Pages

Friday, January 17, 2025

பாடகர் ஜெயச்சந்திரன் பாடலுக்குக் காத்திருந்த விருது ❤️


1978 ஆம் வருஷம் பாரதிராஜா இயக்கத்தில் கிழக்கே போகும் ரயில் வெளிவருகிறது.

அந்தப் படத்தில் பாடகர் ஜெயச்சந்திரன் பாடிய மாஞ்சோலைக் கிளிதானோ பாடல் அவருக்கு புகழ் மாலை கொடுத்தது அனைவரும் அறிந்ததே.

அந்தப் பாடலை எழுதியவர் கவிஞர் முத்துலிங்கம். தன்னுடைய பாடல் பிறந்த கதையில் இதுதான் இளையராஜாவுக்கு அதிகார பூர்வமாக எழுதிய பாடல் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

இதற்கு முன் இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ் உதவியாளராக இளையராஜா இருந்த சமயம் இளையராஜாவின் மெட்டுக்கு தஞ்சாவூரு சீமையிலே பாடல் எழுதியதையும் முத்துலிங்கம் குறிப்பிட்டது அறிந்ததே.

இங்கேயும் மெட்டுக்குப் பாட்டு என்று அவருக்கு சூழல் கொடுக்கப்பட்டு பல்லவி எழுதுகிறார். ஆனால் அது அதீத கவித்துவமாக இருக்கிறது என்று கங்கை அமரன் சொல்லவும் இரண்டாவதாக எழுதிக் கொடுத்தது அனைவருக்கும் பிடித்துப் போகிறது.  

அந்தப் பாடலில் கரும்பு வயலே குறும்பு மொழியே என்ற வரிகளைப் பிரேரித்தது அப்போது உதவி இயக்கு நராக இருந்த பாக்யராஜ்.

அதென்ன மாஞ்சோலை? மாந்தோப்பு என்று தானே சொல்ல வேண்டும் என்று இந்தப் பாடலுக்கு அப்போது இலக்கியச் சர்ச்சையும் கிளம்பியதாம்.

கிழக்கே போகும் ரயில் நூறாவது நாள் விழாவில் மாஞ்சோலைக் கிளிதானோ பாடலை நடிகர் திலகம் சிவாஜிகணேசன்  பாடிக்காட்டி இதே போல் எங்கள் படங்களுக்கும் பாடல் போடக்கூடாதா என்று இளையராஜாவிடம் கேட்டாராம்.

அந்த ஆண்டின் சிறந்த பாடலாசிரியர் விருது தமிழக அரசிடமிருந்து கவிஞர் முத்துலிங்கத்துக்குக் கிடைக்கிறது.

ஆனால் ஜெயச்சந்திரனுக்கோ தேசிய விருதே கொடுத்திருக்கலாம் அவ்வளவுக்கு அற்புதமான பாட்டு அது.


ஆனால் காலம் ஒரு கணக்கு வைத்திருக்கிறது இல்லையா?

15 வருடங்களுக்குப் பிறகு கிழக்குச் சீமையிலே படம் உருவாகிறது.

இம்முறை பாரதிராஜா இசைப்புயல் ரஹ்மான் கூட்டணி, இங்கே வைரமுத்து பாடலாசிரியர்.

ரஹ்மானின் இசையில் ஜெயச்சந்திரன் ஜோடி சேர்கிறார்.

எஸ்.ஜானகியோடு ஜெயச்சந்திரன் பாடிய 

“கத்தாழம் காட்டு வழி” பாடலை இன்னொரு முறை உன்னிப்பாக அவதானித்துப் பாருங்கள் வழக்கமான ஜெயச்சந்திரன் தொனியில் இருந்து மாறுபட்டு வேலை வாங்கியிருப்பார் ரஹ்மான்.

தமிழ் நாடு அரசின் சிறந்த பாடகர் விருது அறிவிக்கப்படுகிறது. 

இதோ சிறந்த பாடகராக அறிவிக்கப்படுகிறார் பாடகர் பி.ஜெயச்சந்திரன்.

ஒலி வடிவில்

https://www.youtube.com/watch?v=tpsmP4KKq_0


கானா பிரபா

17.01.2025

Friday, January 10, 2025

மஞ்ஞூலும் ராத்ரி மாஞ்ஞு யாத்ரா மொழியோடே... ஆற்றோரம் சூர்ய நெத்தி அக்னி விளக்கோடே....❤️

மஞ்ஞூலும் ராத்ரி மாஞ்ஞு 

யாத்ரா மொழியோடே...

ஆற்றோரம் சூர்யன் எத்தி

அக்னி விளக்கோடே....❤️

பாடகர் ஜெயச்சந்திரனுக்கு அவர் தம் தாய்மொழியாம் மலையாளத்தில் இசைஞானி இளையராஜா கொடுத்த ஆகச் சிறந்த பொக்கிஷப் பாடலாக இந்தப் பாடலை எப்போது கேட்டாலும் என் மனது மெச்சும்.

ஜெயேட்டனோடு இசைஞானி இளையராஜா கூட்டுச் சேர்ந்த வருஷம் 1977. "மஞ்ஞூலும்" பாடல் பிறந்தது 1997 இல்.

இளையராஜாவின் இசையில் ஜெயச்சந்திரனின் இசைப் பயணத்தின் முடிவிடத்தின் பாடல்களில் ஒன்று இது.

வேறொன்றும் வேண்டாம், படத்தின் கதையே தெரியாமல் இந்தப் பாடலை மட்டும் கேட்டுப் பாருங்கள்.

ஒரு பாசத்தின் தேடலை, அன்பின் பயணத்தை உருக்கும் குரலில் பாடியே நம்மை நெகிழ வைத்து விடுவார் ஜெயச்சந்திரன்.

தண்டவாளத்தில் தன் விழி வைத்துப் பயணிக்கும் ரயிலின் தேடலோடு தொடங்கி, அந்த ஏமாற்ற விழிகளோடு மீண்டும் கிளம்பும்  "யாத்ரா மொழி"யின் முகவரிப் பாட்டு இது.

இப்போது இந்தப் பாடலின் சந்தத்துக்கு இசைஞானி கொடுத்த இன்னொரு ரயிலோசையைக் காது கொடுத்துக் கேட்டுப் பாருங்கள். பேரிரைச்சல் இல்லாத ஏகாந்தத் தொனியோடு பாடலில் கூட வரும் பின்னணி இசையாக, அங்கே தளர்வான நடை எழும்.

கதாசிரியரோ, இயக்குநரோ சொன்ன கதையைத் தனக்குள் உருவேற்றி, அதற்கு ஒரு உணர்வு ரீதியானதொரு இசையைக் கொடுக்கும் பிரம்மாவாக இசைஞானி பிரமிப்பைக் கொடுக்கும் இன்னொரு படைப்பாகவே இதையும் எடுத்துக் கொள்வேன்.

மலையாள சங்கீதத்தில் இசைஞானியோடு நீண்ட பயணம் பயணப்பட்ட கிரிஷ் புத்தன்சேரியின் மலையாள வரிகளை மொழிபெயர்த்துப் பார்த்தேன். ஆகச்சிறந்ததொரு திரை இலக்கியமாகப் பாடல் வரிகள் தேங்கி நிற்கின்றன.

இன்று அவரும் இல்லை, பாடிய ஜெயேட்டனும் இல்லை. ஆனால் அவர்கள் கொடுத்த உணர்வு அப்படியே தேயாமல் இருக்கிறது.

பதகளிப்பு அல்லது தவிப்பினை மொழி பெயத்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும் இதுவும். 

https://www.youtube.com/watch?v=VjMA4aKScqI


கானா பிரபா

மலையாளத்தின் மகோன்னதங்கள் தாஸேட்டன் & ஜெயேட்டன்

வருஷம் 1958,

State School Arts கேரளாவின் மாநில இளையோர் இசை நிகழ்வில் இரண்டு இளையோர் மேடைக் கச்சேரியை அலங்கரிக்கிறார்கள். 

ஒருவர் 18 வயசு நிரம்பியவர், Palluruthy பள்ளியில் இருந்து

கே.ஜே.ஜேசுதாஸ் பாடகராகவும்,

இன்னொருவர் இரிஞ்சாலக்குடா தேசியப் பள்ளியில் இருந்து, 14 வயது நிரம்பிய P.ஜெயச்சந்திரன் மிருதங்க வாத்தியக் கலைஞராகவும் அந்தக் கச்சேரி அமைகின்றது.

மலையாள சினிமாவின் அடுத்த யுகத்தின் முன்னணி இசை நட்சத்திரங்களாக ஒளிவீசுவார்கள் என்று அப்போது நினைத்திருப்பார்களோ தெரியவில்லை. ஆனால் காலம் அப்போது கணக்கு வைத்துக் கொண்டது.

பாடகராக வருவதற்கு முன்பே ஜெயசந்திரன் சகோதரர் அமரர் சுதாகரனின் நண்பராக விளங்கியவர் கே.ஜே.ஜேசுதாஸ். பதிவு:கானாபிரபா ஜெயச்சந்திரனின் இளைய சகோதரர் கிருஷ்ணகுமாருக்கு ஹிந்திப் பாடகர்களில் கிஷோர் குமார் என்றால் இஷ்டம், ஜேசுதாஸுக்கோ மொஹமெட் ரஃபி என்றால் கொள்ளைப் பிரியம். இருவரும் சேர்ந்து பாடி மகிழ்வார்களாம்.

ஜெயசந்திரனை மலையாளத்தின் மகோன்னத இசைமைப்பாளர் 

தேவராஜன் மாஸ்டரிடம் அறிமுகம் செய்து வைத்தவர் கே.ஜே.ஜேசுதாஸ் தான். பதிவு:கானாபிரபா

காட்டுப்பூக்கள் படத்துக்காக தேவராஜன் மாஆடர் இசையில் ஜேசுதாஸ் பாடிய 

மாணிக்க வீணையுமாய்

https://www.youtube.com/watch?v=Li18fB13CPQ

பாடலைப் பாடிக் காட்டுகிறார் ஜெயச்சந்திரன்.

களித்தோழன் (1966) என்ற படத்துக்காக, கே.ஜே.ஜேசுதாஸுக்காக ட்ராக் பாட வேண்டும் என்று அழைக்கப்படுகிறார்.

முதலாவது, இரண்டாவது என்று மீளப் பாடுகிறார், தேவராஜன் மாஸ்டருக்குத் திருப்தியே இல்லை. மூன்றாவதாகப் பிராவகம் எடுக்கிறது பாடல்.

அதுதான்

மஞ்ஞலையில் முங்கிதோர்த்தி

https://www.youtube.com/watch?v=FtjykWLrC8w

எந்தவித முடிவும் சொல்லாமல் பாடலுக்கான ஊதியத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று 50 ரூபா இயக்கு நர் கிருஷ்ணன் நாயரால் ஜெயசந்திரனிடம் கொடுக்கப்படுகிறது.

ஜேசுதாஸுக்கான ட்ராக் பாடல் தானே என்ற ஒரு குழப்ப நிலையில் இருந்த ஜெயச்சந்திரன்,

பாடல் ஓகேயா?

என்று தயங்கிக் கேட்க,

“ஆமாம் நீங்கள் பாடிய பாடல் தான் அப்படியே இருக்கப் போகிறது”

பலமாகச் சிரித்தவாறே கிருஷ்ணன் நாயர் சொன்னாராம்.

அப்போது தான் தேவராஜன் மாஸ்டர் குறும்புத்தனமாக ஏமாற்றியது புரிந்தது அந்த 21 வயசு வாலிபன் ஜெயச்சந்திரனுக்கு.

அதன் பின் மலையாளம், தமிழ் என்று சங்கீதச் சிற்றரசனாகக் கோலோச்சினார் என்பது வரலாறு.

தேவராஜன் மாஸ்டரிடம் உதவி இசையமைப்பாளராக அப்போது இருந்த ஆர்.கே.சேகரின் மகன் ஏ.ஆர்.ரஹ்மானிடம் கூடப் பாடி விடுங்கள் என்று எழுதி வைத்ததும் காலதேவன் கணக்கு.

ஜெயச்சந்திரன் நம்மை விட்டுப் பிரிந்த ஜனவரி 9 ஆம் திகதி பின்னிரவோடு,

இன்று ஜனவரி கே.ஜே.ஜேசுதாஸ் பிறந்த தினமாக அமைந்திருக்கிறது.

