Pages

Friday, June 4, 2021

எஸ்.பி.பாலசுப்ரமணியம் அணையா விளக்கு 75


எஸ்பிபியின் ஒளிப்படத்தைப் பாருங்கள். பளிச்சென்று மின்னல் வெட்டுமாற் போலொரு சிரிப்பு. அதைப் பார்த்தாலேயே உற்சாகம் தொற்றிக் கொள்ளும். அவரை நேரில் சந்தித்திராத பல்லாயிரம் ரசிகர்களுக்கு எப்படி இந்த ஒரே மாதிரியான உணர்வை, பக்கத்தில் நின்று தன் உணர்வைக் கடத்த முடிகின்றது என்ற ஆச்சரியத்துக்கு விடை காண முடிவதில்லை.

எஸ்பிபி ஒரு ஆகச்சிறந்த “உணர்வுக் கடத்தி”. 

அவரால் கண நேரத்தில் மகிழ்ச்சிப்படுத்தவும், துள்ளிக் குதூகலிக்கவும், துவண்டு போனவனின் முதுகைத் தடவவும் முடிகின்றது. இந்த மந்திரம் வெறும் குரல் வளம் மிகுந்தவராலோ அன்றிச் சங்கீத ஞானம் பொங்கி வழிபவராலோ கொடுக்க முடிவதில்லை அதையும் தாண்டியதொரு உணர்வோட்டம் பொருந்திய ஜீவன். 

அதனால் தான் அவர் பாடல்கள் போலே இயல்பான மனிதராக, சிரித்துக் கிண்டலடித்தும், கொட்டம் போட்டும் தன் கடைசிச் சொட்டு நிமிடம் வரை தன்னை வாழ வைத்தவர்களை நினைத்து நெகிழ்ந்துருகவும் முடிகின்றது. எல்லாவிதமான மனிதர்களாகவும் பாடல்களில் வாழ்ந்து விட்டவர் விட்டுச் சென்றது ஒன்றே தான்

அது “எஸ்பிபி என்றால் பரிபூரணம்”.

55 ஆண்டுகளாகப் இசையுலகில் மங்காது பாடும் நிலா என்று ஒளிர் விட்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் நித்தியனாக எம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

ஒரு பாடகர் என்ற எல்லை கடந்து சிறந்த மனித நேயராகவும், இசையார்வம் கொண்ட குஞ்சு குருமான்களுக்குக்குக் கூட அவர்களின் எல்லைக்குக் கீழிறங்கித் தோளில் கை போட்டு ஆலோசனை கொடுக்கும் நண்பனாகவும் திகழ்ந்த ஒரு அபூர்வப் பிறவி அவர். 

எம்ஜிஆர் - சிவாஜி

கமல் - ரஜினி

விஜய் - அஜித்

என்று திரையுலகின் மூன்று சகாப்தமும் கண்ட எங்கள் எஸ்பிபி தனது 25 வது வயதில் 43 வயது சிவாஜிக்குக் குரல் கொடுக்கிறார் முதன் முதலில், 22 வயது அஜித்துக்கு (அமராவதி) எஸ்பிபி முதன் முதலில் குரல் கொடுத்த போது 43 வயது.

தலைமுறை இடைவெளி காணா ஒரேயொரு பாடகர் தமிழ் திரையுலக வரலாற்றில் ஒரேயொருவராக எஸ்பிபி விளங்கி நிற்கிறார்.

1966 ஆம் ஆண்டு தொடங்கி கலைத்துறையில் மூன்று  தலைமுறைகளை கண்டவர், 

16 மொழிகளுக்கு மேல் பாடியவர், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளிலும் முதன்மை இலக்கப் பாடகராகத் தொடர்ந்து தன் இருப்பைத் தக்க வைத்த ஒரு ஆளுமை.

இளையராஜாவின் பாடல்கள் என்றால் அவர் இசையமைத்த நாலாயிரம் கடக்கும் பாடல்களில் சில நூறைத்தான் பரவலாகக் கொண்டாடிக்  கொண்டிருக்கிறார்கள். 

அது போலவே எஸ்பிபி பாடியதில் பிரபல இசையமைப்பாளர் தவிர்ந்த பாடல்கள் கொட்டிக் கிடக்கின்றன. அது என்னவெனில் புத்தம் புது இசையமைப்பாளர்களின் அடையாளத்தை நிறுவ எஸ்பிபி எவ்வளவு துணை நின்றிருக்கிறார் என்பதைக் காட்டி நிற்கும். இந்த இடத்தில் எஸ்பிபி பழமைக்கும் புதுமைக்கும் ஒரு பாலமாகவே விளங்குகிறார் என்றே நோக்கவேண்டும். 

