகின்றார்.

"வேதாளம் வந்திருக்குது" பாடலை இளையராஜா எழுத மற்றையவை கங்கை அமரனின் கை வண்ணம். 

பாடகர் அருண்மொழி அவர்கள் எடுத்த எடுப்பிலேயே "நான் என்பது நீ அல்லவோ", "நீலக்குயிலே" பாடல்கள் இரண்டைத் தன் அறிமுகப் படத்தில் பாடியது புதுமை. முதலில் கங்கை அமரன் தான் பாடுவதாக் இருந்ததாம்.
சுசீலா அவர்கள் தன் குரலை அப்படியே மாற்றம் செய்யாது கொடுத்திருந்தாலும் "ஆடும் நேரம் இதுதான்" பாடலைக் கேட்கும் போதெல்லாம் போதையோடு பாடும் பாங்கைக் கொடுக்கும் உணர்வு. இசையும் அந்தப் பாடலை முறுக்கேற்றியிருக்கிறது. இந்தப் பாடலைச் சில வருடம் முன் முதன்முதலில் யூடியூபில் அரங்கேற்றிய பெருமை எனக்கே :-))

இசைஞானி இளையராஜா தன் முன்னணிப் பாடகர்களின் இயல்பான குரலை மாற்றிப் பாட வைக்கும் வகையில் ஏராளமான வாய்ப்புகளைக் கொடுத்திருக்கிறார். அது குறித்த ஒரு தனிப்பதிவும் எழுத உள்ளேன். 
பாடகர் மனோ "முக்காலா" "அழகிய லைலா", "ஏ ஷெப்பா" போன்ற பாடல்களில் இம்மாதிரித் தன் குரலின் இயல்பை மாற்றிப் பாடி அந்தப் பாடல்களும் வெகுஜன ஈர்ப்பைப் பெற்றிருந்தாலும் அதற்கெல்லாம் முன்னோடியாக அமைவது "வேதாளம் வந்திருக்குது". கூடப் பாடிய சைலஜாவுக்குக் குரலை மாற்ற வேண்டிய தேவை இருக்கவில்லை.

"பாடிப் பார்க்கலாம் ஒரு தேவாரம்" (நீலக் குயிலே), "வந்து தேவாரம் பாடி நிக்குது (வேதாளம் வந்திருக்குது) என்று ஒரே படத்தின் இரு பாடல்களில் தேவாரம் வருகிறது. (என்னே ஆராய்ச்சி என்னே ஆரய்ச்சி :p

வேதாளம் பாட்டுக்கு மூத்த அக்காள் முறை எஞ்சோடி மஞ்சக்குருவி.

இந்தப் பாடலை இன்று ஒரு அதி நவீன ஒலித்தரம் பொருந்திய ஸ்பீக்கரின் வழியாகவோ, ஹெட்போன் வழியாகவோ கேட்டுப் பாருங்கள். இன்றைய நவீன இசையையும் கடந்த அந்தத் துள்ளிசையிம் ஆரம்பம் தொட்டு முற்றுப் புள்ளி இசை வரை அதகளம் தான், பாடலில் பயன்படுத்தப்பட்ட எல்லா இசைக் கருவிகளின் உச்ச தாண்டவம் இந்தப் பாட்டு.

https://m.youtube.com/watch?feature=youtu.be&v=OcnWFDXNEd8

Thursday, October 1, 2015

பாடல் தந்த சுகம் : அரும்பும் தளிரே

அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும் பனியே பனித்தூய்மையே
மலரும் மனமே மனம் ஏந்திடும்
கனியே கனிப்பாவையே
வானாடும் மீனே நீதானே வேண்டும்
ஊனாடும் உயிரே நீதானே வேண்டும்

பாடகர் அருண்மொழி அவர்களது குரல் வளம் பருகக் கிட்டிய இசை வெள்ளங்களில் இதுவுமொன்று. அவரது மென்மையான குரலுக்கு ஏதுவாக அமைந்த பெண் ஜோடிக் குரல் கீதாவினுடையதும் நெருடலில்லாது இரு குரலையும் ஒரு சேர ரசிக்கும் வகையில் இனிமையாக் இருக்கும்.

இந்தப் பாடலின் சிறப்பமே பாடலின் பல்லவி தான். அந்தப் பல்லவியே ஒரு அழகான காதல் கவிதை போலத் தனித்து நிற்கும் சிறப்பம்சம் கொண்டு விளங்குகின்றது. மெட்டுக்கு இட்டுக் கட்டியதென்றாலும் அந்தப் பல்லவியை எவ்வளவு அழகாக அமைத்திருக்கிறார் கவிஞர் வாலி பாருங்கள். பாடல்களின் முதல் சில அடிகளை மட்டுமே மனதில் நினைப்பெழுந்து வாய் முணுமுணுக்கும் ஆனால் இந்தப் பாடலின் முழுப் பல்லவியையும் பாடி முடிக்கத் தோன்றும்.
அந்த வரிகளே பனித்துளிகள் இலைமேல் நோகாமல் ஒட்டிக் கொண்டிருக்கும் தன்மை பொருந்தியவை.

சந்திரலேகா என்ற பெயரில் ஆதிகாலத்தில் தமிழில் வெளிவந்த படத்திற்குப் பின் மீண்டும் ஒரு சந்திரலேகா வந்தது என்பதை நினைப்பூட்ட ஒரே வெற்றிச் சுவடு அது இசைஞானியின் இசை தான்.
இசைஞானி இளையராஜாவின் தொண்ணூறுகளில் "சந்திரலேகா" படத்தின் பாடல்கள் தவிர்க்க முடியாதவை. 
"அல்லா உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும்" இதே படத்தில் இன்னொரு முத்தாக உன்னிகிருஷ்ணன், ப்ரீத்தி உத்தம்சிங் பாடிய பாடல் பரவலாக வெகுஜன அந்தஸ்த்தை ஏந்திய பாட்டு.

"அரும்பும் தளிரே" பாடல் 
அருண்மொழி, உன்னிகிருஷ்ணன் குழுவினரோடு மெல்லிய இசையோடு ஒரு சிறு பாடலாகவும், 
http://download.tamiltunes.com/songs/__A_E_By_Movies/Chandraleka/Arumbum_Thalire_Bit.mp3
அப்படியே சோக ராகமாய் "தரை வராமல் ஆகாய மேகம் தொலை தூரம் நீந்திப் போகுமே" உன்னிகிருஷ்ணன் குழுவினர் குரல் பொருந்தவும் அமைக்கப்பட்டிருக்கிறது. அந்தத் தொடக்கமே ஒரு இசை யாகத்தில் ஓதும் மந்திர உச்சாடனம்.
http://download.tamiltunes.com/songs/__A_E_By_Movies/Chandraleka/Tharai_Varaamal.mp3

"அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும் பனியே பனித் தூய்மையே"
 ராஜராஜன் கூடும் போது ராஜ யோகம் வாய்த்தது ரசிகர் நம் எல்லோருக்கும்.
 http://www.youtube.com/watch?v=CBPQBR5eY08&sns=tw

SoundCloud இல் குளிக்க