பார்வையாலே நூறு பேச்சு
வார்த்தை இங்கு மூர்ச்சையாச்சு..
போதும் போதும் காம தேவனே
மூச்சு வாங்குதே ரெண்டு ஜீவனே.......
ஏதோ மோகம்.... ஏதோ தாகம்.....
மறக்க முடியுமா இந்தப் பாட்டை, நினைக்குந்தோறும் இந்த இடை வரிகளை மனசுக்குள் நீட்சியாகக் கிடத்திப் பாடுவதில் இருக்கும் சுகமிருக்கிறதே அடடா...
நேற்று மலேசியா வாசுதேவன் அவர்களது பிறந்த நாள், இன்று கிருஷ்ணச்சந்திரன் அவர்களின் 61 வது பிறந்த நாள்.
“பூவே இளைய பூவே” முன்னவருக்கு
“ஏதோ மோகம் ஏதோ தாகம்” பின்னவருக்கு
இரண்டுமே கோழி கூவுது படத்தின் முத்தாய்ப்பாய் அடுக்கடுக்காய் அமைந்த பாடல்கள் போலே இவ்விருவர் பிறந்த நாளும் அடுக்கடுக்காய்.
பாடகர் கிருஷ்ணசந்திரன் தமிழ்க் “குயிலாகக்” கூவியது கோழி கூவுது படத்தின் வழியாகத் தான்.
இந்த வாய்ப்பு எட்டியது மலையாளத்தின் மகோன்னத இயக்குநராகக் கொள்ளப்படும் மோகன் அவர்களோடு இசைஞானி இளையராஜா கூட்டுச் சேர்ந்த போது. அந்தச் சமயம் இருவர் கூட்டிலும் ஆலோலம் என்ற படம் வெளிவந்தது.
ஒரு கொசுறுச் செய்தி, இந்தப் படத்தில் எஸ்.ஜானகி பாடிய “வீணே வீணே” https://www.youtube.com/watch?v=IPvj_gOPbYY பாடல் தான் பின்னாளில் விஜயகாந்த் நடிப்பில் ஆர்.சுந்தரராஜன் இயக்கிய “தழுவாத கைகள்” படத்தின் “ஒண்ணா ரெண்டா தாமரைப்பூ” பாடலின் பல்லவியைத் தழுவியது.
சரி மீண்டும் கிருஷ்ணச்சந்திரனுக்கு வருவோம். இயக்குநர் மோகனிடம், புதுப் பாட்டுக் குரலை அறிமுகப்படுத்த இளையராஜா வேண்ட, அவர் கைகாட்டியது கிருஷ்ணச்சந்திரனை.
ராஜாவிடம் ஒரு பாசுரத்தைப் பாடிக் காட்டிய கிருஷ்ணச்சந்திரனுக்கு
கோழி கூவுது படத்தில்
“ஏதோ மோகம் ஏதோ தாகம்”
எஸ்.ஜானகியோடு பாடும் வாய்ப்பாகப் பூத்தது.
அது மட்டுமா
அதே படத்தில் இராமலிங்க அடிகளாரின் “ஒருமையுடன் நினது திருவடி”, சிவகாம சுந்தரி எழுதிய ““எங்கும் நிறைந்தொளிரும் ஓர் இறையே” ஆகிய ஆன்மிகப் பாடல்களையும் அதே படத்தில் இவரைப் பாட வைத்து அழகு பார்த்தார் இளையராஜா.
பின்னர் வந்த கொக்கரக்கோ படத்தில் சிவகாம சுந்தரி வரிகள் அளித்த “ஆனந்தமா விழி அன்னமே” (கண் பாரும் தேவி” https://www.youtube.com/watch?v=EKD_DRDtBUw பாடலை இசைஞானியே பாடியிருந்தாலும் அது கூட கிருஷ்ணச்சந்திரனுக்குக் கொடுத்திருந்தாலும் தகும்.
“அள்ளி வச்ச மல்லிகையே
புள்ளி வச்ச பொன் மயிலே”
இந்தப் பாடலைக் கேட்கும் தோறும் அந்தக் காலத்தத் தூரதர்ஷன் வெள்ளிக்கிழமை ஒலியும் ஒளியும் தான் ஞாபகத்தில் வரும். அந்தக் காலத்தில் என் அண்ணன் வீடியோ டெக் வழியாக இந்தப் பாடலைப் பதிவு செய்து போட்டுக் காட்டியதெல்லாம் பசுமை நிறைந்த நினைவுகள். எஸ்.ஜானகியைத் தொடர்ந்து இசையரசி பி.சுசீலாவோடும் கூட்டு.
இசைஞானி இளையராஜாவுக்கு கேரள நன் நாட்டின் நாசிக் குரல்களில் ஒரு ஈர்ப்பு. ஜேசுதாஸ், ஜெயச்சந்திரன், ஜென்ஸி, சுஜாதா, விஜய் (உன்னி மேனன்), சுனந்தா, ஜாலி ஏப்ரஹாம் போன்றே ஒரு குறிப்பிட்ட காலத்தில் அள்ளிக் கொடுத்து அழகு பார்த்தார். அப்படியாகத் தான் கிருஷ்ணசந்திரனுக்கும் 1982 தொடங்கி 1986 வரையான காலப்பகுதியில் அவ்வப்போது தனித்த நல் முத்துகளும், கூட்டாகக் கோஷ்டி கானங்களும் கிட்டின.
அந்தக் காலத்து “றேடியோ சிலோன்” இவர் பெயரை “கிருஷ்ணசந்தர்” என்று அழகாக அழைத்துப் பாடல்களை ஒலிபரப்பும்.
ஊரெங்கும் மழையாச்சு
தாளாத குளிராச்சு
ராக்காலம் ஈரமாச்சு
கனி கொண்ட கிளையுண்டு
கிளையோடு கிளி உண்டு
பசியாற நேரமாச்சு....
இசைஞானியே அனுபல்லவி பாட,
“பூ வாடைக்காற்று வந்து ஆடை தீண்டுமே”
“பாதை தடுமாறும் இது போதை மழையாகும்
முந்தானை வாசம் ஏதோ சுகம்”
அந்த ஜலதோஷ நாசிக் குரலில் ஒரு ஈர்ப்பு, கிருஷ்ணசந்திரன் குரலுக்கு அருகே எஸ்.என்.சுரேந்தர் குரல் முள்ளு இருக்குமாற் போல.
“தென்றல் என்னை முத்தமிட்டது
இதழில் இனிக்க இதயம் கொதிக்க
எல்லோரும் பார்க்க....”
பி.எஸ்.சசிரேகாவுக்கும், கிருஷ்ணசந்தருக்கும் ஒத்த அலைவரிசைக் குரல்கள் என்று மெய்ப்பித்துக் காட்டிய பாட்டு ஶ்ரீதரின் “ஒரு ஓடை நதியாகிறது” படத்தின் வழியாக இதயத்தை முத்தமிட்டது.
புகழ் பூத்த மலையாள இயக்குநர் பரதனின் ரதி நிர்வேதம் என்ற திரைப்படத்தின் வழியாக கேரளத்தில் பரவலாக அறியப்பட்டவர் நடிகர், நடிகை வனிதாவின் கணவர் இவர்.
Maniyan Pilla Adhava Maniyan Pilla என்ற படத்தில் தேவராஜன் மாஸ்டர் இசையில் பாடகராக அறிமுகமாகியவர்.
மலையாளத்திலும் சம காலத்தில் (1982) ஆ ராத்திரி படத்தின் வழியாக “மாரோல்சவம் ஈ ராத்ரியி” https://www.youtube.com/watch?v=CjMsB3j5OEA பாடலில் ஜெயச்சந்திரன், கல்யாணம் ஆகியோரோடு கூட்டுச் சேர்ந்து பாடி அறிமுகமாகிறார் இசைஞானியார் இசையில்.
தன்னை இசைஞானிக்கு அறிமுகப்படுத்திய இயக்குநர் மோகன் இயக்கிய மங்களம் நேருன்னு படம் கிருஷ்ணசந்திரனுக்குக் காலத்தால் அழியாத கேரளத்தவர் நேசிக்கும் “அல்லியிளம் பூவோ” https://www.youtube.com/watch?v=2QfzdT5hGdc பாடலை இளையராஜா வழி கொடுத்தது.
தன் தாய்வீட்டுப் பாடல்களாக அவருக்கு இசைஞானி இளையராஜா வழி வந்தவை சொற்பமே. அவ்விதம்
“பா பா பா நிஷா மனோகரி” https://www.youtube.com/watch?v=mXmPsWfQTQc என்ற இன்னொரு துள்ளிசைப் பாடலை கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்.ஜானகி கூட்டுச் சேரப் பாடினார் பின்னிலவு படத்துக்காக. அற்புதமான பாட்டு அது.
பின்னிலவு போல மம்மூட்டி, மோகன்லால் சேர்ந்த ஒண்ணாணு நம்மள் படத்திலும் கிருஷ்ணசந்தருக்கு “குப்பினிப் பட்டாளம்” https://www.youtube.com/watch?v=eUgpUk6Zn9E கிட்டியது.
எஸ்.ஜானகியுடன் “மஞ்சும் குளிரும்” (Sandhyakku Virinja Poovu)
நீண்ட இடைவெளிக்குப் பின் தொண்ணூறுகளில் மீண்டும் இளையராஜா வழி வந்த மலையாள வாய்ப்பு ஜாக்பாட் (1993) படத்தில் சித்ராவோடு பாடிய “முங்கி முங்கி” https://www.youtube.com/watch?v=gz8LuIcuPZk பாடலோடு,
மலையாள “ப்ரெண்ட்ஸ்” படத்தில் எம்.ஜி.ஶ்ரீகுமார், சந்திரசேகருடன்
“புலரிக்கிண்ணம் பொன்னில் முக்கியதாராணோ”
என்ற பாடலைக் கொடுத்தார் 1999 இல்.
இசைஞானி இளையராஜா இசையில் கிருஷ்ணச்சந்தர் என்ற கிருஷ்ணசந்திரன்
தனிப்பாடல்களாக,
கேளாதோ காதல் நெஞ்சின் ஓசை (மெல்லப் பேசுங்கள்) https://youtu.be/Q3VPsnoBtmk
புடிச்சாலும் புடிச்சேன் (கோபுரங்கள் சாய்வதில்லை)
ஜோடிப் பாடல்கள் வரிசையில்
எஸ்.பி.சைலஜாவுடன்
ராஜா ராணி ராஜ்ஜியம் (அந்த சில நாட்கள்)
இதுவரையில் முதல் இரவு (தூரத்துப் பச்சை)
சித்ராவுடன்
ஆகா சிலுக்குத் தாவணி (கரிமேடு கருவாயன்)
எஸ்.ஜானகியுடன்
தேனில் வடித்த சிலையே ( குவா குவா வாத்துகள்)
தசரதனின் திருமகனை (மலேசியா வாசுதேவனும் இணைந்து தேவி ஶ்ரீதேவி படத்துக்காக)
வான் சிவந்தது (அன்பின் முகவரி)
ஆனந்தமாலை தோள் சேரும் வேளை (தூரத்துப் பச்சை)
என்ற அதியற்புதமான பாடலையும் பாடியளித்தார்.
இளையராஜா தன்னுடைய கோஷ்டி கானங்களில் கிருஷ்ணசந்திரனையும் ஒருவராக்கி
ஆசையின்னா ஆசை அம்மா சுட்ட தோசை ( முடிவல்ல ஆரம்பம்) பாடலில் கங்கை அமரன், ரமேஷ், தீபன் சக்ரவர்த்தியோடும்,
தேவி ஶ்ரீதேவி படத்தில் எஸ்.என்.சுரேந்தர், மலேசியா வாசுதேவனுடன் “ஜாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளையே”, அதே படத்தில் மலேசியா வாசுதேவன், தீபன் சக்ரவர்த்தியுடன் “படிப்போம் கிடிப்போம்” பாடலையும்,
அலை ஓசை படத்தில் “பார்க்கிறதும் முறைக்கிறதும்”
என்ற பாடலை சாய்பாபா, மலேசியா வாசுதேவனுடனும்,
கன்னி ராசி படத்தின் “சோறுன்னா சட்டி தின்போம்” பாடலை இளையராஜா, தீபன் சக்ரவர்த்தியுடனும்,
படிக்காத பண்ணையார் படத்தில் மலேசியா வாசுதேவன், தீபன் சக்ரவர்த்தியுடன்
“சவாரி காரு சவாரி” https://www.youtube.com/watch?v=cRt7-WK2ezI என்ற அட்டகாஷ் பாடலையும் பாடிச் சிறப்பித்தார்.
தாமரைப் பூவுக்கும் தண்ணிக்கும்
என்னைக்கும் சண்டையே வந்ததில்ல
மாமன அள்ளி நீ தாவணி போட்டுக்க
மச்சினி யாரும் இல்ல
தொண்ணூறுகளில் கிருஷ்ணசந்திரனை அதி உச்சத்தில் கொண்டு போன அந்தப் பாடலை, சுஜாதாவோடு ஜோடி கட்டி அழகு பார்த்தார் வித்யாசாகர்.
ஆனால் சத்தமில்லாமல் இசையமைப்பாளர் சிற்பி கூட “மானா மதுர குண்டு மல்லியே https://www.youtube.com/watch?v=mdG24QZuKu8
என்ற வேக நடைப் பாடலில் கிருஷ்ணசந்திரன், ஸ்வர்ணலதாவை இணைத்து ஹிட் அடித்தார். அந்தக் காலத்தில் தலையில் சுமந்து கொண்டாடிய பாடல் இப்போது கேட்டாலும் துள்ளிசை போடும் மனசு.
பூச்சூடவா படத்திலும் சிற்பி அவர்கள் “சிலு சிலு காத்தில் சந்தோஷம்” பாடலில் மனோ, ஃபெபி மணி, சித்ராவோடு கிருஷ்ணசந்தரையும் பாட வைத்து அழகு பார்த்தார்.
அந்தக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து வானொலி திருப்பி சென்னை வானொலி வழியே கேட்டு ரசித்துத் திளைத்த பாட்டு
“ஒரு மல்லிகைப் பந்தலும் மெல்லிய தென்றலும் மந்திரம் பாடியது (மாங்கல்யம் தந்துனானே)
அகத்தியன் இயக்கிய அந்தப் படம் தோல்வியைத் தழுவினாலும் தேனிசைத் தென்றல் தேவா இசையில் கிருஷ்ணசந்திரன், சித்ரா பாடும் இந்தப் பாடல் எல்லாம் என் தர வரிசையில் உச்சமாகப் போற்றுபவை.
ஒரு படத்தின் முகப்பு எழுத்தோட்டத்தில் பொதியும் பாடலை ஊன்றிக் கவனிப்பேன். அவ்விதம் என்னை நெகிழ வைத்த பாடல்களில் ஒன்று தேனிசைத் தென்றல் தேவா இசையில்
“ஆத்தா உன் கோயிலிலே” படத்தில் வரும் பாட்டு, பாடகர் கிருஷ்ணசந்திரனின் இந்தப் பிறந்த நாள் பதிவின் முத்தாய்ப்பாய் நான் கொடுக்க விரும்புவதும் அதுவே.
காதல் கிளிகளே
எங்கள் கல்யாணக் குயில்களே
காலங்கள் தோறும்
காதலின் ராகம் பாடு
நீயும் பாடு
பாடு சொல்லிப் பாடு....
கானா பிரபா
0 comments:
Post a Comment