இசைத்துறையில் ஐம்பது ஆண்டுகளைத் தொட்டவர் மூன்று தலைமுறைகளைக் கண்டவர். 

இம்மூன்றிலும் தன் ரசிகர் குழாத்தை வளைத்தும் போடும் குரல் வித்தகர்.

அதனால் தான் ரஹ்மான் வழியாக ஒரு புத்திசை இயக்கம் எழுந்த போது “காதல் ரோஜாவே”  இல் ஆரம்பித்து இன்று வரை தவிர்க்க முடியாத குரலாக இருந்திருக்கிறார். அது சூப்பர் ஸ்டார் ரஜினி கடந்து, வினீத், அப்பாஸ் என்றெல்லாம் ரஹ்மானோடு பயணப்பட்டு நீண்டிருக்கிறது, அதையும் கடந்து போயிருக்கிறது.

ரஹ்மானுக்கு முந்திய சகாப்தம் இசைஞானி இளையராஜா காலத்திலும் கூட இசையாலும், எண்ணற்ற பாடகர்களை உள்ளிளுத்த வகையாலும் எழுந்த மாற்றம் எஸ்பிபி கணக்கில் கை வைக்கவில்லை. இளையராஜாவின் இசையில் அதிகம் பாடி வைத்தவர் எஸ்பிபி தான்.

மாற்றம் என்பது சடுதியாக விளைவது அல்லது, அது மெல்ல மெல்ல விளைவிப்பது. ராஜாவின் ஆரம்ப காலத்தின் இசையோட்டங்கள், பாடகர் ஒழுங்கு என்பது மெல்ல மெல்ல மாறிய பாங்கு ஓருதாரணம். ஆனால் எல்லா மாற்றங்களிலும் எஸ்பிபி தன்னை நிலை நிறுத்தியிருக்கிறார். 

புதியதொரு இசையமைப்பாளர் இசைக்க வரும் போதும் கூட எஸ்பிபி முத்திரையோடு தன் பாடலை அடையாளப்படுத்தும் சூழல் இருந்திருக்கிறது. ஒரு இசையமைப்பாளர் தன்னை நிலை நிறுத்துவதற்கும், தன் பாடலை மிக இலகுவாகக் கடைக்கோடி ரசிகனிடம் கொண்டு சேர்ப்பதற்கும் இங்கே உறுதுணை எஸ்பிபியின் குரல்.

நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும், ஒவ்வொரு இசையமைப்பாளரின் பாணியும் ஒவ்வொரு தினுசாக இருக்கும். அந்தந்த இசைக் கலவைக்கு ஈடு கட்டி எப்படிப் பாம்புச்சட்டை போலத் தன்னை உருமாற்றுகிறார் இந்தப் பாடும் நிலா என்ற ஆச்சரியத்துக்கு விடை காண முடிவதில்லை.

ஏராளம் மாநில அரசு விருதுகள், விருதுகள் கலை அமைப்புகளின் விருதுகள் இவற்றோடு, இந்திய அரசின் மிக விருதான 2010 ஆம் ஆண்டுக்கான பத்மபூஷண் விருதும் இவரை வந்து சேர்ந்தது. பாடகர் என்பதைத் தவிர நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என்ற பன்முகம் கொண்டவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.

திரையிசைப் பாடல்களுக்காகத் தேசிய விருது என்ற ரீதியில் 1979 ஆம் ஆண்டில் கே.வி.மகாதேவன் இசையில் சங்கராபரணம் (தெலுங்கு), 1981 ஆம் ஆண்டில் லஷ்மிகாந்த் பியாரிலால் இசையில் ஏக் துஜே கேலியே (ஹிந்தி), 1983 ஆம் ஆண்டில் இளையராஜா இசையில் சாகர சங்கமம் (தெலுங்கு), 1988 ஆம் ஆண்டில் இசைஞானி இளையராஜா இசையில் ருத்ரவீணா (தெலுங்கு), 1995 ஆம் ஆண்டில் ஹம்சலேகா இசையில் சங்கீத சாகர ஞானயோகி பஞ்சாட்சர கவி (கன்னடம்), 1997 ஆம் ஆண்டில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் மின்சாரக்கனவு (தமிழ்) ஆகிய படங்களில் கிட்டிய வகையில் இங்கேயும் பன்முக மொழிகளில் தன் சாதனையை நிலை நிறுத்தியிருக்கின்றார்.

"எங்க அப்பா ரொம்பக் குறும்புக்காரர்

1979 ஆம் ஆண்டில் அவர் யூ எஸ் இல் இசை நிகழ்ச்சிக்குப் போன போது 

குடும்பத்தில் இருந்து நாங்க யாரும் அந்தப் பயணத்தில் இல்லை. 

யூ எஸ் போய் விட்டு வந்த அப்பாவின் சூட்கேசில் என்ன வாங்கிக் கொண்டு வந்திருக்கிறார் 

என்று அம்மா பார்க்க, 

அதற்குள் wine glasses மட்டும் இருந்தன.

"என்ன இது" 

என்று அம்மா விநோதமாகப் பார்த்துக் கொண்டே கேட்க

"இது அவ்வளவு சீக்கிரம் உடையாத glasses" 

என்று அப்பாவித்தனமாக எஸ்பிபி சொல்லவும் வீடே போர்க்களமானது என்று சரண் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். 

பக்கத்தில் இருந்த பல்லவியும் இதைக் கேட்டு ஆமோதித்தவாறே விழுந்து விழுந்து சிரித்தார்.


எஸ்பிபி அஞ்சலியில் பாடகர் பிறைசூடன் உட்படப் பலரும் சரணை

"இனி விளையாட்டுத்தனத்தை மூட்டை கட்டவும்"

என்று சொன்ன போது நிறைவுரை செய்ய வந்த சரண்

"எங்க அப்பா தான் இறக்கும் வரை விளையாட்டுத்தனமாகவே, 

ஜாலியாக இருந்தவர் அதையே நமக்கும் சொல்லிக் கொடுத்தார்" என்று நெகிழ வைத்தார்.

"உங்க வாழ்க்கையில் பின்னோக்கிப் போய்ப் பார்த்து 

ஏதாவது ஒன்றை மாத்தணும்னா எதை மாற்றுவீங்க?

ஏன்னா சரண் கூடச் சொல்லியிருந்தார் காலை ஆறு மணி 

கால்ஷீட்டெல்லாம் இருந்ததில்லை ஆனா அப்பாவுக்காக அது வந்துச்சு, அவர் எங்களோட இருந்த நேரம் வெகு குறைவு என்று"


இப்படி ஒரு கேள்வியை ஒரு பேட்டியில் எதிர் கொண்ட போது எஸ்பிபி சொன்னார்.


"நான் என்னோட கடந்த காலத்தை மாற்ற விரும்பல

அது கடினமானதும், அழகிய தருணங்களாலும் ஆனது

விட்டுக் கொடுப்புகளும், இழந்தவைகளும் அதிகம் இருந்தாலும்

அந்த வாழ்க்கை இனிமையானது 

இப்போது கிடைக்கும் கேக் ஐச் 

சுவைப்பது அவ்வளவு சாதாரணமானது அல்ல"


என்று நேர் சிந்தனையோடு சொன்னார்.

கூடவே இன்னொன்றையும் சொன்னார்

"நான் என்னுடைய பேரப் பிள்ளையின் ஆரம்பக் கல்வி graduation day க்கு என்னோட எல்லா நிகழ்ச்சிகளையும் ரத்துச் செய்து விட்டு, 

புது சூட் எல்லாம் எடுத்து குடும்பத்தோடு போனேன். அதைப் பார்த்து என் மருமகன் கூடக் கண் கலங்கினார்.

"எங்களோட பல்கலைக்கழகப் பட்டமளிப்புக்குக் கூட நீங்க வந்ததில்லை" 

என்று என் பிள்ளைகள் குறைப்பட்டார்கள்.

"ஆனா நான் என் பிள்ளைகளோடு இருந்ததை விட, அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்ததை விட என் பேரப் பிள்ளைகளோடு நிறைய நேரம் செலவு பண்றேன், 


இதுதான் வாழ்க்கை” என்றார் அந்தப் பேட்டியில் எஸ்பிபி.

எவ்வளவு அழகான பார்வை இது, சமூகத்துக்காகத் தன் சுக, துக்கங்களைச் சமரசம் செய்தாலும் அதை நோகாமல் எடுத்துக் கொள்ளும் பண்பு, அதுதான் எஸ்பிபி என்ற எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்ற பாடும் நிலா.

நித்திய ஜீவனாக வாழ்ந்து கொண்டிருக்கும் எங்கள் பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் புகழ் யுகம் கடந்த. நீடித்து வாழ்க.


உந்தன் மூச்சும் உந்தன் பாட்டும் 

என்றென்றும் அணையா விளக்கே


கானா பிரபா


0 comments: