Pages

Thursday, September 30, 2010

சந்திரபோஸ் - ஒரு இசையுலக சிற்றரசனின் மரணம்

தமிழ்சினிமாவின் எண்பதுகள் இளையராஜா என்ற பேரரசனின் இசையாட்சி நடந்துகொண்டிருந்த போது அவரின் எல்லைக்குள் வர முடியாத தயாரிப்பாளர்களுக்கு ஆபத்பாந்தவனாக இருந்த சிற்றரசர்களில் முதன்மையானவர் சந்திரபோஸ். குறிப்பாக பெருந் தயாரிப்பு நிறுவனமாக விளங்கிவரும் ஏவிஎம் நிறுவனத்தின் ஆஸ்தான இசையமைப்பாளராக அமரும் அளவுக்கு சந்திரபோஸ் ஆசீர்வதிக்கப்பட்டார். இதற்கெல்லாம் வெறும் பரிந்துரைகள் மட்டும் பலனளிக்காது, அதற்கும் மேல் தன்னை நிலை நாட்டிக்கொள்ள வேண்டும் என்ற இலட்சியமும் வேகமும் இருக்கவேண்டும், அதுதான் சந்திரபோஸின் உயரத்துக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

தமிழகத்து நண்பர்களோடு பேசும் போது அடிக்கடி சொல்லிக்கொள்வேன், "பாடல்களைக் கேட்கும் ரசனையில் ஈழத்தவர்களுக்கும் உங்களுக்கும் வேறுபாடு இருக்கிறதென்று".
ஆமாம், இலங்கை வானொலி ஆரம்பித்து வைத்த இந்த ரசனை ஈழத்தின் கடைக்கோடி ரசிகனுக்குமான பழக்கமாக மாறி விட்டது.

அந்த வகையில் எண்பதுகளில் ஈழத்து ரசிகர்களால் பெரிதும் ஆகர்ஷிக்கப்பட்ட ஒரு இசையமைப்பாளராக சந்திர போஸ் விளங்குகின்றார். அன்றைய காலகட்டத்தில் அவரின் இசையமைப்பில் வெளிவந்த ஒவ்வொரு பாடலுமே எமது போரியல் வாழ்வின் மறக்கமுடியாத அந்த நாட்களின் சிறு ஞாபக எச்சங்களை நினைவுபடுத்தும் வல்லமை மிக்கதானது.

இரண்டாண்டுகளுக்கு முன் அமீரகத்தில் ஒரு விழா எடுக்கும் போது அந்த நிகழ்வின் ஒருங்கமைப்பாளராக இருந்த நண்பர் ஆசிப் மீரான், சந்திரபோஸ் தான் இந்த விழாவின் விருந்தினராக வருகின்றார் என்று சொல்லியிருந்தார். ஆசீப் மீரானிடம் சந்திரபோஸ் இலக்கத்தைப் பகிர்ந்து கொண்டால் அவரை வானொலிப் பேட்டிக்காக உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என்று நான் கேட்டபோது " நம்ம சந்திரபோஸ் தானே, தரலாம்" என்றிருந்தார். நானும் சாவகாசமாக இந்தப் பேட்டியை எடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்து வைத்திருந்தேன்.


சந்திரபோஸ்! எங்களின் அந்தக் கால ஞாபகங்களைப் புதுப்பிக்க உதவினீர்கள், இன்று உங்களை எங்களின் நினைவுகளில் நிரந்தரமாக உறைந்து விட்டீர்கள்.

மெல்லிசை மன்னர் எம்.எஸ் விஸ்வநாதனின் இசையில் "ஆறு புஷ்பங்கள்" திரைப்படத்திற்காக தமிழ் சினிமாவில் சந்திரபோஸ் அறிமுகமான போது பாடிய பாடல் "ஏண்டி முத்தம்மா ஏது புன்னகை"



ஒரு தொட்டில் சபதம் திரைப்படத்திற்காக சந்திரபோஸ் பாடி பட்டி தொட்டியெல்லாம் புகழ்பூத்த "பூஞ்சிட்டுக் குருவிகளா...புதுமெட்டுக்கருவிகளா..."



வடிவங்கள் திரைப்படத்திற்காக சந்திரபோஸ் இசையமைத்துப் பாடிய "நிலவென்ன பேசுமோ"



சந்திர போஸ் குறித்து நான் றேடியோஸ்பதியில் தந்திருந்த முந்திய இடுகை ஒன்று

எண்பதுகள் என்பது தமிழ் திரையுலகில் அசைக்கமுடியாத இளையராஜா காலம். தீபாவளிப் படங்களில் எல்லாமே ராஜாவின் இசையில் பல வருடங்களாக வந்த காலமும் இருக்கின்றது, அதே போல் அந்தக் காலகட்டத்தின் முதல் வரிசை நாயகர்களின் முதல் தேர்வே இளையராஜாவாகத் தான் இருந்தது. அந்த வேளையில் சிறு முதலீட்டில் உருவான படங்களுக்கும், பெரிய நாயகர்கள் நடித்த ஒரு சில படங்களுக்கும் ஆபத்பாந்தவர்களாக இருந்த இசையமைப்பாளர்கள் வரிசையில் சங்கர்-கணேஷ், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், கங்கை அமரன் வரிசையில் மிக முக்கியமாகக் குறிப்படத்தக்கவர் இசையமைப்பாளர் சந்திரபோஸ்.

1978 இல் வெளியான "மச்சானைப் பார்த்தீங்களா" திரைப்படம் சந்திரபோஸுக்கு நல்லதொரு அறிமுகத்தைக் கொடுத்திருந்தது. அதில் குறிப்பாக "மாம்பூவே சிறு மைனாவே" பாடல் காலத்தால் விஞ்சிய ஒரு தேன் விருந்து.ஒரு சிறு இடைவெளிக்குப் பின் சந்திரபோஸின் அலை அடிக்க ஆரம்பித்தது கே.பாலாஜியின் "விடுதலை" திரைப்படத்தின் மூலம். எண்பதுகளின் மத்தியிலே கே.பாலாஜியின் மொழிமாற்றப்படங்களிலே கங்கை அமரனுக்கு மாற்றீடாக "விடுதலை" (குர்பானியின் மொழிமாற்றம்)திரைப்படத்தில் சந்திரபோஸின் இசைதான் வந்து கலக்கியது. பொதுவாக இப்படியான மொழிமாற்றுப் படங்களிலே மூலப்படங்களின் பாடல்கள் முழுவதையுமே நகல் எடுப்பது வழக்கம். ஆனால் "விடுதலை" திரைப்படத்துக்காக விஷேஷமாக சந்திரபோஸால் மெட்டமைக்கப்பட்ட "நீலக்குயில்கள் ரெண்டு" பாடல் மீண்டும் இவர் அடுத்த இசையாட்டத்தில் ஆட சிறப்பானதொரு வாய்ப்பைக் கொடுத்தது. அடுத்த சில ஆண்டுகளில் ஏ.வி.எம் நிறுவனத்தின் செல்ல இசையமைப்பாளரானார்.

சந்திரபோஸின் இசை ஜாலங்கள் ராஜாவின் இசையைப் போல மந்திரித்து வைக்கவில்லை என்பதை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது. இளையராஜாவுக்கு சவால் இளையராஜாவே தான். ஆனால் அவருக்கு அடுத்த வரிசை இசையமைப்பாளர்களில் தனித்துவம் மிக்கவராக சந்திரபோஸ் இருந்ததாலேயே மற்றைய இசையமைப்பாளர்களை ஓரம் கட்டிவிட்டு அவரின் இசையில் மலர்ந்த பாடல்கள் ரசிகர்களின் காதுகளை வெகுவாக ஆக்கிரமித்தன. இளையராஜா என்னும் மகா கலைஞன் இசையாட்சி நடத்திக் கொண்டிருக்கும் வேளை அவருக்கு ஈடு கொடுத்து இன்னொரு இசையமைப்பாளரின் பாடல்களையும் ரசிகர்களைக் கேட்க வைக்க இன்னொருவருக்கும் திறமையும் வல்லமையும் வேண்டும். அந்த வல்லமை சந்திரபோஸிற்கு இருந்திருக்கின்றது. அந்தக் காலகட்டத்தில் ராஜாவைச் சீண்டவோ என்னவோ "வில்லதி வில்லனையும் ஜெயிச்சுடுவேன், நான் ராஜாதிராஜனையும் தோற்கடிப்போன்" என்று மதுரைக் காரத் தம்பி திரைப்படத்திலும், கங்கை அமரன் இயக்கத்தில் இளையராஜா இசையில் வந்த "அண்ணனுக்கு ஜே" படத்தை சீண்டுமாற் போல என்று நினைக்கிறேன் "உங்கப்பனுக்கும் பே பே" என்று "ராஜா சின்ன ரோஜா"விலும் பாட்டுப் போட்டிருந்தார் சந்திரபோஸ். ராஜா-வைரமுத்து விரிசல் கடலோரக் கவிதைகளைத் தொடர்ந்து வரவும், வைரமுத்துவுக்கு சிவப்புக் கம்பளம் விரித்தது சந்திரபோஸ் இசையமைத்த படங்கள். சொந்தக்காரன் திரைப்படத்தில் வைரமுத்துவின் குரலையும் பயன்படுத்தி ஒரு பாடலும் பண்ணியிருக்கிறார். இசையமைப்பாளர் சந்திரபோஸை வானொலிப் பேட்டி ஒன்று எடுத்து அவர் காலகட்டத்து இசையனுபவங்களைத் திரட்டவேண்டும் என்பது என் வெகுநாட் கனவு.



இப்படி சந்திரபோஸ் பற்றிப் பேசிக் கொண்டே போகலாம். அவரின் அரிய பாடல்கள் பலவற்றைத் தேடித் தேடிச் சேமித்தும் இருக்கின்றேன். ஆனால் இந்த வாரம் சந்திரபோஸின் இசையில் மலர்ந்த முத்தான பத்து காதல் மெட்டுக்களை மட்டும் தருகின்றேன். இன்னொரு சந்தர்ப்பத்தில் எஞ்சிய பாடல்களோடு அவற்றின் சிறப்பையும் தருகின்றேன்.

"மச்சானைப் பார்த்தீங்களா" திரைப்படம் வி.சி.குகநாதன் இயக்கத்தில் சிவகுமார், சுமித்ரா போன்றோர் நடித்து 1978 இல் வெளிவந்த திரைப்படம். இப்படத்தில் கே.ஜே.ஜேசுதாஸ், பி.சுசீலா பாடும் "மாம்பூவே சிறு மைனாவே" பாடல் ஆரம்ப தபேலாவும், மெலிதாக இழையோடும் கிட்டார் இசையும் கலக்க, ஒரு காலகட்டத்தில் றேடியோ சிலோனில் கலக்கிய பாடல் என்று இப்போதும் அந்த நாளைய இளைசுகள், இந்த நாளைய பெருசுகள் சொல்லும். அதே காலகட்டத்தில் இளையராஜா போட்ட பாடல்களை நினைவுபடுத்துவதே இந்த இசையின் பலவீனம். அருமையான பாடகர் கூட்டும், இசையும் கலக்க இதோ "மாம்பூவே"




தொடர்ந்து 1982 இல் வெளிவந்த வடிவங்கள் திரைப்படம் , ராம்ஜி என்ற ஒரு நடிகர் நடித்தது. ஆனால் படத்தின் பெயரை இன்றும் ஞாபகம் வைக்க உதவுவது சந்திரபோஸின் இசை. இப்படத்தில் இவரே பாடிய "நிலவென்ன பேசுமோ" என்ற அருமையான சோகப்பாடல் இன்றும் இருக்கின்றது. கூடவே எஸ்.பி.பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம் பாடும் 'இதய வானில் உலவுகின்ற புதிய மேகமே" ரசிகர்களின் இதய வானில் பச்சென்று இடம்பிடித்த காலம் ஒன்றும் இருக்கின்றது. அதற்கும் இலங்கை வானொலியை ஆதாரம் காட்டவேண்டி இருக்கின்றது.




கே.பாலாஜியின் இன்னொரு மொழிமாற்றுத் திரைப்படம் "விடுதலை". சிவாஜி, ரஜினி, விஷ்ணுவர்த்தன் போன்ற பெருந்தலைகளைப் போட்டும் இசைக்கு மட்டும் சந்திரபோஸை மீண்டு(ம்) திரைக்கு வரவழைத்த படம். புத்துணர்ச்சியோடு சந்திரபோஸ் மெட்டமைத்திருக்கின்றார் என்பதற்கு சிறப்பானதொரு உதாரணம், இப்படத்தில் வரும் "நீலக் குயில்கள் ரெண்டு" என்று எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் பாடல். இடையிலே ஹோரஸ் குரலாய் 'ஓஹோஹோ ஓஹோஓஹோஓஒ" என்று சந்திரபோஸ் கலப்பது வெகு சிறப்பு.



எண்பதுகளில் ஏ.வி.எம் நிறுவனத்துக்கு மாபெரும் வெற்றியைக் கொடுத்த திரைப்படம் சங்கர் குரு. அர்ஜீன, சீதாவுடன் பேபி ஷாலினி பாடிக் கொண்டே வரும் "சின்னச் சின்னப் பூவே" பாடலும் இப்பட வெற்றிக்குக் கைகொடுத்த சமாச்சாரங்கள் என்றால் வைரமுத்து வரிகளில் சந்திரபோஸ் இசையமைத்த "காக்கிச் சட்டை போட்ட மச்சான்" பாட்டு கூட இந்த வெற்றியில் பங்கு போட்டது.இதோ மலேசியா வாசுதேவன், மற்றும் அந்தக் காலகட்டத்தில் சந்திரபோஸின் இசையில் அதிகம் பாடிய சைலஜா குரல்களில் "காக்கிச் சட்டை போட்ட மச்சான்"



ஆண்பாவம் படம் கொடுத்த போதையும் பாண்டியராஜன் கன்னாபின்னாவென்று படங்களை நடித்து வைக்க, பதிலுக்கு ரசிகர்களும் அவர் படங்களுக்கு டூ விட்டுக் கொண்டிருந்த வேளை டில்லிக்கு ராஜான்னாலும் "பாட்டி சொல்லைத் தட்டாதே" என்ற மந்திரத்தோடு வெற்றிக் கனியை அவருக்குக் கொடுத்தது. இப்படத்தில் வெத்தல மடிச்சுக் கொடுத்த பொம்பளை பாடல் சோகம், சந்தோஷம் இரண்டிலும் கேட்க இதமான பாடல்கள். அத்தோடு "வண்ணாத்திப் பூச்சி வயசென்ன ஆச்சு" பாடல் அந்தக் காலகட்டத்தில் நம்மூர் திருவிழாக்களில் நாதஸ்வரக் கலைஞர்களின் வாசிப்பில் தவறாது இடம்பிடித்த கலக்கல் பாடல். அந்தப் பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா ஆகியோர் பாடுகின்றார்கள்.



ஏ.வி.எம் தயாரிப்பில் வசந்தி என்றொரு படம் வந்தது. மோகன், மாதுரி ஆகியோர் நடித்திருப்பார்கள். அப்படத்தில் வரும் கே.ஜே.ஜேசுதாஸ், சித்ரா பாடும் "ரவிவர்மன் எழுதாத கலையோ" என்று. அப்பாடலில் நாயகன் பாடுவதாக " பூமாலையே உன்னை மணப்பேன், புதுச் சேலை கலையாமல் அணைப்பேன்" என்று வைரமுத்து எழுதியிருப்பார். அணைக்கும் போது சேலை கலையாதா என்று என்று ஒரு ரசிகர் வைரமுத்துவிடம் ஒருமுறை கேட்கவும் அதற்கு "முதலிரவில் அணைக்கும் போது சேலைக்கு என்ன வேலை என்று சொன்னாராம் அந்தக் குறும்புக்கார வைரமுத்துக் கவிஞர். இதோ அந்தப் பாடல்.



மலையாளத்தின் சிறந்த மசாலாப் படங்களையும் குடும்பப் படங்களையும் கொடுத்து வரும் சத்யன் அந்திக்காட் எடுத்து மோகன்லால், சிறினிவாசன் போன்றோர் நடித்த "காந்திநகர் 2nd Street" அதுவே பின்னர் சத்யராஜ், ராதா, பிரபு (கெளரவம்) ஜனகராஜ் நடித்த "அண்ணா நகர் முதல் தெரு" ஆனது. "மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு" பாடலை அந்தக் காலகட்டத்தில் காதல் திரி வைத்தவர்களுக்கு ஒருமுறை போட்டுக் காட்டுங்கள். முகத்தில் ஒரு புன்னகை தானாகக் கிளம்பும். பலரைக் காதலிக்க வைத்ததும், காதலியை நினைத்து மனசில் பாடவைத்ததும்" இந்த எஸ்.பி.பி, சித்ரா பாடும் பாட்டு. "ராத்தூக்கம் ஏனம்மா கண்ணே உன்னாலே" என்று காதலன் பாடவும் பதிலுக்கு "ராசாவே நானும் தான் கண்கள் மூடல்லே" என்று காதலியும் பாடும்போது புதுசா புதுசா அதில் காதில் கேட்டு காதலிக்கத் தோன்றும் மீண்டும் மீண்டும். என்னவொரு அற்புதமான மெட்டும், இசையும்.



எண்பதுகளில் ஏ.வி.எம்மின் ஆஸ்தான இசையமைப்பாளர் சந்திரபோஸுக்கு போனஸாய் கிடைத்தவை ரஜினிகாந்திற்கு மாபெரும் வெற்றிகளைக் கொடுத்த "மனிதன்", ராஜா சின்ன ரோஜா" திரைப்படங்களில் இசையமைக்கும் வாய்ப்புக்கள். ரஜினியின் திரைப்படங்களில் இளையராஜாவுக்கு அடுத்து இன்னொரு இசையமைப்பாளரின் பாடல்கள் வெகுவாக அன்று பேசப்பட்டதென்றால் அவை இவை இரண்டும் தான். குறிப்பாக ரஜினியின் "ராஜா சின்ன ரோஜாவில்" வரும் "பூ பூ போல் மனசிருக்கு" பாடலும் "மனிதன்" திரைப்படத்தில் கே.ஜே.ஜேசுதாஸ், சித்ரா பாடும் "ஏதோ நடக்கிறது" பாடலும் மெல்லிசையாக மனதில் இடம்பிடித்த அருமையான பாடல்கள். இதோ ஏதோ நடக்கிறது கேளுங்கள், இதமாய் இருக்கிறதல்லவா சொல்லுங்கள்.



நடிகர், இயக்குனர் பார்த்திபனுக்கு இளையராஜாவே முதல் படத்தில் இசையமைக்காத வாய்ப்பு. ஆனாலும் சந்திரபோஸுடன் இணைந்து "புதிய பாதை" போட்டார். இப்படத்தின் பாடல் காசெட் அப்போது வெளியானபோது ஒவ்வொரு பாடலுக்கும் வைரமுத்துவின் முத்தான குரல் விளக்கமும் இருக்க வந்திருந்தது. "பச்சப்புள்ள அழுதிச்சின்னா பாட்டு பாடலாம் இந்த மீசை வச்ச கொழந்தைக்கு என் பாட்டு போதுமா?" என்று வாணி ஜெயராம் கேட்க, எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்ன சொல்கின்றார் என்பதைப் பாடலிலேயே கேளுங்கள்.



இசையமைப்பாளர் சந்திரபோஸுன் உச்சம் குறைந்து மெதுவாகக் குறைந்த காலகட்டத்தின் போது வந்தது ஏ.வி.எம்மின் "மாநகரக் காவல்".விஜய்காந்த், சுமா ஆகியோர் நடித்திருக்க, சந்திரபோஸின் இசையில் கே.ஜே.ஜேசுதாஸ் "தோடி ராகம் பாடவா" என்று கேட்க சித்ரா சொல்லும் " மெல்லப்பாடு" என்று பதில் போடும் பாட்டோடு அடுத்த கட்ட சினிமா யுகமும் ஆரம்பித்தது, புதுப்புது இசை (இளவரசர்கள்)யமைப்பாளர்கள் வந்தார்கள். குறுநில மன்னர்களும் மெல்ல மெல்ல விலகினார்கள். சந்திரபோஸும் நீண்ட பல வருசங்களாய் இசையமைப்பில் இருந்தும் விலகப் போனார்.



XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

உண்மையில் கடந்த றேடியோஸ்புதிரைத் தொடர்ந்து இன்னொரு இசைப்படைப்பைத் தான் கொடுக்க இருந்தேன். ஆனால் என் நினைப்பை மாற்றி சந்திரபோஸின் பாடல்களையே முழுமையாகக் கொடுக்க ஏதுவாக அமைந்தது, கடந்த புதிரின் பின்னூட்டம் வாயிலாக R.லதா, இசையமைப்பாளர் சந்திரபோஸ் குறித்து வழங்கிய இந்தக் கருத்துக்களை அவருக்கு மிகுந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டே பகிர்கின்றேன்.


From: R.Latha on Mon Feb 18 5:31:35 2008.
தமிழ் சினிமாவில் 350-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தவர் சந்திரபோஸ். இதில் ரஜினி நடித்த மனிதன், ராஜா சின்னரோஜா உள்ளிட்ட ஏவி.எம்.மின் தயாரிப்பில் வந்த 12 படங்களும் அடங்கும். 1977-ல் தொடங்கிய இவரது இசை சாம்ராஜ்யம் தொடர்ந்து 20 வருடங்களுக்கும்மேலாக நிலைத்தது.

ஒய்வெடுக்கிறாரோ என்ற யோசித்த நேரத்தில் இதோ வந்து விட்டேன் என்று சின்னத்திரையில் ஆஜர். இம்முறை இசையமைப்பாளராக அல்ல, நடிகராக. மெட்டிஒலி சித்திக் தயாரித்த மலர்கள் தொடரில் லிங்கம் என்ற வில்ல கேரக்டரில் தனது நடிப்பால் ரசிகர்களை பயமுறுத்தவும் செய்தார்.

இந்த லிங்கம் கேரக்டருக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு இவரை தொடர்ந்து நடிப்புக்கு முகம் காட்ட வைத்தது. இந்த கேரக்டரில் இவரது நடிப்பை பார்த்த டைரக்டர் தினேஷ் இவரை தனது கத்திக்கப்பல் படத்தில் மெயின் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் போட்டு விட்டார்.அதோடு ஏவி.எம்.மின் வைர நெஞ்சம் தொடரிலும் மாமனார் கேரக்டரில் குணசித்ர நடிப்பைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார். மெகா சேனலில் இப்போது திகிலும் தெய்வீகமுமாய் யார் கண்ணன் இயக்கத்தில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ஜனனம் தொடரில் வைத்தியராகவும் வந்து மிரட்டிக் கொண்டிருக்கிறார்.

"இனி தொடர்ந்து நடிப்பு தானா?''

ஜனனம் தொடர் படப்பிடிப்பில் இருந்தவரிடம் கேட்டபோது...