கானா பிரபா


Thursday, January 9, 2025

ஜோஷ்வா ஶ்ரீதரின் அனுபவம் வழியே ஏ.ஆர்.ரஹ்மானின் வாழ்க்கையில் இருந்து


"இசையமைப்பாளர்களிடம் கீபோர்ட் வாசிப்பதால் வரும் வருமானம் ரொம்பக் குறைவான சூழல் அப்போது.

புதுப் புது வாத்தியக் கருவிகளை நாமளே பணம் கொடுத்து வாங்கி வைத்துக் கொண்டு போய்த் தான் வாசிக்கணும், அப்படி வாங்க முடியாமல் கூட ரொம்பக் கஷ்டப்பட்டேன். 

அப்போது ஏ.ஆர்.ரஹ்மானைச் சந்தித்த முதல் நாளில் நான் இசையமைத்த பாடல் இசைத்தட்டுடன், என்னென்ன வாத்தியம் வைத்திருக்கிறேன் என்று அவரிடம் சொன்னேன்.

அப்போது ரஹ்மான், 

"இங்கே பாருங்கள் நீங்கள் சொன்ன வாத்தியங்கள் 

எல்லாம் நானே வாங்கி வைத்திருக்கிறேன்,

நீங்க எதுவும் எடுத்து வர வேண்டாம்" என்றார்.

இப்படி சாய் வித் சித்ராவில் இசையமைப்பாளர் ஜோஷ்வா ஶ்ரீதர் குறிப்பிட்ட போது இரண்டு நிகழ்வுகள் ஞாபகத்துக்கு வந்தன.

"எனக்கு ஒன்பது வயதாக இருந்தபோது அப்பா இறந்துவிட்டார். 

என் தந்தை இறந்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, என் அம்மா வீட்டை நடத்துவதற்காக அவரது இசைக்கருவிகளை வாடகைக்கு விடுவார், அதன் பிறகு உபகரணங்களை விற்று வட்டியுடன் வாழ அறிவுறுத்தப்பட்டார், ஆனால் அவர் மறுத்துவிட்டார்.

"இல்லை, எனக்கு என் மகன் இருக்கிறான். 

அவன் கவனித்துக் கொள்வான் என்றாராம்.

என் அம்மாவுக்கு இசை சார்ந்த உணர்வோட்டம் இருந்திருக்கிறது. ஆன்மீக ரீதியாக என் அம்மா சிந்திக்கும் விதத்திலும் முடிவுகளை எடுக்கும் விதத்திலும் என்னை விட மிக உயர்ந்தவர். 

உதாரணமாக, என்னை இசையை எடுக்க வைத்தது அம்மாவினுடைய முடிவு. அவர் என்னை பதினொன்றாம் வகுப்பில் பள்ளியை விட்டு வெளியேறி இசையை எடுக்க வைத்தார், இசைதான் எனக்கு ஏற்ற வழி என்பது

என் அம்மாவுடைய நம்பிக்கை"

என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா பேட்டியில் (2017) ஏ.ஆர்.ரஹ்மான் தன் தாயைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் பால்ய கால வளர்ப்புச் சூழலே இவ்விதம் ஒவ்வொரு வாத்தியக் கருவிகளைத் தானே வாங்கி வைத்துக் கொள்ளும் பண்பு வளர்ந்திருக்கலாம்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் இன்னொரு பேட்டியில் ரஹ்மான் வேடிக்கையாகக் கூடச் சொன்னார் இப்படி

"என்னை கோடி கோடியாக வாங்கும் இசையமைப்பாளர் என்றெல்லாம் சொல்வார்கள், ஆனால் அதில் பெரும்பங்கு வாத்தியக் கருவிகளுக்கும், ஒலி உபகரணங்களுக்குமே போய் விடுகிறது" என்றார்.

அப்படியாக வாழும் கலைஞனுக்கு இதெல்லாம் வாழ்வின் கூறு. 

அப்படியாக வாழ்ந்ததால் தான், இன்னோர் கலைஞனுக்குத் தன் வாத்தியச் சொத்தைப் பகிர முடிந்தது.

ஊருக்காக ஆடும் கலைஞன் 

தன்னை மறப்பான்!

தன் கண்ணீரை மூடிக்கொண்டு

இன்பம் கொடுப்பான்!

கானா பிரபா


Wednesday, January 8, 2025

ஒலி அழகன் 💛💛💛 ஹாரிஸ் ஜெயராஜ் 💚❤️💚

“இப்போதெல்லாம் ஒலியை (sound) எப்படிக் கையாள்வது என்பதே இசையமைப்பு” என்று சமீபத்தில் இளம் இசையமைப்பாளர் ஒருவர் தன் பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

துல்லியமான இசையின் அருமையைப் பெற மும்பை தேடிப் போய் ஒலியமைத்த இசைஞானியின் ஆனந்தக்கும்மி, தளபதி ஆகச்சிறந்த உதாரணங்கள் என்பதோடு சரி. எத்தனையோ அற்புதமான பாடல்களின் வாத்தியக் கோப்புகள் தேய்ந்த ஒலித்தரத்தால் வெளிச்சம் தராமல் மங்கி விட்டன.

அமரன் (1992) படப் பாடல்கள் வெளி வந்த போது, அந்தப் பாடல்களின் மெட்டமைப்பை விட அதிகம் ஆகரிஷித்தது அதன் ஒலித்தரம்.

அப்போது வாக்மேனில் இந்தப் படப் பாடல்களைக் கேட்கும் போதெல்லாம் இலவம் பஞ்சின் மினுமினுப்பும், மெது மெதுப்பும் கலந்தது போல.

டைட்டஸ் இயற்பெயர் கொண்ட ஆதித்யன் அடிப்படையில் ஒரு ஒலிக் கலைஞர் (sound engineer) ஆகவே ஒரு சொட்டும் சிந்தாமல் சிதறாமல் கொடுத்திருந்தார்.

ரஹ்மானுக்கு முன்பே ஆதித்யன் கொடுத்த இசை அனுபவம்  நமக்குப் புதுமையாக இருந்தது.

பின்னாளில் கங்கை அமரன் ஒரு பாட்டுப் போட்டியில்,

“ஆதித்யன் இசையமைத்த 

அமரன் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் கீபோர் வாத்தியக்காரர்,

சீவலப்பேரி பாண்டிக்கு ஹாரிஸ் ஜெயராஜ் கீர்போர்ட் வாத்தியக்காரர்”

என்று சொன்னார்.

1992 க்குப் பின்னான இசை யுகத்தின் திறவுகோலாகப் பின்னர் ஏ.ரஹ்மான் புதியதொரு பரிமாணம் படைத்தார்.

அவர் தொட்ட எல்லைகள் பற்பலது.

இன்னொரு புறம் ஹாரிஸ் ஜெயராஜின் வரவு நிகழ்கிறது.

ஒலியை நம் அருகாமையில் கொண்டு போகும் தொழில் நுட்பம் இன்னும் இன்னும் கிட்ட வரவும், அதற்குத் தோதாய் மிகச் சிறந்த ஒலி நயம்

மிகுந்த பாடல்கள் கிளம்பினது.

அவற்றில் மிகுந்த கர்ம சிரத்தையோடு பேணி வருபவர் ஹாரிஸ்.

அதனால் தான் அவர் இசையமைத்த படங்களின் முகவரி தேடாமல் உடனேயே கேட்டு விடுவது.

ஒரே மாதிரி ட்யூன் என்ற குற்றச்சாட்டை எல்லாம் அவரின் ஒலி நயம் நீர்த்துப் போக வைத்து விடும்.

ஒரே மெட்டுடன் ஓகே ஆக்கி விடுவார் என்று கெளதம் வாசுதேவன் ஹாரிசுக்குப் புகழாரம் சூட்டுவது ஒருபக்கம், இன்னொரு பக்கம்

அந்தக் கூட்டணியில் மிளிர்ந்த பாடல்களின் ஓசை நயத்தை மட்டும் எடுத்தாலே போதும். இதை எழுதும் போது அடி மனசு 

“உன் சிரிப்பினில்” 

https://youtu.be/7GlJSYi-IvQ?si=hSlWpMA06fj6gVki

பாடுகிறது.

இன்றைக்கும் கூட மனசுக்கு இதமாக ஒரு பாட்டுக் கூட்டு (playlist)  தயாரிக்க மனம் விழைந்தால் ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்களை அள்ள நினைக்கும்.

சாலைகள் மாறும்

பாதங்கள் மாறும்

வழித்துணை நிலவு மாறாதே

மனமெல்லாம் சிறகே

உலகெல்லாம் உறவே

https://youtu.be/q8MW_YcbcVM?si=jm0j19T-um1OukJQ

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் 

ஒலி அழகன் ஹாரிஸ் ஜெயராஜ் ❤️

கானா பிரபா


Tuesday, January 7, 2025

மெல்லிசை மன்னரும் திரைக்கதை மன்னரும் ❤️❤️❤️

மெல்லிசை மன்னரின் எண்பதுகளும் இன்னும் அதிகமாகக் கொண்டாடப்பட வேண்டியவை. அதுவும் அந்த ஆர்மோனியக்காரின் காதல் கதைக்குப் பொருத்தமான பண் அமைத்துப் பாடல்களில் கூட அந்த நிறத்தைக் கலவையாக்கிக் கொடுத்த அழகுணர்ச்சியைச் சிலாகித்துக் கொண்டே அந்த ஏழு நாட்கள் பாடல்களைக் கேட்க வேண்டும்.

பாலக்காட்டு மாதவன் என்ற பாக்யராஜ் மெட்டமைக்கும் தோற்றப்பாட்டிலேயே மெல்லிசை மன்னரை ஞாபகப்படுத்துவார். 

“கவிதை அரங்கேறும் நேரம் 

மலர்க்கணைகள் பரிமாறும் தேகம்” பாடலிலும் சரி, 

“தென்றலது உன்னிடத்தில் 

சொல்லி வைத்த சேதி என்னவோ” பாடலும் கூட ஆரம்பத்தில் கொடுக்கும் ஸ்வர ஆலாபனையில் அந்த இசையமைப்பாளனின் காதல் ஒட்டியிருக்கும்.

“ஸ்வர ராக” பாடலில் மலையாளமும், தமிழும் காதல் கொள்ளும் பாட்டு,இதுவும் தென்றலது பாடலும் கண்ணதாசன் கை வண்ணம். அது போல் குருவிக்கரம்பை சண்முகம் “கவிதை அரங்கேறும் நேரம் பாடலை எழுதியிருக்கிறார்.

“எண்ணி இருந்தது ஈடேற” பாடல் வைரமுத்துவை வைத்துப் படத்தின் வணிக சமரங்களுக்காகக் கொடுத்த குத்து வகையறாவோ என்று எண்ணிக் கொண்டே ரசித்தாலும் அதிலும் தன் முத்திரையைக் காட்டியிருப்பார் எம்.எஸ்.வி.

எண்பதுகளில் சங்கீதத் திலகம் கே.வி.மகாதேவனைக் கொண்டாட ஒரு சங்கராபரணத்தையும், இசைஞானி இளையராஜாவுக்கு சிந்து பைரவியுமாக அமைய, 

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு அந்த 7 நாட்கள் ஐ எழுதி வைக்கலாம் போல. அதுவும் ஜெயச்சந்திரனுக்கு வைதேகி காத்திருந்தாளுக்கு முன் வந்த ஒரு பொக்கிஷம் இது.

பின் வரும் வரிகளில் தபேலாவை வழித்து தாள லயம் கொண்டும் மெல்லிசை மன்னரின் முத்திரை 

தென்றலது உன்னிடத்தில்

சொல்லி வைத்த சேதி என்னவோ

தென்றலது உன்னிடத்தில்

சொல்லி வைத்த சேதி என்னவோ

பெண்மையின் சொர்கமே பார்வையில் வந்ததோ

காவியம் தந்ததோ

https://www.youtube.com/watch?v=eavNXIrVddI

இயக்குநர் கே.பாக்யராஜ் & இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் 

கூட்டணியின் ஆரம்பப் படமாக அமைந்தது “பாமா ருக்மணி”.

அந்தப் படத்தின் பெயரை உச்சரிக்கும் போதே

“நீ ஒரு கோடி மலர் கூடி உருவானவள்

எழில் உருவானவள்”

https://www.youtube.com/watch?v=HjmStSr_zpY

என்று எஸ்பிபி அடிமனசில் பாடத் தொடங்கி விடுவார்.

பாக்யராஜின் முதல் மனைவி பிரவீணாவும் படத்தில் ஒரு நாயகியாக இணைந்த படமிது.

