இந்த ஆண்டின் கலையுலக இழப்புகளில் இவரும் ஒன்றானார், ஆனால் 2K kids யுகத்தில் அதிகம் கவனிக்கப்படாமல் கடந்து போய் விட்டது இவரின் இழப்புச் செய்தி.
ஷண்முகப்ரியனின் "விளிம்பு" நாடகம் தான் "அன்னக்கிளி" இரட்டையர் தேவராஜ் - மோகன் இயக்கிய "உறவாடும் நெஞ்சம்" படத்தின் மூலக்கதை.
பின்னாளில் தேவராஜன் தனித்து இயக்கிய "ஆயிரம் முத்தங்கள்", புரட்சிக் கலைஞர் விஜய்காந்த் நடித்த வித்தியாசமான கதையமைப்பு கொண்ட "ஈட்டி" மற்றும் மணிவண்ணன் இயக்கிய "உள்ளத்தில் நல்ல உள்ளம்", சிவகுமாரின் "ஆணிவேர்", சத்யராஜ் & பிரபுவின் "சின்னதம்பி பெரியதம்பி" உள்ளிட்ட படங்களின் கதாசிரியராகவும், வசனகர்த்தாவாக "பிரம்மா", மற்றும் "வெற்றி விழா" படத்தில் இணை கதை & வசனகர்த்தா என்று 50க்கும் மேற்பட்ட படங்களுக்கும்,
இயக்குநராக எண்பதுகளில் ஒரு வித்தியாசமான படைப்பாக வந்த சிவகுமார், பிரபு, ரகுமானின் "ஒருவர் வாழும் ஆலயம்", சத்யராஜின் "மதுரை வீரன் எங்க சாமி", ராமராஜனின் "பாட்டுக்கு நான் அடிமை" போன்ற படைப்புகளையும் இயக்கியிருந்தார்.
வலைப்பதிவு உலகத்தில் சமகாலத்தில் தீவிரமாக எழுதிய வலைப்பதிவர்களில் ஷண்முகப்ரியனும் ஒருவர். அவரின் வலைப்பதிவு இதுதான் http://shanmughapriyan.blogspot.com/
10 வருடங்களுக்கு முன்னர் அவரோடு வலைப்பதிவுகளில் நட்போடு இருந்தேன். அந்த அறிமுகத்தில் ஒரு வானொலிப் பேட்டி செய்ய வேண்டும் அதில் உங்கள் அனுபவங்களைப் பதிவாக்க வேண்டும் என்று கேட்டிருந்தேன்.
இப்போது வேண்டாம் நான் ஒரு படம் இயக்கத் தீர்மானித்திருக்கிறேன். அந்தப் படைப்பு வெளியாகும் சமயத்தில் செய்தால் பொருத்தமாக இருக்கும் என்று சொல்லி விட்டார். ஆனால் அதன் பின்னர் அவரைப் வலைப்பதிவுகளிலும் காணவில்லை.
சில மாதங்களுக்கு முன்னர் ஒரு எண்ணம் தோன்றி ஃபேஸ்புக்கில் தேடினேன் அவரின் ஐடி கிடைத்தது. நட்பு விண்ணப்பம் போட்டுவிட்டுக் காத்திருந்தேன். பெப்ரவரி 2 ஆம் திகதி அவரின் பிரிவுச் செய்தி கிடைக்கும் வரை அந்த நட்பு அழைப்பு Pending இல் இருந்தது.
அவரின் கலையுலகப் பயணத்தை முழுமையாகப் பதிவாக்கும் வாய்ப்பும் கலைந்து போயிற்று.
கானா பிரபா
0 comments:
Post a Comment