Pages

Tuesday, November 24, 2026

இளையராஜாவின் கார்த்திகை தீபம்

 

டடடுங் டடடுங் டடடுங்
இருளைக் கிழித்துக் கொண்டு ஒலி மட்டும் கேட்கிறது அது மெல்ல மெல்ல வெள் திரையில் ஒளியைப் பாய்ச்ச
விளக்கு வைப்போம்
விளக்கு வைப்போம்
பாடலின் ஆரம்பத் துளியோடு அடுத்து வரவிருக்கும் படமுன்னோட்டத்தைப் பறை சாற்றுகிறது
அந்தப் படம் தான்
ஆத்மா ❤️
தான் சென்னையில் இருந்த காலத்தில், ஒரு படம் பார்க்கப் போனபோது
இடைவேளை நேரம் இந்தச் சிறு இசையின் அதிர்வலையைக் கேட்டுப் பிரமித்ததை உறவினர் ஒருவர் அதே பிரமிப்போடு அப்போது சொன்னபோது வாய்பிளந்து கேட்டுக் கொண்டிருந்தோம்.
ஆத்மா என்ற அமானுஷ்யமான கதைப் பின்னணி கொண்ட படத்தில் இந்தப் பாடல் ஒரு மிரட்டலான இசைக் கோவையோடு வாலியரின் வரிகளில் ஜானகியம்மா.
கார்த்திகைத் தீபம் என்றாலேயே முதலில் என் நினைவில் வருவது இந்தப் பாடல் தான். இன்றும் அப்படியே.
இசைஞானி இளையராஜா கார்த்திகைத் தீபத்துக்காகவே கொடுத்தது போல முத்தான பாடல்கள் உண்டு.
அங்கேயும் வாலியும் இணைந்து பயணித்திருக்கிறார்.
கார்த்திகை தீபம் கண்ணுக்கழகாகும்…
வண்ணக் கிளியே ஏற்று…
காலங்கள் தோறும் கன்னியர்கள் வேண்டும்…
அம்மன் அடியே போற்று…
ஒரு சுடர் இரு சுடர் ஒளிச் சுடர் மணிச் சுடர்…முத்துச் சுடர் ஆடுதடி
“ராஜாவின் பார்வையிலே” படத்தில் வரும் அழகான காதல் பாட்டு. இங்கேயும் ஜானும்மா, மனோவோடு.
அப்படியே இந்த மனோவை ஸ்வர்ணலதாவை ஜோடி கட்ட வைத்து அங்கேயும் வாலியாரைப் பாட்டெழுத வைத்தால்
மலை கோயில் வாசலில்...
கார்த்திகை தீபம் மின்னுதே...
விளக்கேற்றும் வேளையில்...
ஆனந்த கானம் சொல்லுதே...
இப்படி இன்னொரு அழகுக் காதல் தீபக் ஏற்றும்.
கவிஞர் வாலி இவ்விதம் இசைஞானி பாடல்களில் ஒளியேற்றும் வரிகளைப் புனைந்த வகை இருக்கும் போது, சற்று மாறுபட்டு அவர் எழுதிய “ராக்கம்மா கையைத் தட்டு” பாடலில் அப்பர் சுவாமிகளின் “குனித்த புருவமும்” பாடலோடு தீபம் ஏற்றும் நங்கையர் சூழல் கூட இந்தத் தீப ஒளியேற்றலுக்கு இயைபாக வரும்.
அப்படியே போனால் “தேவதை” என்றொரு படம். இசையரசி பி.சுசீலாவின் மருமகள் சந்தியாவும், எஸ்பிபி மகன் சரணும் பாடியதொன்று.
இங்கே அறிவுமதி அண்ணன் கைவண்ணமாய்
தீபங்கள் பேசும்
இது கார்த்திகை மாசம்
மணிகள் போலவே
அசைந்து ஆடுதே தீபமே
இசைஞானி இளையராஜாவின் பாடல்கள்
கவிஞர் முத்துலிங்கம் அவர்களின் பங்களிப்பில்
கையில் தீபம் ஏந்தி வந்தோம்
இங்கே நல்ல நாளிலே
“மனசெல்லாம்” நிறைக்கும்.
இதையெல்லாம் கடந்து ஒரு பேரருளை ஒளியாய்த் தரும் அருட்பெருஞ் ஜோதி தனிப்பெரும் கருணை வள்ளலார் சுவாமிகளின் பாடலைக் கேட்டால் கண் நிறைக்கும் நீரால்.
கொல்லிமலையில் வள்ளலார் குடிலுக்குச் சென்று வந்தது என் வாழ்வில் கிடைத்தற்கரிய பேறுகளில் ஒன்று.
போற்றி நின் பேரருள்
போற்றி நின் பெருஞ் சீர்
ஆற்றலின் ஓங்கிய
அருட்பெரிஞ்சோதி 🔥🙏
திசைகள் அறியாது தவித்த மனசுக்கு வழிகாட்டி,
பரிபூரண பற்றுக் கொண்ட சரணாகதித் தத்துவத்தின் உணர் நிலை இதுதானோ?
போற்றி நின் பேரருள் 🙏
சாதியும் மதமும் சமயமும்
பொய்யென
ஆதியில் உணர்த்திய
அருட்பெருஞ் ஜோதி
❤️❤️❤️🪔🙏
கானா பிரபா

Monday, November 23, 2026

பூவாடைக்காற்று ❤️

 


நடிகர் மோகனுக்கு பின்னணிக் குரலாக சுரேந்தர் இயங்கினாலும், பாட்டுக்குரலாக SPB அச்சொட்டாகப் பொருந்துவார். ஒருமுறை சரணே அதைத் தன் தந்தை குறிபிட்டதாகச் சொல்லி இருப்பார்.

 மோகனுக்கு கே.ஜே.ஜேசுதாஸ் கூடப் பொருந்திப் போவார்.


பூவாடைக் காற்று

 வந்து ஆடை தீண்டுமே


https://youtu.be/P2OSQQYr-qI?si=lW6m6u4d8gG-4v8l


சற்று வித்தியாசமாக கிருஷ்ணசந்தர் அவர்களை வைத்து ஒரு அழகான பாட்டு. 

லலலலா என்று அவர் கொடுக்கும் பரிமாணமே அழகாக இருக்கும்.


பாதை தடுமாறும் இது போதை மழையாகும்...

முந்தானை வாசம் ஏதோ சுகம்

என்று இவர் பாடவும்

அப்படியே விடாமல் பின்னால் ஒட்டிக் கொள்ளும் ஜானும்மா குரல்.


ஏங்கும் இளமாலை

விரல் தீண்டும் சுக வேளை

காணாததன்றோ ஆண் வாசனை


கவிஞர் வைரமுத்து வெகு அழகான வரிகளைக் கொடுத்திருப்பார். கேட்கும் போதே அவரது முத்திரை வரிகள் பளிச்சிடும்.

“அம்பிகை தங்கை என்று” ராதாவுக்கு அப்போதே புகழ்மாலை சூட்டி இருப்பார்.


புடிச்சாலும் புடிச்சேன்


https://youtu.be/nxeSc5XyCzc?si=fHxStg03F_UF7Q19


என்று இன்னும் அதிகம் பேசப்பட வேண்டிய ஒரு பாட்டு, அவினாசிமணி எழுத்தில் கிருஷ்ணசந்தர் பாடியிருக்கிறார் இதே படத்தில்.


