Pages

Wednesday, July 1, 2020

இசைத் தேன் நிலவு ஏ.எம்.ராஜா ❤️



இலங்கை வானொலி கடல் கடந்து கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில் அதன் முன்னணிக் குரல் கேஏஏஏஏ.எஸ்ஸ்ஸ்.ராஜ்ஜ்ஜ்ஜா வின் உருவத்தைத் தங்களுக்குத் தோதான கம்பீரமான நடிகராகக் கற்பனை செய்து கொண்டு அவரைப் பார்க்க இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் கலையத்துக்குப் படையெடுத்தார்களாம் தமிழகத்தில் இருந்து சில வானொலிப் பிரியர்கள். அவர்கள் வந்திருக்கும் சேதி அறிந்து கூச்ச சுபாவம் கொண்டவர் வெட்கத்தோடு மறைந்தோடி விட்டாராம் அந்த கே.எஸ்.ராஜா.

வானொலிக்கு ஒரு கே.எஸ்.ராஜா போல பாட்டுக்கு ஒரு ஏ.எம்.ராஜா முன்னவர் கவர்ச்சிகரமான குரலாளன் என்றால் பின்னவர் தேன் கனிந்து சொட்டும் பாட்டுக்காரர்.
தன் முகத்தை அடையாளப்படுத்த விரும்பாத ஒலிபரப்பாளர் ஒருபுறம், ஆனால் ஏ.எம்.ராஜாவை நினைத்தால் அவரின் குரல் ஜெமினி கணேசனாக உரு மாறி விடும். நிஜத்தோற்றத்தோடு ஒட்டவே முடியாமல் அச்சொட்டாகப் பொருந்திப் போய் விடும்.
அதனால் தானோ என்னமோ எம்.ஜி.ஆர் தொட்டுப் பல நடிகர்களுக்கும் பாடியிருந்தாலும் இந்த ஏ.எம்.ராஜாவைத் தொடர்ந்து நினைக்க வைப்பவை ஜெமினி கணேசன் பாட்டுகள்.

தனது 22 வது வயதில் பாட வந்தவர் 40 வயதுக்குள் பாடகராக, இசையமைப்பாளராகக் கோலோச்சி விட்டு எழுபதுகளோடு தன் முக்கிய பாட்டுப் பயணத்தை முடித்து விட்டார். அதன் பிறகான பத்தாண்டுகள் மேடைப் பாடகராகவே அதிகம் அறியப்பட்டார். தமிழ்த் திரையிசையில் இசையமைப்பாளர்களின் ஆயுள் குறைவு, இங்கே ஆயுள் என்பது அவர்களுக்குச் சுக்கிர திசை காட்டும் காலம். ஏ.எம்.ராஜாவும் அதில் ஒருவரே.

“ஏனடா கண்ணா இந்த பொல்லாத்தனம் 
என்ன வேண்டும் சொல்லு ஏன் இந்த வம்பு.......” (அன்பு ரோஜா)

https://youtu.be/6CcKN_p5Qgo

“செந்தாமரையே செந்தேன் இதழே
பெண் ஓவியே கண்ணே வருக கண்ணே வருக...” (புகுந்த வீடு)

https://youtu.be/ZIJgMsoGUu8

“எதைக் கேட்பதோ எதைச்ச் சொல்வதோ
நான் அறியாத பெண் அல்லவோ.....” (பத்து மாத பந்தம்)

என்று எழுபதுகளின் பாடல்களைக் கேட்கும் போதெல்லாம் சங்கர் - கணேஷ் இரட்டையர்கள் இந்த ஏ.எம்.ராஜாவுக்கு மானசீகமாகக் கொடுத்த பிரியாவிடைப் பாடல்கள் போலவே இருக்கும். 

வாழ்க்கையிலும் இணைந்த  ஏ.எம்.ராஜாவும் ஜிக்கியுமாக, தமிழ்த் திரையிசையின் நீண்ட நெடும் காலத்துப் பாட்டு ஜோடி.

“பழகத் தெரிய வேணும் உலகில் 
பார்த்து நடக்க வேண்டும்
பெண்ணே......”

https://youtu.be/HG6DaH_5MN0

இந்தப் பாட்டைக் கேட்டால் பெண்ணியவாதிகளுக்குக் கோபம் வராது அப்படியொரு ஆற்றுப்படுத்தும் குரல். 

“இதய வானின் உதய நிலவே 
எங்கே போகிறாய் நீ எங்கே போகிறாய்....”

https://youtu.be/UuZmjOyjapU

என்னுடைய நள்ளிரவு வானொலி ஒலிபரப்புகளில் அந்தக் காலத்தில் அடிக்கடி நான் ஒலிபரப்புவது . அமரர் கல்கியின் “பார்த்திபன் கனவு” படத்துக்காக இன்னுமொரு பெரும் எழுத்தாளர் விந்தன் எழுதிய பாட்டு அது.  அந்த இருட்டுப் பொழுதுகளின் ஏகாந்தத்தை இசையால் மொழி பெயர்ப்பதாக உணர்வேன்.

“பழகும் தமிழே பார்த்திபன் மகனே
அழகிய மேனி சுகமா சுகமா...”

அதே படத்தில் கண்ணதாசனும் தன் பங்குக்குக் கொடுத்த இன்னொன்றும் சேர, ஏ.எம்.ராஜாவுக்கு இன்னொரு விதமாகப் பாடுவாரோ என்று எண்ண வைப்பார் பி.சுசீலா.

“மலரே மலரே தெரியாதோ
மனதில் நிலைமை புரியாதோ
எனை நீ அறிவாய் உனை நான் அறிவேன்
காதலர் உன்னை காண வந்தால்
நிலையை சொல்வாயோ என் கதையை சொல்வாயோ

https://youtu.be/BXUtr3fskag

ஏ.எம்.ராஜாவை ஒரு இசையமைப்பாளராக நான் அதிகம் கொண்டாடுவது இந்தப் பாடலில் தான், அதற்காக அவர் ஒரு இசையமைப்பாளராகத் தன் சாகித்தியத்தை மற்றைய பாடல்களிலும் காட்டாதவர் அல்லவே.

“நிலவும் மலரும் பாடுது
  என் நினைவில் தென்றல் வீசுது
நிலை மயங்கி மயங்கி காதலினால் ஜாடை பேசுது”

https://youtu.be/bXsz7BYKC50

அந்தப் பாடலின் ஆரம்பத்தில் விழும் ஒலிக்கீற்றின் ஜாலதரங்கம் அப்படியே காட்சியாகப் படகில் பயணிக்கும் காதலர்களின் சூழலுக்குப் பொருதிப் போகும். எப்படி இவர் காட்சியை உய்த்துணர்ந்து இசை கொடுத்தாரோ என்று எண்ண வைக்கும் மிக நுணுக்கமான சங்கதி அது.

“மனதினிலே பிரிவுமில்லை மாற்றுவாரில்லை
நிலை மயங்கி மயங்கி காலமெல்லாம் கானம் பாடுவோம்”

எவ்வளவு அழகாகச் சுற்றி வந்து மூலஸ்தானத்தில் பாடலை மையம் கொள்ள வைப்பார் இந்தத் தேர்ந்த இசையமைப்பாளர் சக பாடகர் ஏ.எம்.ராஜா.

“அருகில் வந்தாள் உருகி நின்றாள் அமைதி தந்தாளே”

https://youtu.be/q5I9V85_0Vs

களத்தூர் கண்ணம்மாவின் காதலன் ஜெமினியின் சோக ராகத்தைக் கேட்கும் போது மனசுக்குள் ஜெமினிக்குப் பொருந்துவது P.B.ஶ்ரீனிவாசா அல்லது A.M.ராஜாவா என்று குட்டிப் பட்டி மன்றம் போடும். ஆனால் சாலமன் பாப்பையாவின் பட்டி மன்றம் போல தராசின் தட்டுகள் ஒரே நிலையில் நிற்கும்.

தனிமையிலே...தனிமையிலே....தனிமையிலே
இனிமை காண முடியுமா....”

https://youtu.be/kii2WqDjJfQ

முகப்பு வரிகளை மட்டும் எடுத்து கொரோனா யுகத்தின் பாடலாகச் சொல்லி மகிழ்ந்தோம் சமூக வலைத்தளங்களில்.

கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்
நீயில்லையே...நான் இல்லையே...

https://youtu.be/3ZLdDkkRMbo

உங்களுக்கு ஒரு போட்டி, மேற்குறித்த பாடலில் ஏ.எம்.ராஜா பாடும் அந்தச் சங்கதியை மட்டும் கவர்ந்து அச்சொட்டாகப் பாடித்தான் காட்ட முடியுமா?  ஒரு தேர்ந்த சிற்பியின் மை வண்ணத்தில் மெல்ல மெல்ல உருப் பெறும் சிலையாகவல்லோ இந்தப் பாடலும் பிறக்கிறது. 

ஒரு திறமையான கலைஞனுக்குத் தோதான படைப்பாளியும் தோள் கொடுத்தால் அது ரசிகர்களுக்குப் பொக்கிஷமாக வந்து விளையும், அதுதான் ஏ.எம்.ராஜாவும் இயக்குநர் ஶ்ரீதரும் இணைந்த போது கிட்டியது. கல்யாணப் பரிசு பாடல்களைக் கேட்கும் போது இசையமைப்பாளராக ராஜாவின் உச்சம் தெரியும். “உன்னைக் கண்டு நான் ஆட” படம் வந்து ஐம்பது வருடங்கள் கழித்தும் வானொலிகளின் தீபாவளிப்பாடலாக இருக்கிறது. 
வாடிக்கை மறந்ததும் ஏனோ, ஆசையினாலே மனம், காதலிலே தோல்வியுற்றான் என்று அள்ள அள்ளக் கொட்டும் கல்யாணப் பரிசுகள்.

“ஆடாத மனமும் ஆடுதே ஆனந்த கீதம் பாடுதே
வாடாத காதல் இன்பமெல்லாம் வா வா நாம் காணலாம்....”

https://youtu.be/R_k_dBlRn20

ஏ.எம்.ராஜா & சுசீலா குரல்கள் ஓடிக் கொண்டிருக்கும் போது இவை என்ன குரல்களா இல்லை வாத்தியங்களின் கூட்டா என்று பிரித்தறிய முடியாததொரு இசைவு.

ஏ.எம்.ராஜா என்ற தேன் நிலவின் நூற்றுக்கணக்கான பாடல் சமுத்திரத்தில் முக்குளித்து முத்தெடுக்கலாம் ஒவ்வொன்றும் தரும் இனிமையே தனி சுகம் தரும்.

பாட்டுப் பாடவா பார்த்துப் பேசவா
பாடம் சொல்லவா பறந்து செல்லவா

https://youtu.be/0qV8W1z6ZZo

என்றும் பதினாறாக இருக்கும் இந்தப் பாடல் போலவே சாகாவரம் கொண்டு நம் 
இதய வானின் உதய நிலவு ஏ.எம்.ராஜா அது ஒரு தேன் நிலவு

அங்கமெல்லாம் தங்கமான மங்கையைப் போலே - நதி
அன்ன நடை போடுதம்மா பூமியின் மேலே
கன்னி உந்தன் காதலனைக் காணவில்லையா
இந்தக் காதலிக்குத் தேன் நிலவில் ஆசையில்லையா.....

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் 
நம் இசைத் தேன் நிலவு ஏ.எம்.ராஜாவுக்கு ❤️

காலையும் நீயே மாலையும் நீயே
காற்றும் நீயே (பாட்டுக்) கடலும் நீயே

கானா பிரபா
01.07.2020

0 comments: