Pages

Thursday, June 24, 2021

பாடகர் எம்.எஸ்.விஸ்வநாதன் இன்னொருவர் இசை கொடுக்க ❤️



பாடகர் எம்.எஸ்.விஸ்வநாதன் இன்னொருவர் இசை கொடுக்க ❤️
“காதல் என்பது மழையானால் அவள் கண்கள் தானே கார்மேகம்... இந்த ஈரடிகளை அப்படியே மெட்டில் பாய்ந்தது போலப் பாடிப் பார்த்து இன்னோர் முறை வேறொரு வடிவில் எம்.எஸ்.வி போலவே பாடிப் பார்த்தல் சுகம். அந்த “சொல்லத்தான் நினைக்கிறேன்” https://www.youtube.com/watch?v=wxvpmaSKM54 பாடல் வழியாகத் தான் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வ நாதன் அவர்களை ஒரு பாடகராகத் தீவிரமாக நேசிக்கத் தொடங்கிப் பின்னாளில் அவரின் அரிய பாடல்களை எல்லாம் தேடிப் பிடித்துக் கேட்டு ரசிக்க முடிந்த இணைய காலம் அது, “நீ நினைத்தால் இந்நேரத்திலே ஏதேதோ நடக்கும்” https://www.youtube.com/watch?v=CTnR58WVkrQ பாடலைக் கேட்கும் போதெல்லாம் கோட், சூட் போட்ட நவ நாகரிக இருபதுகளே இருக்கும் இளைஞனாக மிளிருவார். அந்தப் பாடலைப் பாடும் போது அவருக்கு நாற்பத்து மூன்றைத் தொட்ட வயசு. அந்த ஆரம்ப ஆலாபனையிலேயே ஏதோ வாத்தியமொன்று பாட ஆரம்பித்த போன்ற நாதக் குரலாகத் தொனிக்கும். படத்தின் கதையோட்டத்தோடு மாறுபடும் காட்சியமைப்பு வரும்போது ஒரு கட்டியக்காரனாகவும், அசரீரியாகவும் பல படங்களில் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் ஒரு பாடகராகவும் வெளிப்படுத்தியிருக்கிறார். இன்று தமிழுலகம் போற்றும் கவியரசு கண்ணதாசனுக்கும் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வ நாதனுக்கும் பிறந்த தினம். மெல்லிசை மாமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்தும், இன்னொருவர் இசையிலும் பாடியவையைக் கொடுக்கிறேன். ஜூன் 24 இன்றைய தினம் மெல்லிசை மாமன்னர் எம்.எஸ்.விஸ்வநானுக்கு இன்று 93 வயது. தமிழ்திரையிசைச் சாதனையாளர்களில் மூன்று முக்கியமான ஆளுமைகளான மெல்லிசை மன்னர் எம். எஸ்.விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏ.ஆ.ரஹ்மான் ஆகியோர் இயங்குகின்ற சூழலில் நாமும் இருக்கின்றோம் என்பதில் ஒரு பெருமை தானாக வந்து சேர்கின்றது. இன்றைக்கு கணினி யுகத்தில் ஏராளம் டெஸ்ட் டியூப் பேபிகள் இசையமைப்பாளர்களாகக் குவிந்து விட்டார்கள் ஆனால் எம்.எஸ்.விஸ்வநாதன் என்ற இசையுலக மாமன்னன் எவ்வளவு பெரிய சாதனையை தசாப்தங்களைக் கடந்து செய்து காட்டிவிட்டு அமைதியாக எல்லாவற்றையும் பார்க்கின்றார் என்னும் போது சாதாரணர்களாகிய நாம் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய இன்னொன்றையும் அந்த அடக்கம் காட்டி நிற்கின்றது. இன்றைக்குப் பன்மடங்கு பெருகிவிட்ட தொழில் நுட்ப முன்னேற்றத்தின் பல படிகள் பின்னோக்கிய காலகட்டத்தில் தான் எம்.எஸ்.விஸ்வநாதன் ஏராளம் பாடல்களை விதவிதமான சூழலுக்கேற்ப விதையாக்கிக் கொடுத்தார், இன்றைக்கும் பட்டுப்போகாத நல் விரூட்சம் போல அந்தப் பாடல்கள் ரசிகர் மனதில் எழுந்து நிற்கின்றன. ராமமூர்த்தி அவர்களோடு இணைந்து கூட்டாகப் படங்கள் கொடுத்த போதும், தனித்து இயங்கிய போதும் தன் அடையாளத்தை மிகக் கச்சிதமாக நிறுவியவர். இசைஞானி இளையராஜாவின் ஆரம்ப காலத்துப் பாடல்களைக் கேட்கும் போது எம்.எஸ்.வி தனம் இருக்குமளவுக்கு அடுத்த சகாப்தத்திலும் கொஞ்சப் பாதிப்பை ஏற்படுத்திவிட்டவர். மெல்லிசை மாமன்னர் விஸ்வநாதனோடு பணியாற்றிய இயக்குநர்கள் லேசுப்பட்டவர்களல்ல, ஒவ்வொருவருக்கும் தனிப்பாணி, இவர்கள் எல்லோருக்கும் ஏற்ற பாடல்களைப் பண்ணுவதோடு மட்டுமல்ல கவியரசு கண்ணதாசனோடு போராடியும், சந்தோஷித்தும் மெட்டுக் கட்டிய கதைகளைப் புத்தகம் ஆக்குமளவுக்கு அந்தப் பாடல்களுக்குப் பின்னால் ஏராளம் கதைகள். இவையெல்லாம் ஒரு மாமூல் கலைஞனுக்கு கிட்டாத அனுபவங்கள். அந்த வகையில் எம்.எஸ்.விஸ்வநாதனின் முழுமையான வரலாறு எவ்வளவு தூரம் பதிவாகியிருக்கின்றது என்பது கேள்விக்குறி. எம்.எஸ்.விஸ்வநாதன் அளவுக்கு மற்றைய இசையமைப்பாளர்களோடு நேசம் கொண்டு, அவர்களின் படங்களிலும் கெளரவப்பாடகராக வந்துகாட்டும் போது அவரின் இன்னொரு பரிமாணம் வெளிப்படுகின்றது. இவர் அளவுக்குத் தமிழ் சினிமாவில் இவ்வளவு தொகை இசையமைப்பாளர்கள் இசையில் பாடிய இன்னொரு இசையமைப்பாளரை அடையாளம் காட்டுவது மிகக்கடினம், இரண்டாவது இடத்தில் கங்கை அமரனைச் சேர்த்துக் கொள்ளலாம். அந்த வகையில் தமிழ்த்திரையுலக முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் ( யுவனின் தில்லு முல்லு பாட்டைச் சொந்தம் கொள்ள முடியாது) எம்.எஸ்.வி பாடிய பாடல்கள் சில இங்கே, இளையராஜா தாயே மூகாம்பிகே (தாய் மூகாம்பிகை) https://www.youtube.com/watch?v=dlDFIGxixIk நல்ல காலம் பொறக்குது ( கருவேலம் பூக்கள்) https://www.youtube.com/watch?v=2TGBK1yqtF0 எரிகனல் காற்றில் (ஒரு யாத்ரா மொழி) இந்தப் பாடலின் இன்னொரு வடிவம் இளையராஜா பாடியது https://www.youtube.com/watch?v=EuTjfjz6w58 வி.குமார் உனக்கென்ன குறைச்சல் (வெள்ளி விழா) https://www.youtube.com/watch?v=iffttiDJcgU கங்கை அமரன் சொந்தங்களே (இனி ஒரு சுதந்திரம்) – படத்தில் இல்லாமல் இசைத்தட்டில் மட்டுமே வந்தது ஓடம் எங்கே போகுது https://www.youtube.com/watch?v=qC4S-qmpevM சந்திரபோஸ் எந்த வழி போவது (குற்றவாளி) தேவா கதிரவனை முத்தமிட்டு கடல் மேலே வித்தை செய்து (வைதேகி வந்தாச்சு) https://www.youtube.com/watch?v=phXwoHDtT1Y

எஸ்.வி.ரமணன்

ஆண்டவனே உன்னை வந்து ( உருவங்கள் மாறலாம்)

ஏ.ஆர்.ரஹ்மான் மழைத்துளி மழைத்துளி (சங்கமம்)
ஏ.ஆர்.ரஹ்மான் மழைத்துளி மழைத்துளி
https://www.youtube.com/watch?v=lesOmdCp58Y ஆலாகண்டா (சங்கமம்) https://www.youtube.com/watch?v=rqSY80StSAM விடை கொடு எங்கள் நாடே (கன்னத்தில் முத்தமிட்டால்) https://www.youtube.com/watch?v=yDdFgmu_EKU ஜி.வி.பிரகாஷ்குமார் மேகமே ஓ மேகமே ( மதராசப்பட்டணம்) https://www.youtube.com/watch?v=IPTYA7owOlM பரத்வாஜ் மெட்டுத் தேடித் தவிக்குது (காதல் மன்னன்) இந்தப் பாடலை முதலில் இசையமைத்தது மெல்லிசை மன்னர் என்றே குறிப்பிடப்பட்டிருந்தது ஆனால் வெளிவரும் போது பரத்வாஜ் ஆகியது. https://www.youtube.com/watch?v=r7aa49PCy9o எஸ்.பி.பாலசுப்ரமணியம் ( உன்னைச் சரணடைந்தேன்) எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா & எஸ்.பி.பாலசுப்ரமணிம் பாடியது. https://www.youtube.com/watch?v=lq9LVjnqxdI

கானா பிரபா

Saturday, June 19, 2021

ஏ.எல்.ராகவன் எங்கிருந்தாலும் வாழ்க


“இவரின் கலைச்சேவையை மெச்சி ஒரு பாராட்டு விழாவை வைக்கணும்னு நானும் ராஜாவும் பேசிட்டிட்டிருந்தோம்.

ஆனால் அந்தப் பாக்கியம் நமக்குக் கிட்டல”

என்று வருந்தி அஞ்சலி பகிர்ந்தார் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் இதே நாள் (ஜீன் 19) கடந்த ஆண்டு கொடு நோய் கொரோனா நோய்த்தொற்று காரணமாக நம்மை விட்டு மறைந்த பாடகர் ஏ.எல்.ராகவன் அவர்களது மறைவில்.

தமிழ்த் திரையிசையில் மென் குரல் பாடகர் யுகத்தில் தனி முத்திரை பதித்தவர் ஏ.எல்.ராகவன் அவர்கள்.

பாடகராக அறிமுகமானதே ஒரு பெண் குரலாக, விஜயகுமாரி என்ற படத்தின் வழியாக. அந்தக் கணக்கில் பாடகராக 50 ஆண்டுகள் போன 2020 ஆம் ஆண்டோடு. தவிர நடிகராகவும் அதற்கு முன்பிருந்தே இயங்கியவர். ஏ.எல்.ராகவன் & எம்.என்.ராஜம் கலைத்துறை தாண்டி, வாழ்க்கையிலும் இணை பிரியா ஜோடியராக முன்னுதாரணமாக விளங்கியவர்கள்.

இவர்கள் இருவரதும் கலகல பேச்சையெல்லாம் விரும்பி ரசித்துப் பார்ப்பேன்

https://www.youtube.com/watch?v=1yhz95Dhh-8

நம் காலத்து நாயகர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம், கே.ஜே.ஜேசுதாஸ், மலேசியா தேவன் தாண்டி, அந்தக் காலத்துப் பாடகர்களை அறிமுகப்படுத்திய விதத்தில் றேடியோ சிலோன் வழியாகவும், நம்முன்னோர் தம் முதுசம் போலப் பாடிப் பாடி நமக்குக் கடத்திய வகையிலும் ஏ.எல்.ராகவன் அறிமுகமானர் அப்போது.

“பாப்பா பாப்பா கதை கேளு”

https://www.youtube.com/watch?v=-S2OmlIoLvo

ஏ.எல்.ராகவனை குழந்தைகளுக்கான கனவினான பாடகராகவும்,

“அன்று ஊமைப்பெண்ணெல்லோ” https://www.youtube.com/watch?v=fE5qtx2PbU4 பாடும் போது அச்சொட்டாக ஜெமினியாக மாறி விடுவார். 

“எங்கிருந்தாலும் வாழ்க” https://www.youtube.com/watch?v=b2vDDWSAJjI வில் கல்யாண் குமாரின் மனச்சாட்சியாகவும் கூடு விட்டுக் கூடு பாய்வார்.

“காதல் யாத்திரைக்குப் பிருந்தாவனமும் கர்ப்பகச் சோலையும் ஏனோ”

https://www.youtube.com/watch?v=tdHbvt-Dn2g

என்று தெம்மாங்குப் பாட்டெடுப்பார், 


“அங்கமுத்து தங்கமுத்து தண்ணிக்குப் போனாளாம்”


https://www.youtube.com/watch?v=bz-FKcZwFUY


என்று துள்ளிசைப்பார்.


எத்தனை, எத்தனை விதவிதமான பாடல் பரிமாணங்கள் எல்லாவற்றிலும் ஒரு சுற்றுச் சுற்றிக் காட்டினார் ஏ.எல்.ராகவன்.


தமிழ்த் திரையிசையில் புதுமையாக “கண்ணில் தெரியும் கதைகள்” படத்தில் கே.வி.மகாதேவன், ஜி.கே.வெங்கடேஷ், சங்கர் – கணேஷ், இளையராஜா, அகத்தியர் என்று ஐந்து இசையமைப்பாளர் கூட்டை வைத்துப் படமெடுத்துப் புதுமை பண்ணியவர்.

இளையராஜா காலத்திலும் “ஒரு கோடிப் பொய்யை” என்ற பாடலை ஓடி விளையாடு தாத்தா படத்தில் இளையராஜா, எல்.ஆர்.அஞ்சலி, மலேசியா வாசுதேவன் ஆகியோரோடு இணைந்து பாடியவர்,

புதிய அடிமைகள் படத்திலும் ராஜா இசையில் “மானம் கருத்ததடி மேகம் தண்ணி மேகம்” https://www.youtube.com/watch?v=acSsYBKncwI என்று பாடியளித்திருக்கின்றார்.


ஏ.எல்.ராகவனின் பாடல் பொதிகள்


https://www.youtube.com/watch?v=x2YxxxH3elc


https://www.youtube.com/watch?v=eaKF2bLdAcA


எங்கிருந்தாலும் வாழ்க

உன் இதயம் அமைதியில் வாழ்க


கானா பிரபா



Thursday, June 17, 2021

யாகவா பிலிம்ஸ் வழங்கும் 🎬



ஆரம்பத்தில் பிரபலமாகப் பேசப்பட்டவர் யாகவா முனிவர். பறவைகளின் மொழி தனக்குத் தெரியும் என்றெல்லாம் பரபரப்பூட்டினார். ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் எல்லாம் அவரைச் சந்திக்கும் அளவுக்கு அப்போதிருந்தார். யாகவா முனிவரின் வாழ்க்கையை சிவாஜிகணேசன், மனோரமா முதன்முறையாக ஜோடி சேர்ந்து "ஞான பறவை" என்று வியட்நாம் வீடு சுந்தரம் இயக்க வெளிவந்திருந்தது அப்போது.
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசை.

அந்தக் காலத்தில் யாகவா முனிவருக்கும், சிவசங்கர் பாபாவுக்கும் இடையில் நடந்த சந்திப்பு மோதலாகிப் பரபரப்பானது. பின்னர் இந்தச் சம்பவத்தை விவேக் இதை நகைச்சுவைக் காட்சியாக, தான் யாகவா முனிவர் போலவும், மயில்சாமி சிவசங்கர் பாபா போலவும் அமைத்திருப்பார்.

யாகவா பிலிம்ஸ் என்ற பெயரிலேயே அப்போது யாகா முனிவரின் மானேஜராக இருந்த தனபாலன் என்பவர் ஞானப்பறவை, செவத்தப் பொண்ணு, தங்க மனசுக்காரன், மணிக்குயில் படங்களைத் தயாரித்திருந்தார்.
இளையராஜா இசையமைத்த தங்க மனசுக்காரன், மணிக்குயில் படங்களுக்கு ராஜவர்மன் என்ற இயக்குநரே இயக்கினார். இதே காலத்தில் ஏஜிஎஸ் தயாரித்த தங்கக் கிளி படத்துக்கு ராஜா இசையிலும் அதே முரளி நாயகன், இயக்கம் ராஜவர்மன்.
பின்னாளில் தன் பணத்தை தனபாலன் சுருட்டிவிட்டார் என்ற யாகவா முனிவரின் சாபத்துக்கு ஆளார்.

தண்ணீரிலே முகம் பார்க்கும் ஆகாயமே
நல்ல பன்னீரிலே நீராடும் பூந்தோட்டமே
இன்னார்க்கு இன்னார் தான் சாமி சொன்னதம்மா
கல்யாணம் வைபோகம் தன்னால் ஆகுமம்மா
இனி உன்னை விட்டு நான் வாழ ஆகாதம்மா

மணிக்குயில் படத்தில் உமா ரமணன், மனோ பாடிய அந்தப் பாடலுக்கு இன்று வரை நான் அடிமை.


யாகவா பிலிம்ஸ் வழங்கிய மணிக்குயில் பாடல்கள் இளையராஜா இசை வழங்க


யாகவா பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்த படங்களில் ஒன்றே இந்த "தங்க மனசுக்காரன்". இசைஞானி இளையராஜா நாயகன் முரளிக்காகப் போட்டுக் கொடுத்த மெட்டுக்கள் ஒரு படி மேலாக விசேஷமாகத் தோன்றும். இந்தப் படத்திலும் எதை எடுப்பது எதை விடுவது என்ற அளவுக்கு எல்லாப்பாடல்களும் அட்டகாசமாக இருக்கும். மனோ மட்டும் தனித்து ஆண்பாடகராகவும், பெண்பாடகிகள் எஸ்.ஜானகி, மின்மினி, சசிரேகா ஆகியோர் கூட்டுச் சேர்ந்த பாடல்களை பிறைசூடன், காமகோடியன், கங்கை அமரன் எழுதியிருந்தார்கள்.

"மணிக்குயில் இசைக்குதடி மனமதில் மயங்குதடி" பாடல் சந்தோஷம், சோக இசையில் இரண்டாகியும், தீயை மிதிப்போம் என்ற பக்தி மணம் கமிழும் பாடலும், கரகாட்டக்காரனில் எஸ்பிபி பாடும் தனித்துப் பாடும் "மாங்குயிலே பூங்குயிலே" பாட்டின் ரிதத்தை உள்வாங்கிப் போட்டது போல அதே மேள அடியுடன் "பாட்டுக்குள்ளே பாட்டு உண்டு" என்றதொரு அட்டகாசமான ஜோடிப்பாடலோடு இன்னொரு ஜோடிப் பாடலாக வருவது இங்கு நான் பகிரும் "பூத்தது பூந்தோப்பு" பாடல்.


தங்கமனசுக்காரன் படத்தில் கங்கை அமரன் கொடுத்த ஒரேயொரு முத்து இந்த "பூத்தத்து பூந்தோப்பு" பாடல். பாடலை மேலோட்டமாகக் கேட்கும் போது பெரிதாக ஏதும் இல்லாதது போலத் தெரியும் ஆனால் மீண்டும் மீண்டும் கேட்கும் போது இளையராஜா இந்தப் பாடலுக்குக் கொடுத்திருக்கும் அசாதாரணமான மெட்டின் அருமை துலங்கும். "தம்தன நம்தன தாளம் வரும்" "தீம்தன தீம்தன" (பூமாலையே தோள் சேரவா பாடலில் வருவது) போன்றே இந்தப் பாடலிலும் கோரஸ் குரல்கள் கொடுக்கும் "தானத்தம் தீனத்தந்தம்" என்று வரும் சங்கதியைப் பார்க்கும் போது அண்ணனுக்குப் பாடல் எழுதும் போதெல்லாம் கங்கை அமரன் இம்மாதிரி அலங்காரங்களை மேலதிகமாக உரிமையெடுத்துச் சேர்த்து அழகு பார்த்திருப்பாரோ என எண்ணத் தோன்றும்.
கங்கை அமரன் எழுதிய பாடல்களைக் கேட்கும் போது அவரின் இலக்கணமும் ஓரளவு பிடிபடும்.
தங்க மனசுக்காரன் பாடல்கள் வந்த போது பாடல்களைக் கேட்காமலேயே அப்போது எம் ஊரில் இருந்த ரெக்கார்டிங் பார் இன் பதிவேட்டில் புதிதாக இளையராஜாவின் இசையில் வந்த படம் என்ற நம்பிக்கையில் அப்போது ஒலிப்பதிவு செய்து மின்சாரம் இல்லாத காலத்தில் சைக்கிள் டைனமோ வழியாக மின்சாரத்தைப் பிறப்பித்து ஆசை தீர வியர்வை சிந்திக் கேட்டது 🙂
தன்னை நம்பி வந்த தயாரிப்பாளர் பெரிசோ சிறுசோ யாருக்கும் வஞ்சகம் இல்லாது அள்ளிக் கொடுத்த இம்மாதிரிப் படங்கள் ஏராளம், அந்த நம்பிக்கை தான் என் போன்ற ரசிகனும் கண்ணை மூடிக்கொண்டு ராஜாவின் இசை என்ற ஒரே காரணத்துக்காக பதிவு பண்ணிக் கேட்க வைத்தது.

தங்க மனசுக்காரன் பாடல்கள்

கானா பிரபா

Wednesday, June 16, 2021

மோகக் குரலோன் கிருஷ்ணச் சந்திரன் ❤️



பார்வையாலே நூறு பேச்சு
வார்த்தை இங்கு மூர்ச்சையாச்சு..
போதும் போதும் காம தேவனே
மூச்சு வாங்குதே ரெண்டு ஜீவனே.......

ஏதோ மோகம்.... ஏதோ தாகம்.....


மறக்க முடியுமா இந்தப் பாட்டை, நினைக்குந்தோறும் இந்த இடை வரிகளை மனசுக்குள் நீட்சியாகக் கிடத்திப் பாடுவதில் இருக்கும் சுகமிருக்கிறதே அடடா...

நேற்று மலேசியா வாசுதேவன் அவர்களது பிறந்த நாள், இன்று கிருஷ்ணச்சந்திரன் அவர்களின் 61 வது பிறந்த நாள்.

“பூவே இளைய பூவே” முன்னவருக்கு
“ஏதோ மோகம் ஏதோ தாகம்” பின்னவருக்கு
இரண்டுமே கோழி கூவுது படத்தின் முத்தாய்ப்பாய் அடுக்கடுக்காய் அமைந்த பாடல்கள் போலே இவ்விருவர் பிறந்த நாளும் அடுக்கடுக்காய்.

பாடகர் கிருஷ்ணசந்திரன் தமிழ்க் “குயிலாகக்” கூவியது கோழி கூவுது படத்தின் வழியாகத் தான்.
இந்த வாய்ப்பு எட்டியது மலையாளத்தின் மகோன்னத இயக்குநராகக் கொள்ளப்படும் மோகன் அவர்களோடு இசைஞானி இளையராஜா கூட்டுச் சேர்ந்த போது. அந்தச் சமயம் இருவர் கூட்டிலும் ஆலோலம் என்ற படம் வெளிவந்தது.
ஒரு கொசுறுச் செய்தி, இந்தப் படத்தில் எஸ்.ஜானகி பாடிய “வீணே வீணே” https://www.youtube.com/watch?v=IPvj_gOPbYY பாடல் தான் பின்னாளில் விஜயகாந்த் நடிப்பில் ஆர்.சுந்தரராஜன் இயக்கிய “தழுவாத கைகள்” படத்தின் “ஒண்ணா ரெண்டா தாமரைப்பூ” பாடலின் பல்லவியைத் தழுவியது.

சரி மீண்டும் கிருஷ்ணச்சந்திரனுக்கு வருவோம். இயக்குநர் மோகனிடம், புதுப் பாட்டுக் குரலை அறிமுகப்படுத்த இளையராஜா வேண்ட, அவர் கைகாட்டியது கிருஷ்ணச்சந்திரனை.
ராஜாவிடம் ஒரு பாசுரத்தைப் பாடிக் காட்டிய கிருஷ்ணச்சந்திரனுக்கு
கோழி கூவுது படத்தில்
“ஏதோ மோகம் ஏதோ தாகம்”


எஸ்.ஜானகியோடு பாடும் வாய்ப்பாகப் பூத்தது.

அது மட்டுமா

அதே படத்தில் இராமலிங்க அடிகளாரின் “ஒருமையுடன் நினது திருவடி”, சிவகாம சுந்தரி எழுதிய ““எங்கும் நிறைந்தொளிரும் ஓர் இறையே” ஆகிய ஆன்மிகப் பாடல்களையும் அதே படத்தில் இவரைப் பாட வைத்து அழகு பார்த்தார் இளையராஜா.
பின்னர் வந்த கொக்கரக்கோ படத்தில் சிவகாம சுந்தரி வரிகள் அளித்த “ஆனந்தமா விழி அன்னமே” (கண் பாரும் தேவி” https://www.youtube.com/watch?v=EKD_DRDtBUw பாடலை இசைஞானியே பாடியிருந்தாலும் அது கூட கிருஷ்ணச்சந்திரனுக்குக் கொடுத்திருந்தாலும் தகும்.

“அள்ளி வச்ச மல்லிகையே
புள்ளி வச்ச பொன் மயிலே”


இந்தப் பாடலைக் கேட்கும் தோறும் அந்தக் காலத்தத் தூரதர்ஷன் வெள்ளிக்கிழமை ஒலியும் ஒளியும் தான் ஞாபகத்தில் வரும். அந்தக் காலத்தில் என் அண்ணன் வீடியோ டெக் வழியாக இந்தப் பாடலைப் பதிவு செய்து போட்டுக் காட்டியதெல்லாம் பசுமை நிறைந்த நினைவுகள். எஸ்.ஜானகியைத் தொடர்ந்து இசையரசி பி.சுசீலாவோடும் கூட்டு.

இசைஞானி இளையராஜாவுக்கு கேரள நன் நாட்டின் நாசிக் குரல்களில் ஒரு ஈர்ப்பு. ஜேசுதாஸ், ஜெயச்சந்திரன், ஜென்ஸி, சுஜாதா, விஜய் (உன்னி மேனன்), சுனந்தா, ஜாலி ஏப்ரஹாம் போன்றே ஒரு குறிப்பிட்ட காலத்தில் அள்ளிக் கொடுத்து அழகு பார்த்தார். அப்படியாகத் தான் கிருஷ்ணசந்திரனுக்கும் 1982 தொடங்கி 1986 வரையான காலப்பகுதியில் அவ்வப்போது தனித்த நல் முத்துகளும், கூட்டாகக் கோஷ்டி கானங்களும் கிட்டின.

அந்தக் காலத்து “றேடியோ சிலோன்” இவர் பெயரை “கிருஷ்ணசந்தர்” என்று அழகாக அழைத்துப் பாடல்களை ஒலிபரப்பும்.

ஊரெங்கும் மழையாச்சு
தாளாத குளிராச்சு
ராக்காலம் ஈரமாச்சு
கனி கொண்ட கிளையுண்டு
கிளையோடு கிளி உண்டு
பசியாற நேரமாச்சு....

இசைஞானியே அனுபல்லவி பாட,

“பூ வாடைக்காற்று வந்து ஆடை தீண்டுமே”

“பாதை தடுமாறும் இது போதை மழையாகும்
முந்தானை வாசம் ஏதோ சுகம்”

அந்த ஜலதோஷ நாசிக் குரலில் ஒரு ஈர்ப்பு, கிருஷ்ணசந்திரன் குரலுக்கு அருகே எஸ்.என்.சுரேந்தர் குரல் முள்ளு இருக்குமாற் போல.

“தென்றல் என்னை முத்தமிட்டது
இதழில் இனிக்க இதயம் கொதிக்க
எல்லோரும் பார்க்க....”



பி.எஸ்.சசிரேகாவுக்கும், கிருஷ்ணசந்தருக்கும் ஒத்த அலைவரிசைக் குரல்கள் என்று மெய்ப்பித்துக் காட்டிய பாட்டு ஶ்ரீதரின் “ஒரு ஓடை நதியாகிறது” படத்தின் வழியாக இதயத்தை முத்தமிட்டது.


புகழ் பூத்த மலையாள இயக்குநர் பரதனின் ரதி நிர்வேதம் என்ற திரைப்படத்தின் வழியாக கேரளத்தில் பரவலாக அறியப்பட்டவர் நடிகர், நடிகை வனிதாவின் கணவர் இவர்.
Maniyan Pilla Adhava Maniyan Pilla என்ற படத்தில் தேவராஜன் மாஸ்டர் இசையில் பாடகராக அறிமுகமாகியவர்.


மலையாளத்திலும் சம காலத்தில் (1982) ஆ ராத்திரி படத்தின் வழியாக “மாரோல்சவம் ஈ ராத்ரியி” https://www.youtube.com/watch?v=CjMsB3j5OEA பாடலில் ஜெயச்சந்திரன், கல்யாணம் ஆகியோரோடு கூட்டுச் சேர்ந்து பாடி அறிமுகமாகிறார் இசைஞானியார் இசையில்.

தன்னை இசைஞானிக்கு அறிமுகப்படுத்திய இயக்குநர் மோகன் இயக்கிய மங்களம் நேருன்னு படம் கிருஷ்ணசந்திரனுக்குக் காலத்தால் அழியாத கேரளத்தவர் நேசிக்கும் “அல்லியிளம் பூவோ” https://www.youtube.com/watch?v=2QfzdT5hGdc பாடலை இளையராஜா வழி கொடுத்தது.

தன் தாய்வீட்டுப் பாடல்களாக அவருக்கு இசைஞானி இளையராஜா வழி வந்தவை சொற்பமே. அவ்விதம்
“பா பா பா நிஷா மனோகரி” https://www.youtube.com/watch?v=mXmPsWfQTQc என்ற இன்னொரு துள்ளிசைப் பாடலை கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்.ஜானகி கூட்டுச் சேரப் பாடினார் பின்னிலவு படத்துக்காக. அற்புதமான பாட்டு அது.

பின்னிலவு போல மம்மூட்டி, மோகன்லால் சேர்ந்த ஒண்ணாணு நம்மள் படத்திலும் கிருஷ்ணசந்தருக்கு “குப்பினிப் பட்டாளம்” https://www.youtube.com/watch?v=eUgpUk6Zn9E கிட்டியது.

எஸ்.ஜானகியுடன் “மஞ்சும் குளிரும்” (Sandhyakku Virinja Poovu)

என்றும் பாடினார்.

நீண்ட இடைவெளிக்குப் பின் தொண்ணூறுகளில் மீண்டும் இளையராஜா வழி வந்த மலையாள வாய்ப்பு ஜாக்பாட் (1993) படத்தில் சித்ராவோடு பாடிய “முங்கி முங்கி” https://www.youtube.com/watch?v=gz8LuIcuPZk பாடலோடு,
மலையாள “ப்ரெண்ட்ஸ்” படத்தில் எம்.ஜி.ஶ்ரீகுமார், சந்திரசேகருடன்

“புலரிக்கிண்ணம் பொன்னில் முக்கியதாராணோ”


என்ற பாடலைக் கொடுத்தார் 1999 இல்.

இசைஞானி இளையராஜா இசையில் கிருஷ்ணச்சந்தர் என்ற கிருஷ்ணசந்திரன்
தனிப்பாடல்களாக,
கேளாதோ காதல் நெஞ்சின் ஓசை (மெல்லப் பேசுங்கள்) https://youtu.be/Q3VPsnoBtmk

புடிச்சாலும் புடிச்சேன் (கோபுரங்கள் சாய்வதில்லை)
ஜோடிப் பாடல்கள் வரிசையில்

எஸ்.பி.சைலஜாவுடன்
ராஜா ராணி ராஜ்ஜியம் (அந்த சில நாட்கள்)

இதுவரையில் முதல் இரவு (தூரத்துப் பச்சை)

சித்ராவுடன்

ஆகா சிலுக்குத் தாவணி (கரிமேடு கருவாயன்)


எஸ்.ஜானகியுடன்

தேனில் வடித்த சிலையே ( குவா குவா வாத்துகள்)

தசரதனின் திருமகனை (மலேசியா வாசுதேவனும் இணைந்து தேவி ஶ்ரீதேவி படத்துக்காக)

வான் சிவந்தது (அன்பின் முகவரி)

ஆனந்தமாலை தோள் சேரும் வேளை (தூரத்துப் பச்சை)

என்ற அதியற்புதமான பாடலையும் பாடியளித்தார்.

இளையராஜா தன்னுடைய கோஷ்டி கானங்களில் கிருஷ்ணசந்திரனையும் ஒருவராக்கி

ஆசையின்னா ஆசை அம்மா சுட்ட தோசை ( முடிவல்ல ஆரம்பம்) பாடலில் கங்கை அமரன், ரமேஷ், தீபன் சக்ரவர்த்தியோடும்,

தேவி ஶ்ரீதேவி படத்தில் எஸ்.என்.சுரேந்தர், மலேசியா வாசுதேவனுடன் “ஜாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளையே”, அதே படத்தில் மலேசியா வாசுதேவன், தீபன் சக்ரவர்த்தியுடன் “படிப்போம் கிடிப்போம்” பாடலையும்,

அலை ஓசை படத்தில் “பார்க்கிறதும் முறைக்கிறதும்”
என்ற பாடலை சாய்பாபா, மலேசியா வாசுதேவனுடனும்,

கன்னி ராசி படத்தின் “சோறுன்னா சட்டி தின்போம்” பாடலை இளையராஜா, தீபன் சக்ரவர்த்தியுடனும்,

படிக்காத பண்ணையார் படத்தில் மலேசியா வாசுதேவன், தீபன் சக்ரவர்த்தியுடன்
“சவாரி காரு சவாரி” https://www.youtube.com/watch?v=cRt7-WK2ezI என்ற அட்டகாஷ் பாடலையும் பாடிச் சிறப்பித்தார்.

தாமரைப் பூவுக்கும் தண்ணிக்கும்
என்னைக்கும் சண்டையே வந்ததில்ல
மாமன அள்ளி நீ தாவணி போட்டுக்க
மச்சினி யாரும் இல்ல


தொண்ணூறுகளில் கிருஷ்ணசந்திரனை அதி உச்சத்தில் கொண்டு போன அந்தப் பாடலை, சுஜாதாவோடு ஜோடி கட்டி அழகு பார்த்தார் வித்யாசாகர்.

ஆனால் சத்தமில்லாமல் இசையமைப்பாளர் சிற்பி கூட “மானா மதுர குண்டு மல்லியே https://www.youtube.com/watch?v=mdG24QZuKu8
என்ற வேக நடைப் பாடலில் கிருஷ்ணசந்திரன், ஸ்வர்ணலதாவை இணைத்து ஹிட் அடித்தார். அந்தக் காலத்தில் தலையில் சுமந்து கொண்டாடிய பாடல் இப்போது கேட்டாலும் துள்ளிசை போடும் மனசு.

பூச்சூடவா படத்திலும் சிற்பி அவர்கள் “சிலு சிலு காத்தில் சந்தோஷம்” பாடலில் மனோ, ஃபெபி மணி, சித்ராவோடு கிருஷ்ணசந்தரையும் பாட வைத்து அழகு பார்த்தார்.

அந்தக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து வானொலி திருப்பி சென்னை வானொலி வழியே கேட்டு ரசித்துத் திளைத்த பாட்டு
“ஒரு மல்லிகைப் பந்தலும் மெல்லிய தென்றலும் மந்திரம் பாடியது (மாங்கல்யம் தந்துனானே)


அகத்தியன் இயக்கிய அந்தப் படம் தோல்வியைத் தழுவினாலும் தேனிசைத் தென்றல் தேவா இசையில் கிருஷ்ணசந்திரன், சித்ரா பாடும் இந்தப் பாடல் எல்லாம் என் தர வரிசையில் உச்சமாகப் போற்றுபவை.

ஒரு படத்தின் முகப்பு எழுத்தோட்டத்தில் பொதியும் பாடலை ஊன்றிக் கவனிப்பேன். அவ்விதம் என்னை நெகிழ வைத்த பாடல்களில் ஒன்று தேனிசைத் தென்றல் தேவா இசையில்
“ஆத்தா உன் கோயிலிலே” படத்தில் வரும் பாட்டு, பாடகர் கிருஷ்ணசந்திரனின் இந்தப் பிறந்த நாள் பதிவின் முத்தாய்ப்பாய் நான் கொடுக்க விரும்புவதும் அதுவே.

காதல் கிளிகளே
எங்கள் கல்யாணக் குயில்களே
காலங்கள் தோறும்
காதலின் ராகம் பாடு
நீயும் பாடு
பாடு சொல்லிப் பாடு....



கானா பிரபா