பூவாடைக் காற்று என்று ஜானும்மா முதலடி கொடுக்கும் போது கிட்டார் தான் லலலலா பாடும் பாருங்கள் என்னவொரு கற்பனை 😍


பாடல் காட்சியும் அவ்வளவு அழகு ❤️


ஊரெங்கும் மழையாச்சு தாளாத குளுராச்சு

ராக்காலம் ஈரமாச்சு…

கனி கொண்ட கிளையுண்டு

கிளையோடு கிளியுண்டு

பசியாற நேரமாச்சு……


https://youtu.be/Pxd-opGL_2k?si=z03RMhF3_LU0ZbmO


இசைஞானி இளையராஜா கொடுக்கும் தொகையறா.

இங்கே பேசப்படாத ஒரு சங்கதி இருக்கும்.

பாடல் ஆரம்பிக்கும் போது ஒலிக்கும் தேவாலய மணி. 

ஜூலி என்ற அந்தக் காதலியோடு சேரும் பாடலின் முகப்பு ஒலி.


இயக்குநர் மணிவண்ணன் “நிழல்கள்” படத்தின் கதாசிரியராகத் தோல்வி கண்டபின் “அலைகள் ஓய்வதில்லை” படத்தில் வெற்றிகரமான கதாசிரியராகத் தன்னை நிறுவியிருப்பார்.

அந்தப் படத்திலும் இந்துப் பையனுக்கும், கிறீஸ்தவப் பெண்ணுக்கும் காதல். அங்கே மேரியாக ராதா.

மணிவண்ணன் இயக்கு நராக “ஜோதி” படத்தில் அறிமுகமாக வேண்டியவர். ஆனால் முந்திக் கொண்டது “கோபுரங்கள் சாய்வதில்லை”

இங்கே ஜூலியாக ராதா.

அந்தத் தேவாலய மணி அவரின் வெற்றிகரமான திரைப்பயணத்தின் கட்டியம் கூறிய ஒலி.


கானா பிரபா

23.11.2026

Thursday, November 12, 2026

வானம் கீழே வந்தால் என்ன ❤️



பெரிய பெரிய நட்சத்திர விடுதிகளில் பார்த்திருப்போம் ஒரு பெரிய கண்ணாடிக் குடுவை ஆள் உயர்த்தி (lift) நகர்ந்து மேலெழும்.

அது போலத் தான் உணர்வேன்,  இந்தப் பாடல் ஆரம்பிக்கும் கணத்தில். 

தததா….துதுதுது 

தததா….துதுதுது 

லலலலலலல…..

அந்த ராட்சசி ஜானுவின் வாய்ஜாலம், இசைக் கருவிகளோடு போட்டி போடும்.
இசைஞானியாருக்குத் தெரியும் ஜானகிம்மா கட்டற்ற ஒரு வாத்தியக் கருவி என்று.

போதைக்குள் மூழ்கிய மனிதனின் உணர்வோட்டம் தான் பாடலின் அடி நாதம்.
அந்த ஆரம்பத்தை உணர்ந்து பாருங்கள், 1983 ஆம் ஆண்டில் 3D effect போல எல்லாப் பக்கமும் ஒரு அதிர்வலை சூழ அமைந்திருக்கும் இந்தப் பாட்டு.

இந்தப் பாடலுக்கு நம் பாட்டுத் தலைவனை விட்டால் மாற்று உண்டோ,
மாற்றுக் குறையாத தங்கம் அல்லோ?
இந்த மாதிரி ஒற்றைப் பாடலின் சறுக்கல் சங்கதிகளிலும் கூட தன் அக்மார்க் சிரிப்பைப் போட்டுக் கலக்குவார் மனுஷர்.

“அருகில் இருந்தே அபிநயம் புரிய”
அந்த அபிநயம் என்ற சொல்லாடலில் அபிநயம் காட்டுவார் ராட்சஷன்.

இளையராஜா, ஜானகி, பாலசுப்ரமணியம் கூட்டணியில் இன்னொரு வாலிபனும் இருக்கிறார்.

பறவை மிருகம்
அழுவது இல்லை
கவலை கடலில் 
விழுவது இல்லை

பறவை ஜாதி நானும்
கூட பறவை ஜாதி

அப்படியே பாடல் போலவே இவரும் தன் வரிகளில் பறந்து மிதப்பார்.

“வானம் கீழே வந்தால் என்ன”

https://youtu.be/aGoW-Z9d2Vc?si=EHmavuKCCtfdiQ0y

பாடலை ஒரு மேடை நிகழ்வில் பாடிய எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள்,
இந்தப் பாடலுக்கு trombone வாத்தியத்தை வாசித்தவர் Blasco என்ற வாத்தியக் கலைஞர் என்று குறிப்பிட்டிருப்பார்.

யார் இந்த Blasco? இவர் குறித்த அற்புதமான ஆவணப் பேட்டியை வலைப்பதிவர் விக்கி Vignesh Subramanian தனது தளத்தில் சேமித்துள்ளார்.

Swar-Aalap மின்னிதழில் சங்கர் ஐயர் அவர்கள் பிளாஸ்கோ மான்சொரேட் ( Blasco Monsorate) அவர்களோடு நிகழ்த்திய ஆங்கிலப்  பேட்டியில் பிளாஸ்கோ இளையராஜா குறித்துப் பகிர்ந்ததை நன்றியோடு தமிழாக்கித் தருகிறேன் 
இதோ

மகான் (Mahaan) திரைப்படத்தின் பின்னணி இசைப் பதிவுக்காக நாங்கள் சென்னைக்கு வந்திருந்தபோது, கேர்‌ஸிஜி (Kersiji) என்னை இளையராஜாவின் இசைப்பதிவுக் கூடத்திற்கு அழைத்துச் சென்றார்.

அங்கு இளையராஜாவைச் சந்தித்தோம். அவர் தனது பின்னணி இசையின் ஒரு ரீலைப் போட்டு, அதில் ஒரு டிராம்போன் இசைப்பகுதியை வாசிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

ஆனால் நான் அப்போது எனது டிராம்போன் இசைக்கருவியைக் கொண்டு வரவில்லை. எனவே அடுத்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் வருமாறு கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை எனக்கு ஓய்வு நாள். கடைகளுக்குச் சென்று பொருட்கள் வாங்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்த நேரத்தில், அவர் ஞாயிற்றுக்கிழமை இசைப்பதிவுக்கு அழைத்திருந்தார்!

நாங்கள் மீண்டும் மும்பைக்குத் திரும்பினோம். ஆனால் சென்னையில் நடந்த அந்தச் சந்திப்பு என் மனதில் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருந்தது.

ஒருநாள், மார்ச் 1983இல், எனது இசைக்கருவியை எடுத்துக்கொண்டு இளையராஜாவைச் சந்திப்பதற்காகச் சென்னைக்குப் புறப்பட்டேன்.

அப்போது அங்கு பிரபலப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்களைச் சந்தித்தேன். அவர் அடுத்த நாளே ஒரு தெலுங்குத் திரைப்படத்தின் பின்னணி இசைப் பதிவுக்கு வருமாறு அழைத்தார்.

எனது இசை வாசிக்கும் பாணியைக் கேட்டு அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.

“உங்களுடைய வாசிப்பு முறை மிகவும் வித்தியாசமாக இருக்கிறது” என்று பாராட்டினார்.

இளையராஜாவைச் சந்திக்க வேண்டும் என்றும், நான் சென்னையில் இன்னும் சில காலம் தங்கியிருக்க வேண்டும் என்றும் அவர் விரும்பினார்.

அதன் நான்காவது நாளில், இளையராஜாவுக்காக இசைக்கருவியை வாசிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது!

பொதுவாகவே இளையராஜாவின் இசை, இந்தித் திரைப்பட இசையிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. அவரது இசையில் ஒத்திசைவற்ற தாள அமைப்புகள் (Syncopation) அதிகமாக இருக்கும்.

அவர் எனக்குக் கொடுத்த டிராம்போன் இசைப்பகுதிகள் மிகவும் கடினமானவை. பெரும்பாலும் அவை தாளத்தின் நேரடியான அடிப்படையில் இல்லாமல், எதிர்த்தாளத்தில் (Off-beat) அமைந்திருக்கும்.

மும்பையில் டிரம்பெட் இசைக்கலைஞர்கள் எதிர்த்தாளத்தில் வாசிப்பார்கள். டிராம்போன் இசைக்கலைஞர்கள் நேரடியான தாளத்தில் வாசிப்பார்கள்.

ஆனால் இளையராஜாவின் இசையில் டிராம்போன் எப்போதுமே எதிர்த்தாளத்தில் பயன்படுத்தப்படும்.

எனவே அவருக்காக வாசிக்கும்போது நான் எப்போதும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியிருந்தது. ஒரு டிராம்போன் இசைக்கலைஞராக அது எனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது.

அப்படிப்பட்ட கடினமான இசை அமைப்புகளை மும்பையில் நான் அதிகம் சந்தித்ததில்லை.

இன்றைய காலத்தில் அப்படிப்பட்ட இசைக்குறிப்புகளை எழுதக்கூடியவர்கள் இல்லை என்றே சொல்லலாம். இப்போது இசைக்கலைஞர்களிடம் குறிப்பிட்ட ஸ்வரங்களைக் கொடுத்து வாசிக்கச் சொல்கிறார்கள்.

இளையராஜாவுக்கு எனது இசை வாசிக்கும் பாணி மிகவும் பிடிக்கும். அவர் என்னை அன்புடன் “பிளாஸ்” (Blas) என்று அழைப்பார்!

இளையராஜா இசைக்கலைஞர்களை மனதில் வைத்துக்கொண்டு தனது இசையைத் தனியாகவே உருவாக்குவார்.

அவரது மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியாது.

இளையராஜாவைப் பொறுத்தவரை, அவரது இசை அதிகத் தொழில்நுட்ப நுணுக்கங்களைக் கொண்டது. இசை அமைப்புகள் மிகவும் கடினமானவை.

அவருக்காக வாசிக்க வேண்டுமென்றால், நீங்கள் ஒரு சிறந்த இசைக்கலைஞராக இருக்க வேண்டும்.

அவரது இசையை வாசிப்பது எளிதான காரியமல்ல. அவர் எழுதியதை அப்படியே, எந்த மாற்றமும் இல்லாமல் வாசிக்க வேண்டும்.

இளையராஜாவிடம் இசைக்குறிப்பில் எழுதப்பட்டிருப்பதிலிருந்து எந்தவிதமான விலகலும் இருக்கக்கூடாது.

அவருடன் பணியாற்றிய இசைக்கலைஞர்களுக்குப் பல நேரங்களில் கடினமான அனுபவங்கள் இருந்தன.

ஆனால் அவர் என்மீது தனிப்பட்ட அன்பும் அக்கறையும் வைத்திருந்தார்.

அதற்குக் காரணம் நான் மும்பையைச் சேர்ந்தவன் என்பதாக இருக்கலாம். அல்லது நான் ஆர்.டி. பர்மனின் டிராம்போன் இசைக்கலைஞராக இருந்ததால் கூட இருக்கலாம்!

இப்படியாக அந்தப் பேட்டி நீள்கிறது.
குறித்த பேட்டியை முழுமையாகப் படிக்க

http://raagadevan.blogspot.com/2009/11/blasco.html

பிளாஸ்கோ இளையராஜாவுடன் 1983 இலிருந்து 1991 வரை பணியாற்றியிருக்கிறார். 

வெள்ளை ரோஜா, நாயகன், அபூர்வ சகோதரர்கள் உட்பட பிளாஸ்கோவின் வாசிப்பின் பரிமாணம் உள்வாங்கப்பட்டாலும், மிகவும் அரிதான ஒரு பாடல்
“ரோஜா ஒன்று” (ஓ மானே மானே) 

https://youtu.be/4NdvX9F-rhw?si=qWQQmLRAmRD5qjhe

பாடலில் இவரின் வாத்திய வாசிப்பைச் சிலாகிக்கிறார் பேட்டி கண்ட சங்கர்.

ஏ.ஆர்.ரஹ்மானின் இருவர் படத்தில் “வெண்ணிலா” பாடலிலும் இவரின் வாய்ஜாலம், இசைஜாலம் இருக்கும்.

ஆர்.டி.பர்மன், லஷ்மிகாந்த் - பியாரிலால் போன்ற இசை மேதைகளுடன் பணியாற்றிய இப்பேர்ப்பட்ட உயரிய இசைக் கலைஞர்கள் இளையராஜா இசையில் வாசிக்க வேண்டும் என்று தவம் கிடந்தது தான் இசைஞானியின் ஆளுமையைப் பறை சாற்றும்.

சரி மீண்டும்
“வானம் கீழே வந்தால் என்ன”
பாடலுக்கு வருவோம்.

இந்தப் பாடல் R.D.பர்மனின் இசைக் கலைஞர்களோடு பணியாற்றியது என்று SPB குறிப்பிட்டிருக்கிறார். இதே காலப் பகுதியில் தான் இசைஞானியின் சொந்தத் தயாரிப்பான “ஆனந்தக் கும்மி” பாடல்களும் D.பர்மனின் இசைக் கலைஞர்களோடு மும்பையில் பதிவானது குறிப்பிடத்தக்கது.

அப்போது அந்த வட நாட்டு இசைக் கலைஞர் ஒருவர்

“நீங்க இனிமேல் இந்தப் பக்கம் வந்துடாதீங்க, நாங்க இங்குள்ள இசையமைப்பாளர்களோடு  ஜிங்கிள்ஸ் மாதிரிப் பண்ணிட்டிருக்கோம், இந்த இளையராஜா கொடுக்குற நோட்ஸ் எல்லாம் ரிதம் ப்ளேயர்ஸ்ல இருந்து நம்ம எல்லோருக்குமே வாசிக்கிறது ரொம்பக் கஷ்டம்”

என்று உரிமையோடு  SPB யிடம் செல்லமாகக் கோபித்துக் கொண்டு சொன்னாராம்.

இந்தப் பாடலை மேடையில் பாடி முடித்து விட்டு
“என்ன அற்புதமான composition தந்திருக்கிறார்
இளையராஜா நீடூழி வாழணும்”
என்று போற்றினார் SPB எனும் மாமனிதன் ❤️

தினமும் மனம்போல் 
திரியும் குருவி
❤️
வானம் கீழே வந்தால் என்ன 
ஹ ஹ ஹ ஹ
அட பூமி மேலே போனால் என்ன
மாயம் எல்லாம் மாயம்
இதில் மனிதன் நிலை என்ன