"நடிக்கும் ஆசையில் தான் சினிமாத் துறைக்கே வந்தேன்.ஆனால் வெளிப்படுத்த முடிந்தது எனக்குள் இருந்த இசையைத்தான். 12 வயதிலேயே பாய்ஸ் நாடகக் கம்பெனியில் நடிக்கவந்து விட்டேன். கலைஞர் நடித்த மணிமகுடம் நாடகத்தில் கூட நடித்திருக்கிறேன். கலைஞரின் பராசக்தி நாடகமாக நடந்தபோது அதிலும் நடித்திருக்கிறேன்.என் நடிபபில் எனக்கே திருப்தி ஏற்பட்ட நேரத்தில் தான் சினிமாவுக்கு நடிக்க வந்தேன்.எதிர்பாராமல் இசையமைப்பாளராகி அதில் பிரபலமான நேரத்தில் நடிப்பு ஆசையை ஒத்தி வைத்தேனே தவிர, நடிப்பார்வம் உள்ளூர கனன்று கொண்டுதான் இருந்திருக்கிறது. அதுதான் இத்தனை வருடம் கழித்து மறுபடியும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. இசையமைப்பில் சாதித்ததையும் தாண்டி நடிப்பில் சாதிக்க வேண்டும். அதுதான் இப்போதைக்கு எனக்குள் விதவித கேரக்டர்களாய் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.''

Saturday, September 18, 2010

தேசிய விருதை வென்ற "கேரளவர்மா பழசிராஜா" பின்னணி இசைத்தொகுப்பு - 300 வது பதிவு


"1792 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பதினெட்டாம் தேதி ஶ்ரீரங்கப்பட்டணத்தில் கவர்னர் ஜெனரல் கான்வாலிஸ் பிரபுவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் படி திப்புசுல்தான் மலபார் பிரதேசத்தின் பலபகுதிகளை பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பனிக்கு விட்டுக் கொடுத்தார். வர்த்தகம் மட்டுமல்லாது கம்பனி ஆட்சியையும் கைப்பற்றியது. கடுமையான வரிச்சட்டங்களை விதித்து மக்களைக் கொடுமைப்படுத்தியது. அங்கிருந்த குறுநில மன்னர்கள் படைபலமோ துணிவோ இல்லாததால் வெள்ளையனுக்கு அடிபணிந்து கிடந்தனர்.
ஒரேயொரு ராஜகுமாரன் மட்டும் உரிமைக்காகவும் விடுதலைக்காகவும் போராட மக்களைத் திரட்டினார்"


பழசிராஜா என்ற வரலாற்றுக் காவியம் இப்படித் தான் ஆரம்பிக்கின்றது. ஆரம்பம் முதல் பழசிராஜாவின் அந்தத் தீரவரலாற்றின் பக்கங்களின் பங்காளிகளாக எம்மையும் இணைத்துக் கொண்டு பயணிக்கின்றது. ஈற்றில் பழசிராஜா மடியும் போது எம் மனங்களில் கனமாக உட்கார்ந்து கொண்டு விடுகிறார்.


கோகுலம் நிறுவனத்தின் சார்பில் கோபாலன் தயாரிப்பில் கேரளத்தின் பெரும் எழுத்தாளர்
M. T.வாசுதேவன் நாயர் எழுதிய கேரளவர்மா பழசிராஜா என்ற காவியத்தை இயக்கியவர் மலையாளத்தின் உச்ச இயக்குனர்களில் ஒருவரான ஹரிஹரன். இசையமைப்பை இசைஞானி இளையராஜா கவனித்துக் கொள்ள, ஒலிச்சேர்க்கையை ஆஸ்கார் விருதைக் கவர்ந்த ரசூல் பூக்குட்டி கவனித்துக் கொண்டார். 2009 ஆம் ஆண்டு தேசிய விருதுப்பட்டியலில் சிறந்த பின்னணி இசைக்காக இசைஞானி இளையராஜா, சிறந்த ஒலிச்சேர்க்கைக்காக ரசூல் பூக்குட்டி, சிறந்த துணை நடிகைக்கான தேர்வுக்குழுவின் சிறப்பு விருதாக பத்மப்பிரியா ஆகியோருக்கு இந்தப் படம் உச்ச விருதுகளைக் கொடுத்துக் கெளரவித்தது.

மலையாளத்தின் பெரும் நடிகர் மம்முட்டி பழசிராஜாவாகவும் அவரின் தளபதி இடைச்சேன குங்கனாக சரத்குமார், பழசிராஜா நாயகி கனிகா, நீலி என்ற வீரப்பெண் பத்மப்ரியா, திலகன் என்று தொடங்கி மலையாள சினிமா உலகின் பெரும் நட்சத்திரங்களையும் இணைத்த படமாக இது திகழ்கின்றது. படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை எடுத்துக் கொண்ட கதையின் நோக்கத்துக்கு இம்மியும் பிசகாமல் பயணிப்பது அனுபவப்பட்ட ஜாம்பவான்களின் கூட்டினை நிரூபிக்கின்றது.

இந்தப் படத்தைத் தமிழில் மொழிமாற்றிய போது பாடல்கள் முழுவதையும் கவிஞர் வாலி கவனித்தார். படத்தின் இன்னொரு பலமாக நேர்த்தியான, எளிமையான வசன அமைப்புக்களைச் சிறப்பாகச் செய்திருக்கின்றார் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன். படத்தைப் பார்க்கும் போது பாத்திரங்களின் வாயிலாக அவற்றைக் கேட்கும் போது எவ்வளவுதூரம் இந்த வசனப்பகுதியை ஜெயமோகன் சிறப்பாகக் கொடுத்திருக்கின்றார் என்பதை உணர முடியும்.



பழசிராஜாவின் பின்னணி இசைக்கோர்ப்பில் ராஜாவின் இசையை Hungarian National Philharmonic இன் இசைவல்லுனர்கள் இசைய வைத்தார்கள். ஆரம்பத்தில் இந்தப் படத்துக்கு ஏற்கனவே பட்ஜெட்டை மீறிய செலவாகிவிட்டது எனவே ஹங்கேரிய இசைக்குழுவை வைத்துப் பண்ணுவதைத் தவிர்த்து விடலாம் என்று இயக்குனர் வேண்டினாலும் ராஜா, "இந்தப் படத்தை இன்னொரு முறை எடுக்கப் போகிறீர்களா, இதிலேயே சிறப்பாகக் கொடுத்து விடுவோமே" என்று சொல்லிச் சம்மதிக்க வைத்தார். ராஜாவின் தளராத அந்த எண்ணம் தான் இப்படத்தின் பின்னணி இசையில் பெரும் உச்சத்தைக் காட்டியிருக்கிறது.


ஆங்கிலேயரின் தேடலுக்கு மறைவாக பழசிராஜா தன் மக்களுடன் காடுகளில் பயணிக்கும் போது வரு பாடல் "ஆதியுஷாசந்யா போததிதுவே" பாடலை கேரளத்தின் புகழ்பெற்ற பாடலாசிரியர் ஓ.என்.வி.குருப் எழுதும் போது கவிஞர் அந்த காட்சியின் காத்திரமான உணர்வைக் கொண்டுவரவில்லை என்று ராஜா சொல்லப் போக அதனால் கேரளத்தில் பெருஞ் சர்ச்சை கிளம்பியது. பின்னர் இயக்குனர் ஹரிஹரன் தலையிட்டு, "ராஜாவுக்கு அது திருப்தி கொடுக்காதது அவரின் சொந்தக் கருத்து, ஆனால் இயக்குனராக என்னை குருப் இன் கவி வரிகள் திருப்திப்படுத்தியது" என்று சொல்லி பிரச்சனையை ஓரளவு தணித்தார். ஆனாலும் ஏஷியா நெட் என்ற கேரள தொலைக்காட்சியின் 2009 ஆம் ஆண்டு சினிமா விருதுகள் வழங்கப்பட்டபோது இசைஞானி இளையராஜா பெயரை அந்த விழா முடியும் வரை மருந்துக்கும் கூடச் சொல்லாமல் அமுக்கிப் பழிவாங்கிவிட்டார்கள். என்றாலும் இந்தப் படத்தில் வந்த "குன்னத்தே" பாடலுக்காக சிறந்த பாடகிக்கான விருதை சித்ரா தட்டிக் கொண்டார்.

ஜேசுதாஸ்,எம்.ஜி.ஶ்ரீகுமார், விது பிரதாபன் குழுவினர் பாடும் ""ஆதியுஷாசந்யா போததிதுவே"



சித்ரா பாடும் "குன்னத்தே கொன்னயும்"




றேடியோஸ்பதியின் 300 வது பதிவு நெருங்க நெருங்க விசேஷமாக ஒரு இசைப்படையலைக் கொடுக்கவேண்டும் என்று பலவிதமான நினைப்புக்களோடு இருந்தேன். ஆனால் திடுதிப்பில் கடந்த வாரம் வந்த 2009 ஆம் ஆண்டுக்கான தேசியவிருதுகள் அறிவிப்போடு 300 வது பதிவுக்குப் பலமான விருந்து கிட்டி விட்டது.

இந்தியத் திரைவரலாற்றில் பின்னணி இசைக்கான முதல் தேசிய விருது கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான பழசிராஜாவுக்கு இசையமைத்த இசைஞானி இளையராஜாவுக்குக் கிட்டியதும் அவரின் உயிர் ரசிகர்கள் எங்களுக்கெல்லாம் பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கின்றது. இந்த விருதை முப்பது ஆண்டுகளுக்கு முன்னரேயே அறிமுகப்படுத்தி இருந்தால் பின்னணி இசைக்கான தேசிய விருதுகளில் குறைந்த பட்சம் 20 ஐ ஆவது அள்ளியிருப்பார் எங்கள் ராகதேவன்.


பழசி(இளைய)ராஜாவுக்குக் கிட்டிய விருது கொடுத்த தெம்பில் கடந்த மூன்று நாட்களாக பழசிராஜா இசைப்பிரிப்புப் பணியில் இறங்கினேன். படத்தை ஓடவிட்டுப் பதமாக இசையை மட்டும் பிரிக்கும் காட்சிகளை மீனுக்குக் காத்திருக்கும் கொக்குப் போல அவதானமாக இருந்தாலும் அவ்வளவு சுலபமான வேலையாக அது படவில்லை. காரணம், இசைஞானியின் மற்றைய படங்களில் பின்னணி இசைவரும் காட்சிக்கு மட்டும் தனியானதொரு வசன ஆதிக்கம் குறைவான அல்லது இல்லாத காட்சியமைப்பு இருக்குமாற்போல இந்தப் படத்தில் இல்லை. படம் தொடங்கி முடியும் வரை இண்டு இடுக்கெல்லாம் இசையை நுழைத்து இலாவகமாக சங்கமிக்க வைத்ததால் நாலைந்து தடவைகளுக்கு மேல் மீண்டும் மீண்டும் காட்சிகளை மீள ஒடவிட்டு இசைப்பிரிப்புச் செய்ய வேண்டியதாயிற்று. அப்படியாகப் பிரித்தெடுக்கப்பட்ட ஒலிக்குளிகைகள் மட்டும் 38 , அவற்றை இங்கே தருகின்றேன். இந்த இசையைக் கேட்கும் போது பழசிராஜா என்ற பெருங்காவியத்துக்கு இசைஞானியின் எல்லைகடந்த இசைக்கோர்ப்பு எவ்வளவு தூரம் பெரும் பலமாக இருக்கின்றது என்பதை உணர்வீர்கள். காட்சிகளின் நுட்பத்தை உணர்ந்து ஒரு காட்சியிலேயே வரும் பலவிதமான உணர்வுக் கலவைகளையும், காட்சிகளின் வீரியத்தையும் பார்வையற்றவனின் மனக்கண்ணிலே கூடப் பிரகாசமாய்க் காட்டும் உயரிய சங்கீதமாக இந்த இசைக்கலவை விளங்கி நிற்கின்றது. பின்னணி இசையிலே இசைஞானியின் உச்சத்தைத் தொடுவதற்கு இனிமேல் தான் ஆண்டவன் கருணை கூர்ந்து யாரையாவது பிறப்பெடுக்க வைக்கவேண்டும் என்பது போன்றதான உணர்வலையை உண்டுபண்ணும் இசைஜாலத்தின் சங்கமம் இந்தப் படம். சந்தோஷத்தில் ஆர்ப்பரித்தும், வீரத்தில் வெகுண்டெழுந்தும், பலவீனப்பட்டு வீழும் போது முடங்கி முனகியும், பழசிராஜாவின் பெரும்பயணத்தில் அவருக்குத் துணையாக வந்த தளபதி இடைச்சேன குங்கன் போல இசைஞானி இளையராஜாவின் இசை வியாபித்து நிற்கின்றது.
இனி ராஜா பேசட்டும்

கமல்ஹாசனின் அறிமுகத்தோடு ஆரம்பமாகும் முகப்பு இசை



ஆங்கிலேய அதிகாரிகள் அவர்களின் விசுவாசிகளைச் சந்தித்தல்


ஆங்கிலப்படையின் அணிவகுப்பு


பழசிராஜாவின் சுதேசிப்படைகளின் வாட்களும் ஆங்கிலப்படைகளின் துப்பாக்கிகளும் மோதும் காட்சி


பழசிராஜாவின் அறிமுகம், தனது மாமனார் குரும்பிரநாடு ராஜவர்மாவைச் சந்தித்தல்





அமைதி தவழும் அந்தக் கிராமத்தில் பழசிராஜாவைத் தேடி நுழையும் ஆங்கிலேயப்படை


இடைச்சேன குங்கன் (சரத்குமார்) அறிமுகமும் ஆங்கிலச் சிப்பாய்களுடன் அவரின் மோதலும்


பழசிராஜா மரபுமுறை போர்முறையின் அவசியத்தை உணர்த்தித் தன் அணியில் இருக்கும் வீரர்களைப் பயிற்சி எடுக்கச் செய்யும் காட்சி





இடைச்சேன குங்கனுக்கும் பழசிராஜாவுக்கும் நடக்கும் நட்புரீதியான வாட்போர்


தன் மக்களோடு தான் தொடர்ந்து இருப்பேன் என்று பழசிராஜா தன் மக்களுக்கு உறுதிகூறும் காட்சி


பழசிராஜா படைகளுக்கும் ஆங்கிலச் சிப்பாய்களுக்கும் ஒரு திடீர் மோதல்





ஆங்கிலேயர்களுடன் நட்புறவாடும் குரும்பைநாடு தாசில்தாரர் பழயம்வீடான் சந்து ஆங்கிலச் சிப்பாய்களுடன் பழசிராஜாவைப் பிடிக்க வரும் காட்சியும் அதை பழசிராஜா தந்திரமாக எதிர்கொள்ளலும்




காட்டுக்குள் பழசி படைகளை வேட்டையாட வரும் ஆங்கிலேயப்படைகளை சுதேசிப்படைகள் தந்திரமாக மடக்கிப் போர் புரிதல்


பழசிராஜா ஆங்கிலேயருடன் ஒப்பந்தம் போட முனையும் வேளை


பழசிராஜாவும் ஆங்கிலேயப் பிரதிநிதிகளும் நேருக்கு நேர்


பழசிராஜாவைக் கொல்லத் தருணம் பார்க்கும் ஆங்கிலேய அதிகாரி மேஜர் ஜேம்ஸ் கோர்டனுக்கு அவரின் மேலதிகாரி , கோட்டையைச் சுற்றி வளைத்து நிற்கும் பழசி படைகளைக் காட்டும் காட்சி, அட்டகாசமான பின்னணி இசையோடு


பழசிராஜா ஆங்கிலேயருடன் ஒப்பந்தம் போடும் முன் தன் கோரிக்கையைச் சொல்லும் வேளை


பழசிராஜா ஆங்கிலேயருடன் போட்ட ஒப்பந்தத்தால் அதிருப்தியடையும் இடைச்சேன குங்கன், கைதேறி அம்பு (மனைவியின் சகோதரன்) ஆகியோருக்குத் தன் நிலைப்பாட்டை விளக்கும் போது


இடைச்சேன குங்கன் (சரத்குமார்) குரும்பைநாடு தாசில்தாரர் பழயம்வீடான் சந்து (சுமன்) நேருக்கு நேர்


பழசிராஜா தன் வாளை எடுத்துப் பரிசோதிக்கும் போது


"உண்மையைச் சொல்லு! யார் நீ, பழசியோட ஆளு தானே?"
"பழசியோட ஆள் இல்லை, பழசியே தான் பழசி கேரள வர்மா"


பழசிராஜாவின் விசுவாசி கண்ணவது நம்பியார் (தேவன்) அவர் மகன் ஆகியோரைத் தந்திரமாகப் பிடித்த ஆங்கிலேயர் பொது இடத்தில் தூக்கிலிடும் போது


ஆங்கிலேய அசிஸ்டெண்ட் கலெக்டர் பேபரின் செயற்பாடுகளால் அதிருப்தியடையும் அவர் வருங்காலத் துணை டோரா


பழசிராஜா படைகளுக்கும் ஆங்கிலேயப் படைகளுக்கும் பெரும் மோதல்


தலைக்கால் சந்துவும் (மனோஜ் கே ஜெயன்) அவரின் மனைவியாகப் போகும் நீலியும் (பத்மப்பிரியா) ஆங்கிலேயப் படைகளை எதிர்கொள்ளும் போது


பழசிராஜாவின் தலைக்கு ஆங்கிலேயர் விலை வைத்தலும் தலைக்கால் சந்து கொட்டும் மழையில் மரணத்தை முத்தமிடுதலும்


அதுவரை அழாமல் இருந்த நீலி பழசிராஜாவைக் கண்டதும் தன் அழுகையைக் கொட்டித் தீர்க்கும் பெருஞ்சோகம்


தன் வலதுகரமாக இருந்த தலைக்கால் சந்துவின் (மனோஜ் கே ஜெயின்) கோரமரணத்தைத் தொடர்ந்து இடைச்சேன குங்கன் (சரத்குமார்) மேஜர் ஜேம்ஸ் கோர்டனை வேட்டையாடல்


ஆங்கிலேயப் படை பழசிராஜாவின் இருப்பிடத்தை அறிந்து வரப்போகும் வேளை ஊரே இடப்பெயரும் நேரம் நிகழும் காட்சிகள், கைதேறி அம்பு காயம்படல்


பழசிராஜா தன் வாளுக்கு வேலைகொடுக்கும் நேரம் வந்து விட்டதை உணர்தல்



கைதேறி அம்பு காலனின் கைகளில் தன் உயிரைக் கொடுக்கும் நேரம் பழசிராஜா அவனுக்கு ஆறுதல் கொடுத்தலும் ஆனால் அவன் உயிர் பிரிந்ததை உணரும் வேளை அவன் கைகளை ஒதுக்கிவிட்டு மனம் உடைந்து போதலும்


இடைச்சேன குங்கன் எட்டப்பன் குரும்பைநாடு தாசில்தாரர் பழயம்வீடான் சந்து (சுமன்)வை வேட்டையாடிக் கொல்லும் வேளை


ஆங்கிலேயப் படைகளை நேரெதிரே சந்திக்கும் போது சரணடையாமல் இடைச்சேன குங்கன் பழசிராஜாவுக்குத் தன் குருதட்சணயாக உயிரைக் கொடுக்கும் வேளை


பழசிராஜா தன் மனைவி கைதேறி மக்கம் (கனிகா) தன்னை விட்டு விலகி கைதேறிக்குப் போகுமாறு சொல்லும் நேரம்


"தம்புரானோட உயிர் எங்களுக்குப் பெருசு" - எம்மன் நாயர் (லாலு அலெக்ஸ்)
பழசிராஜா பெருஞ்சிரிப்புடன் "துருப்பிடிச்ச வாளைப்பார்த்து வயசான காலத்துல இல்லாத வீரகதைகளை உருவாக்கி அதை எல்லாரையும் நம்பவச்சு அதைப்பேசி நாம் வாழணும்,
எம்மன்! பிறந்ததில் இருந்து ஒரு நிழல் கூடவே வந்துகிட்டிருக்கு, என்னைக்காவது ஒருநாள் அது திரும்பி நேருக்கு நேரே வந்து நிற்கும் அதுதான் மரணம், பயமில்லை"

"அழாதீங்க, அழணும்னு தோணிச்சின்னா அழுதுக்குங்க, என்னை நினைச்சில்லை
அதிர்ஷ்டம் கெட்ட இந்த நாட்டை நினைச்சு, நாட்டோட மக்களை நினைச்சு...
வீரசொர்க்கங்கங்களின் வர்ணனைகளைக் கேட்டு ஆசைப்படுற ஒரேயொரு கடமை மட்டும் தான் பாக்கியிருக்கு
இந்த நாட்டை ஆளுற உரிமை யாருக்குன்னு இங்க, என்னோட ரத்தத்தால குறிக்கணும்
அது போதும்...."


பழசிராஜா ஆங்கிலேயப்படைகளோடு நேரடிச் சமரில், வாத்தியங்களின் உச்சபட்ச ஆர்ப்பரிப்போடு


பழசிராஜாவின் வீரமரணமும், ஆங்கிலேய அசிஸ்டெண்ட் கலெக்டர் கொடுக்கும் இராணுவ மரியாதையும்
"He was our enemy, but he was a great man, a great warrior,
we honour him"




Sunday, September 12, 2010

மனதோடு பேசிய "ஸ்வர்ணலதா"

ஒரே வாரத்துக்குள் இன்னொரு துயரப்பகிர்வைப் பதிவாகத் தரும் துரதிஷ்டத்தை நினைத்து மனம் வருந்திக் கொண்டே தொடர்கின்றேன். நம் பால்யகாலத்தின் ஞாபகங்களின் எச்சங்களாக, அந்தக் காலகட்டத்தை மீண்டும் எம் மனத்திரையில் ஓட்டிப்பார்க்கப் பண்ணும் சங்கதிகளில் அந்த நாட்களில் வந்த பாட்டுக்கள் பெரும் ஆக்கிரமிப்பை உண்டு பண்ணி விடும். அந்த வகையில் என் வாழ்க்கையின் பதின்ம வயதுகளின் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் தன் குரலினிமையால் வசீகரித்த ஸ்வர்ணலதா என்ற பாட்டுக் குயில் இன்று ஓய்ந்த செய்தியைக் கேட்டபோது ஒரு எல்.பி ரெக்கோர்ட் ஐ பாளம் பாளமாக உடைத்து நொருக்கும் நிலையில் என் மனம். அந்த இளமை துளிர் காலத்து நினைவுகளை வேரோடு பிடுங்கிச் சாய்த்தது போல.

சில வாரங்களுக்கு முன்னர் சிட்னியில், தமிழகத்துக் கலைஞர்களை வரவழைத்து இசை நிகழ்ச்சிகளை நடத்தும் நண்பர் ஒருவரிடம் பேசும் போது "யார் யாரையெல்லாம் அழைத்து வருகின்றீர்களே, பாடகி ஸ்வர்ணலதாவையும் ஒரு முறை சிட்னிக்கு அழைத்து வரலாமே" என்று கேட்டேன். "அவரை ஏற்கனவே அணுகியிருக்கின்றேன், ஆனால் அவருக்கு விமானத்தில் ஏறிப் பயணிக்க இயலாமையை ஏற்படுத்தும் ஒருவித பயவியாதி இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்" என்றார். "சரி அப்படியென்றால் ஸ்வர்ணலதாவின் தொலைபேசி எண்ணையாவது தாருங்கள், நான் ஒரு வானொலிப் பேட்டி எடுக்கின்றேன்" என்றேன். வானொலிப் பேட்டிக்கான தருணம் பார்த்திருக்கையில் அதை முற்றுப்புள்ளியாக்கியிருக்கின்றது ஸ்வர்ணலதாவின் அத்தியாயம்.

தமிழ்த்திரையிசையின் ஜாம்பவான்களான மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய மூவரின் ஆசியைப் பெற்ற விரல்விட்டு எண்ணக் கூடிய பாடகர்களில் ஸ்வர்ணலதாவும் ஒருவர். "நீதிக்குத் தண்டனை" திரைப்படத்தின் மூலம் மகாகவி பாரதியாரின் "சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா" பாடல் தான் ஸ்வர்ணலதாவின் திரையிசை வாழ்வின் முதற் பாட்டு. பாரதியாரைப் போலவே தன் வாழ்க்கைக் கணக்கை முழுமையாக முடிக்காமல் போய்ச் சேர்ந்து விட்டார்.

இசைஞானி இளையராஜாவுக்கு எண்பதுகளின் முதல் வரிசைப்பாடகிகளான எஸ்.ஜானகி, சித்ராவுக்கு மாற்றீடாக ஒரு பாடகி தேவைப்பட்டபோது கச்சிதமாகப் பொருந்திப் போனவர் சுவர்ணலதா. "குரு சிஷ்யன்" படத்தில் வரும் "உத்தமபுத்திரி நானு" என்ற பாடல் தான் ராஜாவின் பட்டறையில் ஸ்வர்ணலதாவுக்குக் கிடைத்த முதல் வாய்ப்பு. சுனந்தா, மின்மினி ஆகியோர் அளவுக்கு ஒரு தேக்கம் இல்லாது கடகடவென்று உயரே உயரே பறந்து உச்சத்தை தொட்டார் ராஜாவின் மந்திர மெட்டுக்களோடு.
நடிகை குஷ்பு பரபரப்பான ஒரு பிரபலமாக மாறிய போது கச்சிதமாகப் பொருந்திப் போனது சுவர்ணலதாவின் குரல். குறிப்பாக சின்னத்தம்பி, இது நம்ம பூமி, பாண்டித்துரை ஆகியவை சாட்சியம் பறையும். என் ராசாவின் மனசிலே படத்தில் "குயில் பாட்டு ஹோ வந்ததென்ன இளமானே" பாட்டில் தன்னுடைய அத்தனை உணர்ச்சிகளையும் கொட்டிக் குவித்துப் படத்தின் பெருவெற்றியிலும் பங்காளி ஆனார். அந்தக் காலகட்டத்தின் நான் சென்னை வானொலியை நேசித்த போது லல்லு, சத்யா , ரேவதி என்ற முகம் தெரியாத சென்னைவாசிகள் ஞாயிற்றுக்கிழமை நேயர் விருப்பில் தொடர்ந்து கேட்ட அந்தப் பாட்டு என் விருப்பமாகவும் பெயர் சொல்லாது இடம்பிடித்தது. "மாலையில் யாரோ மனதோடு பேச" பாடலில் இவர் கொடுத்த உருக்கத்தை யாரை வைத்துப் பொருத்திப் பார்க்க முடியும்? அந்தக் காதல் அரும்பிய காலகட்டத்தில் நேசித்தவளின் குரலாகப் பிரதியெடுத்தது இந்தச் ஸ்வர்ணலதாவின் ஸ்வரம்.

"மாசிமாசம் ஆளான பொண்ணு" தர்மதுரை படப்பாட்டில் அடக்கி வாசித்த இவர் "ஆட்டமா தேரோட்டமா" என்று கேப்டன் பிரபாகரனில் ஆர்ப்பரித்த போதும் தயங்காமல் ஏற்றுக் கொண்டது மனசு. "என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி" பாட்டின் ஆரம்ப அடிகளில் இவர் செய்யும் ஆலாபனை இருதயத்தை ஊடுருவி காதல் மின்சாரம் பாய்ச்சும்.
"என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்" என்ற அந்த மந்திரப்பாட்டுக் காதுகளை ஊடுருவும் போது மயிர்க்கூச்செறியும் நிகழ்வு ஒவ்வொரு முறையும்.


1990 ஆம் ஆண்டில் இருந்து 1995 வரையான காலகட்டத்தில் இசைஞானி இளையராஜா இவரை மனதில் வைத்தோ என்னவோ அள்ளி அள்ளிக் கொடுத்த அத்தனை மெட்டுக்களும் அந்தந்தப் படங்களின் நாயகிகளுக்குப் பொருந்தியதோடு நம் மனசிலும் அழியாத கோலங்கள் ஆகி இது நாள் வரை தொடர்கின்றன.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்குப் புதுக்குரல் தேடிடும் பயணத்தில் விட்டுவிலக்காத குயில்கள் வரிசையில் ஸ்வர்ணலதாவுக்கு மிகச்சிறந்த பாடல்களைக் கொடுத்ததோடு தேசிய விரு(ந்)தாக "கருத்தம்மா" படப்பாடலான "போறாளே பொன்னுத்தாயி" பாடலைக் கொடுத்த பெருமை இவருக்குக் கிடைத்த அங்கீகாரங்களில் மகுடம். அந்தப் பாடலில் ஆர்ப்பரிப்பில்லாத மெலிதான இசையைக் கடந்து ஆக்கிரமிப்புச் செய்வது ஸ்வர்ணலதாவின் அந்த சோக நாதம். "அலைபாயுதே" படத்து "எவனோ ஒருவன் யாசிக்கிறான்" பாட்டு அதே அலைவரிசையில் பொருத்திப் பார்க்க வேண்டிய இன்னொரு வைரம். "காதல் எனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்" பாட்டில் ஸ்வர்ணலதாவுக்கு ஜோடி கட்டி அவரை இன்னொரு வடிவிலும் தன் இசையால் நிரப்பியவர் ரஹ்மான்.


ஸ்வர்ணலதாவின் முதற்பாட்டு "சின்னஞ்சிறுகிளியே கண்ணம்மா" - நீதிக்குத் தண்டனை



"மாலையில் யாரோ" - சத்ரியன்



"குயில் பாட்டு ஹோ வந்ததென்ன இளமானே" - என் ராசாவின் மனசிலே



"என்னுள்ளே என்னுள்ளே பலமின்னல் எழும் நேரம்" - வள்ளி




"என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட மன்னன் பேரும் என்னடி" - உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன்"



"போவோமா ஊர்கோலம்" - சின்ன தம்பி




"காதலெனும் தேர்வெழுதி" - காதலர் தினம்



"எவனோ ஒருவன் வாசிக்கிறான்" - அலைபாயுதே




"போறாளே பொன்னுத்தாயி" - கருத்தம்மா




சமீபகாலமாக நான் அடிக்கடி ஐபொட் இல் கேட்டுக் கிறங்கும் பாடல் "நன்றி சொல்லவே உனக்கு என் மனவா வார்த்தையில்லையே" பாடல். சொந்தம் எதுவும் இல்லாத தனியன் ஒருவன், சமுதாயத்தில் ராசியில்லாது கல்யாணச் சந்தையில் விலைபோகாதவளைக் கரம்பிடிக்கின்றான். இந்த இரு உள்ளங்களும் இது நாள் வரை தம் வாழ்வின் சோகப் பக்கங்களைப் பகிர்ந்து மாறி மாறித் தம்மிடையே இருவரும் நன்றி பகிர்கின்றார்கள் இந்த புது வசந்தத்திற்காக. பாடலின் அடி நாதத்தை எஸ்.பி.பாலசுப்ரமணியமும் , ஸ்வர்ணலதாவும் அள்ளிக் கொட்டிய அந்தப் பாடல் மீண்டும் நினைவில் எட்டிப் பார்த்துச் சோக ராகம் பிரிக்கின்து.

"திசையறியாது நானே இங்கு தினசரி வாடினேனே
இந்த பறவையின் வேடந்தாங்கல்
உந்தன் மனமென்னும் வீதி தானே"

Wednesday, September 8, 2010

"இதயம்" நிறைந்த முரளி


செக்கச்செவேல் என்று அரிதாரம் பூசிக் கொண்டு நாயக வேஷம் கட்டிய காலம் போய் தமிழ் மண்ணின் அடையாளமாகக் கறுப்புத் தோல் நாயகர்கள் ஜெயிச்சுக் காட்டிய வேளை தான் முரளி என்ற இளைஞனும் "பூவிலங்கு" மூலம் திரைக்கு வந்தார். நடிக்க வந்து 26 வருஷங்கள் கடந்தாலும் தமிழ் சினிமாவின் முக்கியமான நாயகர்கள் பட்டியலில் இல்லாவிட்டாலும் இத்தனை ஆண்டுகள் ரசிகர்கள் இதயத்தில் முரளியை இருத்தியிருந்தார்கள். அதற்குக் காரணம் இவர் பெரும்பாலும் ஏற்றிருந்த பாத்திரங்கள் தமிழ்ச்சூழலுக்கு அந்நியப்படாதவை.


மிக அதிகமான இயக்குனர்கள் தமது முதற்படத்திற்குக் கற்பனை செய்து வைத்திருந்த பாத்திரமாக மாறியதோடு அந்தப் பாத்திரங்களைத் திரையில் வெற்றிகரமானவையாகக் காட்டியதிலும் முரளியின் பங்கு இருக்கின்றது. அதாவது இயக்குனர்களின் நாயகன் என்று சொல்லக் கூடியவர்களில் இவரும் ஒருவர். பாலசந்தர் தன் சிஷ்யர் அமீர்ஜானை வைத்து பூவிலங்கு தயாரித்த போது தமிழுக்கு அறிமுகமானவர் முரளி. ஏற்கனவே அலைகள் ஓய்வதில்லை படத்திற்காக பாரதிராஜா இவரை ஒப்பந்தம் செய்து அது கைகூடாமல் போனது வேறு கதை. மணிரத்னம் தமிழுக்கு அறிமுகமான போது தன் "பகல் நிலவு"திரைப்படத்திற்குத் தேர்ந்தெடுத்த பாத்திரத்துக்குக் கச்சிதமாகப் பொருந்திச் சிறப்பித்தார்.


இடையில் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் படங்கள் பண்ணிச் சறுக்கினாலும் பல புது இயக்குனர்களை அறிமுகப்படுத்துவதில் முரளியின் பங்கு தொடர்ந்தது. அவரின் வெற்றிப் பயணத்தில் ஒரு சிறு தடங்கலை புது இயக்குனர் விக்ரமனின் "புது வசந்தம்" வெற்றிகரமாகச் சீர் செய்தது. மீண்டும் அடுத்த சுற்று ஓட்டம். கார்வண்ணனின் "பாலம்", ரமேஷ் கிருஷ்ணாவின் "அதர்மம்" என்று பல முத்திரைப் படங்களின் வெற்றிக் கூட்டணியில் முரளி தான் நாயகன். வெற்றி பெற வேண்டிய ஆனால் தோல்வி கண்ட பாக்யநாதனின் "என்றும் அன்புடன்" முரளிக்கு இன்னொரு பரிமாணம்.

இவையெல்லாம் தாண்டி "இதயம்" படம் முரளியின் திரை வாழ்வில் ஒரு மகுடமாக அமைந்ததோடு கதிர் என்ற புதுமுக இயக்குனரை அறிமுகப்படுத்திச் சிறப்பித்து. தமிழ்த் திரையுலகில் முரளி ஒரு பெருங் கலைஞனாக அமையாவிட்டாலும் அவரை அடுத்த ஆட்டத்தில் ஒரு நல்ல குணச்சித்திரமாகக் கண்டு களிக்க முடியாமற் போனது தமிழ்த் திரையுலக ரசிகனுக்கு ஒரு இழப்பு.

முரளி அறிமுகப்படுத்திய முக்கிய இயக்குனர்களின் முதற்படங்க்களில் இருந்து சில பாடல்களைப் பகிர்கின்றேன்

அமீர்ஜான் - பூவிலங்கு "ஆத்தாடி பாவாட காத்தாட"



மணிரத்னம் - பகல் நிலவு "பூவிலே மேடை நான் போடவா"



கதிர் - இதயம் "இதயமே இதயமே"



விக்ரமன் - புதுவசந்தம் "பாட்டு ஒண்ணு நான் பாடட்டுமா"




பாக்யநாதன் - என்றும் அன்புடன் "துள்ளித் திரிந்ததொரு காலம்"



ரமேஷ்-கிருஷ்ணா - அதர்மம் "தென்றல் காற்றே"




Thursday, September 2, 2010

பொப்பிசைச் சக்கரவர்த்தி A.E.மனோகரனுடன் ஒரு கல(கல)க்கல் மாலைப்பொழுதில்


""சுராங்கனி" என்ற பைலாப்பாடலுக்கு நாற்பது வயசுக்கு மேலிருக்கும் ஆனால் அந்தப் பாடலை எங்கே கேட்டாலும் நான்கு நாட்களுக்கு முன் பிறந்த குழந்தை கூடத் தொட்டிலில் இருந்து பைலா ஆட்டம் ஆடும். அந்த அளவுக்குப் பெரும் புகழ்பெற்ற இந்தப் பாட்டுக்குச் சொந்தக்காரர் பொப்பிசைச் சக்கரவர்த்தி A.E.மனோகரன் அவர்கள்.

பாடகராக, நடிகராக இன்றும் இளமைத் துடிப்போடு உலகெங்கும் ஓடியோடி ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் மிதக்கவைக்கும் தன் இசைப்பயணத்தைத் தொடர்ந்து வரும் மனோகரன் அவர்கள் அவுஸ்திரேலியாவுக்குப் பல தடவைகள் வந்திருந்தாலும் எட்ட இருந்து அவரை ரசித்துப் பார்க்கும் கடைக்கோடி ரசிகர்களில் நானும் ஒருவன். இம்முறை அவுஸ்திரேலியாவின் பேர்த், மெல்பன் நகரங்களோடு சிட்னிக்கும் வந்து தன் பைலாப்பாடல்களால் கலக்க வந்திருக்கும் இவரை நேற்று வானொலிக் கலையகத்தில் நேரே சந்தித்துப் பேசி மகிழ ஒரு வாய்ப்புக் கிட்டியது.
ஆண்டாண்டுகாலமாகப் பழகியவர் போன்று இயல்பாகப் பேசி , நகைச்சுவைத்துக் கலகலப்பான ஒரு மாலை நேரத்தை வானொலி ரசிகர்களுக்கும் எங்களுக்கும் அவர் ஏற்படுத்தி விட்டார். நெடு நாள் ஆசையாக அவரை வானொலிப் பேட்டி காணும் ஆசையில் ஒரு பாதியாக இந்தப் பேட்டி அமைந்து விட்டது. இன்னொரு பேட்டியில் இவரது வாழ்க்கைப் பயணத்தைப் பெட்டக நிகழ்ச்சியாக உருவாக்க ஆவல் கொண்டிருக்கின்றேன்.

நேற்று அவர் தந்த இந்த கலகல பேட்டியைக் கேட்டுப்பாருங்கள், பேச்சோடு பாடியும் ஆடியும், தன் ரசிகர்களோடு பழைய நினைவுகளை இரைமீட்டும் ஒரு பைலாப் பேட்டியாக அமைந்து விட்டது இது ;)



நாளை மறுதினம் செப்டெம்பர் 4 ஆம் திகதி A.E.மனோகரன் அவர்களுடன் தென்னிந்தியத் திரைப்படப்பாடகி T.K.கலா, மலேசியப் பாடகர் ராஜராஜசோழன் ஆகியோரின் கலக்கல் இசை நிகழ்ச்சியை சிட்னி ரசிகர்கள் தவற விடாதீர்கள்.



















பேட்டியின் நடுவே பாடிக் குஷிப்படுத்தும் A.E.மனோகரன் அவர் அருகே தீவிர ரசிகர் கலைச்செல்வன்

A.E.மனோகரன் அவர்களது பிரபலமான பாடல்களில் சில

சுராங்கனி சுராங்கனி



அன்பு மச்சாளே எந்தன் ஆசை மச்சாளே



சில சில பாவையர்



மால்மருகா எழில் வேல்முருகா நீயே



பிரண்டி, பியர், விஸ்கி போடாதே



பறந்து வந்து பாடுகின்றேன்



சிறு சின்னஞ்சிறிய என் வயதினிலே