Pages

Wednesday, June 2, 2021

நம் ஊனில் உறைந்திருக்கும் இளையராஜா என்றதொரு இசை இயக்கம்


"சொர்க்கமே என்றாலும்....

அது நம்மூரைப் போல வருமா...."

இந்த ஆண்டோடு 21 வது ஆண்டில் தொடரும் என் வானொலி நிகழ்ச்சியின் முகப்புப் பாடலாய்த் தேங்கியிருக்கிறது இந்தப் பாட்டு.

“அட உங்கட ஆள் பாட்டுப் போகுது”

சிட்னியில் தெரிந்தவர் உணவகத்திலோ, மளிகைக் கடையிலோ நான் கால் வைக்கும் போது அங்கு ஏதும் இளையராஜா பாடல் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தால் கடைக்காரர் இப்படித் தான் விளிப்பார்.

மெல்பர்னில் ராஜாவின் இசைக் கச்சேரி முடிந்த கையோடு பத்திரப்படுத்தியிருந்த இளையராஜாவின் கையொப்பமிட்ட படத்தை எனக்காக எடுத்து வைத்து அனுப்புகிறார் நண்பர் துஷி. (அந்தப் படம் தான் இது)

“என்ன உங்கட ஆள் இப்படிச் சொல்லுகிறார்”

விஷமச் சீண்டல்களில் கூட “உங்கட ஆள்” 

என்று அடையாளப்படுத்துவது என் ராஜாவே.

இப்படியாக இளையராஜாவின் நிழல் படருகின்ற அவரின் ரசிகர்களில் ஒருவனாக,

45 ஆண்டு கால இசை இயக்கம் என் தொட்டிலிலிருந்து தொடரும் பந்தம்.

"இந்த மனுஷன் மட்டும் இல்லையென்றால் 

நான் எப்பவோ செத்துப் போயிருப்பேன்"

உணர்ச்சிப் பெருக்கோடு கை காட்டிச் சொல்கிறார் நண்பர், கேட்டுக் கொண்டே அவர் காட்டிய திசையைப் பார்க்கிறார் அருகே அமர்ந்திருந்த சகபாடி. அங்கே லண்டனில் நிறைந்த பெரும் அரங்கத்தின் மையத்தில் இசைக் கலைஞர்கள் புடைசூழ தன் ஆர்மோனியப் பெட்டியை அணைத்தபடி நிற்கிறார் இசைஞானி இளையராஜா.

இதை லண்டனில் இருக்கும் நண்பர்  என்னிடம் சொன்ன போது அதை அனுபவ பூர்வமாக உணர்ந்தேன் 8 வருடங்களுக்கு முன்னர் இசைஞானி இளையராஜா மெல்பர்னில் இசை நிகழ்ச்சி படைத்துக் கொண்டிருந்த போது. 

அந்த நேரம் எழுபதைத் தொட்ட இசைஞானியாரையே கண் வெட்டாமல் பார்த்துக் கொண்டும், சுழவும் நடக்கும் பாட்டுக் கச்சேரியில் அவ்வப்போது திசை திரும்பியும் அவரை ஒற்றியெடுக்கிறேன்.

நிகழ்ச்சி ஒத்திகையின் போதும், தொடர்ந்த நான்கரை மணி நேரம் கடந்த இசை நிகழ்ச்சியிலும் வாயில் ஒரு சொட்டுத் தண்ணீர் தானும் அருந்தாமல் ஆர்மோனியப் பெட்டியை ஒரு கையால் அணைத்தபடி நின்று கொண்டே இயங்கியது இன்னும் இன்னும் என்னை ஆச்சரியத்தை விதைக்கிறது, இந்த அசுர உழைப்புக்காரர் மேல்.

இசைஞானி இளையராஜாவின் இசையென்பது நம் வாழ்வின் அங்கம் ஆகிவிட்டது என்ற சம்பிரதாயபூர்வமான வார்த்தைகளோடு கடந்து போய் விட முடியாத பந்தம். அந்த "அங்கம்" என்பது அத்தியாயம் "அன்று" எம் ஊனோடும், உயிரோடும் பின்னிப் பிணைந்ததொரு அவயவம் ஆகவே கொள்ள முடிகிறது. எத்தனையோ லட்சோப லட்சம் பேரின் மனச்சுமைக்கு மருந்திட்ட இசை என்பது ஒருபக்கம், இன்னோர் பக்கம் இந்த இசை மேதையின் உழைப்பால் விளைந்த படைப்புகள் எத்தனை, எத்தனை ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று எவ்வளவு தூரம் தனித்து நின்றும், வித்தியாசம் கொண்டும் நிற்கும் பாங்கினைப் பார்க்கும் போது இது ஒரு சாதாரண மனிதனின் இசைச் சரித்திரம் அன்று, எப்போதோ அரிதாகப் பிறக்கும் ஒரு மேதைகளின் வரிசையில் வைக்க வேண்டிய உன்னதம் என்றே எண்ணி வியக்க முடிகின்றது.

அன்னக்கிளி தொடங்கி இந்த ஆண்டோடு 45 வருட இசைப் பயணத்தில் ஆயிரம் படங்களைக் கடந்து, தமிழில் மட்டும் எழுபதைக் கடந்த எண்ணிக்கையில் பாடலாசிரியர்கள், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என்று கணக்குப் பார்த்தால் நூறைத் தொடும் அந்தப் பாடலாசிரியர் கணக்கு. அது போலவே பாடகர்கள், இசைக்கலைஞர்கள் என்று இளையராஜாவின் இசைப் பட்டறையில் இயங்கிய படைப்பாளிகளை எண்ணிப் பார்த்தால் மலைப்பே விஞ்சுகிறது.

இந்தக் கணக்கில் சிவாஜி கணேசன் என்ற முந்திய யுகத்தின் உச்ச நாயகனில் இருந்து ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு, சத்தியராஜ், கார்த்திக், மோகன் என்று எண்பதுகளின் உச்ச நட்சத்திரங்களின் அதிகபட்சப் படங்கள் என்று எண்ணிக்கை போட்டால் அங்கேயும் இசையோடு இசைஞானி தான் நிற்கிறார். 

இது ஒருபுறமிருக்க அறிமுக இயக்குநர்கள், அறிமுக நாயகர்கள், முழு நீளப் பொழுது போக்குச் சித்திரங்கள், கலையம்சம் மிளிரும் படங்கள் என்று வகை தொகை இல்லாமல் எல்லாவற்றையும் பாரபட்சமின்றி உள்வாங்கி மகத்தான இசைப் படைப்புகளாக வெளிக் கொணர்ந்திருக்கிறார்.

ராமராஜனின், ராஜ்கிரணின் வெள்ளிவிழாப் படங்களுக்கு இசை கொடுத்த அதே கை தான் எழுத்தாளர் பூமணியின் கருவேலம் பூக்கள் படத்துக்கும் இசை கொடுத்திருக்கிறது. பாரதி, காமராஜ் என்று நிகழ் நாயகர்கள் வெள்ளித் திரையில் வந்த போது அங்கும் ராஜா இருந்தார். ஆனால் எந்தப் படைப்பிலும், படைப்பை மீறிய அதீதமான மேலாண்மை இருக்காது அந்தந்தப் படங்களில் இலட்சணங்களோடு பொருந்தியே பயணித்திருக்கிறது ராஜாவின் இசை.

இளையராஜா யுகத்துக்கு முன்னரும் பின்னரும் இப்பேர்ப்பட்டதொரு போக்கை அரிதாகவே பார்க்க முடியும், ஒரு உச்ச இசையமைப்பாளர் தனக்கு வாகான ஒரு நட்சத்திர இயக்குநர் படைப்பிலோ, நட்சத்திர நாயகன் படைப்பிலோ தன்னை நிறுத்திப் பழகுவது போல இசைஞானிக்கு இருக்கத் தெரியவில்லை.

இந்தப் போக்கை அவர் தமிழில் மட்டும் கையாண்டதில்லை, சிரஞ்சீவி, நாகார்ஜூனா, வெங்கடேஷ் என்று தெலுங்கிலும், ராஜ்குமார், சங்கர் நாக் என்று கன்னடத்திலும், மம்முட்டி, மோகன்லால் என்று மலையாளத்திலும், அமிதாப் பச்சனுக்கு ஹிந்தியிலும் என மனவோட்டத்தில் சட்டென்று உதிக்கும் உச்ச நட்சத்திரங்களின் படங்களில் இளையராஜா இசை இயங்கிய அதே வேளை சாகர சங்கமம், ஸ்வாதி முத்யம் என்று கே.விஸ்வநாத்திடமும், அடூர் கோபாலகிருஷ்ணனின் "நிழல் குத்து" விலும், பாலு மகேந்திராவின் "யாத்ரா" , பத்மராஜனின் "மூணாம் பக்கம்" என்றும் பிறமொழிக் கலைப்படைப்புகள் வழியே தோய்ந்திருக்கிறது. இவையெல்லாம் கிள்ளி எடுத்த உதாரணங்கள் தான். ஆழ ஆராய்ந்தால் இன்னும் சில கட்டுரைகள் தேறுமளவுக்கு ஆக்கம் நிறைந்த இன்னோரன்ன படைப்புகள் வழியே இளையராஜாவின் இசை இயக்கம் நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

தமிழ் சினிமாவின் செவ்வியல் படைப்புகளாக உச்சம் போற்றும் உதிரிப் பூக்கள், மூன்றாம் பிறை காலந்தொட்டு போன வருஷம் வந்த "மேற்குத் தொடர்ச்சி மலை" வரை இந்த உன்னதத் திரை இலக்கியங்களில் இளையராஜாவின் தேவை பேணப்பட்டிருக்கிறது. இளையராஜா என்ற மகா கலைஞனின் ஒவ்வொரு ஆண்டும் இம்மாதிரிச் சாதனைகளோடு நிரப்பப்பட்டிருக்கிறது. 

இற்றைக்கு இருபத்தைந்து வருடங்களுக்கு முந்திய தீபாவளிப் படங்கள், பொங்கல் வெளியீடுகள் என்று நட்சத்திரங்களது படங்கள் ஒரு சேர வெளியாகும் போது அங்கே பொதுவில் இருப்பது இளையராஜாவின் பங்களிப்பு. அதுவும் வெள்ளி விழா, நூறு நாள் படங்கள் என்று வசூலிலும் சேதாரம் வைக்காது அள்ளிக் கொடுத்தவை.

பாடல்களைப் பார்ப்பதற்காகவே திரையரங்கு செல்லும் மரபிருந்த காலத்தின் எல்லை இளையராஜாவோடு தான் நின்றது.

இப்போது நினைத்துப் பார்த்தால் ஒரு பிரமிப்பை எழுப்பக்கூடிய யுகத்தைக் கடந்து வந்திருக்கிறோம் என்பதைத் தற்காலச் சூழலோடு ஓப்பிட்டு வியக்க முடிகிறது. 

இதை single, single ஆகப் பாடல் வெளியிடும் இக்காலத்தில் மட்டுமல்ல இனி எக்காலத்திலும் நினைத்தே பார்க்க முடியாத சாதனை என்ற அளவிலேயே வைத்துப் போற்ற முடிகிறது. 

