Pages

Monday, October 29, 2012

"கவிஞர் வாலியும் இசைஞானி இளையராஜாவும்"

"ஒரு திரைப்பட இசையமைப்பாளர் என்கிற முறையில் இளையராஜாவோடு எனக்குக் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதுண்டு. ஓர் இறையருள் மிக்க இசைக்கலைஞர் என்னும் வகையில், மாற்றுக்கருத்தே என்னுள் என் இதயத்தில் முளைவிட்டதில்லை. அவர் ஒரு மகாபுருஷர் என்கின்ற மதிப்பை இப்பிறவி முழுதும் நான் என் மனத்துள் பொன்னே போல் வைத்துக் காப்பேன்" - கவிஞர் வாலி "நானும் இந்த நூற்றாண்டும் (1995)

இன்றோடு (Oct 29) கவிஞர் வாலி அவர்களுக்கு எண்பத்து ஒன்று வயதாகிவிட்டது. கிட்டத்தட்ட முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக இசைஞானி இளையராஜாவோடு இணைந்து பணியாற்றும் பாடலாசிரியர் கவிஞர் வாலி என்பது ஒரு தனித்துவம் மிக்க விஷயம். இசைஞானி இளையராஜாவின் ஆரம்ப காலத்தில் பஞ்சு அருணாசலத்தில் இருந்து கங்கை அமரன், வைரமுத்து உள்ளிட்ட ஒரு சிலருக்கு மட்டுமே ஒரு படத்தின் முழுப்பாடல்களையும் எழுதும் கெளரவம் வழங்கப்பட்டிருக்கிறது. இசைஞானி இளையராஜாவோடு அவரின் ஆரம்ப காலம்தொட்டுத் தொடர்ந்து வரும் பாடலாசிரியர்களில் பஞ்சு அருணாசலத்துக்கு அடுத்து கவிஞர் வாலியைப் பார்க்கிறேன்.

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலத்தில் கண்ணதாசனுக்கு ஒரு மாபெரும் அங்கீகாரம் கொடுக்கப்பட்டுத் தொடர்ந்த கூட்டணி போலவே இசைஞானி இளையராஜா,பாடலாசிரியர் வாலி கூட்டணியையும் பார்க்கிறேன். கவிஞர் வாலி அவர்கள் இசைஞானி இளையராஜாவுக்கு முற்பட்ட காலத்தின் இசையமைப்பாளர்கள் பலரோடு பல்லாண்டுகள் முன்னரேயே பணியாற்றி ஏராளம் சிறப்பான பாடல்களைக் கொடுத்தாலும் இளையராஜாவோடு சேர்ந்து பணியாற்றியபோது கிடைத்த மக்களின் அபிமானம் தனித்துவமானது என்பது என் எண்ணம். இதைவகையான உதாரணத்தைப் பாடகி எஸ்.ஜானகிக்கும் கொடுக்கலாம்.

அதிலும் குறிப்பாக கவிஞர் வாலி அவர்கள் எண்பதுகளின் இறுதிப் பகுதியில் இருந்து தொண்ணூறுகளின் நடுப்பகுதி வரை ஏராளம் படங்களுக்கு இசைஞானி இளையராஜாவின் இசையில் பாடல் எழுதியவர் என்ற கெளரவத்தை விட, அதில் நிறையவே படங்கள் கவிஞர் வாலி மட்டுமே முழுப்பாடல்களும் எழுத வெளிவந்தவை. குறிப்பாக அக்னி நட்சத்திரம், தளபதி, வருஷம் 16 போன்ற மாபெரும் வெற்றிப்படங்களும் உள்ளடங்குகின்றன. இந்தச் சிறப்புப் பகிர்வில் கவிஞர் வாலி அவர்கள் இசைஞானி இளையராஜாவின் இசையில் முழுப்படத்துக்கும் பாடல்கள் எழுதிய பத்துப் படங்களில் இருந்து பாடல்கள் அலங்கரிக்கின்றன. கவிஞர் வாலி அவர்கள் நீண்ட நாள் நோய் நொடியின்றி வாழ வாழ்த்தி வருகின்றன இந்தப் பாடல்கள்.

மீரா படத்தில் இருந்து "புது ரூட்டுல தான்" பாடியவர்: கே.ஜே.ஜேசுதாஸ்

கிளிப்பேச்சு கேட்கவா படத்தில் இருந்து "சிவகாமி நெனப்பினிலே" பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி
 

வருஷம் 16 படத்தில் இருந்து "பழமுதிர்ச்சோலை எனக்காகத் தான்" பாடியவர்: கே.ஜே.ஜேசுதாஸ்

ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி படத்தில் இருந்து "ராஜா ராஜா தான்" பாடியவர்கள்: எஸ்.ஜானகி, அருண்மொழி குழுவினர்
 

மகுடம் படத்தில் இருந்து "சின்னக்கண்ணா" பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

அக்னி நட்சத்திரம் படத்தில் இருந்து "ஒரு பூங்காவனம்" பாடியவர்: எஸ்.ஜானகி

ராசா மகன் படத்தில் இருந்து "வைகாசி வெள்ளிக்கிழமை தானே" பாடியவர்:எஸ்.பி.பாலசுப்ரமணியம்

மாமியார் வீடு படத்தில் இருந்து "என்னை தொடர்ந்தது" பாடியவர்கள்: கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்.ஜானகி

தளபதி படத்தில் இருந்து "சின்னத்தாயவள் தந்த ராசாவே" பாடியவர்:எஸ்.ஜானகி

தாலாட்டு கேட்குதாம்மா படத்தில் இருந்து "நேந்துக்கிட்ட நேர்த்திக்கடன் தீர்த்துப்புட்டேன்" பாடியவர்:எஸ்.பி.பாலசுப்ரமணியம்
 

Saturday, October 20, 2012

இன்று வந்த காற்று என் பாட்டைக் கொண்டு வந்து தந்தது

"மேகங்களைத் தொடுப்பேன் மஞ்சமதை அமைப்பேன் எந்தனுயிரே எந்தனுயிரே, வானவில்லைப் பிடிப்பேன் ஊஞ்சல் கட்டிக் கொடுப்பேன் கண்ணின் மணியே கண்ணின் மணியே, உடல் தழுவத் தழுவ நழுவிப் போகுதே" கண்மணி படத்தில் வந்த இந்தப் பாடலை இன்று எதேச்சையாக ஒரு பண்பலை வானொலியில் ஒலிபரப்பக் கேட்டபோது உள்ளுர இனம்புரியாதவொரு சந்தோஷம் எனக்குள் . 

ஏ.ஆர்.ரஹ்மான் அலை அடித்துக்கொண்டிருந்த   நண்பர்களுக்குள் கோஷ்டி பிரிந்து ரஹ்மான் கோஷ்டி, ராஜா கோஷ்டி என்று வாதப்பிரதிவாதம் செய்து கொண்டிருந்த வேளை அது. 1994 ஆம் ஆண்டில், "கண்மணி" திரைப்படம் வருவதாகச் செய்தி வந்திருந்தபோது உள்ளுர ஒரு மனோபலம். ஏற்கனவே செம்பருத்தி படத்தில் கலக்குக் கலக்கிய இயக்குனர் செல்வமணி - இசைஞானி இளையராஜா கூட்டணி மீண்டும் இணையும் படம். இந்தப் படத்தின் பாடல்களை வைத்தே எதிர்க்கோஷ்டியை மடக்கிவிடலாம் என்று எண்ணியிருந்தேன்.  உள்ளூரில் பாடல்களை ஒலிநாடாவில் பதிவு செய்து விற்கும் ரெக்கோர்டிங் நிலையம் ஒன்றின் நிரந்தர வாடிக்கையாளன் நான். கடன் கொடுத்தவன் கூட அந்தக் கடைக்கு அடிக்கடி போகமாட்டான். அவ்வளவு அந்நியோன்யம் அந்தக் கடைக்காரருக்கும் எனக்கும் ;-). கடும் யுத்தச் சூழலில் கொழும்பில் இருந்து யாராவது ஒருவர் கொண்டுவரும் பாடல் ஒலிநாடாவை வைத்தே அவரும் பிழைப்பை ஓட்டிவிடுவார்.

"அண்ணை, கண்மணி பாட்டுகள் வந்துட்டுதோ" என்று நானும் சதா கேட்பதும், "இல்லைத்தம்பி, கொழும்பில் இருந்து தான் கசட் வரவேண்டும், பாத்துக் கொண்டிருக்கிறன்" என்று அவருமாக இழுபறிப்பட்டு கடைசியில் ஒருநாள் இந்தப் படத்தின் பாடல்கள் வந்த செய்தியைச் சொன்னார். "எனக்கு முழுப்பாட்டையும் அடிச்சுத் தாங்கோ"  கண்மணி படப்பாடல்களின் ஒன்றைத் தானும் அதுவரை கேட்காமல் நான் கேட்க, அவரும் சிரித்துக் கொண்டே "நாளைக்கு வாரும்" என்று சொல்லிவிடுகிறார்.


அடுத்தநாள் கடை திறக்கும் வரை பழியாய்க் கிடந்து கஸெட்டைக் கவர்கின்றேன். வீடு போய் முதல் வேலையாக சைக்கிள் டைனமோவைச் சுழற்றி மின் பிறப்பாக்கி அதில் பொருத்திய வயர் வழியே டேப்ரெக்கார்டருக்கு உயிர் பாய்ச்சுகிறேன். அப்போது மின்சாரம் மருந்துக்கும் இல்லாத காலம். கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் மின்சாரமே இப்படித்தான் பார்த்தோம். பாடல் பதிவு செய்த ஒலிநாடாவை, என் டேப்ரெக்கார்டரில் போட்டுவிட்டு ஒருகையால் டைனமோவைச் சுற்றிக்கொண்டே, உச்சஸ்தாயியில் ஒலியை வைத்துப் பாடல்களைப் போடுகின்றேன். ஒவ்வொன்றாகக் கழிகின்றன. மனதில் பெரிதாக ஒட்டமறுக்கின்றன. "புதுப்படம் தானே திரும்பத் திரும்பக் கேட்டால் பிடிக்கப் போகுது" எனக்கு நானே சொல்லிவிட்டு, எதிர்க்கோஷ்டிக்கு "கண்மணி" படத்தின் பாடல்கள் வந்த விஷயத்தையே சொல்லாமல் அமுக்கிக் கொள்கிறேன்.
ஆனால் நானோ விடாப்பிடியாகத் திரும்பத் திரும்பக் கேட்கிறேன். மெல்ல மெல்ல என்னை ஆக்கிரமிக்கின்றன அந்தப் பாடல்கள். குறிப்பாக "நேற்று வந்த காற்று என் பாட்டைக் கொண்டு வந்து தந்ததா" பாடலை ராஜாவும், ஜானகியும் பாடிய பாங்கும் இசையும் புதுமையாக இருந்தது. அதற்குப் பின்னர் "ஓ என் தேவதேவியே" யும் மனதுக்கு நெருக்கமாக வர, "ஆசை இதயம்" பாடலும் சேர்ந்து கொள்கின்றது.  

இவற்றையெல்லாம் கடந்து ஒரு பாடலை மட்டும் இரகசியமாக ஒலியளவைக் குறைத்து, வீட்டுக்காரரின் காதில் படாமல் எனக்கு மட்டுமாகக் கேட்கிறேன்.  "உடல் தழுவத் தழுவ நழுவிப் போகுதே" என வரிகளோ விவகாரமாக இருக்கிறது, ஆனால் அந்தப் பாடல் மெட்டமைக்கப்பட்ட பாங்கும் இசைக்கோர்வையும் சும்மா விட்டால் தானே,
ஏனோ இனம்புரியாத ஈர்ப்பு அந்தப் பாடலில்.அந்தப் பாடலைப் பற்றி அன்று என்னோடு கோஷ்டியமைத்த நண்பர்களுக்கும் கூடச் சொல்லிச் சிலாகிக்கவில்லை. ஏனென்றால் இப்படியான பாடல்களின் வரிகளை வைத்தே "ஆளின்ர வயசுகுக் கேக்கிற பாட்டைப் பார்" என்ற ரீதியில் மேம்போக்கான ஒரு முத்திரை வந்திடும் ;) இல்லாவிட்டால் இதென்ன இந்தப் பாட்டில் அப்படி என்ன இருக்கு என்று கடந்து போய்விடுவார்கள். எல்லாம் என் தனிப்பட்ட ரசனை அனுபவம்தான்.
ஆனால் எப்போவாது இந்தப் பாடல் என் காதுகளை நெருங்கும் போது அதே பழைய சினேகிதத்தோடு வாரிக்கொள்வேன். செம்பருத்தி படம் போல எடுக்க ஆசைப்பட்டுக் கையைச் சுட்டுக்கொண்ட செல்வமணி கூட இந்தப் படத்தையே மறந்திருக்கலாம். ஆனால் இந்தப் பாடல் என்னோடு நெருக்கமாகப் பயணிக்கும் எனக்கும் இந்தப் பாடலுக்குமான பந்தம் அப்படி. அது ராஜாவின் பாடல்களை ஏன் பிடிக்கும் என்று கேட்கும் போது ஒற்றை வரியில் சொல்ல முடியாத விளக்கமாகவும் இருக்கும்.
 "உடல் தழுவத் தழுவ" பாடலைக் கேட்க