Pages

Wednesday, August 23, 2023

பாடகராகப் பரிணமித்த இசை வசந்தம் எஸ்.ஏ.ராஜ்குமார்



“வாராரு வாராரு அழகர் வாராரு”

 https://www.youtube.com/watch?v=tVRV2CImzBA

கேட்டவுடனேயே அப்படியே மதுரை சித்திரைத் திருவிழாவில் கொண்டு போய் இருத்தி மெய் சிலிர்க்க வைத்து விடும் பாட்டு அது. “கள்ளழகர்”பாடலை இசையமைத்த தேனிசைத் தென்றல் தேவாவும், இசை வசந்தம் எஸ்.ஏ.ராஜ்குமாருமாக இணைந்து பாடிய அந்தப் பாடல் சித்திரைத் திருவிழாவில் நிலைத்துப் போன அழியாச் சொத்தாகி விட்டது. 

பாடலைப் பிரசவிக்கும் இசையமைப்பாளரே அவர் குரலில் பாடுவதைக் கேட்பது என்பது எனக்கு உவப்பானதொரு விடயம்.

அந்த ஜீவனின் மூல நாடியை அப்படியே பகிர்ந்தளிக்கும் தன்மையை அவர்தம் பாடல்களில் உய்த்துணரலாம்.

 மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களது தொகையான பாடல்கள் அவற்றுக்குச் சான்று பகரும் முன்னோடிகளில் ஒன்று.

“ஏ புள்ள கருப்பாயி 

உள்ள வந்து படு தாயி”

அந்தக் காலத்தில் பட்டி தொட்டியெங்கும் வியாபித்த பாடல்.

ஒரு அறிமுக இசையமைப்பாளர், தானே பாடல் எழுதிப் பாடிய அந்தப் பாடல் எடுத்த எடுப்பிலேயே கடைக்கோடி ரசிகன் வரை எட்டியது. அவர் தான் “இசை வசந்தம்” என்ற எஸ்.ஏ.ராஜ்குமார்.

தமிழ்த் திரையுலகில் பாடலாசிரியராகவும், இசையமைப்பாளராகவும் நீண்டதொரு பாரம்பரியம் கொண்டு விளங்கும் எஸ்.ஏ.ராஜ்குமார் இந்த ஆண்டோடு 35 ஆண்டுகளை இசையமைப்பாளராகத் தொட்டு நிற்கின்றார்.

“பிரியவதனா என்னை மறந்து விடாதே” (ஒரு வழிப்பாதை)

https://www.youtube.com/watch?v=Mz0WIomCaDI

எஸ்.ஏ.ராஜ்குமார் குரல் இன்றும் ஈழத்தின் எங்கோ ஒரு மூலையில் ஒலித்துக் கொண்டிருக்கும் காதலர் கீதமாய்.

“பூந்தென்றலே ஓடோடி வா” (மனசுக்குள் மத்தாப்பு) பாடலை அப்படியே தன் அலைவரிசையில் பாடிய 

“வா கண்மணி” https://www.youtube.com/watch?v=OEbTisjMtLQ

என் மனசுக்கு நெருக்கமானது.

“கண்ணோரம் கங்கை தான்” (புரியாத புதிர்) எஸ்.ஏ.ராஜ்குமார் வடிவத்தையும் தேடிப் பிடித்துக் கேட்டுப் பாருங்கள். படத்தின் அடி நாதம் ஒலிக்கும்.

“இது முதல் முதலா வரும் பாட்டு 

நீங்க நினைக்கும் தாளம் போட்டு”

https://www.youtube.com/watch?v=TacbLzRyRqY

தன்னம்பிக்கையோடு வரும் புதியவர்களின் வாசல் திறந்து வைத்த மங்கலப் பாட்டு.

ஜனகராஜ் (ஜல் ஜல் பாட்டு வருது), மணிவண்ணன் (அழகா அழகா), வடிவேலு (சந்தன மல்லிகையில்) என்று குணச்சித்திரங்களுக்கும் அச்சொட்டாய்ப் பொருந்திப் போனது எஸ்.ஏ.ராஜ்குமார் குரல்.

இசைக் கலைஞர் செல்வராஜின் மகன் எஸ்.ஏ.ராஜ்குமார் எண்பதுகளில அடையாளப்பட்ட ஒரு இசையமைப்பாளர் என்பதோடு தானே அக்காலத்தில் பெரும்பாலும் பாடலாசிரியராகவே இரட்டைச் சவாரியும் செய்த வகையில் தனித்துவமானவர். தன்னுடைய இசை வளத்துக்குத் தன் பால்யப் பருவத்தில் டுமீல் குப்பம் மீனவ சமூகத்தோடு வாழப் பழகி அவர்களோடு கடல் படுக்கையில் படகுச் சவாரியில் பாட்டுக் கச்சேரி படித்ததுவும் பயிற்சிக் களனாக அமைந்ததை ஒரு பேட்டியில் நினைவு கூர்ந்தார் தன் “ஏ புள்ள கருப்பாயி” பாடலின் பின்னணிச் செய்தியாக.

ஒரு நட்சத்திர ஹோட்டலின் வாத்தியக் கலைஞராக இருந்த இளைஞர் எஸ்.ஏ.ராஜ்குமார், இயக்குனர்கள் ராபட் ராஜசேகரனின் கண்ணில் படவும் "சின்னப்பூவே மெல்லப்பேசு" திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகின்றார். 

அந்த நேரத்தில் இசையில் பேராட்சி நடத்தி வந்த இசைஞானி இளையராஜாவின் காலத்தில் அறிமுகமாகி அதுவும் நடிகர் பிரபு தவிர ராம்கி உட்பட முற்றிலும் புதுமுகங்களோடு களம் இறங்கிய "சின்னப்பூவே மெல்லப்பேசு" திரைப்படத்தின் ஏழு பாடல்களுமே ஹிட் ஆகி படமும் வெள்ளி விழாக் கண்டு எஸ்.ஏ.ராஜ்குமாருக்குப் பெருமை சேர்த்தது. இதில் பெருமைக்குரிய ஒரு விஷயம் இப்படத்தின் எல்லாப் பாடல்களையும் தானே எழுதி இசையமைத்தது. தமிழ் சினிமாவின் வரலாற்றில் எல்லாப் பாடல்களுக்கும் எழுதி இசையமைத்த பெருமை டி.ராஜேந்திருக்குப் பின் இவரையே சேர்கின்றது. தொடர்ந்து பல படங்களுக்கு தானே பாடல் எழுதி இசையமைத்திருக்கின்றார்.

“முதல் பாடல்” படத்தின் தயாரிப்பாளராகவும், “ஒரு வழிப்பாதை” படத்தில் வில்லனாகவும் கூட எஸ்.ஏ.ராஜ்குமார் அவதாரம் எடுத்திருக்கிறார்.

எஸ்.ஏ.ராஜ்குமார் பாடியளித்த தேர்ந்தெடுத்த பாடல்களைத் திரட்டித் தருகின்றேன்.