இம்மட்டுக்கும் இம்மாதிரித் தொகையாக வரும் படங்களின் பாங்குகளைப் பாருங்கள்.“மகாநதி”, "குணா" போன்ற துன்பியல் பின்புலத்தோடு நகரும் குடும்பச் சித்திரங்கள், “தளபதி”, "சத்ரியன்", "நாயகன்", அபூர்வ சகோதரர்கள்" என்று நட்சத்திர முத்திரை பதித்த படங்கள், "முதல் மரியாதை", "முந்தானை முடிச்சு" போன்ற குடும்பச் சித்திரங்கள் என்று இந்தப் படங்களை எடுத்துப் பார்த்தால் ஒவ்வொரு கதைக்களமும் ஒவ்வொரு நிறம். அந்த நிறத்தைத் தூக்கி நிறுத்துவது இசை என்ற ஆதார வேர் என்ற அளவுக்கு இசைஞானி இளையராஜாவின் இசை இயங்கியிருக்கிறது.


"என்னய்யா இங்கேயே நிக்கிறாய் ஷுட்டிங் போகலையா?"ன்னு கேட்கிறார் ராஜா.

"ஷீட்டிங் மட்டுமில்ல சார் டப்பிங்கும் முடிச்சிட்டேன்"னு சொன்னேன்

அப்படியான்னு ஆச்சரியப்பட்டு சரி இன்னிக்கே படத்தைப் போடுன்னாரு. 

சரின்னு அந்த நாள் ஈவினிங்கே படத்தைப் போட்டுக் காமிச்சேன். மறுநாள் காலை ஏழு மணியில இருந்து ஒன்பது மணிக்குள்ள அந்தப் படத்தில் வரும் அத்தனை ட்யூனையும் போட்டுட்டாரு.ஒன்பது மணிக்கு ரீரிக்கார்டிங் அதுக்கப்புறமா பாடல் பதிவும் பாடல் ஷூட்டிங்கும் இருந்துச்சு, இப்படித் தன் ஆண்பாவம் படத்தின் இசைக் கோப்பு அனுபவத்தை வானொலிப் பேட்டி வழியாகச் சொன்னார் பாண்டியராஜன்.

" இந்த ஒன்பது பாடல்களையும் காலை 6.45க்கு போட்டு start பண்ணினோம்;. எட்டு மணிக்கு வேற படத்தோட பணிகளை அவர் ஆரம்பிக்கணும். அங்க இசைக்கலைஞர்களுக்கு ஒன்பது மணிக்கு பணி ஆரம்பிக்கும். அதுக்கு முன்னாடி எனக்கு டியூன்ஸ் கரெக்ட் பண்ணிட்டு போகணும். இந்த ஒன்பது பாட்டும் குறைஞ்சபட்சம் ஒரு முக்கால் மணி நேரம் ஒரு மணிக்குள்ள கொடுத்திட்டு அவரு டிபன் சாப்பிட்டு வேலைக்கு போனாரு. இந்த உலகத்தை கலக்கிய இந்த ஒன்பது பாட்டுமே ஒரு முக்கால் மணி நேரத்தில தான் டியூன் செய்யப்பட்டதுன்னா மிகப் பெரிய என்னைப் பொறுத்தவரைக்கும் அது ஒரு உலக சாதனை தான்"

இப்படியாக செம்பருத்தி படத்தின் இசைக் கோப்பு அனுபவத்தை வானொலி வழியே பகிர்ந்தார் செல்வமணி. இது போலவே சின்னத்தம்பி பற்றி P.வாசு பேசிய போதும், கரகாட்டக்காரன் குறித்து கங்கை அமரன் சொன்ன போதும் வியப்பும், பெருமிதமுமாக இளையராஜாவின் அசுர வேக இசையமைப்பையும், அதன் வழி விளைந்த அற்புதமான மெட்டுகளையும் பற்றிப் பேசுகிறார்கள்.

இதையே மலையாளத் தொலைக்காட்சிப் பேட்டியில் பேட்டியாளர் கேட்கிறார், 


"ஒரு படத்தில் தேவைப்படும் பாடலை உடனேயே மெட்டமைத்து இசை கட்டி விடுகிறீர்களே? 

காட்சியின் சந்தர்ப்ப சூழலைப் பற்றிக் கலந்து பேசுவது அவசியமில்லையா?


அதற்கு இளையராஜா சொல்கிறார் இப்படி


"ஆலோசிக்கவே தேவையில்லை. 

பாடுற பாட்டுக்கு எதுக்கு ஆலோசனை?

காட்சிச் சூழலை எனக்குச் சொன்னதுமே அதுக்குப் பாடணும்,  


எந்த மெட்டும் அது சார்ந்த இசையும் வருகிறதோ அதுதான் பாட்டு. 

அது தானாக வரணும் நாமாக உருவாக்கக் கூடாது. 

நாமாக உருவாக்கினால் நம்முடைய அந்த நேரத்து மன வெளிப்பாடு அந்த இசைக் கோப்பில் பிரதிபலித்து விடும்"

என்று. 

ஒரு இயக்குநர் தான் கொணரும் கலைப்படைப்புக்கான உள்ளாந்த மனக்கிடக்கையை உய்த்துணர்ந்து அதை இசையால் பிரதிபலிப்பது, அல்லது அந்த இயக்குநருக்கே தோன்றாத கோணத்தில் அதைச் செய்து காட்டுவது என்பது இளையராஜா என்ற மேதையின் வழியே மட்டுமே சாத்தியப்பட்டிருக்கிறது.

ஒரு மனிதன் எப்படிச் சட்டுப் புட்டென்று தன் சுபாவத்தை மாற்றிக் கொண்டு நகர முடிகின்றது என்ற ஒரு யதார்த்த உலகின் வியப்பை, இளையராஜாவின் இசையிலும் எழுப்ப முடிகிறது. இந்தப் படங்களுக்கெல்லாம் இசையமைக்கும் போது ஒரு குறுகிய கால இடைவெளியில் மனுஷர் எப்படித் தன் இயல்பை நொடிகொரு தரம் மாற்றி இன்னொரு படைப்பில் இறங்கி வித்தியாசப்பட்டு நிற்கும் இசைக் கோவையைப் படைக்க முடிகிறது? இது சாதாரணர்களின் உலகில் நினைத்துப் பார்க்க முடியாதவொரு பண்பும், உழைப்பும்.

ஒரு இசையமைப்பாளர் அந்தப் படத்துக்கான நான்கைந்து பாடல்களைப் போட்டுக் கொடுத்து விட்டு, சம்பிரதாயத்துக்கு நாடக மேடையில் பின்னப்படும் பின்னணி இசை போலக் கலந்து விட்டால் போதும் என்ற மரபை உடைத்தவர் இளையராஜா. 

ஒரு படம் தொடங்கும் ஆதாரப் புள்ளியில் இருந்து அதன் அந்தம் வரை பின்னணி இசையைச் செதுக்கினார். அந்தப் படங்களை எல்லாம் அன்றைய காலத்து ரசிகர்கள் எவ்வளவு தூரம் உள்வாங்கி ரசித்தார்களோ என்னமோ ஆனால் இன்று நாயகன், தளபதி, ஆண்பாவம், மெளனராகம், இதயம், இதயத்தைத் திருடதே என்று அந்தக் காலம் தொட்டு நேற்று வந்த "ஓநாயும் ஆட்டுக் குட்டியும்" என்று தேடித் தேடி ரசிக்கிறார்கள் இளையராஜா கொடுத்த பின்னணி இசையை.

முதல் மரியாதையில் கொடுத்த பின்னணி இசையின் ஒவ்வொரு கூறுகளின் ஆழத்தை வியந்து பேசுகிறார் நடிகர் ராஜேஷ் என்றால், பாலியல் விடுதியில் வேலு நாயக்கர் தன் முன்னே கட்டில் சுகத்தைக் கொடுக்க வேண்டிய இக்கட்டில் நிற்கும்

பள்ளி மாணவிக்கும் அவருக்குமான உணர்ச்சிப் போராட்டத்தை வைத்துப் பாடம் நடத்துகிறார் பிரபல இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம்.  