கானா பிரபா
12.11.2026

Saturday, October 31, 2026

எல்லாம் இன்ப மயம் ❤️


எல்லாம் இன்ப மயம் ❤️
எங்கள் காலமெல்லாம் பி.சுசீலா வில் ஆரம்பித்து எஸ்.ஜானகி, கே.எஸ்.சித்ரா என்று தொடர்ந்தது.
ஆனால் இதற்கு முன்னர் இன்னொரு தலைமுறைப் பாடகிகள் என்று வரும் போது சாஸ்திரிய சங்கீதம் மட்டுமல்லாது திரையிசையிலும் கோலோச்சிய
எம்.எல்.வசந்தகுமாரி,
மற்றும்
பி.லீலா
ஆகியோர் முக்கியமானவர்கள்.
இந்த இரண்டு பாடக ஆளுமைகளின் கூட்டுச் சிறப்பு ஒன்றுள்ளது.
அது என்னவெனில் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் கூட்டுப் பாடகிகளாகப் பாடிச் சிறப்பித்துள்ளார்கள்.
இன்னுமொரு சிறப்பும் உண்டு.
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் இயக்கி நடித்த “மணமகள்” திரைப்படத்தில் திருவிதாங்கூர் சகோதரிகள் என்று புகழப்பட்ட லலிதா, பத்மினி, ராகினி ஆகிய மூவருமே நடித்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தில் இரண்டு பாடல்கள்
சி.ஆர்.சுப்பராமன் இசையில்
எம்.எல்.வசந்தகுமாரி மற்றும் பி.லீலா
ஆகியோர் இணைந்து பாடியது.
திரையில் தோன்றிப் பாடுபகர்கள் வேறு யாருமல்ல
லலிதா & பத்மினி சகோதரிகள் தான்.
அந்தப் பாடல்களில் ஒன்று
இன்றும் காலத்தால் அழியாப் புகழ் கொண்ட
“எல்லாம் இன்ப மயம்”
இன்னொன்று
“ஆயிரத்துத் தொளாயிரத்து”
மணமகள் படம் தெலுங்குக்குப் போன போது அங்கேயும் இந்த ஜோடிப் பாடகிகள் தான் இரண்டையும் பாடிச் சிறப்பித்தார்கள்.
அது போல் இன்னொன்று
“இரு சகோதரிகள்” என்று தமிழில் உருவான படத்தில் எஸ்.ராஜேஸ்வரராவ் இசையில்
“தாயே உன் சேயல்லவோ”
இந்தப் படம் சமகாலத்தில் Bhale Ammayilu என்று தெலுங்கில் எடுக்கப்பட்ட போது அங்கும் இரட்டைக் குரலாக அணி செய்தனர்.
மலையாளத்தில் வி.தட்சணாமூர்த்தி சுவாமிகள் இசையில் எம்.எல்.வசந்தகுமாரி மற்றும் பி.லீலா இன்னும் அதிகப் பாடல்களைப் பாடியிருக்கிறார்கள்.
அவற்றுள் “ஆகாச தீபம்” படத்தில் இடம்பெற்ற
“ஜனனி ஜயகே நீணல்”
என்ற பாடல் தெய்வீகச் சிறப்பு மிகுந்து கொண்டாடப்படுகிறது.
அன்றைய மலையாள இசையமைப்பாளர் கே.ராகவனும் இந்த இரட்டைக் குரல்களைப் பயன்படுத்தி இருக்கிறார்.
“கற்பூரமுல்லை” ஒரு சாஸ்திரிய பாடகிக்கும், மகளுக்குமான பாசப் போராட்டம். அந்தப் பாடகியாக நடித்தவர் எம்.எல்.வசந்தகுமாரி மகள் ஶ்ரீவித்யா என்றால், அந்தப் பாடகிக்கான குரலாக அமைந்தவர் பி.லீலா.
நீண்ட இடைவெளிக்குப் பின் பாட வந்த பி.லீலா
இசைஞானி இளையராஜா இசையில் இந்த ஆச்சரியமான ஒற்றுமையோடு பாடியொருக்கிறார்
“ஶ்ரீ சிவா”
சமகாலத்தில் படமான மலையாள வடிவம் “எண்ட சூர்ய புத்ரிக்கு” படத்திலும் பி.லீலா குரலில் இதே பாடல் தான்.
இன்னொரு ஒற்றுமை
31 அக்டோபர் 1990
எம்.எல்.வசந்தகுமாரி
31 அக்டோபர் 2005
பி.லீலா
இவரும் இறையடி சேர்ந்த ஒரே நாள் ஆகியது.
கானா பிரபா
31.10.2026

Friday, October 30, 2026

தேவா இசையில் பாடிய இசையமைப்பாளர் ஆர்.கோவர்த்தனம் மாஸ்டர்


நேற்று மறைந்த சதா மாஸ்டரைப் பற்றி இந்த வார ஆரம்பத்திலும் நினைத்திருத்திருந்தேன். அவரின் சிறிய தந்தை கோவர்த்தனம் தூண்டுகோலாக இருந்தார்.

காரணம், தேனிசைத் தென்றல் தேவா குறித்த ஒரு பதிவை எழுத இருந்தேன். அதில் நாயகன் கோவர்த்தனம் அவர்கள் தான்.

தேனிசைத் தென்றல் தேவாவுக்கு இசை ஒருங்கமைப்பாளராக கோவர்த்தனம் மாஸ்டர் இருந்த போது, ஒரு அருமையான வாய்ப்பும் அவருக்கு வாய்த்திருக்கிறது. தேவா இசையில் “நாடு அதை நாடு" என்ற திரைப்படத்தின் முகப்புப் பாடலைப் பாடியவர் வேறு யாருமல்ல, கோவர்த்தனம் அவர்கள் தான். 

படத்தின் முகப்போட்டத்தில் பாருங்கள்

https://www.youtube.com/watch?v=p5yLUYUBCus&t=47s

“கங்கை நதியோரம் ராமன் நடந்தான்"

“வரப் பிரசாதம்” படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை இளையராஜா ரசிகர்கள் மறக்க மாட்டார்கள்.

படத்தி இசையமைப்பாளர் கோவர்த்தன் என்றாலும், அன்னக்கிளி படத்துக்கு முன்பே இசை ஆர்.கோவர்த்தன், உதவி ராஜா என்று முகப்பு எழுத்தோட்டத்தில் இளையராஜாவை அடையாளப்படுத்திய திரைப்படம். அன்னக்கிளி 1976 ஆம் ஆண்டு மே மாதம், அதே ஆண்டு ஏப்ரலில் வரப்பிரசாதம் வெளிவந்தது.

கோவர்த்தனம் அவர்களது மூத்த சகோதரர் ஆர்.சுதர்சனம். சதா (சதானந்தம்) அவர்களது தந்தை.

கோவர்த்தனம் மாஸ்டர் புகழ் பூத்த பாடல்களை வழங்கி இருக்கிறார். குறிப்பாக “நாதஸ்வர ஓசையிலே தேவன் வந்து பாடுகின்றான்”, அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி” ஆகியவை.

எடுத்த எடுப்பிலேயே முதல்படம் ‘ஜாதகம் திரைப்படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளிலும் இசையமைக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. 

பிரபல பின்னணிப் பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸை இவர்தான் தமிழில் முதன்முதலில் அறிமுகப்படுத்தினார்.

பிரபல இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி, இளையராஜா, விஜயபாஸ்கர், சந்திரபோஸ், தேவா என பல இசையமைப்பாளர்களுக்கு உறுதுணையாக இருந்துள்ளார் கோவர்த்தனம். 

விபத்தினால் செவித்திறனை இழந்தவர். சேலத்தில் தன் இறுதிக் காலத்தைக் கழித்த இவரின் சிரம ஜீனத்தை அப்போது குமுதம் கட்டுரையாக வெளியிட்டது.

ஜெயலலிதா முதல்வராக இருந்த போது இவருக்கு 10 லட்சரூபாய் நிதிஉதவி செய்து இருக்கிறார்.

இப்படியாக அமைந்த கோவர்த்தனம் அவர்களின் இறுதிக் காலம் சோகமானது. ஆனால் அவர் தன்னம்பிக்கையூட்டும் பாடலொன்றை இசையமைத்திருக்கிறார். 

பொற்சிலை திரைப்படத்தில் இடம்பெற்ற அந்தப் பாடல் இதுதான்

நாளை பொழுது உந்தன் நல்ல பொழுதாகுமென்று

நம்பிக்கை கொள்வாயடா

இறைவன் நம்பிக்கை தருவானடா

https://www.youtube.com/watch?v=meIERs1Lndo

கானா பிரபா

30.10.2026

Thursday, October 29, 2026

சதா மாஸ்டர் (சதானந்தம்)

பழம் பெரும் இசையமைப்பாளர்  சுதர்சனம் மாஸ்டரின் புதல்வர் மற்றும் இசைஞானி இளையராஜாவின் ஆஸ்தான கிட்டார் வாத்திய விற்பனர் இன்று காலமானார்.

சதா மாஸ்டருக்கு கிட்டார் வாங்கிக் கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் அப்பா

இன்று மறைந்த சதா மாஸ்டர் ஒரு சமயம் தன் அண்ணனிடம் பழுதுபார்க்க வந்த கிட்டாரை எடுத்து வசிக்கப் பார்த்ததும், கிட்டார் உரிமையாளர் இதொன்றும் விளையாட்டுப் பொருள் அல்ல என்று கண்டிப்பாகச் சொல்லவும், தானும் கிட்டார் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற முனைப்பு வந்ததாக, சுபஶ்ரீ தணிகாசலம் நிகழ்த்தும் QFR 700 நிகழ்வில் பகிர்ந்திருக்கிறார்.

சதா மாஸ்டரின் தந்தை பிரபல இசையமைப்பாளர் சுதர்சனம் மாஸ்டரிடம் உதவி இசையமைப்பாளராக இருந்த ஆர்.கே.சேகர் தான் கிட்டார் ஒன்றை வாங்கி, கிட்டார் பழக அனுப்பினாராம்.

சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தையின் ஐம்பதாவது நினைவாண்டு நிகழ்விலும் இவர் கலந்து கொண்டார்.

இவர் தன்ராஜ் மாஸ்டரிடம் கிட்டார் பயில ஆரம்பித்த பின்னர் இணைந்து கொண்டவர் இளையராஜா.

மெல்லிசை உலகின் ஆளுமை ராம்ஜி Ramjhi Issai Mazhalai அவர்கள் சில வருடங்களுக்கு முன் பகிர்ந்த ஃபேஸ்புக் பகிர்வில், 1968 ஆம் ஆண்டில் தன்னுடைய சகோதரர் ஷான் சந்திரசேகர் உருவாக்கிய BLUERICKS இசைக்குழுவில் சதானந்தம் அவர்கள் Lead Guitarist ஆக இயங்கியதைக் குறிப்பிட்டிருக்கிறார். 

இவரோடு இணைந்து கிட்டார் வாத்திய விற்பன்னராக இருந்தவர் ராதா விஜயன் (நடிகர் எம்.கே.ராதாவின் புதல்வர்). அவரும் QFR 700 இல் கலந்து கொண்டவர்.

இவர்களோடு ராம்ஜி ட்ரம்ஸ் வாத்தியத்தைக் கவனித்துக் கொண்டார்.

சதா என்ற சதானந்தம் அவர்கள் முதன்முதலில் படத்துக்காக கிட்டார் வாசித்தது ஜெயகாந்தனின் “யாருக்காக அழுதான்” படத்தில் ராம்ஜியின் சகோதரர் எஸ்.வி.ரமணனின் இசையில் தான்.

எஸ்.வி.ரமணன் அனிருத்தின் தாத்தா.

அந்தப் படம் வெளிவந்தது 1966 இல். இந்த ஆண்டோடு 60 ஆண்டுகள் சதா அவர்களது இசைப் பயணம் ஆரம்பித்து.

இதில் 45 ஆண்டுகள் இசைஞானி இளையராஜாவின் பாசறையில்.

சமீபத்தில் வாவ் தமிழா பேட்டியில் உலகம் சுற்றும் புகழ் பூத்த கிட்டார் வாத்தியக் கலைஞர் பிரசன்னாவிடம், நீங்கள் வியந்து பார்த்த கிட்டார் வாத்தியக்காரர் யார் என்று கேட்டதும், அவர் பதில் சொல்வதற்குள், இவர் யாராவது மேற்கத்தேய வாத்தியக் கலைஞரைச் சொல்வார் என்று பார்த்தால் அவர் குறிப்பிட்டவர்

“சதா மாஸ்டர்” ❤️🙏

கானா பிரபா

29.10.2026 










Friday, October 23, 2026

பாடகர் கிருஷ்ணராஜ் இன் பாட்டுப் பயணம்


அவர் ஒரு அறிமுக இயக்குநர்

இவர் ஒரு அறிமுகப் பாடகர்

இருவருக்குமான முதல் வாய்ப்பு, பாடல் பதிவாகிறது, ஆனால் படமோ முடங்கிப் போகிறது.

அவர் அகத்தியன் என்ற இயக்குநர், இவர் கிருஷ்ணராஜ் என்ற பாடகர்.

இசையமைப்பாளர் தேவா அறிமுகத்தில் அவரிடம் பக்திப் பாடல்கள் பாடியவருக்குத் திரைப்படப் பாடல் வாய்ப்பு வாய்க்கிறது, சரத்குமார் நடிப்பில் அகத்தியன் இயக்கவிருந்த,  “அதிகாலை சுபவேளை” படத்தில் இடம்பெற்ற 

“உன்ன நான் தொட்டதுக்கு”

https://youtu.be/vz3I-8kMk10?si=YQzr-IyDxeMYRisw

பாடல் வழியாக. ஆனால் அந்தப் படம் வெளிவராமல் முடங்கிப் போனது.

இந்தப் பாடல் பின்னர் SPB பாடிய “ஊர்மரியாதை” படத்தில் வெளிவந்தது

https://youtu.be/eap91tjwFQI?si=Vl7eCz8e583T7lTy

பாருங்கள் அப்பவே கிருஷ்ணராஜ் பாடிய பாடல் இன்னொருவருக்குப் போயிருக்கிறது. பின்னாளில் நலம் நலமறிய ஆவல் பாடலுக்கும் இப்படித்தானே நேர்ந்தது.

பின்னாளில் இதே அகத்தியன் இயக்கிய “காதல் கோட்டை” படம் “வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா” பாடல் வழி பாடகர் கிருஷ்ணராஜுக்குப் பெரும்  புகழ், இருவருக்கும்  மறுவாழ்வு அளித்தது வரலாறு.

வேம்படிதாளம் என்ற ஊரில் சேலம் மாவட்டத்தில் பிறந்தவர். 

உள்ளூர் இசைக்கச்சேரிகளில் பாடி வந்தவருக்கு ஒரு சமயம் பாடல் போட்டியில் முதற் பரிசு கிடைக்கிறது. அந்தப் பரிசைக் கொடுத்தவர் பிரபல இசையமைப்பாளர் வி.குமார்.

அப்போது தான் முழுமையான பாடகராக வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் கிளர்கின்றது. இந்தப்பதிவை எழுதியவர் கானா பிரபா

தமிழ் நாடு இசைக்கல்லூரியில் முறையாக இசை பயின்று, “சங்கீத வித்துவான்” பட்டத்தை மட்டுமல்ல, முதல் மாணவர் என்ற உன்னதத்தைத் தொட்டதால் அன்றைய தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர் பதக்கம் வழங்கிக் கெளரவித்தார்.

தமிழ்த் திரைப்பட உலகில் அவருக்குத் திறவுகோலாய் அமைந்தது, இசையமைப்பாளர் ஆர்.ராமானுஜன் அவர்களுடனான அறிமுகம்.  அவரிடமேயே முதல் பாட்டு பாடியிருக்கிறார். அந்த சமயம், விளம்பரப் பாடல்கள், பக்திப் பாடல்களைப் பாடல்கள் என்று தொடர்கிறார்.

அது சரி

யார் அந்த ராஜன் சக்ரவர்த்தி?

அதுவும் இவர் தான்.

“ வா அருகில் வா” திரைப்படத்தில்

சாணக்யா இசையில்

இதயக் கோயிலில்

https://youtu.be/-7_6Wk28kAs?si=Jk03zuJoZ3rl0zIV

பொன்னுமணி பூச்சரமே

https://youtu.be/-VchU84LUqw?si=qP0gwLsalW50HIKE

ஆகிய இரு பாடல்கள் வழியாக அறிமுகமாகிறார்.

தேவாவின் இசையில் ராஜன் சக்ரவர்த்தி என்ற பெயரிலேயே, 

அம்மா தானம்மா - மண்ணுக்கேத்த மைந்தன்

https://youtu.be/1Mm7T6_lus8?si=6OzyqbwI0zp__oNb

மாலைக் கருக்கல் வந்து - நாடோடிக் காதல்

https://youtu.be/NHuh1EoSrAE?si=M6hARLHnjGwNKMIR

வைகாசி பொறந்தாச்சு படத்தில் “வாழை மரம்” பாடல், 

அண்ணாமலை அண்ணாமலை (மாங்கல்யம் தந்துனானே)

https://youtu.be/I59WC79Cfrs?si=XsH0rG3rjl2vuuSh

மேலும் “வாயாடி” என்ற இன்னொரு பாடல். “வைதேகி கல்யாணம்” படத்தில்

ஆலமரத்தடி” என்று பாடிக் கொண்டே பயணித்தாலும் பெரிய அடையாளம் இவருக்கு வாய்க்கவில்லை. 

“அறிமுகம் கிருஷ்ணராஜ்” 

என்று தேவா இசையில் ஆனந்த ராஜ் நடித்த, மணிவண்ணன் இயக்கிய “கவர்ன்மெண்ட் மாப்பிள்ளை” படம் இவருக்கு இன்னொரு தடவை அறிமுகம் கொடுக்கிறது.

தேனிசைத் தென்றல் தேவாவின் பாசறையில் track பாடகர் மட்டுமல்ல, பாட்டுச் சொல்லிக் கொடுப்பவரே இவர் தான் என்று இயங்கினார்.இந்தப்பதிவை எழுதியவர் கானா பிரபா

தன்னுடைய முதல் பாடலை அகத்தியனுக்குப் பாடி, படம் வெளிவராமல் இருந்ததோ அதே அகத்தியனின் “காதல் கோட்டை” வழியாக “வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா” இவருக்குப் பெரிய புகழைக் கொடுக்கிறது.

பிறகென்ன ஏறுமுகம் தான்.

ராஜன் சக்ரவர்த்தி என்று 

ரஜினி புகழ் பாடல்கள் 

https://youtu.be/bRed4MvIV2E?si=3nm26JIIQh8aKMyd

என்ற தனிப்பாடல் தொகுப்பில் பாடியவர் பின்னாளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கே பாடுவேன் என்று நினைத்திருப்பாரா?

“நகுமோ” பாடலை track பாடியவர், ஹரிஹரன் பாடிய இன்னொரு வடிவமும் பதிவாகியது. ஆனால் ரஜினி தேர்ந்தெடுத்தது கிருஷ்ணராஜ் பாடியதையே.

கிருஷ்ணராஜ் பாடிய எண்ணற்ற புகழ்பூத்த பாடல்களில், நான் அடிக்கடி விரும்பிக் கேட்பவை ஐந்து

தேவா இசையில்

“உன்னருகே நான் இருந்தால்”

https://youtu.be/xranbNagWoU?si=m4FAvHIM6uD3LAHn

இதயம் இதயம் இணைகிறதே

https://youtu.be/SVT_HaaVyA4?si=JBtfuWjJ9q4AcpjG

“ஜனவரி நிலவே நலம் தானா”

https://youtu.be/8snzPlRDKjc?si=_6rI6BwDy8yLI6DN

யுவன் ஷங்கர் ராஜா இசையில் 

“ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்”

https://youtu.be/nXIU8aiB-NM?si=_tPDqBKjdEqIbu_w

“ஐயய்யோ” 

https://youtu.be/uS8Z4nLJ53I?si=O06jyH5MNqZIPEzX

இவரின் பிரிவுச் செய்தியைக் கேட்ட கணம்  “நீ பார்த்துட்டுப் போனாலும்” 

https://youtu.be/DsWdEBZf4Fk?si=PJYUKydtkN7p2lUc

பாடல் தான் மனசுக்குள் ஓடியது. 

கிருஷ்ணராஜ் மகளின் அறிமுகம் கிட்டியதும் அகத்தியன் படத்தில் தான். தேனிசைத் தென்றல் தேவா இசையில் ஜீவரேகா, கார்த்திக் உடன் இணைந்து “ஓவெண்புறா ஒன்று” பாடலைப் பாடியிருக்கிறார்.

தஞ்சாவூரு மண்ணெடுத்து பாடலைக் கூட கிராமியப் பண் பாடும் பாடகருக்காக கிருஷ்ணராஜ் பாடிய ஒத்திகைப் பாடல் தானாம். ரோஜா கம்பைன்ஸ் ஒட்டுமொத்தமாக இதை ஆதரிக்க இதுவே இறுதியானது தான் பின்னாளில் சரித்திரம் படைத்தது.

சிங்கப்பூர் ஜனாதிபதி எஸ்.ஆர்.நாதன் வாழும் காலத்திலேயே அவர் முன்னால் “தேனிசைத் தென்றல்” தேவாவின் தஞ்சாவூரு மண்ணெடுத்து பாடி அவரிடம் பாராட்டுப் பெற்றவர்.

எஸ்.ஆர்.நாதனுக்குப் பிரியாவிடை கொடுத்த பாட்டைப் பாடிய இருவரும் பிரியாவிடை கொடுத்து விட்டனர்.

கானா பிரபா

23.10.2026

Shared post



Thursday, October 22, 2026

தேவா இசையில் இயக்குநர் கூட்டு



90 களில் ஒரு வித்தியாசமான கூட்டணி நிகழ்ந்தது. இயக்குநர் P.வாசுவின் கதையை கே.எஸ்.ரவிகுமார் இயக்குவார்.  கே.பாக்யராஜை தன்னுடைய நாயகனாக்கி இயக்குவார் P.வாசு.

இந்த இரண்டு வித்தியாசமான கூட்டணியிலும் பொதுவாக இருந்த இருவரில் ஒருவர் குஷ்பு, இன்னொருவர் தேவா.

செம்பட்டுப்பூவே

வெண்மொட்டுத்தேரே

ஸ்ரீரங்கக் காவிரியே..

பொன் மொட்டு மானே

பூந்தட்டுத் தேனே

பூமியின் தேவதையே..

https://youtu.be/AScsdiUGgUY?si=ePW9Q6KdWxQEhtnN

இலங்கையின் பண்பலை வானொலிகளில் பொற்காலத்தில் அந்தந்த வானொலி நேயர்கள் மட்டுமல்ல, வானொலிப் படைப்பாளர்களாக இருந்தவர்களுக்கும் கூட இந்தப் பாடலைக் கேட்டால் உச்சி குளிர்ந்து விடும், கண்கள் பூத்து விடும்.

“புருஷ லட்சணம்” படத்தில் இடம்பெற்ற அந்தப் பாடல் தேனிசைத் தென்றல் தேவா இசையில் SPB முழுமையாக ஆக்கிரமித்து, சின்னக் குயிலுக்கும் இடம் கொடுத்த அற்புதமான பாடல். 

புருஷ லட்சணம் படம் பி.வாசு கதையில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ஜெயராம் & குஷ்பு அந்தக் காலத்தில் ஜோடி போட்டு நடித்த வெற்றிச் சித்திரங்களில் ஒன்று. 

“ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன்”

https://youtu.be/-P9xW2c0owc?si=RdPOqhHYvo0YgUrE

பாடலில் அம்மன் பெயர்களை நிரலிட்டு எழுதிய

கவிஞர் காளிதாசனை மறக்காமல் இன்னும் வைத்திருக்கிறது. 

இப்படிப் பக்தி மயமான சித்ராவுக்கு இன்னொரு ரகளையான பாட்டாக

“அண்ணாசாலை” 

ஈழத்தில் இருந்து இந்தப் பாடலைக் கேட்ட போது சென்னையில் ஃபேமசான றோட்டாம் என்று நண்பர்களுக்குள் பேசிக் கொள்வோம். 😁

“காக்கைச் சிறகினிலே நந்தலாலா” 

https://youtu.be/9Sd3l945lBE?si=WHRsb9EUifFDWw2L

எஸ்பிபி & சித்ரா கூட்டணியில் அற்புதங்களில் ஒன்று. இந்தப் படம் தெலுங்குக்குப் போன போது இந்த மெட்டையும் தேவா பயன்படுத்திக் கொண்டார், ஆனால் “செம்பட்டுப் பூவே” பாடலுக்குப் பதில் வேறொன்று. ஆகவே செம்பட்டு நமக்கு மட்டுமேயானது என்று பெருமையடித்துக் கொள்ளலாம் 😊

ஜெயராம், குஷ்பு பற்றிச் சொல்லும் போது அவர்கள் ஜோடி கட்டிய இன்னொரு படமான “மனசு ரெண்டும் புதுசு” படம் கூட மலையாள இயக்குநர் லோகிததாஸின் மூலகதையை எடுத்து அமிர்தம் இயக்கியது.

இதில் “சோளிக்கே பீச்சே” 

https://youtu.be/K0Ei4lHF6aM?si=Ehi6CpbV67cSiId8

பாடலைத் தமிழுக்குத் தருவித்திருப்பார் தேவா.

“சொர்க்கத்தில் அம்மா”

இந்தப் பெயரில் தான் முதலில் உருவானது பி.வாசு கதை, திரைக்கதை, வசனம் எழுத, திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ் நடித்த “அம்மா வந்தாச்சு”

“நந்தினி நந்தினி ஓ நந்தினி”

https://youtu.be/wZ_XzaEw0LI?si=EA8ptHuo7XfzwtYr

மனோகரமான பாட்டு ❤️

“உனக்கொரு தாயிருக்கா” 

https://youtu.be/6poxe3BY-Ak?si=ZgYco-6EEwLpkzMs

சோக ராகம் பாடும்.

“தினத்தந்தி பேப்பரில” 

https://youtu.be/M6_y3gxZLTY?si=gxqAGvjUmaKMSXu4

அந்தக் காலத்தில் ஹிட் அடித்த ஒன்று.

“இது உனக்காகப் பாடும் ராகம்” 

https://youtu.be/2UUBcfsalsE?si=60S583S22FsHt5HS

SPB, சுசீலாம்மா, சித்ரா இணைந்த வித்தியாசமான பாட்டு.

“அம்மா வந்தாச்சு” படத்தை கே.பாக்யராஜின் பூர்ணிமா தயாரிப்பில், பாக்யராஜ், குஷ்பு, ஶ்ரீதேவி விஜயகுமார் நடித்திருந்தார்கள்.

பாடல்கள் அனைத்தையும் கவிஞர் வாலி எழுத, தேனிசைத் தென்றல் தேவா இன்னிசை வழங்கினார்.

இந்த மாதிரி வித்தியாசமான இயக்குநர் கூட்டணி என்று சொல்லும் போது, இயக்குநர் அகத்தியன் கதையில், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய “பொண்டாட்டி ராஜ்யம்” குறிப்பிட வேண்டிய ஒன்று. 

“அணிலுக்கு மூணு கோடு போட்ட ராமரே”

https://youtu.be/D_vXZ2SHmUU?si=SGt_CqAdb438UD-d

என்னவொரு தேனிசைத் தென்றல்

“பொண்டாட்டி ராஜ்ஜியம் தான் நடக்குது”

https://youtu.be/HTNnr_Cg7nQ?si=iD2D53Us-QWKqSjw

SPB மிரட்டுவார் இப்படி “தண்டால் எடுங்கடா”

https://youtu.be/IKwZju7NqAA?si=DU9r-hXu_RqIk4Qm

முன்பே “அதிகாலை சுபவேளை” படத்துக்குக் கொடுத்து அங்கே பயன்படாமல், அதாவது அந்தப் படமே வராமல் இடம் மாறிய 

“ராகம் ஒன்று சுகமானது” 

https://youtu.be/0QaJCsolfFg?si=QQ0G3xx7rMKE9k7v

கேட்டால் சொர்க்க லோகமானது ❤️

சரவணனைக் கச்சிதமான குடும்பத் தலைவராகக் காட்டி ஜனரஞ்சக அந்தஸ்துக் கொடுத்தது “பொண்டாட்டி ராஜ்ஜியம்” 

பின்னாளில் சரவணன் இயக்குநர் அகத்தியனிடம் வேண்டி வாங்கிக் கொண்ட கதை “சந்தோஷம்” ஆனது.

அட இங்கேயும் தேனிசைத் தென்றல் தேவா தான்.

இந்தப் படத்தில் 

“சாமியே ஐயப்பா” 

https://youtu.be/gaKvxng8JXg?si=g8fayih9whAJoidm

தேவா குழுவினர் பாடும் பாடலும்,

சேதுமாதவா உன்னைச் சேர்த்து அணைக்கவா

https://youtu.be/E8pQMjo31sA?si=3b_3DMNgyRX10nvq

உன்னிகிருஷ்ணன், அனுராதா ஶ்ரீராம் குரல்களிலும் இனிக்கும்.

கானா பிரபா

22.10.2026

Tuesday, October 20, 2026

சக இசையமைப்பாளர்களோடு தேனிசைத் தென்றல் தேவா


நெஞ்சமே நெஞ்சமே

கொஞ்சியே சொல்லுதே 

ஆரீரோ….

தஞ்சமே தஞ்சமே

சொந்தமாய் வந்ததே 

ஆராரிரோ….


இசையமைப்பாளர் ஒருவர் இன்னொரு இசையமைப்பாளரிடம் பாடுவது ஒன்றும் புதுமை அல்ல.

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா போன்ற ஜாம்பவான்களோடு நீண்டு செல்லும்.

அந்த இரு சாதனையாளர்களோடு இணைவது பெருமையாகவும் உணர்வார்கள்.


ஆனால், கங்கை அமரனைப் போலவே ஒரு தோழமை உணர்வோடு நெருங்கி அழைத்துப் பாடக் கேட்டிருப்பார்கள் என்றே தேனிசைத் தென்றல் தேவாவை நினைப்பேன்.


“உனக்கென்ன குறைச்சல்

 நீயொரு ராஜா…”


என்று வெள்ளி விழா படத்தில் வி.குமார் இசையில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அது போலவே அணுகுவேன் “மாமன்னன்” படத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் “மாமன்னன்” படத்தில் தேவா பாடிய “நெஞ்சமே நெஞ்சமே” பாடலைக் கேட்குந்தோறும்.


ஒரே காலகட்டப் பகுதியில் நடிகர் மணிவண்ணனுக்காக “ஐயா வூடு தெறந்து தான் கிடக்கு” என்று இசைஞானியார் பாடியது போன்ற ஒரு பக்கம், இன்னோர் பக்கம் தேவாவும் அச்சொட்டாகப் பிரதிக் குரலாக “கோகுலத்துக் கண்ணா”, “மனிஷா போலிருப்பாளா” என்று தன் இசையில் பாடியது மட்டுமல்ல, சிற்பி அவர்களின் இசையில் கூட “உதவிக்கு வரலாமா” படத்தில் பாடியிருக்கிறார் அந்தப் பாடல் 

நீதான் நீதான் 

https://www.youtube.com/watch?v=CTQedBBGcno


காதல் மன்னன் படத்தில் “மெட்டுத் தேடித் தவிக்குது” மெல்லிசை மன்னர், “திலோத்தமா” பரத்வாஜ்,  இவர்களோடு “மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா” 


https://youtu.be/SrDeTvc-URU?si=cUzl_h6voDyJa1x5


என்று கவலைப்படாதே சகோதரா என்று அஜித் படத்தில் முன்பே அதே சூழலில் கொடுத்த தேவாவையும் களமிறக்கி இருக்கிறார். 


இதே காலகட்டத்தில் இயங்கிய ஆதித்யனும் தேவாவுக்கானது என்று சப்பா சப்பா 


https://youtu.be/-LRl0i9Dh9M?si=XB5c-Zgskw-JCr9g


பாடலை “கலர் கனவுகள்” படத்துக்காகப் பாட வைத்திருக்கிறார்.

இங்கே ஒரு சிறப்பு இருக்கிறது, ஒரு காலத்தில் தேவா பக்திப் பாடல்களுக்கு இசையமைத்த சூழலில் அவருக்காகப் பாடிய கே.பி.சுந்தராம்பாளை நினைவுபடுத்தும் கோவை கமலாவும் இணைந்து பாடியுள்ளார்.


தேவா இசையில் ஹரிஹரன் குரல் தனித்துவமானது. அது குறித்து முழு நீளக் கட்டுரையே வரைந்துள்ளேன். இங்கே ஹரிஹரன், லெஸ்லி,  லூயிஸ் கூட்டணியில் மோதி விளையாடு (மோதி விளையாடு) 

https://www.youtube.com/watch?v=ZP6y3F3GyFA


என்று கூட்டணியில் ஒருவராகப் பாடினார்.



தேவாவின் குரலை வேறு பரிமாணத்தில் கொண்டு போன முக்கியமான பாடல் வரிசை உண்டு.

அதில் வாழ் திரைப்படத்துக்காக பிரதீப்குமார் இசையில் இவர் பாடிய 

Feel Song (வாழ் ) – பிரதீப் குமார்

https://www.youtube.com/watch?v=FoC2wmBcBJM


பாடலைக் கேட்டுப் பாருங்கள். புதுமையாக இருக்கும்.


தேவாவை நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ஜனரஞ்சகமாக அடையாளப்படுத்தியவர் ஜி.வி.பிரகாஷ்குமார்.  தெறி படத்துக்காக

ஜித்து ஜில்லாடி 

https://www.youtube.com/watch?v=9lkT6HnwCzQ


தெறிக்க விட்டது. பின்னர் கேப்டன் மில்லரிலும் பாட அழைத்தார்.


இளையராஜா தன் புதல்வர்கள் இசையில் பாடியது போலவே தேவாவும் தன் மகன்  ஶ்ரீகாந்த் தேவா  இசையில் “வள்ளியம்மா வள்ளியம்மா” 

https://www.youtube.com/watch?v=uH8zHrPvO2c


பாடலை “தீ” படத்துக்காகப் பாடியிருக்கிறார்.


இளைய தலைமுறை இசையமைப்பாளர்களில் தேவா மீது நேசமும் பாசமும் கொண்டவர் அநிருத். அவரும் மான் கராத்தே படத்தில்

Open The Tasmac 

https://www.youtube.com/watch?v=yJehMbu4MdQ


பாடலுக்காக இவரை அழைத்தார்.


கர்ணன் படத்துக்காக சந்தோஷ் நாரயணன் இசையில்

மஞ்சனத்தி புராணம் 

https://www.youtube.com/watch?v=OQGRugYyvok


இன்னொரு முக்கியமான பாடல். இதில் நாட்டுப்புறத் தெம்மாங்குக் குரலாய் ஒலித்திருப்பார்.


தேவாவுக்கு இன்னொரு அழகான பக்திப் பாட்டு “சாமி குலசாமி” (மூக்குத்தி அம்மன்) – கிரிஷ் கோபாலகிருஷ்ணன்

https://www.youtube.com/watch?v=w4brafYUvc0


ரஹ்மானுக்கு மெல்லிசை மன்னர் குரலுக்குப் பிரதியீடாக தேவாவை நினைத்திருப்பார் போல, “லால் சலாம்” படத்தில் “அன்பாளனே” என்று மீண்டும் அழைத்தார்.


மேலும் தமன், கோபி சுந்தர், ஹிப் ஹாப் தமிழா, ஷான் ரால்டன், ஜிப்ரான் என்று நீண்டு செல்கிறது புதுப் புது இசையமைப்பாளர் இசையில் தேவாவின் குரலில் ஒலித்த பாடல்கள்.


இவ்விதம் நீண்டு செல்லும் பாடகர் தேவா இன்னொருவருக்காகப் பாடிய பாடல்களில் சமீபத்தில் வெளிவந்த ஈழத்துத் திரைப்படம் “போராட்டம்” படத்தில் “சோறு தான் முக்கியம்”


https://www.youtube.com/watch?v=tFxiDagMXuo


என்ற பாடலைத் துள்ளிசையாக ஈழத்து இசை இளவல் மதீசன் இசை வழங்கப் பாடியிருக்கிறார். இன்றைய கணக்கில் தேவா பாடி திரைக்கு வெளிவந்த இறுதிப் பாடல் இதுதான்.


ஒரு “கானா” பாடகரை எல்லாவித பரிமாணங்களிலும் அலங்கரித்துப் பாட வைத்திருக்கிறார்கள்.

அதற்குக் காரணம் அவரது நெகிழ்வுப் போக்கு அவர்தம் குரலிலும் மிளிர்ந்ததே.


❤️❤️❤️

இந்தப் பதிவை இன்று காலை ரயில் பயணத்தில் எழுத வேண்டும் என்று எண்ணிக் கொண்டே இலக்கியாவைப் பள்ளிக்கூடத்துக்கு அழைத்துப் போகும் காரில் ஏறும் போது “நெஞ்சமே நெஞ்சமே” பாடலை முணுமுணுத்தேன். 


“அப்பா! எனக்கு இந்தப் பாட்டுப் பிடிக்கும் காரில் போகும் போது போடுங்கோ” என்றார் இலக்கியா

பிறகென்ன வழி நெடுக 

நெஞ்சமே…நெஞ்சமே… தான்


❤️❤️❤️

அன்பு தான் வெல்லுமே 

எந்த நாளும்

ஒளி எங்கு போகும்

உனை வந்து சேரும்


நெஞ்சமே நெஞ்சமே

கொஞ்சியே சொல்லுதே 

ஆரீரோ…❤️


கானா பிரபா

20.10.2026