Pages

Thursday, June 10, 2021

உயர்ந்த மனிதன்


“அந்த மலையை எல்லாம் பார்த்தியா 

எவ்வளவு உயர்ந்து நிக்குதுன்னு 

மனிதன் எவ்வளவு தான் உயர்ந்தவனா இருந்தாலும் 

இயற்கையினுடைய உயர்வுக்கு முன்னால

அவனால ஒண்ணும் செய்ய முடியுறதில்ல“


சிவாஜி கணேசன் தன் நண்பர்களிடம் கூறுவார் மலைப் பொதியில் இருக்கும் தனது எஸ்டேட் பங்களாவுக்கு வந்திறங்கிய கணத்தில்.

“உயர்ந்த மனிதன்” 52 ஆண்டுகளுக்கு முன் வந்த இந்தப் படத்தை முதன் முதலில் சென்ற ஆண்டு டிசெம்பரில் தான் பார்த்தேன். பார்த்த போது படம் எடுக்கப்பட்ட விதத்திலும், நடிகர் தேர்விலும், திரைக்கதை அமைப்பிலும் மிரண்டு போய் விட்டேன். இதற்குப் பின் இதுவரை எந்தத் திரைப்படத்தையும் பார்க்கவில்லை. 

தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் கூட ஒரு முறை சொன்னார் “எனக்கெல்லாம் கர்ணன் படத்தின் ஒளிப்பதிவை எல்லாம் அவ்வளவு கச்சிதமாகச் செய்யும் ஆற்றல் இல்லை என்று”. ஒரு தொழில் நுட்பவியலாளராக அவர் சொன்னது ஒரு பக்கமிருக்க, இப்படியான நேர்த்தியான படத்தை இன்று எத்தனையோ மடங்கு பெருகியிருக்கும் தொழில் நுட்பக் கலைஞர்கள், படைப்பாளிகளோடு ஒப்பிடும் போது இந்தப் படத்தின் உருவாக்கம் ஒரு அசுர முயற்சி என்பேன்.

அதுவும் வங்காளத்தில் வந்த ஒரு படத்தின் மூலக் கதையை எடுத்துத் தமிழுக்கு ஏற்றாற்போலத் திரைக்கதை அமைத்த நாடக மற்றும் திரையுலக மூத்த குடி ஜவார் சீதாராமன் மேல் அந்த வியப்புப் படர்கிறது. சாய் வித் சித்ராவில் அவ்வபோது பழைய கலைஞர்கள் வந்து ஜவார் சீதாராமன் பற்றிச் சொல்லும் போது மெல்ல மெல்ல அறியப்படாத அவரின் ஆளுமைத் திறன் இந்தப் படைப்பு வழியாகக் கண் முன் உதாரணம் காட்டுகிறது.

படத்தின் தொடக்கக் காட்சியமைப்போடு வளையம் முடிவுறுமாற் போலத் திரைக்கதை அமைப்பு.

ஏவிஎம் நிறுவனம் தன்னுடைய அறிமுகத்துக்கு வழி கோலியிருந்தாலும் தான் உயர்ந்த பின்னால் தொடர்ந்து வாய்ப்புகள் கொடுக்காத ஆதங்கத்தில் இருந்த சிவாஜிக்கு இந்தப் படக் கதை சொல்லப்பட்டதாம். அவரோ இந்தப் படத்தில் “எனக்கு நடிக்க என்ன வேலை இருக்கிறது?” என்று தயங்கினாராம்

சரி அப்படியானால் அந்த வைத்தியராக வரும் நண்பர் பாத்திரத்தில் (அசோகன்) பாத்திரத்தில் நடிக்கிறேன் என்றாராம். ஆனால் அது அசோகனுக்கு முடிவாகியிருப்பதைச் சொன்னதும் இன்னும் தயக்கமாம் காரணம் அப்போது அசோகனுக்கும், சிவாஜிக்கும் சிறு மனஸ்தாபம் நிலவிய சூழல். அதையும் கடந்து இந்தப் படத்தை உருவாக்கும் வேளை குழந்தையும் தெய்வமும் படத்தை உடனடியாக எடுத்து முடிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இயக்குநர்கள் கிருஷ்ணன் பஞ்சு அங்கே போக மேலும் ஒரு தாமதம். என்ன தாமதம் வேண்டுமென்றால் நாங்களே படத்தை மேற்கொண்டு தயாரிக்கவா? என்று சிவாஜியின் தம்பியே வந்து கேட்க நிலமையை விளக்கினாராம் ஏவிஎம் சரவணன். மேலும் அந்த நம்பிக்கையைத் தக்க வைக்க ஏவி மெய்யப்பச் செட்டியார் ஐம்பதாயிரம் ரூபாவைக் கொடுக்கச் சொன்னால் சிவாஜியின் தம்பி சண்முகமோ அண்ணனுக்கு இதெல்லாம் பிடிக்காது என்று தயங்கினாராம்.