ஆயிரங்கள் கடந்த பாடல்களைக் கேட்டுத் தீர்வதற்கே ஒரு ஆயுள் போதாத நிலையில் அந்தந்தப் படங்களிலே இசைஞானி இளையராஜா இழைத்த பின்னணி இசையை எடுத்து ஆராயப் போனால் வாழ்நாள் போதாது. அவ்வளவுக்கு தான் பணியாற்றிய ஒவ்வொரு படத்திலும் ஒரு இணை இயக்குனராக நின்று செயற்பட்டிருக்கிறார். இங்கேதான் இளையராஜாவுக்கும் மற்றைய இசையமைப்பாளர்களுக்குமான வேறுபாடு முன்வந்து நிற்கும். ஒரு படத்துக்கு இன்னென்ன ஒளிச்சேர்க்கை வேண்டும் என்றோ, உடை, அரங்க அமைப்பு, ஏன் பாடல்கள் வரை சுயமாகத் தீர்மானிக்கும் வல்லமை ஒரு தேர்ந்த இயக்குநருக்கு வாய்க்கலாம் ஆனால் அதையும் கடந்து ஒரு முழுப்படத்தின் எழுத்தோட்டத்தில் இருந்து முடிவுப்புள்ளி வரையான அசையும் பிம்பத்துக்கான ஓசையைப் பொருத்தி அந்த ஓசையால் உயிர்கொடுக்கும் பணி என்பதே ஒரு சராசரி இசையமைப்பாளனைத் தாண்டி இசைஞானியின் அதீத வல்லமையின் தாற்பரியத்தைக் காட்டும். நாட்கணக்காகத் திரைப் பிரதி எழுதி, எடுத்த படத்துக்கு ஒரு சில மணி நேரத்திலேயே தேவையான இசையால் அந்தப் படத்தின் நிறத்தையே மாற்றி இன்னும் பல படி உயர்த்திக் காட்டியிருக்கிறார் இளையராஜா. இதையே ஒரு இசைமேடையில் பிரபல ஹிந்தி இயக்குனர் பால்கி தன்னுடையை "பா" படத்தின் காட்சியை, பின்னணி இசைக்கு முன்பாகவும், இசைக்குப் பின்பாகவுமாகச் செய்துகாட்டி, "இளையராஜாவின் பின்னணி இசைத் துணுக்குகளை வைத்துக் கொண்டே இன்னும் ஏராளம் பாடல்களை இசையமைக்கலாம்" என்று சிலாகித்திருந்தார். ஒரு குறிப்பிட்ட படத்தின் ஓரிரு பாடல்களில் இழையோடும் ஆதார சங்கீதத்தை வைத்தே வெவ்வேறு வாத்தியங்களால் வாசித்துப் பின்னணி இசை கொடுக்கும் மாமூல் இசையமைப்பாளர்களை அதிகம் காணலாம். ஆனால் படத்தின் பாடல்களை முன்னிறுத்தாத இசையை எடுத்துக் கொண்டு அந்தப் படத்துக்கான ஆதார இசை (theme) ஆகக் காட்டியிருக்கிறார் ராஜா, இதெல்லாம் முப்பது வருஷங்களுக்கு முன்பே, ஒரு படத்தின் கலைநுட்பம் பற்றி ரசிகர்களுக்கு அவ்வளவு ஈடுபாடில்லாத சூழலில் செய்து காட்டியிருக்கிறார். இன்றும் நிறம் மாறாத பூக்கள், ஜானி, முள்ளும் மலரும் போன்ற படங்களை எடுத்துப் போட்டுப் பார்த்தீர்களானால் அந்தத்தப் படங்களுக்குப் பின்னால் செய்து காட்டிய பின்னணி இசையின் மகத்துவம் புரியும்.ஒரு குறிப்பிட்ட இசை மெட்டை வைத்து காதல், சோகம், நகைச்சுவை, ஊடல், அழுகை என்று விதவிதமாக வித்தியாசமான வாத்தியங்களில் வேறுபடுத்திக் காட்டுவதில் ராஜா ராஜா தான். இன்றைக்கு அந்தப் படங்களின் இசை மட்டுமே போதும் இன்ன காட்சியில் இந்த இடம் என்று விரல் நுனியில் தகவல் வைத்திருப்பான் இளையராஜாவின் பின்னணி இசையில் முக்குளித்த இசை ரசிகன். 

கைரளி மலையாளத் தொலைக்காட்சியில் வந்த "கந்தர்வ சங்கீதம்" என்ற இசை நிகழ்ச்சியில் பாடகி பின்னி கிருஷ்ணகுமார் கற்பூர முல்லை படம் பற்றிச் சிலாகிக்கும் போது,  இந்தப் படத்தை பாடகி பின்னி கிருஷ்ணகுமார் தொலைக்காட்சியில் பார்க்கும் போது அதில் வந்த முக்கிய பின்னணி இசையைக் கேட்டபோது இது என்ன ராகத்தின் வழிவந்தது என்று அவர் தேட, கிட்டியது "மாயா விநோதினி" என்ற ராகம், பிறகு தான் கண்டுணர்ந்தார் இந்தப் படத்தின் நாயகி அமலாவின் கதாபாத்திரத்தின் பெயரும் மாயா விநோதினி. பாருங்கள், எவ்வளவு நுணுக்கமாக இந்தப் படத்தின் கதாபாத்திரத்தை வைத்தே பின்னணி இசையைக் கொடுக்கவேண்டும் என்ற இசைஞானி இளையராஜாவின் உழைப்பு மெய்சிலிர்க்க வைத்தது.  

ஒரு "சிந்து பைரவி" படத்தில் ஜே.கே.பி என்ற சங்கீதக்காரனையும், முன்பையின் தாராவியில் நின்று காவல் தெய்வமாக இயங்கும் வேலு நாயக்கரையும் அடையாளப்படுத்தி நிறுத்தியது இளையராஜாவின் இசை,

இளையராஜா தன் முதன்முறையாக தன் பின்னணி இசையின் ஆழமான ஞானத்தை வெளிப்படுத்திய படம் "முள்ளும் மலரும்" என்கிறார் மகேந்திரன். தன் காலத்தைத் தாண்டிச் சிந்தித்துப் படைப்பாற்றல் பண்ணியவர்கள் காலம் கடந்துதான் இன்னும் அதிகம் பேசப்படுவார்கள். அதை இளையராஜாவின் இசையாற்றலுக்கும் பொருத்திப்பார்க்க முடியும்.

28 ஆண்டுகளுக்கு முன்னர் ஆனந்த விகடனின் மதன் கேள்வி பதில்களில் வாசகர் ஒருவர் இளையராஜாவுக்கு மாற்றீடு யார் என்று கேட்கிறார், அதற்கு மதன் சொன்ன பதில் இன்று 28 ஆண்டுகள் கழித்தும் மெய்த்தன்மையோடு உணர வைக்கிறது, ஆமாம்  "இளையராஜா அமர்ந்த சிம்மாசனத்தில் அவரைத் தவிர வேறு யாரும் அமரமுடியாது".

உன் பெயர் உச்சரிக்கும்…

உள்ளம் நித்தமும் தத்தளிக்கும்

இங்கு நீயில்லாது வாழ்வில் ஏது வேனிற்காலம் தான்

ஊரெல்லாம் உன் பாட்டுதான் உள்ளத்தை மீட்டுது


எம் ராஜாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

கானா பிரபா


0 comments: