Pages

Wednesday, November 19, 2014

கமல் 60 குமுதம் சிறப்பு மலர் - என் பார்வையில்பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் ராஜாதி ராஜா வந்த நேரம் என்று நினைக்கிறேன். அதுவரை ரஜினிகாந்த் நடித்த படங்களை ஒன்று திரட்டி அபூர்வமான புகைப்படங்கள், செய்திகளோடு ஒரு பெரிய புத்தகம் கிட்டியது. ஆசையாக அதைப் பள்ளி நண்பர்களுக்குக் காட்ட எடுத்துச் சென்றது தான் அது பின்னர் வீடு திரும்பவில்லை. யாரோ ஒரு நண்பன் அதைச் சுட்டுட்டான் என்ற வருத்தம் இன்றளவும் உண்டு :-)

விகடன் தீபாவளி மலரில் இருந்து சிறப்பிதழ்கள் வரும்போது இயன்றவரை வாங்கிப் பத்திரப்படுத்திவிடுவேன். பின்னர் கட்டுரை எழுதும் போது சும்மா எறியாமல் ஆதாரங்களோடு துணை நிற்கும் என்பது முக்கிய காரணம். அந்த வகையில் குமுதம் சஞ்சிகை சமீபகாலமாக வெளியிட்டு வரும் சிறப்பு மலர் வரிசையில் நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாள் சிறப்பு மலரை முன்னர் வாங்கிப் படித்த போது பெரும் ஏமாற்றமே கிட்டியது. கட்டுரைகளில் கருத்துச் செறிவை விட ஏகப்பட்ட பொன்னாடைகளும், மாலை மரியாதைகளும் குவிந்திருந்தன. நான் எதிர்பார்த்திருந்த அபூர்வமான தகவல் குறிப்புகள் கிட்டாது ஏமாற்றமளித்த மகர் அது.

நடிகர் கமல்ஹாசனின் 60 வது பிறந்த நாள்  சிறப்பு மலரை குமுதம் வெளியிடப் போவதாக அறிவிப்பு வந்ததும் பாதி நம்பிக்கையோடு தான் சிட்னிக் கடைகள்ல் அதைத் தேடினேன். அப்படி ஒரு வஸ்து இல்லை என்று எல்லா இடமும் கை விரித்தார்கள். கடைசி முயற்சியாக ஒரு கடைக்குத் தொலைபேசினேன். 
"ஓம் புத்தகம் இருக்கு வாங்கோ எடுத்து வைக்கிறன்" என்ற கடைக்காரரின் உறுதிமொழியை அடுத்து ஒரு மணி நேரப் பிரயாணத்தில் "கமல் 60 சிறப்பு மலர்" என் கையில் கிட்டியது. இரண்டு நாட்கள் என் காலை ரயில் பயணம் இந்த நூலை வாசிக்க அர்ப்பணமாயிற்று.

பத்திரிகை உலகில் நீண்ட நெடிய அனுபவம் கொண்ட "மணா" அவர்களைத் தொகுப்பாசிரியராகக் கொண்டு வந்திருக்கும் இந்தச் சிறப்பு மலர் படித்து முடித்ததுமே கமல்ஹாசன் குறித்து ஒரு நிறைவான விவரணப்படம் பார்த்த திருப்தி தான் மனதில் எழுந்தது. அவ்வளவு சிறப்பாக ஒன்றுக்கொன்று ஒற்றுமையாக அமையாத தனித்துவமான அம்சங்களைக் கொண்ட கட்டுரைகளின் கோர்வையாக வெகு சிறப்பாக வந்திருக்கிறது இந்த மலர். 

இந்த மலரில் என்னுடைய வாசிப்பில்  மதிப்புக்குரிய இரா.முருகன் சார் பகிர்ந்த "கமல்: மூன்று அழைப்புகள்" என்ற கட்டுரை எழுதிய உத்தி முதன்மையாகக் கவர்ந்தது. இரா.முருகன் சார், கமலோடு திருவனந்தபுரம் போய் நீல.பத்மநாபனைக் கண்டு பின்னர் அமரர் ரா.கி.ரங்கராஜனின் நினைவுகளோடு இறுதியில் கமலின் மூன்றாவது அழைப்பின் மூலம் கமல்ஹாசனின் தேடலை மிகவும் சிறப்பான உத்தியில் வடிவமைத்திருந்தார்.

"நடிப்பின் வேறுபாட்டைக் கோடிட்டுக் காட்டியவர்" என்ற சுகுமாரனின் படைப்பே இந்த மலர் எவ்வளவு சுயாதீனமாக இயங்கியிருக்கிறது என்பதற்கான மிகச் சிறப்பான சான்று. கமலின் மலையாள சினிமா உலகத்தில் இருந்து இன்று வரை நடிப்பின் பரிமாணத்தை வெறும் புகழ் மாலையாக அல்லாமல் தர்க்க ரீதியாகவும் ஆங்காங்கே குட்டு வைத்தும் எழுதுகிறார் சுகுமாரன். இம்மாதிரிக் கட்டுரையை ஒரு சிறப்பு மலரில் எதிர்பார்க்க முடியாது. கட்டுரை இறுதில் சுகுமாரன் கேட்ட அந்தக் கேள்விக்கு கமல் தன் பாபநாசம் படம் மூலம் நிரூபிக்கவேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தி நிற்கின்றது.
சுகுமாரனின் எழுத்தை இதுகாறும் நான் வாசித்ததில்லை இப்போது இவரின் எழுத்தில் ஈர்ப்பு வருமளவுக்கு இந்த ஒரு கட்டுரையிலேயே ஆட்கொண்டு விட்டார்.


டிஸ்கோ காலத்து இளைஞனில் இருந்து பரிணாமம் பெற்ற இந்திய இளைஞர் வாழ்வியலோடு ஒப்பிட்டு ஜெயமோகன் எழுதிய கட்டுரை வழியாக தென்னிந்தியச் சமூகத்தின் பிரதிபலிப்பாக கமல்ஹாசனை நிறுவி முடிக்கின்றார்.

நடிகை கெளதமி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மோகன்லால், மம்முட்டி, பாடகர் கார்த்திக், கன்னட ராஜ்குமார், ரமேஷ் அர்விந்த் போன்றோரின் பகிர்வுகளில் ஒரு சில தகவல் கிட்டினாலும் மாமூல் வாழ்த்து மடல்களாகவே மேலோங்கி நிற்கின்றன.

ஆச்சரியமாக எதிர்பார்த்திராத சிறப்புப் பகிர்வுகளாக ரமேஷ் கண்ணா, சார்லி போன்றோரிடமிருந்தும், கமலின் உடற்பயிற்சியாளர் ஜெய்குமாரிடமிருந்தும் வந்தவை சுவாரஸ்யம் மிக்கவையாக உள்ளன.

இயக்குநர் சிகரம் பாலசந்தர், இயக்குநர் இமயம் பாரதிராஜா ஆகியோரின் வழியாக வந்த செய்திகளில் கமலோடு இணைந்த காலகட்டத்து அனுபவ வெளிப்பாடுகளையே பெரிதும் எதிர்பார்த்திருந்தேன்.

நண்பர் ராசி அழகப்பன் அவர்கள் கமல்ஹாசனின் உதவி இயக்குனராகவும், கமலின் பிரத்தியோக சஞ்சிகை "மய்யம்" இதழின் துணை ஆசிரியராகவும் இருந்தார் என்ற செய்தியை மட்டுமே அறிந்திருந்த எமக்கு அவரின்  "மருதநாயகத்துக்குப் போட்ட விதை" என்ற கட்டுரை வழியாக "மய்யம்" காலத்தை அடக்கிய கட்டுரையும் சிறப்பானது.

கமல் 60 என்ற செய்தித் துளிகளும் கமல்ஹாசன் குறித்த பல சுவையான செய்திகளைத் தாங்கி நிற்கின்றது.

கமலின் பல்வேறு பரிமாணங்களையும் காட்டிய இந்தத் தொகுப்பில் அவரின் ஆரம்ப கால நண்பர் சந்தானபாரதி, இயக்குநர் சிங்கிதம் சீனிவாசராவ் போன்றோருக்கும் இடம் ஒதுக்கியிருக்கலாம். 

நடிகராகவும், நடனத்திலும் சிறப்பு மிகு கமல் பாடகராகவும் தன்னை நிரூபித்தவர். அதற்கும் இந்த மலரில் இடமில்லாதது ஓரவஞ்சனை. சிங்காரவேலன் பாடல் ஒலி நாடாவில் இளையராஜா கமலின் தனித்துவமான குரலைச் சிலாகித்திருப்பார். அதைப் போன்றதொரு கட்டுரை அமையவில்லை இங்கு.

எழுத்தாளர் வண்ண நிலவன்,தொ.பரமசிவம் போன்றோரின் பகிர்வுகளும் நிறைவானவை, கமலின் குணம்சத்தின் இன்னொரு சாட்சியங்கள்.

வசூல் ராஜா பட அனுபவம் வழியாக இயக்குநர் சரண் கொடுத்த கட்டுரையும் நன்று. 

எஸ்.பி.முத்துராமன், கிரேஸி மோகன் போன்றோர் கமலுக்காகவே நேர்ந்துவிடப்பட்டவர்கள். அவர்களின் கட்டுரைகள் எதிர்பார்த்தது போலவே.

