
உன்னை நெனச்சேன் பாட்டுப் படிச்சேன் திரைப்படம் 1992 ஆம் ஆண்டின் உன்னதமான பாடல்களை இசைஞானி அளிக்க,குரு தனபால் இயக்கத்தில் வெளிவந்தது. அந்தப் படத்தின் பாடல்களில் "என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட மன்னன் பேரும் என்னடி" பாடல் இன்றளவும் மறக்க முடியாத பாடலாக ஏதோ ஒரு வானொலியில் ஒலித்துக் கொண்டு தான் இருக்கும். கார்த்திக் உடன் நடித்த நாயகி மோனிஷா சிறிது காலத்தில் விபத்தில் மாண்டு போனது துரதிஷ்டம். அந்தப் படம் நடிகை சசிகலாவுக்கும் மீள் வரவாக அமைந்தது. படத்தில் எல்லாவித வெற்றிகரத் துணையும் இருந்தும் தோல்விப்படங்களில் ஒன்றாக அமைந்து விட்டது.
குரு தனபால் இன் மீள் வரவு இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் சத்யராஜ் நாயகனாக "தாய் மாமன்" படத்தின் வழியாக வெற்றிகரமாக அமைந்தது. அந்தப் படம் வந்த வேளை சத்யராஜ், மணிவண்ணன் போன்றோர் வை.கோபால்சாமி மீதும் ம.தி.மு.க மீதும் அளவற்ற நேசத்தோடு இயங்கிய நேரம். அந்தப் படத்தில் சத்யராஜ் நடை, உடை பாவனை கூட வை.கோ போன்று இருக்கும். வெள்ளை வேஷ்டி. சட்டையோடு கழுத்தில் கருப்புத் துண்டு மாட்டிய சத்யராஜ் இன் முழுப்படம் மட்டுமே கொண்ட "தாய் மாமன்" திரைப்படத்தின் முழு அளவு விளம்பரம் பொம்மை போன்ற அன்றைய சினிமா இதழ்களில் வெளியிடப்பட்ட அளவுக்கு சண்டைக் கோழியைத் தூக்கிக் கொண்டு நிற்கும் சத்யராஜ் ஐ மட்டுமே முக்கியத்துவப்படுத்தியிருந்தது. சத்யராஜ், கவுண்டமணி, மணிவண்னன் ஆகிய முவரும் சேர்ந்து அதகளம் பண்ணிய படங்களில் முதல் இரண்டு படங்கள் என்றால் என் தேர்வில் தாய் மாமன் படமும் மாமன் மகள் படமும் தான் இருக்கும்.
தாய் மாமன் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வந்த மாமன் மகள் திரைப்படமும் சத்யராஜைப் பொறுத்தவரை அவருக்குப் பேர் சொன்ன படம்.
அந்தக் காலகட்டத்தில் துணிச்சலாக ஜெயலலிதா மற்றும் கருணாநிதியை நோக்கிய அரசியல் எள்ளல்களை சத்யராஜும், மணி வண்ணனும் செய்ததை இன்றைய சூழலில் நினைத்துப் பார்க்கவே முடியாது. அந்த அளவுக்கு இந்த இரண்டு படங்களிலும் நிரம்பியிருக்கும். தமிழ் சினிமாவின் அரசியல் நையாண்டிப் படங்களில், வேறொரு தளத்தில் வைத்துக் கொண்டு பூடகமாகத் தம் கருத்தைச் சொன்ன படங்களில் சிறப்பான படங்கள் இவை.
குரு தனபாலுக்கான சரியான பாதையாகத் தான் அவரின் அடுத்த சுற்றில் அமைந்தத தாய்மாமன், மாமன் மகள் ஆகியவை இருந்தன. இவ்வளவுக்கும் தேவா (தாய் மாமன்), ஆதித்யன் ( மாமன் மகள்) ஆகிய இசையமைப்பாளர்களை வைத்துத் தான் இவ்விரண்டு படங்களைக் கொடுத்திருந்தார்.

குரு தனபாலைப் பொறுத்தவரை தொண்ணூறுகளின் சினிமாவை நேசித்தவர்களுக்கு அவர் யாரென்றே தெரியாமல் அவரின் திரைப்படங்களான மாமன் மகள், மற்றும் தாய் மாமன் படங்களின் வழியாக மெச்சியிருப்பர். இன்றைக்கும் ஏதாவது ஒரு தொலைக்காட்சியில் மாமன் மகள் படத்தின் காட்சிகள் வரும் போது வாய்விட்டுச் சிரிப்பேன். அந்த அளவுக்கு காலத்தால் மறக்கடிக்கப்படாத அல்லது கால மாற்றத்தில் ரசனை மாறாத எள்ளல்களும், லொள்ளுகளும் நிரம்பிய சிரிப்புக் கலவை அது. சமூகத்தைச் சந்தோஷப்படுத்துபவன் வாழ்க்கை பெரும்பாலும் அதுவாக இராது என்பது போலவே இவரின் இறுதிக்காலமும் இருந்ததாக அறிகின்றேன்.
இயக்குனர் குரு தனபாலுக்கு என் அஞ்சலிகள்.