Pages

Thursday, March 14, 2019

பாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ சங்கீதமே….என் தெய்வீகமே நான் தேடும் என் காதல் ராஜாங்கமே 💕

“சுசீலாம்மாவுடன் பாடும் போது கூடப் பாடுபவரின் குரல் மங்கிப் போய் விடும். நாங்க கஷ்டப்பட்டு ஒரு பாடலின் expression ஐக் கொடுக்கும் போது அவர் அதை இரு மடங்காகக் கொடுத்து விடுவார். நமக்கு வாய் வலிக்கும்.
இசையமைப்பாளர் சரத் சொல்லுவார் ‘ஜெயேட்டா! சுசீலாம்மா சங்கதிகளை அவர் பாடுவதில்லை
அது அவருக்குள் இருக்கிறது”
இவ்வாறு இசையரசி P.சுசீலா அவர்களது சாகித்தியத்தைப் பய பக்தியோடு மெச்சுவார் பாடகர் ஜெயச்சந்திரன். ஜெயச்சந்திரன் 75 தொடரில் P.சுசீலா அம்மாவும் ஜெயச்சந்திரன் அவர்களும் இணைந்து பாடிய பல பாடல்கள் வரவிருக்கின்றன என்றாலும் இன்றைய பதிவுக்காக நான் தேர்ந்தெடுதது ஜி.கே.வெங்கடேஷ் இசையில் “காஷ்மீர் காதலி” திரைப்படப் பாடலான “சங்கீதமே என் தெய்வீகமே”
“தேன் சிந்துதே வானம்…
எனை உனைத் தாலாட்டுதே”
என்றொரு இளையராஜாத் தனமான பாட்டினால் தமிழ் இசை ரசிகர்கள் மனதில் இன்று வரை “யார் இந்த இசையமைப்பாளர்?” என்று தேடி நிலைத்தவர் ஜி.கே.வெங்கடேஷ். ஆனால் பல்லாண்டுகளுக்கு முன்பே மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் நட்பால் ஆதி தொட்டு இசையமைத்து வந்தவர் கன்னடப் பட உலகில் தனிக் காட்டு ராஜாவாகத் திகழ்ந்தார். அந்தக் காலத்தில் தமிழில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், தெலுங்கு கே.வி.மகாதேவன், கன்னடத்துக்கு ஜி.கே.வெங்கடேஷ் என்று எழுதப்படாத எல்லைகள் போட்டு இசை ராஜாங்கம் நடத்தினர். கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் மட்டும் மொத்தம் 51 பாடல்களை ஜி.கே வெங்கடேஷ் இசையில் பாடிச் சாதனை படைத்தார் என்று விக்கிப்பீடியா புகழாரம் சூட்டுகிறது.
இசைஞானி இளையராஜாவின் இன்னொரு குரு, நீண்ட காலம் அவருடைய உதவியாளர். அதற்கும் மேலாக “பொண்ணுக்குத் தங்க மனசு” படத்தில் வரும் “தஞ்சாவூரு சீமையிலே” பாட்டுதான் என்னுடைய வரிகளில் ராஜா இசையமைத்த முதல் பாட்டு என்று கவிஞர் முத்துலிங்கம் வேறு பெருமையடித்துக் கொள்கிறார். இது இவ்வாறிருக்க
“காஷ்மீர் காதலி” படம் வெளியாகிறது. பாடல்களைக் கேட்டால் அதியற்புதமான இசைக் கோவை, இளையராஜாவின் வித்து எங்கிருந்து வளர்க்கப்பட்டது என்று நிரூபிக்க ஒரு படமாக அந்தப் படப் பாடல்கள் வந்தன. எல்லாப் பாடல்களுமே அப்போது சூப்பர் ஹிட். (அதில் ஏ.ஈ.மனோகரின் ஹிக்கிரி பலன பாடல் கூட உண்டு).
“காஷ்மீர் காதலி” படத்தைக் கதை, வசனம் எழுதி இயக்கிய மதி ஒளி சண்முகம் தன்னுடைய “நெஞ்சில் ஒரு முள்” படத்திற்கும் ஜி.கே.வெங்கடேஷ் ஐத் தான் இசையமைப்பாளராக்கியவர்.
நடிகை லதாவின் தம்பி, ஶ்ரீப்ரியாவின் கணவர் ராஜ்குமார் தான் காஷ்மீர் காதலி பட நாயகன்.
“அழகிய செந்நிற வானம் அதிலே உன் முகம் கண்டேன்” என்று எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகிக்கு ஒரு இசைப் பரிசென்றால் இன்னொரு பக்கம் P.சுசீலா & ஜெயச்சந்திரபை வைத்து “சங்கீதமே என் தெய்வீகமே” பாடல்.
இத்தனைக்கும் முன்பே ஜெயசச்சந்திரன் அவர்கள் ஜி.கே.வெங்கடேஷ் இசையில் “அழகு” படத்துக்காக (எஸ்.ஜானகியுடன்) “மெளனமல்ல மயக்கம்”
“பெண்ணின் வாழ்க்கை” படத்தில்
“மாசி மாதம்” ( P.சுசீலாவோடு)
பாடியதை றேடியோ சிலோன் ரசிகர்கள் மறக்க மாட்டார்கள். ஆனால் காஷ்மீர் காதலி படத்தில் இடம்பெற்ற “சங்கீதமே என் தெய்வீகமே” பாடல் முன்னைய பாடல்களில் இருந்து முற்றிலும் விலகிய ஒரு நவீனத்துவம் கொண்டது. ஜெயச்சந்திரனும் சரி சுசீலாவும் சரி அதிக நெகிழ்வுத் தன்மையோடு சாஸ்திரிய சங்கீதம் இல்லாது ஒரு இறுகிய குரலோடு
பாடலைக் கையாண்டிருப்பார்கள். உதாரணத்துக்கு பாடலின் ஆரம்ப வரிகளான “சங்கீதமே என் தெய்வீகமே” ஐ ஒருமுறை இரை மீட்டிப் பாருங்கள். இதை இன்னும் நெகிழ்வுத் தன்மையோடும் பாடிக் காட்ட முடியும். ஆனால் முழுப் பாடலிலும் இசை ஆவர்த்தனங்களின் கோட்பாட்டோடு பயணிக்கும் பாங்கில் இந்தக் குரல்களும் இருக்கும். பாடலில் கோவையாக்கிய இசையில் நவ நாலரிகம் நேர்த்தியோடு மிளிரும். இந்தப் பாடலையெல்லாம் இசை மேடைகளில் பாடினால் எவ்வளவு அற்புதமாக இருக்கும்?
“காஷ்மீர் காதலி” பாடல்கள் ஜி.கே.வெங்கடேஷ் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துக் காட்டியது. அதில் இந்த “சங்கீதமே என் தெய்வீகமே” பாடல் ஜெயச்சந்திரனின் இசை வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு மைல்கல்.
சங்கீதமே….என் தெய்வீகமே
நான் தேடும் என் காதல் ராஜாங்கமே
என் ராஜாங்கமே…..
வானோரும் காணாத பேரின்பமே….
பேரின்பமே…..
பாடலை நல்ல ஒலித்தரத்தில் கேட்க
கானா பிரபா
ஜெயச்சந்திரன் இன்னும் வருவார்

பாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ ஒரு காதல் சாம்ராஜ்யம் கண்ணில் வரைந்தாள் கனவென்னும் முடி சூடிக் கன்னம் சிவந்தாள் 💕

இப்போதெல்லாம் சூப்பர் சிங்கர் மேடைக்கென்றே எழுதி வைத்த பாடல்கள் என்ற பட்டியலில் தவிர்க்க முடியாதது “நந்தா என் நிலா நிலா நிலா” என்ற பாடல். அதுவும் எஸ்.பி.பிக்கு முன்னால் பாட வேண்டிய சூழல் வரும் போது போட்டியாளர் தன்னிடமிருந்து அத்தனை திறமைகளையும் கொட்டித் தீர்க்க முற்படுவார். ஆனால் இந்தப் பாடல் இடம் பெற்ற “நந்தா என் நிலா” திரைப்படத்தில் இன்னொரு அரிய முத்து “ஒரு காதல் சாம்ராஜ்ஜியம் கண்ணில் வரைந்தாள்” பாடல் இருப்பதை ஏனோ இசை மேடைகள் மறந்து விட்டன.
“நந்தா என் நிலா” படத்தின் மூலக்கதை புஷ்பா தங்கதுரை, தினமணி கதிரில் தொடராக வெளிவந்து பின் ஏ.ஜெகன்னாதன் இயக்கத்தின் படமான போதும் புஷ்பா தங்கதுரையே கதை, வசனத்தைக் கையாண்டிருக்கிறார். விஜயகுமார், படாபட் ஜெயலட்சுமி, சுமித்ரா நடித்தது.
தொண்ணூறுகளின் இறுதியில் பிரபலமாக இருந்த சன் டிவி “சப்தஸ்வரங்கள்” பாடற் போட்டி நிகழ்ச்சியின் வழியாகத் தான் V.தட்சணாமூர்த்தி என்ற இசையமைப்பாளரை அறிந்து கொண்டேன். அதற்கு முன்னர் அவரின் இசையில் வெளிவந்த ஓரிரு தமிழ்ப்படங்களில் குறிப்பாக “நந்தா என் நிலா” என்ற பாடலை இலங்கை வானொலி மூச்சு விடாமல் முன்னூறு தடவைக்கு மேல் அலுக்க அலுக்கப் போட்ட போதெல்லாம் கூட இந்த இசையமைப்பாளர் குறித்த தேடல் இருந்திருக்கவில்லை. எழுபதுகளின் இறுதியிலே வி.குமார், விஜயபாஸ்கர், ஷியாம் போன்ற இசையமைப்பாளர்களின் இசையில் வந்த பல நல்ல பாடல்களை சங்கர் கணேஷ், எம்.எஸ்.விஸ்வநாதன் கொடுத்தவையாக இருக்கும் என்று அதிகம் மெனக்கடவில்லை. அந்த வகையில் வி.தட்சணாமூர்த்தி அவர்களை சுவாமிகள் என்று விளித்து அவரின் பெருமைகளை சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ரமணன் சிலாகித்தபோதுதான் அவர் மேல் வெளிச்சம் பட்டது எனக்கு. தமிழ்த்திரையுலகில் இரண்டு தட்சணாமூர்த்திகள் இருந்திருக்கிறார்கள், ஒருவர் எஸ்.தட்சணாமூர்த்தி இவர் அலிபாபாவும் 40 திருடர்களும்” போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்தவர், பின்னவர் தான் வி.தட்சணாமூர்த்தி சுவாமிகள். கொஞ்சக்காலம் எல்லாவற்றையும் உதறவிட்டு காசிக்குப் போய் சாமியாராக இருந்ததாக செய்திகளின் வாயிலாக அறிந்தேன்.
“நந்தா என் நிலா” படத்தில் வந்த பாடலான எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் பாடிய “நந்தா என் நிலா பாடலை விடவும் என்னை அதிகம் கவர்ந்ததென்னவோ ஜெயச்சந்திரன், டி.கே. கலா பாடியிருந்த “ஒரு காதல் சாம்ராஜ்யம் கண்ணில் வரைந்தேன்” என்ற பாடல் தான். அன்றைய சனிக்கிழமை இரவுப்பொழுதில் அதிகாலை ஒரு மணியைத் தொடும் போது வானொலி நிகழ்ச்சி செய்து கொண்டிருக்கும் என் தனிமையை விரட்டிப் பல தடவை சொந்தம் கொண்டாடிய பாடல் அது.
வானொலியின் பிறந்த நாள் வாழ்த்துப்பாடல்களில் எழுதப்படாத ஒப்பந்தமாக அமைந்து போன பாடல்களில் ஒன்று “நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க”, ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது திரைப்படத்துக்காக வி.தட்சணாமூர்த்தி இசையில் வந்த அந்தப் பாடலோடு அதே படத்தில் வந்த “ஆண்டவன் இல்லா உலகமிது” பாடலும் அப்போதைய இலங்கை வானொலி ஒலிபரப்பால் பிரபலமான பாடல்களில் ஒன்று.
மீண்டும் தொலைக்காட்சி வாயிலாகவே இன்னொரு நல்ல அறிமுகத்தைக் கொடுத்திருந்தது V.தட்சணாமூர்த்தி அவர்களின் கேரள சினிமாவுக்கான பணி. கே.ஜே.ஜேசுதாஸ் அவர்கள் ஐம்பது ஆண்டுகள் திரையுலகில் நிறைவாக்கியதை ஏஷியா நெட் தொலைக்காட்சி கொண்டாடியபோது, வி.தட்சணாமூர்த்திக்கான சிறப்பு கெளரவத்தையும் அவர் முன்னிலையிலேயே வழங்கியிருந்தார்கள். அப்போது கேட்ட “சந்த்ரிகையில் அலியுன்னு சந்த்ரகாந்தம்” என்ற பாடலை யூடியூபின் வழியாகக் கேட்டுப் பரவசம் கொண்டேன்.
இசைஞானி இளையராஜாவின் குருநாதர்களில் ஒருவர் இந்த தட்சணாமூர்த்தி. எம்.எஸ்.வியோடு இணைந்தது போலவே V.தட்சணாமூர்த்தியோடு இணைந்து இளையராஜா மலையாளத்தில் இசையமைத்த படம் “காவேரி”
இப்பேர்ப்பட்ட இசையமைப்பாளர் V.தட்சணாமூர்த்தி இசையில் நந்தா என் நிலா திரைப்படம் உருவான போது “ஒரு காதல் சாம்ராஜ்ஜியம் கண்ணில் வரைந்தாள்” என்ற ஜோடிப் பாடலை ஜெயச்சந்திரனும், T.K.கலாவும் பாடியிருக்கிறார்கள்.
“போய் வா நதியலையே”, “தாயிற் சிறந்த கோயிலுமில்லை” ஆகிய புகழ் பூத்த பாடல்களோடு “குளிச்சா குத்தாலம்”, “செங்காத்தே” ஆகியவற்றை ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடியவர் T.K.கலா. அவர் இசை நிகழ்ச்சி படைக்க சிட்னி வந்திருந்த போது பேட்டி ஒன்றும் கண்டிருந்தேன்.
ஜெயச்சந்திரனைப் பொறுத்தவரை அவரின் ஆரம்ப காலத்தில் அரவணைத்து வளர்த்த மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் போன்றே அப்போது மலையாளத்தின் உச்ச இசையமைப்பாளராக விளங்கிய V.தட்சணாமூர்த்தி அவர்களின் பார்வை பட்டு மலையாளத்தில் மட்டுமன்றித் தமிழிலும் “நந்தா என் நிலா” வழியாகப் பாடும் பேறு கிட்டியிருக்கிறது.
“ஒரு காதல் சாம்ராஜ்ஜியம் கண்ணில் வரைந்தாள்” பாடலின் வரிகளை விடுத்து அந்தப் பாடல் கொண்டிருக்கும் சந்தத்தை மட்டும் ஒரு முறை மனதில் மீட்டில் பாருங்கள். ஒரு வீச்சுக்குள் (range) நின்று மேலும் கீழுமாக ஜாலம் புரியும் அற்புதமான சாகித்தியம் அது. ஆண், பெண் பாடகருக்கான சங்கதியும் ஒரே மாதிரி இருக்கும். அது போலவே தேர்ந்தெடுத்த இந்தப் பாடகர்களும் கொஞ்சமும் தடம் மாறாமல் அதே போலக் கொடுத்திருப்பார்கள். ஆனால் T.K.கலா தன் முத்திரை உச்ச ஸ்தாயி வரை போய் வர, ஜெயச்சந்திரனோ அதிக கஷ்டப்படாமல் தன் எல்லையில் நின்று அடித்து ஆடுவார்.
பகலான இரவோடு
அழகான மலரோடு
மனதோடு இசை பாடி
விதியோடு ஆடு……
ஒரு காதல் சாம்ராஜ்யம்
கண்ணில் வரைந்தாள்
கனவென்னும் முடி சூடி
கன்னம் சிவந்தாள்
உறங்காத உள்ளம்
நான் அறியாத பருவம்
நிலவின் மயக்கத்தில்
நீந்தும் முகம் – நீ
அருகிலிருந்தாலே தெய்வ சுகம்
பாடலைக் கேட்க
#Jeyachandran_songs

பாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ பொன்னென்ன பூவென்ன கண்ணே உன் கண்ணாடி நெஞ்சத்தின் முன்னே 💕

“The natural flow of the Tamil language gives a musical touch to Tamil which makes its songs much more musical”
இது பாடகர் ஜெயச்சந்திரனின் கூற்று. தமிழ்த் திரையுலக வாய்ப்புக்காக தமிழை இன்னோரன்ன வார்த்தை ஜாலமிட்டுப் புகழ்ந்து பேசும் பலரை நாம் கண்டிருப்போம். ஆனால் உள்ளார்ந்த நேசத்தோடு தமிழ் மொழியின் சிறப்பைத் தன் மேடைகளில் சொல்லி வரும் பாட்டுக்காரர் தான் இந்த ஜெயசந்திரன்.
இசைஞானி இளையராஜாவின் முதல் ஆஸி வருகைக்கு நண்பர் கதிர் ஏற்பாடு செய்த போது “யார் யாரை எல்லாம் சேர்க்கலாம் ஐயா?” என்று அவர் கேட்ட போது ஜெயச்சந்திரனும், ஜென்ஸியும் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்றேன். ஜென்ஸி இல்லாவிட்டாலும் ஜெயச்சந்திரன் இருந்தார். தமிழகத்துக்கு வெளியே இளையராஜா இசை மேடைக்காக ஜெயச்சந்திரன் நமக்காக ஒப்பந்தமான பெருமை கிட்டியது. கால தாமதம் வந்து ஆண்டுகள் கடந்து அந்த நிகழ்வு அரங்கேறிய போதும் நண்பர் கதிர் ஜெயச்சந்திரனைப் பேட்டி எடுக்க வைத்து அழகு பார்த்தார் என்னை.
மலையாள உலகத்தில் இருந்து பெருவாரியான பாடகர்கள் தமிழுக்கு வந்து ஆட்சி புரிந்திருக்கிறார்கள். அவர்களில் ஆனானப்பட்ட ஜேசுதாஸுக்கே ஆரம்பத்தில் தமிழ் உச்சரிப்பு பேதம் நிகழ்ந்திருக்கிறது. ஆனால் ஜெயச்சந்திரனைப் பொறுத்தவரை அவ்வாறானதொரு நிலை இருந்ததாக எனக்குப் படவில்லை. ஜெயச்சந்திரனின் 75 வது பிறந்த நாளாக கடந்த மார்ச் 3 ஆம் திகதி வந்த போது ஒரு சிறப்புப் பதிவு கொடுக்க வேண்டும் என்று மனம் பரபரத்தது. ஆனால் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட பாடல்களை மலையாளம் தொடங்கி தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று பரந்து விரிந்து சிறகடித்துப் பாடியவருக்கு ஒரு பதிவு ஓரவஞ்சனை அல்லவோ ஆகவே 75 பதிவுகள் அவரின் பாடல்களை வைத்து எழுதி விட வேண்டுமென்ற முனைப்பு இருக்கிறது. ஆனாலும் அந்த இலக்கில் தமிழ், மலையாளம் என்று வரையறுக்க வேண்டுமென்று முடிவு செய்திருக்கிறேன்.
“உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை” பாடலைக் கேட்கும் ஆனானப்பட்ட இளையராஜா பாடல்களைத் தின்று கொட்டை போட்டவர்களே
இன்னும் அதைப் பாடியது ஜெயச்சந்திரன் என்றே நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே இந்தத் தேடலில் ஜெயச்சந்திரனின் பிரபலங்களைத் தேடி மட்டுமல்ல அவரின் அரிய பல எழுபதுகள், எண்பதுகளையும் முக்குளித்துப் பகிர ஆசை.
ஜெயச்சந்திரன் பிறந்த நாள் அறிந்த போது “ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு” பாடலைத் தான் மனசு முணுமுணுத்துப் பாடி வாழ்த்தியது. நேற்று இந்தப் பதிவை எழுதலாம் என்று நினைத்த போது “பூந்தென்றல் காற்றே வா” என்று சொல்லிப் பார்த்தது. ஆனாலும் இன்று தொடங்கலாம் என்று Notes இல் இறங்கிய போது என்னை எப்படி மறந்தாய் என்று வந்து குந்திக் கொண்டது “பொன்னென்ன பூவென்ன கண்ணே”.
றேடியோ சிலோன் காலத்து நினைவுகளில் மட்டுமல்ல, பலரின் கிடுகுவேலிக் காதல் கதைகளுக்கும் பாலமாக அமைந்தது இந்த “பொன்னென்ன பூவென்ன கண்ணே”
இயக்குநர் ஶ்ரீதர் “அலைகள்” படத்தை இயக்கிய போது அப்போது தான் கன்னடத்தில் ஒரு தேசிய விருதுப் படத்தில் அறிமுகமான விஷ்ணுவர்த்தனை நாயகனாக்கிக் கொண்டார். “சாகச சிம்ஹா” என்று சந்தன சினிமா உலகம், அதாங்க கன்னடத் திரையுலகில் மறைந்தும் மறையாப் புகழ் கொண்டவர் ஒரு அழுத்தமான கதையம்சம் கொண்ட தமிழ்ப்பட வாய்ப்பைத் தன் ஆரம்ப காலத்தில் பெற்றது தமிழ்த் திரையுலகுக்கும் பெருமை. பின்னாளில் ஈட்டி, விடுதலை என்று நடித்த போதும் அலைகள் தான் அவருக்கு அடையாளம்.
அலைகள் படத்தைப் பலர் மறந்தாலும் அதை நினைப்பூட்டுவது இந்த “பொன்னென்ன பூவென்ன கண்ணே”. மெல்லிசை மன்னரின் கை வண்ணத்தில் அமைந்த பாட்டு தமிழுக்கு ஜெயச்சந்திரனைச் சிவப்புக் கம்பளம் போட்டு வரவேற்றது. இதற்கு முன்பே “மணிப்பயல்” படத்தில் “தங்கச் சிமிழ் போல்” என்ற பாடல் வழியாக இதே ஆண்டு மெல்லிசை மன்னரால் அழைத்து வரப்பட்டவர் ஜெயச்சந்திரன் (மணிப்பயல் தகவல் நன்றி ஜி.ராகவன்)
ஆனால் “பொன்னென்ன பூவென்ன கண்ணே” அவருக்குப் பரவலான அறிமுகத்தைக் கொடுத்தது.
“களித் தோழன்” என்ற மலையாளப்படத்தில் அறிமுகமானவர் (பாருங்கள் முதல் படத் தலைப்பே எவ்வளவு பொருத்தம் ஜெயச்சந்திரன் எங்கள் களிப்பில் பங்கெடுக்கும் தோழன் தானே?)
தமிழுக்கு வருவதற்கு முன்பே மெல்லிசை மன்னரின் “பனிதீராத வீடு” படத்தில் “நீலகிரியுடே” சுப்ரபாதம் பாடி கேரளத்தின் சிறந்த பாடகர் விருதைப் பெற்றவர் அதே மெல்லிசை மன்னர் வழியாகத் தமிழுக்கும் விருந்து வைத்தார்.
கன்னடத்தின் மிகப்பெரிய நட்சத்திரம் விஷ்ணுவர்த்தன், மலையாளத்தின் வழி உயர் பாடகர் ஜெயச்சந்திரன் இருவரையும் “அலைகள்” இணைத்தது பொன்னென்ன பூவென்ன கண்ணே” வழியாக.
“பொன்னென்ன பூவென்ன கண்ணே” பாடலைக் கேட்கும் தினமெல்லாம் அசரீரியாக ஒரு காதல் ஜோடிப் பாடல் போல உணர்வெழும். ஆனால் தனித்து நின்று ஜாலம் புரிவார் ஜெயச்சந்திரன். அடிப்படையில் மலையாளியாக இருந்தாலும் தமிழென்று வந்து விட்டால் கண்டிப்பான வாத்தியாராக ஆகி விடும் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுடன், தமிழ் மேல் காதல் கொண்ட இளைஞன் ஜெயச்சந்திரன் தனது 29 வது வயதில் பாடிய பாடலைக் கேட்டுப் பாருங்கள். ஒரு பிசிறு இருக்காது மொழி உச்சரிப்பில். பாடலைக் கேட்கும் போது ஊஞ்சலில் அமர்த்தித் தள்ளி விடும் உணர்வெழும். பாட்டின் சந்தத்தோடு மிக நெருக்கமாகத் தனக்கே உரித்தான தணிந்த குரலில் உருக்கம் காட்டுவார் நம் ஜெயச்சந்திரன்.
செவ்வான மேகங்கள் குழலாகுமா
செந்தூரம் விளையாடும் முகமாகுமா
நடை போடுமா இசை பாடுமா
நடந்தாலும் அவை யாவும் நீயாகுமா
பொன்னென்ன பூவென்ன கண்ணே – உன்
கண்ணாடி உள்ளத்தின் முன்னே
ஒரு கல்யாணப் பெண்ணாக உன்னைப்
புவி காணாமல் போகாது பெண்ணே
ஜெயச்சந்திரன் இன்னும் ஒளிருவார்….