Pages

Tuesday, October 27, 2020

எஸ்பிபி ❤️ பாடகன் சங்கதி பாகம் 17 இயக்குநர் வம்சி கூட்டில் இசைஞானி இளையராஜாவும் எஸ்பிபியும் 11 படங்கள் & 48 பாடல்கள்


தெலுங்கு தேசத்தில் எண்பதுகளில் கொடிகட்டிப் பறந்த முன்னணி இயக்குநர் வம்சி படத்தில் மொத்தம் 48 பாடல்களை எஸ்பிபி பாடியிருக்கிறார், இந்தக் கணக்கு இசைஞானி இளையராஜாவோடு கூட்டுச் சேர்ந்தது மட்டுமே. இவை தவிர வம்சி முதன் முதலில் இயக்கிய Manchu Pallaki (தமிழில் பாலைவனச் சோலை படத்தின் தெலுங்குப் பதிப்பு) படத்தில் இருந்து இரண்டாவது படமாக வம்சி இளையராஜா கூட்டுச் சேர்ந்த அடுத்த 11 படங்கள், இடையில் லாயர் சுஹாசினி படத்துக்கு இசை எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களே அதில் 4 பாடல்களையும் அவரே பாடினார்.
அதைத் தொடந்து இயக்குநர் வம்சியே இசையமைப்பாளராகித் தன் படங்களுக்கு இசை கொடுத்த போதும் தவிர்க்க முடியாத பாட்டுக்காரராக எஸ்பிபியே இருந்தார்.


அதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் வம்சியின் முதல் 10 படங்களில் ( அதில் 9 இளையராஜா) எஸ்பிபி மட்டுமே ஆண் பாடகர். பாடகிகள் தேர்வு மட்டும் எஸ்.ஜானகி, சைலஜா, சித்ரா என்று மாறும்.
இயக்குநர் வம்சி & இசைஞானி இளையராஜா கூட்டுச் சேர்ந்த பதினோராவது படமான April 1 Vidudala படத்தில் மட்டும் 2 பாடல்களை மனோ பங்கு போட்டுக் கொண்டார். மீண்டும் 12 வது படமான Detective Narada படத்தில் வந்த ஐந்து பாடல்களையும் எஸ்பிபி மட்டுமே அள்ளிக் கொண்டார்.  அவ்வளவுக்குத் தீவிரமானதொரு கூட்டாக இம்மூவரின் இசைக் கூட்டணி அமைந்திருக்கின்றது.  உச்சபட்சமாக "Sri Kanaka Mahalakshmi Recording Dance Troupe"படத்தில் ராஜா இசையில் சுளையாக 6 பாட்டுகள் எஸ்பிபிக்கு.

இயக்குநர் வம்சி, "சங்கராபரணம்" புகழ் கே.விஸ்வநாத் உடைய உதவி இயக்கு நராக இருந்து படம் இயக்க வந்தவர். அதாவது எஸ்பிபிக்கான தேசிய விருது வாங்கிய படக் குழுவில் ஒருவர். ஆனாலும் எஸ்பிபியை இவ்வளவு தூரம் வம்சி நேசித்துத் தன் படங்களில் தொடர்ந்து வைத்திருந்தது குறித்து அவருடைய பேட்டிகளைக் காணக் கிடைக்கவில்லை. 

எண்பதுகளில் தமிழில் இயக்குநர் கே.ரங்கராஜ் படங்கள் ஒவ்வொன்றிலும் இளையராஜா இசை இடம்பெற்றிருந்ததோ அதற்கு நிகராக தெலுங்கில் இயக்குநர் வம்சியைச் சொல்லுமளவுக்கு அவர் ஒரு இளையராஜா வெறியர். சும்மாவே ராஜா அள்ளி அள்ளிக் கொடுத்தவர் வம்சியோடு தொடர்ந்து இசைக் கூட்டணி என்றால் சொல்லவா வேண்டும்? அவ்வாறமைந்த தெலுங்கு மூலப் பாடல்களின் இசை வடிவம் பின்னாளில் வெவ்வேறு தமிழ்ப்படங்களிலும் இடம்பெற்றிருந்தன.

இயக்குநர் வம்சி பிலிம்ரோல் இல்லாமல் கூட படம் எடுத்துவிடுவார் ஆனால் பானுப்ரியா இல்லாமல் படம் இல்லை என்னுமளவுக்கு சித்தாரா தொடர்ச்சியாக நான்கு படங்களில் நாயகியாக்கி
தெலுங்கில் அவருக்கு ஒரு நல்ல வாய்ப்புத் தளத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர். அப்படியே பானுப்ரியா மீது ஒருதலைக் காதலும் கொண்டார். அது மட்டும் நிறைவேறியிருந்தால் இன்றுவரை மனமொத்த தம்பதியராக வாழ்ந்திருப்பரோ என்னவோ.

துரதிஷ்டத்தை அதிஷ்டமாக மாற்றும் வல்லமை கொண்ட இசை என்று இந்தப் பாடலை முன்னுதாரணப்படுத்தலாம். இல்லையா பின்னே, நிழல்கள் திரைப்படத்துக்காக எஸ்.ஜானகி பாட இசைஞானி இளையராஜா இசையில் இந்தப் பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டு இசைத்தட்டிலும் வெளிவந்த நிலையிலும் படமாக்காமல் கைவிடப்பட்ட பாடல்.
பின்னர் எப்படி அதிஷ்டத்தை வரவழைத்தது?
எண்பதுகளில் தெலுங்கில் முன்னணி இயக்குனராகக் கலக்கிக் கொண்டிருந்த வம்சி தன்னுடைய "சித்தாரா" திரைப்படத்துக்காக இந்தப் பாடலின் அதே மெட்டுடன் இசைக் கோர்வையைப் பயன்படுத்திக் கொண்டார். தெலுங்கிலும் அதே எஸ்.ஜானகி தான் பாடகி. இந்தப் பாடலைப் பாடியதற்காக எஸ்.ஜானகிக்கு தேசிய விருது கிடைத்தது அதை வாங்கிக் கொடுத்தது பாடல் மீளப் பயன்படுத்தப்பட்ட சித்தாரா திரைப்படம். இதோ அந்த மீளப் பயன்பட்ட பாடல்.


இப்படியாக இயக்குநர் வம்சி & இசைஞானி இளையராஜா கூட்டில் முதல் படமான "சித்தாரா" எஸ்.ஜானகிக்குச் சிறந்த பாடகி உட்பட மூன்று தேசிய விருதுகளைப் பெற்றுத் தந்தது.
அத்தோடு தொடங்கியது இந்த இசைக் கூட்டு.

வம்சி படங்களில் ஒரு சாஸ்திரிய இசை கலந்து அதிகம் ஆர்ப்பரிக்காத மென் சங்கீதப் பாடல்களே விரவி நிற்கும்.

அலைகள் ஓய்வதில்லையில் ஆரம்பித்து ஓயாது அலையடித்துக் கொண்டிருந்த கார்த்திக் இன் பட ஓட்டம் எண்பதுகளில் நடுப்பகுதியில் வாய்ப்பு கொஞ்சம் வற்றி, விசு, ராமநாராயணன் வகையறாக்களின் படங்களில் வந்து போய்க் கொண்டிருந்தார்.

தெலுங்குத் திரையுலகம் சென்று அங்கும் குறிப்பிட்ட சில படங்களில் நடித்தார்.
அதில் ஒன்று தான் தெலுங்கில் கார்த்திக், பானுபிரியா ஜோடி போட்ட அன்வேஷனா (Anveshana) தெலுங்கின் பிரபல இயக்குநர் வம்சியின் கைவண்ணத்தில் 1985 இல் வந்தது.

அன்வேஷனா படம் பின்னர் தமிழில் பாடும் பறவைகள் என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டது. அப்படத்தில் வந்த பாடல்களில் ஒன்றான "கீரவாணி! இரவிலே கனவிலே பாடவா நீ", தமிழிலும் வெகு பிரசித்தம்.

அன்வேஷனா படத்தில் வந்த "இலலோ" என்ற


இந்தப் பாடல் அன்பின் முகவரி படத்திற்காக "உயிரே உறவே" எனத் தமிழில் வந்திருக்கிறது, எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பாடியிருக்கிறார்கள். இதே பாடல் மெட்டு தெலுங்கில் "அபிநந்தனா" தமிழில் "காதல் கீதம்" என்ற பெயரில் வந்த படத்திலும் "வாழ்வா சாவா" https://www.youtube.com/watch?v=OaVfcUrYfMc என்று எஸ்பிபி பாடும் தனிப் பாடலாக இன்னொரு சுற்றும் வந்திருக்கின்றது.கீரவாணி ராகத்திலேயே அமைந்த இப்பாடலை ராகதேவன் இளையராஜாவின் இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பாடுவதை இன்னும் 25 வருஷம் கழித்தும் அதே இனிய சுகத்தோடு கேட்கலாம். பெரும்பாலும் மொழி மாற்றப்படும் பாடல்கள் வேறு பாடகரை வைத்துப் பாடப்படுவது வழக்கம். ஆனால் அதே ஜோடி தமிழிலும் பாடியது இன்னும் சிறப்பாகப் பாடலை ரசிக்க வைக்கிறது.
இந்தப் பாடலின் ஆரம்பத்தைக் கேட்கும் போது இன்னொரு பாடலுக்கு இழுத்துக் கொண்டு போய் விடும். அதுதான் "யாரோடு யாரோ நீ எந்த ஊரோ இளையவளே" என்ற "சலங்கையில் ஒரு சங்கீதம்" படப் பாடல். இந்தப் படமும் இயக்குநர் வம்சி இயக்கிய "ஆலாபனா" என்ற தெலுங்குப் படத்தின் மொழி மாற்று. இதற்கும் இளையராஜாவே இசை.

"ஆவேஷ மந்தா" பாட்டு ஆலாபனா என்ற தெலுங்குப் படத்திலும், பின்னர் "யாரோடு யாரோ நீ எந்த ஊரோ" என்று சலங்கையில் ஒரு சங்கீதம் ஆக தமிழுக்கு மொழி மாற்றிய போதும் இரண்டு வடிவத்தையும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களே பாடியது இன்பமான "ஆறுதல்" பரிசு. இல்லாவிட்டால் "மனோ"கரமாக இருந்திருக்கும். இந்தப் பாட்டெல்லாம் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கேயான சொத்து. அதை நிரூபிக்கிறது பாடல் நெடுக வழிந்தோடும் சங்கதிகளை அவர் கொடுக்கும் பாங்கு. இந்த ஆலாபனைகளுக்குப் பதில் இசைக் கோவையைக் கூட ராஜா பயன்படுத்தியிருக்க முடியும். ஆனால்
"இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண் விடல்" ஆக இளையராஜா, எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்கான இன்னொரு பொக்கிஷப் பாடலாக இதனை யாத்திருக்கிறார்.

பானுப்பிரியா ப்ரியனான அவர் மீண்டும் தன் ஆத்ம நாயகியை, மோகனோடு ஜோடி சேர வைத்து ஆலாபனா திரைப்படத்தை இயக்கியிருந்தார். பின்னர் தமிழில் சலங்கையில் ஒரு சங்கீதம் என்று மொழி மாற்றம் கண்டது. பாடல்கள் அனைத்தும் வைரமுத்து எழுதினார்.

வம்சி தெலுங்கில் இயக்கிய April 1st Vidadala படத்தில் இடம்பெற்ற "ஒம்புல வைகரி"
தெலுங்கு தேசம் அள்ளிக் கொண்ட ஒரு சூப்பர் ஹிட் பாட்டு.

"தெலுங்கு பாக்யராஜ்" ராஜேந்திர பிரசாத் மற்றும் ஷோபனா நடித்த April 1st Vidudala திரைப்படத்தைத் தமிழில் "சத்தியவான்" என்ற பெயரில் ராஜ்கபூர் இயக்கி "முரளி , கெளதமி ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் வந்த "சூப்பர் வீடியோ சூப்பர் வீடியோ" பாட்டு அந்த நாளில் வீடியோக் கடைகளின் விளம்பரத்துக்கும் கூடப் பாவிக்கப்பட்டது. "காற்றினிலே வரும் கீதம்" திரைப்படத்தில் வந்த "சித்திரைச் செவ்வானம் சிரிக்கக் கண்டேன்" என்ற பாடலை மீள் வடிவமாக "எப்பவும் நாந்தாண்டா இங்கொரு ராஜா" என்றும் பயப்படுத்தினார் இளையராஜா.
அதன் தெலுங்கு வடிவத்திலும் மனோவே பாடினார்.
வம்சி இயக்கிய Preminchu Pelladu படத்தில் "Ee Chaitra Veena" என்ற

இந்தப்பாடல் "ஆனந்தக் கும்மி" படத்திற்காக "ஓ வெண்ணிலா" எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி குரல்களிலும், "Maharshi" படத்தில் வரும் Maata Raani பாட்டு


"செண்பகமே செண்பகமே" படத்தில் வரும் "மஞ்சப்பொடி தேய்க்கையிலே" எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலிலும்,

Chettu Kinda Pleader படத்தில் வந்த Chalti Ka Naam Gaadiதமிழில் அம்மன் கோயில் கிழக்காலே படத்தில் வரும் "சின்ன மணிக் குயிலே" பாடலாக ஆதியிலும் அமைந்திருந்தது.

மேலும் Swarakalpana


தெலுங்கில் எஸ்பிபி & சித்ரா பாடிய "ஒம்புக வைகரி" பாட்டு தமிழில் மனோ சித்ரா குரல்களில் "கண்மணி கண்மணி மின்னிடும் பைங்கிளி" பாடலின் ரிதம் 90களில் இசைஞானி பயன்படுத்திய பக்கா காதல் துள்ளிசை.

Prema Yatralaku

என்ற பழைய பாட்டு கண்டசாலாவே இசைமைத்து பி.சுசீலாவுடன் பாடியது. இந்தப் பாட்டுத் தமிழிலும் "மனிதன் மாறவில்லை" என்று மொழி மாற்றப்பட்ட போது "காதல் யாத்திரைக்கு பிருந்தாவனமும்"
என்றானது. சரி அதற்கும் எஸ்பிபிக்கும் என்ன சம்பந்தம்?

எஸ்பிபியின் ஆத்மார்த்தப் பாடகர் கண்டசாலாவின் அந்தப் பாடலையே நவீனப்படுத்தி இளையராஜா 
Detective Narada படத்தில் ஒரு புதுமை விருந்து கொடுத்தார். அப்படியாக எஸ்பிபி & சித்ரா பாடியது தான்.
Prema Yatralaku Brundhavanamu

https://www.youtube.com/watch?v=iID9dqKgh74

Detective Narada படத்தில் வரும் இன்னொரு பாட்டு  "Jhummani Thummedha"

https://www.youtube.com/watch?v=RfGrOWsNrso

தமிழில் "பொங்கி வரும் காவேரி" படத்துக்காக இளையராஜா கொடுத்த "தினமும் சிரிச்சு மயக்கி" பாட்டு ரிஷிமூலம், நதிமூலம் சொல்லும்.


இசைஞானி இளையராஜா & வம்சி கூட்டில் எஸ்பியோடு இணைந்த படங்களின் பாடல்கள் முழுமையாகக் கேட்க, ஒவ்வொரு படங்களிலும் எஸ்பிபி பாடிய பாடல் எண்ணிக்கையையும் கொடுக்கிறேன்.

Sitara ( எஸ்பிபிக்கு 4 பாட்டு)Anveshana ( எஸ்பிபிக்கு 2 பாட்டு)
Preminchu Pelladu ( 5 பாட்டும் எஸ்பிபி)ஆலாபனா ( 6 பாட்டும் எஸ்பிபி)Ladies Taylor ( 4 பாட்டும் எஸ்பிபிக்கு)


Maharshi ( 5 பாட்டும் எஸ்பிபிக்கு)


Sri Kanaka Mahalakshmi Recording Dance Troupe ( எஸ்பிபிக்கு 6 பாடல்கள்)Chettu Kinda Pleader ( 4 பாட்டும் எஸ்பிக்கு)Swarakalpana (எஸ்பிபிக்கு 5 பாடல்கள்)


April 1 Vidudala  (எஸ்பிபிக்கு 2 பாடல்கள்)
Detective Narada ( 5 பாட்டும் எஸ்பிபிக்கு)
கானா பிரபா

#பாடும்_நிலா #SPB

Monday, October 26, 2020

எஸ்பிபி ❤️ பாடகன் சங்கதி பாகம் 16 🎸இசையமைப்பாளர் விஜயபாஸ்கருக்கு தமிழில் அணி செய்த எஸ்பிபி


"சம்சாரம் என்பது வீணை

சந்தோஷம் என்பது ராகம்

சலனங்கள் அதில் இல்லை
மணம் குணம் ஒன்றான முல்லை........."

https://www.youtube.com/watch?v=-UWCoWEieKs

இந்தப் பாடலைக் கேட்ட மாத்திரத்தில் கரைந்துருகும் இசை ரசிகர்கள் நான்கு தசாப்தம் கடந்து இன்னும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு பக்கம் தன்னை நேசிக்கும் கணவனின் கொண்டாட்டம், இன்னொரு புறம் தன் விடலைப் பருவத்தில் அறியாது மோகித்தவன் முன்னே, இந்தச் சதுரங்க ஆட்டத்தில் அவளின் பழைய கதைத் தெரிந்து வஞ்சம் தீர்க்கக் காத்திருக்கும் இன்னொருவன் என்று கதையோட்டத்தின் மிக முக்கியமான மையப் புள்ளியில் நிலை கொண்ட பாட்டு அது. தன் கல்லூரிக் காலத்தில் நாயகி செய்த
அவளுக்கு ஒப்பாத குறும்புத் தனமொன்றைக் கண்டு அவளை திருமணத்துக்குப் பின் தொடர் அச்சுறுத்தல் கொடுக்கும் பாத்திரத்தில் தோன்றும் அவர் இந்தப் பாடலில் தேங்காய் சீனிவாசன் வில்லத்தனத்தை நமுட்டுச் சிரிப்போடு கொடுக்கும் பாங்கே தனி.

இது ஒருபுறமிருக்க, வானொலி வாழ்த்து நிகழ்ச்சிகளில் திருமண நாள் வாழ்த்துப் பாடலாகவும் உட்கார்ந்து கொண்ட பாட்டு இது.

"மயங்குகிறாள் ஒரு மாது" எழுபதுகளில் தமிழ் சினிமாவை ஆட் கொண்ட நியூ வேவ் கதைகளின் முன்னோடி. பஞ்சு அருணாசலம் கதை, வசனம் எழுத எஸ்.பி.முத்துராமன் இயக்கிய படமது.

"சுகம் ஆயிரம்" (பஞ்சு அருணாசலம் எழுதியது) என்ற விரகதாபப் பாட்டு, அதற்கு எதிர்மாறாக "ஒரு புறம் வேடம் மறுபுறம் நாகம் இரண்டுக்கும் நடுவே அழகிய கலைமான்" என்ற தவிப்பின் பிரதிபலிப்பில் இன்னொன்று என்று வாணி ஜெயராமுக்கும், "வரவேண்டும் வாழ்க்கையில் வசந்தம்" என்று கே.ஜே.ஜேசுதாசுக்குமாக இன்னொறும் என்று மேலும் முத்தான தித்திப்புப் பாடல்கள் கவியரசர் கண்ணதாசன் படத்தில். மயங்குகிறாள் மாது படமும் சரி, "சம்சாரம் என்பது வீணை" பாடலும் சரி இவை இரண்டும் இல்லாத எழுபதுகளின் தமிழ் சினிமாச் சரித்திரத்தை எழுத முடியாது. அப்பேர்ப்பட்டதொரு கொடுப்பினையை இசையமைப்பாளர் விஜய பாஸ்கர் கொடுத்து விட்டார். அதுவும் பாடும் நிலா எஸ்பிபியின் இசைப் பயணத்தில் இன்ன இன்ன இசையமைப்பாளருக்கு இது என்று பட்டியலிடும் போது "சம்சாரம் ஒரு வீணை" முன்னணியில் திகழும். பாட வந்து சில ஆண்டுகளிலேயே இந்தப் பாடலில் அவர் காட்டியிருக்கும் நேசிப்பு அப்படியே உள்ளமெல்லாம் பொங்கிப் பூரிக்கும் கேட்கும் போதெல்லாம்.
பின்னாளில் "இரயில் பயணங்களில்" படத்தில் வில்லன் ராஜீவ் இந்தப் பாடலை ஒரு கிண்டல் தொனியில் உபயோகித்திருக்கும் பாங்கிலேயே பாடலின் பெறுமதி விளங்கும்.

இசையமைப்பாளர் விஜய பாஸ்கர் கன்னடத்திலும், தெலுங்கிலும் 600 க்கு மேல் படம் பண்ணிக் கோலோச்சிய இசையமைப்பாளர். ஆனால் தமிழில் ஒரு சில படங்கள் வழியாக அதுவும் எழுபதுகளிலேயே அவரது இயக்கம் இருந்திருக்கின்றது. இதற்கு முன்னர் 20 வருடங்களுக்கு முன்னர் அவர் "அன்பே தெய்வம்" என்ற படத்துக்கு இசை கொடுத்தாலும் அத்தோடு கன்னட, தெலுங்கு, தமிழுக்கான மும்மொழிப் படங்களாகச் சம காலத்தில் வெளி வந்தன.

பஞ்சு அருணாசலம் அவர்கள் தன்னை மெல்ல மெல்ல ஒரு தயாரிப்பாளராக அடையாளப்படுத்த எடுத்த முயற்சிகள் தோல்வி கண்டு, பின்னர் புதியவர்களோடு பயணப்பட எண்ணிய போது தான் தமிழில் தன்னை அடையாளப்படுத்த விரும்பிய இசையமைப்பாளர் விஜய பாஸ்கர் அறிமுகம் அவருக்குக் கிடைக்கிறது.

தானே கதை, வசனம் எழுதிய "கல்யாணமாம் கல்யாணம்" படத்தில் விஜய பாஸ்கரையே இசையமைப்பாளர் ஆக்குகிறார். 

"காலம் பொன்னானது

 கடமை கண்ணானது"

https://www.youtube.com/watch?v=Xl8-_0MthMg

எஸ்பிபி அந்தப் படத்தில் பாடிய ராசியோடு கல்யாணமாம் கல்யாணம் ஜெய்சங்கர், ஜெயச்சித்ரா நடிப்பில் வெற்றிச் சித்திரமாகின்றது.

இந்தப் படத்தில் ஹிந்திப் பாடல் வாசனையில் வந்த

"இளமை நாட்டியச் சாலை"

https://www.youtube.com/watch?v=pTaPmKeFB3c

என்ற எஸ்.ஜானகி, T.M.செளந்தராஜன் பாடிய இனிய பாடலையும் பதிவாக்க வேண்டும்.

கல்யாணமாம் கல்யாணம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பஞ்சு அருணாசலம் கதை, வசனம் எழுதிய 

“உன்னைத்தான் தம்பி” படத்திலும் விஜய பாஸ்கர் இசை.

"மணி விளக்கே மாங்கனியே"

பாடலை பி.வசந்தாவுடனும்,

"உனக்கு நான் சொந்தம்" 

என்ற பாடலை வாணி ஜெயராம் உடனும்  எஸ்பிபி பாடி அவை எழுபதுகளில் பூத்த இனிய பாடல் வகையறாக்குள் வந்து சேர்ந்தன.பஞ்சு அருணாசலம் அவர்கள் ஒரு காலத்தில் ராசி இல்லாத தயாரிப்பாளராக, பாதிப் படம் பஞ்சு என்ற அடைமொழியோடு கிண்டலடிக்கப்பட்டவர். இம்மாதிரித் தொடர் வெற்றிகளால் தன் இசையமைப்பாளர் விஜய பாஸ்கரை விடாமல் பற்றிக் கொண்டார். அப்படி உருவான இன்னொன்று “
“உறவு சொல்ல ஒருவன்”
முத்துராமன், சிவகுமார் நடிப்பில் உருவான இந்தப் படத்தில் கே.ஜே.ஜேசுதாஸ் பாடிய “மோகனப் புன்னகை ஊர்வலமே”


பாடலை மறக்க முடியுமா?

இதில் எஸ்பிபி பாடிய "கேளு பாப்பா ஆசையின் கதையை"

https://www.youtube.com/watch?v=r6gMWaE0l54

என்ற பாடல் இடம் பிடித்தது. ஒப்பீட்டளவில் அதிகம் பிரபலம் இல்லாத பாட்டு இது.

அன்பு மேகமே இங்கு ஓடி வா எந்தன் துணையை அழைத்து வா 

அர்த்த ராத்திரி சொன்ன சேதியை உந்தன் நினைவில் நிறுத்தி வா

https://www.youtube.com/watch?v=Cbh135CKIrE

என்னவொரு அற்புதமான பாட்டு. அதுவும் அந்தச் சரணத்தில் வரும்

"கல்யாண சொர்க்கத்தின் ரதம் வந்தது

கண்ணீரில் நீ சொன்ன கதை வந்தது"

என்று வாணி ஜெயராம் இசைக்க, 


"பொன் வண்ண மேகங்கள் பேர் சொன்னதா

பூமாலை நான் சூடும் நாள் வந்ததா

நான் நீயன்றோ.. நீ நான்அன்றோ.....

என்று எஸ்பிபி போடுவாரே ஒரு போடு அப்படியே உருக்கித் தள்ளி விடும். 

எழுபதுகளின் பாடல்களில் தவிர்க்கவே முடியாததொன்று இது.   எங்கம்மா சபதம் படத்தில் இடம் பிடித்த பாடலிது. எஸ்.பி.முத்துராமன் இயக்கிய இந்தப் படம் கூட பஞ்சு அருணாசலம் வழியான இணைப்பில் இசையமைப்பாளர் விஜய பாஸ்கர் மீண்டும் இணைந்தது. 

எங்கம்மா சபதம் கன்னடத்துக்கு மீள் உருவாக்கம் செய்யப்பட்டது.

"அன்பு மேகமே" பாடலைப் பாடிய எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம் கூட்டணியே கன்னடத்திலும் பாடினார்கள். 

"Belli Modave Yelli Oduve" https://www.youtube.com/watch?v=K1w70qcYVkQ என்ற பாடலாக இசையில் சில மாற்றங்களோடு அந்தப் பாடல் மீள் இசைக்கப்பட்டது. 

எங்கம்மா சபதம் படத்தில் "வா இளமை அழைக்கின்றது" என்ற பாடல் T.M.செளந்தரராஜன், பி.சுசீலா, எஸ்.பி.பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம் குரல்களில் இருக்கும். இதையே கன்னடத்தில் 

"Nadeyale Naduvu"

https://www.youtube.com/watch?v=LtDzBNPbfj0

என்ற பாடலாக எஸ்.பி.பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம், கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்.ஜானகி குரலில் வேறொரு பாடலாக விஜய பாஸ்கர் கொடுத்திருக்கிறார்.

எங்கம்மா சபதம் பின்னாளில் வனஜா கிரிஜா என்று கேயார் இயக்கத்தில் பஞ்சு அருணாசலம் தயாரித்து வெளியிட்டது இன்னொரு சேதி.

முத்துக்கள் சிந்தி தித்திக்கும் மொழியில் கண்ணே விளையாடு 

செவ்வந்தி பூவின் கன்னங்கள் மீது சித்திரக் கோலமிடு"

https://www.youtube.com/watch?v=H444Nbp265A

இந்த அழகான பாடலை எத்தனை பேர் கேட்டிருக்கிறீர்கள்? எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் பி.சுசீலா பாடியது, "யாருக்கு மாப்பிள்ளை யாரோ" என்ற படத்தில் விஜயபாஸ்கர் கொடுத்த இன்னொரு தேனமுது இது. தூயவனின் கதை, வசனத்தில் எஸ்,பி,முத்துராமன் இயக்கிய இந்தப் படத்தில் ஜெய்சங்கர், ஜெயச்சித்ரா ஆகியோர் நடித்தனர்.  இந்தப் படத்திலும் பாடலாசிரியர் என்ற பங்களிப்போடு பஞ்சு அருணாசலம் இருந்தார்.

இன்னொரு சுவாரஸ்யம், பின்னாளில் "அல்லாரி பிரியடு" என்ற டாக்டர் ராஜசேகர் நடித்த திரைப்படம் தமிழுக்கு வந்த போது அதிலும் மரகதமணி இசையில் எஸ்பிபியின் கலக்கல் பாடல்கள் இருந்தன. அந்தப் படம் தமிழுக்கு வந்த போது "யாருக்கு மாப்பிள்ளை யாரோ" என்ற தலைப்பிலேயே வந்ததும் குறிப்பிடத்தக்கது. அந்தப் படம் குறித்து எஸ்பிபி & இசையமைப்பாளர் மரகதமணி கூட்டில் விரிவாகப் பார்ப்போம்.

"தொட்டதெல்லாம் பொன்னாகும்' என்றொரு படம், ஜெய்சங்கர், ஜெய்சித்ரா ஆகியோர் நடிக்க பஞ்சு அருணாசலம் கதை, வசனம் மட்டும் வழங்க உருவானது.  பாடல்கள் அனைத்தையும் கண்ணதாசன் எழுத விஜய பாஸ்கர் இசை. இதில் எஸ்பிபிக்குக் கிடைத்தவை இரண்டு பாடல்கள்.

"ஆவணி மலரே ஐப்பசி மழையே

 கார்த்திகை விளக்கின் தனி ஒளியே" 

https://www.youtube.com/watch?v=-M9IGJ6RrDc

எஸ்பிபி & பி.சுசீலா பாடிய இந்தப் பாடலை எழுபதுகளின் ரசிகர்கள் தம் இதயத்தில் பூட்டி வைத்திருப்பர். இலங்கை வானொலி இசைத்த இனிய எழுபதுகளின் கீதம் அது.

"பனிமலை மேகங்கள் 

 பொழிகினின்ற குளிரினில் 

திருக்குறள் படிக்கட்டுமா"

https://www.youtube.com/watch?v=Rb1QlUwWS58

இதுவும் எஸ்பிபி & பி.சுசீலா தொட்டது பொன்னாகிய பாட்டு.

இயக்குநர் மகேந்திரன் கதை வசனகர்த்தாவாக அறிப்பட்ட காலத்தில் "மோகம் முப்பது வருஷம்" படத்தின் மூலக் கதையை பிரபல எழுத்தாளர் மணியன் எழுதியதைத் திரைக்கதை ஆக்கினார், விஜயகுமார், கமல்ஹாசன், சுமித்ரா போன்றோர் நடிக்க எஸ்.பி.முத்துராமனே இயக்கினார்.

இங்கேயும் விஜய பாஸ்கர் கூட்டு. கே.ஜே.ஜேசுதாஸ் பாடிய "எனது வாழ்க்கைப் பாதையில்" https://www.youtube.com/watch?v=9KNT3C05hVM பாடலோடு, 

"சங்கீதம் ராகங்கள் இல்லாமலா

சந்தோஷம் சம்சாரம் இல்லாமலா"

https://www.youtube.com/watch?v=pgrsntCSnrY

என்ற எஸ்பிபி பாடிய அதிகம் அறியப்படாத அருமையான பாட்டு இருக்கிறது கேட்டுப் பாருங்கள்.

மீண்டும் இயக்குநர் எஸ்.பி.முத்துராமனும், மகேந்திரனும் இணைகிறார்கள், இம்முறை மகேந்திரன் கதை, வசனப் பங்களிப்போடு கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகிய இரு பெரும் நாயகர்கள் இணைய

"ஆடு புலி ஆட்டம்" வருகிறது. இங்கேயும் தம் ஆஸ்தான இசையமைப்பாளராக விஜய பாஸ்கரையே நியமிக்கிறார்கள். இங்கே கண்ணதாசன், பூவை செங்குட்டுவனோடு பஞ்சு அருணாசலம் பாடலாசிரியராக அமைகிறார்.

வானுக்குத் தந்தை எவனோ 

https://www.youtube.com/watch?v=IagJjiRmDI0

என்ற பாடலோடு 

"உறவோ புதுமை"

https://www.youtube.com/watch?v=c71ChkTM-Vw

என்ற பாடலையும் எஸ்பிபி பாடினார் "ஆடு புலி ஆட்டத்தில்".

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் பட்டறையில் கூடிய இசையமைப்பாளர்களில் வி.குமார், எம்.எஸ்.விஸ்வ நாதன் வரிசையில் இசையமைப்பாளர் விஜய பாஸ்கரும் இணைந்து கொண்டார்.

ரஜினிகாந்த் ஐ ஒரு குணச்சித்திர நாயகனாகச் செதுக்கிய வகையில் தமிழில் "தப்புத் தாளங்க" என்றும் கன்னடத்தில் "தப்பித தாள" என்று சம காலத்தில் இரு மொழிகளில் கே.பாலசந்தர் எடுத்திருந்தார்.

"தப்புத் தாளங்கள் வழி தவறிய பாதங்கள்"

https://www.youtube.com/watch?v=SnoYoiV8PXI

என்ற பாட்டு கே.பாலசந்தர் படங்களுக்கே உரிய அசரீரிப் பாடலாக, படத்தின் கதையைக் கோடிட்டுக் காட்ட,

"என்னடா பொல்லாத வாழ்க்கை"

https://www.youtube.com/watch?v=qES1KdnvXPM

என்ற தத்துவப் பாடலுமாகக் கண்ணதாசன் வரிகளில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிச் சிறப்பித்தார்.

கன்னடத்திலும் மாற்று இசை இல்லாது அப்படியே உள் வாங்கப்பட்டது.

விஜய பாஸ்கரின் தமிழ் வரவில் ஒரு கோடு போட்டது இன்னொரு அரிய வாய்ப்பு, புதுமை இயக்குநர் என்றும், பாடல்களில் அதி கூடிய கவனம் எடுப்பவர் என்றும் கொள்ளப்பட்ட ஶ்ரீதரின் பார்வையிலிருந்தும் விஜய பாஸ்கர் தப்பவில்லை. சிவச்சந்திரன், ஶ்ரீப்ரியா நடிக்க "செளந்தர்யமே வருக வருக"உருவானது.

பாடல்கள் அனைத்தும் வாலியின் கைவண்ணம்.

"இதோ உன் காதலி கண்மணி"

https://www.youtube.com/watch?v=00rRajawNOs

"ஆகாயம் தானே அழகான கூரை"

https://www.youtube.com/watch?v=2_7mCpa3dJs

"இரவில் இரண்டு பறவைகள்"

https://www.youtube.com/watch?v=e-qX1Svq8u8

ஆகிய மூன்று பாடல்கள் வாணி ஜெயராமுடனும்,

"எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா

ரசம் பழரசம் "

https://www.youtube.com/watch?v=f-Fcp4Pjv3I

பாடலைத் தனித்தும் எஸ்பிபி பாடிச் சிறப்பித்தார். ஆனால் படத்தின் தோல்வியால் பாடல்கள் பெரிதாகப் போய்ச் சேராமல் வானொலிகளோடு நின்று விட்டன.

எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களைக் கன்னடப் படங்களில் கெளரவப் பாடகராகத் தோன்றி நடிக்கச் செய்த வகையில் இசையமைப்பாளர் விஜயபாஸ்கரின் பாடல் இன்னொன்றும் புண்ணியம் தேடிக் கொண்டது. அது Mithileya Seetheyaru என்ற படத்தில் வந்த "ஜீவன உல்லாசப் பயணா" 

https://www.youtube.com/watch?v=pK4wTZoowOM

என்ற பாட்டுத் தான்.

எந்த இசையமைப்பாளர் இசையில் சேர்ந்தாலும் அவர்களுக்கும் முத்திரைப் பாடல்களைக் கொடுத்ததோடு தன்னிடத்தையும் அங்கே மிளிர வைத்திருக்கிறார் எஸ்பிபி.

கன்னடத்திலும், தெலுங்கிலும் இசையமைப்பாளர் விஜய பாஸ்கர் கொடுத்தது கடல். ஆனால் தமிழில் ஒரு அகழியில் பாயும் நீரில் ஒரு குவளை ஏந்திக் கொடுத்த இந்தத் தொகுப்பின் வழி இவ்விருவர் கூட்டின் மகத்துவம் காட்டும்.

"தை மாத மேக நடனம்
என் தேவி காதல் நளினம்
இந்த காதல் ராணி மனது
அது காலம் தோறும் எனது
இதில் மூடும் திரைகள் இல்லை

இதில் மூடும் திரைகள் இல்லை
மணம் குணம் ஒன்றான முல்லை

சம்சாரம் என்பது வீணை

சந்தோஷம் என்பது ராகம்

சலனங்கள் அதில் இல்லை
மணம் குணம் ஒன்றான முல்லை........."

கானா பிரபா

#பாடும்_நிலா #SPB

Thursday, October 22, 2020

எஸ்பிபி ❤️ பாடகன் சங்கதி பாகம் 15 🎸 ஒரே பாட்டில் நாகேஷுக்கும், நாயகனுக்கும் பாடிய எஸ்பிபி
🎸 ஒரே பாட்டில் நாகேஷுக்கும், நாயகனுக்கும் பாடிய எஸ்பிபி

🎸 பெண் குரலில் பாடிய எஸ்பிபி


எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் பெண் குரலிலேயே பாடி அசத்தியிருக்கிறார் தெரியுமா?
“ஹப்பா” என்ற கன்னடப் படத்தில் “மாம மாம மஸ்தி”

ஒலியில் மட்டும் கேட்க


காட்சியோடு


என்ற அந்தப் பாட்டுத் தான் அது. அதுவும் விஷ்ணுவர்த்தன், அம்பரிஷ், தேவராஜ் என்று மூன்று பேருக்கான பின்னணியாக.

நாங்கள் தான் நினைத்துக் கொண்டிருக்கிறோம் எஸ்பிபி தமிழில் தான் ஏகப்பட்ட சாகித்தியங்களைக் காட்டியிருக்கிறார் என்று. தெலுங்குக்காரர்களைக் கேட்டால் ஏட்டிக்குப் போட்டியாக இல்லை தெலுங்கு தேசத்தில் தான் எஸ்பிபி கொடி உயர்ந்திருக்கிறது என்று.

ஆனால் கன்னடர்களோ எஸ்பிபியை மாமூலாகப் பயன்படுத்தாமல் ஏகப்பட்ட வடிவங்களில் செதுக்கியிருக்கிறார்கள்.

அப்படியொன்று தான் மேற் சொன்ன பெண் குரல் எஸ்பிபி. இசை வேறு யாருமல்ல ஹம்சலேகா தான். நடிகை சுமித்திராவின் கணவர், இயக்குநர் ராஜேந்திர பாபு இயக்கிய “ஹப்பா” மகாபாரத்தின் கிளைக் கதை பாதிப்பில் உருவாக்கப்பட்டது. விஷ்ணுவர்த்தன், அம்பரிஷ், சசிகுமார் போன்றோர் நடித்த அந்த வெற்றிப்படம் தெலுங்கில் மகேஷ்பாபுவின் தந்தை கிருஷ்ணா நடிக்க “சந்திர வம்சம்” ஆனது. அங்கேயும் இந்த மஸ்தி பாட்டு குஸ்தி போட்டது. தமிழுக்கும் வந்திருந்தால் எஸ்பிபியின் அந்தப் பெண் குரலைத் தமிழிலும் நாமும் ரசித்திருக்க முடியும், எங்களுக்குக் கொடுப்பினை இல்லை.

“வீரா” திரைப்படம் அன்றைய வெற்றிக் கூட்டணியான தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம், இசைஞானிஇளையராஜா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று மூவரும் இறுதியாக இணைந்த வெற்றிச் சித்திரம். அந்தப் படத்தில் கிட்டிய மணி மணியான பாடல்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.

“அல்லாரி மொகுடு” என்ற தெலுங்குத் திரைப்படம் ரஜினிகாந்தின் நண்பர் மோகன்பாபு நடிக்க, மசாலாமன்னன் ராகவேந்திரராவ் இயக்கி வெற்றி கண்ட படம். அதையே தமிழில் தயாரிக்க ரஜினிகாந்த்பரிந்துரைக்க, பஞ்சு அருணாசலம் நகாசு வேலைகள் செய்து தமிழுக்கேற்ற வகையில் தயார்பண்ணினார்.

இந்தப் படத்தின் இரண்டு பாடல்கள் ரஜினிக்குப் பிடிக்காமல் போனதாகவும், அவற்றை மாற்றும் படிரஜினிகாந்த் பஞ்சு அருணாசலத்திடம் கேட்டார். அவற்றில் ஒன்று “கொஞ்சிக் கொஞ்சி அலைகள் ஓட” ஆனால் அந்தப் பாட்டை மாற்ற பஞ்சு அருணாசலத்துக்கு ஒப்பவில்லை, இளையராஜாவும் “இந்தப்பாட்டில் என்ன குறை” என்று கேட்டு அப்படியே இருக்கச் சொன்ன கதையை பஞ்சு அருணாசலம் மகன்சுப்பு பஞ்சுவின் பேட்டி வழியாகப் பலர் அறிந்திருக்கக் கூடும்.

ரஜினிகாந்துக்கு “கொஞ்சிக் கொஞ்சி அலைகள்” ஓட பாடலைப் பிடிக்காது போனதுக்குக் காரணம், அந்தக் காட்சிச் சூழல் தெலுங்கில் ஒரு போட்டிப் பாடலாக ஏகப்பட்ட ஜதிகளோடு கதாநாயகன்மோகன்பாபுவுக்கும், எதிராளியாக இருக்கும் சங்கீத மேதை நாகேஷுக்கும் இடையில் போட்டி போடும் இந்தப் பாட்டு


இதே மாதிரித் தமிழில் வந்தால் நன்றாக இருக்கும் என்று ரஜினி ஆசைப்பாட்டதிலும் தப்பில்லை. ஆனால்“கொஞ்சிக் கொஞ்சி அலைகள் ஓட” பாடல் ரஜினியை மட்டுமே முழுக்க முழுக்க முன்னுறுத்திப் பாடும்பாட்டு. ஒரே குரல். அந்தப் பாட்டு ஏகத்துக்கும் ஹிட்டடித்தது ஊரறிந்த உண்மை.

தெலுங்கில் எஸ்பிபி ஒரே குரலையே நாயகன் மோகன்பாபுவுக்கும், போட்டியாளர் நாகேஷுக்கும்கொடுத்திருப்பார். குரலில் பெரிய மாறுபாடுகளை இந்த இருவருக்கும் காட்டியிருக்க மாட்டார். தெலுங்கில் இசை மரகதமணி.

இதோ தெலுங்கில் இருந்து சுடச் சுட இந்தப் பாடல் கன்னடத்துக்குத் தாவுகிறது. அதாவது வீராவுக்குமுன்பே கன்னடத்தில் ரவிச்சந்திரன் நாயகனாக Gadibidi Ganda என்ற படமாகத் தயாரித்த போது கன்னடத்தில் இசை ஹம்சலேகா. இதோ அந்தப் போட்டிப் பாடல் சூழலும் வருகிறது.

“நீனு நீனே”


என்ற அந்தப் பாடலைக் காட்சியோடு பாருங்கள். இதில் இரண்டு ஆகச் சிறந்த விஷயங்கள்இருக்கின்றன.

ஒன்று,

எஸ்பிபி எவ்வளவு அழகாக நாகேஷுக்குத் தனிக்குரல், நாயகன் ரவிச்சந்திரனுக்குத் தனிக்குரல் என்றுபின்னியிருக்கிறார் பாருங்கள். இந்தப் பாட்டைக் கன்னட தேசத்தவர் இன்னும் உச்சி குளிரக்கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தப் பாட்டில் ஒரு தேர்ந்தெடுத்த சாஸ்திரிய சங்கீதக்காரனாகவும், ஒரு முதிர்ச்சி கண்ட இசைமேதையாகவும் எவ்வளவு தனித்துவம் காட்டியிருக்கிறார் என்பதே மாநிலம் கடந்து நாமெல்லாரும்கொண்டாட வேண்டிய பாட்டு இது என்று சொல்லாமல் சொல்லும்.

இரண்டு,

நாகேஷ் என்ற அற்புதக் கலைஞனை தொண்ணூறுகளில் ஒரு சில கமல்ஹாசன் படங்கள் தவிர்த்துஅவரின் உச்சபட்சத் திறமையைப் பயன்படுத்தத் தவறி விட்டோமே என்ற ஏக்கம் வருகிறது. நாங்கள் தமிழ் நடிகர்களையும் சரியாகப் பயன்படுத்தவில்லை கன்னடத்தின் மிகச்சிறந்த நடிகர் கிரிஷ் கர்னாட் போன்றவர்களையும் வில்லன்களாக்கி அழகு பார்த்து விட்டோம்.

தயாரிப்பாளர்பஞ்சு அருணாசலத்துக்கு நாகேஷ் ஆரம்ப காலத்தில் கொடுத்த புறக்கணிப்பால் பின்னர் தன் தயாரிப்பில் நாகேஷை வைப்பதில்லை என்றும், பின்னர் மைக்கேல் மதன காமராஜனில் நாகேஷே வேண்டிக் கொண்டதன் பேரில் அவரை ஒப்பந்தம் செய்தேன் என்று “திரைத்தொண்டர்” என்ற தனது திரைச்சுயசரிதையில் பஞ்சு அருணாசலம் சொல்லியிருக்கிறார். வீரா படத்திலும் நாகேஷ் இல்லாததன் பின்னணி அதுவாக இருக்கக் கூடும். இல்லாவிட்டால் மூன்று மொழிகளிலும், அதுவும் ரஜினியோடு நீண்டஇடைவெளிக்குப் பின் நடித்த சிறப்பும் நாகேஷுக்குக் கிட்டியிருக்கும்.

ரஜினிகாந்த் பின்னாளில் தன்னுடைய போட்டிப் பாடல் ஆசையை அதாவது வீராவில் விட்டதைப் படையப்பாவில் “மின்சாரப் பூவே” பாடலில் பிடித்துக் கொண்டார் போலும்.

“ஆஹா வந்துருச்சு
காதலில் ஓடி வந்தேன்”

கல்யாண ராமன் படப் பாட்டை மறக்க முடியுமா? மலேசியா வாசுதேவனுக்கும் கூடப் புகழ் சேர்த்த அந்தப் பாட்டு கன்னடத்தில் எஸ்பிபி பாடியிருந்தால் எப்படியிருக்கும்?

கல்யாண ராமன் படம் 14 வருடங்களின் பின் கன்னடத்துக்குத் தாவுகின்றது.
ரவிச்சந்திரன் நடிப்பில் அவரின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஹம்சலேகா இசையமைக்க “ஶ்ரீராமச்சந்திரா” படம் வெளியாகிறது. அந்தப் படத்தின் பாடல் கேசட் விற்பனை சாதனை படைக்கிறது.
இப்பேர்ப்பட்ட படத்தில் அந்த ஆஹா வந்திருச்சு பாடலுக்கு நிகராக வந்தது தான்
எஸ்பிபி பாடிய “சுந்தரி சுந்தரி”

இந்தப் பாட்டில் எஸ்பிபி தன் குரலை மாற்றிப் பாடும் ஜாலம் ஆகா நினைத்துப் பார்க்க முடியுமா இன்னொருவரை?

எஸ்பிபி இந்த இருண்ட காலத்தில் பேஸ்புக் வழியே ரசிகர் விருப்பப் பாடல்களைக் கேட்ட மாத்திரத்தில் பாடிப் பகிர்ந்த சூழலில் இந்தப் பாடலையும் பாடியிருந்தார்.

எஸ்பிபி கன்னடத்தில் முதன் முதலில் பாடிய படம்
"Nakkare Ade Swarga"
இதில் பி.சுசீலா அவர்களுடன் பாடிய பாட்டு “கனசிதோ”

எஸ்பிபியின் உறவினரான எம்.ரங்காராவ் இசையமைத்த இந்தப் பாடல் தான் எஸ்பிபி பாடகராக வந்து இரண்டாவதாகப் பாடிய பாடல் என்று கன்னடர்கள் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

எஸ்பிபி தன் படங்களுக்குக் கண்டிப்பாக வேண்டும் என்று நடிகர் விஷ்ணுவர்த்தன் ஒப்பந்தமாகும் போதே கணக்கு வைப்பதாகவும் சொல்வார்கள்.

“எஸ்பிபி ஒரு மிகச் சிறந்த நடிகர்,
அதைத் தன் பாடல்களிலும் காட்டி விடுவதால் நான் அந்தப் பாடல் காட்சியில் நடித்து முடித்துப் பார்த்தால் 50 வீதம் கூட நியாயம் பண்ணியதாகத் தெரியாது என்பார்”
கன்னடத்தின் பிரபல நடிகர் சிவராஜ்குமார்

கன்னட சினிமாவில் வேற்று மொழிப் பாடகர்கள் வந்தாலும் எஸ்பிபி அளவுக்கு ஆட்சி செய்ய முடியவில்லை. அதற்குக் காரணம் அவரது மொழிச் சுத்தம். ஒவ்வொரு வார்த்தைகளைக் கூட பிறப்பால் ஒரு கன்னடன் எப்படி உச்சரிப்பானோ அப்படி என்கிறார்கள் கன்னட தேசத்தவர்.

“இதே நாடு இதே பாஷே
எந்தெந்து நன்னகிறதே”


என்று கன்னடமே நம் உசிரு என்று எஸ்பியைப் பாடிப் படத்திலும் தோன்ற வைத்துச் சிறப்பித்திருக்கிறார்கள். “திருக பானா” என்ற அம்பரிஷ் நடித்த அந்தக் கன்னடப் படத்தில் எப்படித் தன் மகன் எஸ்பிபி என்று தன் வாழும் காலத்தில் தத்தெடுத்துக் கொண்டாரோ அந்த இசையமைப்பாளர் சத்யம் கூட இந்தப் பாட்டில் தோன்றி இசைக்கிறார்.

“இந்தக் கன்னட தேசம் என் மீது ஏன் இவ்வளவு பிரியம் வைத்திருக்கிறது என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை”
என்று நெகிழ்கிறார். மேற் சொன்ன மொழிச் சுத்தம், எஸ்பிபி மீதான அளவு கடந்த நேசம் இவற்றில் தமிழர்கள் நாம் மட்டும் குறைந்தவர்களா என்ன?

Google Translate போல் அச்சடித்தால் போல எஸ்பிபி மீது நம் எல்லோரது நேசமும், பாசமும் மொழி பெயர்க்கப்படும் போது ஒரே அர்த்தத்தையே அது கொடுக்கிறது.

கானா பிரபா

#பாடும்_நிலா #எஸ்பிபி