சிலர் எவ்வளவு கோபப்பட்டு வார்த்தையைக் கக்கினாலும் அவர்களின் குரலில் ஒரு ஓசை நயமும், தண்மையான ஒலியாகவே வெளிப்படும். அப்படியொரு குரல் ஜெயச்சந்திரனுக்கு. இதே பாங்கில் வாணி ஜெயராமின் குரலையும் கவனிக்கலாம். இந்தக் குரல்களுக்குள் சங்கீதம் தடவியிருக்கும். பேசும் போதும் ஏதோ சுரம் பிரித்துப் பாடும் ஒரு ஜீவன் இருக்கும்.
கலைவாணி என்ற இயற்பெயர் கொண்ட திருமதி வாணி ஜெயராம் அவர்கள் நவம்பர் 30 ஆம் திகதி, 1945 ஆம் ஆண்டு வேலூர் மாவட்டத்தில் பிறந்தவர்.
சாஸ்திரிய சங்கீத மற்றும் இந்துஸ்தானி இசை மரபுடனோடு திரையிசைப் பாடகியாகக் களமிறங்கிய அவரின் குரலில் மிளிர்ந்த பாடல்களைக் கேட்கும் போது ஜேசுதாஸ் குரலில் கொடுக்கும் தெய்வீக உணர்வு மிளிரும்.
கவியரசு கண்ணதாசனும், வைரமுத்துவும் விதந்து பாராட்டிக் கட்டுரை எழுதுமளவுக்கு அவர்களைப் போன்ற உயரிய பாடலாசிரியர் வரிகளுக்கு மகத்துவம் செய்தவர்.
வாணி ஜெயராம் அவர்களைச் சில ஆண்டுகளுக்கு முன்னர் வானொலி நேர்காணல் வழியாகச் சந்திக்க நேர்ந்தது.
அந்தப் பேட்டியின் வழியாக,
தனது இரண்டு வயதில் பாடத் தொடங்கியவர் ஐந்து வயதில் முறையாக சாஸ்திரிய சங்கீதத்தைக் கற்ற அனுபவம், தொடர்ந்து உஸ்தாத் அப்துல் ரஹ்மான் கான் அவர்களிடம் ஹிந்துஸ்தானி சங்கீதத்தைக் கற்றதன் விளைவாக, வசந்த் தேசாய் இசையில், ரிஷிகேஷ் முகர்ஷி இயக்கிய Guddi திரைப்படத்துக்காக 3 பாடல்கள் கிடைத்ததும்,
அதன் வழியாகப் பெற்ற தான்சேன் விருது குறித்தும்
தமிழில் தன்னுடைய முதல் வாய்ப்பு எஸ்.எம் சுப்பையா நாயுடு இசையில் "தாயும் சேயும்" என்ற வெளிவராத படத்துக்காக "பொன் மயமான காலம் வரும்" அதனைத் தொடர்ந்து வீட்டுக்கு வந்த மருமகள் படத்துக்காக சங்கர் கணேஷ் இசையில் “ஓரிடம் உன்னிடம்” பாடலை டி.எம்.செளந்தரராஜனுடன் பாடிய அனுபவம்,
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் முதன் முதலாய்ப் பாடிய "மல்லிகை என் மன்னன் மயங்கும்" மற்றும்
அவருக்குக் கிட்டிய மூன்று தேசிய விருது அபூர்வ ராகங்கள், சங்கராபரணம், ஸ்வாதி கிரணம் ஆகிய படங்கள் குறித்தும்
தான் ஹிந்திப் பாடல்களைப் பாடவேண்டும் என்ற இலட்சியத்துக்குக் காரணமாக அமைந்த
தன் இளம் பிராயத்தில் றேடியோ சிலோன் இல் புதன் கிழமைகள் தோறும் ஒலிபரப்பான ஹிந்திப் பாடல்கள் பினா காத் கீத் மாலா நிகழ்ச்சி, அந்த நிகழ்ச்சியில் பின்னர் தன் ஹிந்திப் பாடலான போலாரே பாடல் 16 வாரங்கள் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து ஒலிபரப்பானதும் கனவு பலித்ததும், தமிழ்ப் பாடல்களை றேடியோ சிலோன் கவி நயத்தோடு தொகுத்து அளித்ததை நெகிழ்வோடு பேசினார்.
தற்போது வானொலி நிலையங்கள் பெருகியிருந்தாலும் பாடகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் குறித்துப் பேசாதிருப்பதை ஆதங்கத்தோடு குறிப்பிட்டார்.
வாணி ஜெயராம் ஒரு கவிஞர். தானே எழுதிய முருகன் பாடல்களைத் தனது குடும்ப நிறுவனமான பானி மியூசிக் கம்பெனி வழியாகத் தானே இசையமைத்து முருகன் பாடல்கள் என்று வெளியிட்டிருக்கின்றார்.
ஒரிய மொழிப் பாடல்களைத் தொடர்ச்சியாக 11 ஆண்டுகள் பாடிய அனுபவம், பாடகருக்கு மொழிச் சுத்தம் எவ்வளவு அவசியம் என்பதைப் பாடிக் காட்டிச் சிறப்பித்தார் பேட்டியில்.
வாணி ஜெயராமுக்கு "மேகமே மேகமே", "யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது" ஆகிய அற்புதமான பாடல்களை அளித்த சங்கர் கணேஷ் குறித்தும், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா குறித்தும் பேட்டியில் பேசினோம்.
இதுவரை 18 மொழிகளில், 52 வருடங்களாகத் திரைத்துறையில் பாடகியாக வலம் வந்தவர் வாணி ஜெயராம் அவர்கள்.
வாணி ஜெயராம் அவர்களோடு நான் நிகழ்த்திய பேட்டியைக் கேட்க
https://youtu.be/rrjMKweW5Wc
முந்திய தினங்களில் விடை பெற்றுப்
போன கே. விஸ்வநாத் அவர்களின் சங்கராபரணம் மற்றும் ஸ்வாதி க்ரணம் ஆகிய படங்கள் வாணி ஜெயராமுக்குத் தேசிய விருதுகளைக் கொடுத்தது போலவே, சங்கராபரணமும், சாகர சங்கமமும் (சலங்கை ஒலி) எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு இரண்டு தேசிய விருதுகளைக் கொடுத்திருக்கிறது.
கானா பிரபா
பொங்கும் கடலோசை
தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே
கொஞ்சும் தமிழோசை.....
குறிகாட்டுவான் இறங்குதுறையில் இருந்து நயினாதீவுக்கு படகு ஏறும் போது மனதில் ஏறிக் குந்திக் கொள்ளும் இந்தப் பாட்டு.
என்னுடைய அதிகபட்சக் கடல் பயணங்கள் என்று எண்ணிப் பார்த்தால் நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயம் நோக்கிப் பயணிக்கும் அந்தப் படகுச் சவாரி என்பதாலும் இந்தப் பாட்டு சினேகபூர்வமாக அந்தக் கடலைக் கடக்கும் போது பழக்கப்பட்ட விருந்தாளி போலச் சந்திக்கும் போல.
பொங்கும் கடலோசை பாட்டை ஒரு வள்ளத்தில் இருந்து இசைக்கும் தோற்றப்பாட்டுடனேயே அனுபவிக்கிறேன்.
ஆரம்பத்தில் வாணியம்மா கொடுக்கும் ஆலாபனையின் பின்னால் கீற்றாக எழும் ஒலி அந்த வள்ளத்தில் இறங்கி அமர்ந்த பின் கடல் கொண்டு வந்து வள்ளத்தின் சாளரத்தினால் ஊடுருவி ஒற்றியெடுக்கும்
சிறு நீர்த்திவலைகள் போலத் தோன்றும்.
அப்படியே அந்த ஆலாபனை முடிந்ததும் பளீரென்று கொட்டுமே ஒரு இசை
படகிலிருந்து வளைத்துத் தள்ளும் கடல் நீர்க் கோவை போல ஒலிக்கும்.
பாட்டு முழுக்க வரும் அந்த ரிதம் ஆகா ஆகா கடலின் மடியில் அமர்ந்து பயணிக்கும் வள்ளத்தை மேலும், கீழுமாக ஆட்டி ஓராட்டும் ஒரு தாய்மை உணர்வின் துள்ளல் அல்லவா?
பொங்கும் கடலோஓஓஓஓஓஓசை........
வாணியம்மா பாடும் அந்த நீட்சியில் திறந்த கடல் வெளியில் எதிரொலித்துத் திரும்புமாற்போல ஒரு உணர்வு.
வாணி ஜெயராம் ஒரு தமிழ் இசைக் கடல் என்று நிரூபிக்கும் பாட்டு.
“சாதனை செய்கையில் சோதனை தோன்றினால்
மயங்குவதேனோ......?”
“நீரலை மேடையில்
மீனவன் நாடகம் நடிப்பதும் ஏனோ ?”
சரணத்தில் அவர் கொடுக்கும் அந்த நிரவல்களின் நளினம், ஒரு சொற் துண்டை எடுத்து நெகிழ்ந்து பிளந்து கொடுக்கும் அந்த நீட்சி அப்பப்பா அந்த அகண்ட சமுத்திரத்தின் சுதந்திரக் குளியல் அல்லவா?
1983 படத்துக்காக ஜெயச்சந்திரனையும், வாணி ஜெயராமையும் இணைத்து
“ஓலஞ்ஞாலி குருவி”
https://youtu.be/9MSxbBWZJn4
பாடலைப் பாட வைத்த கோபி சுந்தர் சொல்கிறார் இப்படி
“ஒரு வல்லிய அனுக்ரஹம்”……
“பற பற பற கவலயில்ல
மனுஷ வாழ்க்கை”
என்று யுகபாரதி வரிகளில் மலை படத்துக்காகத் தன் கலைப் பயணத்தின் நிறைவில் பாடி விட்டுப் போயிருக்கிறார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு என்று ஒரு தெய்வீகம் தேடும் குரலாக இன்றும் என்றும நிலைத்து நிற்பவர் இந்தக் “கலைவாணி”.
நினைவலைகள்
தொடர்ந்து வந்தால்
நேரமெல்லாம்
கனவலைகள் 💚
கானா பிரபா