தாயம்மா, சுதந்திரமான கவிதை ஆகிய கமல் எழுதிய கவிதைகள் சிறப்புச் சேர்க்கின்றன.

ஓவியர் ஶ்ரீதரின் கட்டுரையோடு வித விதமான கமல் ஓவியங்கள் அட்டகாச இரட்டை விருந்து.

நடிகர் சிவகுமார் பேஸ்புக்கில் எழுதுவது போல இன்னும் சிறப்பாகக் கொடுத்திருக்கலாம். சிகப்பு ரோஜாக்கள் அனுபவத்தோடு முடித்துக் கொண்டுவிட்டார்.

மனோ பாலாவின் கட்டுரையைத் தாண்டி தான் நேசித்த பத்து கமல் பாத்திரங்களை வைத்து இயக்குநர் ஆர்.சி.சக்தி தந்த கட்டுரை கமல் ரசிகனின் நுட்பமான வெளிப்பாடாக அமைகின்றது. அந்தப் பத்துப் படங்களின் மீதான பார்வையில் கமல் மீதான இவரின் ஆழமான நேசிப்பு முலாம் பூசப்பட்டிருக்கிறது.

இன்னும் எஸ்.பி.பாலசுப்ரமணியம், இயக்குநர் கே.விஸ்வ நாத் போன்ற தவிர்க்க முடியாத ஆளுமைகளும் கமல் குறித்த இந்தப் பெட்டகத்தில் வந்திருந்தால் இன்னும் சிறப்புச் சேர்ந்திருக்கும்.

தேசாபிமானி என்ற மலையாள இதழுக்கு கமல் கொடுத்த பேட்டியை அச்சொட்டாகத் தமிழ் வடிவமாக்கிப் புண்ணியம் சேர்த்துவிட்டார்கள். மாமூல் கேள்விகளாக இல்லாது கமலின் ஆரம்ப கால வாழ்க்கை, மலையாள சினிமா உலகம் என்று விரியும் கேள்வி பதில்களில் மலையாள நடிகர் சத்யனுடனான ஆத்ம பந்தத்தைப் படிக்கும் போது கமலின் இடத்தில் இருந்தேன், நெகிழ்ந்தேன்.

"எழுத்தாளன் அவனது படைப்புகளில் வாழ்வது போல ஒரு நடிகன் எல்லாத் தலைமுறையினரின் மனதில் இடம்பெற்றிருப்பதாகச் சொல்ல முடியாது" என்று தன் பேட்டி வழியாகச் சொன்ன இந்தக் கூற்றை மறுபரிசீலனை செய்ய வைக்கின்றது இந்த "கமல் 60 சிறப்பு மலர்".

சினிமா ஊடகத்தில் சவாரி செய்து நிதமும் தேடிக்கொண்டே "தேடலும் பதித்தலும்" ஆக வாழும் ஒரு மகா கலைஞனுக்கான சாந்துப் பொட்டு இந்த மலர்.

Tuesday, November 11, 2014

புத்தம் புதுக்காலை பொன்னிற வேளை - பாடல் பிறந்த கதைகடந்த சன் சிங்கர் நிகழ்ச்சியை ஓடவிட்டு கங்கை அமரன் அவர்களிடமிருந்து ஏதாவது சுவையான பாடல் பிறந்த கதை கிட்டும் என்ற நப்பாசையில் இருந்த எனக்கு ஒரு சுவாரஸ்மான தகவல் கிட்டியது.
அந்த வீடியோவின் தனிப்பாகத்தை மட்டும் பிரித்து இங்கே பகிர்கின்றேன்.

புத்தம் புதுக்காலை பாடல் எந்தச் சூழ் நிலையில் எழுதப்பட்டது, அந்த அழகான வரிகள் எப்படிக் கிடைத்தன என்பதை விளக்கிய கங்கை அமரன் அவர்கள் "மருதாணி' படத்துக்காக உருவாக்கிய பாடல் பின்னர் அந்தப் படமே முடங்கிப் போனதால் வெறும் ஒலிப்பதிவோடு நின்று விட்டதாம்.

பாடலைக் கேட்ட பாரதிராஜா "அலைகள் ஓய்வதில்லை" திரைப்படத்துக்காகப் பயன்படுத்த ஆசை கொண்டு கேட்டு வாங்கி நாயகி ராதாவை வைத்துப் பாடல் காட்சியையும் எடுத்தாராம். ஆனால் படத்தின் நீளம் கருதிப் பாடல் படத்தில் இருந்து நீக்கப்பட்டுவிட்டது.
இசைஞானி இளையராஜாவின் குடும்ப நிறுவனமான "பாவலர் கிரியேஷன்ஸ்" தயாரித்த அலைகள் ஓய்வதில்லை படத்திற்காக எடுக்கப்பட்ட "புத்தம் புதுக்காலை" பாடலின் படச்சுருள் இன்னமும் ஜெமினி ஸ்டூடியோவில் உறங்கிக் கொண்டிருக்கிறதாம். பாலவர் கிரியேஷன்ஸ் மனசு வைத்தால் அந்த அரிய பொக்கிஷப் பாடல் படமானதைக் கண்டு ரசிக்கும் வாய்ப்பு நமக்கெல்லாம் கிட்டும்.

Monday, November 10, 2014

மீசை முருகேஷ் என்ற குணச்சித்திரம்


நீண்ட நாட்களாக மீசை முருகேசைக் காணவில்லை இறந்திருப்பாரோ என்று நினைத்திருந்த வேளை மூன்று மாதங்களுக்கு முன்னர் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் சகோதர ஒளிபரப்பான புதுயுகம் தொலைக்காட்சியின் விசேட பேட்டி ஒன்றில் கண்டபோது மகிழ்ச்சியாக இருந்தது.

ஆஜானுபாகுவான உருவமும், எங்களூர் கந்தசுவாமி கோயிலின் கடா வாகனத்தின் கொம்பு போன்ற வளைந்து நீண்ட முறுக்கு மீசை தான் மீசை முருகேஷ் இன் அடையாளம். படங்களில் இவர் தோன்றி நடிக்கும் காட்சிகளில் சிரிக்கும் போது உடம்புதான் இன்னும் வேகமாக ஆடும். 
கண்கள் குவித்து இவர் சிரிக்கும் அழகைப் பார்க்கும் போது சொந்தக்காரத் தாத்தாவாகச் சொந்தம் கொண்டாடுவார்.

"உயிரே உனக்காக" படம் தான் இவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தது. 

இடையில் நிறையப் படங்கள் குறிப்பாக எண்பதுகளின் தமிழ் சினிமாவில் மீசை முருகேஷ் தவிர்க்கமுடியாத குணச்சித்திரம்.

ஆண்பாவம் படத்தில் சீதாவின் தந்தையாக வந்து இன்னும் அழுத்தமாக மனதில் பதிந்தார். http://youtu.be/PKYE8GryHfo

"பூவே உனக்காக" படத்தில் விஜய், சார்லி வீடு தேடி வரும்போது "பாட்டும் நானே பாவமும் நானே" பாடி வயிறு குலுங்கச் சிரிக்க வைத்தவர். அந்தக் காட்சியின் ஆரம்பம் வைதேகி காத்திருந்தாள் படத்தில் இரவானதும் வெள்ளைச்சாமி விஜய்காந்த் பாட ஆரம்பித்ததும் ஊரே அமைதியாகக் கேட்கும் காட்சிக்கு நேரெதிராக அமைக்கப்பட்டிருக்கும்.


மீசை முருகேஷ் அவர்கள் தேர்ந்த வாத்தியக்காரர். அவருக்கு எண்ணற்ற வாத்தியக்கருவிகளை வாசிக்கும் ஆளுமை உண்டு. சொல்லப்போனால் ஜலதரங்கம் என்ற வாசிப்பை நான் முதன்முதலில் பார்த்ததே இவர் எண்பதுகளில் பங்கேற்ற ஏதோவொரு மேடை நிகழ்ச்சியின் வீடியோ வழியாகத்தான்.

கே.பாலசந்தருக்கு இம்மாதிரி ஆளுமைகளைக் கண்டால் குஷி பிறந்து தன்னுடைய படங்களில் ஏதாவதொன்றில் ஒரு கதாபாத்திரம் ஆக்கிவிடுவார். அது போலவே. உன்னால் முடியும் தம்பி படத்திலும் மீசை முருகேஷ் அவர்களின் தந்தை கொண்டிருந்த தொழிலான தவில் வாத்தியக்காரராக வந்து சிறப்பித்திருப்பார்.

புதுயுகம் தொலைக்காட்சிப் பேட்டிக்கு வந்திருந்தார். காலமாற்றத்தில் உடம்பு இலேசாக உருக்குலைந்திருந்தாலும் ஆள் மாறவில்லை.

ஐரோப்பாவில் தன்னுடைய இசைக்கச்சேரியை முடித்துவிட்டுத் திரும்பும் போது திடீர் ஏற்பாடாகத் தென்னாபிரிக்காவில் கச்சேரி செய்ய இவரை வற்புறுத்தி அழைத்துப் போனார்களாம். தென்னாபிரிக்காவில் இறங்கி விமான நிலையத்தில் இருந்து காரில் போகும் போது விபத்துக்குள்ளாகிப் பலத்த காயங்கள் ஏற்பட்டு வருடக்கணக்கில் முடங்கிப் போனாராம். 
அந்தப் பேட்டியின் ஆரம்பத்தில் அவர் தொலைந்த ரகசியத்தைச் சொல்லிவிட்டு கலகலப்பாகப் பேட்டியைத் தொடர்ந்தார்.
மீசை முருகேஷ் அவர்கள் 85 வயதைத் தொட்டாலும் அவரின் இருப்பு மனதில் சந்தோஷத்தை வருவித்தது அப்போது.

கடந்த சனிக்கிழமை மீசை முருகேஷ் காலமாகிவிட்டார் என்ற செய்தியைக் கேட்டபோது முன் கொண்ட சந்தோஷத்தைக் குழப்பியது செய்தது அவரின் பிரிவு தந்த துயர். அவரின் ஆத்மா சாந்தியடையட்டும்.


மீசை முருகேஷ் குறித்து @tkadaibench தயாரித்த சிறு காணொளி  

புதுயுகம் தொலைக்காட்சியில் மீசை முருகேஷ் இன் பேட்டி

Friday, November 7, 2014

கமல்ஹாசன் + இளையராஜா = 50 + 10 = 60

கமல்ஹாசன் + இளையராஜா = 50 + 10 = 60 என் விருப்பங்கள்

வழக்கமாக என் பிரியத்துக்குரிய நடிகர் கமல்ஹாசன் பிறந்த நாளுக்கு ஒரு ஸ்பெஷல் பதிவு கொடுப்பது வழக்கம். இன்று ஏதேனும் பழைய இடுகையைக் கொடுக்கலாம் என்று இருந்தேன். 

காலையில் வேலைக்குப் பயணிக்கும் போது திடீரென்று கமல்ஹாசன் இளையராஜா கூட்டணிப் பதிவு போடலாமே என்று எண்ணம் தோன்றக் காரணம் "நீ ஒரு காதல் சங்கீதம்" அப்போது நினைவுக்கு வந்தது. எனவே இயன்றவரை காதல் பாடல்களாகவும், ஒரு படத்தில் இருந்து ஒரு பாடலாகவும், சோகம் தருவிக்காத பாடலாகவும், கமல்ஹாசன் பாடல் காட்சியில் தோன்றி நடித்ததாக இருக்கவேண்டும் என்றும் ஒரு விதிமுறையை மனதுக்குப் பிறப்பித்துப் பட்டியலை ஆரம்பித்தேன். 94 வீதமானவை காதல் பாடல்களாகவும் மீதி தவிர்க்க முடியாத நல்ல இனிமையான பொதுப் பாடல்களாகவும் அமைத்தேன்.

ராணி தேனி, மகளிர் மட்டும் நீங்கலாக 50 படங்கள் கமல்ஹாசன், இளையராஜா கூட்டணியில் வந்ததை இங்கே பகிர்கின்றேன். மீதமுள்ள 10 பாடல்களும் பிற இசையமைப்பாளர் இசையில் கமல்ஹாசனின் படங்களில் எனக்குப் பிடித்தவை.

இவ்வளவு பட்டியலையும் காலை ஒன்றரை மணி நேர ரயில் பயணத்தில் என் ஐபோன் வழியாகத் தட்டச்சியவை.  விடுபட்ட படங்களை உறுதிப்படுத்த கமல் படப்பட்டியலை விக்கிபீடியா வழி பார்த்து உறுதி செய்தேன்.

இப்போது ரயிலில் வீடு திரும்பும் போது பதிவாகக் கொடுக்கிறேன்.
எனவே சிட்னி ரயில்வேக்கும் ஆப்பிளுக்கும் நன்றி :-) 
முகப்புப்படம் நன்றி : canindia.com

இவை அனைத்துமே என் விருப்பம் சார்ந்த பட்டியல், முதலாவது பாடலைத் தவிர மற்றையவை தர வரிசையில் அமைந்தவை அல்ல. 


1. நீ ஒரு காதல் சங்கீதம் - நாயகன் 
2. வாழ வைக்கும் காதலுக்கும் ஜே - அபூர்வ சகோதரர்கள்
3. வளையோசை கலகலவென - சத்யா
4. பேர் வச்சாலும்  - மைக்கேல் மதன காமராஜன்
5. மீண்டும் மீண்டும் வா - விக்ரம்
6. மனசு மயங்கும் - சிப்பிக்குள் முத்து
7. அந்தி மழை பொழிகிறது - ராஜ பார்வை
8. இந்த மின்மினிக்கு - சிகப்பு ரோஜாக்கள்
9. சின்னஞ்சிறு வயதில் - மீண்டும் கோகிலா
10. ஒரே நாள் உனை நான் - இளமை ஊஞ்சலாடுகிறது
11. பூங்காற்று புதிதானது - மூன்றாம் பிறை
12. பூங்காற்று உன் பேர் சொல்ல - வெற்றி விழா
13. காதல் தீபமொன்று - கல்யாண ராமன்
14. பேரைச் சொல்லவா - குரு
15. ஜெர்மனியின் செந்தேன் மலரே - உல்லாசப் பறவைகள்
16. இதழில் கதை எழுதும் நேரமிது - உன்னால் முடியும் தம்பி
17. விழியில் என் விழியில் - ராம் லக்ஷ்மண்
18. தாலாட்டுதே வானம் - கடல் மீன்கள்
19. பூ மலர்ந்திட - டிக் டிக் டிக்
20 பொன் மானே - ஒரு கைதியின் டைரி
21. சொல்லச் சொல்ல என்ன பெருமை - எல்லாம் இன்ப மயம்
22. வானம் கீழே வந்தாலென்ன - தூங்காதே தம்பி தூங்காதே
23. முத்தம் போதாதே - எனக்குள் ஒருவன்
24. எங்கே என் ஜீவனே - உயர்ந்த உள்ளம்
25. உன்ன விட - விருமாண்டி
26. காதல் ராகமும் - இந்திரன் சந்திரன்
27. சிறிய பறவை - அந்த ஒரு நிமிடம்
28. கண்மணியே பேசு - காக்கிச் சட்டை
29. ராதே என் ராதே - ஜப்பானில் கல்யாணராமன்
30. நான் பூவெடுத்து - நானும் ஒரு தொழிலாளி
31. கால காலமாக - புன்னகை மன்னன்
32. காதல் மஹராணி - காதல் பரிசு
33. கண்மணி அன்போடு - குணா
34. இன்னும் என்னை - சிங்கார வேலன்
35. இஞ்சி இடுப்பழகி - தேவர் மகன்
36. நீ பார்த்த பார்வைக்கொரு - ஹே ராம்
37. பூ பூத்ததை - மும்பை எக்ஸ்பிரஸ்
38. பன்னீர் புஷ்பங்களே - அவள் அப்படித்தான்
39. ஶ்ரீரங்க ரங்க நாதனின் - மகாநதி
40. எந்தன் நெஞ்சில் - கலைஞன்
41. வெளக்கேத்து வெளக்கேத்து - பேர் சொல்லும் பிள்ளை
42. ஆழக்கடலில் தேடிய முத்து - சட்டம் என் கையில்
43. செவ்வந்தி பூ முடிச்ச  - 16 வயதினிலே
44. வான் போலே வண்ணம் - சலங்கை ஒலி
45. நிலா காயுது - சகலகலா வல்லவன்
46. மாருகோ மாருகோ - சதி லீலாவதி
47. இளங்கிளியே - சங்கர்லால்
48. ராக்கோழி கூவும் - மகராசன்
49. பருவம் உருக - ஹரே ராதா ஹரே கிருஷ்ணா
50. நானென்பது நீயல்லவோ - சூரசம்ஹாரம்
51. பாரதி கண்ணம்மா (எம்.எஸ்.வி) - நினைத்தாலே இனிக்கும்
52. வசந்த கால நதிகளிலே (எம்.எஸ்.வி) -    மூன்று முடிச்சு
53. சிப்பி இருக்குது முத்தும் இருக்குது (எம்.எஸ்.வி) - வறுமையின் நிறம் சிகப்பு
54. இது இரவா பகலா (எம்.எஸ்.வி) - நீல மலர்கள்
55. வா வா என் வீணையே (கங்கை அமரன்) - சட்டம்
56. மழைக்கால மேகம் ஒன்று (கங்கை அமரன்) - வாழ்வே மாயம்
57.  டெலிபோன் மணி போல் (ஏ.ஆர்.ரஹ்மான்) - இந்தியன்
58 ஸ்வாசமே ஸ்வாசமே (ஏ.ஆர்.ரஹ்மான்) - தெனாலி
59. பூ வாசம் புறப்படும் பெண்ணே  (வித்யா சாகர்) - அன்பே சிவம்
60. காதலி காதலி (தேவா) - அவ்வை ஷண்முகி

Thursday, November 6, 2014

பாடல் தந்த சுகம் : தூரத்தில் நான் கண்ட உன் முகம்


துரதிஷ்டத்தை அதிஷ்டமாக மாற்றும் வல்லமை கொண்ட இசை என்று இந்தப் பாடலை முன்னுதாரணப்படுத்தலாம். இல்லையா பின்னே, நிழல்கள் திரைப்படத்துக்காக எஸ்.ஜானகி பாட இசைஞானி இளையராஜா இசையில் இந்தப் பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டு இசைத்தட்டிலும் வெளிவந்த நிலையிலும் படமாக்காமல் கைவிடப்பட்ட பாடல். 

பின்னர் எப்படி அதிஷ்டத்தை வரவழைத்தது? 
எண்பதுகளில் தெலுங்கில் முன்னணி இயக்குனராகக் கலக்கிக் கொண்டிருந்த வம்சி தன்னுடைய "சித்தாரா" திரைப்படத்துக்காக இந்தப் பாடலின் அதே மெட்டுடன் இசைக் கோர்வையைப் பயன்படுத்திக் கொண்டார். தெலுங்கிலும் அதே எஸ்.ஜானகி தான் பாடகி. இந்தப் பாடலைப் பாடியதற்காக எஸ்.ஜானகிக்கு தேசிய விருது கிடைத்தது அதை வாங்கிக் கொடுத்தது பாடல் மீளப் பயன்படுத்தப்பட்ட  சித்தாரா திரைப்படம். இதோ அந்த மீளப் பயன்பட்ட பாடல் https://m.youtube.com/watch?v=5yiYUP7t-uw

இயக்குனர் வம்சி எண்பதுகளில் தீவிர இளையராஜா விசிறி. தமிழில் நாம் கேட்ட பல பாடல்கள் தெலுங்கிலும் இவரின் புண்ணியத்தால் கொண்டு சேர்க்கப்பட்டிருக்கின்றன. வம்சி இயக்கிய படங்களில் மீளவும் பயன்பட்ட தமிழ் மெட்டுகள் சிலதை இங்கு பட்டியலிட்டிருக்கிறேன் (இரண்டாவது பாடல் தவிர) http://www.radiospathy.com/2013/04/68.html

எஸ்.ஜானகியைப் பொறுத்தவரை அவருக்கு நெருக்கமான பாடல்களில் இந்தப் பாடலும் ஒன்று என்று சொல்லியிருக்கிறார். முதலில் இந்தப் பாடல் தமிழில் படமாக்கப்படாத வருத்தமும் இருந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார். எத்தனை ஆயிரம் பாடல்களைப் பாடிய பெரும் பாடகிக்கு இந்தப் பாடலின் மீதான ஈர்ப்பு இருப்பதில் இருந்தே இதன் மகத்துவம் புரியும்.

ஒரு பாடல் இசையமைக்கப்பட்டுப் பின்னர் படமாக்கப்படாது போவது திரையுலகின் நிரந்தர சாபக்கேடு. அதிலும் இயக்குநர் பாரதிராஜாவுக்கு இதில் என்ன அப்படி ராசியோ தெரியவில்லை. "மலர்களே நாதஸ்வரங்கள்" (கிழக்கே போகும் ரயில்), "புத்தம் புதுக் காலை" (அலைகள் ஓய்வதில்லை), "சந்திக்கத் துடித்தேன் பெண்மானே" (வேதம் புதிது) என்ற வரிசையில் "தூரத்தில் நான் கண்ட உன் முகம்" (நிழல்கள்) பாடலும் சேர்ந்து விட்டது. இந்தப் பாடல் மட்டும் படமாக்கப்பட்டு ஒருக்கால் தேசிய விருதை மூலப்பாடலான தமிழ் பாடலே சுவீகரித்துக் கொண்டிருந்தால் பாரதிராஜா படத்தில் பாடி இரண்டாவது தடவை தேசிய விருது பெற்ற் பாடகி எஸ்.ஜானகி என்ற பெருமை கிட்டியிருக்கும். ஏனென்றால் எஸ்.ஜானகிக்கு முதல் தேசிய விருதைக் கொடுத்தது  பாரதிராஜாவின் 16 வயதினிலே படத்தின் "செந்தூரப் பூவே" என்ற கங்கை அமரன் எழுதிய பாடல்.

"தூரத்தில் நான் கண்ட உன் முகம்" பாடலை எழுதியவர் பஞ்சு அருணாசலம். இந்தப் பாடல் படத்தில் இன்னொரு நாயகி பின்னாளில் பாலசந்தரின் ரயில் சினேகம் படத்தில் அமுதா என்ற பெயரில் நடித்தவருக்காக எடுத்திருக்க வேண்டும். ஏனென்றால் இந்த நாயகி வரும் காட்சிப் பின்னணியில் மீராவின் சிலை ஒன்று இருக்கும்.

இந்தப் பாடலை எல்லாம் ஒரு காலத்தில் நள்ளிரவு கடந்து வானொலி ஒலிபரப்புச் செய்யும் போது தனியே நான் மட்டும் வானொலிக்கூடத்தில் இருக்கும் சூழலில் கொடுத்த பாட்டு. அந்த ஏகாந்த இரவில் இதைக் கேட்கும் போது கிட்டும் சுகமே தனி. சோகப்பாடல்களைக் கேட்கும் போது பாடுபவர் வழியே  நம் மனக்கவலைகளுக்கு வடிகால் கிடைக்கிறது. கூட ஒருத்தர் இருக்கிறாரே என்பதை அரூபமாக வெளிப்படுத்தி நிற்கும் பாங்கில். 
எஸ்.ஜானகியிடம் இம்மாதிரிப் பாடல்களைக் கொடுக்கும் போது பங்கமில்லாது கொடுத்துவிடுவார் இதைச் சொல்லும் போது "பழச மறக்கலையே பாவி மக நெஞ்சு துடிக்குது" (ராசாவே உன்னை நம்பி) பாடலை நினைப்பூட்டுகிறார் இவர். எஸ்.ஜானகியிடம் பிடிக்காத விஷயமே இதுதான். அவரின் ஏதாவது ஒரு பாடலைச் சிலாகித்துப் பேச ஆரம்பித்தால் இன்னொரு மகத்தான பாடலில் கொண்டு போய் நிறுத்திவிடுவார்.

"தூரத்தில் நான் கண்ட உன் முகம்" பாடலைக் கேட்டவுடன் அப்படியே இழுத்துப் போய் "கண்ணா வருவாயா மீரா கேட்கிறாள்" (மனதில் உறுதி வேண்டும்) பாடலில் நிறுத்திவிடும். அவ்வளவு தூரம் நெருங்கிய சொந்தங்களாக இந்த இரு பாடல்களும் எனக்குத் தோன்றும். ஒரே ரகம் என்பதை மட்டும் என்னால் சொல்ல முடியும். ஒரே ராகமா என்பதை இசை வல்லுநர்கள் தான் சொல்ல வேண்டும்.

நிழல்கள் படத்தில் மொத்தம் நான்கு பாடலாசிரியர்கள். மடை திறந்து பாடலை வாலி எழுத, பூங்கதவே பாடல் கங்கை அமரன் கொடுக்க, பொன்மாலை பொழுது பாடலோடு வைரமுத்து அறிமுகமாக, பஞ்சு அருணாசலம் எழுதியது இந்த "தூரத்தில் நான் கண்ட உன் முகம்". பாரதிராஜா படங்களில் அதிகளவு பாடலாசிரியர் பணியாற்றிய படங்களில் ஒன்று.


பாடலின் ஆரம்பத்தில் மெலிதான இசையோடு ஜானகி கொடுக்கும் ஆலாபனையைத் தொடர்ந்து 
"தூரத்தில் நான் கண்ட உன் முகம்
நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்"
என்று பாடும் வரிகளை மிகவும் சன்னமாகக் கொடுத்துவிட்டு அதை வரிகளை மீண்டும் பாடும் போது கவனியுங்கள் இன்னும் கொஞ்சம் ஏற்றிப் பாடியிருப்பார். தொலைவின் நீளத்தைத் தன் குரல் வழியே தொனிக்கும் சிறப்பு அது.
பாடலின் மைய இசையில் ஒற்றை வயலின் இயலாமையின் பிரதிபலிப்பாகவும், ஒரு சேர ஒலிக்கும் வயலின்களின் கூட்டு மனதின் ஆர்ப்பரிப்பைப் பகிர்வது போல இருக்கும்.
தன் மனக்கிடக்கைக் கொட்டிக் கொண்டே போய் ஈற்றில்

"ஆடும் காற்றிலே புது ராகம் தோன்றுமா"
என்று தன் மனதை ஓய்வெடுக்கச் சொல்லுமாற் போலக் களைத்து விழுகிறது ஜானகியின் குரல்.

34 வருடங்களுக்கு முன்னர் வந்த நிழல்கள் என்றதொரு ஒரு தோல்விப் படம், அந்தப் படத்திலே வராத பாடல் போன்ற துரதிஷ்டமெல்லாம் களைந்து தன்னைக் கம்பீரமாக இசை ரசிகர் மனதில் வைத்திருக்கிறது இந்தப் பாடல்.

எனக்கு ஒரு மன நிறைவு என்னவெனில் எத்தனையோ பாடல்களைப் பற்றி ரசனைக் குறிப்புகள் எழுதியிருக்கிறேன். ஆனால் இந்தப் பாடலைக் குறிப்பிட்டு இதைப் பற்றி எழுத வேண்டும் என்று ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் அன்புக் கட்டளையிட்ட நண்பர் Karthik Natarajan இன் வேண்டுகோளை இன்று என் மனது நிறைவேற்றியிருக்கிறது.

தூரத்தில் நான் கண்ட உன் முகம் பாடலைப் படத்தில் வந்த காட்சிகளோடு மீளப் பொருத்திய காணொளி இது. இந்தக் காட்சியில் வரும் நாயகிக்காக இந்தப் பாடல் உருவாக்கப்பட்டிராது. நான் மேலே குறிப்பிட்ட மற்ற நாயகிக்குப் போய்ச் சேர்ந்திருக்க வேண்டும்.
http://www.youtube.com/watch?v=QvtwHqc1ArU&sns=em