கே.பாக்யராஜின் ஆஸ்தான பாடலாசிரியர்களில் ஒருவரான புலவர் சிதம்பரநாதன் வரிகளில் “நீ ஒரு கோடி மலர் கூடி” பாடலோடு 

Take Somebody 

https://www.youtube.com/watch?v=PrdPUXhiCOs

என்ற துள்ளிசைப் பாடலும் உருவானது இப்படத்துக்காக.

எல்.ஆர்.ஈஸ்வரியோடு அந்தப் பாடலை இணைந்து பாடியவர் மெல்லிசை மன்னரின் உதவி இசையமைப்பாளர் ஜோசப் கிருஷ்ணா.

கூக்காட்டும் அந்த ஆண்குரலாக மெல்லிசை மன்னரின் பல படங்களில் அடையாளப்பட்டிருப்பார் இங்கும் அப்படியே.

“கோகுலக் கண்ணன் நீயென்று 

இந்தக் கோதைக்குத் தெரியும்”

வாணி ஜெயராம் குரலில் ஒரு பாடலும்,

“கதவைத் தெறடி பாமா

என் காலு வலிக்கலாமா”

என்ற பாடலை பாக்யராஜின் ஆஸ்தான குரலாளர் மலேசியா வாசுதேவன் பாடவும் இன்னொரு பாடலுமாக

கவிஞர் முத்துலிங்கம் பாடல்களை எழுதினார்.

கே.பாக்யராஜின் திரைப்பயணத்தில் இன்னொரு சிகரம் “ஒரு கை ஓசை” வாய் பேச முடியாதவராக, அழுத்தமான நடிப்பினால் நாயக பிம்பத்தை உடைத்துப் பரவலான வெகுஜன அபிமானம் பெற்றவர் கே.பாக்யராஜ்.

இங்கும் மெல்லிசை மன்னர் கூட்டோடு 

“முத்துத்தாரகை வான வீதி வர

தங்கத்தேரென பூவை தேடி வர

ஊர்கோல நேரமிது”

https://www.youtube.com/watch?v=Con3PS60Jvg

என்ற அற்புதமான பாடலை எஸ்பிபியுடன், சுசீலா பாடியிருப்பார்.

அந்தப் பாடலை எழுதியவர் பின்னாளில் பிரபல வில்லனாகத் திகழ்ந்த ஆர்.பி.விஸ்வம்.

வழக்கம் போலத் தன் கூட்டணிப் பாடலாசியர்கள் புலவர் சிதம்பரநாதன், கவிஞர் முத்துலிங்கத்துக்கும் பாடல்களைக் கொடுத்ததோடு இன்னொரு புதுமை படைத்திருப்பார் பாக்யராஜ்.

அது என்னவெனில் பைரவி என்ற பாடலாசிரியரை வைத்து விடுகதைப் பாணியிலேயே சொல்லும் பாடலொன்றை எழுதி அந்த விடுகதையைப் பாடிப் பின் விடையையும் பகிரும் குரலாக மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனையே பாட வைத்து, படத்தின் எழுத்தோட்டப் பாடலாக்கி விட்டார். 

அந்தப் பாடல் தான்

“சேலை இல்லே ரவிக்கை இல்லே புள்ளே”

https://www.youtube.com/watch?v=BXUcsLN5_qk

கேட்டுப் பாருங்கள், புதுமையாக ரசிக்க வைக்கும்.

கே.பாக்யராஜின் பலமே இன்னார் தான் இசை, இன்னார் தான் பாட்டு எழுத வேண்டும் என்ற ஒரு வரையறைக்குள் சிக்காமல் எம்.எஸ்.விஸ்வநாதன் முதற்கொண்டு இளையராஜா, சங்கர் - கணேஷ், கங்கை அமரன் ஈறாகவும் அப்படியே தானும் இசையமைத்துத் தீபக் இடமும் கை மாற்றிய பாங்கில் அவரது திரைப்பயணம் அமைந்திருந்தது.

அண்மையில் இயக்குநர் மு.களஞ்சியம் பேட்டியில் “தனக்கு இளையராஜா இசை தான் வேண்டும்” என்று கவிதாலயாவுக்குப் படம் பண்ண ஒப்பந்தமான போது, 

“உனக்கு உன் மேல் நம்பிக்கை இல்லையா?” 

என்று கே.பாலசந்தர் சொன்னதை அப்படியே கே.பாக்யராஜிடம் பொருத்திக் கொண்டேன்.

அற்புதமான கதை சொல்லியிடம் எல்லாமே வயப்படும். அதே நேரம் கதையில் தொய்வு இருந்தால் இசை இளையராஜாவாகவே இருந்தாலும் தூக்கி நிறுத்த முடியாது என்பதற்கு கே.பாக்யராஜின் இசைக் கூட்டணிகளே சான்று பகரும்.

கானா பிரபா

07.01.2025


ஈச்சம் பழம் நாவப்பழம் என் மாமா உன்ற கருப்பு


புதிய மன்னர்கள் படத்தில் தன் வழக்கமான கூட்டணிப் பாடலாசிரியர் பழநி பாரதியோடு, இயக்குநர் விக்ரமன் ரஹ்மானுடன் இணைகிறார்.

ஒண்ணு ரெண்டு மூணடா பாடல் மட்டும் கவிஞர் காளிதாசன் (திருப்பத்தூரான்) வரிகளில் இசையமைக்கப்பட்டாலும், மீதி நான்குமே பழநி பாரதி ஒரே பாடலாசிரியருக்குப் போகின்றது

ஒரு பாடலின் சூழலைச் சொல்லி ஏ.ஆர்.ரஹ்மானிடம் அதற்கான டியூன்களை வாங்கி திருப்தி தராத சூழலில் நாலைந்து மாதங்கள் காத்திருப்பில்

“நீங்களே ஒரு பாடலைக் கொடுங்கள் இசையமைத்துத் தருகிறேன்” என்று ரஹ்மான் வேண்டவும்,

பழநி பாரதியை வைத்து பாடல் எழுத வைத்து ஒரு மணி நேரத்தில் திருப்தியோடு பதிவான பாட்டுத் தான் “நீ கட்டும் சேலை மடிப்பில நான்” . அந்தப் பாடல் பெற்ற பெரும் புகழே இந்தப் படத்துக்கும் ஆப்பாய் அமைந்ததை விக்ரமன் தன் நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால் பட வெளியீட்டில் இன்னொரு படம் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பழநி பாரதி வரிகளில் வெளியாகி முந்தி விட்டது.


அந்தப் பாடல் தான் "பவித்ரா" படத்தில் இடம்பெற்ற

"ஈச்சம் பழம் நாவப்பழம் என் மாமா உன்ற கருப்பு"

https://www.youtube.com/watch?v=BYzXIGaxa1U

"மதுற மதுற தான்"

"கோயமுத்தூர் கோயமுத்தூர் தாண்டி"

அதைத் தொடர்ந்து கோவை சரளாவின் கோயம்புத்தூர் பேச்சு சரமாரியாகக் கொட்டவும், பாடல் தொடங்கும்.

வடிவேலுவுக்காக சாஹுல் ஹமீதுவும், கோவை சரளாவுக்காக சித்ராவும் பாடியிருப்பார்கள்.

கோவை சரளாவுக்கு இளையராஜாவும் (மாருக்கோ மருக்கோ - சதிலீலாவதி), ஏ.ஆர்.ரஹ்மானும் ( ஈச்சம்பழம் நாவப்பழம்) இசையமைக்க சித்ரா பாடியது பெருமை மிகு வாய்ப்பு என்றால்,

வடிவேலு இளையராஜா & ஏ.ரஹ்மான் இசையில் தானே பாடியது இன்னும் பெரும் வாய்ப்பு.

ஏ.ஆ.ரஹ்மானிடம் ஐந்து பாடல்கள் வாங்கி விட்டால் போதும் என்ற காலத்தில் இந்த மாதிரிப் பாடல்களில் அவரின் வித்தகத் திறன் புதுமையாக வெளிப்பட்டிருக்கும். அந்தக் காலத்தில் பண்பலை வானொலிகளின் ஆரம்ப யுகத்தில் கொழும்பு எஃப் எம் 99 வானொலியில் சக்கை போடு போட்ட பாடல்களில் இந்த ஈச்சம் பழமும் ஒன்று.