Pages

Thursday, July 9, 2020

இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம்


"இருதயமே துடிக்கிறதா....

துடிப்பது போல் நடிக்கிறதா....❤️

“எனக்கு வரவேண்டிய வாய்ப்புகள்

எல்லாம் இவருக்கே போக வேண்டும்

என்று வேண்டிக் கொள்கிறேன்”

இப்படிச் சொன்னவர் இலேசுப்பட்டவர் அல்ல திரையிசையின் இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்த ஒரு மகோன்னதமான இசையமைப்பாளர் சரத், அவர் அப்படித் தன் வாய்ப்புகள் இவருக்கே போக வேண்டும் என்று கை காட்டியது இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம் அவர்களைப் பார்த்து.

இது நடந்தது ஒரு தசாப்தத்துக்கு முந்திய Zee தமிழ் இசைப் போட்டியின் இறுதி நிகழ்வில் நடுவராக இருவரும் வந்து சிறப்பித்தவேளை.

அதைக் கேட்ட மாத்திரத்திலேயே மெய் சிலிர்த்தது அப்போது, இப்போது நினைத்துப் பார்த்தாலும் அந்த மானசீகமான பாராட்டைக் கேட்டு நெகிழ்வேன். போட்டி, பொறாமை நிறைந்த உலகில் இப்படியும் நிறைந்த மனத்தோடு இருக்கிறார்களே என்று எண்ண வைக்கும்.

எண்பதுகளில் எப்படி இசையமைப்பாளர் வி.எஸ்.நரசிம்மனுக்கு ஒரு விசாலப்பட்ட திரையிசை வாய்ப்பு கிட்டவில்லை என்று ஏங்கும் அதே பரிமாணத்தில் தான் புத்தாயிரத்தில் இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம் அவர்களையும் அடிக்கடி நினைத்துப் பார்க்க வைக்கும்.

அழகிய தீயே படத்தில் வரும் “விழிகளின் அருகினில் வானம்” பாடல் வந்த புதிதில் வெறி பிடித்தது போலத் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருப்பேன். அது மட்டுமா இசைஞானி இளையராஜாவின் பாடல்களை மட்டுமே கேட்பேன் என்று கடும் விரதத்தோடு இருந்த நண்பர் ஒருவரை என் காரில் அமர்த்தி இந்தப் பாடலை ஓட விட்டு சிட்னியில் ஒரு குறும் யாத்திரை சென்று விட்டுத் திரும்பும் போது இந்தப் பாடலை முணுமுணுத்துக் கொண்டே இருந்தார் அந்த நண்பர்.

நான் வெற்றிக் களிப்பில் முறுவலித்தேன்.

அதுதான் ரமேஷ் விநாயகம் அவர்கள் கொடுத்த உன்னத இசைக்கு என் கட்டை விரல் கைமாறு.

“விழிகளின் அருகினில் வானம்” பாடலை முன் சொன்ன ரமேஷ் விநாயகத்தின் அருமை நண்பர் இசையமைப்பாளர் சரத் எவ்வளவு அனுபவித்துப் பாடுகிறார் பாருங்கள். அந்த ஸ்வர ஆலாபனையிலே கட்டுக்கடங்காத காதல் பிரவாகமாகப் பரவுகிறது.

https://youtu.be/vZ_Vaa3rK1I

பூ போன்ற கன்னி தேன்

அவள் பேர் சொல்லி தித்தித்தேன்

அது ஏன் என்று யோசித்தேன்

அட நான் எங்கு சுவாசித்தேன்

காதோடு மெளனங்கள்

இசை வார்க்கின்ற நேரங்கள்

பசி நீர் தூக்கம் இல்லாமல்

உயிர் வாழ்கின்ற மாயங்கள்

நண்பர் ரஜினிராம் Rajini Ramachandran இன் சகோதரர் கவிவர்மன் எழுதிய அந்த “விழிகளின் அருகினில் வானம்” பாடலைச் சிலாகித்து எழுதவே பயம் கலந்த மரியாதை இருக்கும் எனக்கு

எனக்கு இப்படியென்றால் ரமேஷ் விநாயகம் அவர்கள் இசையமைத்த “தில் மேரா” (கஸ்தூரி மானினமே)

https://youtu.be/owdu6RGQquk

பாடலைப் பாடியது எனக்கு மிகப் பெரிய சவால் என்று ஒரு மேடையில் சிலாகித்தார் அந்தப் பாடலின் மூலப் பாடகி மாதங்கி. இந்துஸ்தானி மரபில் பிறந்த அந்தப் பாடலை ஒரு பாட்டம் சிலாகித்து விட்டுத்தான் அடுத்த கேள்விக்குப் போனார் மாதங்கி. அதில் ரமேஷ் விநாயகம் அவர்களின் சாகித்தியம் மீதான ஒரு பெரிய பிரமிப்பும், மரியாதையும் அவரின் குரலில் ஒட்டியிருந்தது.

நாயகன் படத்தின் பின்னணி இசையில் இசைஞானி காட்டிய நுணுக்கத்தை இவர் காட்சியோடு விளக்கிக் காட்டிய கணம் ஒரு ரசிகனாக இன்னோர் பக்கம் மரியாதை விளைவித்தார்.

“என்ன இது என்ன இது

என்னைக் கொல்வது

என்னவென்று கேட்பவர்க்கு என்ன சொல்வது......”

https://youtu.be/ehL7CZEUKzM

காதலர்கள் தங்களுக்குள் மட்டுமே கேட்குமாற் போல ஒரு அமுக்கமான ஓட்டத்தில் முழுப் பாடலையும் பாடி விட முடியுமா? முடியும் என்ற விடையோடு ஒரு இசையமைப்பாளருக்கு இப்படியொரு தெள்ளமுதுக் குரலும் உண்டே என்ற அதிசயத்தையும் கொடுக்கும் பாட்டு.

தேன் குடித்து விட்டுப் பாடுவது போல வழுக்கிக் கொண்டு போகும்.

தொட்டுத் தொட்டுத் தொட்டுச் செல்லும் ஐஸ் காற்றிலே https://youtu.be/2DZ4aVAs994

இன்னொரு தேங்காய்ச் சொட்டு.

தேமதுரக் குரலோன் ரமேஷ் விநாயகத்தைப் பாட்டுக்காரராகவும் அழகு பார்த்த ஹாரிஸ் ஜெயராஜின் “யாரிடமும் தோன்றவில்லை”

https://youtu.be/0R2nC9sN43A

அப்படியே பட்டு விரிப்பில் பஞ்சு மெத்தை சுகம்.

கேட்காத ஓசைகள்

இதழ் தாண்டாத வார்த்தைகள

இமை ஆடாத பார்வைகள்

இவை நான் கொண்ட மாற்றங்கள்

சொல் என்னும் ஓர் நெஞ்சம்

இனி நில் என ஓர் நெஞ்சம்

எதிர்பார்க்காமல் என் வாழ்வில்

ஒரு போர்க்காலம் ஆரம்பம்

இருதயமே துடிக்கிறதா

துடிப்பது போல் நடிக்கிறதா?

இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம் அவர்களின் பிறந்த நாளில் இந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டே கொண்டாடி வாழ்த்துகிறேன் இன்னும் நிறைய எழுத வேண்டும் உங்களைப் பற்றி அப்படியும் அடங்காது ❤️

https://youtu.be/G628iHHLgxQ

கானா பிரபா

0 comments: