
சில திரைப்படங்களின் பாடல் ஒலி நாடாக்களிலோ அல்லது இசைத்தட்டுக்களிலோ வந்த குறித்த திரைப்படப் பாடல்களைக் கேட்டு விட்டு அந்தப் படங்களைப் பார்க்கும் போது படத்தின் காட்சியமைப்பில் மேலதிகமாகப் பாடல் வரிகள் சேர்க்கப்பட்டிருக்கும் அல்லது மாற்றப்பட்டிருக்கும். தவிர படத்தின் ரீ ரெக்கார்டிங்கின் போது மேலதிகமாகப் பாடலைப் போட்டும் கொடுப்பதுண்டு.
சில சமயங்களில் தணிக்கை உத்தரவில் பாடல் வரிகள் அமுங்கிப் போவதுமுண்டு. உதாரணமாக இந்து படத்தில் வந்த வாலி எழுதிய "சக்கரவள்ளிக் கிழங்கு சமஞ்சது எப்படி" என்ற இலக்கியத்தரமான பாடல் (!) படத்தின் காட்சியில் "சமஞ்சது" என்ற வரிகள் ஒலியற்று (mute)இருக்கும். இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் பாடல்களைப் போடும் போது வீரம் செறிந்த பாடல்களை இனங்கண்டு அமுக்குவதோடு, டைகர், புலி என்று சொற்கள் வரும் பாடல்களில் குறித்தசொற்கள் வரும் இடங்களை அழித்து விட்டுத்தான் போடுவார்கள். உதாரணமாக சிங்கார வேலன் திரைப்படத்தில் வரும் புதுச்சேரி கச்சேரி பாடலில் வரும் "டைகராச்சாரி வரதாச்சாரி போலப்படிச்சேன்" என்ற பாட்டுப் பகுதியில் டைகராச்சாரியை அடித்து விடுவார்கள்.
இங்கே நான் தரும் தொகுப்பு, சில திரைப்படங்களின் ஒலி நாடாக்கள்/இசைத்தட்டுக்கள் முதலில் வந்தபோது காணாமல் போன வரிகளோ அல்லது இசைப்பகுதியோ பின்னர் திரைப்படத்தில் வந்த போது சேர்க்கப்பட்டு வந்த பாடல்களாக ஐந்து பாடல்களைத் தருகின்றேன்.
அந்த வகையில் முதலில் வருவது "பத்ரகாளி" திரைப்படத்தில் வரும் பாடல். மகரிஷி எழுதிய நாவலே பத்ரகாளி என்று திரைப்படமானது பலருக்குத் தெரிந்திருக்கும். இதப் படத்திலே "கண்ணன் ஒரு கைக்குழந்தை" என்ற பி.சுசீலா, கே.ஜே.ஜேசுதாஸ் பாடும் பாடல். இந்தப் பாடல் வெளிவந்த போது இரண்டு சரணத்தோடு முடிவதாக இருக்கும். ஆனால் படத்திலே
மூன்றாவதாக இன்னொரு பகுதியும் எழுதப்பட்டது.
"மஞ்சள் கொண்டு நீராடி மொய் குழலில் பூச்சூடி
வஞ்சி மகள் வரும் போது ஆசை வரும் ஒரு கோடி
கட்டழகன் கண்களுக்கு மையெடுத்து எழுதட்டுமா
கண்கள் படக்கூடும் என்று பொட்டு ஒன்று வைக்கட்டுமா"
இப்படி அமையும் வண்ணம் எழுதப்பட்டு இசையமைக்கப்பட்டு வந்தது. இதோ அந்தப்பாடல்
அடுத்ததாக வரும் பாடல் "சொல்லத்தான் நினைக்கிறேன்" திரைப்படத்தில் இருந்து வருகின்றது. மணியன் எழுதிய இலவு காத்த கிளி என்ற நாவலே பின்னர் கே.பாலசந்தரின் கைவண்ணத்தில் "சொல்லத்தான் நினைக்கிறேன்" ஆனது. இந்தப் படத்திலே இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், ஜானகியோடு இணைந்து ஒரு பாடலைப் பாடியிருப்பார். எம்.எஸ்.வி பாடிய பாடல்களில் அவர் ஜோடியாகப் பாடிய பாடல்களை விரல்விட்டு எண்ணி விடலாம். அந்த வகையில் "சொல்லத்தான் நினைக்கிறேன்" என்று இவர் ஜானகியோடு இணைந்து பாடும் பாடல் வெகு சிறப்பானதொரு மெட்டு. பின்னணியில் வளைய வரும் கிட்டார் , வயலின் இசை உறுத்தாமல் காதல் வயப்பட்ட நாயகன், நாயகி இருவரின் மன நிலையை இருவேறு கோணத்தில் இந்தப் பாடல் தந்திருக்கும். குறித்த பாடலிலும் புதிதாக ஒரு சரணம் சேர்க்கப்பட்டு வந்ததை வெறுமனே இசைத்தட்டுக்கள் மூலம் கேட்டவர்கள் பலருக்குத் தெரியாது. மேலதிகமாக அமைந்த வரிகள்
"நேரில் நின்றாள் ஓவியமாய்
என் நெஞ்சில் நின்றாள் காவியமாய்
நான் பாதி அவள தான் பாதி
நெஞ்சில் கலந்தாளோ கண்ணில் மலர்ந்தாளோ"
இப்படி இருக்கும், ஆனால் புதிதாக சேர்க்கப்பட்ட அந்த வரிகளைக் கேட்கும் போதே மூலப்பாடலில் இருந்த எம்.எஸ்.வி குரலுக்கும் இதற்கு சிறிய வித்தியாசம் இருப்பதைக் காணலாம். தொழில்நுட்பம் அதிகம் வளராத காலமல்லவா அது. இதோ அந்தப் பாடல்.
அடுத்ததாக "சுவரில்லாத சித்திரங்கள்" திரையில் வரும் பாடல். கங்கை அமரன் இசையமைத்து அவருக்கு வாழ் நாள் முழுவதும் பெருமை தேடித்தரும் பாடல்களில் "காதல் வைபோகமே" பாடல் தனித்துவமானது. (சமீபத்தில் ரீமிக்ஸ் பண்ணி கலைஞர் பேரன் அறிவுநிதி ஒரு வழி பண்ணிய பாட்டல்லவா இது )மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி பாடும் பாடலிது. ஒரு தலைக்காதல் கொண்ட பாக்யராஜின் காதல் கனவும், மனமொத்த சுதாகர், சுமதி ஜோடியின் கனவுலகப்பாடலாகவும் அமையும் இந்தப் பாடலை இசைத்தட்டில் கேட்டால் திடீரென்று காதல் வைபோகமே என்று ஆரம்பித்து திடுதிப்பில் முடிவதாக இருக்கும். ஆனால் படத்தில் காட்சியமைப்புக்கு ஏற்றவாறு இதனை எடுத்தபோது மலேசியாவாசுதேவன் "காதல் வைபோகமே காணும் நன்னாளிதே வானில் ஊர்கோலமாய் என்று முதல் அடிகளை மெதுவாகப் பாடி முடித்து நிதானிக்க பஸ் கிளம்பும் ஓசையுடன் பாடல் ஆரம்பிக்கும். கூடவே இரண்டாவது சரணத்தில் இடைச்செருகலாக மேலதிக இசையும் போடப்பட்டிருக்கும். கேட்டுப் பாருங்கள் புரியும்.
திரையுலகில் கலைஞானி கமல்ஹாசனுக்கு ஐம்பதாவது ஆண்டு அதோடு சூப்பர் ஸ்டார் ரஜினி காந்திற்கு 35 ஆண்டு நிறைவாகும் இவ்வேளை இருவரும் சேர்ந்த ஆரம்ப காலப்படங்களில் ஒன்றான "மூன்று முடிச்சு" திரைப்படப்பாடல் வருகின்றது. பாடல் ஜோடிகளிலே செளந்தரராஜன் - சுசீலா, எஸ்.பி.பி - ஜானகி என்ற தனித்துவம் இருப்பது போல ஜெயச்சந்திரன் - வாணி ஜெயராம் குரல்களும் தனித்துவமான ஜோடிக்குரல்கள். இந்தப் படத்தில் அந்தாதி வடிவிலே ஒரு பாடல் அடிகள் முடிக்கும் போது அந்தத்தில் வருவது அடுத்த அடியின் முதல் அடிகளாக இருக்குமாறு இரண்டு பாடல்கள் இருக்கும். ஒன்று, ஆடி வெள்ளி தேடியுன்னை நானடைந்த நேரம், இன்னொரு பாடல் , வசந்த கால நதிகளே வைரமணி நீரலைகள். ஒரே படத்தில் இரண்டு அந்தாதிப்பாடல்களைப் பாடிய பெருமை ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம் ஜோடிக்குரல்களைத் தான் சாரும். "வசந்த கால நதிகளிலே" பாடலினை பெரும்பாலான இசைத்தட்டில் கேட்கும் போது இந்த ஜோடிக்குரல்கள் மட்டுமே இருக்கும். ஆனால் வில்லன் ரஜினி, கமலை ஆற்றில் தள்ளி விட்டுப் பாடும் வரிகளான
"மணவினைகள் யாருடனோ மாயவனின் விதிவதைகள்
விதிவகையில் முடிவு செய்யும் வசந்தகால நீரலைகள்"
என்று எம்.எஸ்.விஸ்வநாதன் பாடும் வரிகள் படத்தில் மேலதிகமாக அமைந்திருக்கும். சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு முதலில் பின்னணி குரல் கொடுத்த பெருமை எம்.எஸ்.விஸ்வநாதனுக்கே சாரும். இதோ அந்த முழுப்பாடல்
நிறைவாக ஒரு பழைய இனிய பாடல். பீம்சிங் இயக்கத்தில் வெளியான பாவமன்னிப்பு திரையிலிருந்து வரும் "பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது" என்ற பி.சுசீலா பாடும் பாடல். இந்தப் பாடல் எத்தனையோ ஆண்டுகள் கழித்தும் மெட்டிலும் வரிகளிலும் கண்ணியமான தொனியைக் கொண்டு வந்து மனசில் சட்டென்று ஒட்டிக் கொள்ளும். கே.பாலசந்தர் இயக்கிய "காதல் பகடை" தொலைக்காட்சி தொடரில் பேபி தீபிகா இந்தப் பாடலைப் பாடிய காட்சியும் மறக்க முடியாத இனிமை. பாவமன்னிப்பு திரைப்படத்தில் வரும் "பாலிருக்கும் பழமிருக்கும்" பாடலில் பி.சுசீலா பாட, பின்னணியில் ம்...ம்...ம் என்று ஹம்மிங்காக மட்டும் எம்.எஸ்.வியின் குரல் இருக்கும். ஆனால் படத்திலே காட்சியமைப்பில் வரும் போது இந்தப் பாடல் முடியும் போது பி.சுசீலா எம்.எஸ்.வி இருவருமே பாடலின் முதல் அடிகளைப் பாடி முடிப்பதாக அமையும். கேட்டு அனுபவியுங்கள் ;)