பார்த்தீர்களா இந்தப் படத்துக்குப் பின்னால் எத்தனை நெகிழ வைக்கும் அனுபவங்கள்.

இதையெல்லாம் தாண்டி உயர்ந்த மனிதன் வந்தது. இந்தப் பெயர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கே உரித்தானதாக முத்திரை பொறிக்கப்பட்டது.

உயர்ந்த மனிதன் படத்தில் சிவாஜி கணேசன் பிரம்பால் தன் வீட்டுப் பணிப் பையன் சிவகுமாருக்கு அடி பின்னும் காட்சிக்காக மட்டும் பத்துப் பிரம்புகள் வாங்கி வைக்கப்பட்டதாம். எடுக்கும் போது சொதப்பி, பிரம்பும் முறிந்தால் என்னவாகிறது என்ற முன் எச்சரிக்கை தான் அது. சிவகுமார் பிரம்படி வாங்கியதோடு சிவாஜியின் உதையையும் வாங்கித் தூர விழுந்த கதையை நினைவுபடுத்திச் சிரித்தார்.

“அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே”

மறக்க முடியுமா இந்தப் பாட்டை? ஆனால் எழுதியவர் பெயர் மறந்து கண்ணதாசனின் பெயரை ஒரு விழாவில் உச்சரித்த மனோரமாவை நொந்து கொண்டார் “நானும் இந்த நூற்றாண்டும்” நூலில் கவிஞர் வாலி. மொத்தம் ஆறும் அவரே எழுதியது.

அத்தானின் முத்தங்கள், அந்த நாள் ஞாபகம், என் கேள்விக்கென்ன பதில், வெள்ளிக்கிண்ணம் தான், பால் போலவே, அத்தை மகள் அப்பப்பா எத்தனை தித்திப்பான பாடல்கள். ஆனால் எனக்கொரு ஆதங்கம் “என் கேள்விக்கென்ன பதில்” பாடலை சிவகுமாருக்கு T.M.செளந்தரராஜனின் முற்றிய குரலைப் பதிய வைத்ததற்குப் பதில் இன்னொரு மென் குரலைப் பயன்படுத்தியிருக்கலாம்.

உயர்ந்த மனிதன் பாடல்கள்

https://youtu.be/FBUE2w4AprQ

நடிகர் தேர்வைப் பாருங்கள், சிவாஜி கணேசன் கூடவே பணத்தாலோ, கல்வியாலோ சமப்படாத நட்பில் இணைந்த

மேஜர் சுந்தரராஜன், அசோகன், குறும்பும், காதலுமாய் வாணி ஶ்ரீ, பணக்கார மனைவி செளகார் ஜானகி, சிவாஜியின் வாரிசு சிவகுமார். இவர்களோடு இந்த மேஜர் சுந்தரராஜன் மகள் பாரதியின் அழகு இருக்கிறதே அப்பப்பா அந்தக் காலத்தில்  அரும்பு மீசைக்காரனாய் இருந்தால் “பாரதி புராணம்” எழுதியிருப்பேன், நடிப்பிலும் அவர் பாரதியாக வெளுத்துக் கட்டினார்.

தன் முதலாளியம்மா (செளகார் ஜானகி)யின் வெளிப்படைத் தனத்தையும், சிவாஜியின் கள்ள மனத்தையும் தோலுரித்துக் காட்டுவாரே அப்பப்பா....

இந்த மாதிரிப் படத்துக்கு மெல்லிசை மன்னரை விட்டால் ஆள் ஏது? எம்.எஸ்.வி நமக்குப் பழக்கப்பட்ட குடி. ஆனால் ஒளிப்பதிவாளர் பி.என்.சுந்தரம் இன்றைய தலைமுறை அறியாப் பெருஞ் சொத்து. ஒவ்வொரு காட்சி வடிவமைப்பும் செதுக்கல் (கள்).

பட ஆக்கத்துக்குப் பணம் மட்டுமல்ல நேர்த்தியான தயாரிப்பு இருக்க வேண்டும் என்பதைப் பாடமெடுக்கிறது ஏவிஎம்.


பால் போலவே வான் மீதிலே

யார் காணவே நீ காய்கிறாய்


நாளை இந்த வேளை பார்த்து 

ஓடி வா நிலா 

இன்று எந்தன் தலைவன் இல்லை 

சென்று வா நிலா

தென்றலே என் தனிமை கண்டு 

நின்று போய்விடு


இந்தத் தேசிய விருதுகளில் முதன் முறை சிறந்த பாடகி என்ற பிரிவு அறிவிக்கப்பட்ட போது எமது இசையரசி பி.சுசீலாம்மாவுக்கே இந்தப் பாட்டுக்குக் கிடைத்தது என்ற மகத்துவமும் சேர்ந்து கொள்ள உயர்ந்த மனிதன் இன்னும் உயர உயர.

தமிழக அரசின் சிறந்த படம், இயக்குநர், பாடகி, ஒளிப்பதிவாளர் என்று ஒரு சேர அள்ளியது.

உயர்ந்த மனிதன் பாடல்களை மட்டும் தனியாக எழுத ஒரு நீளப் பதிவு வேண்டும்.

எனக்கு இங்கே நடிக்க என்ன வாய்ப்பிருக்கிறது என்று சொன்ன சிவாஜி அப்படியே அடக்கமாக ராஜூ என்ற ராஜலிங்கமாக வருவதெல்லாம் சரி. ஆனால்

செளகார் ஜானகியின் அடாவடியைத் தாங்க முடியாமல் வெடித்துச் சிதறுவாரே ஒரு கட்டத்தில்? 

அது போதுமய்யா உயர்ந்த மனிதரே

ஏழாவது நிமிடத்தில் அந்தக் காட்சி

https://youtu.be/egOgIvjSxrM

இதுதான் ஒரு ஒப்பற்ற கலைஞனின் மாண்பு. அப்படியே பாத்திரமாக மாறிக் காத்திருந்து தக்க தருணத்தில் பளிச்சென்று வெளிப்படுவது.

உயர்ந்த மனிதன் படத்துக்குப் பின் கடந்த ஆறு மாதங்களாக எந்தப் படங்களையும் பார்க்கவில்லை என்று சொன்னேன் அல்லவா?

என் மனசின் ஓரத்தில் இந்தப் படத்தின் ஒவ்வொரு பாத்திர அமைப்பையும் வியந்து வியந்து சிலாகித்துக் கொண்டிருக்கும் காரியம் மட்டும் நிற்கவில்லை.

இப்போது யோசித்துப் பார்த்தால் குழந்தைப் பாக்கியம் இல்லாத அந்தப் பணக்கார ஏழை விமலா (செளகார் ஜானகி) மேல் பச்சாதாபமே எழுகின்றது.

அத்தோடு மட்டும் நிற்கவில்லை. என் மனசுக்குள் ஒரு விவாத அரங்கே ஓடிக் கொண்டிருக்கிறது.

யார் உயர்ந்த மனிதன்?

தான் தீயில் தொலைத்த காதலியை மனசில் புதைத்து, பணக்காரக் கணவன் பந்தத்தில் “நடிக்கும்” ராஜு  என்ற சிவாஜியா?

தான் ஒருதலையாய்க் காதலித்தவளைத் தன் நண்பன் வந்து கவர்ந்த சூழலில், உள்ளுக்குள் போட்டு மருகி, ஈற்றில் தானே முதலில் கண்டவளின் வாரிசை தானே முதலில் அடையாளம் கண்டு அதைத் தன் நண்பனிடம் சொல்லக் கூட வக்கில்லாமல் நெஞ்சு வெடிப்பானே அந்த நண்பன் டாக்டர் கோபால் (அசோகன்)?

தன் பணக்கார நண்பனின் அறிவிக்கப்படாத வாரிசாய் வளரும் தன் மகள் ஒரு பணிப் பையனைக் காதலிக்கும் சூழலில், தான் உயர்ந்த இடத்தில் பையனைப் பார்க்கிறேன் என்று சொன்ன பணக்கார நண்பனின் ஆசையை நிராகரித்து, ஏழ்மையிலும் நேர்மை சிறக்க வாழும் பண்பைக் காட்டும்

சுந்தரம் (மேஜர் சுந்தரராஜன்) என்ற வேலைக்கார நண்பனா?

இப்படியான மன விசாரணைகளை எழுப்புகிறது உயர்ந்த மனிதன்.

படம் பார்த்து முடித்த கண நேரத்தில் எனக்கு அந்த சுந்தரம் (மேஜர்) தான் உயர்ந்த மனிதனாகத் துலங்கினார்.

உயர்ந்தவர்

தாழ்ந்தவர்


இல்லையே.....


நண்பனே.........கானா பிரபா


படங்கள் நன்றி : IMDB தளம்


1 comments:

Paul Jeyaseelan said...

Fantastic and Deep Review. Good.