1. ஏ புள்ள கருப்பாயி – சின்னப்பூவே மெல்லப் பேசு

2. வா கண்மணி – மனசுக்குள் மத்தாப்பூ

3. இதயம் இதயம் அது பனி போல் – கிருஷ்ணா

4. கண்ணோரம் கங்கை தான் – புரியாத புதிர்

5. ஆகாயத்தில் தொட்டில் கட்டி – பெரும் புள்ளி

6. பிரியவதனா – ஒரு வழிப் பாதை

7. ஜல் ஜல் பாட்டு வருது – மனசார வாழ்த்துங்களேன்

8. ஞானத் தங்கமே – முதல் பாடல்

9. ஆத்தா வராளாம் – வரம் தரும் வடிவேலன்

10. வாராரு வாராரு - கள்ளழகர் 

11. டேய் டேய் பயலே – மக்கள் ஆணையிட்டால்

12. எழுந்தால் மலை – கண்ணுபடப் போகுதய்யா

13. இது முதன்முதலா வரும் – புது வசந்தம்

14. கம்பனுக்குக் கை – மறுமலர்ச்சி

15. மண்ணுக்குள்ள தங்கம் – மறுமலர்ச்சி

16. ஓ பியாரி – பூவே உனக்காக

17. சந்தன மல்லிகையில் – ராஜகாளியம்மன்

18. சிறுவாணி ஊத்தல்லோ – பாட்டாளி

19. சுருளு மீசைக்காரண்டி – வீரன் வேலுத்தம்பி

20. வெட்டவெளி மைதானத்துல – வீரன் வேலுத்தம்பி

21. தமிழ் தமிழ் நான் – திருமதி தமிழ்

22. தாலாட்டும் பூவொன்று – பூவும் புயலும்

23. திருக்குறள் இடையழகி – திருமதி தமிழ்

24. திரு நாளு தேரழகா – சூர்ய வம்சம்

25. தியாகராஜரின் தெய்வ – பெண்ணின் மனதைத் தொட்டு

26. வீரன் சிலம்புக்காரன் – தங்கத்தின் தங்கம்

27. ஏலமலைக்காற்று – ரயிலுக்கு நேரமாச்சு

28. ஒரு பொண்ணு நெனைச்சா – ஒரு பொண்ணு நெனைச்சா

29. வாராயோ மீராவைத் தேடி – இதய ஊஞ்சல்

30. பார்த்ததில்ல – திவான்

31. திருநாள் வந்ததடா – புதுப் புது ராகங்கள்

32. ஒரு ஓரமாப் போங்கடி – பாலைவன ராகங்கள்

33. ஊத்திக்கிட்டது – வள்ளுவன் வாசுகி

34. கோட்டைக்கு நீ ராஜா – ஆளுக்கொரு ஆசை

35. மழையா மழையா இப்போ – காமராசு

36. காட்டுக்குயில் போல – வண்ணத்தமிழ் பாட்டு

37. எடுடா நம்ம – கந்தா கடம்பா கதிர்வேலா

38.  சோனா சோனா – மலபார் போலீஸ்

39.  தாயே திரிசூலி – சிம்மராசி

40. அழகா அழகா – பொன்மனம்

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் எங்கள் இசை வசந்தம் எஸ்.ஏ.ராஜ்குமார். Rajkumar Sa

கானா பிரபா

23.08.2023


Wednesday, August 9, 2023

“பா மணக்கும்” எங்கள் பஞ்சு அருணாசலம் ❤️🧡 இணைந்த பல்வேறு இசையமைப்பாளர்கள்


“மணமகளே மருமகளே வா வா
உன் வலது காலை எடுத்து வைத்து
வா வா”
இப்படியொரு மங்கலகரமான வரிகளோடு பாட்டு உலகில் தன் வலது காலை எடுத்து வைத்தார் பஞ்சு அருணாசலம் அவர்கள்,
1962 ஆம் ஆண்டில் வெளியான “சாரதா” திரைப்படம் வழியாக.
ஒரு திரையிசைக் கவிஞராக 2017 இல் வெளிவந்த
“முத்துராமலிங்கம்" வரை 54 வருடங்கள் பயணித்தவர்.

தன்னுடைய முதற்பாடலின் அடிகளையே எடுத்து “மணமகளே வா” என்று முதற்படத்தை இயக்கவும் செய்தார்.
தன்னுடைய சித்தப்பா கவிஞர் கண்ணதாசனின் உதவியாளராக
இருந்தவர் இன்னொரு மூத்த சித்தப்பா ஏ.எல்.சீனிவாசனின் தயாரிப்பில், இயக்குநர் திலகம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கு நராக அறிமுகமான “சாரதா” படத்தில் அடியெடுத்து வைத்தார். அந்தப் படத்தில் பாடலாசிரியர் என்ற அறிமுக அடையாளம் இருக்காது. எழுத்தோட்டத்தில் கண்ணதாசனின் உதவியாளர் என்றே அடையாளப்பட்டிருப்பார்.
முன்பு நான் எழுதிய “பூப்போல பூப்போல பிறக்கும்"
பாடல் குறித்த பதிவில் பின்னூட்டதில் வந்து மறவாமல் தன் முதற்பாடலையும் நினைப்பூட்டி விட்டுப் போனார். “பூப்போல பாடல் ஆர்.சுதர்சனம் இசையில் மிக அற்புதமான பாடல்.

பஞ்சு அருணாசலம் அவர்கள் தான் அறிமுகப்படுத்திய இளையராஜா வழி ஏராளம் பாடல்களில் இவர் தான் பாடலாசியர் என்று கடைக்கோடி ரசிகர் வரை அடையாளப்பட்டிருக்கிறார். ஆனாலும் தன்னுடைய பாட்டுச் சரித்திரத்தில் அதற்கு முன்னர் ஏராளம் பாடல்களை எழுதிக் குவித்தவர். பதிவை எழுதியவர் கானா பிரபா
இளையராஜா காலத்தில் கூட, சிவாஜிராஜா இசையில் “காற்றுக்கென்ன வேலி” படத்தில்
“ரேகா ரேகா”
என்ற இனிமை சொட்டும் பாடலை எழுதியவர்.

பஞ்சு அருணாசலம் அவர்கள் பல்வேறு இசையமைப்பாளர்களுக்குத் தன் பேனா மையை ஊற்றியிருக்கிறார் என்பதற்கு இலக்கணமாக,
பாட்டுப் பாட வாயெடுத்தேன் – தெய்வத்தின் தெய்வம் (இசை ஜி.ராமநாதன்) https://www.youtube.com/watch?v=YPmf_SiWLK8
எம்ஜி.ஆரின் கன்னித்தாய் படத்தின் அனைத்துப் பாடல்களும்,
“எனுங்க என்னைத் தெரியுமா” பாடலை “அல்லி” படத்துக்காகவும்,
“தாயாக மாறவா” மற்றும் “மனதில் என்ன மயக்கம்” பாடல்களை
கே.வி.மகாதேவன் இசையில் “ஏழைப் பங்காளன் படத்திலும், யாருக்குச் சொந்தம் படத்துக்கும் ஆக்கியளித்தார்.
இப்படியாகத் தன் முதல் இசையமைப்பாளர் கே.வி.மகாதேவனின் படங்களுக்கு ஆரம்பகாலத்தில் தொடர்ச்சியாக எழுதினார்.

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையிலும்
பொன்னெழில் பூத்தது (கலங்கரை விளக்கம் )
என்னை மறந்ததேன் (கலங்கரை விளக்கம்)
என் மனக் கூட்டுக்குள்ளே ( மனக்கணக்கு)
சின்னச் சின்ன வீடு கட்டி (மனக்கணக்கு )
ஆகிய பாடல்களோடு,
டி.கே ராம மூர்த்தி இசையில் “மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி” படத்துக்காக
எந்த எந்த நெஞ்சுக்குள்ளே
https://www.youtube.com/watch?v=KKe0-ytGL1M பாடலையும் தந்தார்.
“பொன்னென்பதோ பூவென்பதோ”
என்ற அற்புதமான பாடல் டி.ராமானுஜம் இசையில் அன்னப் பறவை படத்துக்காக, அதே படத்தில் சூடான எண்ணங்கள், பச்சைக்கிளி என்ற பாடலும் அவரே.
அழகின் அவதாரமே – காசி யாத்திரை ( இசை சங்கர் கணேஷ்
மேலும் சங்கர் கணேஷ் இசையில் “சக்க போடு போடு போடு ராஜா” , “தெய்வம் பேசுமா” படங்களிலும், அதே இரட்டையர்களுக்காக “ஜான்சி ராணி" படத்துக்கு அனைத்துப் பாடல்களும்,
இசையமைப்பாளர் வி.குமாருக்காக “தெய்வக் குழந்தைகள்” படத்தில் “மணமுள்ள மென் மலர்” பாடலும்,
காதல் படுத்தும் பாடு (அல்லிச் செண்டாடுதே பாடல்) படத்துக்காக டி.ஆர்.பாப்பா இசையிலும் எழுதிக் கொடுத்தவர்.
என்னய்யா முழிக்கிறே, உனக்கும் எனக்கும், வா இளமை அழைக்கிறது ஆகிய மூன்று பாடல்களையும் “எங்கம்மா சபதம்” படத்துக்காக
விஜயபாஸ்கர் இசையில் எழுதியவர்
“மோகனப் புன்னகை ஊர்வலமே” பாடலோடு “பனிமலர் என்ற பாடலும் சேர்த்து “உறவு சொல்ல ஒருவன்” படத்துக்காகவும்,
“முதல் முதல் வரும் சுகம்" https://www.youtube.com/watch?v=EjWSGaW0ceM
பாடலோடு “காலங்களில் அவள் வசந்தம்” படத்துக்காகவும்,
மேலும் பேர் சொல்ல ஒரு பிள்ளை, ஆடு புலி ஆட்டம் படங்களுக்கும் பாடல் எழுதினார்.
வேதா இசையில் வல்லவனுக்கு வல்லவன்,
மேலும் சி.என்.பாண்டுரங்கம் இசையில் “திரு நீலகண்டர்” படங்களுக்கும் எழுதியிருக்கிறார்ர்.
கார்த்திக் ராஜா இசையில்
அலெக்சாண்டர் படத்துக்காக “ராஜராஜன் நானே”
மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இசையில்
“ஓ மானே மானே” பாடலை ரிஷி படத்துக்காகவும் எழுதியளித்தார்.

தமிழக அரசின் தொட்டில் குழந்தை திட்டத்துக்கு ஆதரவளித்து எடுக்கப்பட்ட “தொட்டில் குழந்தை” படத்திற்கு ஆதித்யன் இசையமைப்பில் அனைத்துப் பாடல்களையும் எழுதிக் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கே பகிர்ந்தவை சில உதாரணப் பாடல்கள் தான். இவற்றைத் தாண்டியும் பல்வேறு இசையமைப்பாளர்களிடம் தன் கை வண்ணம் படைத்தார் பஞ்சு அருணாசலம் அவர்கள்.
சிவகாமி….சிவகாமி….
பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண் பனி தூவும் நிலவே நில்
என்று கவியழகு நிறைந்த பாடலை அளித்தவர் தான்,

“ஆசை அலைகள்” படத்திலே
நடந்து வந்த பாதையிலே
நாலு வழியும் பார்த்து வந்தேன்
நல்லது கெட்டது புரியவில்லை
நல்லவரெல்லாம் வாழ்வதில்லை..
என்று தத்துவச் சிறப்பு மிக்க பாடலையும் வழங்கினார்.
“பணமிருக்கும் பலமிருக்கும்
உங்கள் வாசலில்
நல்ல குணமிருக்கும் குலமிருக்கும்
எங்கள் வாசலில்
பொன் மணமும் பொருள் மணமும்
உங்கள் வாசலில்
புதுப் பூ மணமும் பா மணமும்
எங்கள் வாசலில்”
எவ்வ்வளவு தன்னம்பிக்கை ததும்பும் வரிகளைத் தன் முதற்பாடலிலேயே வைத்திருக்கிறார் பாருங்கள்.
பஞ்சு அருணாசலம் ஐயா மறைந்து ஏழு ஆண்டுகள் கடந்தும் எம் நெஞ்சில் நிறைந்து நிற்கும் அவரைப் போற்றி வணங்குவோம்.
கானா பிரபா
09.07.3023