Pages

Thursday, March 14, 2019

பாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ பொன்னென்ன பூவென்ன கண்ணே உன் கண்ணாடி நெஞ்சத்தின் முன்னே 💕

“The natural flow of the Tamil language gives a musical touch to Tamil which makes its songs much more musical”
இது பாடகர் ஜெயச்சந்திரனின் கூற்று. தமிழ்த் திரையுலக வாய்ப்புக்காக தமிழை இன்னோரன்ன வார்த்தை ஜாலமிட்டுப் புகழ்ந்து பேசும் பலரை நாம் கண்டிருப்போம். ஆனால் உள்ளார்ந்த நேசத்தோடு தமிழ் மொழியின் சிறப்பைத் தன் மேடைகளில் சொல்லி வரும் பாட்டுக்காரர் தான் இந்த ஜெயசந்திரன்.
இசைஞானி இளையராஜாவின் முதல் ஆஸி வருகைக்கு நண்பர் கதிர் ஏற்பாடு செய்த போது “யார் யாரை எல்லாம் சேர்க்கலாம் ஐயா?” என்று அவர் கேட்ட போது ஜெயச்சந்திரனும், ஜென்ஸியும் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்றேன். ஜென்ஸி இல்லாவிட்டாலும் ஜெயச்சந்திரன் இருந்தார். தமிழகத்துக்கு வெளியே இளையராஜா இசை மேடைக்காக ஜெயச்சந்திரன் நமக்காக ஒப்பந்தமான பெருமை கிட்டியது. கால தாமதம் வந்து ஆண்டுகள் கடந்து அந்த நிகழ்வு அரங்கேறிய போதும் நண்பர் கதிர் ஜெயச்சந்திரனைப் பேட்டி எடுக்க வைத்து அழகு பார்த்தார் என்னை.
மலையாள உலகத்தில் இருந்து பெருவாரியான பாடகர்கள் தமிழுக்கு வந்து ஆட்சி புரிந்திருக்கிறார்கள். அவர்களில் ஆனானப்பட்ட ஜேசுதாஸுக்கே ஆரம்பத்தில் தமிழ் உச்சரிப்பு பேதம் நிகழ்ந்திருக்கிறது. ஆனால் ஜெயச்சந்திரனைப் பொறுத்தவரை அவ்வாறானதொரு நிலை இருந்ததாக எனக்குப் படவில்லை. ஜெயச்சந்திரனின் 75 வது பிறந்த நாளாக கடந்த மார்ச் 3 ஆம் திகதி வந்த போது ஒரு சிறப்புப் பதிவு கொடுக்க வேண்டும் என்று மனம் பரபரத்தது. ஆனால் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட பாடல்களை மலையாளம் தொடங்கி தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று பரந்து விரிந்து சிறகடித்துப் பாடியவருக்கு ஒரு பதிவு ஓரவஞ்சனை அல்லவோ ஆகவே 75 பதிவுகள் அவரின் பாடல்களை வைத்து எழுதி விட வேண்டுமென்ற முனைப்பு இருக்கிறது. ஆனாலும் அந்த இலக்கில் தமிழ், மலையாளம் என்று வரையறுக்க வேண்டுமென்று முடிவு செய்திருக்கிறேன்.
“உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை” பாடலைக் கேட்கும் ஆனானப்பட்ட இளையராஜா பாடல்களைத் தின்று கொட்டை போட்டவர்களே
இன்னும் அதைப் பாடியது ஜெயச்சந்திரன் என்றே நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே இந்தத் தேடலில் ஜெயச்சந்திரனின் பிரபலங்களைத் தேடி மட்டுமல்ல அவரின் அரிய பல எழுபதுகள், எண்பதுகளையும் முக்குளித்துப் பகிர ஆசை.
ஜெயச்சந்திரன் பிறந்த நாள் அறிந்த போது “ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு” பாடலைத் தான் மனசு முணுமுணுத்துப் பாடி வாழ்த்தியது. நேற்று இந்தப் பதிவை எழுதலாம் என்று நினைத்த போது “பூந்தென்றல் காற்றே வா” என்று சொல்லிப் பார்த்தது. ஆனாலும் இன்று தொடங்கலாம் என்று Notes இல் இறங்கிய போது என்னை எப்படி மறந்தாய் என்று வந்து குந்திக் கொண்டது “பொன்னென்ன பூவென்ன கண்ணே”.
றேடியோ சிலோன் காலத்து நினைவுகளில் மட்டுமல்ல, பலரின் கிடுகுவேலிக் காதல் கதைகளுக்கும் பாலமாக அமைந்தது இந்த “பொன்னென்ன பூவென்ன கண்ணே”
இயக்குநர் ஶ்ரீதர் “அலைகள்” படத்தை இயக்கிய போது அப்போது தான் கன்னடத்தில் ஒரு தேசிய விருதுப் படத்தில் அறிமுகமான விஷ்ணுவர்த்தனை நாயகனாக்கிக் கொண்டார். “சாகச சிம்ஹா” என்று சந்தன சினிமா உலகம், அதாங்க கன்னடத் திரையுலகில் மறைந்தும் மறையாப் புகழ் கொண்டவர் ஒரு அழுத்தமான கதையம்சம் கொண்ட தமிழ்ப்பட வாய்ப்பைத் தன் ஆரம்ப காலத்தில் பெற்றது தமிழ்த் திரையுலகுக்கும் பெருமை. பின்னாளில் ஈட்டி, விடுதலை என்று நடித்த போதும் அலைகள் தான் அவருக்கு அடையாளம்.
அலைகள் படத்தைப் பலர் மறந்தாலும் அதை நினைப்பூட்டுவது இந்த “பொன்னென்ன பூவென்ன கண்ணே”. மெல்லிசை மன்னரின் கை வண்ணத்தில் அமைந்த பாட்டு தமிழுக்கு ஜெயச்சந்திரனைச் சிவப்புக் கம்பளம் போட்டு வரவேற்றது. இதற்கு முன்பே “மணிப்பயல்” படத்தில் “தங்கச் சிமிழ் போல்” என்ற பாடல் வழியாக இதே ஆண்டு மெல்லிசை மன்னரால் அழைத்து வரப்பட்டவர் ஜெயச்சந்திரன் (மணிப்பயல் தகவல் நன்றி ஜி.ராகவன்)
ஆனால் “பொன்னென்ன பூவென்ன கண்ணே” அவருக்குப் பரவலான அறிமுகத்தைக் கொடுத்தது.
“களித் தோழன்” என்ற மலையாளப்படத்தில் அறிமுகமானவர் (பாருங்கள் முதல் படத் தலைப்பே எவ்வளவு பொருத்தம் ஜெயச்சந்திரன் எங்கள் களிப்பில் பங்கெடுக்கும் தோழன் தானே?)
தமிழுக்கு வருவதற்கு முன்பே மெல்லிசை மன்னரின் “பனிதீராத வீடு” படத்தில் “நீலகிரியுடே” சுப்ரபாதம் பாடி கேரளத்தின் சிறந்த பாடகர் விருதைப் பெற்றவர் அதே மெல்லிசை மன்னர் வழியாகத் தமிழுக்கும் விருந்து வைத்தார்.
கன்னடத்தின் மிகப்பெரிய நட்சத்திரம் விஷ்ணுவர்த்தன், மலையாளத்தின் வழி உயர் பாடகர் ஜெயச்சந்திரன் இருவரையும் “அலைகள்” இணைத்தது பொன்னென்ன பூவென்ன கண்ணே” வழியாக.
“பொன்னென்ன பூவென்ன கண்ணே” பாடலைக் கேட்கும் தினமெல்லாம் அசரீரியாக ஒரு காதல் ஜோடிப் பாடல் போல உணர்வெழும். ஆனால் தனித்து நின்று ஜாலம் புரிவார் ஜெயச்சந்திரன். அடிப்படையில் மலையாளியாக இருந்தாலும் தமிழென்று வந்து விட்டால் கண்டிப்பான வாத்தியாராக ஆகி விடும் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுடன், தமிழ் மேல் காதல் கொண்ட இளைஞன் ஜெயச்சந்திரன் தனது 29 வது வயதில் பாடிய பாடலைக் கேட்டுப் பாருங்கள். ஒரு பிசிறு இருக்காது மொழி உச்சரிப்பில். பாடலைக் கேட்கும் போது ஊஞ்சலில் அமர்த்தித் தள்ளி விடும் உணர்வெழும். பாட்டின் சந்தத்தோடு மிக நெருக்கமாகத் தனக்கே உரித்தான தணிந்த குரலில் உருக்கம் காட்டுவார் நம் ஜெயச்சந்திரன்.
செவ்வான மேகங்கள் குழலாகுமா
செந்தூரம் விளையாடும் முகமாகுமா
நடை போடுமா இசை பாடுமா
நடந்தாலும் அவை யாவும் நீயாகுமா
பொன்னென்ன பூவென்ன கண்ணே – உன்
கண்ணாடி உள்ளத்தின் முன்னே
ஒரு கல்யாணப் பெண்ணாக உன்னைப்
புவி காணாமல் போகாது பெண்ணே
ஜெயச்சந்திரன் இன்னும் ஒளிருவார்….

0 comments: